என்னுள் நீ வந்தாய் – 17B

என்னுள் நீ வந்தாய் – 17B

———இன்று———

அரவிந்த் பேசுவது எதுவும் புரியாத அகிலன் அவனிடம்… “என்னடா… மப்புல இருக்கியா? பேசாம போய் தூங்கு. கடுப்பேத்தாத” என்றான் ‘நானே சோகத்தில் இருக்கிறேன் இவன் வேறு’ என நினைத்து.

“டேய் என்னடா ஆச்சு? கவிதா உன்னப்பார்க்க பார்ட்டி’க்கு வந்தாங்களா? நீங்க பேசி சமாதானம் ஆயிருப்பீங்க, நம்ம ஏன் போன் பண்ணி தொல்லை பண்ணனும்னு நினச்சேன்… நீ என்னடான்னா…” என்றவுடன் ஒரு சில நொடிகள் தேவைப்பட்டது அகிலனுக்கு அரவிந்த் பேசியது புரிய.

புரிந்தபோது தலையில் பெரிய இடி விழுந்ததுபோல் உணர்ந்தான்.

தன்னை பார்க்க வந்தாளா? என்ற எண்ணம் தந்த சந்தோஷம், வந்துவிட்டு ஏன் எதுவுமே பேசாமல் சென்றுவிட்டாள்? என்ற வருத்தம், அப்போது அஜய் எங்கே அங்கே வந்தான்? என்ற குழப்பம், அதுவும் ஏன் கவிதாவுடன் பேசிக்கொண்டிருந்தான்? என்ற கோபம், தற்போது எங்கே அவள்? என்ற பயம் என ஒன்றாக பல வித உணர்வுகளின் பிடியில் இருந்த அகிலனை, அரவிந்த் குரல் மீட்டெடுத்தது.

“மச்சா ஏதாச்சும் பேசுடா. கவிதா உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்… உன்ன பார்க்கணும்னு என்கிட்ட கேட்டுட்டே இருந்தாங்க. நான் தான் உங்களுக்குள்ள ஒரு சின்ன டிஸ்டன்ஸ் இருந்தா, ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பீங்கன்னு, சொல்லாமலே இருந்தேன்.

அப்புறம் நிஜமாவே உன்ன பார்க்க அவங்க துபாய்ல இருக்காங்கன்னு தெரிஞ்சவுடனே, நான் தான் பார்ட்டி நடக்கற ஹோட்டல்’ல பார்க்க சொன்னேன். பார்த்தீங்களா? இல்லையா? சொல்லித் தொலையேன்டா…” கடுப்பின் விளிம்பில் இருந்தான் அரவிந்த், அகிலனின் மௌனத்தைப் பார்த்து.

அகிலன் ஆழமூச்சிழுத்து நடந்ததை மொத்தமும் சொன்னான். அரவிந்த் எவ்வளவு கெட்டவார்த்தைகள் தெரியுமோ அவ்வளவையும் வைத்துத் திட்டினான் அகிலனை.

“இல்லடா. எனக்கு நெஜம்மா என்னை பார்க்க வந்தான்னு தெரியல. நீயாவது முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல? இடியட்” என நண்பன் மேல் பழியை போட…

“கொன்னுடுவேன் அகில் உன்ன. அப்படி இப்படின்னு பொண்ணுங்களோட பேசியிருந்தா தெரியும். அந்த ப்ரேமா சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. சாமியார் தான் டா நீ. மொதல்ல கவிதா எங்க போயிருக்காங்கன்னு பாரு” என சில பல அர்ச்சனைகளைத் தந்து அழைப்பைத் துண்டித்தான் அரவிந்த்.

இருவரும் பேசிமுடித்தபின், அகிலனுக்கு மூளை முற்றிலுமாக வேலை செய்ய மறுக்க, இதயம் இயல்பாகத் துடிக்க மறுக்க, கைகால்கள் நகர மறுக்க, கண்கள் கண்ணீரை கட்டுப்படுத்த மறுக்க, உடல் செயலிழந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான்.

சிலநிமிடங்கள் நடந்ததை அனைத்தையும் மனம் நினைத்துப்பார்க்க, கண்ணீருடன் “பேபி” என்று முனகியது அவன் இதழ்.

அவள் முகத்தில் அன்று பார்த்த அந்த சந்தோஷம், நிறைவு, எல்லாம் தன்னை பார்த்ததினாலா என நினைத்த போதே மனது நெகிழ்ந்தது.

அதற்குப்பின் காலம் கடத்தவில்லை. லயாவுக்கு அழைத்தான். நடந்ததைச் சொன்னான். கவிதாவை அழைத்துப் பார்க்கச்சொன்னான். அவனே அழைக்கவும் செய்தான். நம்பர் ரீச் ஆகவில்லை. லயாவும் அதையே சொன்னாள்.

அவனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தன்னை பார்க்க வந்துவிட்டு பேசாமல் ஏன் சென்றாள்? என யோசித்தான். அஜய் இருந்தால் என்ன? அவள் பேசியிருக்கலாமே. இதுமட்டும் அவனுக்குப் புலப்படவில்லை. கவிதா லயா தங்கியுள்ள கெஸ்ட் ஹவுஸ் சென்றான்.

அங்கே லயாவை பார்த்தவுடன் திடீரென ஏதோ தோன்ற, “லயா! நீ அவகிட்ட என்னைப்பத்தி ஏதாச்சும் சொன்னயா… நீ என்னை…? ஐ மீன் அவ என்னை மீட் பண்ண வர்றதுக்கு முன்னாடி” சந்தேகத்துடன் கேட்க, ஆம் என்றாள் லயா.

இப்போது புரிந்தது. ‘லூசே தான் பேபி நீ. உன்னையே நினைச்சுட்டு இருக்க நான் எப்படி இன்னொரு பொண்ண. நீ மட்டும் என் கைல கிடைச்ச…’ மனதில் அவளைத் திட்டினான்.

கவிதாவின் அறைக்குள் நுழைய, லயா அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என வெளியிலேயே இருந்தாள்.

பொருட்கள் எல்லாம் ஒவ்வொரு இடத்தில் சிதறிக்கிடந்தது. தலையணை பக்கத்தில் சிறிய போட்டோ ஃபிரேம். சென்னையில் அவர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த இருவரின் கல்யாண போட்டோ.

அதை அங்கே பார்த்தவனுக்கு, அவள் எந்த மனநிலையில் இருந்திருப்பாள் என நன்றாகவே புரிந்தது. அவசரப்பட்டுவிட்டோமோ என்று கூடத்தோன்றியது

போட்டோவில் சிடுசிடுவென இருந்த அவள் முகத்தை மெல்ல வருடினான். அவன் கண்ணீர் போட்டோவில் பட்டுத் தெறித்தது. அறையில் ஒரு மூலையில் அவனைப் பார்க்கவந்தபோது கட்டியிருந்த சேலை கிடந்தது.

அருகில் சென்று பார்க்கும்போதுதான் அவனுக்கும் உரைத்தது அது அவன் எடுத்துத்தந்த புடவை என.

ஒருமுறை ப்ரியாவிற்கு அவன் அம்மா புடவை எடுக்கச் சென்றபோது, அவனையும் அழைத்துச்சென்றிருந்தார். அப்போது அவளுக்காக அவன் எடுத்துத்தந்த பேஸ்ட்டல் ஆரஞ்சு (pastel orange) மற்றும் பிங்க் கலந்த ஒருவகையான பீச் நிறப் புடவை. அதை எப்படி மறந்தேன் என நொந்துகொண்டான்.

சந்தோஷ மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி பயம் எட்டி பார்த்தது. எங்கு சென்றிருப்பாள்… காலையில் போனது. ஒருவேளை அஐய்யை பார்க்க சென்றிருப்பாளோ? என்று கூட தோன்றியது அவனுக்கு.

“எனக்கு உன்ன இப்போவே பாக்கணும். எங்க போன பேபி?!!” அவள் புடவையில் முகம் புதைத்துக் கண்கலங்கினான்.

அவள் அறையில் அவன் இருக்க… அதே நேரம். கவிதா… தலையணையைக் கட்டிக்கொண்டு கண்மூடி படுத்திருந்தாள் வேறு ஒரு இடத்தில்… காய்ச்சலால் உடல் சோர்வாக இருந்தது. இந்நேரம் அகிலன் இருந்திருந்தால் எப்படி பார்த்துக்கொள்வான் என்பது மட்டும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவனுடன் கடைசியாகப் பேசியது… அவன் நடந்துகொண்டது என அவள் நினைவிற்கு வந்து இம்சை செய்தது.

———அன்று———

அன்று அவன் கவிதாவின் முடிவை பற்றி கேட்டபோது, ஒரு பாதி மனது உன்னுடன் தான் என் வாழ்க்கை என்று சொல்ல நினைத்தது. ஆனால் மறுபாதி, அதை ஏற்க மறுத்தது. ‘அவனுக்கு நீ எந்த வகையில் பொருத்தமானவள்?’ என்ற கேள்வி அரித்தெடுத்தது.

இருப்பினும் அவன் கேட்டவுடன் நிலைமையைச் சமாளிக்க, அவன் சொன்ன ‘டைம் எடுத்து யோசி’ என்ற வாக்கியதைப் பிரயோகித்தாள். அவன் திடீரெனக் கோபப்பட, என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினாள்.

அவன் பேசிய வார்த்தைகள் ‘யார்யாரோ ஏதேதோ பேசறாங்க’… யார் என்ன சொன்னார்கள் இவனை? அதை அவள் யோசிக்கும்போதே…

சட்டென அவளை அவன் அணைத்தவுடன், அதை அவள் தடுக்கவும் நினைக்கவில்லை. ஆனால் ஏற்கவும் முடியவில்லை… அப்படியே நின்றாள்.

‘என்னை விட்டு போய்டுவயா’ என கேட்டபடி அவன் கண்கலங்கி, கண்ணீர் அவள் கழுத்தை நனைத்தது.

அதிர்ந்து போனாள். அப்படியே சிலைபோல் நின்றிருந்தாள். அவனின் இப்போதைய மனநிலைக்கு தான் தான் காரணம் என்று நன்றாகப் புரிந்தது.

தன்னை கண்ணுக்குக் கண்ணாக பார்த்துக்கொண்டவனை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டோமே என நினைக்கும்போது சொல்ல முடியாத வலி மனதில்.

என்ன செய்வது எனப் புரியவில்லை. அவன் நிலையை பார்த்து கண்கள் கலங்கியது. ஓடிச்சென்று அவனைத் தழுவிக்கொள்ள ஆசை வந்தாலும், ஏதோ ஒன்று தடுக்கவும் செய்தது. அப்படியே நின்றாள்.

அவன் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டான். ஆனால் அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே இரவை கடத்தினாள் தூங்காமல்.

அவன் வந்தவுடன் ‘மனம் விட்டு பேசவேண்டும். ‘உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. இருந்தும் ஏதோ ஒரு சின்ன நெருடல்’ என்று சொல்லவேண்டும்’ என நினைத்தாள்.

ஆனால் அடுத்தநாள் காலை வரை அவன் வரவில்லை. அவன் அனுப்பிய கார் வந்தது, அலுவலகத்திற்கு அழைத்து செல்ல. எப்படியும் மாலை அவனை பார்க்கும்போது பேசலாம் என நினைத்து மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

அன்று அவள் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு குறுஞ்செய்தி வர, எடுத்துப்பார்த்தாள். கொஞ்சம் குழம்பினாலும் முகத்தில் புன்னகையும் வந்தது.

பக்கத்தில் இருந்த காஃபி ஷாப் சென்றாள். அங்கே அவளுக்காகக் காத்திருந்தான் அஜய்!!!

5
2
3

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved