Preethi S Karthikமீண்டும் ஒரு காதல்

மீண்டும் ஒரு காதல் – 22

மீண்டும் ஒரு காதல் – 22:

அடுத்த ஒரு வாரம்! ஆம்பூரே அதிரும்படி அமர்க்களமாக, ஆரவாரமாக ஆரம்பித்தது அந்த திருமண வைபவங்கள்!

மணமகனாக தேவ்! மணமகளாக கௌரி!

திருமண மேடை வரை வந்துவிட்டது. அனைவரும் ஆவலாகக் காத்திருக்க… வினோதினியின் முகத்தில் கர்வம், ஆனந்தம் குடிகொண்டிருந்தது. தன் இனத்தில், தன் அந்தஸ்தில் உள்ள குடும்பத்துடன் மகனுக்குத் திருமணம் நடக்கிறது என்ற பெருமிதம். சுற்றிலும் பார்த்தார். அவருடைய செல்வச் செழிப்பைப் பறைசாற்றியது அந்த மண்டபம். கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேல் அவர் இனத்து மக்கள்! கூடவே சில அரசியல் பிரமுகர்கள் அவர்களின் பாதுகாப்புக்காக காவல்துறை என களைகட்டியது!

அப்போது தாலி கட்டும் சமயம், மேடையிலிருந்து எழுந்தான் தேவ். அனைவரும் அதிர்ச்சி அடைய, அவனும் கௌரியும் திட்டமிட்டதுபோல, கௌரியின் காதலனை மேடையேற்றினான் தேவ்!

அந்த காதலன் வேற்று இனம்! சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட காதல்.

வினோதினி மற்றும் தேவ்வின் அத்தை குடும்பம்… அதிர்ந்து தடுக்க, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கௌரிக்கு விருப்பம்போல திருமணம் நடந்தது. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

இப்போது தேவ் முகத்தில் ஏளனச்சிரிப்பு, தன் அம்மாவைப் பார்த்து!

ஆத்திரத்துடன் தேவ்வை அடிக்க வந்த விநோதினியை தடுத்தவன், “ஏன் மா வேதாக்கு அப்படி ஒரு துரோகம் பண்ணீங்க? சொந்த பையன்கிட்டயே நாடகம்! ஏன் மா… சாதி, பணம் ஒரு மனுஷனை இந்த அளவுக்கு மாத்திடுமா என்ன?”

வேதனையா, ஆத்திரமா என இதுதான் என்று யூகிக்க முடியாத குரலுடன் கேட்டான்.

அதிர்ந்து பார்த்தார் வினோதினி, இவனுக்கு எப்படி தெரிந்தது என்று.

“உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கே மா! ஒரு நிமிஷம், வேதாவை பொண்ணு போல யோசிச்சிருந்தா இதை பண்ணியிருப்பீங்களா? ஓ! நீங்க சொந்த பெண்ணுக்கே இதுபோல செய்தாலும் செய்வீங்க மா. ஏன்னா உங்க சாதிவெறி… பணவெறி என்னவேணா செய்யவைக்கும்.

ஆமா, உங்களுக்கு மட்டும் தான் பிளான் போட வருமா” ஏளனம் சற்றும் குறையாமல் அவள் கேட்க, வெட்கிப்போனார் வினோதினி.

“இப்போ என்ன பண்ணபோறீங்க மா. சுத்தி இவ்ளோ பேர் முன்னாடி அவமானம்! வெளிய போனா நாலு பேர் நாலு விதமா பேசுவாங்களே! என்ன செய்யப்போறீங்க? ஆம்பூரே அசிங்கமா பேசுமே!  ப்ச். பாவம் நீங்க!” போலியாக வருத்தப்பட்டவன்…

“அம்மா மகன் சொந்தமெல்லாம் எப்பவோ முடிவுக்கு வந்துடுச்சு. நான் கிளம்பறேன். உங்க ஜாதி, பணத்துக்கிட்ட உங்க பாசத்தை காட்டிக்கோங்க இனிமே! உங்க மகன் செத்துட்டான்னு நினைச்சுக்கோங்க” என்றவன் தன் அப்பாவிடம் சென்று, “நீங்க என் அப்பாதானே! எனக்கு சந்தேகமா இருக்கு. வாழ்க்கை வெறும் தொழில் மட்டும் இல்ல Mr ஜெயகுமார்” என்றுவிட்டு வெளியேறிவிட்டான்.

‘யாரும் தனக்கு இனி வேண்டாம்!’ என முடிவெடுத்தவனுக்கு, ‘நிஜமாக நிவேதா சந்தோஷமாக இருக்கிறாளா?’ என்று தெரிந்துகொள்ளத் தோன்றியது.

அடுத்து சென்றது, மித்ரன் அலுவலகத்திற்கு. அங்கு விஜய்யை பார்த்ததும், கொலைவெறியுடன் “ஏன் டா என் வேதா வாழ்க்கையில விளையாண்டீங்க?” என அவன் கழுத்தை நெரித்துவிட்டான்.

முதலில் திமிறிய விஜய், பின் ‘என் வேதா’ என்ற உரிமை அழைப்பில் யார் என்று புரிந்துகொண்டான்.

முகம், கழுத்து, உடல் என எந்த பாகுபாடும் இல்லாமல் சரமாரியாக ரத்தம் வரும்வரை அடித்தவனை, அங்கு வந்த சிலர், இழுத்துப் பிரித்தனர் விஜய்யிடம் இருந்து.

“உங்க கோபம் நியமானதுதான். நீங்க சொன்ன மாதிரி அவ விருப்பம் இல்லாம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஏன் நான் கூடத்தான். பட், இந்த மூணு மாசத்துல, ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிட்டோம்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தா, நீங்களே அவகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க. ஷி இஸ் ப்ரெக்னென்ட் நவ்… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா.” சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

முன்னமே உயிர் பிரிந்த உடலாக இருந்தவன், ‘அவள் கர்ப்பம்’ என்பது தெரியவந்தவுடன்… அங்கே இருப்பானா என்ன? என்னதான் தன் மனம் நிறைந்தவள், தன்னால் மறக்கவே முடியாதவள் என்றாலும், வேறு ஒருவனுடன் மனைவி ஆன பின், அவளை பார்ப்பதற்கு மனம் ஒப்பவில்லை.

எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டான். அடுத்த நாளே அமெரிக்கா சென்றுவிட்டான்.

நிவேதாவின் எண்ணங்கள் மட்டுமே அவன் மனதில். குடியின் பழக்கம், புகையின் பழக்கம் அதிகமானது. நிலையில்லாமல், வாழ்க்கை மேல் பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அப்படி ஒரு நாள் மதுவின் தாக்கத்தால், அவனால் நடக்கவிருந்த விபத்து க்ஷண நேரத்தில் நிகழாமல் தவிர்க்கப்பட, குடியினால் தன்னைவிட மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அப்போது உணர்ந்தான்.

அன்று விட்டான் குடிப்பதை. புகையை மட்டும் விட முடியவில்லை.

இவன் இங்கே இப்படி இருக்க, இவனைத் தொடர்பு கொள்ள, விடாமல் வினோதினி முயன்றார். தானே அழைத்துப்பார்த்தார். அழைப்பு எடுக்கப்படவில்லை. மகள் ரேவதி மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். விளைவு, தேவ் தங்கையிடம் பேசுவதைக் கூட நிறுத்திக்கொண்டான்.

தெரியாத இந்திய எண்களையே தவிர்த்தான். அமெரிக்கக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தான்.

மாற்றான் மனைவியை மனதில் நினைத்துக்கொண்டிருப்பது தவறு என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, நிவேதாவின் எண்ணங்களை எண்ணாமல் இருக்க முயன்று, தோற்றுப்போனான்.

நிவேதா இல்லாத வேறு வாழ்க்கை என்பதை ஜீரணிக்கக்கூட முடியவில்லை. அந்நாட்டிலேயே சில பெண்கள் அவனிடம் நெருக்கத்தைக் காட்ட முயன்றும், யாருக்குமே அவன் பிடிகொடுக்கவில்லை.

காதல், கல்யாணம், அதற்கு பின்னான வாழ்க்கை என்று எவரேனும் அவனிடம் பேசி அறிவுரை சொன்னால் கூட, நிவேதா உடனான காதல், அவளுக்கு நடந்த அநியாயங்கள், அவள் பட்ட துன்பங்கள், விருப்பமற்ற அவளின் திருமணம்,  என்பதெல்லாம் மனக்கண்ணில் நிழலாடும்.

அவ்வளவுதான் குற்றவுணர்ச்சியில் வெதும்பி மனம் அவளுக்காகத் தவிக்கும்.

மனதை ஒருநிலைப் படுத்த, தற்காப்புக்கலை கற்றுக்கொண்டான். எண்ணங்களை மேம்படுத்த கற்றதைச் சிறு பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தான்.

அழுத்தங்கள் அதிகம் ஆனதாலோ, என்னவோ… அவனும் குணமும் அழுத்தமாக, கடுமையாக மாறியது.

நாட்கள் செல்ல செல்ல, நிவேதா அவனிடம் விட்டுச்சென்ற அவளின் குரல் அவன் கருத்தினில் இருந்து மறைந்தது.

எவ்வளவு முயன்றும் ஞாபகம் வரவில்லை. துடித்துப்போனான். யோசித்து யோசித்து, ஞாபகம் வராமல் போக…  பரிதவித்துப்போனான்.

அது உளவியலும் கூட. பிரிந்த உறவின் நினைவுகள் மனதில் ஆழப் பதிந்தாலும், மறக்க நேரம் எடுத்தாலும்… குரல் தான் முதலில் மறக்கும்.

அவள் குரல் மறந்ததே ஒழிய, அவன் எண்ணங்களில் அவள் சிம்மாசனமிட்டிருந்தாள். அவள் எண்ணங்களுடனே வாழ முடிவு செய்தான். அவள் நினைவுகளுடனே நாட்களைக் கடக்கக் கற்றுக்கொண்டான்.

*****************************************

தூறல் கொஞ்சம் பெருக்கெடுக்க… தன்னை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்த ரிஷி, சட்டென நிறுத்தினான்.

“நிவி… மழை அதிகமாகிடும் போல” என்றான் நிவேதாவை பார்த்து. ஆனால் அவளோ சிலையென உட்கார்ந்திருந்தாள்.

“நிவி” அவன் அழுத்தமாக அழைத்ததும், தன்னிலைக்கு வந்தவள் கண்கள் ஏதோ சொன்னது அவனுக்கு. ஆனால் புரியவில்லை.

இருந்தும், “மழை அதிகமாயிடும். போகலாம்” என்றவன் தோளில் தூங்கிக்கொண்டிருந்த மினுவை தூக்கிக்கொண்டு முன்னே நடக்க, அமைதியற்ற மனதுடன் அமைதியாக நிவேதா தொடர்ந்தாள்.

மூவரும் லிஃப்ட்’டினுள் நுழைந்தவுடன், “நான் வந்துட்ட ஒரு வருஷத்திலேயே, அம்மாக்கு லெப்ரசி (தொழுநோய்) வந்து சிவியர்’ரா பாதிக்க பட்டுருக்காங்கனு தங்கச்சி சொன்னா” என்றவன் சற்று நிறுத்தி, குரல் கரகரப்புடன், “அவங்க என் வேதாக்கு செய்த துரோகத்துக்கு கடவுள் தந்த தண்டனை” இப்போது ஓர் ஏளனப்புன்னகை அவன் முகத்தில்.

நிவேதா அதிர்ந்தாள். கண்கள் கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தது. மனம் மடைதிறக்க எண்ணி முடியாமல் போக, அழுத்தம் மட்டுமே அதிகரித்தது.

“அப்பா மூணு வருஷம் முன்னாடி… இறந்துட்டாங்கனு சொன்னாங்க. நான் எதுக்குமே இந்தியாக்கு வரல. எப்பவாச்சும் தங்கச்சி கூட பேசுவேன். அவ்ளோ தான். கடைசியா கல்யாணத்துல எல்லாரையும் பார்த்ததோட சரி. இனியும் பார்க்க விருப்பமில்லை” வெறுப்புடன், விரக்தியுடனும் பேசிய ரிஷி…

“அதெல்லாம் விடு. மினு சொன்ன விஷயத்தை மனசுல வச்சுக்கிட்டு சீக்கிரம் முடிவு பண்ணு” என்றான் சின்ன புன்னகையுடன்.

அவனுக்குள் இருக்கும் மனதின் வலியை மாற்ற முயல்கிறான் என்று புரிந்தது அவளுக்கு. அவளும் புன்னகைக்க முயன்றாள். அவளுக்கும் தானே வலி மனதில்!

அவள் எதுவுமே பேசவில்லை. எங்கே பேசினால் வெடித்து அழுது விடுவோமோ என தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள்.

லிஃப்ட் திறக்க, மினுவை வாங்கிக்கொண்டு முன்னே சென்ற நிவேதாவை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் ரிஷி.

உள்ளே மினுவை படுக்க வைத்த அடுத்த நிமிடம், சுவாமி படங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, அழுது கரைந்தாள். அவன் தந்த டாலரை நெஞ்சில் புதைத்து, மனம் விட்டு கண்ணீர் வடித்தாள். ஏன் என தெரியவில்லை. அழத் தோன்றியது.

‘தன் திருமணத்திற்குப் பின், தேவ் தன்னை பார்க்க வரவே இல்லை என்றெண்ணி இருந்தவளுக்கு, அவன் தன்னை பார்க்க அலுவலகம் வந்தது, தனக்காக விஜய்யை அடித்தது’ என்பதை எண்ணியபோது, இத்தனை நாள் தேவ் மீது இருந்த சின்ன கோபம் கூட காற்றோடு பறந்தது.

‘அன்று விஜய் தான் கர்ப்பம் என்று தேவ்விடம் பொய் சொல்லாமல் இருந்திருந்தால், இல்லை ஒருவேளை அன்று தான் விஜய்யால் சிறைபிடிக்கப் படாமல்… அலுவலகம் சென்று தேவ்வை பார்த்திருந்தால், நடந்தது அனைத்தும் மாறி இருக்கக்கூடுமோ?’ மனம் அதை எண்ணி ஏங்கியது.

அனைத்தையும் எண்ணி எண்ணி அழுது கரைந்தாள்.

அவன், அவள் மேல் வைத்திருக்கும் மாறா நேசம், நெகிழச்செய்து… அழ வைத்தது.

அவன், அவள் மேல் கொண்ட களங்கமற்ற காதல், கண்களில் கண்ணீரைக் கசியச் செய்தது.

அவன், அவளைத் துளியும் மறக்காமல் இருப்பது, மனமுருகச் செய்தது.

போதும், அனைத்தும் போதும்! இனியும் அவனைச் சோதிக்காமல், அவனிடம் மனம் திறக்க முடிவு செய்தாள். கண்ணீருடனே கண்களை மூடி மனதார கடவுளிடம் வேண்டினாள்.

‘தேவாவிடம் நான் தான் உன் வேதா என்று சொல்லப்போகிறேன். என்னால் என் தேவாவுக்கு எதுவும் ஆகாமல் நீ பார்த்துக்கொள்’ கண்ணீர் கசிந்து மனமுருகி வேண்டினாள்.

அப்போது அங்கே இருந்த நாட்காட்டியில் தேதியைப் பார்த்தவளுக்கு, ரிஷியின் பிறந்த தினம் இன்னமும் ஒரு வாரத்தில் வரப்போவது பளிச்சிட்டது. அதைப் பார்த்தவுடன், கண்ணீருடனே புன்னகையும் வந்தது.

அவனிடம் மனம் திறப்பதற்கு, சரியான நாள் என அவள் மனம் முடிவும் செய்தது. தூக்கம் வராமல், ரிஷி பற்றிய எண்ணங்களுடனே இரவை கழித்தாள்.

அங்கே ரிஷியும், வேதாவையும், நிவேதாவையும் மாறி மாறி நினைத்து, இரவில் தூக்கம் தொலைத்து, அதிகாலை கண்ணுறங்கினான்.

அடுத்த நாள் எழுந்தவனுக்கு, திடீரென காய்ச்சல். கூடவே ரத்த அழுத்தம் அதிகமானது.

அதை நிவேதாவிடம் சொன்னபோது, மனதில் பதட்டத்துடன் அவனை சென்று பார்க்க… அப்போதுதான் அவன் அத்தையும் அங்கிருப்பதைப் பார்த்தாள்.

பார்த்தவுடன் அதிர்ந்தாலும், மினுவுடன் சென்று ரிஷியை பார்த்தாள். சோர்ந்து தெரிந்தான். இருந்தும் அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. அத்தையின் கண்கள் அவளை ஒருவிதமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. மினுவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

ரிஷிக்கு சில மணி நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எதற்காக இந்த மாற்றம் தன் உடலில் என்பது அவனுக்குத் தெரிந்ததால், உடனே தன்னை மருத்துவமனையில் அட்மிட் செய்துகொண்டான்.

நிவேதா தன்னை பார்க்க வரும்போது காரணத்தை விரிவாகச் சொல்லலாம் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது… அவனைப் பார்க்க அவள் வரவே இல்லை.

அவளை அழைக்கவும் சிறு தயக்கம். ‘அவளைத் தொல்லை செய்கிறேன் என்று அவள் நினைத்துவிட்டால்?!’ என்ற எண்ணம் அவனைத் தடுத்தது.

அவன் வீடு திரும்ப, அடுத்த மூன்று நாட்கள் ஆனது. வந்தவனுக்கு அதிர்ச்சி!

நிவேதாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது. யோசனையுடனே தன் வீட்டிற்கு வந்தான்.

மடிக்கணினி எடுத்து உட்கார்ந்தவன் முதலில் பார்த்தது… ஸ்ரீ வேலை நிமித்தமாக விண்ணப்பித்த இடமாற்றம் கிடைத்துவிட்டது என்று. இது ரிஷிக்கு தெரிந்ததே. பெங்களூருக்கு இட மாற்றம் கேட்டிருந்தான்.

அடுத்த ஈமெயில்! அதைப் பார்த்தவனுக்கு… பூமி இயல்பை விட ஆயிரம் மடங்கு வேகமாகச் சுற்றுவதுபோல உணர்வு. சுற்றுவது பூமியல்ல, தான்தான் என்று புரியவைத்தது அந்த ஈமெயில்.

“சில தவிர்க்க முடியாத காரணத்தால், வேலையைத் தொடர முடியாத நிலையில் இருப்பதாகவும், தன்னுடைய அனைத்து வேலையும் ஸ்ரீக்கு தெரியும் எனவும்… தன் முடிவுக்கு எந்த ஒரு தடையும் சொல்லாமல், தன்னிலை புரிந்து ஒப்புதல் தந்த VP’க்கு மனமார்ந்த நன்றி. தன்னுடன் வேலைபார்த்த அனைவருக்கும் நன்றிகள்” என்றது அந்த ஈமெயில். அனுப்பியது நிவேதா!

அதைப் படித்த ரிஷிக்கு அதிர்ச்சி, கூடவே குழப்பம்.

உடனே VP’யை அழைத்து, ‘என்ன ஆயிற்று’ என படபடப்புடன் கேட்டான்.

‘இந்த வேலையால், மனதளவில் அவள் மிகவும் பாதிப்படைந்ததாகவும், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும்… இதிலிருந்து தனக்கு விடுப்பு வேண்டும்’ என மிகவும் வேண்டிக்கேட்டதால்… ஒப்புதல் தந்ததாக ரிஷியிடம் சொன்னார்.

இதயமே நின்றுவிட்டது போன்ற உணர்வு அவனுக்கு! அதை அவன் ஜீரணிப்பதற்குள், அவன் முன்னே வந்து நின்றார் அவன் அத்தை.

‘இவர் ஏதாவது’ என்று அவன் மனம் யோசிக்க…. நானேதான் என்பதுபோல பேச ஆரம்பித்தார் அத்தை.

“தேவ்! எத்தனை நாள் தான் நீயும் தனியா இருப்ப? இப்போ நாங்க இருந்தோம்; உன்ன பார்த்துகிட்டோம். போதும் நீ தனியா இருந்தது. பேசாம பூர்ணாவை கல்யாணம் பண்ணிக்கோ” என்றதுமே புரிந்துவிட்டது ரிஷிக்கு. நிவேதா சென்றதற்கு இவர் தான் காரணம் என்று.

தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டான். ‘தங்கையிடம் இந்தியா வந்ததை பற்றிச் சொல்லியது தவறோ..?’தன்னையே நிந்தித்துக்கொண்டான்.

“அது எப்படினே தெரியல. என் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கறப்ப எல்லாம் முன்னாடி வந்து நிக்கிறா. முதல்ல கௌரி, இப்போ பூர்ணா. என் பொண்ணுங்க கால் தூசிக்கு வருவாளா அந்த நிவேதா? நீயும் அவளே கதின்னு கிடக்கிற”

அவர் பேசிக்கொண்டே போக… மூச்சடைத்து அதிர்ந்து எழுந்தான் ரிஷி.

கண்களில் கோபம் இருந்தாலும், கண்ணீர் மடை திறந்ததுபோல வெளியேறியது. அவன் இதழ்கள்… ‘வேதா’ என முணுமுணுத்தது.

‘தன் வேதா தான் இந்த நிவேதா’ என்று மனம் மறுபடியும் நினைத்துப்பார்க்க…  தலை சுற்றியது. தலையைப் பிடித்துக்கொண்டு, பித்துப் பிடித்தவன் போல, கிட்டத்தட்ட அந்த குடியிருப்பே அதிரும்படி கத்தினான்.

அதைப்பார்த்த அத்தை பயத்துடன் “தேவ்” என்றதும், அதே ஆத்திரத்துடன்… “இன்னொரு வார்த்தை பேசினீங்க… கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு கூட போய்டுவேன். கண்ணு முன்னாடி நிக்காதீங்க. உங்களுக்கெல்லாம் மனசுனு ஒன்னு இருக்கா இல்லையா? பூர்ணா வயசென்ன என் வயசென்ன? பத்து வருஷத்துக்கும் மேல!” அருவருப்பாய் சொன்னவன்,

“தயவு செய்து போய்டுங்க” என்றான் வாயிலைக் காட்டி.

சத்தம் கேட்டு வந்த பூர்ணா, கண்களில் கண்ணீருடன் நன்றி கலந்து கைகூப்பினாள் ரிஷியை பார்த்து.

உடலளவில் சோர்ந்திருந்தவன், மனதளவிலும் சோர்ந்துவிட்டான் இப்போது. கண்களில் கண்ணீர் நின்றபாடில்லை.

‘என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே… நீ தான் என்னோட வேதானு! அவ்ளோ பிடிக்கலையா என்னை?’ மனது முழுக்க ஆற்றாமை.

‘மினு… ஒருவேளை என் மித்ரனோட குழந்தையா?’ கண்களில் கண்ணீருடன் புன்னகை.

‘இப்போ எங்க போன… வேதா? அதுவும் எங்கிட்ட கூட சொல்லாம’ இப்போது அவனிடம் இயலாமை.

‘வேதா எனக்கு உன்னை உடனே பார்க்கணும்… எங்க போனடி?’ என்றே பிதற்றிக்கொண்டிருந்தான்.

சரியாக அப்போது வாசல் மணியடிக்க, அத்தை தான் திறந்திருப்பார் போல.

“ரிஷி சார்!” என்ற குரல் கேட்டதும், முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு வெளியே பார்த்தான் ரிஷி.

வந்தது ரஜத்தின் அம்மா. அவசரமாக வெளியே வந்தான்.

“இதை உங்ககிட்ட நிவேதா கொடுக்க சொன்னாங்க” என்று ஒரு சின்ன பெட்டியை நீட்டினார்.

புரிந்துவிட்டது அது என்ன என்று! அவன் மினுக்கு தந்த செயின் மற்றும் டாலர். அதை வாங்க மனமே இல்லை. இருந்தும் வாங்கிக்கொண்டான். கண்கள் மறுபடியும் கரித்தது.

நிமிர்ந்து பார்த்தான் ரஜத் அம்மாவை. ‘ஒருவேளை இவருக்கு ஏதாவது தெரியுமோ!’ என்ற எண்ணம் தோன்ற… “உங்ககிட்ட ஏதாச்சும் சொல்லிட்டு போனாளா?” தவிப்புடன் கேட்டான். குளமாய் இருந்த கண்கள், சொட்டு கண்ணீரை வெளியேற்றியது.

அவருக்கே அவன் கண்களில் கண்ணீரைப் பார்க்கப் பொறுக்கவில்லை.

“வீட்டு சாமான்லாம் எடுத்துக்க சொன்னா. எங்கன்னு தெரியல. ஆனா, அவ கிளம்பும்போது கூடவே ஸ்ரீ இருந்தார்” என்றவுடன்… ஒரு நொடி குழம்பினாலும்,  நம்பிக்கை கீற்று அவன் முகத்தில்! 

12
10
3
8
2

4 thoughts on “மீண்டும் ஒரு காதல் – 22

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved