என்னுள் நீ வந்தாய் – 5B
என்னுள் நீ வந்தாய் – 5B
அதன் பின் நாட்கள் இன்னமும் வேகமாக நகர்ந்தது. அவன் அவளுக்காக எப்படியோ படித்து அனைத்திலும் தேறி விட்டான். இருவரும் மனமில்லாமல் வேறு வழியில்லாமல் காலத்தால் பிரிக்கப்பட்டனர்…
அவன் அப்பாவின் பைனான்ஸ் தொழில் திடீரென நடுக்கம் காண, தந்தைக்குப் பெருமளவு பணம் நஷ்டமானதால்… வேலைக்குச் சென்றாகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்…
கவிதாவின் வற்புறுத்தலில் ஒழுங்காகப் படித்துத் தேர்ச்சி அடைந்ததால் ஒருவழியாக துபாயில் அவனுக்கு நல்ல வேலை கிடைத்தது அவன் நட்பு வட்டாரத்தின் மூலம்…
‘கான்ட்ராக்ட் முறையில் வேலையை ஏற்றுக்கொண்டால் மற்றும் இரண்டு வேலைகளை சேர்த்துப் பார்த்தால் அதிகப் பணம் சம்பாதிக்க முடியும்’ என அதையும் ஒப்புக்கொண்டான்.
எப்படியேனும் தந்தையின் தொழிலை மீட்டாகவேண்டும் என உறுதிகொண்டான்.
அவளும் படித்து முடித்து வேலையில் சேர்ந்தாள்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட பிரிவு… அதனால் ஏற்பட்ட தவிப்பு… அது ஏற்படுத்திய ஊடல்… பின்… அதுதந்த கூடல்… என அனைத்தும் கைபேசியிலேயே நடந்தது…
இரண்டு வருடங்கள் கழித்து நேரில் சந்தித்தனர் காதல் பறவைகள்… கிடைத்த ஒரு நாளை ஒரு நொடி வீணாகாமல் கழித்தனர்… மால்… சினிமா… பார்க்… பீச்… என ஒன்றாகச் சுற்றித் தீர்த்தனர்…
மறுபடியும் மனமில்லாமல் பிரிந்தனர். மறுபடியும் ஒரு முறை வந்தான்…அதுவும் கண்ணிமைக்கும் நேரத்தில் கழிந்தது.
கவிதா கல்யாண வயதை நெருங்கியதால் அவள் தந்தை அதற்கான வேலையில் இறங்க, அங்கே ஆரம்பித்தது தி ரியல் கேம்!!!
தனக்குக் கல்யாணம் பேச ஆரம்பித்ததை அஜய்யிடம் கவிதா சொல்ல… அவன் முதல் கட்டமாக அவன் வீட்டில் பேசினான் அவர்கள் காதலைப் பற்றி…
அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எவ்வளவோ அவன் முயன்றும் அவர்கள் இசைந்து கொடுக்கவில்லை. நேரில் இருந்தாலாவது ஏதாவது செய்யலாம்… ஆனால் தொலைபேசியில்… கொஞ்சம் தள்ளிப்போட்டான்…
அவளும் அவன் சொன்னதற்கேற்ப, அவளைப் பெண் பார்க்க வந்தவர்களிடம் தனக்குக் கல்யாணத்தில் இஷ்டமில்லை என்று சொல்லிவிட்டாள்.
தான் காதலிப்பதாகப் பெண் பார்க்க வந்த யாரிடமும் அவள் சொல்லவில்லை. அப்படிச்சொல்லி எங்கே அவள் தந்தைக்குத் தெரியவந்து அஜய் வீட்டில் பேசவேண்டுமென்பாரோ என்ற எண்ணமே காரணம்.
இதுவும் அஜய் அவளுக்குச் சொன்னது. அதனால் அதையே செய்தாள்.
அஜய்யிடம் பேசும்போதெல்லாம் அவன் வீட்டில் சம்மதம் வாங்கச் சொல்லி அவள் வற்புறுத்தினாள்.
அவன் வீட்டில், கவிதாவின் வயதில் இருந்த அவன் தங்கைக்குக் கல்யாணம் பேச ஆரம்பித்தனர்.
முதலில் வந்த சம்பந்தமே ஒத்துப்போனது… அவனும் தங்கைக்காக சந்தோஷப்பட்டான்… தங்கையுடன் பேசும்போதெல்லாம் அவள் தன் கணவனாக வரப்போகிறவரின் மேல் உள்ள ஆசையைப் பகிர்ந்துகொண்டாள்.
அவனும் அவள் திருமணம் முடிந்தபின் மறுபடியும் தன் காதலைப் பற்றி வீட்டில் பேசலாம் என்றிருந்தான்.
அந்த நேரம் அகிலனுடன் பெண் பார்க்கும் படலம் அரங்கேறியது… இதோ… இப்போது மருத்துவமனையில் அகிலன் முன்பு…
கவிதா அகிலனிடம் “ஒரு வாரம் முன்னாடி அஜய் கிளம்பறதா சொன்னான். அவன் வந்து உங்க எல்லார்ட்டையும் மன்னிப்பு கேட்கறேன்னு சொன்னான். அவனை வெச்சுட்டு உங்ககிட்ட பேசலாம்ன்னு இருந்தேன்… ஆனா எல்லாம் கைய மீறி போன மாதிரி இருக்கு…”
“என்னன்னே தெரியல… ஒரு வாரமா அவனை காண்டாக்ட் பண்ண கூட முடியல… அவன் சிஸ்டர் என் ஃபிரண்ட் அனிதா அவளையும் ரீச் பண்ண முடியல… என்ன பிரச்சனைன்னு தெரியல. அவன் வீட்டு நம்பர் கூடத் தெரியாது. திருச்சி’ன்னு மட்டும் தெரியும்” என சொல்ல… அகிலன் பேச்சற்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இப்போ சொல்லுங்க… என்னால அஐய்யை மறந்துட்டு எப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியும்…? இதுல நான் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தா பரவால்ல… ஆனா உங்க வாழ்க்கையும் அடங்கி இருக்கு…”
“அஜய் இல்லாம வாழப்போற வாழ்க்கை எனக்கு வெறும் வலிய மட்டுமே தரும்… அந்த வலி எனக்கு மட்டும்ன்னா பரவால்ல… ஆனா இந்தக் கல்யாணம் நடந்ததுன்னா அது உங்களுக்கும் வலிய கொடுக்கும்…”
அவனைப் பார்த்து சொல்ல… லேசாக அகிலன் முகம் மலர்ந்தது…
“உன் பிளாஷ் பேக்’ல நிறைய எழுதுவேன்னு சொன்னப்ப கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு…. பரவால்ல… நல்லாவே பேசற…” என்றவுடன் அவனைப் பார்த்து பழையபடி முறைத்தாள் கவிதா…
அவன் தொடந்தான்… “சரி… அஜய்க்கு கால் பண்ணு. நான் பேசறேன்…” என்றான் சாதாரணமாக மனதில் வலி இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல்…
கவிதாவுக்குப் புரியவில்லை… இவன் ஏன் பேசவேண்டும் என்கிறான் என… ஆனாலும் சொன்னதைச் செய்தாள்… கடந்த ஒரு வாரம் நடந்தது போல்… இன்றும் அஜய் அழைப்பை ஏற்கவில்லை… அவள் முகம் வாடியது…
அவன் எடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டவன் “நம்பர் சொல்லு. என் நம்பர்ல இருந்து கால் பண்ணிப்பாக்கறேன்” அகிலன் கேட்க, யோசனையுடனே சொன்னாள்…
மனது அடித்துக்கொண்டது… ‘அஜய் இவன் போன் பண்ணா எடுத்துடுவானோ… ச்ச இருக்காது… கண்டிப்பா அப்படிப் பண்ண மாட்டான்… என் அஜய் என்ன ஏன் அவாய்ட் பண்ணனும்… அதுக்கான தேவ என்ன இருக்கு?’ என நினைக்கும்போது…
“ஹலோ அஜய்… ஐம் அகிலன்…” என்று எதிரிலிருப்பவன் பேசுவதைக் கேட்டு, கவிதாவின் மூச்சு நின்றே விட்டது என்று சொல்லலாம்.
அதிர்ச்சி… பயம்… படபடப்பு… கோபம்… அழுத்தம்… அழுகை… ஆத்திரம்… என பல உணர்ச்சிகள் ஒன்றாகத் தாக்குவதுபோல் இருந்தது… கண் இமைக்க முடியாமல் அகிலனையே பார்த்தாள்.
“ஹலோ கவிதா… ஹலோ… அஜய் லைன்ல இருக்காரு பேசு…” என அவள் முன் கையசைக்க, அப்போதுதான் அதிர்வில் இருந்து மீண்டு அவள் கண்கள் அசைந்தது… தலையும் அசைந்தது… அஜய்யிடம் பேசமாட்டேன் என்பதுபோல்…
அகிலன் போனை நீட்ட, மறுப்பாகத் தலையசைத்தாள்.
வேண்டுமென்றே அஜய் தன்னிடம் பேசுவதைத் தவிர்த்திருக்கிறான் என்பது புரிய… கண்கள் கலங்கவில்லை… மனம் கலங்கியது… கைகள் நடுங்கியது… உலகம் இருண்டது போல் இருந்தது…
அகிலன் போனை வைத்துவிட்டான். அவளின் மனம் நன்றாகவே புரிந்தது அவனுக்கு.
“ஏதோ வேலைல இருந்துருப்பாரு… அதா நீ பண்ணப்ப எடுக்கல போல…” என பேசும்போது கையைக் காட்டி அவனைத் தடுத்தாள்.
அவன் நிறுத்திக்கொண்டான். சிலநொடிகளில் அவள் மொபைல் அடிக்க, அவள் எடுக்கவில்லை… அதைப் பார்க்கவுமில்லை… அடுத்து அவன் மொபைல் அடித்தது… அவன் பார்க்க அது அவளின் சித்தப்பாவிடம் இருந்து… எடுத்துப்பேசினான்…
“அங்கிள் எந்துருச்சுட்டாராம்… நம்மள வரச்சொன்னாங்க…” என்றான் கவிதாவிடம்.
மூச்சை இழுத்து விட்டவள் “நீங்க எனக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும்ன்னு நினைசீங்கன்னா… நான் அப்பாட்ட இந்தக் கல்யாணம் வேணாம்ன்னு இப்போ சொல்லாப்போறேன். நீங்க மறுப்பு சொல்லாம சரின்னு சொல்வீங்களா…? ப்ளீஸ்”
நப்பாசையுடன் குரல் தாழ்த்தி… கெஞ்சுவது போல் கேட்க… அவனால் என்ன சொல்லமுடியும்…? அவனுக்கும் அவளை பிடிக்குமே… (அந்தக் கதையைப் பின் பார்ப்போம்… முதலில் இதை முடிப்போம்)
அவளின் அந்த முகம் காண சகிக்காமல், தானாக சரி என்பதுபோல் தலையசைத்தான்…
இருவரும் அங்கிருந்து செல்ல நினைக்க… அவனுக்கு மறுபடியும் அழைப்பு வந்தது… போனை யோசனையுடன் அவன் பார்க்க… “நீங்க பேசிட்டு வாங்க” என்று அவள் சென்றாள் தந்தையைப் பார்க்க…
அந்த அழைப்பை ஏற்றவன் “சொல்லுங்க அஜய்” என்றான்…
அஜய் பேசப் பேச, அகிலனின் முகம் பல மாற்றங்களைக் காட்டியது… ஏதோ பேசியும் பார்த்தான். பின் பேசி முடித்து வைத்துவிட்டான்… அஜய் சொன்ன சில வாக்கியங்கள் மனதில் ரீவைண்ட் ஆனது…
அதில் ஒன்று “கவிதாவை கல்யாணம் பண்ணிக்க முடியுமா அகிலன்?” என்பதே!!!
இது எதுவும் தெரியாத கவிதா தன் தந்தையைப் பார்க்கச் சென்றாள்.