என்னுள் நீ வந்தாய் – 8

என்னுள் நீ வந்தாய் – 8

‘ஆர்க்கிடெக்ட் AJ’ என்று அவனுடைய பிஸ்னஸ் வட்டாரத்தில் அழைக்கப்படும் அகிலன் ஜெயராமன்.

படித்தது கட்டிடக்கலை. படித்து முடித்து வெளிநாட்டு வேலையில் முதல் இரண்டு வருடம்…

பின் தானாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, அதில் கட்டிடக்கலை சார்ந்த வடிவமைப்பு, மற்றும் சேவை, இன்டீரியர் டிசைனிங், பிம் சேவை, டர்ன்கி இன்டீரியர் கான்ட்ராக்ட்டிங், என பல சேவைகளை செய்து வருகிறான்.

பல குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்கள் இவனின் நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் அரபு நாடுகளில் இருந்து சில ப்ராஜெக்ட்ஸ் எடுத்து செய்துவருகிறான்.

முதலில் ஐந்து பேர் கொண்டு ஆரம்பித்த தொழில் பல சரிவுகளைச் சந்தித்து, மன ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பல அடிகளை வாங்கி, இப்போது கிட்டத்தட்ட நூறு பேர் இவன் கீழ் வேலை செய்யும் அளவிற்கு உயர்த்திருக்கிறான்.

என்னதான் ஒரு நிறுவனத்தின் உரிமையாளனாக இருந்தாலும், துளியளவும் தலைக்கனம் இல்லாமல் மிகவும் சகஜமாகப் பழகுவதில் வல்லவன்.

சாதாரணக் குடும்பத்தில் இருந்து உயர்ந்ததாலோ என்னவோ, தேவைக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்வான். ஒருபோதும் தன்னை உயர்த்திக் கவிதாவிடம் பேசியதில்லை இத்தனை நாட்களில்.

அகிலன் தான் AJ… அதை ஏற்றுக்கொள்ளச் சிலநிமிடங்கள் எடுத்தது கவிதாவுக்கு.

எதிரில் இருக்கும் அகிலனையும் லயாவையும் பார்த்து ஏதேதோ மனதில் தோன்ற, கண்களில் கண்ணீர் கோர்க்க, அவள் இயல்பு அதை வரவிடாமல் தடுத்தது.

“கவிதா என்னாச்சு…?” என்ற அஜய்யின் குரல் அருகில் கேட்க திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

இந்தக் கூத்தில் இவன் பக்கத்தில் நின்றிருப்பதை மறந்துவிட்ட கவிதா, அவனைப் பார்த்து வராத புன்னகையுடன் ‘ஒன்றுமில்லை’ என்பதுபோல் தலையசைத்தாள். கண்கள் மட்டும் அகிலனை பட்டு பட்டு மீண்டது.

அஜய்க்கு அவள் சரியில்லை, கண்கள் கலங்கப்பார்க்கிறது எனப் புரிந்து, அதைக் கேட்கவரும்போது, அதேநேரம் லயா கவிதாவைப் பார்த்துவிட்டு, அகிலனை அழைத்துக்கொண்டு அவள் அருகில் வந்தாள்.

“கவிதா… நீங்களும் இங்க தான் இருக்கீங்களா…” என அஐய்யை  பார்த்துக்கொண்டே கேட்டாள், அஜயுடன் வந்திருப்பாள் என நினைத்துக்கொண்டு.

ஆம் என்பது போல் கவிதா மேலும் கீழும் தலையசைக்க, அகிலன் அஐய்யைப் பார்த்துவிட்டு கவிதாவைப் பார்த்தான்.

“நான் சொன்னேனே… AJ இவர் தான்” என லயா அறிமுகப்படுத்த அவனைப் பார்த்த கவிதா, புன்னகைக்க முயற்சித்தாள்…

“AJ இவங்க கவிதாயினி. என்கூட வேலை பாக்கறாங்க” என்றவுடன் அவளைப் பார்த்த அகிலன் “ஹாய்” என்றுவிட்டு அஐய்யைப் பார்த்தான். முகத்தில் துளிக்கூடப் புன்னகை இல்லை.

‘அவன் யார்’ என்று தெரிந்துகொள்ள அஐய்யைப் பார்க்கிறான் எனப் புரிந்துகொண்ட கவிதா “இவர் அஜய்” என்று மட்டுமே சொன்னாள். அகிலனின் புருவங்கள் உயர்ந்தது. அது ஆச்சர்யமா? இல்லை அதிர்ச்சியா? இல்லை அலட்சியமா? கவிதாவால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

“ஹலோ” என்று அஜய், அகிலனையும் லயாவையும் பார்த்து சொல்லிவிட்டு “கவிதா. நீ பேசிட்டு இரு. ஃபிரண்ட் கிட்ட சொல்லிட்டு வந்துடறேன். டூ மினிட்ஸ்” என சொல்ல, கவிதா புன்னகைத்தவுடன் அவன் சென்றான்.

தலைக்கு மேல் தெரிந்த வானம் சுற்றுவதுபோல் இருந்தது கவிதாவுக்கு. என்ன நடந்தது… நடக்கிறது… நடக்கப்போகிறது… என யோசிக்கமுயற்சித்தாலும் முடியாமல் இதயம் வேகமாகத் துடிக்க,

எங்கே அங்கேயே இருந்தால் ஒன்று அழுது விடுவோம் இல்லை தலைசுற்றி கீழே விழுந்துவிடுவோம் என்றெண்ணியவள்…

“லயா… யு கேரி ஆன். ஐ ஷல் மேக் எ மூவ். அப்புறம் பாக்கலாம்” என சொல்லிவிட்டு, அகிலனைப் பார்க்காமல், பதில் எதிர்பார்க்காமல் அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள்.

கண்ணாடி முன் அவளைப் பார்க்க அவளுக்கே கூச்சமாக இருந்தது. ‘இப்படித் தயாராகி வந்ததெல்லாம் அவனைப் பார்க்கவல்லவா?’ அழுகைத் தொண்டையை அடைத்தது.

‘முடிந்ததா அனைத்தும்? மறுபடியும் ஏமாற்றமா?’ மனதின் அழுத்தம் அதிகரித்தது. நெஞ்சை கிழிக்கும் வலி.

‘அகில் லயாவை விரும்புகிறானா?’ என நினைக்கும்போதே அது கசந்தது… என்ன செய்தும் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டு, ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்தாள்.

கண்கள் தானாகத் தேடியது அகிலனை. தூரத்தில் ஒருவனுடன் அவன் பேசிக்கொண்டிருந்தான். எப்போதும் இருக்கும் மிடுக்குடன் அதே பொலிவுடன்… கண்கள் நிறையப் பார்த்துக்கொண்டாள்.

அவன் பேசிக்கொண்டிருந்தாலும் ‘அவள் வெளிவருவாளா…?’ என பார்ப்பவன் போல, கண்கள் ரெஸ்ட் ரூம் இருந்த இடத்தைத் தொட்டு தொட்டு மீண்டபோது, கவிதா வெளியில் வந்தாள். அவனும் அவளைப் பார்த்தான்.

அவள் சரியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறினாள். அதேநேரம் முகவாட்டத்துடன் செல்பவளைப் பார்த்த அஜய் அவள் பின்னே அவசரமாகச் சென்றான்.

அவள் சென்றதையும், அஜய் அவள் பின் சென்றதையும் பார்த்த அகிலன் முகம் முற்றிலுமாக மாறியது…

அவள் எந்த உணர்வையும் அகிலனிடம் வெளிக்காட்டாமல் இருந்ததாலோ என்னவோ அகிலனுக்குத் தன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறாள் என்பது தோன்றவில்லை போல.

கெஸ்ட் ஹவுஸ் வந்த கவிதாவுக்கு இப்போது அழுகை வரவில்லை.

கட்டிலில் இருந்த தலையணைகளைத் தூக்கி எறிந்தாள். கோபம், ஏமாற்றம், வேதனை, அழுத்தம், எனப் பலவிதமான உணர்ச்சிகள் ஒன்றாய் தாக்க, கையில் கிடைத்ததைத் தூக்கி எறிந்தாள்.

தொண்டை வறண்டது. பாறை போல் உறைந்திருந்தாள். மனது மிகவும் பாரமானது. அஜய் பிரிந்தபோது ஏற்பட்ட வலியை விட இது பலமடங்கு வலித்தது.

அகிலனை சத்தியமாக அவள் நினைக்கவில்லை AJ’வாக.

அவன் மீதிருந்த நம்பிக்கையா? தன்னைத் தவிர அவன் மனதில் வேறொருவர் வர வாய்ப்பேயில்லை என்ற தப்பான நினைப்பா? இல்லை அவனை வெளிவட்டாரத்தில் எப்படி அழைப்பார்கள் என்று கூடத் தெரியாத அளவிற்கா அவனுடனான தன்னுடைய வாழ்க்கை இருந்தது? எனப் பல கேள்விகள் மனதில் தோன்ற, அது மனதை இன்னமும் வலிக்கச் செய்தது.

தன்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் என தாமஸிடம் சொல்லிவிட்டு வந்திருந்ததால், உள்ளேயே இருந்தாள். தலை பாரமானது. இதயம் வேகமாகத் துடிக்க, என்னசெய்வதென்று தெரியாமல் தூக்க மாத்திரை ஒன்றைப் போட்டுகொண்டு அப்படியே படுத்துவிட்டாள்.

எவ்வளவு நேரம் முழித்திருந்தாலோ, நடு இரவில் திடீரென அவள் அறைக்குள் ‘தொம்’ என்ற மெல்லிய சத்தம். தூக்கத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தாள் கவிதா.

மண்டையில் நல்ல அடி… தேய்த்துக்கொண்டாள். முன் வராத அழுகை இப்போது முட்டிக்கொண்டு வந்தது. உடல் வலி ஒரு பக்கம், மன வலி ஒரு பக்கம்.

‘தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என நினைத்து அழுகை வர, முதன் முதலில் அகிலன் முன் விழுந்தது கண்முன்னே வந்து, அது இன்னமும் அழுகையை அதிகப்படுத்தியது.

———அன்று———

கீழே படுத்து உறங்கிக்கொண்டிருந்த அகிலன், திடீரெனச் சத்தம் கேட்டு, எழுந்தமர்ந்தவன், கவிதாவைப் பார்க்க, அவள் கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தாள்.

இந்தப்பக்கம் படுத்தவள் எதிர்பக்கம் கீழே விழுந்துகிடந்ததை முதலில் பார்த்தவனுக்கு, சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவைக்க, கட்டிலுக்கு அந்தப்பக்கம் இருந்த கவிதாவின் கண்கள் மெல்ல கலங்கியது வலியால்.

இவன் சிரிக்கவேறு செய்ததால், அது ஒருவிதமான அசௌகரியத்தைக் கொடுக்க, அவள் கலங்கியதைப் பார்த்த அடுத்தநொடி, பறந்து அவள் அருகில் சென்றான் சிரித்ததற்குத் தன்னைத் திட்டித் தலையில் அடித்துக்கொண்டு.

“ஹே எப்படி விழுந்த? அடி ஒன்னும் படலயே” என கேட்டுக்கொண்டே அவள் அருகில் செல்ல, அவனை அருகில் வரவிடாமல் கைகாட்டி தடுத்தாள்.

“நான் பாத்துக்கறேன்” என சொல்லிவிட்டு தலையைத் தேய்த்துக்கொண்டு கை முட்டியும் தேய்த்துக்கொண்டே கட்டிலில் ஏறினாள். அப்போது தான் அவனும் கவனித்தான் தலையில் நல்ல காயம்.

வலியை அவள் கண்கள் காட்ட, “எப்படி விழுந்த?” என மறுபடியும் கேட்டான்.

“எல்லாம் தலையெழுத்து. உன்னால தான். நான் தான் பில்லோ கேட்டேனே குடுத்தாயா…?” என தேய்த்துக்கொண்டே அவள் சொல்ல, முதலில் புரியாமல் பார்த்தான்.

அடுத்தநொடி அவசரமாக அவனுடைய தலையணையை அவளுக்குத் தர, அதைப் பிடுங்காத குறையாக வாங்கிகொண்டாள். அவனுக்குச் சிரிப்பு வந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் “எப்பவும் இப்படி விழுவயா?” என அவளிடம் கேட்க…

“ப்ச், எப்போலாம் ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்’டா இருக்கேனா… அப்போ ரொம்ப புரளுவேன். சைட் பில்லோ இல்லனா விழுந்துடுவேன். ப்ளீஸ் என்ன ஸ்ட்ரெஸ்’னு அடுத்தக் கேள்வி கேட்காத. அதுக்கு காரணம் நீயும் தான்” எரிச்சலுடன் சொல்லி மறுபடியும் தலையைத் தேய்த்துக்கொண்டாள்

முன்னந்தலை சிவந்திருக்க, “நான் ஐஸ் க்யூப் எடுத்துட்டுவரேன்” சொல்லிக்கொண்டே கதவருகே அவன் போகும்போது “அதெல்லாம் வேணாம். ரெண்டு நாள் தூக்கம் சுத்தமா இல்ல. நான் தூங்கறேன்” என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டாள்.

படுத்தவுடன் சில நிமிடங்களில் உறங்கியும்விட்டாள். ஆனால் அவனுக்குத் தூக்கம் வந்தால் தானே…? அவள் அருகிலேயே நின்றிருந்தான். அவளைப் பார்த்தவண்ணம்.

அவள் நெற்றி கன்றிப்போய் இருந்தது. அவன் கை அவள் நெற்றி வரை சென்றது… அதை வருடிவிட. ஆனால் செய்யவில்லை. அமைதியாகச் சென்றான் பால்கனிக்கு அமைதியற்ற மனதுடன்…

 

 

அடுத்தநாள் காலை விடிந்தது. இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்தவள் நன்றாகத் தூங்கினாள். மணி எட்டாகியும் அவள் எழவில்லை. பின் பொறுமையாக எழுந்து சுற்றியும் பார்க்க அகிலன் இல்லை.

எழுந்து குளித்துவிட்டு, என்னசெய்வது என தெரியாமல் உள்ளேயே இருந்தாள்.

நெற்றிக்காயம் வேறு… வலி ஒருபக்கம்… கோபம் ஒரு பக்கம்… இயலாமை ஒரு பக்கம். புது இடம். என்ன செய்வது என தெரியாமல் உட்கார்ந்திருந்தாள்…

‘அவள் இன்னமும் எழவில்லையோ?’ என நினைத்துக்கொண்டு, அகிலன் உள்ளே வர, அவள் உள்ளே இருந்ததைப் பார்த்து “இங்க என்ன பண்ணிட்டு இருக்க ஸ்வீட்டி. வா…” என சொல்ல, அவனைத் தடுத்து…

“நேத்தே சொன்னேன் ஸ்வீட்டி பேபி’ன்னு சொல்லாதன்னு. சத்தியமா எரிச்சலா இருக்கு… நீ எனக்கு ஜஸ்ட் ஒரு acquaintance… தேர்ட் பெர்சன். அவ்வளவு தான். கல்யாணம் பண்ணிட்டோம்ன்னு ரொம்ப உரிமை எடுத்துக்க வேணாம்” அழுத்தமாகச் சொல்லிவிட்டு, மறுபடியும் தலை வலிக்க, அதைப் பிடித்துக்கொண்டாள்

“நான் உனக்கு acquaintance’ஸா இருக்கலாம். பட் எனக்கு நீ…” ஏதோ நினைத்து நிறுத்திவிட்டு “ப்ச்… வா. மொதல்ல ஐஸ் பேக் வெக்கலாம்” என்றான்.

அவள் எடுத்தெறிந்து பேசுவது அவனுக்கு வருத்தமாக இருந்தாலும்… அது மனதில் வலியைத் தந்தாலும்… அவள் வலியால் முகம் சுழிக்கும்போது அனைத்தும் மறைந்தவனாய் அவளுக்கு உதவ அவன் மனம் துடித்தது.

அவள் நகராமல் அங்கேயே இருக்க… “ரூம் உள்ளேயே இருக்க முடியாது பேபி. அம்மா உன்ன வரச்சொன்னாங்க” என சொல்லிவிட்டு வெளியேறினான், அவள் எப்படியும் வெளியே வருவாள் என…

அதே போல், அவள் படியிறங்கி வரும்போது கீழே ஐஸ் பேக்’குடன் அவன்.

அவன் அம்மா லட்சுமி சமையலறையில் இருந்து வெளியே வந்தவர், அவன் கையில் ஐஸ் பேக்’கை பார்த்துவிட்டு, இவள் நெற்றி வீங்கியிருந்ததைப் பார்த்து, என்ன ஆயிற்று என வினவினார்.

அவள் ‘என்ன சொல்ல’ என முழிக்க, “தூக்கத்துல பாத்ரூம் கதவை திறக்கும்போது வால்’ல (wall) முட்டிடா மா” என சமாளித்தான். வெறுமனே “ஓ” என்று சொல்லிவிட்டு, சமையலறை உள்ளே சென்றுவிட்டார்.

சில நிமிடங்கள் கழித்து, அவள் காயத்தில் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, சமையலறையில் இருந்து லட்சுமி, கவிதாவை அழைத்தார். அவளும் உள்ளே சென்றாள்.

“வலி பரவால்லயா?” அவர் கேட்க, மண்டையை மட்டும் ஆட்டினாள் பரவாயில்லை என்று.

“இனி காலைல கொஞ்சம் சீக்கரம் எழுத்துரு. நாங்க எல்லாரும் ஆறு… ஆறரை மணிக்குள்ள எழுந்துருச்சுடுவோம். நீயும் அத பழகிக்கோ” என்றவர் அவள் கையில் காபியைக் கொடுத்தார்.

என்ன சொல்வதென்று தெரியவில்லை கவிதாவிற்கு. அவர்கள் வீட்டில் விடிந்த முதல் காலை… முதல் கட்டளை. சரி என்பது போல் தலையசைத்தாள்.

உள்ளே இருந்து குடிக்கவேண்டுமா இல்லை… வெளியில் சென்று குடிக்கவேண்டுமா என யோசிக்கும்போது அகிலன் உள்ளே வந்தான்.

“ஏன் நின்னுட்டே குடிக்கற. உட்கார்ந்து குடி போ” என்றான் ஆபத்பாந்தவனாக… எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள்.

“அம்மா எல்லாமே இன்னிக்கே வேணாமே. போகப் போக அவளுக்கு எது முடியுமோ அத பழகிக்குவா” என்று மெதுவாகச் சொல்ல… அவரோ “அகில். நான் எதுவும் தப்பாசெல்லலயே. இதுல நீ தலையிடாத” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

காபி குடித்தபின் மெதுவாகக் கிச்சனுக்குள் சென்ற கவிதாவைப் பார்த்த லட்சுமி “க்ளாஸ் அங்க போட்டுடு. மதி கழிவிடுவா” என்றுவிட்டு “நாம கோவிலுக்குப் போகணும். நீ போய் ரெடி ஆகிட்டு வா… போயிட்டு வரப்ப வழிலேயே சாப்பிடுப்போம்.” என்றார்.

‘ஐயோ மறுபடியும் கோவில் குளமா… அவனுடன் சேர்ந்து சடங்கா’ சலிப்பாக இருந்தது கவிதாவிற்கு. அவரிடம் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அறைக்குச் சென்றாள்.

அங்கே அகிலன் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருக்க, இவள் உள்ளே சென்றசமயம் பின்னே ஓடிவந்தாள் ப்ரியா.

“அண்ணி… அம்மா உங்கள புடவ கட்டிக்க சொன்னாங்க. என்ன கலர் கட்டப்போறீங்க?” ஆர்வத்துடன் கேட்க…

‘கண்டிப்பாக போகணுமா…’ என்ற யோசனையுடன் கவிதா சோகமயமாக இருந்ததைப் பார்த்த ப்ரியா “டேய் அண்ணா… நீயும் வரலாம்ல. பாரு… அண்ணி நீ வரலனு சோகமாய்ட்டாங்க” என்றாள் அண்ணனைப்பார்த்து.

சட்டென்ன திரும்பிப்பார்த்தான் அகிலன் கவிதாவை. ‘சோகமாக இருக்கிறாளா’ என பார்க்க, அவள் முகம் சோகத்தில் இருந்து பிரகாசமானது.

அவள் மனதிலோ ‘இது தெரியாம போச்சே. இவன் கூட இல்லனா நிம்மதி. அதில்லாம தனியா வீட்ல… இவன் கூடயா…’ என தன்னைக் குலுக்கிக்கொள்ள, அவள் நினைப்பது அவனுக்கும் புரிய, சிரித்துக்கொண்டு “ஏய் குட்டிப்பிசாசு… உன் அண்ணி வருவா. நீ போய் ரெடி ஆகு” என்றான்.

“ஆமா… நான் வரேன் ப்ரியா, டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்” என்றாள் சந்தோஷமாக. இவர்களுக்குள் இருக்கும் அடிதடி தெரியாத சின்னப்பெண் “அண்ணா சொன்னவுடனே கேட்டுடீங்களே” என்று சீண்டிவிட்டு ஓடிவிட்டாள்.

ப்ரியா உடன் இருந்தாலும், மாமனார் ஓரளவு நன்றாகப் பேசினாலும், தனக்குத் தேவையான ஒவ்வொன்றும் தானே கேட்டபோது கஷ்டமாக இருந்தது. மூன்று நாட்களாக அகிலன் அவளுக்குத் தேவையானதைச் செய்தான் ஆனால் இப்போது…

அவனுடன் இருந்தால் தொல்லை என்று நினைத்தாள்… ஆனால் அவன் இருந்திருந்தால் தெரிந்த யாரோ ஒருவர் உடன் இருப்பதுபோல் இருந்திருக்கும் என எண்ணவும் செய்தாள். ஆனாலும் ‘அவன் வேண்டாம்’ என்றது மனது.

சுவாமி தரிசனம் முடித்துவிட்டு உண்டபின், வீட்டிற்குத் திரும்பிய கவிதா, அவர்கள் அறைக்குள் நுழைந்ததும் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது…

கட்டில், மெத்தை மாற்றப்பட்டிருந்தது. ஒரு அடிக்கும் குறைவான உயரத்தில்… கட்டிலில் இருந்து இறங்கும் இருபுறமும், மென்மையான அதேசமயம் தடிமனான கார்பெட் விரிக்கப்பட்டிருந்தது. கட்டில் முழுவதும் நிறையத் தலையணைகள்.

அவளையும் அறியாமல் அவள் இதழ்கள் அதைப்பார்த்துப் புன்னகைத்தது. அவன் தனக்காக மாற்றியிருந்தது புரிந்தது. அப்போதுதான் சுற்றியும் அந்த அறையைப் பார்த்தாள்.

அழகாக வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் பூசப்பட்டிருந்தது. ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்த முரல் பைண்டிங். சில ஆர்டிஸ்டிக் டிஸ்ப்லே. நடுவில் பெரிய கட்டில். பக்கத்தில் ஒரு சின்ன டேபிள்.

கட்டிலின் எதிர் புறம் ஒரு பெரிய டிவி, ஒரு பக்கத்தில் நீலமும் வெளிர் சாம்பலும் கலந்த நிறத்தில் துணி வைக்கும் அலமாரி மற்றும் அதனுடன் இணைந்திருந்தது ட்ரெஸ்ஸிங் டேபிள்.

அடுத்து அவள் கண்ணில் பட்டது… ஜன்னலுடன் கூடிய இருக்கை (window seat) மற்றும் ஸ்டோரேஜ். அதனுடன் சேர்ந்திருந்த அலமாரியில் பலரகப் புத்தகங்கள். அங்கேயே லேப்டாப் வைக்கப்பட்டிருந்தது. அவன் பெரும்பாலும் அமருமிடம்.

ஜன்னலை மறைக்கத் தொங்கவிடப்பட்டிருந்த மெல்லிய திரை. அதில் கூடக் கலையாற்றல் தெரிந்தது.

அதை விட்டு சற்று தள்ளி இருந்த அழகிய ஒரு பால்கனி கதவு, அதன் வழியே வெளியே பார்க்க, சுற்றியும் பல செடிகள். அதுமட்டுமின்று பெர்கோலா மற்றும் அதன் அடியில் மூங்கிலால் செய்த இருக்கை. ‘ச்ச ஒரு ஊஞ்சல் இருந்தா எப்படி இருக்கும்?’ என மனதில் தோன்றவும் செய்தது அவளுக்கு.

சுருக்கமாக அறையை வர்ணிக்க வேண்டுமென்றால்… கலைநயத்தின் களஞ்சியம்.

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனிக்காமல் அறையை ஆராய்ச்சி செய்ய, “நம்ம ரூம் பிடிச்சிருக்கா பேபி? ஒன்னொன்னும் பார்த்துப் பார்த்து டிசைன் பண்ணது.” என்று அவன் பேசியதில், திரும்பி அவனை ஏறிட்டாள்.

“ஹ்ம்ம். நல்லாவே இருக்கு… உன் ரூம்” என நிறுத்தி “ஆனா எனக்கு பிடிக்கல” தோள்களைக் குலுக்கி சொல்லிவிட்டு பால்கனி சென்றாள்…

———இன்று———

“இனி அது நம்ம ரூம் இல்லையா அகில்?” கலங்கிய கண்களுடன், தரையில் படுத்திருந்தாள் கவிதா. கீழே விழுந்த காயம் ஏற்படுத்திய வலியை விட, இன்று லயாவுடன் அகிலனைக் கண்டது வலித்தது.

‘அப்போ தெரியல எனக்கு. ஆனா இப்போ புரியுது. என் மனசுல ஒரு துளி அளவுக்கு அன்னைக்கே நீ வந்துருப்பயோன்னு. ஆனா காலம் கடந்த புரிதல்…’ மனது உறங்குவேனா என்று அடம் பிடிக்க, கண்கள் மட்டும் உறங்கியது.

14
6
3
2

2 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 8

  • October 21, 2022 at 1:06 am
    Permalink

    We always won’t know the value of the things we have.. Later when we miss it, we regret.

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved