என்னுள் நீ வந்தாய் – 19
என்னுள் நீ வந்தாய் – 19
“உன்கிட்ட ரொம்ப தப்பா நடந்துட்டேன். மன்னிப்பு கேட்கக்கூடக் கஷ்டமா இருக்கு. உன்ன பார்க்க அதைவிட கில்ட்டி’யா இருக்கு. சோ கொஞ்ச நாள் வேலை விஷயமா துபாய் போறேன். வீட்ல யாருக்கும் நம்ம விஷயம் தெரியாது. மனசு கேட்காம அரவிந்த் கிட்ட மட்டும் சொல்லிட்டேன். நம்ம பர்சனல் விஷயம் ஷேர் பண்ண வேண்டியதா போச்சு. அதுக்கும் சாரி. நீ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு என் சப்போர்ட் உனக்கு கண்டிப்பா இருக்கும் பேபி. எதையும் யோசிச்சு ஃபீல் பண்ணாத. ஒழுங்கா சாப்பிடு. அம்மாட்ட அந்த களி ரெகுலர்’ரா செய்ய சொல்லிருக்கேன். அதையும் சாப்பிடு. என்னை மன்னிச்சுடு பேபி ப்ளீஸ். டேக் கேர்”
படித்தவளுக்கு ஒருபுறம் அழுகை வந்தாலும் மறுபுறம் கோபம் வந்தது. யாரைக் கேட்டு சென்றான் என்று. அவனிடம் பேசியாக வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவன்? எல்லாவற்றிலும் அவசரம்.
வீட்டில் ஒருவர் அவசரக்குடுக்கை என்றால் பரவாயில்லை. ஆனால் இங்கு இருவரும் என்ற கோபமும் வந்தது.
‘பெரிய ஆள் மாதிரி போனயில்ல. போ. நீயா வர்ற வர நான் பேசமாட்டேன் உன்கூட’ சிறுபெண்ணைப் போல் அடம்பிடித்தது மனது.
இன்று தான் அகிலன் தன்னை எவ்வளவு ஆக்ரமித்துள்ளான் என்று புரிந்தது அவளுக்கு. அஜய்யிடம் அகிலனைப் பற்றி பேசியதெல்லாம், யோசித்துப் பேசியவை அல்ல… மனதில் இருந்து வந்தவை.
ஒருவனை மனதார பிடித்திருந்தால் மட்டுமே அவனை இவ்வளவு உயர்வாகப் பேசமுடியும் என்பது புரிந்தது.
தன் மனதில் உள்ள திரை தானாகப் போட்டுக்கொண்டது. அதை தானே விலக்கினாலொழிய, போகப்போவதில்லை. கொஞ்சம் அந்த திரையைத் தள்ளிவிட்டுப் பார்க்கும்போது, அகிலனுடனான வாழ்க்கை எவ்வளவு அழகானது என்று புரிந்தது.
அவர்கள் இருந்த அறை ஒவ்வொரு மூலையும் அவனை நினைவு கூர்ந்தது. தனிமை கொடுமையாக இருந்தது.
‘தனிமையால் ஏற்பட்ட வெறுமை வறுத்தெடுக்கும்போது, ஆறுதலாய் அரவணைப்பது உன் நினைவுகள் மட்டுமே….’
அவன் இல்லாமல் அந்த வீடே அந்நியமாய் தெரிந்தது. ப்ரியாவிடம் கூட பேச தோன்றவில்லை. ஏதோ இருக்கவேண்டுமே என இருந்தாள். அவன் வருவதாய் இல்லை.
சண்டையிட்டு பிரிந்திருந்தாலோ, இல்லை நிராகரிக்கப்பட்டிருந்தாலோ, ‘உனக்கு தேவை என்றால் நீயே வா. நீயாக வந்து பேசும்வரை நான் பேசமாட்டேன்’ என்றிருந்திருப்பாள்.
அஜய்யால் நிராகரிக்கப்பட்டதாக நினைத்தபோது, அதுவே அவளை அவனிடம் பேசவிடாமல் தடுத்தது.
ஆனால் அகிலனோ, அவள் மேல் கொண்ட காதலால், அவளுக்கு தொல்லையாக இருக்கக்கூடாது என நினைத்து பிரிந்துள்ளான். அவனாக வரும் வரை காத்திரு என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாலும், மனது கேட்கவில்லை.
அரவிந்தை அழைத்தாள்… அவனுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்து. ஆனால் அவன் பிடிகொடுக்கவில்லை.
அகிலன் எதிர்பார்க்காதபோது அவன் முன் நின்றால்? ஏனோ அவனின் அந்த ஆச்சர்யம் கலந்த சந்தோஷமான முகம்… சிரித்த முகம்… பார்க்கவேண்டும் என ஆசையாக இருந்தது.
தன் சொந்த செலவில் துபாய் செல்வதாகவும், அங்கிருந்து வேலைப் பார்ப்பதாகவும், விடாப்பிடியாக அலுவலகத்தில் பேசி… இல்லையில்லை கிட்டத்தட்ட சண்டையிட்டு துபாய் சென்றாள்.
அவனை காணவும் சந்தர்ப்பம் கிடைத்தது… ஆனால்! அங்கு நடந்தது?
அஐய்யை அங்கு எதிர்பார்க்கவே இல்லை. தற்செயலாக அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தான் போல. அவள் முகவாட்டத்தை பார்த்துவிட்டு பின்னாலேயே வந்து ‘என்ன ஆயிற்று’ என்று கேட்டு, ‘ஒன்றும் இல்லை’ என்று அவள் அழுத்தமாக சொன்னபின்னே தான் சென்றான்.
அகிலனை லயாவுடன் பார்த்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
மனது ஒரு நிலையில் இல்லை. இதில் காய்ச்சல், உடல் சோர்வு என அனைத்தும் சேர்ந்துவிட, ஏதேதோ எண்ணங்கள் மனதில் சூழ்ந்தது.
கொஞ்சம் உடல் தேறினால் தெளிவாக யோசிக்க முடியும் என நினைத்து, இதோ இப்போது…
தானே மருத்துவமனையில் தன்னை அட்மிட் செய்துகொண்டாள். ‘நாளை காலை டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம்’ என்று மருத்துவரும் சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
இன்னமும் லயாவை அகிலனுடன் நினைத்துப்பார்க்க முடியவில்லை.
அன்று சென்னையில் அகிலன் தன்னிடம் நடந்துகொண்டது… தன் ஆசையை வெளிப்படுத்தியது… ‘இப்படி இருந்த ஒருவன் இந்த சிறிய காலத்தில் வேறொரு பெண்ணை எப்படி நினைக்க முடியும்!?’ என்றே தோன்றியது.
நாளை டிஸ்சார்ஜ் ஆனவுடன், முதல் வேலை லயாவுடன் இதைப் பற்றி பேசவிடும் என்று நினைத்துக்கொண்டு, மருந்தின் பிடியில் இருந்தவள் உறங்கிவிட்டாள்.
மருந்தின் தாக்கத்தால் கவிதா உறங்கிவிட, அதே இரவு அகிலன், கெஸ்ட் ஹவுசில் கவிதாவின் அறையில் அவளை நினைத்து மனம் கலங்கி உட்கார்ந்திருந்தான்.
அவளை எப்படி தொடர்பு கொள்வது என புரியாமல் இருந்தான். ஒரு நாள் முழுவதும் வரவில்லை என்றால், எங்கே சென்றிருப்பாள்? ‘ஏதேனும் தவறான முடிவு?’ என்று பதட்டமடைந்த மனது எச்சரிக்கைக் கொடுத்தாலும், மூளை அதை ஏற்கவில்லை.
‘அவள் அப்படியெல்லாம் முடிவெடுக்கும் பெண் இல்லையே’ என்று அவனுக்கு தெரியாதா என்ன?
அவளின் துணிச்சல், தைரியம், சமயோஜித புத்தி, சிலநேரம் பொறுமை, இது அனைத்தும் இருந்தாலும் எப்போதாவது எட்டிப்பார்க்கும் குழந்தைத்தனம் என அனைத்தையும் இரண்டு நாட்களில் பார்த்திருக்கிறானே!
அவன் அவளை முதலில் சந்தித்தது… அவள் செய்த காரியங்கள் என அவன் மனது அந்த நினைவுகளை நினைத்துப்பார்த்தது…
———அன்று———
அவன் அப்பாவும் அம்மாவும் சொந்தத்தில் நடக்கவிருந்த திருமணத்திற்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்க, அவன் அப்பா ஜெயராமன் படி இறங்கும்போது கால் தவறியதால், காலில் அடி பட்டது.
அவரால் செல்லமுடியாது என்று ஆனபின், மனைவியைத் தனியாக அனுப்ப மனமில்லமல், மகளுக்கும் தேர்வு இருப்பதால், அகிலனை வற்புறுத்தி அனுப்பிவைத்தார்.
இதுபோல இரண்டு நாட்கள் நடைபெறும் திருமணமெல்லாம் சின்ன வயதில் சென்றது. அதற்குப் பின் ஸ்கூல் படிப்பு, காலேஜ் படிப்பு, வேலை என்று ஆனதில் எங்குமே அதிகம் சென்றதில்லை.
மிஞ்சிப்போனால் நண்பர்களின் திருமணம். அதுவும் சில மணிநேரங்களே.
இப்படியிருக்க… அம்மாவின் நெருங்கிய சொந்தம் என்பதால் சரி என்றான். தனக்கு வேலை இருப்பதாகவும், அதை செய்யும்போது ‘கல்யாணத்தில்கூட வேலையா?’ என்றெல்லாம் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டே கிளம்பினான்.
சொந்தங்கள் சூழ, அந்த மண்டபமே களைகட்டியது. மாப்பிள்ளை வழி சொந்தமான லட்சுமி மற்றும் எங்கும் அதிகம் வராத அகிலனை பார்த்தவுடன் உபச்சாரம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
அன்றைய மாலை… சடங்குகள் ஆரம்பித்தது. அகிலன் பெரிதாக எதிலும் கலந்து கொள்ளாமல் அறையிலேயே இருந்தான்.
திடீரென இரண்டு அறைகள் தள்ளி ஒரே சத்தம்.
என்ன என்று பார்த்தபோது… பையனைப் பெற்றவர்கள் கொஞ்சம் அதகளத்தில் ஈடுபட்டிருக்க, பெண்ணைப் பெற்றவர்கள் பிரச்சனை வேண்டாம் என்று மன்றாடிக்கொண்டிருந்தனர்.
‘என்ன பிரச்சனை’ என ஒன்றும் புரியாமல் அகிலன் பார்த்திருக்க, பெண்ணின் அப்பா தீடீரென, மாப்பிள்ளை மற்றும் அவன் குடும்பத்தின் காலில் விழுந்து… “பிரச்சனை வேண்டாம். எங்களுக்கு கொஞ்சம் நேரம் குடுங்க” என்று கேட்டவுடன் அனைவரும் திடுக்கிட்டனர் அவரின் செயலைக் கண்டு.
அகிலன் ‘என்ன இதெல்லாம்’ என்று யோசிக்கும்முன், மணமகள் பதறிக்கொண்டு தந்தையின் பக்கத்தில் வந்த நேரம்…
“மாமா. நீங்க போய் இவங்க கால்லலாம் விழுந்துட்டு… மொதல்ல எந்திரிங்க. இவங்கெல்லாம் மனுஷங்களே கிடையாது. பணவெறி பிடிச்ச பிசாசுங்க. இவங்கள எல்லாம் போலீஸ்ல பிடிச்சு குடுக்கணும்” என்று கோபத்துடன் பேசிக்கொண்டே அந்த பெரியவரைத் தூக்கினாள் மற்றொரு பெண்.
“குடுப்ப குடுப்ப… யாரு இந்த பொண்ணு? பெரியவங்க பேசறப்ப நடுல… வெளிய போக சொல்லுங்க. இந்த கல்யாணம் நடக்கணுமா வேணாமா?” என்று மாப்பிள்ளையின் அம்மா கத்த, “மன்னிச்சுடுங்க சம்மந்தி” என்ற பெண்ணின் அப்பா, தனது மகள் புறம் திரும்பி…
“அம்மா. நீ கவிதாவை இங்கயிருந்து கூட்டிட்டு போ” என்றார் கலங்கிய கண்களுடன்.
மணமகளும் ஒன்றும் பேசாமல், கவிதாவை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றாள் அங்கிருந்து. அந்த அறையை விட்டு வெளியேறும் வரை மாப்பிள்ளை வீட்டாரை கடுங்கோபத்துடன் முறைத்துக்கொண்டே வெளியேறினாள் கவிதா.
அப்போதுதான் அகிலன் கண்ணிலும் பட்டாள் முதலில்!
கோபத்துடன் வெளியேறிய கவிதா, அவள் கைகளைப் பற்றியிருந்த மணமகள் கையை உதறிவிட்டு, வேக வேகமாக நடந்தாள்.
அகிலனுக்கு முதலில் பெரியவர்கள் பேசும்போது, நாம் ஏன் தலையிடவேண்டும் என்று தான் நினைத்தான்.
ஆனால் அந்த பெரியவர் காலில் விழுந்தவுடன், ‘என்ன இதெல்லாம்’ என்று யோசிக்கும்போது, மணமகளே ஒன்றும் பேசாமல் இருக்க, கவிதா அங்கே பேச ஆரம்பித்ததை, சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.
அவள் வெளியே செல்லும்போது அவளைப் பார்த்தவன், ஒரு உந்துதலில் அவளை பின்தொடர்ந்தான்.
கவிதா கொஞ்சம் தூரம் வெளியே சென்ற பின், அவளுக்கு போனில் அழைப்பு வர, அதை எடுத்தவுடன் பொரிந்துத்தள்ளினாள் எதிரில் இருப்பவரின் காதில் ரத்தம் வரும்வரை… அவ்வளவு சத்தமாக.
“இந்த மாதிரி ஒரு கல்யாணம் நடக்கணுமா? இவளெல்லாம் படுச்ச பொண்ணு. இதுல டாக்டர் வேற. நினைக்கறப்பவே கடுப்பாகுது. அவ அப்பா, கால்ல விழறாரு. பார்த்துட்டே நிக்கறா. போடா நீயும் வேணாம்; உன்கூட கல்யாணமும் வேணாம்ன்னு சொல்லவேண்டாம்? வேற மாப்பிள்ளையா கிடைக்காது இவளுக்கு? எனக்கு அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை விட இவமேலதான் கோவம். இன்னமும் இந்த காலத்துலயும் டௌரி’லாம் இருக்குன்னு நினைக்கறப்ப… ச்ச… நான்லாம் டௌரியே தரக்கூடாதுனு சொல்லிடுவேன்” எதிரிலிருப்பவரை பேச விடாமல் பேசிக்கொண்டிருந்தாள்.
லட்சுமி, ‘இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டபின்னே, அங்கே இருந்து நகர்ந்தான் அகிலன் ஒரு சிறிய புன்னகையுடன். அப்போது அவனறியாதது அவள் பேசிக்கொண்டிருந்தது அஜய்யிடம் என்று.
ஒரு வழியாக வரதட்சணை பிரச்சனை முடிந்து, அடுத்தடுத்த சடங்குகள் நடந்தது. எதுவுமே நடக்காததுபோல் இருவீட்டினரும் இருக்க, கவிதாவால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அப்பா கேட்டதற்காக சரி என்று வந்திருந்தாள் இந்த திருமணதிற்கு.
அகிலனும் அந்த நிகழ்விற்கு பிறகு கிட்டத்தட்ட அவளை மறந்து விட்டான், அவனுக்கு இருந்த வேலையில். அடுத்தநாள் அதிகாலையில், ஆஸ்திரேலியா ப்ராஜெக்ட்டுக்காக, முக்கியமான வேலை என அதில் ஐக்கியமானன்.
சமையலறை இருந்த இடத்திற்கு பக்கத்தில் அவனுக்கு சிக்னல் கிடைத்ததால் அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது… “ஐயோ ஸ்வீட்ல என்னத்த கலந்தீங்க. ரெண்டு மணிலருந்து ஆறு வாட்டி போய்ட்டேன். இருங்க நான் மாமாட்ட சொல்றேன், இந்த கேட்டரிங் சரியில்லைன்னு” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சமையலறையில் இருந்தவரிடம் புகார் படித்துக்கொண்டிருந்தாள் கவிதா.
‘மறுபடியும் இவளா?’ என்று நினைத்த அகிலன் வேலையில் கவனம் செலுத்தாமல் அவளைப் பார்த்திருக்க, “ஐயோ திரும்பவும் வருதே…” என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அகிலன் புன்னகையுடன் ‘என்னவாக இருக்கும்?’ என யோசிக்கும்போதே திரும்பி வந்தாள்.
“எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா உங்கள தான் பிடிப்பாங்க சொல்லிட்டேன்” என்று சோர்ந்து போன முகத்துடன் மறுபடியும் அவருடன் பேசினாள் கவிதா.
அவர் உடனே, “பிடிப்பாங்க பிடிப்பாங்க. நேத்தே சொன்னேன். ஸ்வீட் எல்லாத்துலயும் ஒன்னு ஒன்னு சாப்பிடுன்னு. நீ கேட்டயா? நாலு ஜிலேபி… மூணு லட்டு… இதுல அப்பப்போ பாதுஷா, நைட் பன்னெண்டு மணிக்கு பசிக்குதுன்னு மூணு மைசூர்பாக் வேற. அப்புறம், வயிறு கலக்காம என்ன பண்ணும்? இந்தா இத பிடி” என்று கஷாயத்தை நீட்டினார்.
அவரைப் பார்த்து முறைத்துக்கொண்டு, “நீங்க செஞ்ச ஸ்வீட் தான் சரியில்ல. நான் இதுக்கு முன்னாடி இதுபோல நிறைய தடவை சாப்பிட்டுருக்கேன்” என்றவள் நிறுத்தி … “இத குடுச்சா சரியா போய்டுமா?” என சந்தேகத்துடனே கேட்க,
அவரோ, “சரி ஆகுமான்னு தெரியாது. அடிக்கடி பாத்ரூம் போக தெம்பு வரும்” என்று சொல்லிவிட்டு சிரித்தார். மறுபடியும் முறைத்துக்கொண்டே குடித்தாள்.
“உன் அம்மா எங்க? அவங்ககிட்ட சொல்லணும். ரொம்ப ஸ்வீட் திங்குது உங்க பொண்ணு. அதுபத்தாம தொல்லை வேற பண்ணுதுன்னு சொல்லணும்” அவர் போலியான கோபத்துடன் சொல்ல,
அவளோ, “ஹாஹாஹா. நான் இதுபோல தொல்லைப்பண்ணுவேன்னு தெரிஞ்சோ என்னமோ… சின்ன வயசுலயே என்ன பார்த்து பயந்துட்டு” ‘போய் சேர்ந்துவிட்டார்’ என்று சைகையால் சொல்ல, அந்த சமையல்காரர் மனது கொஞ்சம் கனத்தது.
அவள் என்னதான் சாதாரணமாக புன்னகைத்துக்கொண்டே சொன்னாலும், அவள் முகம் அவளின் சோகத்தைக் காட்டியது.
இதுவரை அனைத்தையும் ஸ்வாரஸ்யத்துடன் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்த அகிலனுக்கு, மனநிலை சட்டென மாறியது.
துறுதுறுவென இருந்த அவள் முகம், சோகத்தைதைக் காட்டியபோது ஏதோ ஒரு பாரம் அவன் மனதில். ஏன் என்று புரியவில்லை. கவிதா அங்கிருந்து சென்றுவிட்டாள். ஆனால் இவனோ…! அவள் நினைவுடன் இருந்தான்.
கல்யாணத்தில் அடுத்தடுத்த வேலைகள் பரபரவென்று நடந்தது. பெரிதாக எதிலும் ஈடுபடவில்லை என்றாலும், அம்மாவிற்காக சபையில் உட்கார்ந்திருந்தான், மாப்பிள்ளை வீட்டின் பக்கத்தில்.
மணமகளின் அம்மா, கவிதாவை மணமகளுக்கு ஒத்தாசையாக இருக்கச்சொல்ல, கவிதா மணமேடையிலேயே இருந்தாள்.
அழகிய சாஃப்ட் சில்க் புடவை… அவளின் நளினத்தை நன்றாகவே எடுத்துக்காட்டியது. அதிகப்படியாகத் தெரியாத ஆபரணங்கள். மிதமான ஒப்பனை. ஒரு முறை பார்த்தால் கண்டிப்பாக இன்னொருமுறை பார்க்கத்தோன்றும் அளவிற்கு இருந்தாள். அகிலன் கண்கள் அவளை அவ்வப்போது பட்டுப்பட்டு மீண்டது.
அவன் மட்டுமில்லை; அங்கிருந்த சிலர் கண்களும் அவள் மீது இருந்தது. மேடையில் சொன்ன வேலைகளை செய்துகொண்டிருந்தாள்.
அப்போது மாப்பிள்ளை வீட்டில், அவள் மேடையிலேயே இருப்பதைப் பார்த்து… முந்தயத்தினம் அவள் பேசியதை மனதில் வைத்துக்கொண்டு; அவளை அங்கிருந்து அழைத்து சில்லறை வேலைகளைத் தந்துகொண்டே இருந்தனர்.
மாடிப்படி ஏறி இறங்கும் வேலையாகப் பார்த்துப் பார்த்து தந்தனர். கோபம் ஒருபுறம் வந்தாலும், அத்தைக் கேட்டுக்கொண்டதற்காக அமைதியாக இருந்தாள்.
அகிலனுக்கும் அவளை பார்க்கும்போது கொஞ்சம் பாவமாகவே இருந்தது; இப்படி வேலைவாங்குகிறார்களே என்று. ஒரு கட்டத்தில் சோர்ந்துவிட்டாள்.
அவள் அத்தையிடம் சொல்லிக்கொண்டு அவள் அறைக்குச் செல்லும்போது, அவளைப் பார்த்தவண்ணம் ஒரு இளைஞன், அவள் பின்னாலேயே சென்றான்.
அவன் மாப்பிள்ளையின் சித்தப்பா பையன்.
சென்றவன் முதலில் அவளை இடித்துக்கொண்டு படியேறினான். கவிதாவிற்கு கோபம் தலைக்கேற, அவள் திட்டும் முன் அவன் சென்றுவிட்டான்.
அதை பார்த்த அகிலனுக்கு ஏதோ சந்தேகம் தோன்ற, அவனும் மெதுவாக அவர்கள் பின் சென்றான்.
அறைகள் இருந்த தளத்திற்கு முதலில் அவள் செல்ல, அந்த இளைஞன், அவளின் எதிர் திசையில் வந்துகொண்டிருந்தான்.
அப்போது தான் அகிலன் அந்த தளத்திற்கு வந்தான். இருவரும் அவன் பார்வையில் பட்டனர். ‘ஏதோ அந்த இளைஞன் செய்யப்போகிறான்’ என்று புரிந்தது. அகிலன் அவசரமாக நடந்தான்.
அந்த இளைஞன் கவிதாவை நெருங்கி; எதிரெதிரே இடிக்க வர, அவன் முற்றிலும் எதிர்பார்க்காதபோது அவனின் ஒரு கை சிறைபிடிக்கப்பட்டு, ‘பளார்’ என்று ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்தது.
அடிவாங்கியவன் அதிர்ந்து பார்க்க, அகிலன் அதிர்ந்தாலும்; கொஞ்சம் வியப்புடன் தள்ளி நின்று பார்த்தான்.
“என்ன… இடிக்க வரையா? ****” கோபத்தில் உச்சத்தில் இருந்த கவிதா கத்தினாள் அறைந்துவிட்டு.
அவள் அறைந்த நேரம், மாப்பிள்ளையின் சொந்தம் ஒருவர் அறையில் இருந்து வெளியே வர…
நடந்ததை பார்த்துவிட்டு அடிவாங்கியவனின் தாயை அழைத்துவிட்டார். அதற்குள் அடிவாங்கியவனும் கவிதாவின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள…
அந்த இரு பெண்களும் கோபத்துடன் கவிதாவிடம், “விடுடி அவன… நேத்து என்னன்னா, பெரிய இவ மாதிரி பெரியவங்க பேசறப்ப நடுல பேசின. இப்போ ஒரு பைய்யன கை நீட்டி அடிச்சுருக்க” என்று வசை பாட ஆரம்பித்தனர்.
அகிலன், ‘அங்கு செல்லலாமா?’ என சின்னதாக யோசனை செய்ய, அவன் மூளை… ‘நீ ஒன்றும் செய்யவேண்டாம் அவளே பார்த்துக்கொள்வாள்’ என்றது. புன்னகைத்துக்கொண்டே அங்கு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஓ! பையன் என்ன பண்ணாலும் தப்பில்ல. பொண்ணு அவனை அடிச்சா தப்பு?” நக்கலாக சிரித்துக்கொண்டே கேட்டாள் கவிதா.
“அப்படி என்ன பண்ணான்?” கேட்டார் மற்றொரு பெண்.
“ஹ்ம்ம்… தனியா போற பொண்ண இடிச்சிட்டு போறான். விட்டா, இவனமாதிரி ஆளுங்க என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க” அவனை பார்த்து முறைத்துக்கொண்டு சொல்ல…
“பைய்யன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க. அதுக்கு அடிப்பயா?” கொஞ்சமும் கூச்சமில்லாமல் அவன் அம்மா கேட்க… கேட்கவா வேண்டும் கவிதாவின் கோபத்தைப் பற்றி.
அதற்குள் மற்றொரு பெண், “அக்கா… அம்மா இல்லாம அப்பா, தம்பி கூட வளர்ந்த பொண்ணு. அதுதான் ஆம்பள மாதிரி வளந்துருக்கு போல” என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார்.
“அப்போ, பையன் என்ன தப்பு பண்ணாலும் சரி. அப்படித்தானே” என்ற கவிதா, அவன் அம்மா பக்கம் திரும்பி…
“எனக்கு ஒரு பையனை தெரியும். கொஞ்சம் வயசான பையன்தான், ஆனா உங்களுக்கு சரியான ஆள். அவரை கொஞ்சம் உங்கள இடிக்க சொல்றேன்… அதான் பையன் பண்ணா தப்பில்லையே. அந்த பையன் வேற யாரும் இல்ல. என் அப்பா தான். என்ன ஓகேவா?” புருவத்தை ஏற்றி ‘சொல்லவா’ என்பதுபோல் கேட்டாள்.
அவளின் பேச்சைக் கேட்டு பெண்கள் இருவரும் அருவருப்பில் காதை அடைந்துகொள்ள, அடிவாங்கியவன் அதிர, அகிலன் மட்டும் அவர்கள் கண்ணில்படாமல் சத்தமாகச் சிரித்தான்!