என்னுள் நீ வந்தாய் – 19B

என்னுள் நீ வந்தாய் – 19B

“ஏய். என்ன பேசற?” அந்த அம்மையார் அதிர்ந்து கேட்க, “நீங்கதான் சொன்னீங்க. பையன்னா அப்படித்தான் இருப்பாங்கனு. அப்புறம் என்ன?” என்றவுடன், “என்ன பேச்சு பேசற நீ?” என்று எகிறினான் அடிவாங்கியவன்.

“ஓ! உன் அம்மான்னா எரியுதோ? நீ இடிச்சப்ப எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு” என சாதாரணமாக சொல்லிவிட்டு, அவன் அம்மாவிடம், “பையன ஒழுங்கா வளர்க்க துப்பில்லை. இதுல நான் அம்மா இல்லாம வளர்ந்தேன்னு பேச வந்துட்டீங்க. ச்சை” என்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

‘என்ன பெண் இவள்?’ என்ற எண்ணமே அங்கிருந்த அனைவரின் மனதில். ஆனால் அகிலன் மனம் ஆச்சர்யத்துடன் ‘என்ன பெண் இவள்!’ என நினைத்தது.

அதன்பின் அவன் நிலை திண்டாட்டம் ஆனது. அவள் ‘எங்கே எங்கே’ என்று தேடித் தேடி அவளை சென்று பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கே புதிதாக இருந்தது அவன் செய்வதை நினைத்து. எதற்காக… எதை வேண்டி அவள் பின் செல்கிறோம் என்று தெரியவில்லை. ஆனால் சென்றான்.

அடுத்ததாக பந்தியில் அவளைப் பார்த்தான் அவள் அப்பாவுடன். அனைவரும் வர ஆரம்பிக்க, அந்த பெண்களும் வந்தனர்.

அவர்களைப் பார்த்தவுடன் கவிதா, கையை ஆட்டி ஆட்டி அவர்கள் கவனத்தைத் தன்னிடம் திருப்பினாள். அவர்கள் அவளைப் பார்க்க, ‘இது தான் என் அப்பா. ஓகேவா?’ என்று கைகள் அசைத்து சத்தம் வராமல் விஷமப் புன்னகையுடன் கேட்டாள்.

அவர்கள் என்ன நினைத்தார்களோ, அங்கிருந்து சென்று விட்டனர். அகிலனுக்கு சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை… அவள் செயல்களைப் பார்த்து.

பின் உணவு முடிந்து, அனைவரும் களைப்பாறும்போது, மாப்பிள்ளை சொந்த பந்தங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தாள் கவிதா. ‘இவள் எங்கே இங்கே?’ என்று அகிலன் நினைக்கும்போது, அந்த பெண்களிடம் சென்றாள்.

“என்னை மன்னிச்சிடுங்க. கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டேன். உங்க பையன் இடிச்சவுடனே, அதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணதும், கோவம் வந்துடுச்சு. அதான் அப்படி பேசிட்டேன்.

அப்பா திட்டினாரு. அதான் சாரி கேட்க வந்தேன். ப்ளீஸ்… பையன் தப்பு பண்ணா திருத்துங்க. அத என்கரேஜ் பண்ணாதீங்க” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அதிசயமாக பார்த்தான் அகிலன். அவளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவனை ஆட்டிவைத்தது.

தன் மீது தப்பில்லை என்றாலும் அப்பா சொன்னதற்காக மன்னிப்புக்கேட்டது, தவறை சுட்டிக்காட்டியது, தைரியமாக அனைத்தையும் எதிர்கொள்வது, அதுவும் அந்த மூக்கின் மேல் வரும் கோபம், என அனைத்தையும் ரசித்தான்.

இதுநாள் வரை எந்த பெண்ணும் வேண்டாம் என இருக்க, இவளின் செய்கைகள் அவனை வெகுவாகக் கவர்ந்தது. அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

அவளை பார்த்து சொல்லிவிட வேண்டும் என்று அவர்கள் இருந்த அறையின் பக்கம் சென்றான். ஆனால் அறை காலியாக இருந்தது.

‘கிளம்பிவிட்டாளா? கிளம்பும்முன் மன்னிப்புக் கேட்டுவிட்டு சென்றிருக்கிறாள்’ என புரிந்தது.

கண்டிப்பாக தனக்கும் தூரத்து சொந்தமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவன், மணமகனிடம் சென்று அவளை பற்றி மணமகளிடம் தெரிந்துகொள்ளச்சொன்னான்.

அப்போதுதான்… அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும் இரண்டு வாரத்தில் அவளை பெண் பார்க்க வருவதாகவும் சொன்னவுடன், ஏதோ ஒன்று தன்னை விட்டு விலகியதாக, தவறவிட்டதாக உணர்ந்தான்.

அதே மனநிலையில் சென்னைக்குத் திரும்பினான்.

லட்சுமி அவனுக்கு பெண் பார்க்க வேண்டும்… கல்யாணம் செய்யவேண்டும் என்று புலம்பியபோதெல்லாம் கவிதாவின் முகமே தெரிந்தது. ஒருவேளை அவளை பெண் பார்க்க வரப்போகும் பையன் வீட்டார் ‘சரிவரவில்லை’ என்று சொல்லிவிட்டால் நன்றாக இருக்குமே என நினைத்தான்.

அதே போல் நடந்தது. அவளை பெண் பார்க்க வந்த பையன் சரிவராது என்று சொல்லிவிட்டான். அவனை கவிதா தான் அப்படி சொல்லச்சொன்னாள் என்று பாவம் அகிலனுக்கு அப்போது தெரியுமா என்ன?

அந்த சம்பந்தம் பொருந்தவில்லை என்றதுமே, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துக்கொண்டான்.

துரிதமாக தன் பெற்றோரிடம் சொல்லவே, அவர்களுக்கு மிக்க சந்தோஷம். கல்யாணமே வேண்டாம் என்றவன் அவனே செய்துகொள்கிறேன் என்று சொல்லும்போது, எதையும் யோசிக்காமல் சரி என்றனர் அவன் பெற்றோர்.

கவிதாவை பெண் பார்த்தபோது, அவள் அவனிடம், ‘இது வேண்டாம்’ என்று சொல்லச்சொன்னதை பெரிதாக அவன் எடுத்துக்கொள்ளவில்லை.

‘தனக்கு முன்பு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததுபோல; அவளுக்கும் தற்போது விருப்பம் இல்லை’ என நினைத்து, ‘போகப் போக சரியாகிவிடும்’ என்று நினைத்துக்கொண்டான்.

மாப்பிள்ளை வீட்டில் பொருத்தம் பார்த்தபோது, ‘திருமணம் ஆறு மாதங்கள் கழித்தே நடக்க வேண்டும் இல்லையேல் இருவருக்கும் இடையில் பல மனஸ்தாபங்கள் ஏற்படும்; திருமணம் முறியும் வரைகூட செல்லக்கூடும்’ என்று ஜோதிடர் சொன்னதெல்லாம் அவன் கேட்டால் தானே.

அனைத்தையும் சரிகட்டிவிட்டு, நாற்பது நாட்களில் திருமணம் என்று அவனே முடிவெடுத்தும் விட்டான். லட்சுமி எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை.

திருமணத்திற்கான வேலைகளும் துரிதமாக நடந்தது. அப்போதுதான் கவிதா அவளுடைய கடந்தகாலத்தைச் சொல்லி, கல்யாணத்தை நிறுத்தச்சொன்னாள்.

அவன் மனது சுக்குநூறானது.

‘அவளுடனான வாழ்க்கை’ என பல கனவுகளுடன் இருந்தவன், அவளுடைய கடந்தகாலத்தை கேட்டவுடன், அதை அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, அவளுக்கு உதவ நினைத்தான்.

ஆனால் அஜய் அவளை திருமணம் செய்துகொள்கிறாயா? என்று கேட்டபோது, முதலில் மறுத்தான். அவன் வற்புறுத்திக்கேட்டபோது, மறுக்கமுடியாமல் சரி என்றான்.

அதற்குப் பின், நடந்ததுதான் நமக்கு தெரியுமே!

அவள் மனது எப்போதாவது மாறும் என அவன் நினைத்தது போலவே நடந்தது.

இதோ இப்போது அவள் கெஸ்ட் ஹவுசில், அவன்!

அவளை விட்டு, இந்த சில நாட்கள் பிரிந்திருந்தபோது வலித்த வலியை விட, அவள் தன்னை பார்க்க வந்து, அதுமுடியாமல் போக… இப்போது எங்கிருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை என்று நினைக்கும்போது மனம் இன்னமும் பாரமானது.

ஆனால் கண்டிப்பாக வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையும் இருந்தது.

சாப்பிடாமல் இருந்தவனை பார்த்து… தாமஸ், லயா இருவரும் வலுக்கட்டாயமாக சாப்பிட அழைத்தனர்.

“அந்த பொண்ணு தான் ஒழுங்கா சாப்பிடாம இருந்துச்சு. நீங்களுமா?” குறைபட்டுக்கொண்டார் தாமஸ்.

“ஒழுங்கா சாப்பிடலையா? எப்பவுமே அவ சொல்பேச்சு கேட்க மாட்டா…” என்று தாமஸிடம் சொன்னபோது… அவர், “ஆமாம்ப்பா. ஆனா அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியாம இருந்துச்சு. அதுனால சாப்பிடவே பிடிக்கலன்னு சொன்னா” அவர் சொன்னதுதான் தாமதம்.

“என்னாச்சு அவளுக்கு?” பதட்டத்துடன் கேட்டான் அகிலன். அதற்கு அவர், “காய்ச்சல்ன்னு சொன்னா” என்றார்.

உடம்பு முடியாமல் எங்கு சென்றிருப்பாள்? என யோசித்தபோது, ஒருவேளை மருத்துவமனைக்கு சென்றிருப்பாளோ! என்று தோன்றியது.

காய்ச்சலுக்கு சென்றால் உடனே வந்துவிடலாமே, ஒரு நாள் தேவையில்லையே என்றும் நினைத்தான். தலை சுற்றுவதுபோல இருந்தது. ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

தாமஸ் மற்றும் லயாவிடம்… அகிலன் ‘தான் அன்றிரவு அங்கு தங்கலாமா? ஒருவேளை அவள் வந்தால் பார்த்துவிடலாமே’ என்று ஆசையில் கேட்டான். அவர்களும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

‘வருவாளா… எப்போது?’ என்று நினைத்து நினைத்து தூக்கம் போனதுமட்டுமே மிச்சம்… அவள் நினைவுகளுடனே அந்த இரவை கழித்தான்.

அடுத்தநாள் காலை.

கவிதா மருத்துவமனையில் இருந்து புறப்பட்டாள். கொஞ்சம் தெம்பு வந்தது போல இருந்தது. மனதில் ஒன்றே ஒன்று தான் நினைத்துக்கொண்டாள்.

‘லயாவிடம் தெளிவாக பேசவேண்டும். ஒருவேளை இருவரும் விரும்புகிறார்கள் என்றால் தான் தெல்லையாக இருக்கக்கூடாது.

தனக்காக அவன் நேரம் கொடுத்தான். அதை தான் தவறவிட்டுவிட்டோம் என நினைத்து ஒதுங்கி விடவேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு, கெஸ்ட் ஹவுஸ் வந்தடைந்தாள்.

அதே நேரம் தாமஸ் அகிலனுக்கு காலை காபி கொடுத்துக்கொண்டிருக்கும்போது, வாசல் மணி அடித்தது.

அதை கேட்டவுடன் அகிலனின் மனது அதை விட சத்தமாக அடித்துக்கொண்டது.

அது புரிந்த தாமஸ், அவனை தட்டிக்கொடுத்துவிட்டு கதவைத் திறக்கச்சென்றார்.

நெஞ்சு பிளந்து இதயம் வெளியே விழுந்துவிடும் என்ற அளவிற்கு துடித்தது… அவளாக இருக்கவேண்டுமே என நினைத்து.

கொஞ்சம் தொலைவில் தாமஸின் குரல்… “எங்கம்மா போன? பயந்தே போய்ட்டோம்” அதைக் கேட்டவுடன், படபடத்த அகிலனின் மனது இன்னமும் படபடத்தது. அவளே தான்… அவளைப் பார்க்கப்போகிறோம் என.

“உடம்பு முடியலண்ணா. ஹாஸ்பிடல் போனேன். எனக்கு சூடா ஒரு பிளாக் காபி. ரொம்ப டையர்ட்’டா இருக்கு. பத்து நிமிஷம் வந்துடறேன்” என்றாள்.

‘உடம்பு முடியாமல் மருத்துமனையில் ஒரு நாள் முழுவதும் இருந்திருக்கிறாள்’ என்று தெரிந்தவுடன் அவன் கண்கள் கட்டுப்பாடின்றி கலங்கியது.

கதவருகே வந்தவள், உள்ளே பார்க்க, அங்கே அகிலன் நின்றுகொண்டிருந்தான்! தவிப்புடன்!

அவளால் சுத்தமாக நம்பமுடியவில்லை. அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை. இப்போது அவள் இதயம் படபடத்தது. அவன் கண்களில் கண்ணீரைப் பார்த்தவுடன் அவள் கண்களிலும் கண்ணீர்.

முன்பொருமுறை அஜய்யிடம் சொன்னாள்.

மனதில் நிறைந்தவரை, பலநாள் காணமுடியாமல்… காலம் கழித்துப் பார்க்கும்போது, சந்தோஷத்தில் தொண்டை அடைக்கும்; அழுகை வரும்; கோபம் வரும்; கைகால்கள் செயலிழந்து விடும்.

அதெல்லாம் இப்போது உணர்ந்தாள். அவனும் அதையே உணர்ந்தான். அவளைப் பார்த்துக் கலங்கிய கண்களுடன், அவளை நெருங்கினான்!

ஆணின் அழகு ஆளு(ண்)மையில் மட்டுமில்லை… அன்பால் அவன் சிந்தும் கண்ணீரும் அழகே!’

12
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved