என்னுள் நீ வந்தாய் – 4

என்னுள் நீ வந்தாய் – 4

அஜயிடமே அஜய் பற்றிப் பேசியதை எண்ணி அதிர்ந்திருந்த கவிதவை, அவளின் வகுப்புத்தோழி அழைத்துக்கொண்டு முன்னேறிச் சென்று, இருவரும் முன் வரிசையில் நின்றார்கள்.

அவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்துக்கொண்டு, ‘அவன்கிட்டயே போய்… உனக்கு வாய் தான்டி கவி’ தன்னையே திட்டிகொண்டவள், ‘அவன் ஏன் எதுவுமே என்ன சொல்லாம விட்டுட்டான்?’ என்று யோசிக்கும்போது…

அவன் இவளிடம் ‘ஃபிரண்ட்’டா கேர்ள் ஃபிரண்ட்’டா’ எனக் கேட்டது நினைவிற்கு வர சின்னதாகப் புன்னகை எட்டிப்பார்த்தது.

‘மொதல்ல ஸாரி கேளு கவி… என்ன நினைப்பான்’ என்று அவளுக்குள் பேசி, ஒரு முடிவுக்கு வந்து… தலையில் அடித்துக்கொண்டு நிமிர்ந்துப் பார்க்க…

அந்த நொடி அரங்கமே அமைதியாய் இருந்தது. அஜய்’க்கு அடி பட்டதால் பிரேக் விடப்பட்டிருந்தது.

அவனுக்கு அடிபட்டிருக்க, அனைவரும் சோகத்தில் மௌனமாய் இருக்க… அந்த நேரம் அவளும் யோசனையில் இருந்து நிமிர்ந்துப் பார்க்க, அவன் வாயோரத்தில் இருந்து ரத்தம் அதிகமாய் வெளியேறியதைப் பார்த்து…

பதறிக்கொண்டு “ஐயோ” என நன்றாகவே கத்திவிட்டாள். அவளைப் பார்த்து முறைத்தான் அஜய். அவன் மட்டுமல்ல அங்கிருந்த சிலர் சத்தம் கேட்டு அவளைப் பார்த்தனர்.

அதைவிட அவனுடைய நண்பர்கள் அவளை ஒருவிதமாகப் பார்க்க, எச்சிலை விழுங்கிக்கொண்டு, திரும்பி அஜய்யிடம் கண்களால் ‘ஸாரி’ என்றாள் கெஞ்சலாக.

உடனே அவன் பார்வையை, பயிற்சியாளரிடம் திருப்பிக்கொண்டான்.

சில நொடிகளில் அவனுக்கு அவர் முதல் உதவி அளித்த பின், அவன் ஏதோ அவரிடம் சொன்னான். உடனே அவர் அவனையும் கவிதாவையும் பார்த்தபின், கவிதாவிடம் வந்தார்.

அவளிடம் ஏதோ அவர் சொல்ல… அதிர்ச்சியுடன் அஐய்யை பார்த்தாள் கவிதா.

அவன் கண்களால் ‘இந்த இடத்தை விட்டு செல்’ என்பதுபோல் சொல்ல, அவள் அதிர்ந்தாள். கண்கள் கலங்கப்பார்த்தது. அவனைப் பார்த்து முறைத்துவிட்டு வெளியேறினாள்.

மனம் பொறுக்கவில்லை. அவன் செய்தது அவமானமாக இருந்தது. ‘எதுக்காக என்ன வெளிய போகச் சொன்னான். அவ்ளோ திமிர். பெரிய இவன்…’ மனதில் அர்ச்சனை செய்துகொண்டு ஸ்டேடியம் எதிரில் இருந்த நூலகத்திற்கு வந்தாள்.

வந்த சிறிது நேரத்தில், காதைக்கிழிக்கும் சத்தம் ‘AJ AJ’ என்று… அதைத் தொடர்ந்து ஆர்ப்பரிக்கும் கரகோஷம்… விசில் சத்தங்கள்… காதை இறுக்கமாக மூடிக்கொண்டாள். ஏனோ அந்தச் சத்தத்தை அவளின் அவமானத்துடன் இணைத்துப்பார்த்தாள்.

வகுப்பறைக்குச் செல்லப் பிடிக்காமல் அங்கேயே மாலை வரை இருந்துவிட்டாள்.

அடுத்த நாள் காலைப் பொழுது… முந்தைய தினம் நடந்தது அவளால் மறக்க முடியவில்லை.

ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்குச் செல்ல விருப்பமுமில்லை. சென்றால் அவனைப் பார்க்க நேரிடுமோ… பார்த்தால் அவன் முன் எப்படி நிற்பது… அசிங்கமாக இருக்குமே… என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாள்.

மதிய நேரம் அவள் வகுப்புத் தோழியிடம் இருந்து அழைப்பு. போன் எடுத்தாள். ‘கவி… இன்னைக்கு ஃப்ர்ஸ்ட் டே ப்ராக்டிகல்ஸ் (first day practicals). உடம்புக்கு ஓகே’னா வந்துடு…’ என சொல்லிவிட்டு போனை வைத்தாள் தோழி.

என்ன செய்வதென்று யோசிக்க… ‘இவனுக்காக நான் ஏன் போகாம இருங்கணும்?’ என முடிவெடுத்து கல்லூரிக்கு சென்றாள்.

வகுப்பறைக்குள் நுழையும்போது… அவள் வருவதை முன்னமே பார்த்த அஜய், கதவின் குறுக்கே நின்றான்.

அவனைப் பார்த்தவுடன், கொஞ்சம் அதிர்ந்தாலும், குறுக்கே நின்றவனை சுட்டெரிக்கும் பார்வையில் பார்த்தாள் கவிதா.

“பாஹ்… அப்படிப் பாக்காத. ராட்சஷி மாதிரி இருக்க” போலியாக பயந்தவன் போல் அஜய் கிண்டலடிக்க, அதைக் கண்டுகொள்ளாமல் அவனைக் கடந்து செல்ல முற்பட்டாள்.

மறுபடியும் அவள் முன்னே நின்று அவளைத் தடுத்தவன், “என்ன பாக்கக்கூடாதுன்னா காலேஜூக்கு வரல…?” எனக் கேட்க, அவளிடமிருந்து முறைப்பே பதிலாக வந்தது.

“சரி சரி கோவப்படாத. நான் சொல்றத…” என்று அவன் சொல்ல வரும்போது… அவனைக் கடந்து மறுபடியும் முன்னேறி நடந்தாள்.

அதில் கடுப்பானவன், “ஏய்… பேசிட்டு இருக்கேன்ல. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க” சென்றவளின் கையைப் பற்றித் தடுத்தான்.

அவன் கையைப் பற்றிய நொடி அவள் மனம் படபடக்க, ஏனோ அவளால் உடனே தடுக்க முடியாமல், அவன் கையைப் பார்த்தவாறே, அவன் முரட்டுப் பிடியில் லயித்தவள், சட்டென அடுத்த நொடி தன்னிலைக்கு வந்து அவனை முறைத்து. “கைய விடு” எனக் கையை விடுவிக்க முயற்சித்தாள்.

அவன் பிடி இறுகியது.

“பேசிட்டு இருக்கேன்… போயிட்டே இருக்க. நேத்து என்னன்னா… என்னோட க்ளோஸ் ஃபிரண்டு’ன்னு என்கிட்டயே சொல்ற. இப்போ இப்படி… என்ன திமிரா? நான் சொல்ல வந்ததை கேட்டுட்டு போ” கத்தவில்லை ஆனால் அதட்டும் குரலில் சொன்னான்.

அதே நேரம், சரியாக ECE மூன்றாம் வருட மாணவர்கள், இவன் இங்கே இவளுக்காகக் காத்திருந்ததைத் தெரிந்துகொண்டு உள்ளே வர… இவன் கவிதாவின் கையைப் பிடித்துக்கொண்டு நிற்க, ‘எங்க டிபார்ட்மென்ட் பெண்ணின் கையை எப்படிப் பிடிக்கலாம்’ என்ற சண்டை ஆரம்பித்தது.

கவிதாவோ, ‘என்ன நடக்கிறது’ என்று புரிந்துகொள்ளும் நிலைமையில் இல்லவேயில்லை. அவள் கண்களில் அஜய் மட்டுமே தெரிந்தான். ஒருவனாக அத்தனை பேரையும் சமாளித்துக்கொண்டிருந்தான்.

வகுப்புத்தோழி அவளை உலுக்கியதும் தன்னிலைக்கு வந்தவள், சுற்றியும் பார்க்க, கவிதாவின் சீனியர் ஒருத்தி, “இவன் உன்கிட்ட மிஸ் பிஹேவ் (misbehave) பண்ணான்னு பிரின்ஸிபல்’ட்ட சொல்ற… புரியுதா? வா போலாம்” என்று இழுத்துக்கொண்டு சென்றாள் கவிதாவை.

அஜய் அவளயே பார்க்க, அவளும் திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டே சென்றாள். அடுத்தச் சில நிமிடங்களில் ப்ரின்ஸிபல் அறையில் அவரின் விசாரணை. அஐய்யை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.

அவளுக்கோ வடிவேல் காமெடி “கைய பிடிச்சு இழுத்தயா…” நினைவிற்கு வர, சிரிப்பை அடக்க முடியாமல் கட்டுப்படுத்த, அங்கிருந்த அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

“உனக்கு இவனை தெரியுமா?” என்று மீண்டும் ப்ரின்ஸிபல் அழுத்தமாகக் கேட்க, கவிதா அஐய்யை பார்த்தாள்.

அவன் அவளைப் பார்க்காமல் ப்ரின்ஸிபலை மட்டுமே பார்த்திருக்க… அங்கிருந்த சீனியர்ஸ் ‘தெரியாதுன்னு சொல்லு’ என்பதுபோல் தலையசைக்க, கவிதா ப்ரின்ஸிபலிடம் “தெரியும்” என்றாள்.

சீனியர்ஸ், ‘நம்மள மாட்டிவிட்டுட்டாலே’ என்பது போல் அவளைப் பார்க்க… அவள் அஐய்யைப் பார்த்தாள். அவன் தன் கைகளைப் பின்னால் சேர்த்துக்கொண்டு… நெஞ்சை நிமிர்த்தி ‘தான் தவறே செய்யவில்லை’ என்பது போல் நின்றிருந்தான்.

‘ஹுக்கும்… இந்த சீனுக்கு ஒன்னும் கொறச்சலில்ல’ என மனதில் நினைத்துப் புன்னகைத்தவள், ப்ரின்ஸிபலிடம் திரும்பி…

“சர். எனக்கு அவனைத் தெரியும். எங்களுக்குள்ள ஒரு சின்ன ப்ரோப்லம். அதுதான் அஜய் அப்படிப் பண்ணிட்டான். இது என் சீனியர்ஸ்’க்கு தெரியாது. எனக்கு ஹெல்ப் பண்ண வந்தாங்க. இந்த ஒரு தடவ மன்னிச்சு விட்டுடுங்க ப்ளீஸ்” என்று முடித்தாள் கவிதா.

அதைக் கேட்டு கடுப்பானவர், “இந்த மாதிரி சில்லி பையிட்ஸ்’லாம் (silly fights) என்கிட்டே கொண்டு வராதீங்க” என பொதுவாகச் சொல்லிவிட்டு…

கவிதாவிடம், “உங்க பிரச்சனையெல்லாம் காலேஜ்க்கு வெளிய வச்சுக்கோங்க” என்றவர், பின் அஜய்யிடம் திரும்பி “காலேஜீக்குள்ள எப்படி நடந்துக்கணும்ன்னு உனக்கு நான் சொல்லவேண்டியதில்லை. ஜாயிண்ட் செகரட்ரி மறந்துடாத” என்று கடிந்துவிட்டு,

சீனியர்ஸிடம் “எல்லாத்தையும் ஊதி பெருசாக்க நினைக்காதீங்க. இது காலேஜ். மறந்துடவேணாம்” என எச்சரித்தார்.

யாருக்கும் பாதகமில்லால் அந்தச் சண்டையை கவிதா முடித்திருந்தாலும்… அஜய் மற்றும் சீனியர்ஸ் அவளை முறைத்தபடி வெளியேறினார்கள்.

******

வகுப்புக்கு வந்தபின் அவள் வகுப்புத் தோழி, “ஏன்டி அப்படிப் பண்ண? அஜய் நேத்து உன்ன ஸ்டேடியம்’ல இருந்து வெளிய போ சொன்னதுக்கு ஸாரி கேக்க வந்தான். நேத்து மதியத்துக்கு மேல ஒரு மூணு தடவ வந்தான்.

அப்புறம் இன்னைக்கு காலைல இருந்து அவன் க்ளாஸுக்குக் கூடப் போகம, குட்டி போட்ட பூனை மாதிரி இங்கயே சுத்திட்டு இருந்தான். அவன் உன்ன பாக்கணும்னு சொன்னதாலதான்… நான் ப்ராக்டிக்கல்னு பொய் சொல்லி உன்னை வரவெச்சேன்.

பாவம்டி. என்ன சொல்லவரான்னு கேக்கவே இல்லை நீ…” எனத் திட்டி தீர்த்தாள். ஏன் இந்தப் பெண் இவ்வளவு டென்ஷன் ஆகிறாள் என்றால் ஒருதலையாக அஐய்யை அவள் பார்ப்பதால்…

‘என்ன பாத்து பேச இவ்ளோ ட்ரை பண்ணிருக்கானா?’ என கவிதா நினைக்கும்போது அவளையும் அறியாமல் புன்னகை மலர்ந்தது. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.

அடுத்த இரண்டு வாரம் உருண்டோடியது. அவளிடம் பேச அஜய் வருவான் என்று எதிர்பார்த்தாள் கவிதா. ஆனால் அவன் கண்ணில் படவே இல்லை. இவள் மனதில் அவன் முகமே அடிக்கடி வந்துகொண்டிருந்தது.

முடிவெடுத்தாள்… அவளே சென்று அவனிடம் பேச. அவன் எப்பொழுதும் போல் பயிற்சியில் இருந்தான்.

பூனை போல் எட்டிப்பார்த்தாள் கவிதா.

பாக்சர்’ருக்கே உரிய உடற்கட்டு. நல்ல உயரம். அகல விரிந்திருந்த தேகம். இறுகியிருந்த பைசெப்ஸ். வேர்வைப் பூத்திருக்க… கூரிய கண்களுடன் பாக்ஸிங் பேக்கை (boxing bag) முரட்டுத்தனமாகக் குத்திக்கொண்டிருந்தான்.

அவனின் அசைவுகளை மறைந்திருந்து ரசித்துக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் இவள் எட்டி எட்டிப் பார்ப்பதை அவனும் பார்த்துவிட்டான்.

மெதுவாக அவன் அருகே செல்லும்போது தலை லேசாகச் சுற்றுவதுபோல் இருக்க வழியிலேயே மயங்கிவிட்டாள்.

இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அஜய், பதறிக்கொண்டு அருகில் சென்றான்.

“ஹே என்னாச்சு எந்திரி… ஏய் எந்திரி…” என்று கத்த, பதில் இல்லை. கன்னத்தைத் தட்டி “ஏய் கவி என்னாச்சு… எந்திரி கவி” என்று பதத்துடன் எழுப்ப முயற்சிக்க… அவள் எழும்பவில்லை.

ஏதோ தோன்ற அங்கிருந்து ஓடி அவனுடைய தண்ணீர் பாட்டில் எடுக்கச் சென்றான். அவள் மெதுவாக ஒற்றைக் கண் திறந்து பார்த்தாள். அவன் பதட்டமாக பாட்டில் எடுக்கச் சென்றிருந்தான்.

‘என்னயா கடுப்படிக்கற… மவனே… இவ்ளோ பதட்டப்படறயே நீ… சரியில்லையே… அதுவும் கவி கவி’னு ஷார்ட் நேம் வேற’ என நினைத்துச் சிரிப்பை அடக்கிக்கொள்ள, அவன் பாட்டில் எடுத்துக்கொண்டு திரும்ப, சட்டென நேராகப் படுத்துக்கொண்டாள்.

அவன் திரும்பும்போது ஏதோ அசைவு அவளிடம் தெரிய, புருவத்தைச் சுருக்கினான்.

பின், ‘ச்ச… ச… இருக்காது… பாவம்’ என அவசரமாக அவள் பக்கத்தில் மண்டியிட்டு அவளைத் தூக்கி சரிவாக அவன் கால் மேல் சாய்த்துக்கொண்டான் தண்ணீர் தெளித்து, அவளுக்குத் தண்ணீர் கொடுக்க…

அவன் செய்த இந்தச் செயலில் நடித்துக்கொண்டிருந்த கவி, சற்று கூச்சமும், பதட்டமும் அடைய, மூடியக் கண்ணிமைக்குள் கண்மணிகள் அலைப்பாய்ந்தது.

தண்ணீர் தெளிக்க அவளின் முகத்தைப் பார்த்தவன், மூடிய கண்கள் அசைவதைப் பார்த்துவிட்டான்.

‘அடிப்பாவி… நடிக்கறயா… நீ fraud’டே தான்…’ அவளைக் கண்கள் அகல பார்த்தவனின் இதழ் புன்னகைத்தது. ‘என்கிட்டயேவா…’ என நினைத்துக்கொண்டு…

போன் பேசுவதுபோல், “ஹலோ… டேய்… கவிதா என்ன பாக்க வந்தா. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா…” இரு நொடி மௌனம் காத்தான்… “தண்ணி தெளிச்சுப் பாத்துட்டேன் டா… எந்திரிக்க மாட்டேங்கறா…” சில நொடிகள் நிறுத்தினான்.

‘அடேய்… நீ தண்ணியே ஊத்தலையே… பொய் சொல்றயா…’ கவிதா மனதில் நினைக்க, அவன் “டேய் நான் போய் எப்படி… அதெல்லாம் சினிமால தான் பாத்துருக்கேன்…” என்று நிறுத்தி அவள் முகம் பார்த்தான்.

கண்ணிமைகள் இன்னும் வேகமாகப் படபடத்தது. அதைக் கண்டவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘ஐய்யோ இவன் ஏதோ ப்ளான் பண்றான். கவி நீ நடிக்கறத அவன் கண்டுபிடிச்சுட்டான் போல. சமாளி…’ என்று யோசிக்கும்போது, அவன் பேச்சு முற்றிலுமாக நின்றிருந்தது.

‘ஐயோ ஏதாச்சும் பண்ணிடப்போறன்’ என நினைத்தவள் சட்டென முழித்து “ஏய் அஜய்… புளுகுமூட்டை… நீ தண்ணியே தெளிக்கல… ஏன் பொய் சொன்…” என்று அவனை நன்றாகக் கண்திறந்து பார்க்க, அவன் கையில் போன் இல்லை.

கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு, அவளைப் பார்த்துச் சிரித்தான்…

அவன் முகத்தில் தெரிந்த அந்தச் சிரிப்பு, அவளை நன்றாகவே தடுமாறச்செய்தது. அவள் முகத்தில் வெட்கமா? இல்லை பதட்டமா? என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் இதயம் வேகமாக அடித்தது.

அவன் மடியில் சரிந்திருப்பதை அப்போது உணர்த்த கவிதா, எழுந்து அவசரமாக அங்கிருந்து நழுவ,

அவன், “ஏய் நில்லு” என கத்தியபடி அவளை பின்தொடர… அவனிடம் இருந்து தப்பிக்க ஓடியவள், பழைய பொருட்கள் இருந்த இடத்தை கடக்கும்போது, அவளின் துப்பட்டா கூரான கம்பியில் மாட்டி இழுபட்டது.

அதை பாராமல் அவசரமாக ஓட நினைத்தவளின் பின்னப்பட்ட துப்பட்டாவுடன் அவளின் கொஞ்சம் பழைய உடையும் சேர்ந்து தோள்பட்டையில் இரண்டு இன்ச் கிழிந்துவிட்டது. அப்படியே கிழிந்த சுடிதாரை பற்றியபடி நின்றுவிட்டாள் கவிதா. 

அதைப்பார்த்ததும் அதிர்ந்து நின்றுவிட்டான் அஜய். ‘நீ துரத்தியதால் தான்’ என மனம் அவனை சாட, மெதுவாக அவள் அருகில் சென்றவன், ““ஷிட்… சாரி கவி… நான்… என்னால” தடுமாற்றம் அவனிடம். 

அவளுக்கோ இத்துடன் எப்படி வகுப்புக்குச் செல்ல என்ற யோசனையில் லேசான மிரட்சியுடன் அவனை பார்த்தாள். “ஸாரி கவி” கண்களில் நிஜமாக மன்னிப்பை யாசித்த அஜய்,

“நான் வேணும்னா ஹாஸ்டெலுக்கு கூட்டிட்டு போகவா? டிரஸ் மாத்திட்டு வந்திடலாமா?”  

அவனின் இந்த அக்கறை அவளை ஈர்த்தது. தலையசைத்தாள். அவன் அவசரமாக பாக்ஸிங் வெஸ்டட் மேல் சட்டையை அணிந்துகொண்டு, யாருக்கும் உறுத்தாவண்ணம் அவள் பின்னே நடந்து சென்றான்… கிழிந்தது யாரும் பார்த்துவிடக்கூடாதென்று.

அவன் பைக் எடுத்தவுடன், அவளும் பின்னே உட்கார, வண்டியை கிளப்பினான். அவர்களுக்கிடையில் இருந்த அந்த நெருக்கம், இருவருக்குள்ளும் இன்ப படபடப்பை ஏற்படுத்தியது. 

“கவி…” என்றழைத்தவுடன், கவிதா… “நேரா போய் லெஃப்ட்’ல மெயின்ரோடு போ அஜய்… நான் வழி சொல்றேன்”

“எனக்கு வழி தெரியும் இனி …” என்றான் பைக்கின் கண்ணாடிவழியே அவளைப் பார்த்துக்கொண்டு.

திகைத்துப் பார்த்தாள் அவள். அவனுக்கு எப்படி வழி தெரியும் என்று யோசிப்பதா? இல்லை இனி… என்று அழைத்ததை யோசிப்பதா? சிந்தனைகள் பலவாறாகப் பறக்க…

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இனி…” அவன் சொல்ல அவனைக் கண்ணாடிவழியே பார்த்தாள்.

“உன்ன ஃப்ர்ஸ்ட் டைம் பாத்தப்ப உன்னோட குறும்பு தனம் ரொம்ப அழகா இருந்துச்சு. என்கிட்டயே நீ என்னோட கேர்ள் ஃபிரண்ட்டானு கேட்கச்சொன்னப்ப, சிரிப்பு தான் வந்துச்சு.

நார்மலா ராக்கிங் பண்ணா… ஒன்னா பயந்து சொல்றத செய்வாங்க இல்ல, நான் போய்க் கம்ப்லைன் பண்றேன்னு சொல்வாங்க. நீ பெருசும் படுத்தலை, பெருசாவும் எடுத்துக்கல… நீ பண்ணது க்யூட்டா இருந்துச்சு எனக்கு”

நிறுத்தி அவள் முகம் பார்த்தான். அவள் இதழோரம் புன்னைகையுடன், அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள், தன் முகமாற்றதைக் காட்டாமல்…

அவன் அவளின் செயலைப் பார்த்து சிரித்துவிட்டுத் தொடர்ந்தான்…

“அப்புறம் அடுத்த நாள், நீ மேட்ச் பாக்க என் முன்னாடி வந்து நின்னப்ப, நான் பாத்தேன். நீ முந்தின நாள் என்கிட்ட பேசினது நியாபகம் வர, என்ன மறந்து உன்னயே பாத்துட்டு இருந்துட்டேன். விடுவானா ஆப்போனன்ட்… செம்ம அடி குடுத்துட்டான்.

அப்பவும் உன்ன பாத்தேன். என்ன கவனிக்காம, நீ ஏதோ உனக்குள்ள பேசிட்டு இருந்த… என்ன பாக்கலன்னு கோவம்… ஏன் அந்த கோவம்னு எனக்கு தெரியல… அப்போ இன்னொரு அடி வாங்கி ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு.

சுதாரிச்சுட்டேன்… உன்ன பாத்துட்டு இருந்தா நான் கேம்ல கான்செண்ட்ரேட் பண்ணமுடியும்ன்னு தோணல. அதுதான் உன்ன போ சொன்னேன்… ஸாரி இனி.. உனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துருக்கும்ன்னு தெரியும்… ஐம் சோ ஸாரி” கெஞ்சலாகக் கேட்டான் கண்ணாடி வழியாக.

“ஹ்ம்ம். சரி சரி… இவ்ளோ ஸாரி கேக்கற… உன்ன மன்னிக்கறத பத்தி நான் யோசிக்கிறேன்… மேல சொல்லு” என்றாள் புன்னகையுடன்.

பதிலுக்குப் புன்னகைத்தவன், “அப்புறம் உன்ன பாக்க உன் க்ளாஸ்க்கு போனேன்… நீ இல்ல… ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. என்னால தான் நீ வரலனு தெரியும்…

அன்னிக்கி நைட் முழுசா தூங்கவே முடியல. உன் ஞாபகமாவே இருந்தேன்… உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு. அப்போ திடீர்னு ஒன்னு தோணுச்சு… நான் ஏன் உன்னைப்பத்தி இவ்ளோ யோசிக்கறேன்னு…

நீ என்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்க சொன்ன அந்தக் கேள்விக்கு எனக்கு பதில் கிடைச்சது… உன்கிட்ட ஏதோ ஒன்னு எனக்கு பிடிச்சுருக்கு, வெறும் ஃபிரண்ட்டா உன்ன நினைக்க முடியாதுன்னு…

இந்த பார்த்தவுடனே காதல் … இதெல்லாம் இதுவரைக்கும் எனக்கு வந்ததில்லை. பட் ஒரு குட்டி அட்ராக்ஷன் உன்மேல வந்துச்சு. ஒரு நூலிழை காதலாக்கூட இருக்கலாம்ன்னு தோணுச்சு” என அவன் சொன்ன போது அவள் மனம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

14
3
1

7 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 4

 • October 14, 2022 at 5:50 am
  Permalink

  மத்த ud படிக்க முடியாதா completed novel thaana mam. Story superah erunthuchi . மத்த story’ um padikamudiyala. Time kedaikum pothu parkalaamnu partha mudiyala mam. Any solution

  • October 14, 2022 at 8:24 pm
   Permalink

   இப்போ rerun பண்ணிட்டு இருக்கேன் சிஸ்டர்… ஆல்டெர்நேட் டேஸ் போஸ்ட் பண்றேன். மத்த கதைகள் கிண்டில்ல இருக்கிறதுனால இங்க ரிமூவ் பண்ணிட்டு ரீரன் மட்டும் பண்றேன் சிஸ்டர்… மறந்துபோ என் மனமே கூட ரீரன் பண்றேன் 🙂

   • October 15, 2022 at 6:33 pm
    Permalink

    Ok mam. Antha story read pannuren appo. Thani perum thunaiyae rerun kodunga mam

   • October 15, 2022 at 10:23 pm
    Permalink

    மறந்து போ என் மனமே. எனக்கு view aagala mam. Rerun START panutengala

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved