என்னுள் நீ வந்தாய் – 25A

என்னுள் நீ வந்தாய் – 25A (Final 1)

ஆறு வருடங்களுக்குப் பிறகு:

அந்த அழகிய மாலை பொழுதில் மால்தீவ்ஸ்’ஸில் உள்ள ரிசார்ட்டில், கடலை பார்த்தவண்ணம் பீச் சேர்’ரில் சாய்ந்திருந்தான் அஜய்.

கடல் சத்தமிட்டு அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்தவன் மனம் முழுவதும் அமைதியே நிறைந்திருந்தது.

அந்த அமைதிக்குக் காரணம், ஜெனி… ‘தன் வாழ்வு அவ்வளவுதான் முடிந்தது’ என நினைத்திருந்தவனின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டவள். இப்போது அவனருகில்…

இப்போது நினைத்தாலும் வியப்பே… எப்படி கவிதாவின் நினைவுகள் மறையப்பட்டு, ஜெனி தன்னை ஆட்கொண்டாள் என.

———அன்று———

அன்று ஜெனி தன் காதலை பற்றிப் பேசிச்சென்றபின், வெகுநேரம் அங்கேயே இருந்தான்.

அவன் மனது அப்படியே பள்ளி காலத்துக்கு சென்றது. அப்போதும் ஜெனியை பார்த்துள்ளான். ஆனால் வேறுவிதமாக பார்க்கத் தோன்றியதில்லை. அதேதான் கல்லூரியிலும்.

அவ்வளவு ஏன்… அவள் தன் காதலை பற்றிப் பேசி சென்றபின்கூட, அவளை வேறெப்படியும் பார்க்கத் தோன்றவிடவில்லை அவன் மனம்.

கவிதாவின் நினைவுகளுடன் மறுபடியும் துபாய் சென்றான்.

செல்லும்முன் தன் பெற்றோரிடம் கறாராக, அனிதாவின் புகுந்தவீட்டில் இருந்து பணம் வாங்கக்கூடாது தொழிலை முன் வைத்து…

இத்தனைக் காலம், பலவித சந்தோஷங்களையும் துறந்து, எதற்காக துபாயில் இருந்தேன்? பணம் சம்பாதிக்கத்தானே.

இன்னும் மூன்றே வருடங்கள்… தேவையான பணத்துடன் வருவேன்! வந்து, சரிந்து போயுள்ள தொழிலை மீட்டெடுப்பேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தான்.

அவனின் இலக்கு ‘பணம்’ என்று மனதை வேறு எங்கும் அலையவிடாமல், இரவு பகலாக வேலை செய்தான். அதற்கான பலனும் கிட்டியது. மூன்று வருடங்களில் தேவையான பணத்துடன் திருச்சிக்கு திரும்பியிருந்தான்.

அடுத்த இரண்டு வருடம்… முழுவீச்சில் அப்பாவின் தொழிலில் இறங்கினான். அவன் அப்பா அனுபவத்தின் துணையுடன், அவர்களுக்கு முன்பே இருந்த நற்பெயரின் துணையுடன், இரண்டு வருடங்களில் பைனான்ஸ் தொழிலை மீட்டெடுத்தான்.

கவிதாவின் நினைவுகள் முற்றிலுமாக மறைந்திருந்தது என்று சொல்லமுடியாது. எப்போதாவது அருந்தும் மது அவளின் நினைவுகளை நினைவூட்டியது.

சிலசமயம் வீட்டில், ‘முப்பதிற்கும் மேல் வயதாகிவிட்டதே’ என்று சொல்லும்போது, அவள் ஞாபகம் வரும். அவ்வளவே.

அனிதாவின் மாமனார் உடல்நலக் குறைவால் இயற்கை எய்துவிட, அவள் கணவன் தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வதால், அவளுக்கும் அவளின் மாமியாருக்கும் துணையாக பெரும்பாலும் அஜய்யே இருந்தான்.

அவன் தன் மனதை இலகுவாக்க, துயரங்கள் மறக்க, நாடுவது… அனிதாவின் குழந்தையையே. அந்த மழலை பேச்சில் அனைத்தையும் மறந்துவிடுவான்.

அப்படியாக அவன் வாழ்க்கை சென்று கொண்டிருந்தபோது, ஒரு நாள் தற்செயலாக ஜெனியை பார்க்க நேர்ந்தது. அனிதாவின் குழந்தை படிக்கும் பள்ளியில், தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தாள்.

அந்த பள்ளியின் உரிமத்தைப் பெற்றிருந்த ஜெனியின் தந்தை, அதை தன் கல்வி குழுமத்தின் கீழ் கொண்டுவந்திருந்தார். அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஜெனியிடம் அளித்திருந்தார்.

அவளும் இத்தனை நாட்களாக வெளிநாட்டில் படித்துவிட்டு வந்திருந்ததால், அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.

முதலில் அவளை அங்கே பார்த்த அஜய் புன்னகைத்தான். அவளும் புன்னகைத்தாள். கல்லூரியில் எப்படி இருந்தாளோ, அப்படியே இருந்தாள். இப்போது அந்த பொருப்பு இன்னமும் அவளை மெருகேற்றியிருந்தது.

இருவரும் புன்னகையை பரிமாறிக்கொள்ள, அதற்கு மேல் என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அவளும் எதுவும் பேச முனையவில்லை.

ஆனால் அவனுக்குள் ஒரு நெருடல். அவளுக்கென்று வாழ்க்கை அமைத்துக்கொண்டாளா? என நினைத்து.

தன் நண்பர்கள் துணையுடன் அது குறித்து தெரிந்து கொண்டபோது, அதிர்ந்தான். அவளும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

அடுத்த ஓரிரு நாட்கள் அவன் மனதை அரித்தெடுத்தது, ஜெனியை பற்றி அவனுள் எழுந்த கேள்விகள்.

‘ஏன் இப்படி செய்யவேண்டும்?’ என்று கோபம் வந்தாலும், ‘ஒருவேளை தனக்காக இன்னமும் காத்திருக்கிறாளா?’ என நினைத்தபோது… அவனையும் அறியாமல் அவன் மனதின் மூலையில் ஒரு சின்ன சந்தோஷம்.

அனிதாவிடம் அவளைப் பற்றி கேட்டான். அவளும் அவன் நினைத்ததை தான் சொன்னாள். ஜெனியின் பெற்றோர் மிகவும் வருந்துவதாகவும் சொன்னாள். அவளுக்கும் வயது முப்பதை எட்டியிருந்தது.

“எதற்காக இதெல்லாம் கேட்கிறாய்?” என்று அனிதா கேட்டபோது, அவளிடம் மறைக்க தோன்றாமல், ஜெனி குறித்த உண்மையை பகிர்ந்துகொண்டான்.

அனிதா அதிர்ந்தாள். அவளுக்கும் ஜெனியின் காதல் பற்றித் தெரியாது.

அடுத்தநாள் ஜெனியை சந்திக்க சென்றான் அஜய்.

எடுத்தயெடுப்பில், “எதுக்காக இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க? நான் தான் சொன்னேனே… என்னால இதெல்லாம் ஏத்துக்கமுடியாதுன்னு” என்றான் கொஞ்சம் கோபமாக.

அவள் அமைதியாக, “அஜய்! உன்னை தொல்லை பண்ணக்கூடாதுன்னு சொல்ல தான் உனக்கு உரிமை இருக்கு. என் கல்யாணத்தை பத்தி பேச உனக்கு நான் உரிமை தரல. உனக்கு உரிமையும் இல்ல. அது என்னோட தனிப்பட்ட விஷயம்!” நிதானமாக பதிலளித்தாள்.

“அந்த தனிப்பட்ட விஷயத்துல நான் இருக்கேன். அதான் கேட்கறேன்” என்றான் விடாமல்.

“உனக்கும் எனக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருந்தா… நீ என்னை கேள்வி கேட்கலாம். நமக்குள்ள அப்படி ஒன்னும் இல்ல” அமைதியாக பதில் வந்தது.

கோபத்துடன் எழுந்து சென்று விட்டான்.

இப்படியே சில நாட்கள் கழிந்தன.

அனிதா தன் குழந்தையை பள்ளியில் விட்டுக் கூட்டிவரும் பணியை அஐய்யை செய்யவைத்தாள். அஜய்யின் தற்போதைய நிலைமை தன் பெற்றோரால் தான் என்ற குற்றவுணர்வு அனிதாவின் கணவனுக்கு அவ்வப்போது வருவதால், அவன் இதற்கு தடையாக இல்லை.

முதலில் அஜய் முறைத்தான் ஜெனியை பார்க்கும்போது. பின் அது புன்னகையானது. பின் எண்கள் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு சென்றது.

எண்கள் பகிர்ந்துகொண்டார்களே தவிர, அதிகமாக பேசவில்லை. எப்போதாவது குறுஞ்செய்தி பரிமாற்றமே.

அப்படி இருக்க ஒரு நாள் ஜெனியிடம் இருந்து அழைப்பு வர, அதை எடுத்தவனிடம் ஜெனி, “அஜய்! ஒரு சின்ன ஹெல்ப். ஃபிரீ’யா நீ?” எனக் கேட்க,

“என்னன்னு சொல்லு” கேட்டான் அவளிடம்.

“ஸ்கூல்’ல லேப் அப்ரூவல் கொஞ்சம் ப்ராப்ளமா இருக்கு. மினிஸ்டர் பார்த்து பேச இன்னைக்கு அப்பாயிண்ட்மண்ட் கிடைச்சிருக்கு. அவரப்பத்தி உனக்கு தெரியுமே. அப்பா வேற ஊர்ல இல்ல. தனியா போய் பேச கொஞ்சம் யோசனையா இருக்கு. ஸ்கூல்’ல சயின்ஸ் exhibition நடக்கறதுனால ப்ரின்ஸிபல் இல்ல விபி கூட்டிட்டு போறது கஷ்டம். அதுதான் உன்னால வர முடியுமான்னு” கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டாள்.

முன்பு தன்னிடம், ‘உனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னவள், தற்போது தன்னிடம் எப்படி உரிமை எடுத்துக்கொள்ளலாம் என்ற வீண் கோபம் அஜய்க்கு தலைத்தூக்க “எனக்கு வேலை இருக்கு. சாரி” சொல்லிவிட்டு வெடுக்கென துண்டித்துவிட்டான்.

‘அதுதான்… கொஞ்சம் பேச ஆரம்பிச்ச உடனே அது இதுன்னு கேட்க வேண்டியது’ என நினைத்து ஜெனி மேல் கோவம் வந்தது.

தன்னை வேறு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள தான் நினைத்தான்… ஆனாலும் ஒரு புறம் மனம் அவளை நினைக்கத் தவறவில்லை.

‘மினிஸ்டர்னு சொன்னாலே. கூட போயிருக்கலாமோ? தேவையில்லாம கோபப்பட்டுட்டேனா’ என பலவாறாக யோசிக்க, அவளுக்கு வாட்ஸ் அப்’பில் ஒரு மெசேஜ் அனுப்பினான்.

‘ஆல் ஒகே?’ என்று.

அதில் இரண்டு டிக் மார்க் வரவில்லை. ‘மீட்டிங்ல இருப்பா. அதுனால மொபைல் ஆஃப் பண்ணிருப்பா’ எனத் தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டான்.

அவ்வப்போது மொபைல் எடுத்துப்பார்க்க, மெசேஜ் டெலிவர் ஆகவில்லை. ஒரு மணி நேரம் கழித்து, கொஞ்சம் பதட்டம் எட்டிப்பார்க்க, அவளுக்கு அழைத்தான். அழைப்பு செல்லவில்லை.

பதட்டம் கொஞ்சம் அதிகரித்தது. பள்ளிக்கு அழைத்துப்பார்த்தான். அவள் இன்னும் வரவில்லை என்றனர். அனிதாவிடம் கேட்டு வீட்டு எண்ணை வாங்கி அங்கிருக்கிறாளா என விசாரித்தான். அங்குமில்லை.

சில நிமிடங்கள் கழித்து அவளுக்கு அழைத்தபோது, ரிங் சென்றது. அப்போது தான் கொஞ்சம் மூச்சு சீரானது அவனுக்கு. ஆனால் அழைப்பை அவள் எடுக்கவில்லை.

‘கோபமா இருக்கிறாளோ? அதான் எடுக்கலையோ?’ என நினைத்து, மறுபடியும் அழைத்தான். எடுக்கவில்லை. இப்போது அவனுக்கு கோபம் தலைக்கேறியது… ‘அப்படி என்ன வீம்பு அவளுக்கு?’ என நினைத்து.

‘ச்ச. நம்பி துணைக்கு கூப்பிட்டா? உனக்கென்ன வீம்பு’ தன்னையும் திட்டிக்கொண்டான்.

இருந்தும் ஏதோ ஒரு நெருடல். அவனிடம் வேலை பார்ப்பவன் எண்ணில் இருந்து அழைத்தான். அதற்கும் பதில் இல்லை. ‘என்ன ஆயிற்று அவளுக்கு?!’ என நினைக்க, போன பதட்டம் மீண்டும் ஒட்டிக்கொண்டது.

தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மினிஸ்டர் அலுவலகத்திற்கே சென்றான். ஆனால் அவர் அங்கு இல்லை. ஜெனி வந்துவிட்டு, சென்றுவிட்டாள் என்றனர்.

மறுபடியும் பள்ளிக்கும் அவள் வீட்டிற்கும் அழைக்க, அவள் அங்கு இல்லை என்ற பதிலே வந்தது.

அவள் அம்மாவும் கொஞ்சம் பயத்தில் இருந்தார். அவர் அழைப்பையும் அவள் ஏற்கவில்லை.

தன் நண்பனிடம் சொல்லி அவள் எண் எந்த ஏரியாவில் இருக்கிறது என பார்க்கச்சொன்னான்.

ஏதோ சொல்ல முடியாத பயம் அவனுள். அந்த பயம் தந்த வலி, இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தது. ‘எங்கு சென்றாள்? என்ன ஆயிற்று?’ என யோசித்துக்கொண்டே அங்கே ஒரு வழி சாலையில் அவன் நுழைய, போக்குவரத்து நெரிசலாக இருந்ததது.

பயம் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணை மறைக்க, அதையும் மீறி தூரத்தில் அவள் கார் சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தான்.

பதறி அடித்துக்கொண்டு வண்டி நெரிசலையெல்லாம் தாண்டி பதட்டத்துடன் அவள் கார் முன்னே வண்டியை நிறுத்த, காரும் நின்றது.

கிட்டத்தட்ட ஓடிச்சென்று கதவை திறக்க முற்படும்போது, டிரைவர் சீட்டில் இருந்த ஜெனி, கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள்.

அவளை பார்த்ததும் நிம்மதி வந்ததே தவிர, அவன் மூச்சு சீராகவில்லை. அவளுக்கு அவன் மூச்சு விடக் கூட சிரமப்படுவது நன்றாகவே தெரிய, அவன் கண்கள் இன்னமும் பதற்றத்தை காட்டியது.

இது அனைத்தும் ஒரு நொடிப்பொழுதில் அரங்கேற, அவள் “அஜய்” என்று சொன்னதுதான் தாமதம். துளியும் யோசிக்காமல், அவளைச் சட்டென அணைத்தவன், “போன் பண்ணா எடுக்கமாட்டயா? பயந்துட்டேன்” என்றான் அதே பதட்டத்துடன்.

அவன் அணைத்ததும் அதிர்ந்தாள் முதலில். அவன் இதயத்துடிப்பின் டெசிபல் அவளால் உணர முடிந்தது.

பின்னே ஒலித்துக்கொண்டிருந்த ஹார்ன் சத்தங்கள், பக்கத்தில் கேட்ட பேச்சு சத்தங்கள், அவளைத் தன்னிலைக்குக் கொண்டு வர, அவசரமாக தன்னை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டாள்.

அப்போது தான் அவனும் உணர்ந்தான், அவன் செய்த காரியத்தை. தலை முடியை அழுந்த கோதியவன், “சாரி” என்றுவிட்டு எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

அவளுக்கு தான் சங்கடமாக இருந்தது சுற்றி உள்ளவர்கள் பார்வையைப் பார்த்து.

அதுவும், ‘அவன் வந்தான், நடு வீதியில் அணைத்துக்கொண்டான், பின் சென்றுவிட்டான்’ என நினைக்கும்போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அங்கிருந்த ஒரு சிலர், “காலம் கெட்டு கிடக்கு. இப்போ இதெல்லாம் சகஜம் ஆயிடுச்சு. நடு வீதியில் ரொமான்ஸ். நல்லவேளை கட்டிபிடிச்சதோட விட்டாங்க” அவள் காதுபட சொல்ல, என்ன கட்டுப்படுத்தியும் அழுகை தொண்டையை அடைக்க, அமைதியாக சென்றுவிட்டாள்.

அவனுக்கோ, ‘இப்படி நடந்துகொண்டோமே. அதுவும் பொது வெளியில் ஒரு பெண்ணை அணைத்துக்கொண்டு நிற்பதெல்லாம்’ என நினைக்கும்போது தன்மீதே கோபம் பொங்கியது. பின் அவளைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோமே அவ்வளவு பேர் மத்தியில் என்ற குற்ற உணர்ச்சி.

அவளுக்கு அழைத்தான். அவள் ஏற்கவில்லை.

அவள் வீட்டிற்குத் தான் சென்றிருப்பாள் என யூகித்து, அவள் வீட்டிற்கே சென்றான். அனிதாவின் அண்ணன் மற்றும் ஜெனியுடன் படித்தவன் என்பதால் அஜய், ஜெனி அம்மாவிற்கு பரிச்சயம்.

இவன் வந்தவுடன், அவளைப் பற்றிக் கேட்க, “இப்போ தான் பா வீட்டுக்கு வந்தா. கோவமா இருப்பா போல. எதுவும் பேசாம ரூம்’கு போய்ட்டா. இரு கூப்பிடறேன்” என்றுவிட்டு அவளை அழைக்க, வெளியே வந்தாள் ஜெனி.

கண்கள் சிவந்திருந்தது. “அழுதயா ஜெனி” என பதறிக்கொண்டு அவள் அம்மா கேட்க, அப்போது தான் அஜய் வந்திருப்பதைப் பார்த்தாள்.

அவனுக்கு தெரியாமல் கண்களை துடைக்க எண்ணி அது வீணாகிப்போக, “ஒன்னுமில்லமா. நீ அஜய்க்கு குடிக்க ஏதாச்சும் போட சொல்லேன்?” சொல்லிவிட்டு அஜய்யிடம் வந்தாள்.

“சொல்லு அஜய்”

“சாரி. நான்… நீ…” என வார்த்தைகள் வரமறுக்க, பின் “நீ போன் எடுக்கலன்ன உடனே பயந்துட்டேன்” என்று சொல்லிமுடிக்கவில்லை.

அதற்குள் அவள், “அதான் வேலை இருக்குன்னு சொன்னியே அஜய். அப்புறம் என்ன?” எனக் கேட்க, அவனிடம் பதிலில்லை.

அவன் மெளனமாக இருக்க, “மினிஸ்டர் பார்த்துட்டு கிளம்பறப்ப, கார்ல இருந்து போன் கீழ விழுந்து டிஸ்ப்லே போய்டுச்சு. அதான் கால் அட்டென்ட் பண்ண முடில” என்றாள் அவன் முகம் பாராமல் எங்கோ பார்த்துக்கொண்டு.

கண்கள் மட்டும் கலங்கியது. அவனுக்கு புரிந்தது அவள் கலங்குவதற்கான காரணம்.

“சாரி!. நான் பதட்டத்துல… யோசிக்காம” என மறுபடியும் அவன் தயங்க, அவள் அவனை பார்த்து “ஓ… யோசிக்காம தான் அப்படியே விட்டுட்டு வந்துட்டயா?” என சொல்லும்போது, அவள் பக்கத்தில் தயக்கத்துடன் வந்து நின்றான்.

பின் மெதுவாக, “நெஜம்மா சாரி. எனக்கு என்ன செய்தேன்னே புரியல அப்போ” என ஆரம்பிக்க, அதற்குள் அவள், “அங்கயிருந்தவங்க என்னென்ன பேசினாங்கன்னு தெரியுமா?” என சொல்லிக்கொண்டு, பக்கத்தில் நின்ற அவன் கையில் முகத்தை மறைத்துக்கொண்டு “அசிங்கமா போச்சு அஜய்” என அழுதுவிட்டாள்.

அவள் அழுவது அவனை வெகுவாக தாக்க, அவள் கையைப் பற்றி… “ப்ளீஸ் ஜெனி. அழாத” என சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஜெனியின் அம்மா அங்கே வந்தார்.

இவர்கள் நிற்கும் கோலத்தைப்பார்த்து, கொஞ்சம் திடுக்கிட்டாலும், “என்ன ஜெனி… அழறயா?” கேட்டுக்கொண்டே பக்கத்தில் வந்தார். அவர் குரல் கேட்டதும் ஜெனி கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டாள்.

‘அவர் பார்த்திருப்பாரோ?’ என்று தோன்றினாலும், தன்னை தன்னிலைப்படுத்திக்கொண்டு “ஒன்னுமில்லமா. சும்மா பேசிட்டு இருந்தோம். ஜூஸ்’ஸா. குடு” என்று எதுவும் நடக்காதது போல சகஜமாக இருக்க முற்பட்டாள்.

அஜய், ‘தான் செய்த காரியம், அதனால் அவள் அழுதது’ என நினைத்து மிகவும் வருந்தினான். மெல்லிய குரலில் மறுபடியும் மன்னிப்புகேட்டுவிட்டு சென்று விட்டான்.

அதற்கு பின் ஜெனியின் முகம், அவளின் செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆக்ரமிக்க ஆரம்பித்தது.

இருவரும் கொஞ்சம் சகஜமாகப் பேசும் நிலைக்கு முன்னேறினர். அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். இருந்தும் இருவரும் நண்பர்கள் என்ற வரையறையுடனே இருந்தனர்.

ஜெனியின் அம்மா, அவள் அப்பாவிடம் அன்று அஜய் வந்தபோது நடந்ததைப் பற்றி சொல்ல, அவர் இதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்சென்றார்.

ஜெனியின் பெற்றோர் அஜய்யின் குடும்பத்துடன் பேச சென்றனர் அஜய்க்கும் ஜெனிக்கும் தெரியாமல்.

அனிதாவின் கணவன், ‘அஜய் மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையவேண்டும்’ என நினைத்து, ஜெனியின் பெற்றோரை அழைத்து வந்திருந்தான்.

மகன் ஆசைப்பட்ட வாழ்க்கையை முதலில் மறுத்த அஜய்யின் பெற்றோர், அவனின் தற்போதய வயது, மற்றும் பிடிவாதத்தை நினைத்துப்பார்த்து, இன்னோருமுறை அவன் வாழ்க்கையில் தடங்கலாக இருக்க வேண்டாம் என எண்ணி சரி என்றனர்.

இதை அனைத்தையும் கேள்விப்பட்ட அஜய் முதலில் முறுக்கிக்கொண்டான் முடியாது என. பின் பொறுமையாக யோசித்தான். கவிதாவின் எண்ணம் அவன் மனதில் இருந்து மறைந்து, ஜெனி எப்படி உள்ளே வந்தாள் என ஆச்சர்யமாக இருந்தது.

அவ்வளவுதான் வாழ்க்கை. கடந்து செல்லவேண்டும் என்பது புரிந்து இதோ… இப்போது திருமணம் முடிந்து தேனிலவுக்கு இருவரும் மால்தீவ்ஸ் வந்திருக்கின்றனர்.

இவர்களுக்கு இப்போது தேவை தனிமை… அதைக்கொடுத்துவிட்டு நாம் அப்படியே சென்னைக்குப் பறப்போம்…. நம் கதையின் நாயகன் அகிலனையும், நாயகி கவிதாயினியையும் பார்க்க.

5
4
4
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved