என்னுள் நீ வந்தாய் – 7

என்னுள் நீ வந்தாய் – 7

———இன்று———

‘உன் பிரிவு தரும் வலிகளுக்கு மருந்து, நீ என்னுள் விட்டுச்சென்ற உன் சுவடுகள் மட்டுமே…’

அரவிந்திடம் சில நாட்களாக அகிலனைத் தொடர்புகொள்ளக் கவிதா கேட்க, அவன் மறுத்திருந்தான். காரணம்… அவன் நண்பனின் தற்போதய நிலை கவிதாவால் என நினைத்துக்கொண்டு…

அகிலன் துபாயிலேயே கொஞ்ச நாளாகத் தங்கியிருக்க, அவனைக் காண சிரத்தை எடுத்து இவளும் துபாய் சென்றிருப்பதைப் பார்த்துத்தான், அவளை நம்பி நண்பனைப் பார்க்க உதவினான் அரவிந்த்.

கவிதாவால் பொறுத்திருக்க முடியவில்லை. உடனே பார்த்தாக வேண்டும் என மனது கிடந்து துடித்தது. ஆனால் அரவிந்த் அவனை எங்கு காணலாம் என்று மட்டுமே சொல்லியிருந்தான். அதற்காகக் காத்திருந்தாள்.

‘அவனைப் பார்க்கும்போது என்ன பேசவேண்டும்’ என யோசிக்க, அவன் அவளிடம் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தது.

“பை சான்ஸ்… என்ன பிடிச்சுப்போச்சுன்னா கூட சொல்லிடு… ஐ வில் பி வைட்டிங்…” அதை நினைக்கும்போது சந்தோஷத்தில் இதயம் வேகமாகத் துடித்தது…

———அன்று———

திருமணம் முடிந்ததே தவிர, இருவரும் அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை. செய்யச்சொன்ன வேலையை மட்டும் செய்தனர்.

அவள் கொஞ்சமே கொஞ்சம் பேசியது அகிலனின் தங்கை ப்ரியா என்கிற இசைப்ரியாவிடம் மட்டுமே. ப்ரியா அகிலன் வீட்டின் செல்லக் கடைக்குட்டி. சுட்டியும் கூட. அண்ணன் விரும்பிய அண்ணியை மிகவும் பிடித்தது அவளுக்கு.

முன்பொருமுறை இதுபோல சொந்தத்தின் திருமணத்திற்குக் கவிதா சென்றிருந்தபோது, நடந்த ஒவ்வொரு சடங்குகளையும் பார்த்தபோது…

அவளும் அஜயும் மணவறையில் இருப்பது போல்… இருவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் திருமணப் பந்தத்தில் இணைவதுபோல்… அவ்வப்போது ஓரக்கண்ணில் சில்மிஷ பார்வை பார்ப்பதுபோல்… எனப் பெரிய மனக்கோட்டையே கட்டியிருந்தாள்.

ஆனால் நடந்தது… அவளுக்கும் அகிலனுக்குமான திருமணம். தான் தவறி கனவில் கூட நினைக்காத ஒன்று. ஒவ்வொன்றும் இருவரும் சேர்த்து செய்யும்போது மனது சொல்லமுடியாத அளவுக்கு வலித்தது.

திருமணம் முடிந்து அன்று மாலையே இரு வீட்டாரும் அகிலனின் குலதெய்வம் கோவிலுக்குப் புறப்பட்டனர். அடுத்தநாள் தரிசனம் முடித்துவிட்டு அவன் செங்கல்பட்டு வீட்டிற்கு இரு குடும்பமும் வந்தது.

அன்று அகிலன் வீட்டில் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அவன் அறைக்குள் அனுப்பிவைக்கப்பட்டாள்.

உள்ளே யாருமில்லை. அவள் சுற்றியும் பார்த்துவிட்டு, பால்கனியில் இருந்த சேரில் சென்று சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள் கண்களை மூடிக்கொண்டு.

இரண்டு நாட்களாக மூச்சு அடைப்பது போல் இருந்தது அவளுக்கு. நடந்தது எதுவும் பிடிக்கவில்லை.

எங்கும் கூட்டம். சுற்றியும் ஆட்கள். அனைத்தையும் விட, எல்லாநேரமும் அவன் அருகில். அதுவே ஏதோ சங்கடமாக இருந்தது. கண்ணீர் மூடிய கண்களை முட்டியது வெளியே வர.

அவன் சிறிதுநேரம் கழித்து உள்ளே வந்தான். இவள் வெளியில் இருப்பதைப் பார்த்தவன், இப்போது பேசவேண்டுமா? இல்லை விட்டுவிடவேண்டுமா? என்று புரியாமல் உள்ளேயே இருந்தான்.

நேரம் ஓடிக்கொண்டிருக்க, அவள் வெளியிலேயே இருக்க, அவளிடம் சென்றவன் “எவ்ளோ நேரம் இங்கயே இருப்ப? உள்ள வா” என்றான்.

அவளோ “எனக்கு இப்போ தேவ ப்ரைவசி. அது கிடைக்குமா?” கண்திறந்து எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கேட்க… அவள் கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டான்.

அவனுக்கும் புரிந்தது அவளின் நிலைமை. விருப்பமில்லாமல் ஒரு நிகழ்வு அதுவும் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வு நடப்பதென்றால் அது எவ்வளவு வலி தரும் என.

ஆனால் இப்படியே விடவும் மனமில்லை. எதையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அவள் எதை விரும்புகிறாளோ அதுவே தன் விருப்பம். முதலில் இருவர் இடையில் இருக்கும் அந்தப் பனிமலையை உடைக்க வேண்டுமென முடிவெடுத்தான்.

அவளும் இரவு முழுவதும் யோசனையிலேயே இருந்தாள்.

மருத்துவமனையில் அகிலன் சம்மதம் சொன்னபின், வேலைகள் அனைத்தும் துரிதமாக நடந்தது. எதிலும் அவள் ஈடுபடவில்லை.

கடைசியாக மருத்துவமனையில் பேசிய பின், அஜய்யிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. இவளும் முயற்சிக்கவில்லை.

‘எதற்காக’ என்று கூடத் தெரியாமல் பிரிவது என்பது வலியிலும் கொடிய வலி. அந்த ஒரு வாரமாக அதை அவள் அனுபவித்தாள்.

அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கும்போது, தான் வருத்தமாக இருப்பதை பார்த்தால் அவரும் வருந்துவார் என எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.

தன்னுடைய இந்த நிலைமைக்கு யார் காரணம்? அஜய்யா? இல்லை அகிலனா? இல்லை தானா?

தான் செய்த தவறு…

‘காதலித்த பெண்ணுக்குத் துணை நிற்காமல் இருந்த அஜய் போன்றவனைக் காதலித்தது. பின் அதைக் காலம் கடந்து அகிலனிடம் சொன்னது… ஆனால் பெண் பார்க்க வந்தபோது பேசுவதற்கான தருணம் அமையவில்லையே… பின் அஜய் வருவதாகச் சொன்னான்… வந்து அனைவரிடம் அவனே பேசி புரியவைப்பதாகச் சொன்னான். அதை நம்பினாள்… ஆனால் அவனுக்காகக் காத்திருந்து… அவன் வராமல் போனது. தனக்கு இதுதேவையில்லை என்று உறுதியாக அப்பாவிடம் சொல்லமுடியாமல் போனது…’ இது தவிரத் தன் மீது தவறென்ன உள்ளது எனத் தோன்றியது.

அஐய்யை நினைக்கையில் அப்படி ஒரு ஆத்திரம்.

‘எவ்வளவு விரும்பினேன். அவ்வளவு சுலபமா அதை முறிப்பது? முறித்துவிட்டானே. ஆண்மகனா அவன்? எந்தப் பிரச்சனையில் இருந்தாலும், இப்படிப் பாதியில் வெட்டிவிடுவது முறையல்ல. அதுவும் காரணம் கூடச் சொல்லாமல்??? அஐய்யை முற்றிலுமாக வெறுத்தாள். இனி அவனே வந்தாலும், தன்னை நிர்க்கதியில் விட்டவனைத் துளியும் ஏறெடுத்துப்பார்ப்பதில்லை’ என திருமணத்திற்கு முன்பே முடிவெடுத்திருந்தாள்.

அகிலனை நினைக்கும்போது கட்டுக்கடங்காத கோபம்.

‘ஒரு பெண் கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று சொன்னால், ஏன் எதற்கு என்று யோசித்திருக்கலாம். அவளுக்குப் பிடிக்காமல் செய்யும் திருமணம், அவன் வாழ்வை இனிமையாக்குமா என்ன? சரி… வேறு ஒருவனை நினைக்கும் பெண் தனக்குத் தேவையில்லை என்று நினைத்திருந்தால் இது நடந்திருக்கவே இருக்காது. கடைசியாகக் கூட அவனை நம்பினேன். இது வேண்டாமெனச் சொன்னேன். ஆனால் அவனோ? சரி என்று சொல்லிவிட்டான். அவன் வாழ்க்கை மட்டுமில்லாமல் தன் வாழ்க்கையும் சேர்த்தல்லவா பாழாக்கிவிட்டான்’ எனக் கோபம் பெருக்கெடுத்தது.

அப்போதிருந்த மனநிலையில் அவள் மறந்தது… அகிலன் அவளுக்கு உதவ நினைத்ததை. அவள் அப்பா கேட்டபோது அவனால் மறுக்க முடியவில்லை என்பதை.

இருவரும் இப்படியே யோசித்துக்கொண்டிருக்க, உறங்காமல் பொழுது விடிந்தது. இருவரிடமும் யாரும் எதுவும் கேட்கவில்லை முடிந்த இரவைப் பற்றி. அதுவே நிம்மதியாக இருந்தது கவிதாவிற்கு.

கவிதாவின் குடும்பம் மற்றும் அகிலனின் குடும்பம் இருவரும் சென்னைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அங்கே அவனுடைய நண்பர்கள் வட்டாரம் மற்றும் பிஸ்னஸ் அஸோஸியேட்ஸ்’க்காக தனியாக ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரிசெப்ஷன் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்த ரிசெப்ஷன் கவிதா அவளுடைய கடந்தகாலத்தைப் பற்றிச் சொல்லும் முன்னரே அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

அன்றைய மாலை, நண்பர்கள் வட்டாரம் சூழ, அந்த இடமே குதூகலமாக இருந்தது.

அகிலன் ஒவ்வொருவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்த, அவளோ நாட்டமில்லாமல், எதையும் கேட்காமல், தலையை மட்டும் ஆட்டினாள் மெல்லிய புன்னகையுடன்.

கட்டுமானத்துறையிலுள்ள பல பெரிய ஜாம்பவான்கள் முதல் புதிதாகத் தொழில் ஆரம்பித்தவர்கள் வரை நிறைய பேர் வந்திருந்தனர்.

அவர்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம், அவன் என்ன செய்கிறான், என அவன் சொன்னது எதுவும் அவள் மூளை வரை சென்றடையவில்லை. அதே தலையசைப்பு மற்றும் சின்னப் புன்னகை.

அவனுக்கும் புரிந்தது. மனது கொஞ்சம் வலித்தது. இதுவல்ல அவன் எதிர்பார்த்தது. அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு சின்ன முயற்சி கூட இல்லை அவளிடம். கஷ்டமாக இருந்தாலும் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அன்றைய வரவேற்பும் நல்லபடியாக முடிந்திருக்க, அனைவரும் அகிலனின் வீட்டிற்கு வந்தனர்.

அவன் அனைவரிடமும் நன்றாகப் பேசினான். ஆனால் கவிதாவால் முடியவில்லை. அகிலனின் அம்மா முகம் கொடுத்து பேசாததுபோல் உணர்ந்தாள். பின் அவர் பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன? என விட்டுவிட்டாள்.

அவளின் தம்பிக்கு கேம்பஸ் இன்டெர்வியூ இருப்பதால் அப்பாவும், தம்பியும், சித்தியும், சித்தப்பாவும் அன்றிரவே காஞ்சிபுரத்துக்குப் புறப்பட முடிவெடுத்தனர்.

அப்பா மகளுக்குப் பல அறிவுரைகளைக் கூறி, இனி இதுதான் அவள் வாழ்க்கை… மாப்பிள்ளை நல்ல குணம் கொண்டவராக இருப்பதால், நடந்த விஷயத்தைப் பெரிது படுத்தவில்லை.

அவள் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே அவர் நிம்மதியாக இருக்க முடியும் என சொல்லிவிட்டு சென்றார்.

அன்றைய இரவு. மறுபடியும் அகிலனின் அறைக்குள்.

‘என்ன வாழ்க்கடா இது. யாருன்னே தெரியாத ஒருத்தன்கூடக் கல்யாணம்… கல்யாணம் பண்ணிட்டா ஒன்னா இருக்கணுமா என்ன…? நான் ஏன் அவன் ரூம்’க்கு போகணும்? ஐயோ… என்ன பொலம்ப வெச்சுட்டாங்களே’ எனப் புலம்பிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே வந்ததும் கண்ணில் ரெஸ்ட் ரூம் தெரிய, மாற்று துணி எடுத்துக்கொண்டு உள்ளே புகுந்தாள். சிறிது நேரத்தில் அவள் வெளியில் வர, அவன் ஜன்னல் பக்கத்தில் அமைக்கப் பட்டிருந்தத விண்டோ சீட்டில் (Window seat) உட்கார்ந்திருந்தான் வெளியில் பார்த்தவண்ணம்.

அவள் சென்று கட்டிலில் உட்கார, அவன் திரும்பிப்பார்த்தான்.

“ஹ்ம்ம்… இந்தக் கல்யாணம் நடக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டல்ல… நடந்துருச்சு… அப்புறம்??? அடுத்தென்ன?” என்றாள் புருவத்தை உயர்த்திக் கட்டிலயும் அவனையும் மாறி மாறிப் பார்த்து!!

 

 

அவன் அவளைப் பார்க்க நன்றாகத் திரும்பி உட்கார்ந்துக்கொண்டான்.

“இது ஒரு நேம் சேக் கல்யாணம்ன்னு உனக்குப் புரியாம போய்டுச்சே. உன்னால இந்த ரிலேஷன்ஷிப்’ல சந்தோஷமா வாழ முடியம்ன்னு நினைக்கற?”

‘இரண்டு நாட்களாக ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசியவளை எப்படிப் பேசவைக்க’ என அவன் நினைத்திருக்க, அவளாகப் பேசியதை நினைத்து ஆச்சர்யப்பட்டான்.

அவள் உட்கார்ந்திருந்த தோரணை, அணிந்திருந்த த்ரீ ஃபோர்த் பேண்ட் மற்றும் டி ஷர்ட். தூக்கி முடிந்தக் கூந்தல், சம்மணமிட்டுக் கட்டிலில் உட்கார்ந்திருக்க, அதைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே, அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“இது நடந்தா உன் வாழ்க்கைல சந்தோஷம் கிடைக்காதுன்னு நான் முன்னாடியே சொன்னேனே… நீ எப்படி நான் உன்கூட வாழுவேன்னு அவளோ ஈசியா நினைச்ச?”

அவன் பதில் சொல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு கவனித்தான்.

அவனின் செய்கைகள் அவளுக்குக் கடுப்பாக “கழுத்துல தாலி கட்டிட்டா புருஷன் தான் எல்லாம்ன்னு இருப்பேன்னு நினைச்சியா. புருஷனாவது மண்ணாவது… போடான்னு போயிட்டே இருப்பேன்” என்றாள் அவனைப் பேச வைக்க…

இப்போது சிரித்தவன் “எப்படி… இந்தக் கல்யாணம் ஆன ஒரு வருஷத்துல டிவோர்ஸ் வாங்கிட்டு போற மாதிரியா பேபி?” நக்கலாகக் கேட்டான்.

அவனின் அலட்சியம் அவளுக்கு எரிச்சலைத் தர “டிவோர்ஸ்ஸா…? ஹாஹாஹா அந்த நினைப்பு வேற இருக்கா மிஸ்டர் அகிலன். நான் கேட்கவும் மாட்டேன். கொடுக்கவும் மாட்டேன்” என நிறுத்தி…

“கூடவே இருந்து உனக்கு எப்படில்லாம் டார்ச்சர் கொடுக்கலாம் யோசிக்கறேன்… என் வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிட்டு, டிவோர்ஸ் வாங்கி… நீ சந்தோஷமா இருக்கலாம்னு நினைப்போ… இனி உன் லைஃப்ல சந்தோஷமே இல்ல”

அவள் சொல்லிமுடித்த பின் அவள் மனமோ ‘என்னது சீரியல் டயலாக்லாம் பேசிட்டு இருக்கேன்’ என யோசிக்க… அவனோ விழுந்து விழுந்து சிரித்தான்.

“அச்சோ ஸ்வீட்டி… உனக்கு இந்த வில்லி கெட் அப்’லாம் சத்தியமா செட் ஆகல. ரொம்ப ட்ரை பண்ணாத.” என அவள் மனதைப் படித்தது போல் அதையே சொல்ல…

“ஏய். சும்மா ஸ்வீட்டி… பேபின்னு கூப்பிட்டு கடுப்பேத்தாத”

“ஹாஹா அப்போ ஹனி’ன்னு கூப்பிடவா ஸ்வீட்டி…” என ரசனையாகச் சொல்லிப் புன்னகைத்து… “எனக்கு மட்டும் என்ன ஆசையா…? வேற ஒருத்தன லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு. ஹ்ம்ம்?”

“அன்னைக்கு உன் ஸ்டோரி சொன்னப்ப எப்படியாச்சும் உன்னோட எக்ஸ் லவர் கூட உன்ன சேர்த்து வைச்சிடலாம் நினச்சேன்… ஆனா பாரேன்…” ஒரு நொடி அஜய் அவனுடன் பேசியது நினைவிற்கு வந்து அவன் பேசுவதை நிறுத்த…

“எக்ஸ் லவரா?” ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

“பின்னே…? இந்த நிமிஷம் அவன் உன்னோட எக்ஸ் லவர் தான். உஷ்ஷ்… நடுல பேசி டைவர்ட் பண்ணாத பேபி”

“உன் அப்பா உடம்பு சுத்தமா முடியாம, கை எடுத்து கும்பிட்டு என் பொண்ண ஏத்துப்பீங்களான்னு கேட்டப்ப, அத ஒத்துக்கலைனா நான் மனுஷனே இல்ல. அதுனால தான் இந்தக் கல்யாணமே”

‘அவன் கூறுவதும் சரிதான். அப்பா கேட்டதற்குத் தானே சரியென்றான்’ என்றது அவள் மனம். இப்போது தான் அது அவளுக்கு உரைத்தது.

“அப்புறம்… இப்போ அஜய் உன்னோட எக்ஸ் லவர் தான். பிகாஸ் யு ஆர் லீகலி மை வைஃப். அதுக்காக நான் தான் உனக்கு எல்லாமே… கல்லானாலும் கணவன்னெல்லாம் டயலாக் விடமாட்டேன்”

அவன் பேசப் பேச “உஃப்ப்” என்று பெருமூச்சு விட்டாள்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் “உனக்கு அஜய் கூடத் தான் உன் லைஃப் அமைச்சுக்கணும்னு ஆசப்பட்டா, வெல் அன்ட் குட்… அத அப்ஜெக்ட் பண்ணமாட்டேன்…”

“சோ இன்னும் மூணு… இல்ல ஆறு மாசம்… இல்ல எவ்ளோ நாள் வேணும்னாலும் எடுத்துக்கோ… உனக்கு என்ன வேணும்ன்னு டிசைட் பண்ணு. டிவோர்ஸ் வேணுமா… வாங்கிக்கோ.”

“அத விட்டுட்டு சும்மா வில்லி மாதிரிலாம் பேசாத. என் வாழ்க்கைய ஸ்பாயில் பண்றேன்னு சொல்லிட்டு உன் லைஃப் கெடுத்துக்காத பேபி… ஓகே” என்றான் மிகவும் சாதாரணமாக.

திருமணம் முடிந்தது… அடுத்து ஏதாவது செய்ய நினைக்கப்போகிறானோ என நினைத்துத்தான் பேச்சை ஆரம்பித்தாள்…

ஆனால் அவளையே முடிவெடுக்கச்சொன்னதைக் கேட்ட கவிதா, அவனையே பார்க்க “என்ன சைட் அடிச்சது போதும் பேபி. அப்புறம் பை சான்ஸ்… என்ன பிடிச்சுப்போச்சுன்னா கூடச் சொல்லிடு… ஐ வில் பி வைட்டிங் …” முடிவாக முடித்தான் கண்ணடித்து.

அவன் கடைசியாகச் சொன்னது காதில் நன்றாக உரைக்க, தலையை உலுக்கிக்கொண்டு “ஓ… உன்ன? நான்? நெனப்பு தான். எனக்குத் தூங்கணும்” என்றாள்.

“இதெல்லாம் என்கிட்ட கேட்க வேணாம். உனக்குத் தூக்கம் வந்தா தூங்கு” என்று மொபைலில் ஏதோ நோண்ட ஆரம்பிக்க, “ஹலோ என்னால கீழலாம் படுக்க முடியாது. ஏன் இங்க ஒரு சோஃபா கூட இல்ல?” என்றாள் அவனைப் பார்க்காமல்.

“நான் உன்ன கீழ படுன்னு சொல்லவே இல்லையே. பெட்லயே படுத்துக்கோ… பெட் நல்லா பெருசா தான் இருக்கு. ஐ ஹவ் நோ ப்ரோப்லம் அன்ட் ஐ நோ மை லிமிட்ஸ்” என்றான் தோள்களைக் குலுக்கிக்கொண்டு.

அது அதுவும் கேட்காமல் அலட்சியமாக “ப்ச் பட் ஐ ஹவ்… எனக்குக் கீழ படுத்தா உடம்பு வலிக்கும். சோ நான் மேல படுக்கணும்… நீ கீழ படுத்துக்கோ” என அவள் சொல்ல…

“வாட்… நானா???” என அதிர்ந்தான் அதைக்கேட்டு.

“படுக்க முடியுமா? இல்ல நான் ஹால்ல போய்ச் சோபா’ல படுக்கவா???” அவள் அசால்டாகக் கேட்க

“க்ராப்…” பற்களைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தவன் “நம்ம அடிச்சுக்கறது வீட்ல எல்லாத்துக்கும் தெரியனுமா?” எனச் சிடுசிடுத்து… கட்டிலிலிருந்து தலையணை மற்றும் போர்வையை எடுக்கப்போனான்.

“எனக்கு அந்த பில்லோவும் (pillow) கிடைக்குமா” அவள் அவனிடம் கேட்க…

“ஏய் என்ன லந்தா? கீழ படுக்கச் சொன்ன ஓகே… டென்ஷன் ஏத்தாம படுத்துரு” என கடிந்துவிட்டு கீழே விரித்துக்கொண்டு படுத்துவிட்டான்.

அவளின் செயல்களை நினைக்கும்போது சிரிப்பே வந்தது அவனுக்கு. ‘இவள் இப்படி நடந்துகொள்ளவில்லை என்றால் தான் ஆச்சர்யமே’ என நினைத்தான்.

‘பிடிக்காத ஒன்றை முதுகில் கட்டிவைத்து, இனி இதைக் கட்டிக்கொண்டு தான் நீ வாழ்ந்தாகவேண்டும் என்று சாதாரணப் பெண்ணிடம் சொன்னால் சரி என்றிருப்பாள். ஆனால் இவள்…’ புன்னகைத்தான்… அவளை இதற்கு முன் பார்த்த தருணங்கள் நினைவிற்கு வந்தது.

அதே நினைப்புடன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போது, திடீரெனச் சத்தம் கேட்டு அதிர்ந்து எழுந்து உட்கார்ந்தான்… அவன் கண்கள் அனிச்சையாகத் திரும்பியது கவிதாவிடம்!!!

———இன்று———

அன்று நடந்தது இன்று நினைத்தாலும் கவிதாவின் முகம் புன்னகையை உதிர்த்தது.

அவள் நினைத்ததுபோல் இரு நாட்களும் வேகமாக நகர்ந்தது.

அகிலனின் நிறுவனம், துபாயில் இருக்கும் கட்டுமான நிறுவனத்துடன் புதிய ப்ராஜெக்ட் ஒன்று கையொப்பமானதால் நடக்கும் சின்னப் பார்ட்டி.

அவன் நிறுவனத்திற்காக வேலை செய்யப்போகும் ஆட்கள் மற்றும் அங்குத் தெரிந்த நண்பர்களுடன் நடக்கவிருக்கும் அந்த பார்ட்டிக்கே கவிதா செல்லவிருந்தாள்.

அந்த ஹோட்டலின் மேல்மட்டத்தில் இருக்கும் அழகிய திறந்தவெளி பஃபே (Buffet) களைகட்டியது. ஆங்காங்கே சன்னமாக ஏற்றப்பட்ட மின் விளக்குகள் அதனுடைய வேலையைச் செய்ய, அந்த இடமே ரம்மியமாக இருந்தது.

அகிலனின் குழு ஒருபுறமிருந்தாலும், மற்ற வெளி ஆட்களும் இருந்தனர். அவன் அவளுக்காக முதன்முதலாக வாங்கித்தந்த புடவையைக் கட்டிக்கொண்டு கண்கள் நிறைய ஆசையுடன் அந்தத் தளத்திற்கு வந்தாள்.

மிதமான ஒப்பனை. அந்த மங்கிய ஒளியில் கூட அவள் முகத்தில் மந்தகாசம் தவழ்ந்தது.

பேரழகி என்று சொல்லுமளவிற்கு அழகி இல்லை என்றாலும்… சுண்டினால் சிவக்கும் அளவிற்கு நிறம் இல்லையென்றாலும், ஒருமுறை பார்த்தால் திரும்பிப் பார்க்கத் தூண்டும் ஏதோ ஒன்று அவளிடம் எப்போதுமே இருக்கும்.

அவளின் உடற்கட்டா? இல்லை நிமிர்வா? இல்லை அனுகுமுறையா? இல்லை எப்போதும் நேராக ஒருவரின் கண்களைப் பார்த்து பேசும் குணமா? தெரியவில்லை.

அவள் அந்த இடத்திற்குள் செல்ல, அவள் கண்களில் முதலில் பட்டது, தூர நின்றுகொண்டிருந்த லயா.

அவளுடன் யாரோ பேசிக்கொண்டிருக்க, யோசனையுடன் அவளை நெருங்கும்போது, “கவிதா” என்ற குரல் அவளை நிறுத்தியது. திரும்பினாள். அங்கே அஜய். புன்னகை தவழ்ந்த முகத்துடன்.

‘ஓ… லயா இவனப்பார்க்க வந்துருக்கா…’ என கவிதா நினைத்துக்கொள்ள…

அவள் அருகே அஜய் வர, “ஹே அஜய்” என புன்னகைத்தாள்.

‘ஒருவேளை AJ என்பவன் அஜய் இல்லாமல் வேறு யாராவதாகக்கூட இருக்கலாம்’ என்ற யோசனையும் அவளுக்கு முன்பு வந்தது. ஆனால் இப்போது அஜய் தான் என நம்பினாள்… அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு லயா புறம் திரும்பினாள்.

அதே சமயம் லயாவும் அவளுடன் பேசிக்கொண்டிருந்தவனும் கவிதா புறம் திரும்ப…… அதைப் பார்த்த கவிதா, அதற்கு மேல் நடக்கமுடியாமல் அப்படியே நின்றுவிட்டாள். அங்கே லயாவும் அகிலனும்…

“AJ” என்பது யார் எனப் புரிய… அதுவரை மிளிர்ந்த கவிதாவின் கண்கள், திடீரெனத் திரண்ட கண்ணீரால் மின்னியது.

லயாவும் அகிலனும் கவிதாவைப் பார்க்க, அகிலனின் கண்கள் அவளைப் பார்த்த அடுத்த நொடி, பக்கத்தில் இருந்த அஜய்யின் மீது நிலைத்தது!

11
5
2
3

4 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 7

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved