மீண்டும் ஒரு காதல் – 20

மீண்டும் ஒரு காதல் – 20:

நிவேதா அலுவலகம் வராமல் போகவே, அவளிடம் இருந்து ஏதாவது விடுப்புக்கான தகவல் வருகிறதா என காத்திருந்தான்.

நேரம் சென்றதே தவிர… அவளிடம் இருந்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை.

யோசனையுடன் அவளை அழைத்தான். ஆனால் அழைப்பு எடுக்கப்படவில்லை. ‘ஏதாவது வேலையில் இருப்பாள்’ என எண்ணி மறுபடியும் சில நிமிடங்கள் கழித்து அழைத்தான். பதிலில்லை.

கொஞ்சம் பதட்டம் எட்டிப் பார்த்தது. அழைப்பு ஒருமுறை கூட எடுக்கப்படாமல் போக, தன் அத்தையிடம் சொல்லி அவளை பார்க்கச்சொல்லலாமா என்று கூட நினைத்தான்.

‘என்ன ஆயிற்றோ?’ என்ற பயம் சூழ, கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் தேங்கியது. உடனே புறப்பட்டான் வீட்டிற்கு.

‘உடம்பை பார்த்துக் கொள்ளாமல் இப்படியா விடுவது? என்ன ஆயிற்றோ இப்போது’ படபடப்புடன் காரில் ஏறினான்.

‘அதட்டி சாப்பிடச் சொல்லவும்… மிரட்டி உடலைக் கவனிக்கவும், யாருமில்லாமல் போனது தான்… அவளின் மெத்தனத்திற்கான காரணம். இருக்கட்டும் இனி இருக்கிறது’ மனதில் படபடப்புடன்… உரிமை கோபமும் சேர்ந்துகொண்டது.

‘தனியாக இருக்கிறோமே என்ற பயம் கொஞ்சமாவது இருக்கிறதா? இதற்கு சீக்கிரம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இன்னொரு முறை உடல் பாழாக விட்டுவிடக்கூடாது. அன்று ஹாஸ்பிடலில் எப்படித் துவண்டு போயிருந்தாள். போதும் அவளின் தனிமை’ அவன் மனம் பரிதவித்தது.

மனது முழுக்க நிவேதாவின் எண்ணங்களுடன்… நெஞ்சத்தில் ஒரு வித தவிப்புடன், சரி வரத் துடிக்க மறுத்த இதயத்துடன், வீட்டை அடைந்து, அவளைப் பார்த்த பின் தான்… அவனுக்குத் நிம்மதி மூச்சு திரும்பியது.

அதற்குப்பின் அவளிடம் கோபித்துக்கொண்டான், ஏன் தன்னை தள்ளி நிறுத்துகிறாய் என… அவளிடம் தஞ்சம் அடைந்தான், தன் படபடப்பு குறைய… அவளிடம் உரிமை எடுத்துக்கொண்டான், தன் உரிமையை நிலைநாட்ட… அவளை அதட்டினான், மிரட்டினான், தன் நேசத்தைப் புரிய வைக்க…

பின், கெஞ்சினான்… “போதும் நிவி! முடிவு எடுக்க, ரொம்ப நாள் எடுத்துகிட்ட. என்னால முடியல!” என நிறுத்திய ரிஷி…

“பல வருஷம் கழிச்சு, இன்னைக்கு ரொம்ப… ரொம்பவே பயந்துட்டேன். அப்போ என் வேதாவுக்காக… இன்னைக்கு இந்த நிவேதாவுக்காக…” சொன்னவன் கண்களில் என்ன என்று யூகிக்க முடியாத உணர்வுகள்.

பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு… “சாப்பிட்டியா?” என கேட்டான். தலையாட்டினாள்.

புன்னகையுடன், “சரி! மருந்து மறக்காம சாப்பிடு… நான் ஆஃபீஸ் கிளம்பறேன். லேப்டாப் எல்லாமே அங்க தான் இருக்கு” என்றவன் சற்று நிறுத்தி…

“மறுபடியும் சொல்றேன் நிவி. ப்ளீஸ், போன் எடுக்காம விட்டுடாத. அவாய்ட் பண்ணாத. என்ன ஆச்சோனு… ஏதேதோ பயந்து என்னென்னமோ யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்” என்றவன் ‘வருகிறேன்’ என்பதை, சின்ன தலையசைப்புடன் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

ஆனால் நிவேதா அப்படியே நின்றாள். அவன் சொன்ன, ‘வேதாவிற்காக கடைசியாக பயந்தேன்’ என்பதை நினைத்து அதிர்ந்தாள். அவள் தானே அந்த வேதா!

‘அவன் அம்மா இதெல்லாம் ஏற்றுக்கொள்வாரா? அவன் வீட்டிற்கு வந்துள்ளது யார்?!’ மறுபடியும் பல யோசனைகள் அவளுள்!

இவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்த ரிஷியின் அத்தைக்கு, எரிச்சலாக வந்தது… நிவேதாவை நினைத்து.

அன்று மாலை… நிவேதா மினுவுடன், அந்த குடியிருப்பில் இருந்த பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்க… பால்கனியில் நின்று, கீழே பார்த்துக்கொண்டிருந்த ரிஷியை பார்த்தவுடன், மினு அவளைக் கீழே அழைத்தாள்.

அவன் விடுவானா இந்த வாய்ப்பை! உடனே கீழே சென்றான். நிவேதா புன்னகைத்தாள்.

அவள் அமர்ந்திருந்த இருக்கையில், ஒருவர் உட்காரும் அளவிற்கு இடம் விட்டு உட்கார்ந்தான் ரிஷி.

மினு அவனிடம் வந்து ஏதோ பேசிவிட்டு, மறுபடியும் ரஜத்துடன் விளையாடச் சென்றுவிட்டாள்.

அவள் சென்றபின் ஓர் அசாதாரண அமைதி இருவருக்கிடையில். மதியம் நடந்தது இருவரும் நினைத்துப் பார்க்க, சின்ன புன்னகை அரும்பியது இருவரிடத்தில்.

பின், ரிஷி மௌனத்தைக் கலைத்தான். “மருந்து எடுத்துக்கிட்டியா?” அவன் கேட்க, தலையசைத்தாள். என்ன பேசுவது என்று இருவரும் யோசிக்க, மினு ரஜத்துடன் மறுபடியும் வந்தாள்.

“தேவப்பா… எனக்கு ஒரு டவுட்” இடுப்பில் கைவைத்தபடி கேட்டாள்.

நிவேதாவுக்கு, ‘அதென்ன அவனிடம் சந்தேகம் கேட்பது’ என்பதுபோல சின்ன பொறாமையுடன் பார்த்தாள். இருந்தும் அந்த சின்ன பொறாமை கூட அழகாக இருந்தது.

ரிஷி புன்னகையுடன், இருவரையும் இரு கைகளால் தன் அருகே நிறுத்தி… “என்ன டவுட்?” என்று கேட்டிட,

“உனக்கும் அம்மாக்கும் சண்டையா?” யோசித்தபடி மினு கேட்க, நிவேதா புருவங்கள் முடிச்சிட்டது. ரிஷி நிவேதாவை புன்னகை குறையாமல் பார்த்தான்.

பின் மினுவிடம், “ஏன் டா? ஏன் அப்படி கேட்கிற?” காரணத்தைத் தெரிந்துகொள்ள ரிஷி முற்பட…

“நேத்து ரஜத் அம்மாக்கும், அப்பாக்கும் சண்டையாம். அதுனால அவன் அப்பா கோபப்பட்டுட்டு ஹால்’ல படுத்துட்டாராம். நீயும், அம்மாவும் சண்டை போட்டுட்டதால தான, நீ தனி வீட்ல தங்கியிருக்க. எப்போ ரெண்டு பேரும் ஷேக் ஹேண்ட் பண்ணி ஃப்ரெண்ட்ஸ் ஆவீங்க? எப்போ நீ எங்க கூட வந்து இருப்ப?” கேள்வியாகக் கேட்டுத் தள்ளினாள் அந்த வாண்டு.

நிவேதா கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி. ரிஷி அவளைப்பார்த்து குறும்புடன் சிரித்தான். அவள் கோபமாக முறைத்தாள். அந்த முறைப்பு கூட அழகாகத் தெரிந்தது, சுவாரசியமாக இருந்தது அவனுக்கு.

நிவேதாவையே பார்த்தபடி,“மினுக்குட்டி… தேவப்பா ஃப்ரெண்ட் ஆக எப்பவோ ரெடி. பட், அம்மா தான் இன்னமும் கோபமா இருக்காங்களே” என்றவன், வேண்டுமென்றே கையை நீட்டி நிவேதாவிடம் “ஃப்ரெண்ட்ஸ்” என்றான் குறும்புப்புன்னகையுடன்.

நிவேதா இன்னமும் முறைத்தாள். ஆனால் தேவையே இல்லாமல் அங்கே ஆஜர் ஆனது… புன்னகையும்!

இப்போது அவன் புருவம் உயர்த்தி, தன் கையை அவளிடம் சுட்டிக் காட்ட, மினு, “அம்மா ஷேக் ஹேண்ட் பண்ணுமா… பண்ணுமா” பரபரத்தபடி கேட்டாள்.

நிவேதாவின் விழிகள் இன்னமும் முறைத்தபடி இருக்க, “விடு மினு… அம்மாக்கு கோபம் குறையறவரை தேவப்பா வெயிட் பண்றேன்” என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

‘என்ன ஒரு நடிப்பு!’ மனதில் அவன் செயல்களை ரசித்தபடி அவள் இருக்க, “ரொம்ப நாள் காக்க வச்சுடாத நிவி. நானும் ரோமியும் நிஜமான, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்புக்காக ரொம்ப வருஷமா காத்துட்டு இருக்கோம்” என்றான் இப்போது புன்னகையெல்லாம் தொலைத்தபடி!

அவன் முகமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை அவளால்… அன்றும் இன்றும் என்றும் அவன் எதிர்பார்த்தது, எதிர்பார்ப்பது, அவளின் அன்பைத் தானே!

இப்போது ஏதோ உந்துதலில்… தன் கையை நீட்டி, “ஃப்ரெண்ட்ஸ்?” என்றாள் அவனைப்போல குறும்புப்பார்வையில் அல்ல… அன்பான காதல் பார்வையில்.

அவள் கண்கள் அதை வெட்டவெளிச்சமாகக் காட்ட, அதில் ஒரு முறை மூழ்கி வெளிவந்தவன் அவளிடம் கை குலுக்கினான்.

“வெறும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் ரிஷி. எனக்கு இன்னமும் டைம் வேணும்” என்றாள் அவன் முகம் பாராமல். அவளுக்கு தெரிந்துகொள்ள வேண்டும். நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நேரம் வேண்டும்.

அவன் புன்னகையுடன், “இப்போதைக்கு இது போதும்” என்றவன், “இனி ரிஷி வேண்டாம். தேவ்ன்னு கூப்பிடு” கண்களில் ஆசை தெரிந்ததோ அவனிடம்?!

நிவேதாவினுள் ‘தேவ்’ என்ற பெயர், ஆயிரம் பட்டாம்பூச்சி ஒருசேரப் பறந்ததுபோல உணர்வைத் தந்தது!

இருவரிடத்தில் சில நிமிடங்கள் மௌனம். விளையாடும் பிள்ளைகளைப் பார்த்திருந்தாலும், மனதில் மெல்லிய உணர்வுகள். நேசம் கொண்ட நெஞ்சங்களுக்கு இடையில் அந்த மௌனம் கூட அழகே!

ஆனால் மௌனம் சில சமயம் பல எண்ணங்களை மனதில் ஓட்டிப்பார்க்கும்… அது போல மறுபடியும் நிவேதாவின் மனதில் வினோதினி. ஆனால் இம்முறை அது வார்த்தைகளாக வெளிவந்தது.

“உங்க வீட்ல .. அம்மா… அப்பா கிட்ட சொல்லியாச்சா… “ என்றவள் கொஞ்சம் தயக்கத்துடன்… “தேவ்” என நிறுத்தினாள்.

முதல் வந்த வாக்கியத்தில் கொஞ்சம் அவன் முகம் மாறினாலும், முடிக்கும்போது தயக்கத்துடன் ‘தேவ்’ என்பதைக் கேட்டவுடன், ஒரு நொடி இதயம் நின்று துடித்தது.

வேதாவின் குரல் போல ஒரு மாயை. மறுபடியும் அவளைப் பார்த்தான். இப்போது கொஞ்சம் ஆசையுடன், ஏக்கத்துடன், தவிப்புடன் ‘என் வேதாவாக இருக்கக்கூடாதா?’ என எண்ணி.

தன் மனதின் எண்ணத்தை நினைத்து … தன்னையே திட்டிக்கொண்டு, நிவேதா கேட்ட முதல் கேள்வியில் மனதை நிறுத்தினான். ‘அவளே கேட்டபின் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது’ என்று நினைத்து சொல்ல ஆரம்பித்தான்.

அவனும் வேதாவும் பேச ஆரம்பித்தது, பின் இருவரும் எப்படி அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றார்கள்… என்பதை அவன் சொன்னபோது, நிவேதாவின் இதயத்தில் ஒரு வித வலி… ‘இதுபோல ஒருவனை இழந்து விட்டோமே’ என எண்ணி… ‘கூடவே மகிழ்ச்சி, தன்னை இந்த அளவிற்கு நேசித்த ஒரு ஜீவன்’ என நினைத்து.

வேதனையும், மகிழ்ச்சியும் சேர்ந்ததால் கண்களில் கண்ணீரும் தேங்கியது.

பின் அவன், மித்ரன் அனுராதா மற்றும் கமலா விபத்தைப் பற்றி சொன்னபோது, அவன் கண்களும் கரித்தது.

இழப்பை நினைவுபடுத்தியதால் அவளுக்கும் அழுகை வந்தாலும்… ‘தன்னுடைய இழப்புக்காக இது நாள் வரை வருந்துகிறானே’! என்ற எண்ணம் அவளை நெகிழச்செய்தது.

“வேதா கூட கடைசியா நான் பேசிட்டு, அம்மாக்கு கால் பண்ணி அவளை பார்த்துக்க சொன்னேன். என் வாழ்க்கையில நான் செய்த பெரிய… பெரிய தப்பு அது தான் நிவி” இப்போது குற்றவுணர்வு அவன் முகத்தில். அவள் முகத்திலோ அதிர்ச்சி.

ஒருவேளை அவன் அம்மாவின் செயல்கள் அவனுக்குத் தெரிந்திருக்குமோ என எண்ணி அதிர்ச்சியடைந்தாள்.

“அதுக்கப்புறம் நான் இருந்த ஏரியால, காட்டு தீ அதிகம் ஆகிடுச்சு. யாரையுமே தொடர்புகொள்ள முடியல. இருந்தும் அடுத்த ரெண்டு நாள்ல, எப்படியாச்சும் இந்தியா கிளம்பிடணும்னு… அடிச்சு பிடிச்சு கலிபோர்னியா’ல இருந்து வேகாஸ் வந்துட்டேன்.

அப்போ தான் நிவேதா கிட்ட இருந்து கால் பண்ண சொல்லி வந்த மெசேஜ் டெலிவெர் ஆச்சு. உடனே கால் பண்ணேன், ஆனா ரீச் ஆகல. வேகாஸ்’ல இருந்து பெங்களூரு வந்து லேண்ட் ஆனப்ப … அம்மாக்கு நெஞ்சு வலினு வந்த மெஸேஜ் பார்த்து, ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியல” என்றபோது நிவேதா இன்னமும் அதிர்ந்தாள்.

காரணம், ‘வினோதினி நன்றாகத் தானே இருந்தார் தன்னிடம் பேசியபோது… என்ன ஆயிற்று அவருக்கு?’ என்ற சின்ன அதிர்வு அவளுள்.

வானைத்தை வெறித்தபடி, தான் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டோம், அதனால் நேரிட்ட இன்னல்கள் அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான்!

**********************************

பெங்களூரு வந்தவுடன் தன் அன்னைக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியைப் பார்த்தபின், அதிர்ந்தான். நிவேதா அழைக்க சொல்லி வந்த செய்தி ஞாபகம் வர, மறுபடியும் அழைத்துப் பார்த்தான். அவளிடம் பேச முடியவில்லை.

சென்னை செல்வதா இல்லை ஆம்பூர் செல்வதா… வேதாவின் இழப்பு , அம்மாவின் உடல்நிலை இரண்டும் அவனை வாட்டிவதைக்க, உடனே சென்னை சென்று தனியாக இருக்கும் நிவேதாவை தன்னுடன் அழைத்து வந்துவிடலாமா என்ற யோசனை வந்த நேரம், சரியாக அழைத்தார் அவன் அத்தை.

‘வினோதினியின் உடல் மிகவும் பலகீனமாகிவிட்டது , உடனே வரும்படி’ அவனிடம் கூறினார். அம்மாவாயிற்றே! எதையும் அதற்குமேல் யோசிக்காமல் நேராக ஆம்பூர் சென்றான்.

அங்கே துவண்டு படுத்திருந்த அம்மாவைப் பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீர் லேசாக எட்டிப்பார்த்தது. என்னதான் அதிகம் பாசமில்லை என்றாலும், அம்மா என்ற உறவு தனிதானே!

இவனைப் பார்த்ததும்… கண்ணீர் விட்டு அழுதார் வினோதினி.

“எனக்கு பயமா இருக்கு தேவ். டாக்டர்ஸ் என்னென்னமோ சொல்றாங்க” கண்ணீருடன் சொன்ன தாயை, கண்ணீருடனே சமாதானம் செய்தான்.

மருத்துவரைப் பார்த்து பேசியபோது, “ரொம்ப பயப்படுறாங்க தேவ். ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணணும், அதுக்கு அவங்க மன தைரியம் ரொம்ப முக்கியம். பட், முன்னாடி பார்த்ததுக்கு இப்போ கொஞ்சம் பெட்டர்’ரா இருக்காங்க, மே பி உங்கள பார்த்ததுனால இருக்கும். அவங்க கூடவே இருந்து, நீங்க கொஞ்சம் அவங்கள தேத்தினா… சர்ஜரி பண்ணிடலாம்” என்றார்.

“அதுக்கப்புறம் அம்மா சரி ஆகிடுவாங்களா டாக்டர்…”

“மோஸ்ட்லி எஸ். எந்த ப்ராப்லம்’மும் வராது தேவ். அவங்க ஆபரேஷன்’கு அப்புறம் பயமில்லாம, சகஜமா இருந்தாலே பாதி சரியாகிடும். கூடவே இருந்து பார்த்துக்கோங்க” என அவனைத் தேற்றினார்.

தேவ் தலையசைத்துக்கொண்டான்.

அவன் இருந்த மனநிலையில் அதிகம் யோசிக்க முடியவில்லை. இல்லையேல் கொஞ்சம் பொறிதட்டி இருக்கும், ‘ஏன் மருத்துவர் “கூடவே இருங்க” என்பதை அழுத்தமாக மீண்டும் மீண்டும் சொல்கிறார்’ என.

அவன் அப்பா எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் இருந்தார். அவருடைய சுபாவமே அதுதான் என விட்டுவிட்டான்.

தேவ், அவனால் முடிந்தவரை வினோதினியை தேற்றினான். நடுவில் அவ்வப்போது நிவேதாவை அழைப்பதை, குறுஞ்செய்தி அனுபவத்தை… தொடர்ந்தான். ஆனால் எந்த பயனும் இல்லை. அவளை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

கொஞ்சம் பயம் எட்டிப்பார்த்தது… வேதாவின் நிலை என்ன ஆனதோ என எண்ணி. எப்படி அவளைச் சென்று பார்ப்பது என தெரியவில்லை.

மித்ரன் அனுராதா இறந்த பின், அவர்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களை, அதை தொடரும்படி சொல்லியிருந்தான் தேவ். அதை அப்படியே விட மனமில்லை அவனுக்கு. ஒன்று, ‘அது மித்ரனின் கனவு’. மற்றொன்று,  ‘நிவேதாவின் எதிர்காலம் அது’ என நினைத்து.

நிவேதாவை தொடர்பு கொள்ள முடியாமல் போக, ஒருவேளை வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டாலோ என எண்ணி, அலுவலகத்திற்கு அழைத்தான். ஆனால் அங்கும் ஏமாற்றமே. நிவேதா வரவே இல்லை என்றனர்.

தனக்குத் தெரிந்த அங்கே வேலைப்பார்ப்பவரிடம், நிவேதாவை வீட்டில் சென்று பார்க்கும்படி சொல்ல, பார்த்துவிட்டு வந்த சொன்ன தகவல் இன்னமும் பயத்தைக் கிளப்பியது.

நிவேதா வீட்டில் இல்லை என்ற தகவல் தான் அது.

இதற்கிடையில் வினோதினிக்கு அறுவை சிகிச்சைக்கான நேரம் குறிக்கப்பட்டது. என்னதான் அவருடனே இருந்தாலும் நிவேதாவின் எண்ணங்களே அவனை சூழ்ந்திருந்தது.

டாக்டரிடம், ‘எவ்வளவு நேரம் ஆகும் தன் அம்மாவுக்கு நினைவு திரும்ப’ என கேட்டான்.

நல்லவேளை ‘தான் சென்னை சென்றுவிட்டு வரவேண்டும். எவ்வளவு நேரம்  ஆகும்’ என கேட்டிருந்தால் மிகவும் குறைவான நேரத்தை சொல்லியிருக்கக் கூடும். ஆனால் தேவ் சாதாரணமாகக் கேட்டதுபோல இருக்க, அவரும் வினோதினியின் வயதை கருத்தில் கொண்டு ஏழு மணி நேரம் என்றார்.

அதுவே போதுமானதாக இருந்தது அவன் சென்னை கிளம்பிச்செல்ல. அவன் அத்தையுடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

மித்ரனின் வீட்டு முகவரியை அலுவலகத்தில் கேட்டு தெரிந்துகொண்டு அங்கே போக, ஏமாற்றமே காத்திருந்தது!

நிவேதா அங்கு இல்லை. பக்கத்தில் விசாரித்தபோது கூட… யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இப்போது கொஞ்சமாக இருந்த பயம் அதிகமானது… ‘நிவேதாவிற்கும் குழந்தைக்கும் என்ன ஆனது? எங்கு சென்றார்கள்?’ என நினைத்து.

பயத்தில் இதயம் தாறுமாறாகத் துடித்தது.

அதற்குள் அவன் அத்தை அழைத்து… வினோதினிக்கு அறுவை சிகிச்சை முடிந்து அதில் ஏதோ சின்ன பிரச்சனை ஆகிவிட்டதாகச் சொல்ல, பதறிக்கொண்டு கிளம்பினான்.

மனதளவில், உடலளவில் பலத்த வலி…  அழுத்தம். முற்றிலுமாக தளர்ந்துவிட்டான். தலையைச் சுத்தியால் அடிப்பதுபோல ஓர் உணர்வு. நிவேதாவின் நிலை என்னவோ என்ற எண்ணம் பதைபதைத்தது… பயமுறுத்தியது.

அடுத்த ஓரிரு நாட்கள் அம்மாவுடன் சென்றாலும், நிவேதா குறித்து அடுத்து என்ன செய்வது என்பதையும் யோசித்தான். அலுவலகத்திலிருந்து ஆட்களை அனுப்பி தினமும் நிவேதாவின் வீட்டிற்கு சென்று பார்க்கச்சொன்னான்.

‘அம்மாவிடம் சொல்லலாமா… கேட்கலாமா’ என்ற யோசனை வந்தது. ஆனால் அவர் இருக்கும் நிலையில் இது இன்னமும் அழுத்தத்தைத் தரும் என்பதால் எந்த எண்ணமும் தவிர்க்கப்பட்டது.

கொஞ்சம் வினோதினி தேறியது போலத் தெரிய வர, இப்போது முழு வீச்சில் நிவேதாவை தேடலாம் என நினைத்தான். அதற்கு முதல் படி… மித்ரன் வீட்டில் சென்று விசாரிக்கலாம் என்பதே! அதுவும் ஒருவேளை தோல்வியில் முடிந்தால், காவல்துறையை அணுகவேண்டும் என முடிவு செய்தான்.

அவனும் மித்ரனும் படித்த கல்லூரியில் சென்று விசாரித்தால், மித்ரன் வீட்டு முகவரி கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், கோவை புறப்பட்டான்!

பாவம் அவனுக்கு அப்போது தெரியவில்லை… அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது…. அவன் அம்மா வினோதினி இந்த ஹாஸ்பிடல் நாடகத்தை நன்றாகத் திட்டமிட்டு, தேவ்வை அங்கேயே முடக்கி வைத்து… நாடகத்தை நன்றாக நடத்தி முடித்துவிட்டார் என்பது!

12
7
6
1

4 thoughts on “மீண்டும் ஒரு காதல் – 20

  • September 21, 2022 at 10:44 pm
    Permalink

    Super mam. Ovoru movementsum unarvu poorvama irunthathu🔥🔥🔥

  • September 27, 2022 at 4:49 pm
    Permalink

    Villi vinidhini n his athài….so yucky they r..nicely written

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved