என்னுள் நீ வந்தாய் – 16
என்னுள் நீ வந்தாய் – 16
தன்னருகில் இருந்த கவிதாவை கண்கொட்டாமல் பார்த்திருந்தான் அகிலன்…
அந்த அதிர்வில் இருந்து வெளிவந்த கவிதா… “அம்மாடி… பிடிச்சயே… இல்லாட்டி உஃப்ப்” என்று தன்னையே குலுக்கிக்கொண்டு, சிறிய மூச்சை வெளியிட்டு, அவனிடம் இருந்து தன்னைப் பிரித்துக்கொண்டாள்.
எதுவும் நடக்காதுபோல் அவள் முன்னே செல்ல, போகும் அவளையே பார்த்துக்கொண்டு பின்னே ஏறினான் அகிலன்.
‘உண்மையா அவளுக்கு ஒன்னுமே தோணலையா?’ என்ற எண்ணமே அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் கவிதாவோ எதையும் காட்டிக்கொள்ளாமல் நடந்துகொண்டாள்.
அடுத்த நாள் சனிக்கிழமை.
அகிலன் கவிதாவின் வீட்டிலிருந்து கிளம்பும்போது அவன் தயாரித்த ஒரு ரிப்போர்ட்’டை மறந்து வைத்துவிட்டு வந்ததால், ட்ரைனிங் முடித்து வந்த கவிதாவின் தம்பி இளஞ்செழியனிடம் அதைக் கொடுத்துவிட்டனுப்பினார் கவிதாவின் தந்தை ஸ்வாமிநாதன்.
மதிய நேரம் கடந்திருக்க, சென்னை வந்து சேர்த்தான் இளஞ்செழியன்.
“செழியா… இவ்ளோ நாள் ஆச்சுல்ல உனக்கு என்னை வந்து பார்க்க…” அவனைப் பார்த்தவுடன் கவிதா கண்கள் கொஞ்சமாகக் கலங்க… “நான் தான் உன்கிட்ட அடிக்கடி பேசறேனே க்கா” என்றவன் கொஞ்சம் நிறுத்தி…
“சந்தோஷமா இருக்கியா க்கா….” என அவள் முகம் பார்த்துக் கேட்க… அடிக்கடி அவன் கேட்கும் கேள்வி இது என்பது கவிதாவுக்கும் தெரியும். அதனால்…
“ஹ்ம்ம் இதையே எத்தனை தடவைடா கேட்ப… இரு நான் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு அவள் செல்ல, அதே நேரம் அகிலன் கீழிறங்கி வந்தான்.
“எப்படி இருக்க செழியா…” என கேட்டபடி அவனருகில் வந்தமர்ந்தான் அகிலன்.
அதற்கு தலையயை மட்டும் ஆட்டிய சிறியவன், எதுவும் பேசாமல் ரிப்போர்ட்’டை நீட்டினான்.
அகிலன் புன்னகைத்துக்கொண்டே, ‘அக்காக்கும் தம்பிக்கும் என்னை பார்த்தா எப்படி தான் இருக்குமோ’ என நினைத்தபடி வாங்கிக்கொண்டான்.
கவிதா தம்பிக்கு தண்ணீர் எடுத்து வர, “என்ன தண்ணி மட்டும் எடுத்துட்டு வர… டீ காபி போடலையா? சாயங்காலம் ஆகப்போகுதே” அகிலன் கேட்டவுடன்…
“இல்லக்கா… எனக்கு அதெல்லாம் வேணாம் தண்ணி மட்டும் போதும்” என்றான் செழியன்.
‘அதானே… நான் சொல்லி கேட்டுட்டா… அக்காக்கு தம்பி தப்பாம பொறந்துருக்கான்’ என நினைத்து…
“எனக்கு டீ வேணும் பே…” ‘பேபி’ என்று சொல்ல வந்ததை நிறுத்திக்கொண்டான். கவிதாவுக்கும் அது புரிய, சிரிப்பை வெளிக்காட்டாமல் சரி என்று சென்றுவிட்டாள்.
“அப்புறம் புது வேலையெல்லாம் எப்படி போகுது செழியா…” அகிலன் பேச்சு கொடுக்க… அதற்கும் அவனிடம் தலையசைப்பே… அதுவும் முகம் பார்க்காமல்.
“காலேஜ் கான்வோகேஷன் எப்போ?” விடாப்பிடியாக அகிலனும் அவனிடம் பேச “இன்னும் ரெண்டு வாரத்துல” என்ற பதில் வந்தது.
ஏதோ ஒன்று அகிலனும் கேட்க… அதற்கு ஓரிரு வார்த்தைகள் மட்டுமே வெளிவந்ததது அவனிடம்.
கவிதா டீ போட்டுக்கொண்டு வந்து கொடுக்க, அதைக்குடித்து முடித்தவுடன் அகிலன் வெளியே சென்றான்.
செழியன் அவன் தோழன் வீட்டிற்கு புறப்படுவதாகச் சொல்ல, ‘இங்கு தங்க யோசித்து தான் இப்படி சொல்கிறான்’ என அவனை சரியாக புரிந்துகொண்ட கவிதா, அவனை வற்புறுத்தி இரவு உணவு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று கவிதாவ விடாப்பிடியாக சொல்ல… மறுக்க முடியாமல் சரி என்றான்.
மேலே இருந்த முகப்பில் இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருக்க… அதே நேரம் ஆர்பரித்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தாள் ப்ரியா அகிலனுடன்.
முன்பு லட்சுமியிடம் அகிலன் பேசியபோது, கவிதாவிற்காக வெந்தயக்களி செய்துகொடுக்கச் சொன்னான். அதை எடுத்துக்கொண்டு காலேஜில் இருந்து நேராக வந்திருந்தாள் இசைப்பிரியா.
அவள் அறை மேல் தளத்தில் இருக்க…
“என்னை கொரியர் சர்வீஸ் பண்ண வச்சுட்டயேடா அண்ணா. ஒழுங்கா லீவைஸ் ஜீன் (levis jean) எடுத்துகுடுக்கற. நீ ஒன்னு அண்ணி ஒன்னு… இல்லை இல்ல… நான் அண்ணிகிட்ட வேற கேட்டுக்கறேன்… அண்ணி மேல இருக்காங்களா…” என்று அண்ணனிடம் வாயாடிக்கொண்டு மேலே செல்ல…
அங்கே கவிதாவையும் செழியனையும் பார்த்த ப்ரியா… நொடி தயங்கி பின், “ஓ… உங்க பாசமலர் வந்துருக்காங்களா அண்ணி… ஹ்ம்ம்… இருக்கட்டும் இருக்கட்டும்… இந்தாங்க பிடிங்க. வெந்தயக்களி” என்று அவளிடம் கொடுத்தவள்…
“அண்ணி கொஞ்சம் டீ கிடைக்குமா… ஒன்றர மணிநேர ட்ராவல். ரொம்ப தல வலி” என கெஞ்சலாகக் கேட்க, புன்னகையுடனே “சீக்கிரம் ரெஃப்பிரஷ் ஆகிட்டுவா. போட்டு வக்கறேன்” என்றாள் கவிதா.
இதில் எதிலுமே தலையிடாமல் அமைதியாக மொபைல் பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்.
அவன் இருந்த இடத்தில் இருந்து துளியும் அசையாமல் இரவு வரை இருந்தான். கவிதா அழைக்கவும் சாப்பிட கீழே சென்றான்.
அவனுக்குப் பிடித்த பணியாரம் செய்திருந்தாள் கவிதா. அவளுடன் ப்ரியாவும் உதவி எனச் சொல்லிக்கொண்டு சேட்டை செய்துகொண்டிருந்தாள்.
“இன்னும் ரெண்டு போட்டுக்கோ டா. இனி எப்போ பார்ப்பேனோ உன்ன” என பரிவுடன் செழியனுக்கு கவிதா பரிமாற… இவர்கள் இருவரையும் பார்த்த ப்ரியா ஹாலில் உட்கார்ந்திருந்த அகிலனைப் பார்த்து…
“டேய் அண்ணா… பாரு, இங்க ஒரு கிழக்குச் சீமையிலே படமே ஓடுது” என நக்கல் அடிக்க… கவிதா புன்னகையுடன் முறைத்தாள்.
செழியன் சட்டென எழுந்து, “எனக்கு போதும் க்கா” என்று சொன்னவுடன்… ப்ரியா கொஞ்சம் அதிர்ந்து அவனைப்பார்க்க… இதை பார்த்த அகிலன்… “ப்ரியா… அமைதியா இரு… இங்க வா” என்றான்.
செழியனைப் பார்த்து “ஓவர் சீன்…” என முனகியவள்… “வரேன்ண்ணா… நம்ம பேசாம பாசமலர் படம் ஓட்டலாம்” கவிதாவுக்கும் செழியனுக்கும் அழகு காட்டிவிட்டு அகிலனிடம் சென்றாள்.
ஒருவழியாக செழியன் கிளம்பியதும், இவர்கள் மூவரும் சாப்பிட்டு முடிக்க… ப்ரியா அடுத்த ரவுண்ட் ஆரம்பித்திருந்தாள்.
“அண்ணி. ஒழுங்கா அந்த களி சாப்பிடுங்க. சின்ன வயசுல அம்மா குடுக்கறப்ப கடுப்பா இருக்கும். ‘நல்லாவே இல்ல. இதை போய் சாப்பிட சொல்லி படுத்தறாங்களே’ன்னு இருக்கும். ஆனா என் ஃபிரன்ட்ஸ் வலின்னு சொல்றப்ப தான் இதோட அருமை புரிஞ்சது. சோ… நான் என்ன சொல்லவரேன்னா… நல்லா இருக்காது ஆனா உடம்புக்கு நல்லது” என ஒரு பெரிய லெக்ச்சர் எடுத்தாள்.
அண்ணனைப் போலவே தங்கை என்றே தோன்றியது கவிதாவுக்கு.
இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, இதை அனைத்தையும் அகிலன் கேட்டுக்கொண்டு தான் இருந்தான், வேலை செய்கிறேன் என்ற பெயரில்.
“அண்ணி. உங்க அப்பா தமிழ் ப்ரோஃபெஸர்ன்னு உங்களுக்கும் உங்க தம்பிக்கும் தமிழ் பேரா வச்சிருக்காரு இல்லையா. அவ்ளோ பிடிக்குமா அவருக்கு தமிழ்” என்று புது டாபிக்’கை ஆரம்பித்தாள்.
“ஹ்ம்ம். அவர என்ஜினியர் ஆக்கணும்ன்னு தான் தாத்தாக்கு ஆசையாம். ஆனா அப்பா தமிழ் தான் படிப்பேன்னு அடம்பிடிச்சு படிச்சாருன்னு சித்தப்பா சொல்வாரு. அது சரி எங்களுக்கு தான் பேரு இப்படி… உங்களுக்கு ஏன் பழைய பேரா வச்சிருக்காங்க அத்த மாமா” கேட்டாள் ப்ரியாவிடம்.
அகிலன் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான் இதையெல்லாம் கவனிக்க மாட்டானென நினைத்துக்கொண்டு கேட்டாள்.
“அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க அண்ணி. என் பேரு அகிலாண்டேஸ்வரின்னு வச்சுருக்க வேண்டியது. ஜஸ்ட் மிஸ்” என பெருமூச்சுடன் ஆரம்பித்தாள் ப்ரியா.
“அப்பா அம்மாக்கு முதல் குழந்தை பொறந்தவுடனே அவங்க பேரைத்தான் வைக்கணும்ன்னு பாட்டி ஆர்டர் போட்டுட்டு… பரலோகத்துக்கு என்ட்ரி பாஸ் வாங்கிடுச்சு. நல்ல வேல என்னை காப்பாத்த எங்கண்ணன் முன்னாடி பொறந்துட்டான். அதுனால அகிலாண்டேஸ்வரி அகிலன் ஆயிடுச்சு.
நீங்களே நினைச்சுப்பாருங்க… இந்த காலத்துல அகிலாண்டேஸ்வரி பேர வச்சுட்டு… உஃப்ப் தப்பிச்சேன்” என சலித்துக்கொண்டவள் மறுபடியும் தொடர்ந்தாள்.
“ஆனா அண்ணன் தான் பாவம். சின்னவயசுல, அவனை சும்மா அகிலா அகிலான்னு சொல்லி பசங்களெல்லாம் கிண்டல் பண்ணுவாங்கலாம். வேணும்னே அகிலா’னு சொல்லிட்டு, உன்ன கூப்பிடல, கேர்ள்ஸ்’ல அகிலாவ கூப்பிட்டோம். நீ ஏன் பார்க்கறன்னு சொல்வாங்களாம்.
அதுனால அகிலான்னு சொன்னாலே அண்ணனுக்கு செம்ம கோவம் வரும். அடிதடி வரைக்கும் எல்லாம் போயிருக்கு. ரொம்ப டென்ஷன் ஆயிடுவான்” என கூடுதலாக ஒரு செய்தியை சொன்னாள் ப்ரியா.
கவிதா எதையோ மனதில் நினைத்து புன்னகைத்துக்கொண்டாள்.
பின் ப்ரியாவிடம், “சரி உன் பேரோட ஸ்டோரி என்ன?” என கிண்டலாகக் கேட்க…
“என்ன நக்கலா அண்ணி… ஆனா இருக்கு, அதுக்கும் பேக்ரௌண்ட் இருக்கு. அம்மா நல்லா பாடுவாங்க. அண்ணாக்கு அவங்க நினச்ச பேர வைக்க முடியலையேன்னு எனக்கு இசைப்ரியான்னு வச்சுட்டாங்க” என்றாள் ப்ரியா.
“என்னது அத்த பாடுவாங்களா???” என சந்தேகமாக கவிதா கேட்க, “டவுட்’டா இருந்தா… அம்மா வந்ததும் நீங்க நம்பமாட்டேங்கறீங்கன்னு ஒரு பிட்’ட போட்டு… அவங்கள பாட சொல்றேன்” என்றாள் ப்ரியா கள்ளச்சிரிப்புடன்.
“ஏன் இந்த கொலவெறி” என்று கவிதா போலியாக முறைக்க … இருவரும் கலகலவெனச் சிரித்தனர்.
கவிதா மனம்விட்டு சிரிப்பதைப் பார்த்தவனுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.
பின் பேச்சு தொடர்ந்து கொண்டிருக்க, ஒரு இடத்தில் ப்ரியா கவிதாவிடம், “அண்ணா காலேஜ் படிக்கிறப்ப முரட்டு சிங்கிள். சில பல ப்ரோபோசல் வந்துச்சு. எல்லார்ட்டையும் ஒன்னொன்ன சொல்லி ரிஜெக்ட் பண்ணிடுவான். சில பேர்ட்ட வேணும்னே ராம் மூவில வர்ற ஜீவா மாதிரி வள்ளுன்னு விழுவான்.
இதோட கொடும, என் ஃபிரன்ட் அக்கா, இவன் பின்னாடியே சுத்தினா. நம்ம ரிலேஷன் தான் அவங்களும். அவகிட்ட இவன் என்ன சொன்னான் தெரியுமா… இவன் ஒரு… ஐயோ அத நான் எப்படி சொல்வேன்” என்றவள் கவிதாவின் காதில் அதை சொன்னவுடன் கவிதா கிளுக்கெனச் சிரித்தாள்.
“அதுக்கப்பறம் அவங்க என்கூடப் பேசறதே இல்ல. இவனால” என புகார் வாசித்தாள் பிரியா.
அகிலனும் புன்னகைத்தான் இவர்களுக்குத் தெரியாமல்.
ஒருவழியாக இருவரும் பேசிமுடித்து படுக்கச்சென்றனர்… அடுத்தநாள் மாலை, ப்ரியா செங்கல்பட்டு சென்றிருக்க, அகிலனும் கவிதாவும் மட்டுமே இருந்தனர்.
அவன் ரெஃப்பிரஷ் ஆகிவிட்டு ரெஸ்ட்ரூமில் இருந்து வெளியே வர, கவிதா யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
சில நொடிகளில், “ஏய் அகிலா. என்னடி அகிலா…” என வேண்டுமென்றே சத்தமாகப் பேசினாள். அதை கேட்ட அகிலன் சட்டென அவளைப் பார்க்க, மறுபடியும் அழைத்தாள்.
அகிலனின் முகம் முற்றிலுமாக மாறியது. கையில் இருந்த பெர்ஃபியூம் (perfume) பாட்டில் தூக்கியெறிந்ததில், சுவற்றில் பட்டுத் தெறித்தது. கவிதா அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, இரவு உடையுடன் அப்படியே வெளியே சென்றுவிட்டான்.
கவிதா அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பதட்டம் அடைத்தாள். அவன் சென்று இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகியிருந்தது. கார் சாவி, கராஜ் சாவி என அனைத்தும் அங்கேயே இருக்க, நேரம் செல்ல செல்ல கொஞ்சம் பயமும் எட்டிப்பார்த்து!
பின், பொறுமையாக யோசிக்க ஆரம்பித்தாள். சர்வீஸ் செய்யப்பட்டு வந்த கார், பைக் இரண்டும் எடுத்துச்செல்லவில்லை என்றால் பக்கத்தில் தான் சென்றிருக்கவேண்டும். ‘ப்ளாக் செக்யூரிட்டி’யிடம் கேட்டால் எங்கு சென்றிருப்பான் என தெரியும்’ என்று நினைத்துக்கொண்டு நேராக கீழ் தளத்திற்கு சென்றாள்.
செக்யூரிட்டி அவளிடம் அகிலன் க்ளப்’பில் (club) நுழைவதைப் பார்த்தாக சொல்ல, அவசரமாக அங்கே சென்றாள்.
அங்கு தான் அவன் வேர்க்க வேர்க்க ஸ்குவாஷ் (squash) தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தபின் தான் நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு.
‘சரியான நட் (nut) கழண்ட கேஸ் தான். இதுவர நான் எவ்ளோ பேசியிருக்கேன்… அதுக்கெல்லாம் துளிக்கூட கோவம் வரல. ஒரு சின்ன மேட்டர், இதுக்கு இவ்ளோ கோவம். இரு உன்ன பார்த்துக்கறேன்’ என்று நினைத்தவள், காலணியைக் கழற்றிவிட்டு, அங்கிருந்த கூடைப்பந்தை கையிலெடுத்து, தரையில் தட்டி விளையாட ஆயத்தமானாள்.
பந்தின் சத்தம் கேட்டு அகிலன் திரும்பிப்பார்க்க, அங்கே கவிதா கூடைபந்துடன். கண்கள் மின்ன, அவளைப் பார்த்து புன்னகைத்தான்… கோபமாவது மண்ணாவது என்று.
துளியும் தயங்காமல் அவளருகே சென்றவன், “பேபி. இங்க என்ன பண்ற?” என சகஜமாகக் கேட்க…
அவளோ அவனைப் பார்க்காமல் பந்தை மட்டுமே பார்த்துக்கொண்டு, “என்னை ஒருத்தன் டென்ஷன் பண்ணிட்டான். கோவமா இருக்கேன். அதான்” என்று கூடை பக்கத்தில் சென்றவள் ஒரு எம்பு எம்பி, பந்தைப் போட அது குறி தப்பி வெளியில் விழுந்தது.
அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “சாரி பேபி. அவ்ளோ கோவப்பட்டிருக்கக்கூடாது. அதுவும் பொருளை தூக்கிப்போட்டு… ப்ச். ஐம் வெரி சாரி” என்றான் நிஜமாக மன்னிப்பு கேட்கும் தொனியில்.
“என்ன சாரி? உன்ன மன்னிக்கெல்லாம் முடியாது. நான் எவ்ளோ பயந்…” ‘பயந்துட்டேன் தெரியுமா’ என சொல்லவந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு…
“நீ மட்டும் என்னை பேபி ஸ்வீட்டின்னு கூப்பிடுவ. எனக்கு பிடிக்கலன்னு சொன்னாலும் கேட்க மாட்ட… ஆனா உனக்கு கோவம் வருமா” என மறுபடியும் கூடைப்பந்தில் கவனத்தை மாற்றினாள். இம்முறை சரியாகக் கூடையில் பந்து விழுந்தது.
ஆனால் அவள் சுத்தமாக மறந்தது, கொஞ்சகாலமாக அவன் ‘பேபி’ என்றோ ‘ஸ்வீட்டி’ என்றோ அழைக்கும்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்று. அது பிடித்ததோ பிடிக்கவில்லையோ, ஆனால் பழகிவிட்டது அவளுக்கு.
அவன் புன்னகையுடன் அவளைப் பார்த்திருக்க, “சோ… நான் உன்ன இனி அகிலா’ன்னு தான் கூப்பிடுவேன்” அவன் பக்கத்தில் நின்று, அவன் முகம் பார்த்து… “அகிலா… அகிலா… அகிலா” என்றாள் சிரிப்புடன்.
நியாயமாக அவன் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவனோ மர்மமான புன்னகையுடன், அவள் எதிர்பார்க்காத போது, பந்தை அவளிடமிருந்து பறித்து, கூடையில் போட்டான்.
பின் அவளருகில் மிகவும் நெருக்கமாக வந்து, ஹஸ்கி குரலில்… “பேபி… இந்த பேர இவ்ளோ அழகா யாருமே கூப்பிட்டதில்ல. அகிலான்னு எவ்ளோ ரொமான்டிக்’கா கூப்பிடற” அவன் நெருக்கம் அதிகமாக, அனிச்சையாக அவள் பின்னே நகர்ந்தாள்.
“இனி நீ இப்படியே கூப்பிடு. ஐ ஜஸ்ட் லவ் இட் பேபி” கண்ணடித்துவிட்டு மறுபடியும் விளையாடச் சென்றான்.
“ஆஹ்” என்று தரையில் காலை உதைத்துக் கத்தினாள் கவிதா. “பேபி அ இல்ல… அகிலா’ன்னு ரொமான்டிக்’கா சொல்லு” என அவளைக் கடுப்பேற்றினான்.
கோபத்தில் அவன் அருகில் வந்தவள், “நமக்குள்ள ஒரு பெட் (bet). யாரு மூணு தடவ பால்(ball) உள்ள போடறோமோ, அவங்க சொல்றத மத்தவங்க கேட்கணும். மூணு சான்ஸ் தான். எனக்கு பெருசா ஒன்னும் இல்ல. நீ என்னை ஸ்வீட்டி, பேபி’ன்னு கூப்பிடக்கூடாது” என சொன்னவள் அவன் பதிலுக்காகவெல்லாம் காத்திருக்காமல்…
“ஃப்ர்ஸ்ட் நீயே விளையாடு” என்றுவிட்டி, கண்களால் விளையாடு என்று சொல்ல, அவனும் புன்னகைத்துக்கொண்டே முதல் முறை பந்தை போட்டான். அவளும் கூட.
இரண்டாவது அவன் தவறவிட்டான். அவள் போட்டுவிட்டாள். அகிலன் ரூல் (rule) படி இங்கேயே தோற்றுவிட்டான்.
மூன்றாவதும் அவன் தவறவிட, “பேபி இது போங்கு. நீ ப்ளேயர். நான் சும்மா டைம்பாஸ்க்கு விளையாடறவன்” என்றவன் நிறுத்தி, “ஆமா… அஜய் தானே உனக்கு சொல்லிக்குடுத்தது” ஆர்வமாகக் கேட்க, புன்னகைத்துக்கொண்டே ஆம் என தலையசைத்து பந்தை போட தயாரானாள்.
“லக்கி” என பெருமூச்சுவிட்டான் அகிலன்.
“யாரு?” அவனைப் பார்க்காமல் அவள் கேட்க, அஜய் என்றா சொல்லமுடியும். “நீ தான். செம்ம’யா விளையாடறயே” என்றான் சம்மந்தமேயில்லாமல்.
“நம்பிட்டேன்” என புன்னகைத்துக்கொண்டே அவளும் கூடை வரை போட செல்லும்போது, அவளைத் திசைமாற்ற… “பேபி. நீ வின் பண்ணணும்ல? நான் வேணும்னா… உன்ன ஒரே தூக்கு தூக்கிடறேன்… ஈசியா போட்டுடலாம்” என்றான் நமட்டு சிரிப்புடன்.
அவன் சொன்னதை நினைத்து திடுக்கிட்டவளின் குறி தவறியது. தவறவிட்டாள்.
“ஏய். நான் கேட்டேனா? என்னை ஏன் டைவர்ட் பண்ண?” என சண்டைக்கு வர, “பேபி… பேபி” வேண்டுமென்றே அழைத்தவன்… “கேம்ல டைவெர்ஷன் நிறைய இருக்கும். நாம தான் கண்டதையும் நினச்சு பார்க்காம… ஒழுங்கா விளையாடனும் ஸ்வீட்டி” என விஷமமாக சிரிக்க, அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அவனும் அவள் பின்னாலேயே சென்றான்.
அவள் கம்யூனிட்டி’யில் இருந்த கடைக்கு சென்று… ஐஸ் கிரீம் பெட்டியில் இருந்து இரண்டு எடுத்துக்கொள்ள, அவனும் அதிலிருந்து எடுக்கச் சென்றான். அது காலியாகியிருந்தது.
கடையில் இருந்தவன், “சாரி சார். இன்னிக்கு ஒரு பர்த்டே பார்ட்டி. இருந்ததெல்லாம் காலி ஆயிடுச்சு” என சொல்ல, கவிதா கடைக்காரனிடம்… “காசு அங்க வாங்கிக்கோங்க” என அகிலனை கை காட்டிவிட்டு வெளியில் சென்றாள்.
அவனிடமும் காசு இல்லை. இருப்பினும், “செரனிட்டி ப்ளாக். I2 மார்னிங் வாங்கிக்கோங்க” என்றுவிட்டு அவள் பின்னே சென்றான்.
அவள் அபார்ட்மெண்ட் வெளியே நடக்க ஆரம்பித்தாள். அவனும் அவள் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தான். முற்றிலும் இருட்டாக இருக்க… ஆங்காங்கே மெர்குரி விளக்குகள். இருவரது மனதும் லேசாக இருந்தது. கோபம் கவலை எதுவுமில்லை.
அவள் உண்பதையே அவன் பார்க்க, அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பிக்கொண்டாள். திரும்பியபக்கம் சென்று அவன் நடக்க, அவள் தலையில் அடித்துக்கொண்டு, “எனக்கு வயறு வலிக்கவா? இந்தா”, அவளிடமிருந்த மற்றொரு ஐஸ் கிரீமை நீட்டினாள்.
புன்னகைத்துக்கொண்டே வாங்கிக்கொண்டான். அந்த அமைதியான இரவு தந்த தனிமையை இருவரும் ரசித்தனர்.
அதைத் தடுக்கும் விதமாக, கவிதாவை ஒட்டி ஒரு கார் செல்ல, உள்ளே இருந்தவர்கள் வெளியில் எட்டிப்பார்த்து… “ஊஊ” என அவள் அருகில் வரும்போது கத்த, அதில் சட்டென பயந்தவள் ஐஸ் கிரீமை தவறவிட்டாள்.
அதில் கடுப்பானவள்… “டேய் ****…****” வாயில் வந்த வார்த்தைகளை கையைக்காட்டி திட்டிவிட்டு திரும்ப, அகிலன் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
இவள் பார்க்கவும், கையில் இருந்ததை அவன் நீட்ட… “ச்சி” என அவள் முகத்தை சுழித்துக்காட்டி, “நீ மட்டும் நல்லா தின்னு” கோபத்துடன் விடுவிடுவென முன்னே நடந்தாள்.
சிரித்துக்கொண்டே அவனும் அவளுக்கு ஈடுகொடுத்து நடந்தான். இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் இருவரின் அருகாமையை ரசித்தனர்.
ஒரு வட்டம் அடித்து வீடு வந்து சேரும்போது, கீழே இருந்த செக்யூரிட்டி இவளை பார்த்ததும் ஒரு கவரை நீட்டினார்.
அவள் குழப்பமாக அகிலனை பார்க்க “சீக்கிரம் வாங்கிட்டு வா பேபி” என்றுவிட்டு லிப்ட் அருகே சென்றான்.
அந்த கவரில் ஒரு ஐஸ் கிரீம் டப்பா மற்றும் ஒரு ஸ்வீட் டப்பா இருந்தது. அதை பார்த்ததும் அவள் முகத்தில் புன்னகை ஒட்டிக்கொண்டது.
———இன்று———
இருவருக்கிடையில் இருந்த ஒரு தடுப்பு, உடையும் தருவாயில், ஒரு சின்ன மனஸ்தாபத்தால் இதோ இப்போது பிரிந்துள்ளனர்.
‘மதிய இடைவேளை வரை கவிதா ஆஃபீஸிற்கு வரவில்லை’ என்று லயா அகிலனிடம் அப்போதுதான் சொல்லியிருந்தாள்.
‘வெளியே சென்றிருக்கிறாள் என்றால் இந்த ஊரில் யாரை தெரியும் அவளுக்கு? கண்டிப்பாக அஜய் தான்’ என்றது அவன் மூளை.
‘தூரமாக நின்று பார்க்கும் தகுதி கூட தனக்கில்லயா’ என்று நினைத்து மனது மிகவும் வருந்தியது…
அஜய் என்று நினைக்கும்போது கோபம் ஒருபக்கம் இயலாமை ஒரு பக்கம் என அகிலனைப் படுத்தியெடுத்தது.
கடைசியாக அவன் துபாய் வரும்முன் கவிதாவிடம் அவன் நடந்துகொண்டது, அவர்களின் இந்த பிரிவுக்கு காரணமான அந்த நிகழ்வு கண் முன்னே ஓடியது…