என்னுள் நீ வந்தாய் – 25B

என்னுள் நீ வந்தாய் – 25B (Final 2)

அதே அன்றைய இரவு… “பேபி… கொஞ்சம் சாப்பிடு… ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…” எப்பொழுதும்போல் கெஞ்சிக் கொஞ்சிக்கொண்டிருந்தான் அகிலன்.

ஆனால் சாப்பிடாமல் அவனை இன்னமும் கெஞ்ச வைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

“நீ குடுக்கற இடம் தான் அகில் அவ ஒழுங்கா சாப்பிடமாட்டேங்கறா…” என்று லட்சுமி எப்பொழுதும் போல அவனைத் திட்டினார். அதெல்லாம் எப்போது அவன் காதில் விழுந்துள்ளது?

கெஞ்சிக் கொஞ்சி ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தான்.

அப்போது சத்தத்துடன் ஒரு பூரி அவன் தட்டில் வந்து விழுந்தது. ‘இருக்கு இன்னைக்கு அர்ச்சனை இருக்கு’ என்று மனதில் நினைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான். கவிதா முறைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள்.

“நீ… நீங்க ஊட்டாதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்றது. அவ ஸ்கூல் மேம் என்னை கேட்கறாங்க… ஏன் அவளே சாப்பிடமாட்டேங்கறான்னு” என புகார் வாசித்தாள் கவிதா, அவர்களின் நான்கு வயது குட்டிப்பெண் வெண்பாவைப் பார்த்து.

ஓ… ஆம்! இப்போதெல்லாம் நீங்க வாங்க என்றுதான் இருவரும் கூப்பிட்டுக்கொள்வது. அவர்கள் பேசுவதுபோலவே வெண்பாவும் பேசுவதால், மரியாதை நிமித்தம் அவள் இருக்கும்போது பேசிக்கொள்வது.

“ஊட்டினா கொஞ்சம் அதிகமா சாப்பிடுவான்னு” என முழித்தான். அவனுக்குத் தெரியாதா எதற்கு இந்த கோபமென. இரவு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

மறுபடியும் கோபமாகச் சென்றுவிட்டாள். மகளுக்கு ஒரு பாதிப் பூரி அதிகமாகவே ஊட்டிவிட்டுவிட்டு அவனும் சாப்பிட்டான்.

இரவு சமையலில் ஆரம்பித்து அடுத்த நாள் சமையலுக்குத் தேவையானது வரை செய்து வைத்தாள் கவிதா.

மதியம் பள்ளியில் இருந்து வரும் குழந்தையை மாமியாரும் மாமனாரும் இரவு வரை பார்த்துக்கொள்வதால், இரவு சமையல் அவளே செய்துவிடுவாள்.

ஆஃபீஸ் முடிந்து இரவு வந்து செய்வதற்கு கொஞ்சம் அலுப்பாக இருந்தாலும், எதுவும் சொல்லாமல் செய்வாள்.

லட்சுமி சமையலுக்கு மட்டும் ஆள் வைத்துக்கொள்வதை அனுமதிக்கவே இல்லை. அகிலன் சொல்லியும் எடுபடவில்லை. ப்ரியாவும் மேற்படிப்புக்காக வெளியூர் சென்றிருந்தாள்.

ஒருவழியாக அவள் இரவு வேலை முடிக்க, அகிலன் தந்தை ஜெயராமன் அவளை அழைத்தார்.

“இந்தாம்மா. பிஸ்னஸ் டுடேல அவன் ஆர்டிகள் வந்துருக்கு” என ஒரு பத்திரிக்கையை நீட்டினார்.

“தேங்க்ஸ் மாமா. குட் நைட்” என புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு அறைக்கு வந்தபோது, அப்பாவும் மகளும் கட்டிலில் விளையாட்டுச்சாமான்களைக் கொட்டிவைத்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்தவளுக்கு இன்னமும் கோபம்.

கவிதா வருவதைப் பார்த்தவுடன், இருவரும் நல்ல பிள்ளைகள் போல் அவசரமாக அனைத்தையும் சரி செய்தனர். இரவு உடை மாற்றிக்கொண்டு அவள் வந்தபோது, அப்பாவும் மகளும் படுத்திருந்தனர். அதைப்பார்த்ததும் எல்லா கோபமும் போய் புன்னகை வந்தது.

அவன், ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சைகையால் சொன்னவுடன், அந்த பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்று ஊஞ்சலில் உட்கார்ந்தாள்.

வளர்ந்துவரும் தென் இந்தியாவின் இளம் ஆர்கிடெக்ட்ஸ் என்ற பகுதியின் கீழ் அவனின் கட்டுரை வந்திருந்தது.

இந்த பத்து வருட அவனுடைய உழைப்பை சுருக்கமாகப் பதிவிட்டிருந்தனர். முக்கியமாக இந்த வருடம் அவன் பெயர் யங் ஆண்டப்ரெனர் அவார்ட் (Young Entrepreneur award – இளம் தொழிலதிபர் விருது) நாமினேஷன்ஸ்’ஸில் இருப்பதை குறிப்பிட்டு காட்டியிருந்தனர்.

எப்போதும் குடிகொண்டிருக்கும் புன்னகையுடன் இருந்த அவன் முகத்தை மெல்ல வருடிக்கொடுத்தாள். பின் அப்படியே தலைசாய்த்து களைப்பாற… மகளை உறங்கவைத்துவிட்டு, சுற்றியும் தலையணையை வைத்துவிட்டு, அவனும் பால்கனிக்கு வந்தான்.

கால் நீட்டி உட்கார்ந்திருந்தவள், அவனை பார்த்ததும் அவன் உட்கார கால்களை எடுக்க, அவளை விடாமல் அவள் பாதங்களை மடியில் வைத்து உட்கார்ந்துகொண்டான்.

அவனைப்பார்த்து புன்னகைத்தாள். களைப்பாகத் தெரிந்தாள் அவனுக்கு. “ரொம்ப வலிக்குதா…” என மெதுவாக பாதங்களையும், விரல்களையும் பிடித்துவிட்டான்.

“ஹ்ம்ம். கொஞ்சம் அதிக வேலை இன்னைக்கு. கழுத்து வலி வேற”

“நான் தான் தோசை போட்டுக்கலாம்னு சொன்னேன்ல. நீ தான் கேட்கல பேபி” என்று சொன்னதுதான் தாமதம்… “நான் ஒன்னும் பேபி இல்ல… இப்போல்லாம் உன் பொண்ணு தான் உனக்கு பேபி” என்று கூறி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“சமயத்துல எனக்கு நிஜமாவே தெரியல யாரு இங்க பேபின்னு” என சிரித்துக்கொண்டே அவள் பக்கத்தில் உட்கார்ந்து, கழுத்தின் பின்புறமும், தோள்பட்டையயும் பிடித்துவிட்டான்.

“ஆன்… அங்கதான் அங்கதான். இன்னும் கொஞ்சம்” என சொல்லிவிட்டு, “ஆமாம்… ஆமாம் அவ முன்னாடி நீ பேபின்னு கூப்பிட்ட, அவ ‘நான் தான் பேபி அம்மா இல்ல’ன்னு சண்டைக்கு வருவா. இனி அவதான் உன் பேபி போ” என்றாள் போலியான கோபத்துடன்.

“ஹாஹாஹா… நீதான் எனக்கு எப்பவுமே முதல் பேபி… அப்புறம் தான் அவ” பிடித்துவிட்டுக்கொண்டே சமாதானம் செய்தான்.

இது தினமும் நடப்பதே. இவள் முறுக்கிக்கொள்வதும். அவன் சமாதானப்படுத்துவதும்.

அவன் தோள்மேல் சாய்ந்துகொண்டாள். அதுபோதும் அவளுக்கு. எவ்வளவு அலுப்பு, சோர்வு, கோபம், எரிச்சல் என இருந்தாலும்… ‘நான் உனக்கு இருக்கிறேன்’ என்பது போல் அவன் அருகாமை போதும் அவளுக்கு.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். “என்னடா” கனிவுடன் கேட்டான். ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள். ஆனால் கண்கள் அவனுக்கு நன்றியை சொன்னது.

சில நிமிடங்கள் கழித்து… அவள் மொபைலில் விஜய்யின் முகநூல் பக்கத்தைக் காட்டி… “அகி… லயாக்கு பாய் பேபி பிறந்திருக்கானாம்” கையில் குழந்தையுடன், பக்கத்தில் லயாவுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தைக் காட்டினாள்.

“சூப்பர் பேபி. நானே சொல்லணும்னு இருந்தேன். மாமா ரொம்ப வருத்தப்பட்டார். அவரால உங்க ரெண்டு பேரையும் சரியா நேரம் எடுத்து வளர்க்க முடியலயாம். பாப்பா வேற அவர்கிட்ட அதிகம் ஒட்டலையா… ரொம்ப ஃபீல் பண்ணார்” என சொல்லி குறும்புடன் அவளைப் பார்க்க… அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

கவிதாவின் தந்தை ஸ்வாமிநாதன், பணி ஓய்விற்கு பிறகு, காஞ்சியில் தனியாக இருக்க வேண்டாம் என சொல்லி இங்கே வீட்டிற்கு அழைக்க, அவர் மறுத்துவிட்டார். பின் பக்கத்தில் வீட்டை எடுத்துக்கொடுத்தனர் அவர் தங்க.

புரியாமல் அகிலனைப் பார்த்த கவிதாவிடம், அவள் கையைப் பற்றிக்கொண்டு “என்னன்னா பேபி… நாம ஏன் மாமாக்கு ஒரு குட்டி கவிதாவையோ இல்லை செழியனையோ பெற்று தரக்கூடாது. மாமா பாவம்ல” சொல்லிமுடிக்கும்முன் அவனைப் பார்த்து முறைத்தாள்.

“நீ பாப்பா உள்ள இருக்கப்ப பண்ண சேட்டையெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு அகி. ஐயோ சாமி இன்னொன்னா” என கையெடுத்து அவள் கும்பிட, அவன் பற்களைக் காட்டி அசடு வழிந்தான்.

சாதரணமாகவே கவிதாவை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்பவன், வெண்பாவை வயற்றில் சுமந்தபோது, இன்னமும் அக்கறை அதிகமானது. எப்போதும் அதை செய்யாதே, இப்படி இரு என பல அறிவுரைகள். அவன் அன்பின் வெளிப்பாட்டில், திக்குமுக்காடிப்போனாள் கவிதா.

“ஆனா பேபி. ஒருவேளை பையன் பிறந்தா, அவர்கிட்ட செழியன் மாதிரி உம்முன்னு இல்லாம, நல்லா ஜாலியான பையானா வளர்க்க சொல்லணும்” என சொல்லி அவள் தம்பியை அவன் கிண்டல் செய்ய…

அவள் முறைத்துக்கொண்டு “அவன் பாவம். கொஞ்சம் ரிசெர்வ்ட் டைப். ஓவரா பேசாத” என மண்டையில் குட்டினாள்.

பின் செழியனைப் பற்றி கொஞ்ச நேரம் பேசினார். இப்படியே பேசி ஒரு வழியாக உறங்கச்சென்றனர்.

அடுத்தநாள் காலை… அவசரமாகக் காலை உணவு தயார் செய்துகொண்டிருந்தாள். அவனால் முடியும்போதெல்லாம் அவளுக்கு உதவுவான்.

அதுபோல இன்று உதவிக்கு என அகிலனும் இருந்தான். அவனை சட்னி செய்ய சொல்லிவிட்டு, அங்கும் இங்கும் பறந்துகொண்டு ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருந்தாள்.

காலை எட்டு மணிக்குள் இரண்டு வேளைக்கான சமையலை செய்துமுடித்தாக வேண்டும். இதில் வெண்பாவிற்கு அவள் சாப்பிடும் விதமாக சாப்பாடு, அவள் தந்தைக்கும், அகிலனின் பெற்றோருக்கும் அவர்கள் வயதிற்கேற்ற சாப்பாடு என தனித்தனியாக செய்யவேண்டும்.

அவளைப் பார்க்க அவனுக்கும் கொஞ்சம் பாவமாக இருந்தது.

அவன் சட்னி செய்துமுடித்தவுடன் இட்லியுடன் வைத்து சரியாக உள்ளதா என வாயில் அவள் போட, உப்பு அதிகமாகயிருந்தது.

“அச்சோ !! உப்ப அதிகமா போட்டுட்ட அகி” சாப்பிட்டுக்கொண்டே மெதுவாக சொல்லநினைத்து கொஞ்சம் சத்தமாக கத்த…

“அப்படியா பேபி” என்றவன் கொஞ்சமும் யோசிக்காமல், அவள் இதழோடு இதழ் வைத்து ஒரு சில நொடிகள் உணவை ஆராய்ந்தபின் பின், “இல்லையே… ஸ்வீட்’டால இருக்கு ஸ்வீட்டி” குறும்பாக சொல்ல, புன்னகையுடன் முறைத்தாள். அவனும் ரசனையாகப் புன்னகைத்தான்.

அந்த சில நொடிகள், அவள் மனநிலையை அப்படியே மாற்றியது. முகம் கொஞ்சம் பிரகாசமானது.

அப்போது சரியாக, “என்ன இங்க சத்தம்…” கேட்டுக்கொண்டே வந்தாள் வெண்பா.

“வந்துட்டா. என்னோட மாமியார்” என புன்னகையுடன் முணுமுணுத்துக்கொண்டே வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் கவிதா.

அகிலனும் சிரித்துக்கொண்டே, மகளைப் பள்ளிக்கு தயார் செய்ய ஆயத்தமானான்!

**சுபம்**

பின்குறிப்பு::::

அகிலன் போல ஒருவன் இவ்வுலகில் உள்ளானா? இதெல்லாம் சாத்தியமேயில்லை, கற்பனைன்னு சொன்னீங்கன்னா… ஆமாம் கற்பனையா இருக்கலாம்… ஆனால் நாம் நினைத்தால் கற்பனையை நிஜமாக்க முடியும்!!

இந்த தலைமுறை ஆண்களில் அகிலனையோ இல்லை பெண்களில் கவிதாவையோ காண்பது கடினமாக இருக்கலாம். ஆனால்!!!

அகிலனை போல மனைவியின் உணர்வுகளை மதிக்கும் (ஆண்)மகனை உருவாக்கமுடியும்.

கவிதாவைப் போல தைரியமாக கடந்து செல்லும் (பெண்)மகளை உருவாக்கமுடியும்.

நமக்கு கிடைக்காவிட்டால் போகட்டும், வரும் காலத்தினருக்காவது கிடைக்கட்டுமே என்று சொல்லி சுபம் போட்டுக்கறேங்க!!!!

பகுதி இரண்டு கூடிய விரைவில்!!!!

இதுக்கு என்ன பகுதி ரெண்டுன்னு கேட்கறது புரியுது!!!!!

நம்ம இளஞ்செழியன் இசைப்பிரியா கதை தாங்க!!!! 🙂 அகிலன் கவிதாவும் ஆங்காங்கே வந்து செல்வார்கள் 🙂

 

11
5
5
2

4 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 25B

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved