என்னுள் நீ வந்தாய் – 13

என்னுள் நீ வந்தாய் – 13

———இன்று———

தனிமை சில சமயம் கொடுமையாக இருந்தாலும் அவளின் நினைவுகளின் துணையில் கழித்தான்.

எங்கு பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அவளின் ஞாபகம்.. குளித்து முடித்து கண்ணாடி முன் நின்றான்.

தன் கையில் இருந்த டாட்டூவில் கண்கள் நிலைத்தது… அதை மெல்ல வருடிக்கொடுத்தான்… தன்னால் அவளை இப்படி மட்டுமே நெருங்க முடியுமோ? அந்த எண்ணமே இன்னமும் வலித்தது…

படுக்கையில் படுத்தான்… பக்கத்தில் வெறுமை. முக்கால் வாசி நேரம் அவள் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு படுத்திருந்தாலும், அவள் தன் அருகில் தான் இருக்கிறாள் என்ற நிம்மதி இருந்தது.

இப்போது அதுவும் இல்லை. பக்கத்தில் அவள் இருப்பதுபோல் நினைத்து கையை நீட்டினான். கண்கள் அவனை மீறியும் கலங்கியது.

‘தன்னை பிடிக்காமல் போனதற்கு அஜய் மேல் இருந்த காதல் தான் காரணமா? தன் மீது ஒரு துளிக்கூட நேசம் வரவில்லையா?’
வேதனை தாங்கமுடியாமல் எப்போதாவது பிடிக்கும் புகையை நாடினான்.

கல்யாணத்திற்கு முன் வேலைப் பளு அதிகமிருக்கும்போது எப்போதாவது பிடிப்பான். கல்யாணத்துக்குப் பின் முதல் முறை புகை பிடித்தது நினைவிற்கு வந்தது.

———அன்று———

எப்பொழுதும் போல் இருவருக்கும் இடையில் தலையணைகளை வைத்து தூங்கிக்கொண்டிருந்தாள். அன்று ஆஃபீஸ் வேலை மற்றும் வீட்டுவேலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது அவளுக்கு.

உடல் வலியால் கை கால்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக நீட்டி படுத்திருக்க … அவன் ஆஃபீஸ் வேலை முடித்துவிட்டு படுக்கவந்தான். தலை கொஞ்சம் வலியாக இருந்தது அவனுக்கு.

அவள் ஒரு காலை நடுவில் போட்டிருந்த தலையணையில் போட்டபடி, அவன் பக்கம் பார்த்தவாறு படுத்திருந்தாள். நின்று அவளையே பார்த்தான். தூக்கத்தில் கூட முறைப்பது போலவே படுத்திருந்தாள் சிடுசிடுவென முகத்துடன்.

அவளைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே அவனும் படுக்க, அந்த அசைவில் அவள் தூக்கம் கொஞ்சம் கலைய, நன்றாகத் தலையணையை கட்டிக்கொண்டு ஒரு காலை தூக்கி அவன் மேல் போட்டாள்.

அதில் திடுக்கிட்டு… இப்போது அவளை எழுப்புவதா? இல்லை காலை நகர்த்துவதா? என மூளை யோசிக்க, மனமோ, அவளின் இந்த நெருக்கத்தைக் கொஞ்சமே கொஞ்சம் விரும்பி ரசிக்க ஆரம்பித்தது.
எவ்வளவு தான் மனதையும் உடலையும் கட்டுக்குள் வைத்திருந்தாலும், மனம் விரும்பிய பெண் பக்கத்தில்… மனம் அலைப்பாய ஆரம்பித்தது.

தன் மனநிலை மாறுபடுவதை உணர்ந்தவன், மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். ஏற்கனவே இருந்த தலைவலி, இப்போது இதுவும்… சிகரெட்டை எடுத்துக்கொண்டு பால்கனி சென்றுவிட்டான். மனதை அமைதிப்படுத்த அந்த சூடு தேவைப்பட்டது அவனுக்கு.

சில நிமிடங்கள் கழித்து, தூக்கத்திலிருந்து அவளுக்கு விழிப்பு வர, அவனுடைய இடத்தில் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ந்து எழுந்தாள்.

சுற்றியும் பார்க்கும்போது, அவன் பால்கனியில் உட்கார்ந்திருந்தது தெரிந்தது. அங்கு சென்று பார்த்தபோது தான் தெரிந்தது… அங்கிருந்த இருக்கையிலேயே கால்நீட்டி உறங்கிக்கொண்டிருந்தான்.

தன்னைத் தூக்கத்தில் இருந்து எழுப்ப மனமில்லாமல் இங்கேயே தூங்கிறான் என நினைத்தாள்.

அவனையே சில நொடிகள் பார்த்திருந்தாள். ஆனால் அவனைப் போல் தயங்கவில்லை. எழுப்பினாள்.

“உள்ள வந்து படு” என்றவுடன், அவன் தூக்க கலக்கத்துடன் பார்க்க, “நான் நகர்ந்து உன் இடத்துக்கு வந்துட்டேன்னா என்னை எழுப்பு. அடிக்கடி புரளமாட்டேன்… ரொம்ப ஸ்ட்ரெஸ்ட் இல்ல சோர்வா இருந்தா தான் நகருவேன். இனி என்னை எழுப்பு” என்று விட்டு அவனை உள்ளே அழைத்துச்சென்றாள்.

காலையில் எழுந்தவுடன் எங்கே இரவு புரண்டுபடுத்ததை அவன் கிண்டல் செய்வானோ என அவள் நினைத்துருக்க, அவன் அதைப் பற்றி பேசவேயில்லை.
அவனோ தன் மனம் அலைபாய்வதை எப்படித் தடுப்பது என யோசித்துக்கொண்டிருந்தான்.

அன்றிரவு அவன் தந்தை “அகில் நாளைக்கு நாங்க செங்கல்பட்டு கிளம்பறோம். கார் இன்னமும் வரலடா. நான் உன் கார் எடுத்துட்டு போறேன். நீங்க கொஞ்ச நாள் பைக்ல போய்க்கோங்க. கார் வந்துடும் சீக்கிரமா” என்றார் உணவு உண்ணும்போது.

“அப்பா என்னைக்காச்சும் ஒரு நாள்’னா பரவால்ல. டெய்லியும் பைக் சரிவராது. நான் கேப் (cab) ரெடி பண்றேன் உங்களுக்கு” என்றான் ‘முடியவே முடியாது’ என்பதுபோல்.

நேற்றிரவு அவளுடன் அந்தச் சின்ன நெருக்கத்தையே மனம் அவ்வளவு விரும்பியது. இதில் தினமும் பைக் பயணம்… ஏதாவது விபரீதம் ஆகிவிட்டால்? வேண்டாம் என்றது அவன் மூளை.

அவனைப் பார்த்து முறைத்து “ஏன்டா? அங்கபோய்ட்டு ஒவ்வொருவாட்டியும் நாங்க டாக்ஸி தேடணும். ஏதாச்சும் எமெர்ஜென்சி’னாலும் டாக்ஸி தான். சின்ன பசங்க தானே ரெண்டு பேரும். பைக்ல போக என்னவாம்?” என நிறுத்தியவர்,

“நீ என்ன எனக்கு புக் பண்றது. எனக்கு பண்ணிக்கத் தெரியும். உன் வேலையப் பாரு” என்றார் கோபமாக.

பதில் பேசாமல் உணவை அகிலன் சாப்பிட்டுக்கொண்டிருக்க, இதுபோல் அவன் நடந்துகொண்டு, பிடிவாதம் பிடித்து கவிதா பார்த்ததில்லை.

ஒருவேளை தனக்காக யோசிக்கிறானோ என நினைத்து… “மாமா நீங்க கார் எடுத்துட்டு போங்க. நாங்க பைக்ல போய்க்கறோம். உங்க கார் ரெடி ஆகுறவரை தானே” என்றாள் அகிலனைப் பார்த்து.

‘இவ என்ன இப்படி பேசறா’ என அவளைப் பார்த்தவன்… சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசாமல், பின் அவன் தந்தையுடன் தனியாக பேசினான்.

அப்போது அவர் “உங்களுக்குள்ள ஒரு தனிமை வேணும் அகில். அவளுக்கு உன்ன புருஞ்சுக்கறதுக்கு இந்தத் தனிமை உதவும். அதுக்கு தான் ஒரு நாலு அஞ்சு நாள் அங்க போறோம். நீங்க ரெண்டு பேரும் வீட்ல மூஞ்ச திருப்பிட்டு போற மாதிரியே தான் கார்’லயும் போவீங்கன்னு எனக்கு புரியாதுன்னு நினைக்கிறயா…”

“அந்த பொண்ணுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைனாலும் ஒருநாளும் அத எங்ககிட்ட காமிச்சிட்டது கிடையாது. நல்ல பொண்ணு. கண்டிப்பா உங்களுக்குள்ள ஒரு இணக்கம் வரணும். அதுக்குத் தான். புருஞ்சுக்கோ” என்றார் பொறுமையாக.

ஆம். அவன் அப்பா அம்மாவிற்குத் தெரியும் கவிதா இன்னொருவனை விரும்பி இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொன்னாள் என்று.

கல்யாணத்திற்கு முன் கவிதா அப்பா உடல்நிலை சரியில்லாத போது, அகிலனின் பெற்றோர் ‘அவனால் தான் கவிதாவின் தந்தை இந்த நிலைமைக்கு வந்தார்’ என்று தெரிந்தவுடன், மருத்துவமனையில் இருந்து அவனை அழைத்துச்சென்று ‘என்ன ஆயிற்று’ என்று கேட்டனர்.

அவன் முதலில் மழுப்ப… அவன் அம்மா ‘இது நீயாக விரும்பி இவளுடன் தான் உன் வாழ்க்கை அமைய வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்துத் திருமணம் வரை வந்துவிட்டு, இப்போது நிறுத்தவேண்டும் என்று நீயே கண்டிப்பாக சொல்லமாட்டாய். என்ன நடந்தது? என் மேல் சத்தியம் செய்து உண்மையை சொல்’ என கேட்டபோது…

வேறு வழியில்லாமல் கவிதா அவனிடம் சொன்ன அவளுடைய கடந்தகாலம்… மற்றும் அஜயுடன் அவன் பேசியது என அனைத்தையும் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான்.

அவன் அம்மாவிற்கு அவளின் கடந்தகாலம் உவப்பாக இல்லாதபோதும்… மகன் கேட்டுக்கொண்டதற்காக சரி என்றார். அதன் வெளிப்பாடே கவிதாவிடம் அவர் முகம் கொடுத்துப் பேசாமல் இருக்கிறார்.

*********
அகிலனின் அப்பா அம்மா ப்ரியா மூவரும் அடுத்த நாள் புறப்பட்டனர். கவிதாவும் அகிலனும் அலுவலகத்திற்கு புறப்பட்டனர்.

அன்றைய மாலை சீக்கிரம் வீட்டிற்கு செல்கிறேன் என சொல்லிவிட்டு அவள் சீக்கிரமே வீடு திரும்பினாள். அவனுக்கும் வேலை இருந்ததால் இரவுநேரம் நெருங்கும்போது தான் வந்தான்.

மிகவும் சோர்வுடன் இருந்ததால், அறைக்குள் வரும்போதே, சட்டையை தளர்த்திக்கொண்டு “பேபி. ரொம்ப முடியல. ஒரு காஃபி கிடைக்குமா?” கேட்டுக்கொண்டே வந்தான்.

படுக்கையில் குப்புறப் படுத்திருந்தவள் “நான் என்ன உனக்கு வேலைக்காரியா? எனக்கே சுத்தமா உடம்பு முடியல. நல்ல வேள. உன் அம்மா வீட்ல இல்ல. இல்லாட்டி இன்னேரம் முடியாம கிட்சேன்ல நின்னுட்டு இருந்துருப்பேன்” என கத்தினாள்.

அவனுக்கும் கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது. எப்போதாவது தானே அவனும் கேட்கிறான் என்று.

அப்போது தான் அறையை பார்த்தான். அவள் ஆஃபீஸிற்கு போட்டுச்சென்ற ஷால் தரையில் ஒரு மூலையில் இருந்தது. கைப்பை மற்றொரு மூலையில்.

ஆடை கூட மாற்றாமல் இவ்வளவு நேரமாக படுத்திருந்தவளை, “என்ன ஆச்சு பேபி உடம்புக்கு?” என கேட்க, கோபத்தில் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“கேக்கறேன்ல்ல? சொல்றதுக்கென்ன உனக்கு?” என அவனும் கொஞ்சம் கோபமாகக் குரலை உயர்த்த, அவனை பார்த்து முறைத்து “எதுக்கு கத்தற??? PMS போதுமா… சும்மா தொணதொணன்னு” என்றாள் எரிச்சலுடன்.

‘இதென்னடா புது வியாதி’ என புரியாமல் முழித்தான்…

“PMS’ஸா… அப்படின்னா?” என கேள்வியாக அவன் பார்க்க, “இப்போதானே சொன்னே கேள்விகேட்டுட்டே இருக்காதன்னு. கண்டதையும் கூகிள்ல சர்ச் பண்ணத் தெரியுதில்ல. இதையும் சர்ச் பண்ணி பாரேன்” என்றாள் சிடுசிடுவென.

“ஃஉப்ப்” என்று மூச்சை வெளியிட்டவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் கீழே கிடந்த அவள் உடைமைகளை எடுத்து அதனதன் இடத்தில் வைத்துவிட்டு, கீழே கிச்சனுக்கு சென்றான்.

இருவருக்கும் காஃபி கலந்துகொண்டே ‘PMS என்றால் என்ன’ என பார்த்தான்.

மாதவிடாய் நாட்களுக்கு முன் உடலளவும் மனதளவும் ஏற்படும் ஒரு மாற்றம்.
மூட் ஸ்விங்ஸ் (mood swings) அதிகமாக இருக்கும் என போட்டிருந்ததை பார்த்தவன் புன்னகைத்துக்கொண்டே மனதில்,

‘எப்பவுமே அப்படிதான் சிடுசிடுன்னு இருப்பா. இதுல இதுவேறயா’ என நினைக்கும்போது ‘ஏன் ப்ரியாக்கு இதெல்லாம் வரல?’ என்ற யோசனையுடன் இருவருக்கும் காபி எடுத்துச்சென்றான்.

அவளை எழுப்பி கொடுக்க “எனக்கு எதுக்கு காபி? இந்த டைம்ல சூடா குடிக்கவே ஒருமாதிரி இருக்கும். ப்ளீஸ் இப்போ எதுவும் வேணாம்” என்றுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

அதற்கு மேல் வற்புறுத்தாமல் மொபைலை எடுத்துக்கொண்டு பால்கனி சென்றவன் அவன் அம்மாவிற்கு போன் செய்தான்.
ஒருவேளை அவருக்கு இது குறித்து நன்றாக தெரியும் என நினைத்து அவரிடம்…

“அம்மா. உங்களுக்கு PMS’னா என்னனு தெரியுமா?” எனக் கேட்க “என்னது” என்றார் புரியாமல். அம்மாவும் தன்னைப்போலவே என நினைத்தவன்…

“அம்மா ப்ரியாக்கு பீரியட்ஸ் முன்னாடி உடம்பு முடியாம போகுமா??? அவ என்கிட்டே இதெல்லாம் சொன்னதே இல்லையே” என கேட்க…

“உன்கிட்ட ஏன்டா சொல்லணும் அம்மா நான் இருக்கப்ப. அதுவும் இல்லாம அவளுக்கு அந்த டைம்க்கு எதுமாதிரி சாப்பிடணுமோ அதெல்லாம் நான் செஞ்சு குடுப்பேன். ஆமா… இப்போ எதுக்கு இதெல்லாம் அகில்?” என கேட்டார்.

“இல்லமா அவளுக்கு அதனால கொஞ்சம் உடம்பு முடியல” என்றவுடன் “ஓ அத உன்கிட்ட சொன்னாளா?” கேட்டார் லட்சுமி.

“ஹ்ம்ம். எழுந்திரிக்க முடியாம இருக்கா… நீ ப்ரியாக்கு என்ன தருவன்னு சொல்லு. என்னால முடிஞ்சா அத செஞ்சு தரேன்” என்றான் கவிதா மேல் உள்ள அக்கறையில்.

“நீ இதெல்லாம் அவளுக்கு பண்ணி மட்டும் என்ன ஆகப்போகுது அகில்” என்று அவர் புலம்ப ஆரம்பிக்க, அதைத் தடுத்தவன் கேட்க வேண்டிய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

அவர் போன் வைத்தவுடன், அவன் மனதிலோ… ‘ப்ரியாவுக்கு அம்மா இருந்தாங்க… எல்லாம் செஞ்சாங்க. இவளுக்கு யாரு செஞ்சுருப்பா’ என நினைக்கும்போதே தாயில்லாமல் அவள் சில கஷ்டங்கள் அனுபவித்திருப்பாள் என புரிந்தது அவனுக்கு.

கஷ்டமாகவும் இருந்தது. உள்ளே எட்டிப்பார்க்க, கால்களை மடித்து முகத்தைக் காலுக்கிடையில் வைத்து உட்கார்ந்திருந்தாள்.

அவன் மனதின் நேற்றிலிருந்து இருந்த சஞ்சலம் முற்றிலுமாகப் போயிருந்தது…

ப்ரியா அம்மாவிடம் சொல்வதுபோல், இவள் தன்னிடம் இதைப்பற்றிக் கூறியுள்ளாள் என்றால், தன்னால் முடிந்தவரை உதவ வேண்டும் என நினைத்து, மறுபடியும் கீழே சென்றான்.

அங்கே சாத்துக்குடி இருக்க, அதில் ஜூஸ் போட்டு எடுத்துச்சென்றான். அவளை வற்புறுத்தி குடிக்கவைத்தான்.

அவனுக்கும் உடம்பு முடியாமல் இருக்க, இரவு உணவு இருவருக்கும் வெளியில் இருந்து ஆர்டர் செய்தான்.

உண்டு முடித்து அவள் படுக்கையில் படுத்திருக்க… உடம்பு மிகவும் வலித்தது. கால்கள் வலிக்க, அதை மடித்து மடித்துப் புரண்டு படுத்தாள்.

‘என்ன ஆகிறது’ என்று அவன் கேட்க ‘கால் வலி’ என்றாள் சலித்துக்கொண்டே.

கொஞ்சமும் யோசிக்காமல் அவள் காலடியில் வந்து அமர்ந்தவன் அவள் பாதங்களைத் தூக்க… திடுக்கிட்டு அதைப் பார்த்தவள், கால்களை இழுக்க முயற்சித்துக்கொண்டு “என்ன பண்ற. விடு” என்றாள் கோபமாக.

“எதுக்கு இப்படி கத்தற பேபி? கால் வலின்னு சொன்னல்ல. அம்மாக்கு பாதத்துல அக்யூபன்சர் பாயிண்ட்ஸ்ல பிடிச்சு விட்டுருக்கேன். வலியெல்லாம் போய்டும்” என்றபடி விடாமல் காலைத் தன் மடிமீது வைத்துக்கொண்டான்.

“ஏய். சொல்றேன்ல வேணாம்ன்னு. விடு. நீ பிடிக்கிறது எனக்கு பிடிக்கல” என மறுபடியும் கத்தினாள்.

“ப்ச் பேபி. ஃபிசியோதெரபிஸ்ட் பண்ணற மாதிரி நினைச்சுக்கோ. ஒரு அஞ்சு நிமிஷம் யு வில் ஃபீல் பெட்டர். நீ வேணா எனக்கு சர்வீஸ் சார்ஜ் குடுத்துடு”

கண்களில் குறும்புடன் புன்னகைத்துக்கொண்டே… அவள் தடுப்பதையும் மீறி விரல் நுனிகளில் பிடித்துவிட்டான்.

முதலில் தடுத்தாள். ஆனால் அவன் பிடிக்க ஆரம்பித்தவுடன், அது இதமாக இருக்க, தன்னுடைய எதிர்ப்பை நிறுத்தினாள்.

அவனின் இந்த செயல் அவள் மனதை வெகுவாகத் தாக்கியது. அவனுடைய இந்த அக்கறைக்கு தான் தகுதியுள்ளவளா என்ற கேள்வி வேறு ஒட்டிக்கொண்டது.

ஒற்றைக் கைக்கொண்டு இரண்டு கண்களின் குறுக்கே வைத்து மூடிக்கொண்டாள்… அவன் செய்வதை நினைத்துக் கண்கள் கலங்கியது.
விவரம் தெரிந்து… வாழ்நாளில் முதல் முறை இதுபோன்ற வலி நிவாரணம் என நினைக்கும்போது, ஏனோ தொண்டை அடைத்தது.

அவன் மேல இருந்த கோபம் அனைத்தும் சுக்குநூறாக உடைந்ததது போல் தோன்றியது. அவன் கைப் பற்றிக்கொண்டு கதறி அழத்தோன்றியது. ஆனால் அதை எதையும் செய்யவில்லை…. துளியும் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.

அழுகையைக் கட்டுபடுத்தியதுனாலோ, இல்லை அவன் பிடித்துவிட்டதினாலோ என்னவோ… சீக்கிரம் தூங்கியும் விட்டாள்.

அவளிடம் அசைவு நின்றபின், மெதுவாக எழுந்து, அவளுக்கு இரண்டு புறமும் தலையணை வைத்துவிட்டு அவனும் படுத்துகொண்டான்.

நேற்றிருந்த சஞ்சலம் முற்றிலும் போய், தாய் போல இருக்கமுடியாது என்றாலும்… நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றே தோன்றியது அவனுக்கு.

அடுத்த நாள் கொஞ்சம் தெளிவாக எழுந்தாள் கவிதா. இதுவரை அந்த நாட்களில் இல்லாத ஒரு சுறுசுறுப்புடன். அவளுக்கே அது புதிதாக இருந்தது.

இருவருக்கும் உணவு தயார் செய்தாள். அவனைப் பார்க்கும்போது நேற்றிரவு அவன் கால் பிடித்துவிட்டது நினைவிற்கு வர, கொஞ்சமே கொஞ்சம் புன்னகையுடன் “தேங்க்ஸ்” என்றாள்.

அவன் புன்னகைக்கமட்டுமே செய்தான்.

எப்பொழுதும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு உணவு பரிமாறுவாள். ஆனால் இன்று அவன் வற்புறுத்த, இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர்.

அவனுக்கும் அவளிடம் கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது. ஆனால் உரிமை எடுத்துக்கொள்ள தயக்கமும் இருந்தது.
இருவரும் கராஜ் வந்தடைய, இன்று மிக நல்ல மனநிலையில் இருந்ததால், அவள் ரீமாடல் செய்யப்பட்ட புல்லட்’டை காட்டினாள்.

அவனும் தலையை ஆட்டிவிட்டு வண்டியை எடுத்தான்.

சீரான வேகத்தில் வண்டி சென்று கொண்டிருக்க… திடீரென ஒரு பைக் இவர்களை ஒட்டி இடிப்பதுபோல் இவர்களைக் கடந்து சென்றது.

அகிலன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தானோ இல்லையோ, இவளிடம் “****” ஆங்கில பீப் வார்த்தை வந்தது. கண்ணாடி வழியே அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

அதை அவள் பார்த்தால் தானே. அவள் கவனம் முழுவதும் கடந்துசென்ற பைக்கின் மேல் இருந்தது.

‘இன்று தான் அவள் வண்டியில் அலர்ட்’டாக வந்திருக்கிறாள். அதுவும் இல்லாமல் அவன் முதன் முதலில் பார்த்த கவிதாவாக தெரிந்தாள் அவனுக்கு. இத்தனை நாட்களாக இதுதான் அவளிடத்தில் மிஸ்ஸிங்’ என்று நினைத்தான்.

இவர்களைக் கடந்து சென்ற அந்த பைக், ஒரு பெண் ஓட்டிக்கொண்டிருந்த வண்டியை மோதுவதுபோல் சென்று, பிரேக் போட்டு அந்தப் பெண்ணை பதற்றமடையச் செய்துகொண்டிருந்தனர் அதில் இருந்த இளைஞர்கள்.

அந்தப்பெண்ணும் வண்டியை சீராக ஓட்டாமல் பயத்துடன் ஆட்டிக்கொண்டே ஓட்ட, இப்படியே சென்றால் அவள் கீழே விழுவது நிச்சயம். இங்கே கோபம் தலைக்கேறியது. அகிலனுக்கில்லை… கவிதாவுக்கு…

“*****” திரும்பவும் பீப் வார்த்தைகளைப் பிரயோகித்தவள் “அவங்கள ச்சேஸ் பண்ணு அகில்” என்றாள் கோபத்துடன்.

திகைத்துப் பார்த்தான் அவன். எது அவன் காதில் விழுந்தது? ச்சேஸ் செய்யச்சொன்னதா! இல்லை அவள் முதன்முதலாக ‘அகில்’ என்றழைத்ததா!

10
3
1
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved