மீண்டும் ஒரு காதல் – 21
மீண்டும் ஒரு காதல் – 21:
நிவேதாவின் சொந்தங்கள் என்று யாரையும் தெரியாத போது, அவனுக்குத் தோன்றிய ஒரு உறவு மித்ரனின் குடும்பம். அவர்களிடம் கேட்டால் ஏதாவது விஷயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், கோவை புறப்பட்டான்.
கல்லூரிக்கு சென்ற ரிஷி, மித்ரனின் சென்னை முகவரியைப் பெற்றுக்கொண்டு திரும்ப, நேரம் நடு இரவுக்கு மேல் ஆகிவிட்டது.
அடுத்த நாள், காலையிலேயே அவன் சென்னை புறப்பட, வினோதினியின் முகத்தில் வெற்றி புன்னகை. காரணம் நிவேதாவின் திருமணம் தான் முடிந்துவிட்டதே!
அவனின் இதய படபடப்பின் வேகம், அவர் காரின் வேகத்தில் தெரிந்தது. கிட்டத்தட்ட சீறி பாய்ந்தது சென்னைக்கு. இன்றைக்குள் எப்படியாவது நிவேதாவைக் கண்டுபிடித்திடவேண்டும் என்ற உறுதியோடு சென்னை விரைந்தான்.
அவளுடன் பேசிய காதல் பேச்சுக்கள்… அவளிடம் கண்ட அழகான அன்பு… அவளின் இனிமையான தேவா என்ற அழைப்பு… சிலசமயம் கோபத்தில் வரும் தாறுமாறான மரியாதை என அனைத்தும் அவன் மனதில் குளிர் நீரைப் பாய்ச்ச, புன்னகை பூத்தது அந்த மனநிலையிலும்.
அவளைப் பார்க்கும்போது தனக்குள் ஏற்படப்போகும் மாற்றங்கள் பற்றி நினைக்கையில் ஒரு குட்டி இன்ப படபடப்பு.
இதனைத்தும் இருந்தாலும் கார் வேகம் எங்குமே குறையவில்லை! நேராக மித்ரன் வீட்டிற்குச் செல்ல, அது பூட்டப்பட்டிருந்தது. அடுத்த ஏமாற்றம். காரை கோபமாக உதைத்தான்!
அப்போது சரியாக மேல் வீட்டிலிருந்து ஒருவர் இறங்கி வர, அவரிடம் விசாரித்தான்.
“இவங்க இங்க தான், எங்க வீட்ல குடியிருந்தாங்க. ஆனா சொந்த வீடு வாங்கிட்டு போய் நாலஞ்சு வருஷம் இருக்குமே” அவர் சொன்னவுடன், தேவ்வுக்கு முற்றிலுமாக அடைபட்ட உணர்வு.
பயம், தவிப்பு, படபடப்பு, இயலாமை என அனைத்தும் ஒருசேரத் தாக்க, திண்டாடிப்போனான். மண்டையைச் சுற்றி யாரோ தாக்குவதுபோல வலி. ‘அவளுக்கும் குழந்தைக்கும் ஏதாவது?’ என்று எண்ணும்போதே நெஞ்சம் பிசைந்தது.
என்ன செய்வது, அடுத்து யாரை கேட்பது என்று புரியாமல் குழம்பியிருக்க, மனதில் கடைசி வழியாக காவல்துறையை அணுகுவதுதான் சரி என தோன்றியது.
‘ஒரு வார்த்தை அம்மாவிடமும் கேட்டால்… அவருக்கு ஏதாவது தெரியும் பட்சத்தில், அது உதவியாக இருக்கும்’ என எண்ணி ஆம்பூர் திரும்பினான்.
ஊருக்குச் சென்றவுடன் முதல் வேலையாக தன் அம்மாவிடம் கேட்டான் நிவேதாவை பற்றி. தனக்கும் அதிகம் தெரியவில்லை என்றார் வினோதினி.
‘போலீசிடம் போகலாமா?’ என்ற அடுத்த கேள்வியில், வினோதினி கொஞ்சம் அதிர்ந்தாலும், “சென்னை DC வேலூர் காரர்தான். நமக்கு தெரிஞ்சவர். நாளைக்கு பேசலாம் தேவ்” என்று மட்டும் சொன்னார்.
தலையசைத்துவிட்டுச் சென்றாலும்… உள்ளுணர்வு, ஏதோ ஒன்று தவறாக நடப்பதுபோல உணர்த்தியது. ஆனால் என்ன என்று புரியவில்லை. உறக்கம் கண்களைத் தழுவ மறுத்தது.
அவளுடன் பேசிய பேச்சுக்கள், கழித்த பொழுதுகள் என மனதை வெகுவாய் தாக்கியது. துளியும் உறங்காமல் காத்திருந்தவனுக்கு அடுத்த நாள் காலை பேரிடியாய் வந்தது ஒரு செய்தி, மித்ரன் அலுவலகத்திலிருந்து!
அதுவே போதுமானதாக இருந்தது அவனை முற்றிலுமாக நிலைகுலையச் செய்ய!
“சார், இன்னைக்கு நிவேதா மேடம் வந்தாங்க சார். கூடவே விஜய் சாரும், மித்ரன் சார் குழந்தையும்!” என்றதும் தேவ்வின் புருவங்கள் முதலில் சந்தோஷத்தில் விரிந்து, இதயம் துள்ளிக் குதித்தாலும்… அடுத்து கேட்ட பெயரில் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டது. விஜய் மித்ரனின் தம்பி என்பது அவனுக்குத் தெரியும்.
இப்போது இதயம் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல், வேகமெடுத்தது. தலை சுற்றியது!
“நிவேதா மேடம்’கும் விஜய் சார்’ருக்கும் கல்யாணம் ஆகிடுச்சாம் சார். இப்போ தான் இங்க ஹையர் லெவல் மீட்டிங் முடிஞ்சது. இனி விஜய் சார் தான் மித்ரன் சார் இடத்துல இருந்து வேலை பார்க்கப்போறாராம். அவருக்கு ஃபுல் சப்போர்ட் கொடுக்கணும்னு…” என்றவன் கொஞ்சம் தயங்கி, “அவங்க மனைவி நிவேதா மேடம் சொன்னாங்க சார்” என்றான்.
அப்படியே சிலையென நின்றுவிட்டான் தேவ். அந்த வார்த்தைகள் அவன் இதயத்துடிப்பை, ரத்த ஓட்டத்தை அப்படியே நிறுத்திச் செயலிழக்கச்செய்தது.
அழைத்தவன் தொடர்ந்தான். “இன்னைக்கு ஈவினிங் கூட குழந்தையை சுவீகாரம் செய்யப்போறாங்களாம் சார்” கூடுதல் தகவல் கொடுத்துவிட்டு வைத்துவிட்டான்
அதை யார் அவனிடம் சொன்னார்கள் என்பதை கேட்குமளவிற்குப் பெரிய விஷயம் இல்லை என்று விட்டுவிட்டானா, இல்லை கேட்க தோன்றவில்லையா என தெரியவில்லை. ஒருவேளை இதை விஜய் தான் சொன்னான் என்பதை தேவ்விடம் சொல்லியிருந்தால் கூட தேவ் யோசித்திருப்பானோ?! அதுவும் தெரியவில்லை!
மனதினுள் யாருக்கும் இடம் தராதவன், நிவேதாவிடம் பழக ஆரம்பித்தபின்… அவளுக்காக பெரிய கோட்டையே கட்டியிருந்தான். இன்று அது சுக்குநூறாக உடைந்தது போல ஓர் உணர்வு, ‘அவங்க மனைவி நிவேதா’ என்பதை கேட்டவுடன்.
‘நிவேதாவிற்கு திருமணம் முடிந்ததா? எப்படி? அவள் சம்மதித்தாளா? இதற்காகத்தான் தன்னை இத்தனை நாட்கள் தவிர்த்தாளா?’ மனதில் கேள்விகள் மட்டும் எழவில்லை… வார்த்தையால் விவரிக்க முடியாத வலி உள்ளுக்குள் எழுந்தது.
‘ஒருவேளை கட்டாய கல்யாணமா? வீட்டில் இழப்பு ஏற்பட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு கல்யாணம் எப்படி?’ என்ற யோசனை அவனுக்கு வர, அவளை எண்ணி மனது பதறியது.
‘கட்டாய கல்யாணம் செய்யும் அளவுக்கு அவள் என்ன அறியா பேதையா? அலுவலகத்திற்கு வந்து இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருக்கிறாள்! இது கட்டாய கல்யாணமாக இருக்க முடியுமா? ஒருவேளை அப்படியே இருந்தாலும், இப்போதாவது தன்னை அழைத்திருப்பாளே!’ அவன் அறிவு இரக்கத்திற்கு இடம் தராமல்… மன வலியை மீறி ஒரு வித கோபத்தை உண்டாக்கியது.
கட்டாய கல்யாணம் அறியா பேதைக்குத்தான் நடக்க வேண்டுமா என்ன? கட்டாயம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அது எந்த நிலைக்கும் ஒருவரை இழுத்துச்செல்லலாம். அதே கட்டாயம் தானே, அவன் பெங்களூரு வந்தபோது, நிவேதாவை பார்க்க சென்னை செல்லாமல், அன்னையைப் பார்க்க இங்கே இழுத்துவந்தது!
இதையெல்லாம் புரிந்துகொள்ளும் நிலையில் இப்போது அவன் இல்லை. அவனையும் குற்றம் சொல்ல முடியாது. அவன் இழப்பு அப்படி. அவள் மனதை மட்டுமே நேசித்தான். அவள் நம்பிக்கைக்குக் கொஞ்சமும் கலக்கம் வரக்கூடாது என எண்ணி அவளைப் பார்க்காமல் கூட நேசித்தான். பார்த்துப் பார்த்து அவளுக்காக ஒவ்வொன்றும் செய்தான்.
ஆனால் நடந்தது?
ஏமாற்றம், கோபம், வெறுமை, வெறுப்பு என அனைத்தும் சேர்ந்து அடிபட்ட வலியை ஏற்படுத்தியது… உடலிலும், உள்ளத்திலும்.
‘அவளை சென்று பார்த்தால் தான் என்ன?’ ஆசைகொண்ட மனம் கடந்து தவித்தாலும், ‘தன்னால் அவளை வேறு ஒருவனுடன் சேர்த்துப் பார்க்க முடியுமா?’ என்ற எண்ணம் தோன்றிய நொடி, கிட்டத்தட்ட உயிர் பிரிந்த உணர்வு அவனுள்!
‘செவி வழி கேட்ட செய்தியே தாங்கிக்கொள்ள முடியாமல், ஏமாற்றிவிட்டாள் என கோபம் பெருக்கெடுக்கிறது. நேரில் பார்த்தால், ஒருவேளை கோபம் கொண்டு நிவேதாவை ஏதாவது?!’ என்று எண்ணிய நொடி, பதறியது. பார்க்கவே கூடாது என்ற முடிவையும் எடுத்துவிட்டான்.
அவன் பலம், பலவீனம், குறை, நிறை எல்லாமே இதுதான்! முடிவுகளை உடனே எடுப்பது! முடிவுக்கு உடனே வருவது!
சில நிமிடங்களில்…
“தேவ்… சென்னை DC’ட்ட பேசிட்டேன். போட்டோ கேட்டிருக்கார். என்கிட்ட இருக்க போட்டோ குடுத்திடறேன்” என்று சொன்னபடி வினோதினி உள்ளே வந்தார்.
தேவ் உணர்ச்சிகள் ஏதும் இன்றி… ஜன்னல் வழியே வெளியே வெறித்துக்கொண்டிருந்தான்.
‘அவன் நிலை என்ன, அதற்கான காரணம் என்ன’ என்பது வினோதினிக்கு தெரிந்திருந்தும், “கவலைப்படாத தேவ். கண்டுபிடிச்சிடலாம்” என்றார் அக்கறையாக.
“வேணாம்மா. எல்லாம் முடிஞ்சது”விரக்தியுடன் சொன்னான் சிவந்திருந்த கண்களுடன்.
அவனிடம் என்ன ஆயிற்று என்று கேட்டு தெரிந்துகொண்ட வினோதினி, மனதளவில் தன் திட்டத்தை நினைத்து மகிழ்ந்தார்.
விஜய் குடும்பத்திடம், ‘விஜய், நிவேதா, மற்றும் குழந்தையை அலுவலகத்திற்கு அனுப்பச்சொன்னது முதல், தேவ்விடம் சுவீகாரத் தகவல் வரை’ சரியாக வந்து சேரும்படி செய்தது அவரின் வேலை தானே!
வெளியில் அதிர்ந்தது போல பாசாங்கு செய்த வினோதினி, “என்னது உன்னை ஏமாத்திட்டாளா? அவதான்னு இருந்த உன்னை… ஏமாத்திட்டாளா?” கேட்டார் கோபத்துடன்.
அவன் அமைதியாக வெளியில் பார்க்க… “அவளை விடமாட்டேன் தேவ். அவளை நிம்மதியா வாழ விடமாட்டேன். உன் நிம்மதியை கெடுத்தவளை வாழவே விடமாட்டேன்” என்று கோபத்துடன் வெளியே செல்லும்போது, அவசரமாக அவரை தடுத்தான் தேவ்.
என்னதான் என்றாலும் மனம் விரும்பியவள் ஆயிற்றே! பழிதீர்க்கவா முடியும்?! பொதுவாகக் காதல் விட்டுக்கொடுக்கும். பழி வாங்காது!
“ம்மா ப்ளீஸ்… வேண்டாம். இதை விடுங்க. நான் பார்த்துக்கறேன்” என்றான் அழுத்தமாக.
“இல்ல தேவ் உன்ன…” என்று அவர் மறுபடியும் ஆரம்பிக்க…. “வேண்டாம்னு சொன்னேன்மா. விட்டுடுங்க” என்றான் கெஞ்சலுடன்.
அவன் அம்மா எதற்காகவும், எவ்வளவு கீழிறங்கவும் தயங்க மாட்டார் என்று எண்ணி அவரை அவன் தடுத்தான். ஆனால் அது நிவேதாவின் கல்யாணத்திலும் நடந்திருக்கும் என்று அப்போது தெரியவில்லை.
சரியாக இரண்டு நாட்கள் கடந்தது. யாருடனும் அவன் பேசவில்லை. நிவேதா பற்றி மட்டுமே அவன் கருத்தினில்!
‘எப்படி தன்னை ஏமாற்ற மனம் வந்தது அவளுக்கு?’ என்ற கேள்வி.
‘ஏமாற்ற என்ன காரணம் இருக்கக்கூடும்?’ என்றும் நினைத்தான். புலப்படவில்லை.
இருந்தும் ‘ஏன் தன் அழைப்பை எடுக்கவில்லை? அழைக்கவும் இல்லை? ஒரு சின்ன குறுஞ்செய்தி போதுமே தன்னை தொடர்புகொள்ள வேண்டும் என அவள் நினைத்திருந்தால்!’ இந்த கோணத்தில் யோசிக்கும்போது, தன்னை அவள் தவிர்த்திருக்கிறாள் என்ற எண்ணம் மேலோங்கியது.
அவள் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவே முடியாத அளவிற்கு அனைத்தும் துண்டிக்கப்பட்டது, பறிக்கப்பட்டது என்பதை அவன் அறியவில்லை.
ஆக, முடிவெடுத்துவிட்டான்… அதையே பிடித்தும் கொண்டான்.
அவனின் அவநம்பிக்கையை இன்னமும் ஏற்றிவிட்டார் விநோதினி அவரின் பேச்சால். மனம் மிகவும் துவண்டு போனது. அதை இன்னமும் படுத்தியெடுக்க நினைத்ததுபோல வினோதினி, தேவ் திருமண பேச்சை எடுத்தார்.
“நீ ஏன் தேவ் இவ்ளோ வருத்தப்படற? அவ போனா போகட்டும். உனக்கென்ன குறை? நம்ம ஹ்ம்ம்ன்னு சொன்னா அத்தை பொண்ணு கௌரி ரெடி’யா இருக்கா” என்றதும், அவன் கோபத்தில் எழுந்த வேகத்தில் நாற்காலி சற்று தள்ளிப் போய் விழுந்தது. விநோதினியே லேசாக அதிர்ந்துவிட்டார்.
திருமணமே வேண்டாம் என்றிருந்தவன், மணம் செய்துகொள்ளலாம் என்று சொன்னது நிவேதாவிடம் மட்டுமே. அப்படி இருக்கையில் அவ்வளவு எளிதாக அடுத்த திருமணத்திற்குச் சம்மதிப்பானா என்ன?
“என் வாழ்க்கைல எப்பவுமே வேதா மட்டும் தான் மா. அவளை தவிர வேறு யார் கூடவும் வாழறதை பற்றி யோசிக்கக்கூட முடியாது” என்றவன் இதை மேலும் வளர விடாமல், அமெரிக்கா செல்வதாகச் சொன்னான். வினோதினி மறுத்தார். அதையெல்லாம் கேட்காமல் புறப்பட்டுவிட்டான்.
நிவேதாவின் எண்ணங்கள் அவனை வலுவாகத் தாக்கியது. விளைவு… குடிக்கும், புகைக்கும் அடிமையானான். அது நிவேதாவை மறக்கத் தற்காலிகமாக உதவியது.
முற்றிலுமாக மித்ரன் தொழிலிலிருந்து விலகிக்கொண்டான். முழுவதுமாக மதுவில் மூழ்கினான்.
மாதம் இரண்டு கடந்திருக்க, ‘வினோதினிக்கு உடல்நிலை மறுபடியும் சரியில்லை’ என்ற செய்தி வந்தது அவனுக்கு. மறுபடியும் இந்திய வருகை.
ஆனால் இப்போது தோற்றத்தில் முற்றிலுமாக மாறியிருந்தான். ஏற்கனவே ஆஜானுபாகுவாய் இருந்தவன், இரண்டு மாதங்கள் வெட்டப்படாத சிகை, தாடி… குடித்துக் குடித்து ஊதிய உடல் என பார்க்கக் காட்டுத்தனமாக மாறி இருந்தான்.
நிவேதாவை மறக்க வேண்டும் என எண்ணி எண்ணி, தன்னையே மறந்துவிட்டது போல ஒரு தோற்றம்.
அவனை இந்த கோலத்தில் யாருமே எதிர்பார்க்கவில்லை.
“என்ன ஆச்சு அம்மாக்கு?” உணர்ச்சிகளற்ற முகத்துடன் கேட்டான் மருத்துவரை. ‘மறுபடியும் நெஞ்சு வலி. இப்போது கொஞ்சம் கவலைக்கிடம்’ என்றார் மருத்துவர்.
அடுத்த நாடகத்தை அரங்கேற்றக் காத்திருந்தார் வினோதினி.
“தேவ், எனக்கு என்ன ஆகுமோன்னு நினைச்சா பயமா இருக்கு. உன் சந்தோஷத்துக்காக தான் அந்த நிவேதாவை கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துக்கிட்டேன், ஆனா அவ… உன்ன ஏமாத்திட்டு போய்ட்டா. அவளையே நினைச்சு நீ எவ்ளோ நாள் இப்படி இருப்ப தேவ்?
கௌரி கூட உன்னோட கல்யாணத்தை பார்த்துட்டா, நான் நிம்மதியா போய் சேருவேன்” படங்களிலும் கதைகளிலும் சொல்லும் அதே மிரட்டலை உருக்கமாக அவர் சொல்ல, அவனோ, “அம்மா, என்னால அதெல்லாம் முடியாது மா” துச்சமாக மறுத்துவிட்டான்.
இப்போது அவனிடம் பழைய கனிவெல்லாம் இல்லை! அவ்வளவு மாறியிருந்தான். மது மாற்றியிருந்தது.
அவனின் பதிலில் அதிர்ச்சி வினோதினிக்கு. இருந்தும் கொஞ்சம் அழுத்தம் தந்தால் மனம் மாறிவிடுவான் என நம்பினார். மருத்துவரை விட்டுப் பேசச்சொன்னார். ஆனால் எந்த ஒரு உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் அவன் அஞ்சவில்லை. திடமாக மறுத்தான். அவனின் இந்த மாற்றம் வினோதினிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
அடுத்த நாள், அவனைப் பார்க்க வந்தாள் கௌரி. அவன் அத்தை மகள். மருத்துவர்!
“நானே உன்னை பார்க்கணும்னு நினைச்சேன் கௌரி. இந்த கல்யாணத்துல எனக்கு இன்டெர்ஸ்ட் இல்ல. வேதாவை என்னால மறக்க முடியாது. டோன்ட் கெட் யுவர் ஹோப்ஸ் அப் (Don’t get your hopes up)” தன்னிலையை அசட்டையாகச் சொன்னான்.
“ஹோல்ட் ஆன்! எனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. நான் இன்னொருத்தர விரும்பறேன். பட், நான் அதை சொல்றதுக்கு இப்போ வரல. ஒரு உண்மையை உங்ககிட்ட சொல்ல வந்தேன்” என்றாள்.
தேவ் முகம் கேள்வியாய் மாறியது.
“போன வாரம் அம்மா என்கிட்ட கல்யாண பேச்சை எடுத்தாங்க. நான் மறுத்ததும்… என்னை திட்டினாங்க. அப்புறம்” கொஞ்சம் யோசித்த கௌரி…
“நம்ம கல்யாணம் நடக்கணும்னு அவங்களும் வினோதினி அத்தையும் எவ்ளோ கஷ்டப்பட்டாங்கனு சொன்னாங்க” என்றவள், தன் அம்மாவும், விநோதினியும் சேர்ந்து, நிவேதாவிற்கும், தேவ்விற்கும் எதிராக செய்த காரியங்களை கட்டம் கட்டி சொல்லிவிட்டாள்.
கேட்டுக்கொண்டிருந்தவன், அப்படியே சிலையானான். ஒவ்வொரு சதிகளையும் கேட்கக் கேட்க, சித்தப்பிரமை பிடித்தது போல சரிந்தான் தேவ்.
தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை விட, நிவேதாவை ஏமாற்றிவிட்டோமா என்ற எண்ணம் அவனை உள்ளுக்குள் பிய்த்துக் குதறியது.
‘பிடிக்காமல், மனமில்லாமல் திருமணம் செய்து கொண்டாளா வேதா? நான் தான் அவளைத் தவறாகப் புரிந்துகொண்டேனா?’ இதை நினைக்கும்போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி.
‘தன்னை தொடர்பு கொள்ள எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்… தன்னை எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள்?’ என்ற எண்ணம் வர, இதயம் பிளக்கும் வலி.
‘வேதாவை தவறாக நினைத்துவிட்டோமே’ அந்த குற்றவுணர்ச்சி தந்த இரட்டிப்பு வலி.
‘இவ்வளவு குரூரமாக, கேவலமாக நடந்துகொள்வார்களா?’ இதை எண்ணும்போது அருவருப்புடன் கூடிய வலி.
வலியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை அவனால். ‘தனக்கே இப்படி என்றால் நிவேதாவிற்கு?’ என நினைக்கையில், அவளுக்காக நெஞ்சம் ஓலமிட்டது.
கௌரியிடம் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி அவளை அனுப்பிவைத்தான்.
‘நிவேதாவின் தற்போதய நிலை என்ன? எப்படி இருக்கிறாள் என தெரிந்துகொள்ளவேண்டும்’ மனது உந்தியது.
அடுத்து என்ன என்று இம்முறை பொறுமையாகத் திட்டமிட்டான். முன்பு தேவ்வுடன் பேசிய, மித்ரன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவனுக்கு அழைத்தான்.
நிவேதாவை பற்றி அவனிடம் கேட்க… “விஜய் சாரும் நிவேதா மேடமும்தான் சார் இப்போ முழுசா கவனிச்சுக்கறாங்க” என்றவன் கூடவே ‘மித்ரன் அனுராதா போல இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள்’ என்றான்.
மனதில் சுருக்கென்றது… ‘நிவேதா தன்னை, தன் காதலை கடந்து சென்றுவிட்டாள்’ என நினைத்து. அந்த எண்ணம் கோடான கோடி ஆயுதங்கள் படையெடுத்து மனதை தாக்கியது போல ரணம் அவனுள்.
அவளைத் தவறாக எடுத்துக்கொள்ள தோன்றவில்லை. தன்னைத்தான் அற்பமாக எண்ண தோன்றியது! தன் அவசரத்தினால் இந்நிலை என எண்ணி மருகினான்.
‘இதற்கு காரணம் தன் அம்மா! என்ன நேர்த்தியான திட்டம்? அதுவும் இன்னமும் நடிக்கிறாரே!’ என்று எண்ணும்போது கட்டுக்கடங்காத கோபம். எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்… நேராக மருத்துவமனை சென்று திருமணத்திற்குச் சம்மதம் சொன்னான் வினோதியிடம்!
Really amazing words, u have used to describe each situation, my heart weighs n eye have been bloated up vth liquid as if eye balls r ready to jump out.😳😨😰….
Ahh!!! Thank you so much sister 😍 It means a lot to me ❤
Super
Thank you sister 🙂