என்னுள் நீ வந்தாய் – 14A

என்னுள் நீ வந்தாய் – 14A

“சீக்கரம் போன்னு சொன்னேன் கேக்குதா இல்லையா உனக்கு” என கவிதா கத்தவும், தன்னிலைக்கு வந்தவன்…

“என்ன ச்சேஸிங்’கா… ஸ்பீடிங் கேஸ்ல பிடிக்கவா? ஆளப்பாரு. ஆஃபீஸ்’க்கு நேரம் ஆச்சு…” அவளை இன்னும் இருமுறை உதவி கேட்கவைக்க வேண்டுமென அவன் நினைக்க, அவனைக் கண்ணாடி வழியே புருவங்கள் உயர்த்திப் பார்த்தாள்.

பின் “நீ வண்டிய நிறுத்து நான் வேற யாராச்சுட்ட லிஃப்ட் கேட்டுக்கறேன்” என்றாள் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டே…

‘ராட்சஷி’ என மனதில் நினைத்துப் புன்னகைத்தவன், “பின்னாடி நல்லா பிடிச்சுக்கோ” என்றுவிட்டு சட்டென ஆக்சிலரேட்டர்’ரை முறுக்கினான். புல்லட் சீறிப்பாய்ந்து.

அவளோ மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாள் ஜூம் இன் ஜூம் அவுட் (Zoom in Zoom out) செய்துகொண்டு.

முன்னே சென்ற வண்டி அந்த பெண்ணின் வண்டியின் வேகத்திற்கு சென்றதால்… சில நொடிகளிலே அவர்கள் முன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் அகிலன். அதை சற்றும் எதிர்பார்க்காத கவிதா, அவன் ஹெல்மெட்டில் நன்றாக முட்டிக்கொண்டாள்.

“ஆஹ்” என அவள் முனக, “இதுக்குத்தான் இந்த ச்சேஸ்சிங்’லாம் வேணாம்ன்னு சொல்றது. ஹெல்மெட் போடுன்னு சொன்னாலும் கேட்கறதில்ல” என்றவன் திரும்பி, “ரொம்ப வலிக்குதா பேபி” என கேட்க…

மண்டையைத் தேய்த்துக்கொண்டு, வண்டியில் இருந்து இறங்கிய கவிதா “டேய்… உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா??? அந்த பொண்ண டென்ஷன் பண்றதுல என்ன கிடைச்சுச்சு உங்களுக்கு?” என்று முடிக்கும்முன்…

எதிர் வண்டியில் இருந்தவன் “தோடா என்ன அட்வைஸ்’ஸா” என நக்கலாகக் கேட்டான்.

“ஹாஹா அட்வைஸ்’ஸா? வீடியோ கைல இருக்கு. உன் வண்டி நம்பர்ல இருந்து எல்லாமே இருக்கு. சர்குலேட் பண்ணவா? வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா’ன்னு? இல்ல போலீஸ்’ட்ட கொடுக்கவா இந்த பொண்ண நீ டிஸ்டர்ப் பண்ணறன்னு. செக்க்ஷன் 294 எது வசதி???” என்று அந்த வண்டியில் இருக்கும் பெண்ணைப் பார்த்து கேட்க… அந்த இளைஞர்கள் இருவரும் கொஞ்சம் யோசித்தனர்.

இதை அனைத்தையும் ஒரு பார்வையாளர் போல் கன்னத்தில் கைவைத்து அகிலன் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அந்த பெண்ணோ பயந்துகொண்டு…

“ஐயோ எதுக்குங்க போலீஸ்’லாம். நான் போய்டறேன்” என்று சொன்னதுதான் தாமதம்…

“உன்னமாதிரி பொண்ணுங்க இப்படி பயப்படறதுனாலதான் இதுமாதிரி ராஸ்கல்ஸ் பொண்ணுங்கள ஈசி’யா டார்கெட் பண்றாங்க… இவனுங்களையெல்லாம்” கவிதா போனை எடுத்து யாருக்கோ அழைக்க வர… தூரத்தில் ஒரு ட்ராபிக் போலீஸ் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த இளைஞர்கள் “யக்கா! இனி பண்ணமாட்டோம் வுட்டுடுக்கா” என்றவர்கள் அந்தப் பெண்ணிடம் திரும்பி “சாரி” என்றுவிட்டு அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டனர்.

அந்தப் பெண்ணிடம் கவிதா “இவங்ககிட்டலாம் பயப்படாதீங்க. நம்ம நாலு வார்த்தை பேசினா… இப்போ ஓடினாங்களே அதுமாதிரி ஓடிடுவாங்க”
அந்த பெண் நன்றி என்றவுடன், அழகாகக் கண்கள் மூடித்திறந்து, இதழ்கள் விரிந்து, புன்னகைத்தாள் கவிதா.

அதை பார்த்த அகிலனோ கிறங்கிப் போய் மனதில் நினைத்தது ‘சிரிக்கும்போது அந்த இரு கன்னங்களை மிருதுவாகக் கிள்ளினால் என்ன…’ என்று…

அவன் புறம் கவிதா திரும்பி, “பார்த்தல்ல. நான் செக்க்ஷன்’லாம் சொன்னவுடனே பயந்து ஓடிட்டாங்க” என பெருமையுடன் சொல்லிக்கொண்டு வண்டியில் ஏறினாள்.

“ஸ்வீட்டி. உன்னை பார்த்து பயந்து போய்ட்டாங்கன்னு நினைச்சயா” என சத்தமாக சிரித்து, “அதோ பாரு அங்க போலீஸ். அவரை பார்த்து எஸ் ஆயிட்டானுங்க” என்றான் வேண்டுமென்றே அவளைச் சீண்ட.

அவனைக் கண்ணாடி வழியே பார்த்து முறைத்து… “ஒன்னும் இல்ல. அந்த போலீஸ்ஸ அவங்க பாக்கவே இல்ல” என்றாள் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

“ஆமா நீ இப்போ சொன்னதுனால இனி அவங்க இதை பண்ணமாட்டாங்கன்னு நினைக்கிறயா பேபி” மனதில் தோன்றியதை அவன் கேட்க…

“ஹ்ம்ம்… பண்ணமாட்டாங்கன்னு சொல்ல முடியாது… ஆனா யோசிப்பாங்க. யாராச்சும் பின்னாடியே வீடியோ எடுத்துட்டு வந்துட்டா பிரச்சனை ஆயிடும்ன்னு யோசிப்பாங்க. இதுனால நூத்துல ஒரு பாயிண்ட் ஒன் பெர்ஸன்ட் தப்பு குறையும்” என்றாள் தோள்களைக் குலுக்கி.

அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் மறுபடியும் அவனை ஆட்டிவைத்தது. மேலும் மேலும் அவளின் மேல் காதல் பெருக்கெடுத்தது.
அவளும் அன்று நல்ல மனநிலையில் இருந்தாள். அதனால் கொஞ்சம் கூடுதலாக அவனிடம் பேசினாள்.

அவனைப் பற்றி கேட்கவா வேண்டும். பெயரை சொன்னதற்கே ஏதோ சாதித்துவிட்டதுபோல் இருந்தான். இப்போது இது. ஆகாயத்தில் மிதந்தான்…
அவள் தொடர்ந்தாள்.

“ஆமா நீ மதியம் எங்க சாப்பிடுவ? டெய்லியும் ஹோட்டல்லயா?” அவள் கேட்க, “இல்ல பேபி. ஆஃபீஸ்ல எம்ப்ளாயிஸ்’க்கு சாப்பாடு ப்ரொவைட் பண்றேன். அதையே நானும் சாப்பிட்டுப்பேன். நானும் அங்கதான் சாப்பிடறேன்னா, கேட்டரிங் பண்றவங்க ஒழுங்கா பண்ணுவாங்க. அதான்” என்றான்.

அவள் மனம், அவன் சொன்னதைக்கேட்டு கொஞ்சமே கொஞ்சம் அவனை புகழ்ந்தது. சொல்லத்தெரியாத சின்ன சந்தோஷம் மனதில் வந்து போனது. அவன் பார்க்காத போது கண்ணாடிவழியே அவனைப் பார்த்து சின்னதாக புன்னகைத்தாள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க, மதிய நேரம் அவனுக்கு அழைப்பு வந்தது அவளிடமிருந்து. அவன் ஒரு மீட்டிங்’கில் இருந்ததால் மொபைலை கவனிக்கவில்லை. அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அவள் அப்பாவிற்கு மறுபடியும் முடியவில்லை. அதே மருத்துமனையில் சேர்த்துள்ளதாகவும், பயப்படும்படி ஒன்றும் இல்லை என்றும், அவள் தற்போது காஞ்சிபுரம் செல்லவிருப்பதால், மாலை அவளை கூப்பிட வர வேண்டாம் என்றிருந்தது.

அதை அவன் ஒரு அரை மணி நேரம் கழித்துப்பார்க்க, கோபம் தலைக்கேறியது. இருப்பினும் தன்னையும் திட்டிக்கொண்டான். அவள் அழைப்பை ஏற்காததை நினைத்து.

அங்கே கவிதா, டாக்ஸியில் மருத்துவமனைக்கு சென்று பதட்டத்துடன் தந்தையைப் பார்க்கச்சென்றாள். அவள் தம்பி ட்ரைனிங் சென்றிருந்ததால் ஊரில் இல்லை. சித்தப்பா மட்டுமே இருந்தார்.

அவள் அப்பா, அவளைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, “தனியா வந்தயாம்மா? மாப்பிள வரலையா?” என்பதே. அவள் சற்று தயங்கவும், அவர் முகம் முற்றிலுமாக மாறியது.

“அம்மாடி… நீ சந்தோஷமா இருக்கியாடா? எந்த பிரச்சனையும் இல்லையே” என மிகவும் வருத்தப்பட, இருமலும் ஒட்டிக்கொண்டது. அவளோ பதறிக்கொண்டு…

“அப்பா… நான் நல்லா இருக்கேன்ப்பா… அவருக்கு கொஞ்சம் வேல அதான் வர முடியல. நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க” என அவரைத் தேற்றும்போது, அவசரமாக உள்ளே நுழைந்தான் அகிலன்.

அவனை பார்த்தவுடன் சித்தப்பாவிற்கு சந்தோஷம். அவள் அப்பாவிற்கு நிம்மதி. அவளுக்கோ அதிர்ச்சி. ஆச்சர்யம். இன்னும் பல இனம் புரியாத உணர்வு.

அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டு, “மாமா என்ன ஆச்சு திடீர்ன்னு? இப்போ பரவால்லயா?” கேட்டபடி அவளருகில் வந்து நின்றான். அவள் அவனையே பார்க்க… அவள் கண்கள் கலங்கியது.

அவள் அப்பா… “ஒன்னுமில்ல மாப்ள. கொஞ்சம் மூச்சு விட சிரமமா இருந்துச்சு. அவ்ளோதான். அதுக்குள்ள பயந்துட்டு தம்பி போன் பண்ணிட்டான்” என்றவர் நிறுத்தி…

“கவிதா தனியா வந்ததை நினச்சு பயந்துட்டேன். உங்கள பார்த்தவுடனே தான் நிம்மதியா இருக்கு” என்று மனதில் நினைத்ததை சொல்லிவிட்டார்.

“எனக்கு கொஞ்சம் வேல இருந்துச்சு மாமா. அதுதான் இவளை முன்னாடி போன்னு சொல்லிட்டு நான் பின்னாடியே வேலைய முடிச்சிட்டு வந்துட்டேன்” என்றவன் அவளைப் பார்த்த பார்வையே சொன்னது ‘பார்த்தாயா நீ என்ன செய்துவைத்திருக்கிறாய் என’.

அப்போது அவள் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்தவன், கண்களால் ‘கூடாது’ என்று சைகை செய்ய, அதைப் பார்த்த கவிதாவின் தந்தைக்கு நிம்மதி மனதில் பரவியது.

“சரிங்க மாப்ள. இன்னும் கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் பண்ணிடறோம்ன்னு சொல்லிருக்காங்க. கவி நீ மாப்பிள்ளையை கூட்டிட்டு வீட்டுக்கு போடா. சித்தப்பாவோட அப்பா வந்துடறேன்” என்றவுடன் என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் நிற்க,

அகிலன், “இருக்கட்டும் மாமா. நாங்க இங்கயே இருக்கோம். சேர்ந்தே போகலாம். நான் ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அவன் செய்யும் ஒவ்வொன்றும் அவளை வெகுவாகத் தாக்கியது. அவனுக்குத் தெரிகிறது தந்தை என்ன நினைப்பார் என்று ஆனால் தனக்குத் தெரியவில்லையே?

அவன் எடுத்துக்கொள்ளும் சிரத்தை மன நிறைவை தந்தாலும் பாரமும் தந்தது. தன்னால் அவனுக்கு என்ன செய்யமுடியும் என்ற எண்ணம் இன்னமும் வருத்தியது.

அமைதியாகவே வந்தாள் வீட்டிற்கு. ஆனால் மனது அமைதியற்றிருந்தது. அதிலிருந்து வெளிவர அவளுக்குத் தெரிந்த வழி கைலாசநாதர் கோவில்.

அகிலன் அவனுக்குக் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு, அதை செய்துகொண்டிருக்கும்போது, அவள் அப்பாவிடம் சொல்லிக்கொண்டு கோவிலுக்கு சென்றாள்.

மனதின் சஞ்சலத்தை யாரிடமும் சொல்லமுடியாமல், அதை இறக்கி வைக்க சிறுவயதிலிருந்து சாயும் அந்தத் தூண்… அமைதியாகக் கண்கள்மூடி சாய்ந்து உட்கார்ந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது.

“அந்த தூண் அளவுக்கு என் ஷோல்டர் ஸ்ட்ராங்’கா தெரியல ஸ்வீட்டி. பட் நீ சாஞ்சுக்கற அளவுக்கு ஸ்ட்ராங் தான்” பக்கத்தில் புன்னகையுடன் அகிலனின் குரல்.

அருகில் அவனை பார்த்தவளுக்கு எதுவுமே தோன்றவில்லை. வார்த்தை வரவில்லை. மூளை வேலைசெய்யவில்லை… மனதின் போராட்டம் தெரியவில்லை… கலங்கிய கண்களுடன் எதுவும் பேசாமல் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்…

10
3

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved