என்னுள் நீ வந்தாய் – 24

என்னுள் நீ வந்தாய் – 24

இரவு எட்டும் நேரத்தில் ப்ரியாவும் கவிதாவும் வீடு வந்தனர். அப்போது அகிலனும் அவன் அப்பாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

ப்ரியா அவளுக்கு எடுத்த உடைகள் அனைத்தையும் காட்டிக்கொண்டிருந்தாள். அண்ணியின் புகழையும் கொஞ்சம் பாடினாள்.

அகிலன் எதிலும் கலந்துகொள்ளாமல் அமைதியாக இருந்தான். கவிதாவையும் ப்ரியாவையும் அப்படியே உட்கார்ந்து சாப்பிட சொன்னார் லட்சுமி.

இருவரும் உட்கார, அகிலன் சாப்பிட்டு முடித்துவிட்டு வேலை இருப்பதாக சொல்லி மேலே சென்றுவிட்டான். கவிதாவிற்கு அவன் அவளை பார்க்கவில்லை என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இருந்தும் புரிந்துகொண்டாள் அவன் நிலைமையை.

கவிதா சாப்பிட்டவுடன், சமையலறைக்கு அழைத்தார் லட்சுமி.

“கவிதா… உங்க ரெண்டுபேரையும் இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு” வேலை செய்துகொண்டே அவள் முகம் பாராமல் சொன்னார். அவர் சொல்லவருவது முதலில் புரியாமல் போனாலும், அதன் பொருள் புரிந்தவுடன் புன்னகைத்தாள் கவிதா.

“ரொம்ப வருஷம் கழிச்சி இன்னைக்கு அவன் பாடிருக்கான். இன்னமும் பானுக்கு நடந்ததை மறக்க முடியாம தான் இருக்கான். ஒரு அம்மாவா, பாட்டு சொல்லிகுடுத்த குருவா… அவன் பாடாதது எனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தது. அப்படி இருந்தவன் இன்னைக்கு பாடினது உன்னாலதான். மனசுக்கு நிம்மதியா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் எந்த பிரச்சனையும் இல்லாம இப்படியே சந்தோஷமா இருங்கணும்”

அவர் சொன்னவுடன் இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை கவிதாவிற்கு.

“உங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஜோசியர்ட்ட உங்க ஜாதகம் காட்டினப்ப, ஆறு மாசம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணனும்னு சொன்னாரு. இவன் அதெல்லாம் கேட்காம, சீக்கரம் நடக்கணும்னு சொல்லிட்டான்.

அதுனாலவோ என்னவோ உங்க வாழ்க்கை சந்தோஷமா இல்லைனு எனக்கு அடிக்கடி தோணுச்சு” சொன்னவர் கவிதாவின் முகத்தைப் பார்த்தார்.

அவள் அமைதியாக அவரைப்பார்க்க, “இப்போ ஆடி மாசம் நடக்குது. இது ஆடில வர்ற கோகுலாஷ்டமி. உங்களுக்கு தலை ஆடி. நம்ம சைட்’ல ஆடிமாசத்துக்கு அம்மா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் ஊர்ல இல்லனு நான் பெருசா எடுத்துக்கல. ஆனா இப்போ…” கொஞ்சம் நிறுத்தினார்.

கவிதாவுக்குப் புரிந்துவிட்டது. “இன்னும் எத்தனை நாள் அத்த… ஆடி மாசம் முடிய?” நேராக விஷயத்தைக் கேட்டாள்.

“இன்னும் ரெண்டு நாள். இதை அவன்கிட்ட சொன்னா, பழைய பஞ்சாங்கம்ன்னு கண்டுக்கமாட்டான். எனக்கு நீங்க காலம் முழுக்க சந்தோஷமா இருங்கணும்” என அவர் தயங்க, “நான் பார்த்துக்கறேன் அத்த” புன்னகையுடன் சொல்லிவிட்டு சென்றாள் அவர்கள் அறைக்கு.

அங்கே அவன் அமைதியாக விண்டோ சீட்’டில் உட்கார்ந்திருந்தான் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டு. உள்ளே வந்தவள், அவனைப் பார்க்க… அவன் சரியில்லை என்று புரிந்தது.

பால்கனி கதவு… அவள் மாலை திரையிட்டு மூடியது அப்படியே இருந்தது. கவிதா வந்தது தெரிந்தவுடன், “என்ன பேபி… எல்லாம் தெரிஞ்சுட்டயா?” அவளை பார்க்காமல் வெளியே பார்த்துக்கொண்டு கேட்டான்.

குரலில் எப்போதுமிருக்கும் துள்ளல் இல்லை.

கண்டிப்பாக பானுவின் ஞாபகம் வந்திருக்கும் என புரிந்து, அவனை சமாதானப்படுத்த பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“அகில்” என்று அவள் ஆரம்பிக்க, அவள் மடியில் முகம் புதைத்துக்கொண்டவன் குரல் கரகரத்தது.

“பானு இருந்திருந்தா எவ்ளோ சந்தோஷப்பட்டிருப்பா தெரியுமா? நம்ம ரெண்டு பேரையும் பார்த்து. அவளும் கல்யாணம் அது இதுன்னு சந்தோஷமா இருந்துருப்பா. எல்லாம் என்னோட கோவத்தால…”

அவனை ஆதரவாக தட்டிக்கொடுத்தாள். அவன் முடியை கோதிக்கொண்டு, “அகில். லைஃப் இஸ் சோ அன்செர்டன் (Life is so uncertain). எது நடக்கணும்ன்னு இருக்கோ அது நடக்கும். அவங்க இப்போ இல்லனாலும், அவங்களோட விஷஸ் நமக்கு எப்பவுமே இருக்கும்”

“உன்கிட்ட அன்னைக்கு கோவமா நடந்துகிட்டப்பக்கூட இது தான் பேபி ஞாபகம் வந்துச்சு. என்னோட கோவத்தால உன்ன ஹர்ட் பண்ணிட்டேன்… பானு சொல்லிட்டே இருப்பா. என் கோவம் தான் என்னோட எதிரின்னு.

எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா?! உன்னைபோலவே ரொம்ப தைரியசாலி. எல்லாத்தையும் தனியா மேனேஜ் பண்ணுவா. நான் மட்டும் அன்னைக்கு சண்டைக்கு நிக்காம இருந்திருந்தேன்னா, அவ இந்நேரம் உயிரோட இருந்திருப்பா”

என்ன சமாதானம் சொன்னாலும் சில இழப்புகள் ஈடு செய்யமுடியாதவை என்று அவளுக்குத் தெரியாதா என்ன? அவன் தன்னிலை அடையும் வரை பொறுமையாக இருந்தாள்.

சில நிமிடங்கள் அமைதிக்குப் பின், “ஆமா… நீ பால்கனி போகவே இல்லையா வந்ததுலயிருந்து?” அவன் மனதை வேறு பக்கம் திருப்ப முயற்சித்தாள்.

அவனும் கொஞ்சம் மீண்டிருந்தான், இப்படியே இருந்தால் இவளும் வருந்துவாள் என்று நினைத்து…

“இல்ல டா. குளிச்சுட்டு கீழ வந்ததுக்கப்புறம் மேல வரவே இல்ல” என்று சொன்னவுடன் இருவருக்கும் சமையலறையில் நடந்தது நினைவுக்கு வர, மடியில் இருந்தவாறே திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான்.

அவள் வெட்கம் கலந்த புன்னகையுடன் அவனைப் பார்த்தாள். மாலை கட்டியிருந்த அதே புடவை, பூ என்று இருந்தாள்.

புன்னகைத்துக்கொண்டே அவன் கண்கள், அவள் முகத்தில் ஆரம்பித்து அளவிட்டுக்கொண்டே இறங்க, கண்ணில் கடைசியாகப் பட்டது அவளின் இடை.

அதை அவன் மென்மையாக வருட, மாலை நடந்தது போல் மீண்டும் அவளுக்கு சிலிர்த்தது.

அவன் மயக்கும் புன்னகையுடன், புருவங்கள் உயர்த்தி, “பால்கனி பத்தி எதுக்கு கேட்ட பேபி…”, மனதில் அவள் துபாயில் கூறிய அன்யோன்யமான வாழ்க்கை நினைவிற்கு வந்தது.

கஷ்டப்பட்டு தன்னிலைக்கு வந்து, “நீயே பார்த்தா தெரியப்போகுது” சொன்னவள் வார்த்தைகள் சத்தமாக வர மறுத்தது.

“அப்படியா?” யோசனையுடன் புன்னகைத்துக்கொண்டே எழுந்தான். “அப்பா” என்றாகிவிட்டது கவிதாவிற்கு.

அவன் ஆர்வமாகக் கதவைத்திறக்க, கண்கள் தானாக விரிந்தது. பின்னே புன்னகைத்துக்கொண்டே கவிதா பக்கத்தில் நின்றாள்.

“இது எப்போ பேபி பண்ண…?” அங்கே இருந்த மர ஊஞ்சலை பார்த்துக்கொண்டே கேட்டான்.

அவள் ஊஞ்சலை பார்த்து, “மதியமே வந்துடுச்சு. நீ துபாய் போன கொஞ்ச நாள்லயே ஆர்டர் பண்ணேன். இன்னிக்கி டெலிவரி குடுக்க சொன்னேன். மேல எடுத்துட்டு வர்றதுக்குள்ள…சப்பா… மாமா கூடவே இருந்தார் மேல ஏத்திட்டு வர்றவரை” என நீளமாக சொல்லி முடித்தாள்.

அவள் பேசுவதையே கண்கள் விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் பார்ப்பதை உணர்ந்து, அறைக்குள் அவள் செல்ல நினைக்க… அவள் உணரும்முன், அவளை இடையோடு பற்றி தூக்கியவண்ணம், ஊஞ்சலில் உட்கார்ந்தான். அவன் மடியில் அவள்.

அவள் கழுத்தில் அவனின் மூச்சுக்காற்று பட, அவன் இதழ்கள், சின்னச் சின்னதாக முத்தச்சாரல் புரிய ஆரம்பித்தது.

பின் அவள் காதருகே, “இதையெல்லாம் தான் கற்பனை பண்ணயா பேபி” சரசமாக கேட்டான். ‘ஆம்’ என்று சொல்லமுடியாமல், வெட்கம் அவளை ஆட்கொண்டது.

அவன் முகம் பார்க்க அவளை திருப்பியவன், “பேபி… வெட்கப்படறயா…?” குறும்போடு கேட்க, வெட்கம் கலந்த முறைப்புடன் பார்த்தாள்.

அவள் வைத்திருந்த ஜாதிமுல்லை, கொஞ்சமே கொஞ்சம் வாசத்தை மீதம் வைத்திருந்தது. அதுவே போதுமானதாக இருந்தது அவனுக்கு. முகம் முழுதும் மீண்டும் சின்னச்சின்ன முத்தங்கள் பதித்தான்.

அவன் நிறுத்திய நேரம், அவன் கண்களைப் பார்த்தாள். கண்களே சிரித்தது. மெதுவாக அவன் கண்களில் முத்தமிட்டாள். ஒரு சில வினாடிகள் அவன் முகம் பார்த்திருக்க… அவள் இதழ்களை அவனிதழோடு இணைத்தாள்.

சில மணித்துளிகள் கடந்தது அந்த முத்தப்போர்… லட்சுமி சொன்ன ஆடிமாச சமாச்சாரம் நினைவிற்கு வர, அவசரமாகப் போர் நிறுத்தம் செய்தாள்.

அவன் ‘என்ன ஆயிற்று’ என்பது போல் பார்க்க, “தண்ணி… தாகம்… எடுக்குது” என்றாள் திக்கித்திணறி.

அவன் மனதிலோ ‘தாகமா? இப்போவா?’ என நினைக்கும்போதே அவசரமாக உள்ளே சென்றாள் தன்னை முதலில் தன்னிலை படுத்திக்கொள்ள. சில நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தாள்.

அவன் சாவகாசமாக கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தான் இடத்தை முழுதாக ஆக்ரமித்துக்கொண்டு. அவள் முறைத்தாள். அவன் தோள்களை குலுக்கினான்.

‘உனக்கு சளைத்தவள் அல்ல நான்’ என்று அவன் கால்களுக்கு இடையில் உட்கார்ந்து அவன் மேல் சாய்ந்துகொண்டாள்.

அவன் புன்னகைத்துக்கொண்டே அவளை இடையோடு அணைத்துக்கொண்டு… “சொல்லு பேபி என்னாச்சு? ஏன் திடீர்னு உள்ள போன” சரியாக அவளைப் புரிந்துகொண்டு கேட்டான்.

“அது… எனக்கு… உன் வாய்ஸ்ல பாட்டு கேட்கணும்போல இருந்துச்சு அதான்” என்றாள் ஆடி விஷயத்தை சொல்லாமல்.

‘நம்பும்படி இல்லையே’ என்று நினைத்தாலும்… அவள் கேட்டு எது முடியாது என்று சொல்லியிருக்கிறான்.

“சரி சொல்லு என்ன பாட்டு பாடணும்?” அவள் கழுத்தில் முகம் வைத்துக்கொண்டு கேட்க, அவள் மொபைலை எடுத்தாள். அதில் அவளின் செல்ஃபி ஒன்று தெரிய, “செல்ஃபி பிடிக்குமா?” அவன் கேட்டான்.

“போட்டோ எடுக்கவே பிடிக்காது. ஆனா இதெல்லாம் நீ துபாய் போனதுக்கப்புறம் மௌன ராகம் பார்த்தப்ப எடுத்தது” என்றாள் அவனைப் பார்த்து.

அவன் புரியாமல் “எதுக்கு?!” என கேட்க, அவனை முறைத்து… தலையில் குட்டினாள்.

“ஆஹ்” என அவன் புரியாமல் கத்த… “பொண்ணு பார்க்க வந்தப்ப நீ தானே சொன்ன” என்றாள் கண்களில் போலியான கோபத்துடன்.

அவன் அன்று நடந்ததை யோசித்து, பின் காரணம் நினைவிற்கு வர, அதை மறந்ததை நினைத்து “ஈஈஈ” என பற்களைக் காட்டி அசடு வழிந்தான். அவள் தலையில் அடித்துக்கொண்டு மொபைலில் யேசுதாஸ் பாடல்கள் என சர்ச் செய்தாள்.

பின்… ‘எந்தன் நெஞ்சில் நீங்காத’ பாடலை அவள் சொல்ல… பாடல் வரிகளைப் பார்த்து மெதுவாக அவள் கேட்கும்படியாகப் பாடினான்.

பனியில் நனையும் மார்கழிப் பூவே… எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே….’ என அவன் பாடிமுடிக்க… அடுத்தவரி அவன் பாடும்முன்…

அவள், ‘உனக்கென பிறந்தவள் நானா…. நிலவுக்குத் துணை இந்த வானா….’ என்று நானா வானா’வை இழுத்துப் பாட… அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“ஹலோ என்ன சிரிப்பு? female வாய்ஸ் நீ பாடக்கூடாது. நான் தான் பாடணும்” என தொண்டையைச் செருமிக்கொண்டு அவனைப் பார்த்து, ‘எப்படி என் வாய்ஸ்?’ என்பது போல் பார்த்தாள் கொஞ்சமாக உதட்டை கடித்துப் புருவத்தை ஏற்றி இறக்கி.

அதை பார்த்தவன் மறுபடியும் சரசமாக, “இதுக்கு நான் ஒரு பதில் பாட்டு பாடவா பேபி” என நிறுத்தி…

சங்கீதம் பாட்டிலா… நீ பேசும் பேச்சிலா… என் ஜீவன் என்னிலா… உன் பார்வை தன்னிலா…’ என்றவுடன் அவனை பார்த்து முறைத்தாள்.

“நீ பேசினாலே எனக்கு பாடறமாதிரி தான் பேபி… போதுமா! இப்போ இந்த சப்தஸ்வரங்கள் தேவையா?” என்றபடி மறுபடியும் அவள் கழுத்தில் முற்றுகையிட்டான்.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற, அவள் தடுமாற, ‘இவனிடம் உண்மையை சொல்லிவிட வேண்டியதுதான் இல்லையேல் விடமாட்டான்’ என யோசித்து “அகி…” என்றாள் அவன் கைகளுடன் தன் கையைக் கோர்த்துக்கொண்டு.

“ஹ்ம்ம் பேபி…” என்றவனிடம் இப்போது சத்தம் வரவில்லை. கிறக்கமாகப் பதில் வந்தது. அவன் தான் முக்கியமான வேலையில் இருக்கிறானே…

“இது ஆடி மாசம் அகி… எதுவும் பண்ணக்கூடாது. இன்னும் ரெண்டே நாள் தான்” என்று சொன்னவுடன், இதுவரை வெளிவராத குரல் வெளிப்பட்டது. “வாட்ட்ட்” என்று கத்திவிட்டான்.

“ஹ்ம்ம்… அத்த சொன்னாங்க. ப்ளீஸ் அகி” கெஞ்சும் பார்வையில் கேட்டாள்.

“எங்கயிருந்துதான் எனக்கு மட்டும் டிசைன் டிசைன்’னா ஆப்பு வருதோ. போ பேபி. அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

மறுபடியும் அவளை அவன் முத்தமழையில் நனைக்க… அவள் மீண்டும் தன்னிலை மறக்கும் முன்….

“அகி…. ஆடி” என்றாள்.

“அடப் போடி” என்றவன் அவன் வேலையில் உம்மரமாக…

“ஏய் கேடி” என்று நெளிந்தாள்.

“ப்ச்… இப்போ என்ன இங்க உங்களில் யார் அடுத்த TR ஷோ வா நடக்குது பேபி? ஆடியாவது ஆவணியாவது” என்றவன் மறுபடியும் வேலையில் இறங்க… அவள் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டாள் ‘நான் சொல்லி நீ கேட்கமாட்டாயா’ என்பதுபோல்.

அதை புரிந்துகொண்டவன்… “சரி… கோவப்படாத. இன்னும் ரெண்டு நாள் தானே… ஹ்ம்ம்! அதுக்குள்ள அடுத்து என்ன வரப்போகுதோ” என பெருமூச்சு விட்டு… “வா நம்ம அந்தாக்ஷரி விளையாடலாம்” சலித்துக்கொண்டு சொன்னான், அவள் கழுத்தில் மீண்டும் முகத்தை வைத்து.

அவனின் செய்கையைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனும் பதிலுக்கு அழகாக புன்னகைத்தான்.

ஆனால் மனது அவளை நினைத்து ஆச்சர்யப்பட்டது. ஆசை ஆசையாக இருந்தவள், தன் அம்மா சொன்ன காரணத்திற்காக, அனைத்தையும் புறம் தள்ளியதை நினைத்து பெருமைப்பட்டது.

நீலம் கொண்ட கண்ணும்… நேசம் கொண்ட நெஞ்சும்… காலம்தோரும் என்னைச் சேரும் கண்மணி… பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்… மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி….

காற்றில் வாங்கும் மூச்சிலும்… கன்னி பேசும் பேச்சிலும்… நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது… நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே… நீ இன்றி ஏது பூ வைத்த மானே… இதயம் முழுதும் எனது வசம்

அவளுக்காகவே தேர்வுசெய்து பாடலை பட ஆரம்பித்தான்……!

இருமனங்கள் இணைந்த இல்லறம் இனிதே இயற்றப்பட்டது!!!

9
3
Subscribe
Notify of
2 Comments
Inline Feedbacks
View all comments
Pappu Divya
2 years ago

Excellent episode.kathal sotta sotta 😍😍😍

error: Content is protected !! ©All Rights Reserved
2
0
Would love your thoughts, please comment.x
()
x