என்னுள் நீ வந்தாய் – 5A

என்னுள் நீ வந்தாய் – 5A 

கவிதாவும் அஜய்யும் ஹாஸ்டல் வந்தடைய, “ஃபைவ் மினிட்ஸ் வந்துடறேன்” என்று இறங்கி ஓடிவிட்டாள் அங்கிருந்து.

சொன்னதுபோல் ஐந்து நிமிடத்தில் வந்தவளை கண்கள் நிறைத்துப் பார்த்தான். அவள் முதல் நாள் வந்திருந்த உடையில் இருந்தாள்.

அவள் ஏறி உட்கார்ந்துக்கொள்ள, “இனி… சாப்பிட்டு போலாமா காலேஜ்க்கு?” மறுபடியும் கெஞ்சலாகக் கேட்க மறுப்புத் தெரிவிக்காமல் தலையசைத்தாள்.

“க்கும்… சரி கத பாதில நிக்குது” என்று அவள் இன்னமும் தெரிந்துகொள்ள ஆசைப்பட, “இது உனக்கு கதையா…?” என அவளைப் போலியாக முறைத்தவன் “எங்க விட்டேன்” எனக் கேட்டான்…

“எனக்கு நீ ப்ரோமோஷன் குடுத்தேன்னு சொன்னியே அங்க” என்று சொல்ல, ஒரு கணம் யோசித்தவன், “ஹாஹாஹா” என்று சத்தமாகச் சிரித்து “ஹ்ம்ம் ப்ரோமோஷன்… உனக்கு மட்டும் இல்ல… எனக்கும் தான்…” என்று அவளைக் கண்ணாடி வழியாகப் பார்த்து கண்ணடிக்க, பக்கத்திலிருந்த ஹோட்டலும் வந்தது.

இருவரும் ஆர்டர் செய்துவிட்டு, அவன் மீண்டும் ஆரம்பித்தான்…

“அடுத்த நாள் உன்ன பாக்க உன் க்ளாஸ்க்கு வந்தேன்… நீ காலேஜ் வரல… ரொம்ப கில்ட்டி’யா போச்சு. உன் ஃபிரண்ட் விட்டு உன்ன வரச்சொல்லி பேசலாம்னு நெனச்சப்ப தான் அந்த ப்ராப்லேம்”

“நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு நெனச்சேன் அந்த இஷ்யூ’ல… எந்த உரிமைலன்னு அப்படி தோணுச்சுன்னு தெரியல… ஆனா நீ” என்று அவளைப் பார்த்து முறைக்க “ஹலோ, நீ என்னென்னமோ மனசுல நெனச்சுட்டு இருக்கன்னு எனக்கு எப்படி தெரியும்…”

“அதில்லாம உன்மேலேயும் தப்பு இருந்துச்சு… நீ எங்கிட்ட எதையும் சொல்லாம என் கைய பிடிச்சு இழுத்த… அதான் என் சீனியர்ஸ் அங்க வந்தாங்க… யாருக்கும் பிரச்சனை வேண்டாமேன்னு நினச்சேன்” என அவள் வாதத்தை முன் வைக்க….

“ஹே… அவங்க உனக்கு சப்போர்ட்’க்கு வரல… என்ன மாட்டிவிட வந்தாங்க. நீ நினைக்கறளவுக்கு அவங்க அவளோ நல்லவங்க இல்ல…” கடிந்தான் அஜய். அவள் நம்பாதது போல் பார்க்க, அவன் “நீயே போகப் போகப் புருஞ்சுக்குவ… அத விடு”

“அப்புறம் போன ரெண்டு வாரம், உன்ன பத்தி முழுசா தெரிஞ்சுட்டேன். நீ பாக்காதப்பா உன்ன நல்லா சைட் அடிச்சேன்” குறும்புத்தனமாக சொல்ல, அவள் முறைத்தாள்.

“இந்த ஃபீலிங்ஸ்… இது லவ்’வா… இல்ல ஐ லவ் யு’ன்னு உன்கிட்ட சொல்லணுமான்னு தெரியல… பட் உன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. உன்ன பாத்துட்டே இருக்கணும்னு இருக்கு. உனக்கும் என்ன பிடிக்கும்னு தெரியும்” என்றான் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிப் புன்னகையுடன்.

அவளும் புன்னகைக்க இருவரும் காதலில் மூழ்கி… மற்றவரின் பார்வையில் திளைத்து, உணவில் கோலமிட்டு, ஒரு வழியாக அதிகம் பேசாமல் மௌனமே ஆட்கொண்டு காலேஜ் திரும்பினார்கள்.

படிப்பில் பெரிய நாட்டம் இல்லாமல், ஏதோ படிக்க வேண்டும் எனப் படித்தவன், விளையாட்டில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டான். தன் தந்தையின் தொழில் தான் அவன் செய்யப்போவது என்ற எண்ணமே காரணம்.

அவள் நன்றாகப் படிப்பது மட்டும் இல்லாமல், கல்லூரி அளவில் நடைபெறும் கட்டுரை, கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிக்காட்டினாள்.

அவன் பாக்ஸிங் மட்டுமல்லாமல், காலேஜ் பேஸ்கெட் பால் டீமில் இருந்தான். அவன் கேர்ள்ஸ் டீமுக்கு பயிற்சி தருவதைக் கவிதா பார்த்திருக்கிறாள். அவளும் நல்ல உயரம்.

அவனுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்று பேஸ்கெட் பால் டீமில் சேர்ந்தாள். இருவரின் நெருக்கம் இன்னமும் அதிகமானது. அவளை உற்சாகப்படுத்தி அவளின் அணி வெற்றிபெற உதவினான்.

நாட்கள் உருண்டோடியது. அவளுக்குத் தேவையானவற்றை அவள் சொல்லுமுன்… ஏன் அவள் நினைக்கும் முன் செய்தான். அவள் மனதில் ஆழமாகப் பதிந்தான். அவளை முற்றிலுமாக ஆக்ரமித்திருந்தான்.

அவன் இல்லாத நாட்களைக் கழிப்பதே கடினம் என்றாகியிருந்தது அவளுக்கு. அதுவே அவனுக்கும்… அவளும் விளையாட்டுமே அவனின் உலகம்…

தாயில்லாமல், மற்றும் தந்தை இருந்தும் அவர் அருகாமையில் இல்லாமல் இருந்ததால்… அவன்தான் அவளின் அனைத்துமாக இருந்தான். கல்லூரிக்குப் போகாமல் ஊர் சுற்றினார்கள். பார்க்கவும் அழகான பொருத்தமான ஜோடி போல் இருந்தனர்.

காதல் பறவைகள் என மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் தெரியுமளவுக்கு இருந்தது அவர்களின் நெருக்கம். இதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளும் கல்லூரியில்லை போலும்….

அவனும் இறுதியாண்டு வர, அவளும் மூன்றம் ஆண்டில் கால் பதித்திருந்தாள். அவன் வற்புறுத்தலின் பேரில் அவன் பொறுப்பேற்றிருந்த ஜாயிண்ட் செகரட்டரி பதவிக்கு அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

**********

அஜயுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அவளின் சீனியர்ஸ் உடனானப் பனிப்போர் வலுவடைந்தது. எதிலாவது அவனை இல்லை இவளை மாட்டிவிட, அசிங்கப்பட வைக்க வேண்டுமென யோசித்தனர்.

அதற்கான தருணமும் அவர்களுக்கு அமைந்தது. ஆனால் அது அவளறியாமல் நடத்தப்பட்டது.

அவளுடைய சீனியர் ஒருவனை அடித்துக் காயப்படுத்தியக் குற்றத்திற்காக அஐய்யை இரண்டு வாரம் சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்தது கல்லூரி நிர்வாகம்.

கோபத்தில் பாக்ஸிங் பேக்’கை மூர்க்கத்தனமாகக் குத்திக்கொண்டிருக்க, அங்கேவந்த கவிதா “ஏன்டா அவனை அடிச்ச…? சஸ்பெண்ட் அப்படி இப்படி என்னென்னமோ சொல்றாங்க… படிக்கிறப்ப இதெல்லாம் தேவையா?” அலுப்புடன் அவள் கேட்க, எதுவும் சொல்லாமல் குத்திக்கொண்டிருந்தான்.

அஜய்யிடம் அடிவாங்கியவன் கட்டுடன் கல்லூரிக்கு வர, அவனையையும் அஐய்யையும் விசாரிக்க ப்ரின்ஸிபல் அறைக்கு வரச்சொன்னதாக பியூன் அவனை அழைத்துச் சென்றார்.

ப்ரின்ஸிபல் அறையில் இருந்து அவன் வெளியே வந்தபோது “எவ்வளோ கேட்டுட்டேன்… ஏன் டா… ஏன் அவனை அடிச்ச…?” என பலமுறை கேட்ட கேள்வியையே அவள் கேட்க,

“சஸ்பெண்ட் ஆகறதெல்லாம் ஒரு பெரிய விஷயமாடி. விட்டுத்தள்ளு. மூட் சரியில்ல… தல வலியா வேற இருக்கு… வா வெளிய போலாம்…” எனக் கைப்பிடித்து அழைத்துச்செல்ல முற்பட

“இல்ல. இன்னிக்கி ஸிம்போஸியம் வேல இருக்கு…” அவள் தயக்கத்துடன் சொல்ல, அவளை முறைத்துவிட்டு, எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றுவிட்டான்.

அவனின் வேகம், கோபம் ஒரு வித உறுத்தலாகவே இருந்தது அவளுக்கு.

‘அஐய்யை வெறுப்பேற்ற வேண்டுமென்றே, அவளுடைய சீனியர்ஸ் அவளுக்கு அதிகமாக வேலை தருகிறார்கள், ஸிம்போஸியம் என்ற பெயரில்…’ என அவளுக்கும் தெரிந்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

காலை வந்தவுடன் ஆரம்பிக்கும் வேலை இரவு ஒன்பது மணிவரை நீடிக்கிறது. அவளுக்கும் அவனுக்கும் இடையில் ஒரு பிரிவினை ஏற்படுத்தவேண்டும் என அவர்கள் நினைத்தது கொஞ்சம் நிறைவேறியது…

அஜய் செல்வதையே பார்த்திருந்தவள், அவளின் வகுப்புத் தோழி அழைப்பில் தன்னிலைக்கு வர,

“அஜய் ஏன் அடிச்சான்னு தெரியுமா…? இதுக்காகத்தான்…” என சொல்லி மொபைலில் சில போட்டோவை காண்பித்தாள். அதைப் பார்த்து இதயம் நின்றுவிடுவதுபோல் அதிர்ந்தாள் கவிதா…

அந்த போட்டோவில் அஜய்யிடம் அடிவாங்கிய சீனியருடன் கவிதா மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள். சுத்தமாக நம்ப முடியவில்லை. தலை சுற்றுவது போல் இருந்தது.

‘யாருடைய வேலை’, ‘எதற்காக’ எனக் கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது.

எதற்கு அஜய் அடித்தான் என்பதும் புரிந்தது. ஆனால் இந்தச் சம்பவம் எப்போது நடந்தது? ஒரு வேலை மார்ஃபிங் (morphing)? எனக் குழம்பியிருக்கையில்…

“இத boys ஹாஸ்டல்ல எல்லாருக்கும் அனுப்பிருக்கான் அந்த ராஸ்கல். அதில்லாம உன் கேரக்டர் பத்தி ரொம்பத் தப்பா பேசினானாம்… நீ அவனும் சேர்ந்து தப்பா…” என வகுப்புத் தோழி அதற்கு மேல் சொல்ல முடியாமல் தடுமாற…

சரியாக அடிவாங்கியவன் ப்ரின்ஸிபல் அறையில் இருந்து வெளியில் வந்தான்.

அவனைப் பார்த்தவுடன் கவிதாவிற்குக் கோபம் தலைக்கேறியது. வெறியுடன் அருகே சென்று, ஓங்கி அவன் இருகன்னத்திலும் அறைவிட்டாள்.

அவன் அதிர்ந்து நிற்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, அவனை அருவருப்பான ஒன்றைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள்.

இந்தக் காலம், முந்தையக் காலம், எந்தக்கலாமாக இருந்தாலும், பழிவாங்க வேண்டும் என்றால், பெண்களை அவதூறாகச் சித்தரிப்பது, அசிங்கப்படுத்துவது ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது என்று மாறுமோ தெரியவில்லை.

காலேஜ் கிரௌண்ட் பக்கத்தில் இருந்த ஆலமரத்தடியில் போடப்பட்டிருந்த இருக்கையில் சாய்ந்து கண்மூடி உட்கார்ந்தாள்.

‘எவ்ளோ கேவலமான போட்டோஸ்… என்ன நினச்சுருப்பான் அஜய் என்ன பத்தி… தப்பா எடுத்துருப்பானோ… அதுதான் சரியா பேசலையோ… இல்லையே, அவன் வெளிய கூப்பிட்டானே…’ ஏனோ மனது கண்டதையும் நினைக்க, மூடியிருந்த கண்களை மீறிக் கண்ணீர் வடிந்தது.

அவள் பக்கத்தில் ஏதோ அசைவு உணர்ந்து கண்திறக்க, பக்கத்தில் அஜய் வந்தமர்ந்தான். அவள் கண்கள் கலங்கிருப்பதைப் பார்த்து, அவள் கைக்கோர்த்துத் தட்டிக்கொடுத்தான்…

அவன் முகத்தைப் பார்த்துப் பேச கஷ்டமாக இருந்தது அவளுக்கு.

“அஜய் …என் மேல உனக்கு…” என வார்த்தை சரியாக வராமல் ஆரம்பிக்க “உன்ன சந்தேகப்படறேன்னு நினைக்கிறயா இனி?” நெற்றி சுருங்க கேட்க, அவள் பதில் பேசாமல் கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தாள்.

கோர்த்திருந்த அவள் கைகளை, அவன் நெஞ்சிலே வைத்து “நான் உன்ன சந்தேகப்படறதும் என்ன சந்தேகப்படறதும் ஒன்னு… அது எதுவும் உண்மை இல்லனு எனக்கு தெரியும். உன்ன தப்பா காட்டி உன்னையும் என்னையும் கஷ்டப்படுத்தணும்ன்னு அவங்க எண்ணம்”

“அந்தப் போட்டோஸ் பார்த்தவுடனே அவளோ கோவம். அவனை நொறுக்கி எடுத்துட்டேன். 25 ஸ்டிட்ச்செஸ்ன்னு சொன்னாங்க. இந்த செம் எக்ஸாம்ஸ் எழுதக்கூடாதுன்னு அவனை டீபார் (debar) பண்ணிட்டாங்க” என சொல்லி அவளை நோக்கினான்.

அவள் இன்னமும் சோகமாக இருப்பதைப் பார்த்து “ஆனா பாரு… நான் அடிச்சதவிட, நீ குடுத்த ரெண்டு அறைல, நாலு பல்லு விழுந்துடுச்சாம்” என சொல்லி அவள் கையைப் பார்த்து “Future நினச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு…” என்று அவள் முகம் பார்த்து அழகாகப் புன்னகைத்தான்.

கண்ணீர் கோர்த்தக் கண்களுடன் முறைத்துக்கொண்டு புன்னகைத்தவள், அவன் தோளில் சாய்ந்து, அவள் கையுடன் கோர்த்திருந்த அவன் கையில் முத்தமிட்டாள்.

அதை எதிர்பார்க்காத அஜய், “ஏய்…. ஏய்… என்ன பண்ண” ஆர்வத்துடன் கேட்க, அவள் எதுவும் கேட்காததுபோல், கண்களை மூடிக்கொண்டாள். பாரத்துடன் இருந்த மனது, அவன் தோளில் சாய்ந்தவுடன் அமைதியடைந்தது…

“இதுபோல ஆயுசுக்கும் உன் தோள் மேல நான் சாஞ்சுக்கணும் அஜய். அம்மா போனதுக்கப்பறம் மனசு சஞ்சல படறப்பெல்லாம் எங்க ஊர் கைலாசநாதர் கோவில் தூண் தான் என் மன பாரத்தைத் தாங்கும்”

“அந்தத் தூண் தான் என்னோட அம்மான்னு நினைச்சுப்பேன்… என் கவலை, என் அழுகை, என் சோகம் எல்லாத்தையும் அங்க தான் இறக்கி வைப்பேன்”

“அப்பா நல்லா பாத்துப்பார். ஆனா அம்மா போனப்பறம் ஏதோ பறிகொடுத்த மாதிரியே இருப்பார். நான் அவரை இன்னும் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு எதுமே ஷேர் பண்ணிக்கமாட்டேன்”

“என் அப்பாக்கூடவே இருந்திருந்தேன்னா எப்படிப் பாதுகாப்பா ஃபீல் பண்ணுவேனோ… அதுபோல இப்போ உணருறேன் அஜய்…” அவள் கண்ணீர் வடிக்க, அவள் உச்சியில் தலையைசாய்த்தவன்,

“ப்ச்… இனி… நீ எவ்ளோ bold… இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் போய் கண்கலங்கிட்டு… கம் ஆன்… எந்திரி… போய் ஒரு சாக்லேட் லாட்டே அடிப்போம்” என அவள் மனதை மாற்ற அழைத்துச்சென்றான்.

நாட்கள் நகர்ந்தது. நான்கு அரியர்’ருடன் அவனுடைய கடைசி செமெஸ்டரும் வந்தது. அவள் கேட்டுக்கொண்டதற்காக முழு முயற்சியுடன் அனைத்துப் பாடங்களையும் சிரமப்பட்டுப் படித்தான். அவளால் முடிந்தவரை அவனுக்கு எப்படியெல்லாம் உதவமுடியுமோ உதவினாள்.

எதிர்காலத்தைக் குறித்துப் பெரிய பெரிய கனவுகளைக் கண்டனர். பிரியப்போகிறோம் என்பது பல வகையில் இருவரையும் தாக்கியது. அதன் தாக்கம் இருவரையும் அவ்வப்போது அசைத்துப்பார்த்தது.

அதுபோதாதென்று அந்த வயதிற்கே உரிய ஹார்மோனல் சேஞ்சஸ் வேறு கொஞ்சம் தடுமாறச்செய்தது.

அப்படி ஒரு நாள்… இருவரும் அதே ஆலமரத்தடியில் உட்கார்ந்திருந்தனர். அவள் அவனிடம் வேலைக்குச் சென்று… கல்யாணம் செய்துகொண்டு… கணவன் மனைவியாக… என பேசிக்கொண்டே இருந்தாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பேசும்போது அவள் கண்கள் காட்டும் அபிநயம்… காற்றில் ஊசலாடும் கூந்தல்… அதைக் காதுக்குப்பின் தள்ளும்போது கைகள் அதன் விரல்கள் காட்டும் பாவம்…

அவளுக்கே உரிய அவளின் நறுமணம்… சுழித்து, நெளித்துப் பேசும் இதழ்கள்… அதற்கு ஏற்றாற்போல் அன்றைய வானிலை என அவனைத் தடுமாறச்செய்தது.

அவன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவள், சட்டெனப் பேசுவதை நிறுத்தினாள். இருவரும் மற்றவரின் பார்வையில் மூழ்கினர்…

இருவரின் மனதும் படபடத்தது. எப்பொழுதும் நெருக்கமாக உட்காருவது போல் தான் இன்றும் உட்கார்ந்திருந்தனர். ஆனால் ஏதேதோ எண்ணங்கள் மனதில்…

தன்னிலை மறந்து அவன், அவளை நெருங்க எத்தனிக்க, அவளும் கொஞ்சமாக அவனை நெருங்க, அது ஏதோ அவளுக்கு நெருட, சட்டென எழுந்துகொண்டாள்.

அவன் முகம் பாராமல் “நா… நான் ஹாஸ்டல் போறேன் அஜய்…” என சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

‘தான் செய்ய நினைத்தது தவறோ’ என நினைத்தவன், அவள் தனியாகச் செல்வதைப் பார்த்து, அவளைக் கடந்து அவனின் வண்டியை எடுத்துக்கொண்டு, அவள் முன் நின்றான். அவள் முகம் பார்பதைத் தவிர்த்தான்…

அவளும் எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டாள். அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு மறுபடியும் அவள் முகம் பாராமல் போய்விட்டான்.

அடுத்த நாளும் அவன் மனம் அதே சஞ்சலத்துடன் இருக்க, அதை மாற்ற, எப்பொழுதும் போல் பாக்ஸிங் பேக்’கை குத்திக்கொண்டிருந்தான்… சந்தோஷமோ… சஞ்சலமோ… அடிவாங்குது அந்த பேக் மட்டுமே…

அவனைத் தேடி அங்கே அவள் வந்தாள்… கொஞ்சம் சங்கடமாக இருந்தது அவனுக்கு அவளை எதிர்கொள்ள… அவன் முன்னே அவள் நின்றாள்.

அவன் தயங்கியவாறு “இனி… ஸாரி… நேத்து நான்” என ஆரம்பிக்க… அவன் எதிர்பாக்காதபோது, தன் நுனிக்காலினால் எம்பி, அவன் சட்டையைப் பிடித்தவாறே அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

அவன் விழிவிரித்து அவளைப் பார்க்க, அவன் முகம் பாராமல் திரும்பிக்கொண்டு

“என்னால இது மட்டும் தான் இப்போ முடியும்… நீ நல்லா எக்ஸாம் எழுதி… நானும் படிச்சி முடிச்சு வேலைக்கு போய்… ரெண்டுபேரும் கை நிறைய சம்பாரிச்சு… கல்யாணம் பண்ணிட்டு… அப்புறமா மத்த…” என சொல்லி முடிக்கும் போது…

மின்னலென அவள் கன்னத்தில் முத்தமிட்டான்…

அதிர்ச்சியில் அவள் கண்கள் விழித்துப்பார்க்க “மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என அவள் சொல்லவந்ததை அவன் சொல்லி முடித்தான்.

அவன் கண்களில் இருந்த சஞ்சலம் மாறி மின்னியது… அழகாகத் தெரிந்தான் அவளுக்கு…

அவள் தன்னிலைக்கு வரும்போது, “இது போதும் இனி எனக்கு…” என சொல்லி பறக்கும் முத்தங்கள் பறக்கவிட்டு அங்கிருந்து பறந்துவிட்டான்.

இருவரும் கல்யாணம் வரை என கனவுக்கோட்டையைக் கட்ட… விதியும், அது செய்த சதியும் அந்தக் கோட்டையைத் தகர்க்கும் நாளுக்காகக் காத்திருந்தது.

10
1
3

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved