மீண்டும் ஒரு காதல் – 3

மீண்டும் ஒரு காதல் – 3:

அனைத்தும் கொஞ்சம் எல்லை மீறுவதாக நினைத்த நிவேதா, “மினு அம்மா சொன்னா கேட்பியா மாட்டயா? அங்கிள்’ல விடு. அவருக்கு வேல இருக்கும்” மினு அருகில் வந்து தூக்க நினைக்க…

“அம்மா இரு மா… கேட்டுட்டு உடனே வந்திடறேன். அப்போ தான் அங்கிள் குட் பாயா இல்ல பேட் பாயா’ன்னு தெரியும். அங்கிள் வாங்க போலாம்” என்று நாற்காலியில் இருந்து இறங்கி… அவள் முன்னே செல்ல, ரிஷி நிவேதாவை பார்த்து புன்னகைத்தபடி மினுவிற்கு கதவை திறந்து அழைத்துச்சென்றான்.

‘அதட்டி வளர்க்காதது தவறோ?  சொல் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறாளே’ என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்து நின்று நின்றுகொண்டிருந்த நிவேதா, திரும்பி அவன் அறைக்குள் பார்க்க…

அங்கே அவன் மினுவை மேசை மேல் உட்காரவைத்து, கைகளை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்ல, மினு கைதட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவன் கண்களில் தெரிந்த உற்சாகத்தை பார்த்த நிவேதா மனம் மறுபடியும் மருகியது.

‘இந்தமாதிரி உன்ன எப்போ பார்ப்பேன்னு காத்துட்டு இருந்தேனே தேவ். அதுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சு’ கண்கள் கலங்கி, அதே இடத்தில் அவள் நின்றுகொண்டிருக்க… அவளறைக்கு வந்தான் ஸ்ரீ.

‘தான் வந்ததை கூட பார்க்காமல் அப்படி என்ன?’ யோசித்தபடி ஸ்ரீ திரும்பிப்பார்க்க, அங்கே ரிஷியுடன் மினு விளையாடிக்கொண்டிருந்தாள்.

ஸ்ரீ வந்ததைப் பார்த்த மினு, “ஸ்ரீ அங்கிள்” என்று அங்கிருந்து கையசைத்தாள்.

அப்போது நிகழ்வுக்கு வந்த நிவேதா, ஸ்ரீயை பார்த்து வராத புன்னகையை வரவழைத்து புன்னகைக்க “அங்க என்ன பண்ணிட்டு இருக்கா மினு?” கேட்டான் ஸ்ரீ.

நிவேதா சொல்ல வரும்முன், அவள் அறையின் கதவை ரிஷி திறந்து விட, உள்ளே வந்த மினு, “ஸ்ரீ அங்கிள்” என்று அவனுடன் hi-fi செய்தபின், கதவருகே நின்றுகொண்டிருந்த ரிஷியை பார்த்து, “பை தேவ்” என்றாள்.

நிவேதா திடுக்கிட்டு, “மினு…என்ன இதெல்லாம்? பேர் சொல்லி கூப்பிடறதா?” என்றாள், அதுவும் ‘தேவ்’ என்று அழைத்தது ஏதோபோல இருந்தது.

“தேவ் தான் அப்படி கூப்பிட சொன்னான்” என்றாள் மினு ரிஷியைப் பார்த்து புன்னகையுடன். நிவேதாவும் ஸ்ரீயும் அவனை ஏறிட, ரிஷி புன்னகையுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஸ்ரீ, “மினு பெரியவங்கள பேர் சொல்லி கூப்பிட கூடாதுல்ல?” பொறுமையாக எடுத்துச்சொன்னான்.

“இல்ல அங்கிள். தேவ் தான் ‘அவன் குட் பாய். நம்ம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்’னு சொன்னான். ஃப்ரெண்ட பேரு சொல்லி தானே கூப்பிடணும்? நான் ரஜத்தை அப்படி தான் கூப்பிடுவேன்” என நிறுத்தி, நிவிதாவிடம் “அம்மா எனக்கு தூக்கம் வருது” என்றாள் கண்களை கசக்கிக்கொண்டு.

என்ன செய்வதென்று தெரியாமல் நிவேதா ஸ்ரீயை பார்க்க, அவன் ‘ஒன்றும் இல்லை. பார்த்துக்கொள்வோம்’ என்பது போல் கண்ணசைத்தான். பின், “சரி நிவி நீ பாரு… நான் கிளம்பறேன்” என்று அவனும் வெளியேறினான்.

மினுவை தூக்கிக்கொண்ட நிவேதா, எர்கோனோமிக் டாட்லர் பேபி கேரியர் (Ergonomic toddler Baby Carrier) எடுத்து, அதில் அவளை உட்காரவைத்து தன்னுடன் கட்டிக்கொண்டவள், அதிலிருந்த கொக்கிகளை மாட்டி, மினுவை தன் மேல் சாய்த்துக்கொண்டாள்.

இதுபோல பிள்ளைகளைத் துணியால் தன்னோடு கட்டிக்கொண்டு தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் பெண்கள் அதிகம். அதுவும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் பார்க்கலாம். குழந்தையை யாரிடமும் விட்டுச்செல்ல வழியில்லாமல், அவர்களையும் வேலைக்கு அழைத்துச்செல்வார்கள் தாய்மார்கள்.

இப்போது அதுவே கொஞ்சம் வசதியாக, நவீனமாக வடிவமைக்கப்பட்டு baby carrier என்ற பெயரில் நகரங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 20-25 கிலோ வரை உள்ள குழந்தையை இதில் சிரமமில்லாமல் சுமக்கலாம்.

மினுவும் அம்மாவின் அரவணைப்பில் நொடிகளில் கண்ணுறங்க, நிவேதா எதிலும் மனதை அலையவிடாமல் வேலையில் ஈடுபட்டாள்.

வேலையின் நடுவில் எதேச்சையாக அவள் அறை பக்கம் திரும்பினான் ரிஷி. அவள் மகளைக் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பதைப் பார்த்து நெஞ்சம் சற்று நெகிழ்ந்தது.

அடுத்து, ‘குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டால் குழந்தையும் நிம்மதியாக… சிரமமில்லாமல் தூங்குமே’ என்று நினைத்தவன், மறுபடியும் தன் வேலையில் மூழ்கினான்.

மேனேஜர்ஸ் அனுப்பிய ஆவணங்களில் சந்தேகம் கேட்க, மற்றும் சில வேலைகளைக் கொடுக்க, ஸ்ரீ, நவீன் ஆகியோரை ரிஷி தன் அறைக்கு வரச்சொல்லிப் பேசினான்.

‘நிவேதாவிடம் கொடுத்த வேலையை முடித்தாளா?’ என்று கேட்பதற்கு, ‘அவளை தன் அறைக்கு அழைக்கவேண்டுமா?’ என்று யோசித்தான்.

பின், ‘குழந்தையுடன் எப்படி வருவாள்’ என எண்ணியவன், போனில் அழைத்தாலும் குழந்தை எழுந்துவிடும் என்று அவளுக்கு மெஸென்ஜரில்(messenger) ‘ஹாய்’ என்று செய்தி அனுப்பினான்.

அங்கு ஸ்ரீ, நவீன் வருவதைப் பார்த்தவள், ‘தனக்கு மட்டும் ரிஷி மெஸேஜ் செய்கிறான்… ஒருவேளை குழந்தையுடன் இருப்பதால் செய்கிறானோ?!’ என்று நினைத்து அவன் அறை பக்கம் திரும்ப… அவன் மடிக்கணினியை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளும் தன் கணினித் திரை பக்கம் திரும்ப, மற்றொரு செய்தி அவனிடமிருந்து வந்திருந்தது.

‘நீ ஏன் குழந்தையை காப்பகத்தில் விடக் கூடாது?’ என்று சம்மந்தமே இல்லாமல் ரிஷி கேட்டுவைக்க, திரும்பி அவனை பார்த்து சுட்டெரிக்கும் கண்களில் முறைத்தாள்.

அவனும் அவளைப் பார்த்தான். ‘அப்படி என்ன கேட்டுவிட்டேன் இப்படி முறைக்கிறாள்? குழந்தைக்காகத்தானே கேட்டேன்?’ என நினைத்தான் அவன்.

‘என் பொண்ணை என்கூட வச்சுக்கறதுக்கு, விபி’ட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன்.  அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுக்கும் இருக்காதுன்னு நம்பறேன். வேலைய பத்தி மட்டும் பேசலாமா?’ என முடித்தாள்.

நிவேதா திறம்பட வேலை செய்யும் விதம் விபி’க்கு மிகவும் பிடிக்கும். இதுவரை, இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட வேலையில் நேரம் தப்பியதில்லை. அவளால் பல ப்ராஜக்ட்ஸ் கிடைத்துள்ளது. இதுபோல ஓர் ஊழியர், என்ன கேட்டாலும் செய்யலாம் என்பது அவர் கருத்து.

அவள் பதிலை பார்த்த ரிஷி, ‘ச்ச நல்லதுக்கே காலமில்லை’ என மனதில் எண்ணிக்கொண்டு… ‘அந்த சப்போர்ட் டீம் ஸ்பெஷலைஷேஷன் டீடெய்ல்ஸ் (support team specialization details) கேட்டேனே, முடிஞ்சதா?’ என கேட்டான்.

‘இன்னிக்கி ஆன்சைட் (onsite) மேனேஜர் கூட மீட்டிங் இருக்கு… அதுக்கு தயாரானேன். நீங்க கேட்டது அல்மோஸ்ட் ரெடி. சீக்கிரம் அனுப்பறேன்’ நிவேதா பதில் தந்தாள்.

ஒரு வேலை முடிச்சாச்சான்னு கேட்டா, அதுக்கு ரெண்டு பதில் தான் இருக்க முடியும். 1. முடிஞ்சது, 2. முடியல. அல்மோஸ்ட்னு ஒரு பதில் இருக்கக்கூடாது.  சீக்கிரம் அனுப்பவும்’ என்று உரையாடலை முடித்துக்கொண்டான்.

பொதுவாக குழந்தை ஆழ்ந்து உறங்கியபின், அவளை பக்கத்தில் போடப்பட்டிருக்கும் சிறிய டேபிளுக்கு மாற்றிவிடுவாள். அதை அவள் செய்யும் முன் அவன் கேட்டது, அது பத்தாதென்று அவனுடைய அறிவுரைகள் வேறு!

இது அனைத்தும் எரிச்சலை ஏற்படுத்த, அங்கு உட்கார பிடிக்காமல், ஒரு மெயில் அனுப்பினாள்.

தான் அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்புவதாகவும், வீட்டிற்கு சென்றபின் வேலையை தொடர்வதாகவும், ரிஷி தந்த வேலை குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததால் நாளை அனுப்புவதாகவும், அவனுக்கும் விபி’க்கும் அனுப்பினாள்.

பின், அனைத்தையும் எடுத்துக்கொண்டு, மினுவை எழுப்பிக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

அவள் அனுப்பிய மெயில், மற்றும் கோவமாகச் செல்வதைப் பார்த்தவன், ‘தான் பேசியதால் தான் செல்கிறாளோ?’ என்று தோன்றினாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேலையில் ஈடுபட்டான்.

********

நிவேதா வீட்டிற்கு வண்டியை செலுத்த… மனதில், ‘இன்னும் எத்தனை நாள் இந்த ஆட்டம்? தினமும் எப்படியும் பார்த்தாக வேண்டுமே’ என்ற எண்ணம் சலிப்பை தந்தது. கையறு நிலைபோல உணர்ந்தாள்.

அவனை பார்த்தும் இதமாக பேசமுடியாத சூழல் வேறு மனதை பிசைந்தது. தன் வாழ்வில் மட்டும் ஏன் இப்படி என நடந்தவற்றை அசைபோட, அன்றைய மாலை பொழுதில் நடக்கப் போகும் நிகழ்வு தெரியாமல் வீட்டிற்கு சென்றாள்.

சீக்கிரம் வீட்டிற்கு வந்த நிவேதா… எதிலும் கவனத்தைச் சிதற விடாமல், நிம்மதியாக… ஆனால் எப்பொழுதும் செய்வதை விட அதிகமாக வேலை செய்துவிட்டு, இரவு நேரம் எட்டிப்பார்க்கும் போது… மகளுடன் பால்கனியில் போர்ட்டபிள் (portable) நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

மகள் மேல் அம்மா தண்ணீர் தெளிப்பதும், அம்மாவின் மீது மகள் தெளிப்பதும், அதிலிருந்த பொம்மைகளுடன் விளையாடுவதுமாக நேரத்தைக் கழித்துக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில், விளையாட்டுக்கு நடுவில், மினு பக்கத்து பால்கனியை எட்டிப் பார்த்து விட்டு “ஹாய் தேவ்” என்று கையசைக்க, அவள் சொன்ன பேரைக் கேட்டு அதிர்ந்த நிவேதா… திரும்பியபோது, அங்கே ஏதோ குடித்துக்கொண்டிருந்தவன் மினுவின் அழைப்பை கேட்டு கை உயர்த்தி, “ஹாய்” என்றான்.

‘தன்னைப் பார்க்கும் நிவேதாவை பார்த்து புன்னகைக்க வேண்டுமா… வேண்டாமா…’ என்ற யோசனையுடன் அவன் பார்க்க, அவள் மனதிலோ ‘இங்கேயும் இவனா? இன்னும் என்னலாம் பண்ணலாம்னு இருக்க…’ என நினைத்து வீட்டினுள் மாட்டப்பட்டிருந்த விநாயகரைப் பார்த்து சலிப்புடன் பெருமூச்சுவிட்டாள்.

ஆனால் மினுவோ ரிஷியுடன் சைகையில் பேசிக்கொண்டிருந்தாள். நிவேதா பெருமூச்சுவிட்டு அவளின் சலிப்பை காட்டியதை, அவனும் பார்த்தான்.

“அம்மா ம்மா அங்க பாரு… தேவ் கிட்ட ஒரு சூப்பர் டாக் (dog) இருக்கு” மினு சொன்னவுடன், நிவேதா திரும்பி அவனைப் பார்த்தாள்.

அங்கே அவனுடைய செல்லப்பிராணியைப் பார்த்தவுடன், நிவேதாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. ‘ரோமி’ என்றது அவள் இதழ்கள்.

பழைய நினைவுகள் மனதில் அலைமோதின.

அவனுடன் பேசியபோது பாதி நேரம் இதன் கத்தலும், கேமராவை மறைத்து… அதன் முகத்தை காட்டி விளையாடியதும் நினைவிற்கு வர… மனது மிகவும் கனத்தது.

கண்கள் கலங்கப்பார்க்க, “மினு உள்ள போகலாம்” என வலுக்கட்டாயமாக அவளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

‘ச்ச எனக்கு ஏன் தோணாம போச்சு. இந்த அபார்ட்மெண்ட்’ல இந்த தளம் முழுதும் எங்க ஆபீஸ்’ல இருக்கவங்க தானே இருக்கோம். கம்பெனி’ல இருந்து  சலுகை முறையில் குறைந்த வாடகையோட எங்களுக்கு தராங்க. இவனும் இங்க வந்தது ஆச்சர்யம் இல்ல தான்… ஆனா இவளோ பக்கத்துலயா. நாம வேணும்னா வேற இடத்துக்கு போய்டலாமா?’ என்ற யோசனை வர… ‘அப்படி பண்ணா அவனைப்பார்த்து தான் போய்ட்டேன்னுல நினைப்பான்’ என்று மனதில் தேவையில்லாததை யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்தாள்.

அதே நேரம் மினு அழுது, அடம்பிடித்து, நிவேதாவை கீழே உள்ள பூங்காவில் விளையாட அழைத்துச்சென்றாள்.

*********

தன்னைப்பார்த்ததும் வலுக்கட்டாயமாக மினுவை உள்ளே அழைத்துச்சென்ற நிவேதாவை பார்க்கும்போது கோவம் வந்தது ரிஷிக்கு.

அங்கேயே இருக்கையில் உட்கார்ந்தவன் கண்கள் கீழே பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தது.

ஆனால் மனதிலோ, ‘நிவி… உன் பேர்ல இங்க ஒரு பொண்ணு. அதுவும் இப்போ என் வீட்டு பக்கத்திலே. அந்த பேர கேட்டதுல இருந்து எனக்குள்ள என்னென்னமோ தோணுது… உன்னை மட்டுமே கூப்பிட்ட பேரை, வேற யாரையும் கூப்பிட மனசு வரமாட்டேங்குது நிவி.

கூப்பிட வேண்டிய சூழ்நிலை வரும்போதெல்லாம் உன்ன கூப்பிடற மாதிரியிருக்கு. மனசு அடிச்சுக்குது வேதா. அதுனாலயே அவகிட்ட ஒரு மாதிரி நடந்துக்கறேனோன்னு தோணுது.

இந்த விதி நமக்கிடைல நிறைய விளையாடிடுச்சு. இன்னும் என்ன மிச்சம் வச்சிருக்குனு தெரில. உன்னோட வாழ்க்கைல எந்த வகையிலும் தலையிட கூடாதுன்னு முடிவு பண்ணித்தான், மறுபடியும் அமெரிக்கா போனேன்.

இந்தியா வரவே கூடாதுனு முடிவு பண்ணேன். ஆனா ஒரு சின்ன வேலைன்னு சொன்னப்ப மறுக்க முடியல. எப்படியும் என் வாழ்க்கைல நீ இல்லனு தெரியும். ஆனா…’ மனவோட்டத்தில் இருந்தவனை…

கீழே விளையாடிக்கொண்டிருந்த மினு கையைக் குறுக்கே ஆட்டி ஆட்டி “தேவ் தேவ்” என கத்தியது நிகழ்வுக்குக் கொண்டுவந்தது.

அவளைப் பார்த்து புன்னகைத்த ரிஷியின் கண்கள் தானாக அவளின் அம்மா ஸ்ரீயுடன் சற்று தள்ளிப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தது.

‘ஒருவேளை இவன் தான் அவளோட கணவனா இருப்பானோ? இன்னிக்கி கூட நிறைய நேரம் அவளோட இருந்தான்’ என மனதில் நினைக்கும் போது, ஏதோ தோன்ற…

‘அட… மினு தான் ஸ்ரீ அங்கிள்னு கூப்பிட்டாளே. அப்போ எப்படி…’ அவனுடைய மனது இப்போது பழைய நிவேதாவை மறந்து இந்த நிவேதாவை யோசித்துக்கொண்டிருந்தது.

அது அவனுக்கு உரைக்க… ‘இதென்ன தேவையில்லாத யோசனைகள்… யார் எப்படி போனா எனக்கென்ன’ என அவனையே திட்டிக்கொண்டு வீட்டினுள் சென்றான்.

இந்த எண்ணதில் இருந்தவனுக்கு… கீழே மினு அழைத்ததைப் பார்த்தும் அது அவன் மூளைக்கு எட்டவில்லை.

கீழே மினுவோ அவனைக் கூப்பிட்டுக் கத்திக்கொண்டிருக்க… மகள் சத்தத்தில் அவ்வளவு நேரம் ஸ்ரீயுடன் பேசிக்கொண்டிருந்த நிவேதா, மகளைத் திரும்பிப் பார்த்தபோது… அதே நேரம் மினுவைப் பார்த்தும், அவள் அழைப்பது கேட்காததுபோல் உள்ளே சென்ற ரிஷியைப் பார்த்த நிவேதாவுக்கு கோபம் தலைக்கேறியது.

“ஸ்ரீ ஒரு நிமிஷம்” மினுவிடம் வந்த நிவேதா… “இப்போ எதுக்கு அவரை கூப்பிடற மினு? அவர் தான் உள்ள போயிட்டார் இல்ல… நீ ஏன் கத்திட்டு இருக்க?” நிவேதா கொஞ்சம் கோபமாகப் பேச…

“இல்லமா தேவ் என்னை பார்த்தான். சிரிச்சான்… நான் பார்த்தேன்” மினு பாவமாக மேலே அவன் பால்கனியை பார்த்தாள்.

“மினு, மொதல்ல பெரியவங்கள பேர் சொல்லிக் கூப்பிடக்கூடாது. அங்கிள்’கு ஏதாச்சும் வேல வந்திருக்கும்” என்று அவளை சமாதானப்படுத்தினாலும் … மனதில் ‘குழந்தை கூப்பிடறப்ப இப்படியா போறது’ என்று முனகினாள்.

மினு முகம் வாடி நிவேதாவின் கால்களைக் கட்டிக்கொள்ள, அழகை வேறு ஒட்டிக்கொண்டது.

அச்சமயம் ஸ்ரீ வந்து ‘என்ன ஆயிற்று’ என வினவ, நிவேதா சற்று தயங்கி, ஏதோ ஒரு கோபத்தில், “அந்த முசுடு இவ கூப்பிட கூப்பிட உள்ள போயிட்டான். இப்படித்தான் இருப்பான்னா… எதுக்கு குழந்தைகிட்ட மொதல்ல நார்மலா பேசணும்? சரி ஸ்ரீ. நான் வீட்டுக்கு போறேன். நாளைக்கு பார்க்கலாம்” என்று மினுவை தூக்கிக்கொண்டாள்.

அவளுக்கு அதற்கு மேல் ரிஷி பற்றி ஸ்ரீயிடம் சொல்வதற்கு மனமில்லை. இதுவே ஏதோ வேகத்தில் பேசிவிட்டாலும், இங்கே இருந்தால் இன்னமும் வார்த்தைகள் வந்துவிடுமோ என நினைத்து அவசரமாக புறப்பட்டாள். என்ன இருந்தாலும் அவளின் தேவா ஆயிற்றே.

மினுவின் அழுகை அதிகமாக… அதே நேரம் ‘மினு தன்னை அழைத்தது, பின் அதை கருத்தில் கொள்ளாமல் உள்ளே வந்துவிட்டோமே’ என தன்னையே நொந்தபடி ‘மினு இருக்கிறாளா’ என்று பார்க்க, பால்கனி’க்கு அவசரமாக வந்தான் ரிஷி.

அப்போது அழுதவாறே நிவேதாவின் கழுத்தில் சாய்ந்திருந்த மினுவை பார்க்கும் போது; தன்னை திட்டிக்கொள்ள மட்டும்தான் முடிந்தது ரிஷிக்கு.

அடுத்தநாள் காலை மினுவை வேனில் ஏற்றிவிட்டு, நிவேதா அலுவலகத்திற்கு சற்று முன்னதாகவே சென்று, ரிஷி கேட்ட வேலையை முடித்து அனுப்பியபின், மற்ற வேலைகளில் பரபரப்பாக இருந்தாள்.

மகளை மதியம் அழைக்கச் சென்றபோது, பள்ளி வேன் வர சற்று தாமதமாகிவிட்டது. சரியாக மினுவை அழைத்துக்கொண்டு வரும்போது, முந்தைய தினம் போல ஸ்மோக்கிங் ஏரியா (smoking area) வழியாக வர, அங்கே ரிஷி புகை பிடித்துக்கொண்டிருந்தான்.

இவர்கள் வருவதைப் பார்க்காமல் திரும்பி போன் பேசிக் கொண்டிருக்க, எதேச்சையாக திரும்பும் போது மினுவை பார்த்தவன், மினு தன்னை பார்க்குமுன்… அவசரமாக அதை அணைத்துத் தூக்கிப்போட்டான்.

இது எதையும் பார்க்காதவள் போல் விருட்டென அவனைக் கடந்து நிவேதா உள்ளே சென்று விட்டாள்.

*********

சில நிமிடங்களில் ரிஷி, “Excuse me” என கேட்டுவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் நிவேதாவின் அறைக்குள்ளே கோபமாக நுழைந்தான்!

 

***தொடரும்***

27
5
10
7
3
1
3
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved