என்னுள் நீ வந்தாய் – 17A
என்னுள் நீ வந்தாய் – 17A
அஜய் என்று நினைக்கும்போது கோபம் ஒருபக்கம் இயலாமை ஒரு பக்கம் என அகிலனை படுத்தியெடுத்தது.
கடைசியாக அவன் துபாய் வரும்முன் கவிதாவிடம் அவன் நடந்துகொண்டது கண் முன்னே ஓடியது…
———அன்று———
அன்று ப்ரியா ஒரு சொந்தக்காரப்பெண் அகிலனை விரும்பியதாகவும் அவளிடம் இவன் மறுப்பைத் தெரிவித்து விலகிவிட்டதாகவும் சொன்ன அந்தப்பெண் ப்ரேமா, அகிலன் வீட்டிற்கு வந்திருந்தாள்.
அவளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தனர். அதன் பொருட்டே இவர்களை சந்திக்க வந்திருந்தாள்.
அச்சமயம் அகிலன் வீட்டில் இருந்தான். கவிதா ஆஃபீஸும் ப்ரியா காலேஜும் சென்றிருந்தனர். அவன் அப்பா வெளியே சென்றிருக்க, லட்சுமியிடம் பேசிவிட்டு அகிலனுடன் பேச வந்தாள் பிரேமா.
“என்ன புது மாப்பிளை. எப்படி இருக்கீங்க” ப்ரேமா ஆரம்பிக்க “நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க ப்ரேம்ஸ்?” அகிலன் சாதாரணமாக பேசினான்.
“நான் எப்படி இருக்கேன்ங்கிறதா முக்கியம் அகில்? நீ எப்படி இருக்கன்னு தான் முக்கியம். உன் பொண்டாட்டி உன்ன பிடிக்காம கல்யாணம் பண்ணிட்டாளாமே… உன்ன வேண்டாம்ன்னு வேற சொன்னாளாமே. ப்ச்… என்ன அகில் உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு” இளக்காரமாக வார்த்தைகள் விழுந்தது.
அவள் பேசுவதைக் கேட்டு முதலில் திடுக்கிட்டான்… அவளுக்கு எப்படி தெரியுமென யோசிக்க, பின் இது அம்மாவின் வேலையாக இருக்கவேண்டும் என புரிந்தது. கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.
முதலில் லட்சுமி அகிலனுக்கும் ப்ரேமாவிற்கும் பேசிமுடிக்க நினைத்திருந்தார். ஆனால் அகிலன் திருமணத்திற்கே பிடிப்பு கொடுக்காமல் இருந்தான்.
கவிதாவை இவன் விரும்பி திருமணம் செய்துகொண்டு, சந்தோஷமாக இல்லையே… இந்த பெண்ணை திருமணம் செய்திருந்தால் மகன் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்ற வருத்தமே அவரை அனைத்தையும் ப்ரேமாவிடம் சொல்ல வைத்தது.
“இதுவரை என் பின்னாடி தான் எல்லாரும் சுத்திருக்காங்க. ஆனா எனக்கு பிடிச்ச உன்கிட்ட நான் பேசினப்ப… நீ என்னை வேணாம்ன்னு சொல்லிட்ட. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா. அந்த வலி உனக்கு இப்போ புரியுதா அகில்”
அவன் பொறுமையை இழக்காமல், “நான் எப்படி வாழ்ந்தா உனக்கென்ன ப்ரேம்ஸ். இனி உன் வாழ்க்கைய…” என முடிக்கும்முன்…
“போதும் போதும். சமாளிக்காத. உன் முகமே காட்டிக்கொடுக்குதே. ஆனா இதெல்லாம் வேணும் அகில் உனக்கு. அவ உன்ன மதிக்கறதுகூட இல்லையாமே. கல்யாணத்துக்கு முன்னாடி நீயே விரும்பி சந்நியாசியா இருந்த…” என நக்கலாக சிரித்து… “இனியும் சந்நியாசி தான் நீ” என வாய்க்கு வந்ததைப் பேச, அமைதியாக புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவன் அமைதி அவளை வெறுப்பேற்ற, “ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவ லவ் பண்ண பையனோட போகப்போறா. அப்போ இப்படியே சிரிச்சிட்டே இருப்பியான்னு பார்ப்போம். காலம் முழுக்க தனிக்கட்டை தான் நீ” வார்த்தைகள் வன்மத்துடன் வர…
இதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவன் மனதில்… ‘இவள் பேசுவதைப் போல் நடந்துவிட்டால்… ஒருவேளை கவிதா அஜய்யுடன் சென்றுவிட்டால்?’ ஏனோ அந்த எண்ணமே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதயம் வேகமாகத் துடித்தது.
இருப்பினும் எதையும் வெளிக்காட்டாமல், “இது நானா தேர்ந்தெடுத்த வாழ்க்கை. அத நான் பாத்துக்கறேன். உனக்குன்னு ஒருத்தர் வரப்போறார். இனி உன் வாழ்க்கைய நல்லா வாழப்பாரு. அதுல கான்சென்ட்ரேட் பண்ணு. ஆல் தி பெஸ்ட்” என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.
மனதில் கோபம் அவன் அம்மாமேல். இருந்தும் அவரை எதுவும் பேசமுடியவில்லை. அவருக்கு அவரின் நியாயம். மகன் வாழ்க்கை என்று புலம்புவார்.
மனதில் பல போராட்டங்களுடன் இருந்தான்.
கவிதாவிடம் மாற்றம் தெரிகின்றது. ஆனால் அந்த மாற்றம் தன்னை ஏற்றுக்கொண்டதற்கான மாற்றமா என அவனால் யூகிக்கமுடியவில்லை.
சாதாரணமாகவே பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது என்பது மலைப்பான விஷயம் ஆண்களுக்கு. பெண்கள் என்றாலே ஒதுங்கி இருந்த இவனால் அவள் மாற்றத்தை சரியாக உணரமுடியவில்லை. அவளும் உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டவில்லை.
இன்று இதுகுறித்து பேசிவிடவேண்டும் என்ற உந்துதல் இருந்துகொண்டே இருந்தது.
கவிதாவும் சரியாக மாலை நேரம் ஆனபோது வந்தாள். மாமியாருடன் இரவு வேலை அனைத்தும் முடித்து, மேலே அவர்கள் அறைக்கு சென்ற போது, அவன் காத்திருத்தினான்.
“பேபி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” அவன் ஆரம்பிக்க, எப்பொழுதும் போல் அவனுக்கு எதிர்மறையாக அவள் பேசினாள். “எனக்கு டையர்ட்’டா இருக்கு. நாளைக்கு பேசுவோம்” என்றுவிட்டு அங்கிருந்து நகர நினைத்தாள்.
“நான் கண்டிப்பா இப்போ பேசியே ஆகணும்” அவனும் விடாமல் பேசினான்.
காலையில் நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்து வந்து செல்ல, ஒருவேளை ‘அஜய்யுடன் கவிதா சென்றுவிட்டால்’ என்ற எண்ணம் மிகவும் சஞ்சலப்படுத்த “என்ன முடிவு பண்ணிருக்க?” என கேட்டான்.
அவள் புரியாமல் “எது? என்ன முடிவு?” உலர்ந்த துணிகளை மடித்துக்கொண்டு கேட்க…
அவன் மனது ஒருநிலையில் இல்லை. அஜய் அஜய் என்ற பெயரே மூளையில் சுற்றிக்கொண்டிருக்க… அந்த கோபத்தில் “ஹ்ம்ம்?? என்கூட வாழப்போறயா இல்ல இன்னமும் பழச நினைச்சுட்டு இருக்கியா?” வார்த்தைகள் கொஞ்சம் வேறுமாதிரி வந்தது.
கவிதா அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பிடித்திருந்த துணியை இறுக பற்றிக்கொண்டாள். மனது படபடத்தது.
இருந்தும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவனை பாராமல், “நீதானே எனக்கு டைம் குடுத்துருக்க… அப்புறம் எதுக்கு இப்போ இந்த கேள்வி?” என சொல்லிவிட்டு, எங்கே இதற்கு மேல் இருந்தால் வார்த்தைகள் வலி தந்துவிடுமோ? என நினைத்து அவள் பால்கனி செல்ல எத்தனிக்க, கோபமாக அவள் கையைப் பற்றினான்.
“பேசிட்டு இருக்கேன்ல. பதில் சொல்லிட்டு போ பேபி!” ஏனோ அந்த ‘பேபி’ என்ற அழைப்பு கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தது அவளுக்கு. அதில் காதலில்லை. கோபம் தெரிந்தது. அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை துளிக்கூட இல்லை.
எங்கே அவன் அடித்துவிடுவானோ என்ற எண்ணம் மட்டுமே தோன்றியது அவளுக்கு. அவள் பதில் பேசமுடியாமல் அவனையே பார்த்து கையை விடுவித்துக்கொள்ளப் பார்க்க… அவன் பிடி கொஞ்சம் இறுகியது.
“அகில்! வலிக்குது. யு ஆர் ஹர்ட்டிங் மீ” என்றாள் முகத்தில் வலியுடன்.
அவள் முகத்தில் வலியை பார்த்தவன் சட்டென அவள் கையை விட்டான். அப்போது தான் அவன் செய்துகொண்டிருந்த காரியம் அவனுக்குப் புரிந்தது.
அவன் மீது அவனுக்கே கட்டுக்கடங்காத கோபம் வந்தது. ஆசை ஆசையாக இத்தனை நாட்கள் பார்த்துக்கொண்ட பெண்ணிற்கு, வலியை தந்துவிட்ட கோபம்.
இருப்பினும் அவள் தன்னை விட்டு போய்விட்டால்? என்ற எண்ணம் வேறு இம்சித்தது.
அவள் முகம் பாராமல், “ஐம் சாரி பேபி! ரொம்ப தப்பா பேசிட்டேன். தப்பா நடந்துக்கிட்டேன். ஆனா என்னால முடியல. யார் யாரோ ஏதேதோ பேசறாங்க” அவனால் ஓரிடத்தில் நிற்க முடியாமல், கால்கள் பரபரக்க… திடீரென அவளை அணைத்துக்கொண்டான்.
கவிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. “என்மேல கொஞ்சம் கூட எதுவுமே உனக்கு தோனலையா பேபி? என்கிட்டே வெறுப்பமட்டும் தான் காட்டிருக்க… நீ இல்லாம… நினைக்கவே முடியல. என்னைவிட்டு போய்டுவயா?” என அவன் கேட்க, அவளிடம் பதிலில்லை.
அசைவு துளிக்கூட இல்ல. சிலையென நின்றிருந்தாள். சில நொடிகள் கடந்திருக்க, அப்போதுதான் அவன் உணர்ந்தான் அவன் இருக்கும் நிலைமையை.
சட்டென அவளிடம் இருந்து விலகியவன்… ‘என்ன ஒரு கீழ்த்தரமான காரியம் செய்துவிட்டோம்’ என நினைத்து வெட்கிப்போனான். அவள் முகம் பார்க்க முடியவில்லை…தனது செயலை நினைத்து.
அவள் முகம் பார்க்காமல், “நான் செஞ்ச தப்புக்கு சாரி கேட்க கூட தகுதி இல்ல பேபி. ஐம்… என்ன…” வார்த்தை வரவில்லை.
கவிதாவிடம் பதில் இல்லை. அவனையே பார்த்திருந்தாள்.
என்னதான் கணவன் என்றாலும் இதுவரை அவள் மீது வேறு எண்ணத்தில் விரல் கூடப்படாமல் இருந்தவன்… மனைவி தானே, தனக்கில்லாததா என்ற உரிமை எடுத்து கொள்ளாதவன்… தான் ஒரு ஆண்மகன் என்பதை நிரூபிக்கக் கட்டிலை நாடாதவன்…
தற்போது அவளை காயப்படுத்தியது… அதுவும் அவள் விருப்பம் தெரியாமல் அவளை அணைத்தது என அவன் செய்தகாரியத்தை நினைத்து அவனுக்கே அவமானமாக இருந்தது.
மூச்சை ஆழ இழுத்து, திரும்பி அவளைப் பார்த்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. அவள் கண்களும்.
“இனி இப்படி நடந்துக்க மாட்டேன் பே…” ‘பேபி’ என்று கூப்பிடக் கூட தனக்குத் தகுதில்லை என்று நினைத்துக்கொண்டு பாதியிலேயே நிறுத்திவிட்டான்.
“என்னோட பிஹேவியர்’ர நினச்சா எனக்கே கேவலமா இருக்கு. நான் இனி உன்ன டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்” என நிறுத்தி, முகம் பணிந்து “ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி” சொல்லிவிட்டு அதற்குமேல் அவளைப் பார்க்காமல், அவன் அம்மாவிடம் அவசர வேலை என்று வெளியே சென்றுவிட்டான்.
அவன் நேராக சென்று இறங்கியது அரவிந்த் வீட்டிற்கு. இருவரும் அவன் வீட்டு மாடிக்கு சென்றனர் கையில் பாட்டிலுடன்.
நண்பர்கள் வற்புறுத்தினாலொழிய மது அதிகமாகக் குடிக்காதவன்… இப்போது வேண்டும் என்று கேட்ட நண்பனின் நிலைமையைப் பார்க்க கஷ்டமாக இருந்தது அரவிந்துக்கு.
கொஞ்சம் மது உள்ளே சென்றவுடன், நடந்ததை முழுவதும் சொன்னான் அகிலன்.
அரவிந்த் அதிர்ந்தான். இதுவரை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று நினைத்திருந்தான்… என்ன சொல்லி நண்பனை தேற்றுவது என்று தெரியவில்லை.
அகிலன் தொடர்ந்தான்.
“என்னை என்ன நினச்சுருப்பா… ஒரு scoundrel மாதிரி பிஹேவ் பண்ணிருக்கேன். பயமா இருக்கு மச்சி… பழைய மாதிரி கோவம் வந்து…” என அதற்கு மேல் சொல்லமுடியாமல் மறுபடியும் குடித்தான். கண்கள் சிவந்திருந்தது.
“என்னால இன்னொரு இழப்பை பார்க்கமுடியாதுடா” என்றவன்…
“அவளையே முடிவெடுன்னு சொல்லிட்டு, நான்… ச்ச. ஐம் ஜஸ்ட் நாட் ஃபிட் (I’m just not fit)” என கத்தினான். நண்பனை இதுபோல கோபமாகப் பார்த்து பலஆண்டுகள் ஆகியிருந்தது அரவிந்துக்கு.
“நான் நாளைக்கு துபாய் போலாம்ன்னு இருக்கேன். அந்த ப்ராஜக்ட் இங்க இருந்தே பண்ணலாம்ன்னு மொதல்ல யோசிச்சேன். ஆனா இப்போ நான் இருக்க மனநிலைல, என்னால கவிதாவை பார்க்கக்கூட முடியாது. பெரிய தப்பு செஞ்சுட்டேன். அவளுக்கு ட்ரபில்’லா இருக்க விரும்பல. இன்னொருவாட்டி அவ ஹர்ட் ஆகறத பார்க்கமுடியாது. மோரோவர் நானே அஜய் அது இதுன்னுங்கிற எண்ணத்துல இருந்து வெளிய வரணும்… அப்புறமா நான் சென்னை வரேன். வீட்ல யாருக்கும் இந்த பிரச்சனை தெரியாது. நீயும் சொல்லிக்காத” என்றுவிட்டு அங்கேயே இருந்துவிட்டான் அன்றைய இரவு.
அவன் வீட்டிற்கு செல்லவில்லை என்றாலும், அடுத்தநாளிலிருந்து கவிதா ஆஃபீஸ் சென்று வர கார் ஏற்பாடு செய்திருந்தான். அடுத்த நாள் அவள் கிளம்பியதும் வீட்டிற்கு வந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் துபாய்க்கு.
———இன்று———
கவிதா அன்று முழுவதும் ஆஃபீஸ் வரவில்லை என்று லயா சொல்லியிருந்தாள்.
‘அவள் ஒருபோதும் தன்னிடம் ஒரு கணவன் என்ற உரிமையுடனோ, ஆசையுடனோ இருந்ததில்லை. ஒருவேளை சினிமாவிலெல்லாம் வருவதுபோல நண்பனாக மட்டுமே நினைத்திருப்பாளோ. இன்னமும் அஜய் தான் அவள் மனதில் இருக்கிறானோ’
‘ப்ரேமா சொன்னது போல… ஒருவேளை அஜய்யுடன் கவிதா சென்றால் கூட எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது. அதை தானும் ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டான்.
‘அதுதான் கவிதாவினுடைய விருப்பம் என்றால் எக்காரணம் கொண்டும் அவளை கஷ்டப்படுத்தக்கூடாது’ என முடிவு செய்தான்.
துபாயில் இருந்தால் எங்கே மறுபடியும் அவளைக் காயப்படுத்துவிடுவோம் என்றெண்ணி, உடனடியாகசென்னைக்கு டிக்கெட் புக் செய்தான்.
அதேநேரம் சரியாக அவன் நண்பன் அரவிந்த் அகிலனை அழைத்தான்…
அழைப்பை அகிலன் ஏற்க, மறுமுனையில் இருந்தவன்…
“என்னடா மச்சி. நீயா போன் பண்ணுவ இல்ல ஒரு மெசேஜ் அனுப்புவன்னு பார்த்தா ரெண்டு நாளா ஒன்னுமே இல்ல… வைஃப் உன்ன பார்க்க வந்தவுடனே அதுக்கு ஹெல்ப் பண்ண ஃபிரண்ட்ட மறந்துட்ட பார்த்தியா?” அரவிந்த் கேட்க அகிலனின் முகம் குழப்பத்தைக் காட்டியது!!!