மீண்டும் ஒரு காதல் – 2

மீண்டும் ஒரு காதல் – 2:

ஒவ்வொருவராக மீட்டிங் அறையிலிருந்து வெளியேறினர்.

“இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் மூஞ்சில தாண்டவம் ஆடுது” வெளியே வந்தவுடன், ஸ்ரீ கேட்க…

“அவன் இத தான் சொல்வான்னு நினச்சேன். A=B B=A. ரெண்டும் ஒன்னு தான்… அது அவனுக்கும் தெரியும். இருந்தா…லு…ம். விபி’யும் அவன் பேசுறததான் கேட்கறாரு” ரிஷியினால் மனதில் எழுந்த ஏமாற்றம், கோபம் வார்த்தைகளாய் நிவேதாவுக்கு எரிச்சலுடன் வெளிவந்தது.

இதுவரை இதுபோலவெல்லாம் நிவேதா பேசியதில்லை, ஆனால் இன்று… அவளை ஒரு மாதிரி பார்த்த ஸ்ரீ, “நேத்து வரைக்கும் அவரு இவரு’னு பேசின. ‘அவனுக்கு இவ்ளோ மரியாத குடுக்கறயே’னு கேட்டேன். முன்ன பின்ன பார்க்காதவங்கள எப்படி அவன் இவன்னு கூப்பிட முடியும்னு சொன்ன. இன்னைக்கு என்ன திடீர்னு…?” மனதில் தோன்றியதைக் கேட்டான்.

தன் பேச்சிலிருந்த மாற்றத்தை உணராமல் பேசியதை நினைத்து ‘இப்படி அப்பட்டமாவா பேசுவ நிவி’ என மானசீகமாகத் தலையில் குட்டிக்கொண்டவள்…

“ஓ இல்ல ஸ்ரீ… அது… அது வந்து… ஆஹ்ன்… மத்தவங்களோட கருத்தை கேட்காதவனுக்கு எதுக்கு ரெஸ்பெக்ட்?” என்று ஒருவழியாக தட்டுத்தடுமாறி சமாளித்தாள்.

உண்மையில் அவளின் சுபாவம் அதுதான். யாரையுமே, வயதில் சிறியவர்களைக் கூட மரியாதையுடன் தான் அழைப்பாள். ஆனால் அவளின் ‘தேவ்’ தான் இந்த ‘ரிஷி தேவ்’ என தெரிந்தவுடன் ‘அவன் இவன்’ என்று தான் பேசத்தோன்றியது. அப்படி பேசியதற்கான காரணமும் அவள் நினைவில் இப்போது வந்தது.

‘இந்த சரோஜா தேவி சாவித்திரி மாதிரி வாங்க போங்கனெல்லாம் கூப்பிட வேணாம். என்ன, மூணு நாலு வருஷம் தான் பெரியவன் நானு. தேவ்னு பேரு சொல்லி ‘வா போ’னு கூப்பிடு நிவி’ என்றவனிடம்…

‘அப்போ வாடா போடானு கூட கூப்பிடலாமா தேவ்? மூணு வருஷம் தானே வித்தியாசம்’ சிரித்துக்கொண்டே அவள் கேட்க…

‘அப்போ நான் உன்ன வாடி போடி கூப்பிட வேண்டியதாயிருக்கும். I leave it to you to decide (முடிவை உன்னிடமே விடுகிறேன்)’ என்றான் குறும்பாக.

“ஹே நிவி… உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா சொல்லு” ஸ்ரீயின் உதவும் பேச்சில் நிகழ்விற்கு வந்தாள் நிவேதா.

“கண்டிப்பா. ஆனா இப்போ எதுவும் வேணாம் ஸ்ரீ. அவன் கேட்ட மாதிரி டாக்குமெண்ட்ஸ்’லாம் நைட்’டே ரெடி பண்ணிட்டேன். அதுனால தான் காலைல எந்திரிக்கவே லேட் ஆயிடுச்சு. நீ மெயில் பண்ணிட்டு வா… நானும் அனுப்பிட்டு வரேன்… போய் ஒரு காஃபி குடிக்கலாம். காலைலயிருந்து சாப்பிடல ஸ்ரீ”

“என்னது சாப்பிடலையா? என்ன நிவி நீ… மெயில் அப்புறம் அனுப்பிக்கலாம். மொதல்ல வா சாப்பிடலாம்” என்றான் அவளைத் தடுத்து.

“இருக்கட்டும் ஸ்ரீ. லேட் ஆச்சுன்னா, அதுக்கும் ஏதாச்சும் பிரச்சனை வரும். ஒரு பத்து நிமிஷம் வேலையை முடிச்சிட்டு சாப்பிடறேன்” என்று அவள் அறைக்குள் சென்றாள்.

உள்ளே சென்றதும் அவள் மனதில் பல எண்ணங்கள்.

‘அந்த ரிஷி’ய பார்த்து ஏன் பயப்படணும்? நோ நிவி… பயத்தை முகத்துல காட்டிடாத…’

‘ஓ தேவா… உனக்கு இப்போ ரிஷி ஆயிட்டானா?’

‘அவன் எப்போ என்ன விட்டு போனானோ… அப்போவே எனக்கு அவன் தேவ் இல்ல…’ இப்போது கண்களில் கண்ணீர் முட்டியது.

கலங்கிய கண்களுக்குள் சில படங்கள் நிழலாடியது. ரிஷியும் அவன் திருமணம் செய்யப்போகும் பெண்ணின் படமும் மங்கலாக கண்ணுக்குள் தெரிந்தாலும், அப்பெண்ணின் முகம் மனதில் ஆணி அடித்தாற்போல பதிந்திருந்தது.

நேர்த்தியான, அழகான, அம்சமான, பளிங்கு போன்ற முகம்.

அவசரமாக மடிக்கணினியில் இருந்த கேமராவில் தன்னையே பார்த்துக்கொண்டாள். ‘அந்த அழகு, அம்சம், நிறம் எதுவுமே இல்லையோ’ என்ற எண்ணம் இப்போது வாட்டி எடுத்தது. கேமராவை நிறுத்தினாள்.

சில வருடங்களாகத் தோன்றாத இந்த எண்ணங்கள் இப்போது தோன்ற, அது இமிசித்தது. காரணம் ரிஷி தேவ்.

‘எண்ணங்கள் அவனையே சுற்றுகிறதே’ அந்த உணர்வு அவளை கடுப்பேற்ற, அவனுக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களை அனுப்பினாள்.

ஏனோ மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்க, மேசை மேல் தலைசாய்த்தாள்.

நிவேதா அனுப்பிய ஈமெயிலில் ஸ்ரீயும் இருந்ததால், அவள் அனுப்பியவுடன், மடிக்கணினியுடன் அவளுடைய அறைக்குள் வந்தான்.

சோர்ந்து படுத்திருந்தவளை பார்த்ததும்… “என்னாச்சு நிவி…? முடியலையா…? இதுக்குத்தான் ஒழுங்கா சாப்பிடணும்னு சொல்றது. வேல முடிஞ்சுது தானே… இப்போ சாப்பிடு” சொன்னபடி அவள் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

அவன் அக்கறையைப் பார்த்து புன்னகைத்தவள், சாப்பிட டப்பா எடுத்து வைக்க, கதவைத் தட்டிக்கொண்டு ஒருவன், உள்ளேவந்து… “சார் காஃபி…” என்று ஸ்ரீ முன் வைத்துவிட்டு சென்றான்.

அதைப் பார்த்த நிவேதாவிற்கு தானாகவே புன்னகை இன்னமும் விரிந்தது. அவள் மனநிலையை சரியாகப் புரிந்துகொள்பவன் என அறிவாள். இறுகியிருந்த மனம் இப்போது இளக ஆரம்பித்தது.

“இட்லியா…? சாப்பிட்டு முடிச்சிட்டு காஃபியை குடி” ஸ்ரீ சொல்லியபடி காஃபியை க்ளாஸில் ஊற்றியவன்… அவளுடன் பேசிக்கொண்டிருந்தான், தன் மடிக்கணினியிலும் ஒரு கண் வைத்துக்கொண்டே.

அனைத்தையும் மறந்து அவனிடம் இலகுவாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால், எல்லாம் சில நிமிடங்களே…

அவளுடைய பக்கத்து அறையில் நடமாடும் அரவம் தெரிந்து இருவரும் திரும்பிப்பார்த்தார்கள். அங்கே ரிஷி மற்றும் விபி.

அவனை பக்கத்து அறையில் பார்த்ததும் படபடப்பு கூடியது. ‘இவன் பக்கத்து கேபினா… கடவுளே… இன்னும் எவ்ளோ சோதனை எனக்கு காத்துட்டு இருக்கோ!’ மனதினுள் நொந்துகொண்டாள்.

ரிஷியிடம் பேசிய விபி அறையிலிருந்து வெளியே செல்ல, அங்கே உட்கார தயாரானவன் பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, அங்கே நிவேதாவுடன் ஸ்ரீ.

நிவேதா ரிஷியைப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்தான். இருவரின் பார்வை சில நொடிகள் நிலைத்திருந்தது.

ஸ்ரீ சற்று செரும, தன்னிலைக்கு வந்தவள்… ஸ்ரீயை பார்த்தாள். ரிஷியும் ஸ்ரீயை பார்த்தான். மூவரும் சம்பிரதாய புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.

தன்னுடைய இருக்கையில் அமர்ந்த ரிஷி, ‘மெயில் அனுப்ப சொன்னா, ரெண்டு பேரும் சிரிச்சு பேசிட்டு… சாப்பிட்டுட்டு இருக்காங்க. இவங்களோட எப்படி நான் வேல பார்க்க போறேனோ…’ என்று நினைத்தவன் கவனத்தை மடிக்கணினியில் செலுத்தினான்.

சிறிதுநேரம் கழித்து ரிஷி, இடையிலிருந்த கண்ணாடி தடுப்பு பக்கம் திரும்ப, அவர்கள் இருவரும் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே எழுந்தான்.

அவன் அறியாமலே, எதற்கென்று புரியாமலே ஒரு வித கோபம் வந்தது இருவரை சேர்ந்து பார்க்கும்போது! அதுவும் ஸ்ரீ அவளுடன் பேசுவது ஏனோ ஒரு சொல்லத்தெறியாத உணர்வை மனதில் எழச்செய்தது.

என்னதான் ஸ்ரீயிடம் பேசிக்கொண்டிருந்தாலும், அவள் கண்களும், மனமும் அவ்வப்பொழுது பக்கத்து அறையைப் பட்டும் படாமலும் நோட்டம் விட தவறவில்லை.

ரிஷி அவன் அறையைவிட்டு வெளியே போவதை பார்த்தபின், ஸ்ரீ அவளிடம்… “நான் என் இடத்துக்கு போறேன் நிவி. பெட்டர் நீ இனி என் ப்ளேஸ்’கு வா. இந்த சிடுமூஞ்சியை அடிக்கடி பார்க்க முடியாது” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

அவளும் புன்னகைத்து, “ஹ்ம்ம்… மினு வந்திடுவா ஸ்ரீ. நான் போய் கூட்டிட்டு வந்துடறேன். அவ தூங்கி எந்திரிச்ச உடனே, உன் இடத்துக்கு கூட்டிட்டு வரேன். பேன்ட்ரி போகலாம்” என்றவள் மணி பார்க்க, அது 12.30 என்று காட்டியது.

மினுவை அழைத்து வர அவசரமாகப் புறப்பட்டாள்.

காரிடோர் வழியாகச் செல்லும்போது ரிஷி அங்கே நிற்பதை பார்த்தவள், அவன் புகை பிடிப்பதைப் பார்த்துச் சற்று திடுக்கிட்டாலும்… வெளியே காட்டிக்கொள்ளாமல் சென்றாள்.

அவள் செல்வதைப் பார்த்தவன் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவன் வேலையை மும்மரமாக செய்துகொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து, மகளை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தாள் நிவேதா.

அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை அவள் திரும்பி வரும்போது குழந்தையுடன் வருவாள் என. அவன் கண்கள் அவளையும் கூடவே ஒரு நான்கிலிருந்து ஆறுவயது மிக்க குழந்தையையும் பார்த்த நொடி, அவசரமாகக் கையிலிருந்ததை அணைத்து தூக்கிப் போட்டுவிட்டு, மறுபக்கம் திரும்பிக்கொண்டது.

அதைப் பார்த்தவளின் இதழ்கள் அவளையும் மீறி ஓர் ஓரமாக புன்னகையைக் காட்டியது. மகளை அழைத்துக்கொண்டு அவள் அறைக்குச் சென்றவள், மதிய உணவை கொடுத்தாள்.

‘இதென்ன புது பழக்கம்? எப்போதிலிருந்து சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சான்? வீட்டுல கேட்க மாட்டாங்களா? உடம்புக்கு இதெல்லாம் நல்லதில்லன்னு தெரியாதா?’ என மனதில் அவனைத் திட்டிக்கொண்டே மகளுக்கு உணவும் கொடுத்து முடித்தாள்.

மகளை எதிரே இருந்த நாற்கலியில் உட்காரவைத்தவள், தன்னிடத்திற்கு சென்று வேலையை ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் ரிஷியும் அவன் அறைக்கு வந்தான்.

குழந்தை விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவனும் வேலையில் ஈடுபட்டான்.

மினு நாற்காலியிலிருந்து இறங்கி, பந்து வைத்து விளையாடிக்கொண்டிருக்க, பக்கத்துக்கு அறையில் புதிதாக யாரோ உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, கண்ணாடி தடுப்பு அருகில் சென்று கையசைத்தாள்.

ஏதோ அசைவை உணர்ந்த ரிஷி, திரும்பி மினுவைப் பார்க்க, அவனும் கையசைத்தான்.

நிவேதா யாருடனோ போனில் முக்கியமாகப் பேசிக்கொண்டிருந்தாள்… இது எதையும் கவனிக்காமல்.

மினு சைகையிலே ‘நீங்கள் யார்?’ என்பது போல் அவனைக்கேட்க, குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தவன், எப்படியும் அவள் காதிற்கு கேட்காது என்று தெரிந்தும் “ரிஷி” என்றான் மெதுவாக.

மினு, ‘அவளுக்குக் கேட்கவில்லை’ என்பதை காதருகே கைவைத்து சைகையால் சொல்ல, அவனின் புன்னகை சிரிப்பாக மாறியது.

எழுந்து கண்ணாடி அருகே வந்து அவன் பெயரைச் சொல்ல… அப்போதும் கேட்கவில்லை என்று சொன்ன மினு, சுற்றி அவள் இருக்கும் அறை உள்ளே வரும்படி மறுபடியும் சைகை செய்தாள்.

அவன் எழுந்து வந்து அவளிடம் பேசுவதைப் பார்த்த நிவேதா, திடுக்கிட்டு, சீக்கிரம் பேசுவதை முடித்துக்கொண்டு, மகளை அமைதியாக இருக்கச் சொல்லும்போது… ரிஷி அவள் அறைக்குள் வந்தான்.

வந்தவன்,  “ஹே பேபி” என்று மினு பக்கத்தில் செல்ல, “ஹாய் அங்கிள்” என்று கையசைத்தாள். நிவேதாவால் எதுவும் பேச முடியாமல் அவள் இடத்திலேயே உட்கார்ந்திருந்தாள் படபடப்புடன்.

“உன் பேரென்ன?” ரிஷி அவளுக்கு சமமாக மண்டியிட்டுக் கேட்க, “மினு… உங்க பேரு?” குழந்தை வினவினாள்.

“நான் ரிஷி” என்றதும், மினு சட்டென நிவேதாவை திரும்பிப் பார்த்து… “அம்மா… இந்த அங்கிள்’ல தானே நீ ரொம்ப பேட்னு(bad) சொன்ன…” என்றவுடன், நிவேதா திடுக்கிட்டு ரிஷியைப் பார்த்தாள்.

ரிஷி புருவங்கள் உயர்த்தி நிவேதாவைப் பார்க்க… அவள் அவசரமாக எழுந்து மினுவிடம், “அப்படியெல்லாம் சொல்லக் கூடாது மினு” என்று சின்ன மிரட்டல் தொனியில் சொல்லும்போது, மண்டியிட்டிருந்தவன் எழுந்தான்.

“நம்ம என்ன சொல்றோமோ அதைத்தான் குழந்தையும் சொல்லும். அவளை ஏன் மிரட்டற? இன்னும் என்னவெல்லாம் என்னை பத்தி சொல்லியிருக்கியோ…” என்றவன், மினுவை தூக்கி நாற்காலியில் நிற்க வைத்தான்.

தன்னிடம் அவனின் இந்த உரிமை பேச்சு, அவள் மனதில் பாரத்தைக் கூட்டியது. இயலாமையுடன், தவிப்புடன், எதுவும் சொல்லவோ செய்யவோ முடியாமல் அவனைப் பார்த்தாள்.

“நான் பேட்’லாம் இல்லடா. குட் தான்” ரிஷி விளக்கவும், மினு தன் அம்மாவைப் பார்த்துவிட்டு ஏதோ யோசித்தாள். பின் திரும்பி அவனிடம், இடுப்பில் கைவைத்துக்கொண்டு…

“நீங்க குட் பாய்’னா எங்க ட்விங்கள் ட்விங்கள் ரைம்ஸ் பாடுங்க” என்று தீவிரமாகக் கேட்க, ரிஷி சட்டென சிரித்துவிட்டான்.

‘இந்த சிரிப்பைக் கேட்டு, எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது’ என அவள் மனம் அதன் பின்னே சென்றாலும், மினு இப்படி கேட்டது ‘ஐயோ’ என்றாகிவிட்டது.

உடனே, “மினு அமைதியா இரு. இந்த மாதிரியெல்லாம் பேச கூடாது” என்று சொன்னவள், அவன் பக்கம் திரும்பி…

“சாரி தே…” என திக்கி, தேவ் என்று சொல்லவந்ததை உணர்ந்து சீக்கிரமாக சுதாரித்துக்கொண்டு “சாரி ரிஷி. அவ ஏதோ சொல்றா… நீங்க போங்க” என்றாள் அவசரமாக.

அவனின் உரிமையான பேச்சிலேயே ‘அவன் ரிஷி தான்’ என்று சப்தமிட்ட மனது இப்போது ‘இல்லை தன் தேவ் தான்’ என அரற்றியது. மனதின் போராட்டத்தில் சிக்கி தவித்தாள்.

அவள் பேசியபோது இடைவெளி விட்டு மாற்றியதை லேசாக உணர்ந்த ரிஷி, ‘என்னை தேவ்னு சொல்லி கூப்பிட வந்தாளா? இல்ல எனக்கு தான் அப்படி தோணுச்சா?’ புருவம் சுருக்கி யோசிக்கும்போது, நிவேதா மினுவிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“அம்மா தப்பா சொல்லிட்டேன் மினு. அங்கிள் பேட் பாய்’லாம் இல்ல” என்றாள் பொறுமையாக, குழந்தைக்குப் புரியும்வண்ணம்.

“அதெல்லாம் முடியாது. அங்கிள் நீங்க ட்விங்கள் ட்விங்கள் ரைம்ஸ் சொல்லியே ஆகணும்” விடாப்பிடியாகக் குழந்தை கேட்க, அவன் மறுத்திருக்கலாம்… ஆனாலும் மறுக்கவில்லை. மறுக்கத் தோன்றவும் இல்லை.

அங்கு அவன் எப்படி பாடுவது என்று நினைத்துக்கொண்டு நிவேதாவைப் பார்த்தான். ‘வேணாம்… முடியாதுன்னு சொல்லு’ கேட்டது நிவேதாவின் கண்கள்.

பின் ஒரு யோசனை அவனுக்கு உதயமாக, “உங்க அம்மா எனக்கு செர்டிபிகேட்’லாம் கொடுக்க வேணாம். நீ என் ரூம்க்கு வா… நான் உனக்கு ட்விங்கள், ட்விங்கள் அப்புறம் நிறைய சொல்றேன். அப்போ, நான் குட் அங்கிள்னு நீயே சொல்வ…” என்றான் நிவேதாவைப் பார்த்து, புருவத்தை உயர்த்தி புன்னகைத்துக்கொண்டே.

அவன் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, நிவேதாவிற்கு தலையே சுற்றுவதுபோல் இருந்தது.

‘யார் தன் வாழ்வில் இனி இல்லவே இல்லை’ என்று நினைத்தாளோ அவனுடன் தன் மகள் சகஜமாகப் பேசுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தடுமாறி பரிதவிப்புடன் நின்றாள்!

 

***தொடரும்***

33
6
10
6
4
4
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved