Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் #ENV

என்னுள் நீ வந்தாய் – 6

என்னுள் நீ வந்தாய் – 6

———இன்று———

‘நீ இல்லாத நிகழ்வுகளைக் கழிக்கிறேன் உன் நினைவுகளோடு!’

தொடர்ந்து அலறிக்கொண்டிருந்த அலாரத்தின் சத்தம், பழைய நினைவுகள் சுமந்த உறக்கத்தைக் கலைத்தது. அதை அணைத்துவிட்டு எழுந்த கவிதாவின் முகத்தில் ஒரு சின்னப் புன்னகை.

அஜய் துபாயில் தான் இன்னமும் இருப்பதாலும்… நேற்று லயா AJ தனது பாய் ஃபிரண்ட் என்று சொன்னதும்… மனதில் ஒரு சந்தோஷத்தை நிரப்பியது.

அஜய் தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டான் என்ற எண்ணம் நிம்மதியைத் தந்தது.

குளித்துத் தயாராகிவந்த கவிதா, லயா இன்னமும் வெளியே வராமல் இருப்பதைப் பார்த்து…

“எப்போண்ணா எந்திரிப்பா… சேர்ந்து டாக்ஸி’ல ஆஃபீஸ்க்கு போலாம்ன்னு நினச்சேன்” என தாமஸ்ஸிடம் கேட்க, அவர் சிரிப்பை அடக்கமுடியாமல் “அந்தப் பொண்ணு எழ இன்னமும் ஒரு மணி நேரம் ஆகும்” என சிரித்தார்.

அவர் சொல்லிமுடிக்கும் போது “ஹலோ ஹலோ… என்ன போட்டுக் குடுக்கறீங்களா… நான்லாம் ரெடி ஆயிட்டேன்” என சொல்லிக்கொண்டே வெளியே வந்தாள் லயா.

“என்னம்மா இன்னிக்கி ரொம்ப சீக்கரம் வந்துட்ட…” தாமஸ் இருவருக்கும் காலை உணவை எடுத்துவைத்துக்கொண்டு கேட்க…

“அதுவாண்ணா… இன்னிக்கி AJ இந்தியாக்குப் போறான்… ஏதோ முக்கியமான வேலையாம்… அதுதான் ஏர்போர்ட் வர போலாம்னு. அவன் வேண்டாம்ன்னு சொன்னான், அத கேட்டுடா நான் லயா இல்லையே” என சொல்லி கண்ணடித்து…

“நான் போயிட்டு வந்துடறேன். எனக்கு சாப்பாடு வேணாம்ண்ணா. நான் வரேன் கவிதா” என்று சிரித்துக்கொண்டே புறப்பட்டாள் லயா…

புன்னகையே பூத்தது கவிதாவிற்கு… அஜய் எப்போது துபாயில் இருந்து இந்தியா வருவான் எனக் காத்திருந்தகாலம் போய், எப்போது அகிலனைப் பார்ப்போம் என ஏங்கும் தன் மன மாற்றம் நினைத்துக் கொஞ்சம் சிரிப்பே வந்தது…

*********

“நான் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் AJ மீட் பண்ணேன். இதுவரை ஒரு நாலஞ்சு தடவ மீட் பண்ணிருப்பேன். ரொம்ப கேஷுவல் டைப். அவர் ஆஃபீஸ் இந்த பில்டிங்ல தான் இருக்கு. பட் இந்தியன் டைம்’க்கு வெர்க் பண்ணுவாங்க.

மோஸ்ட்லி ரெக்ரியேஷன் சென்டர்ல பாஸ்கெட் பால், ஷட்டில், இல்லாட்டி டேபில் டென்னிஸ் விளையாடறப்ப பாப்பேன். இன்னமும் சொல்ல போனா நான் தான் பின்னாடியே சுத்திட்டு இருக்கேன். அங்க பெருசா எந்த ரியாக்ஷனும் இல்ல… பட் நான் ட்ரை பண்றத நிறுத்தமாட்டேன்” என AJ புராணம் வாசித்துக்கொண்டிருந்தாள் லயா கவிதாவிடம்.

‘அஐய்யை அவள் விரும்புகிறாள்’ என தெரிந்துகொண்டதுமே லயாவிடம் நன்றாகப் பேசினாள் கவிதா.

“உன் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என கவிதா கிண்டல் செய்ய… “ஹோப்ஃபுலி (hopefully)… அவன் திரும்பி வந்தவுடனே உங்களுக்கு இன்ட்ரோ கொடுக்கறேன்” என்றாள்.

“ஏன் AJ’னு சொல்ற… பேரு சொல்லி கூப்பிடவேண்டியதுதானே…” என தனக்கு எழுந்த சந்தேகத்தைத் தவறாமல் கேட்டாள் கவிதா. ஏனென்றால் அஜய்க்கு நெருங்கியவர்கள் அஜய் என்றழைத்தாலே பிடிக்கும். அது கவிதாவிற்குத் தெரியாதா என்ன.

“அதுவா… அவன் பேர் எனக்கு பிடிக்கல” என சாதாரணமாகச் சொன்னாள் லயா. ‘அஜய் பேரே பிடிக்கலையா… இந்தப் பொண்ண…’ என மனதில் சிரித்துக்கொண்டாள் கவிதா.

சாப்பிட ஆர்டர் செய்த உணவு வந்தவுடன்… அதைப் பற்றியும் ஒரு பெரிய லெக்சர் ஆரம்பிக்க… கவிதா கேட்டுக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்…

‘கண்டிப்பா இந்தக் குட்டி பொண்ணு அஜய்க்கு ஏத்த பொண்ணு தான்… வாய் ஓயாம பேசறாளே… நிமிஷத்துக்கு ஒருதரம் AJ பேரு வராம இல்ல… அவனுக்கும் இந்த மாதிரி நாட்டி’யா இருந்தா ரொம்ப பிடிக்குமே…’

‘எப்படியாச்சும் ரெண்டு பேரும் சேர்ந்தாங்கன்னா எவ்ளோ நல்லா இருக்கும்…ரொம்ப அழகாவும் இருக்கா… சுட்டி… என்ன ஹயிட் தான் கொஞ்சம் கம்மி’ என கவிதா தனக்குத் தானே நினைத்துக்கொண்டிருக்க…

“என்னடா இந்த பொண்ணு புது ஆளுன்னு கூடப் பாக்காம லொட லொடன்னு மொக்க போடறாளேன்னு யோசிக்கறீங்களா…” சொல்லிவிட்டுக் கவிதாவை பார்க்க “கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டயே” என்றாள் கவிதா சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“நான் அப்படித்தான்… பேச பக்கத்துல ஆள் இருந்தா போதும்… மணிக்கணக்கா பேசிட்டே இருப்பேன்…” என்றாள் மிகவும் சாதாரணமாக…

“உங்கள மொதல்ல பாத்தப்ப சிடுமூஞ்சின்னு நினச்சேன். பட் பரவால்ல. நல்லாவே பேசுறீங்க” என கிண்டல் செய்ய, கவிதா அவளின் டிரேட்மார்க் முறைப்பை முறைத்தாள்.

ஏனோ லயாவின் வெகுளித்தனமான பேச்சு அகிலனின் தங்கை இசைப்ரியாவை நினைவுகூர்ந்தது. ஆகையால் நன்றாகவே பேசினாள் லயாவுடன்…

சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க… “என் பேரண்ட்ஸ் (parents) எப்படியோ போ’ன்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. அவங்க மட்டும் மதுரைல ஹாப்பியா இருக்காங்க என் தொல்லை இல்லாம. உங்க அப்பா அம்மா?” என லயா கேட்க…

“எனக்கு அம்மா இல்ல… அப்பா தான். அப்புறம் தம்பி… காஞ்சிபுரத்துல இருக்காரு” என சொல்லும்போது ஏனோ அப்பாவின் நினைவு இப்போது ஒட்டிக்கொண்டது மனதில்…

இருவரும் வேலைமுடிந்த பின் கெஸ்ட் ஹவுஸ் வந்தனர்… ஏதோ ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலும் கவிதாவின் எண்ணவோட்டங்கள் அவளின் அப்பாவையே நினைத்தது…

அன்று கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என அகிலன் சொன்ன பின், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து, பின் அவர் கண்விழித்தபோது நடந்தவைகள் கண்முன்னே ஓடியது கவிதாவுக்கு…

———அன்று———

அகிலனுக்கு ஏதோ அழைப்பு வர, அப்பாவை பார்க்க சென்ற கவிதா, அவரின் கோலத்தைப் பார்த்து, அழுகை அவளை மீறி வரப்பார்த்தது.

அவர் முன் அழுதால் இன்னமும் நொடிந்து போய்விடுவார் எனத் தன்னை முழுவதும் கட்டுக்கு கொண்டுவந்து அவர் முன் நின்றாள்.

அவளின் சித்தப்பா அப்பாவும் மகளும் தனியாகப் பேசட்டும் என வெளியே சென்று விட, அவள் தம்பி மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தான்.

அவர் கண்கள் கலங்கிருக்க, அருகில் உட்கார்ந்தவள், கைகளைக் கோர்த்துக்கொண்டு “ஒன்னும் இல்லப்பா. எல்லாம் சரியாகிடும்” என அவரைத் தேற்ற முற்பட,

அவளின் கலங்கிய முகமே அவள் அழுதிருக்கிறாள் என அவருக்குப் புரிந்தது.

“ம்மாடி… கண்ணம்மா… அழுதயா? என்ன மன்னிச்சுடுடா. நான் மாப்பிள்ளைட்ட பேசறேன். அவர் என்னைக் கேட்கறாரோ நான் செய்றேன்டா… நீ சந்தோஷமா இருக்கணும்” என்று ஈனக்குரலில் பேச…

‘அப்பா அகிலனை தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் ‘ என புரிந்து பதறிக்கொண்டு “அப்பா… அவர் கல்…யாணத்தை நிறுத்த சொல்லல ப்பா. நா தான்…” எனத் தட்டு தடுமாறி சொல்லிவிட்டாள்.

அவர் அதிர்ச்சியில் அவளைப் பார்க்க, அவர் முகம் பாராமல் தலை குனிந்துகொண்டு “நான் காலேஜ் படிக்கிறப்ப அஜய்ன்னு என்னோட சீனியர லவ் பண்ணேன் ப்பா…” வார்த்தைகள் வரமுடியாமல் கலங்கிய கண்களுடன் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னாள் கவிதா.

அவள் முடிக்க, அகிலனும் உள்ளே வர சரியாக இருந்தது.

“எப்படி இருக்கீங்க அங்கிள். இப்போ பரவால்லயா?” என கேட்டுக்கொண்டே அவர் அருகில் வந்தான்.

அவன் முகமும் வாட்டமாக இருப்பதைப் பார்த்தவர் மகளையும் பார்த்தார். அவள் தலையைத் தூக்கவில்லை. “இப்போ கொஞ்சம் பரவால்ல மாப்…” மாப்பிளை என சொல்லவந்தவர் கண்கள் கலங்கி அதைச் சொல்லாமல் பாதியிலேயே நிறுத்தினார்.

மகள் மனதில் வேறொருவன் இருக்கும்போது மாப்பிள்ளை என்று அழைத்தால் தவறாக எடுத்துகொள்வானோ என்று அவர் நிறுத்த…

அவர் அழைக்க வந்ததைப் பாதியிலேயே நிறுத்தியதை புரிந்துகொண்ட அகிலன் மனது ஒரு ஓரம் வலித்தாலும், வெற்றுப்புன்னகை மட்டுமே காட்டினான் அவனின் முகத்தில்.

அவர் வருத்தப்படுகிறார் அது அவரின் உடலுக்கு நல்லதல்ல எனப் புரிந்து “நீங்க உடம்ப அலட்டிக்காதீங்க அங்கிள். ஆல்ரெடி ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருப்பீங்க” என அகிலன் ஆறுதல் சொல்ல, கவிதாவுக்குச் சங்கடமாக இருந்தது.

தான் செய்த தவறால் அப்பாவுக்கு இந்த நிலைமை. அகிலன் அவரிடம் காட்டும் அக்கறைக்கூடத் தனக்கில்லயா என மனம் குறுகிப்போனாள்.

“அகிலன் பொண்ணு இப்போ தான் எல்லாமே சொன்னா. என்னை மன்னிச்சிடுங்க” பெண்ணைப் பெற்ற அப்பாவாகக் கலங்க, அவர் கையை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தான் அகிலன்.

மகள் புறம் திரும்பியவர் “கவிதா” என்றழைக்க, அந்த அழைப்பே சொன்னது அவருக்கு அவள் செய்த காரியம் பிடிக்கவில்லையென. அன்பான அம்மாடியோ… இல்லை ஆறுதலான கண்ணம்மாவோ இல்லையே…

அவள் நிமிர்ந்து அவரைப் பார்க்க, “நீ சொன்னியே… அவருக்கு போன் பண்ணு. நான் பேசணும்” ஸ்வாமிநாதன் சொல்ல, சட்டென அவள் அகிலனை தான் பார்த்தாள்.

அவள் அழைத்து எடுக்கவில்லை. அவன் எண்ணில் அழைத்தபோது தானே அஜய் எடுத்தான். அகிலன் முகம் பார்க்க, அதில் வருத்தமா? இல்லை வேதனையா? இல்லை கோபமா? இல்லை வெறுப்பா? என அவளுக்குத் தெரியவில்லை.

ஆனால் அவள் காலையில் பார்த்த அவன் முகம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது? இவனின் நிலைக்கும் தான் தானே காரணம் என்று நினைக்கும்போது அதுவும் வருத்தியெடுத்தது.

“உன்னத்தான் கேக்கறேன்” என அப்பாவின் கடினக் குரலில், தன்னிலைக்கு வர, அகிலன் அவனுடைய போனில் அஜய் நம்பரை அழைத்து அவளிடம் நீட்டினான்.

புரியாமல் அவள் அப்பா பார்க்க, ‘நன்றி’ என பார்வையால் சொன்னவள், போனை வாங்கிக் காதில் வைக்க

“சொல்லுங்க அகிலன்” என்றான் அஜய்.

“நான் கவிதா பேசறேன்”

“ஓ சொல்லு கவி. எப்படி இருக்க”

‘நான் எப்படி இருப்பேன்னு உனக்குத் தெரியாதா அஜய்…’ என மனதில் நினைத்தாலும் “அப்பா உன்கிட்ட பேசணுமாம்” என்றாள்.

“எதுக்கு?” ‘எதற்க்கா???’அவனிடம் இவ்வளவு மாற்றத்தை கவிதா எதிர்பார்க்கவில்லை. மனது படபடத்தது. இதுவரை நடந்ததை விட ஏதோ பெரியதாக நடக்கப்போகிறதென்று.

“நான் அவர்கிட்ட நம்ப விஷயத்தை சொல்லிட்டேன்”

“ஓ… நான் தான் சொன்னேனே கவி. என்னால இப்போ எதுவும் செய்யமுடியாதுன்னு. என் வீட்ல இன்னும் ஒத்துக்கல” கவியின் கண்கள் மறுபடியும் கலங்க, அதைக் கண் மூடி நிறுத்தியவள் “இப்போ என்ன சொல்ற அஜய்?” கேட்டாள் அவனிடம்.

“இன்னும் நான் என்ன சொல்லணும் கவி? நான் இப்போ உன் அப்பாகிட்ட பேசற நிலமைல இல்ல. அவ்ளோதான். உன்னால வெயிட் பண்ணமுடியாதுன்னா……… நான் ஒன்னும் பண்ணமுடியாது. என் முடிவு இதுதான். நான் வெக்கறேன்” சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

வாய்வரை வந்துவிட்டது அஜய்க்கு “உன்னால வெயிட் பண்ணமுடியாதுன்னா … கல்யாணத்த பண்ணிக்கோ” என்று…

அகிலனிடம் அதைச் சொன்னான். ஆனால் ஆசை கொண்ட மனது அதை அவளிடம் சொல்லவிடவில்லை. தன் நிலைமையை நினைத்துக் கூனிக்குறுகிப்போனான்.

கவிதாவுக்கு இதயம் நொறுங்கியது. கண்கள் நிலைக்குத்தியது. பேசியது அஜய்யா என்று நம்பமுடியவில்லை. அவ்வளவு தானா அவர்கள் காதலுடைய வலிமை? இவ்வளவு சீக்கிரம் உடையும் என்று கனவிலும் நினைக்கவில்லையே.

அவள் கண்கள் மெதுவாகச் சொருக, தள்ளாட்டத்துடன் கீழே விழப்போனாள்.

“கவிதா என்னமா ஆச்சு?” என்று எழமுடியாமல் அவள் தந்தை எழ முயற்சிக்க… அகிலன் உதவ நெருங்க… தன்னைத் தன்னிலைப்படுத்திக்கொண்டு, அவனுடைய போனை அவனிடம் கொடுத்தாள்.

அவளின் இந்தத் தவிப்பை தந்தையாகப் பார்க்கமுடியவில்லை அவரால்… எதிர்பக்கம் பேசியவன் என்ன சொல்லியிருப்பான் என்று கொஞ்சம் யூகிக்க முடிந்தது அவரால்.

“அம்மாடி. இப்போ என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு” என்று நொந்து கண்ணீர் வடிக்க ஆரம்பிக்க, அவர் உடல்நிலை சரியில்லையே என்று பதறிக்கொண்டு அருகில் சென்றாள் கவிதா.

அவரை அவள் சமாதானப்படுத்த, அவர் “நான் ஒரு நல்ல அப்பாவா இல்லையோ? அம்மா இல்லாம சரியா வளர்க்க தெரியாம வளத்துட்டேனோ? முன்னாடியே எல்லாரும் அப்படித் தான் சொல்லிட்டு இருந்தாங்க. நான் பெருமையா என் பசங்கனு சொன்னேன்… ஆனா…” என்றார் இன்னமும் உடலை வருத்திக்கொண்டு.

அந்த வாக்கியம் “சரியாய் வளர்க்கலையோ?” அதற்கு அர்த்தம் சட்டென அவளுக்குப் புரிந்தது. ‘தான் செய்ததைத் தவறு என்கிறாரோ? மற்றவர் முன் அவமானம் நேரிடும் என எண்ணுகிறாரோ? தன்னால் அவமானம் நேர்ந்துவிடுமோ’

பல கேள்விகள் அவளுள் தோன்ற, தன்னைச் சமநிலை படுத்திக்கொண்டு “ப்பா. நீங்க தப்பாலாம் வளர்கலப்பா” என்றாள் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல்.

மகளை அப்படியே விட மனமில்லை. அவன் முடியாதென்றால் போகட்டும்… மகளுக்காக யோசிக்கும் அகிலன் போல் ஒருவன் அவள் வாழ்க்கையில் இருந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் என நம்பினார்.

“எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல கவி… இந்தக் கல்யாணம் நடக்கணுமா… நடக்க வேணாமான்னு கூட யோசிக்க முடியல” என்று அகிலனைப் பார்த்து அவர் சொல்ல…

“எல்லாம் தெரிஞ்ச அவரு இதுக்கு எப்படிப்பா… இது சரிவராது” என சொல்லி அவளும் அகிலனைப் பார்க்க, அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இருவரின் பார்வையும் வெவ்வேறு உணர்வுகளைக் காட்டியது. பெரியவரின் பார்வையில் கெஞ்சல். கவிதாவின் பார்வை இது வேண்டாம் என்றது.

“தம்பி… நான் கேக்கறது தப்பு தான்… எனக்கு தெரியுது. ஆனா எனக்கு இதைத் தவிர இப்போ வேற வழி தெரியல…” என்றவர் கைகளைக் கஷ்டப்பட்டுக் கூப்ப முயற்சித்துக்கொண்டு “இந்தக் கல்யாணம் நடக்குமா…?” கேட்டார் அகிலனிடம்.

“அங்கிள்… என்னதிது” என அவன் பதற, அதே நொடி “அப்பா… நீங்க போய்” என அவர் கையைப் பிரித்தாள்.

“நம்ம சைட்ல தப்ப வெச்சுருக்கோம் கவி… இதுவே அவர் வீட்ல இப்படி நடந்திருந்தா நம்ம என்ன பண்ணிருப்போம்? என் பொண்ண ஏத்துப்பீங்களா அகிலன்? நீங்க என்ன முடிவு சொன்னாலும் அத நான் ஏத்துக்கறேன்” என்றார் குனிந்த தலையுடன்.

பணிந்த அவர் முகத்தைப் பார்த்தவன் “அங்கிள். என்ன நீங்க… இப்போ என்ன ஆச்சுன்னு இப்படிப் பேசறீங்க” என சொல்லிவிட்டு கவிதாவை பார்த்தான்.

அவள் கண்கள் ‘வேண்டாம்’ என கெஞ்ச, அஜய் பேசியது மனதில் ஓட…

“எனக்கு இந்தக் கல்யாணம் நடக்கறதுல… எந்தப் பிரச்சனையும் இல்ல” என்றான் மூச்சை ஆழ இழுத்துவிட்டு….

சரியாகக் கவிதாவின் தம்பி இளஞ்செழியன் உள்ளே வந்தான். சிறிதுநேரத்தில் சித்தப்பாவும் வந்தார்.

அவரின் உடல்நிலை பற்றித் தெரியவந்தவுடன், அகிலனின் அப்பாவும் அம்மாவும் அன்றிரவே வந்து சேர்ந்தனர். அகிலனின் பெற்றோர் அவனைத் தனியாக அழைத்துச்சென்று தரவேண்டிய அர்ச்சனைகளைச் செவ்வனே செய்தனர்.

ஒரு வாரம் கடந்திருக்க… காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பழம் பெரும் கோவிலில் கவிதாவும் அகிலனும்… பக்கத்துப்பக்கத்தில். கிட்டத்தட்டக் கணவன் மனைவியாக.

சுற்றம் சூழ, சொந்தங்கள் வாழ்த்த, பரமேஸ்வரன் பார்வதியின் சாட்சியாக இனிதே திருமணம் நடைபெற்றது!!!

———இன்று———

கவிதாவின் போன் தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்க… அதன் சத்தத்தில் நிகழ்விற்கு வந்தவள், போனை எடுத்துப் பார்க்க, அது அகிலனின் நெருங்கிய நண்பன் அரவிந்திடம் இருந்து. அவசரமாக எடுத்தாள்.

“அண்ணா. சொல்லுங்கண்ணா… அப்படியா…… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… ஹ்ம்ம் சரிண்ணா……” என போனை வைத்துவிட்டு குதித்தாள். சந்தோஷத்தின் உச்சியில் இருந்தாள் கவிதா… காரணம் நாளை மறுநாள் அகிலனை நேரில் சந்திக்கப்போகிறாள்.

ஆனால் அவள் அங்கே சந்திக்கப்போவது அகிலனை மட்டுமா? வேறு யார்?

‘காதலால் ஏற்பட்ட என் மனக்காயத்திற்கு மருந்தானாய் நீ… மாறாக உனக்கு நான் தந்தது அதே காயத்தை… நானே வருகிறேன் அதற்கு மருந்தாக!’

10
4

2 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 6

  • priyadeepa

    Super very nice… But ajay will also accompany agilan, I think…. Correcta

    • Preethi S Karthik

      Ajay yes, but twist iruke 🙂 thank you sister 🙂

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved