மீண்டும் ஒரு காதல் – 4

மீண்டும் ஒரு காதல் – 4:

நிவேதாவின் அறையுள் கோபமுடன் நுழைந்த ரிஷியை பார்த்ததும்… மினு,  கோபமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

முதலில் நிவேதாவை பார்த்தவன், அடுத்து முகத்தைத் திருப்பிக்கொண்ட மினுவை பார்த்தான்.

பின், ‘எதற்கு அங்கே வந்தோம்’ என்பதை மறந்து, “என்னாச்சு மினுக்கு? ஏன் கோவமா இருக்கீங்க?” அவள் அருகில் செல்ல… “யெஸ்… நான் கோவமாயிருக்கேன் உன்கூட பேசமாட்டேன் தேவ். ஐ ஹேட் யூ… நீ போ!” மறுபடியும் அவனைப் பார்க்காமல் மறுபக்கம் முகத்தை திரும்பிக்கொண்டாள்.

மினு சொன்ன அதே வாக்கியம்… ‘நான் கோவமாயிருக்கேன் உன்கூட பேசமாட்டேன் தேவ். ஐ ஹேட் யூ’… அவனின் நிவேதா ஒரு முறை அவனிடம் அதீத கோபத்தில் சொன்னது. அதிர்ந்து மினுவை பார்த்தான். மனம் அலைபாய்ந்தது.

பின் ‘இது பொதுவாக அனைவரும் சொல்வது தான். தேவையில்லாமல் யோசிக்காதே’ என்று அலைபாயும் மனதை கடிவாளமிட்டுக்கொண்டான்.

‘அவன் கோபமாக உள்ளே வந்தது, தன்னிடம் அதைக்காட்டும் முன் மினு கோபமாக இருப்பதை பார்த்து அவளிடம் பேச ஆரம்பித்தது’ என அனைத்தையும் பார்த்த நிவேதா, இப்போது… “மினு எவ்ளோ டைம் சொல்றது… பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுனு” என்று சொல்ல… அவள் பேச்சு இருவரின் காதிலும் விழுந்தால் தானே.

மினுவைப் பார்த்து புன்னகைத்தவன், ஒரு நாற்காலியை இழுத்து மினு பக்கமாகப்போட்டு… பின் மினுவை மடியில் உட்காரவைத்து “என்ன கோவம் மேடம்க்கு. சொன்னாதானே தெரியும்” முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்டான்.

“நான் நேத்து உன்ன கூப்பிட்டேன். நீ என்னை பார்த்துட்டு உடனே உள்ள போயிட்ட. நீ என் ஃப்ரெண்ட்’டே இல்ல போ” என அவன் முகத்தைப் பார்க்காமல், அழகான மழலை சொற்களில் மினு கூற… அவன் செய்த தவறை புரிந்துகொண்டான்.

“தேவ் பாவம்ல. மன்னிச்சுடு ப்ளீஸ். இனி இந்த மாதிரி பண்ணவே மாட்டேன்” என்றான் இதயத்தின் அருகே கைவைத்து மன்னிப்புக் கேட்கும் விதமாக.

இப்போது நிவேதாவின் மனம் அலைபாய்ந்தது.

ஒருமுறை அவளிடம் அவன் இதுபோலவே மன்னிப்பு கேட்டது, கண் முன்னால் ஓடியது. கண்கள் கலங்கி கண்ணீர் வெளியே வரப்பார்க்க… கண்களை அழுத்தி மூடி அடக்கிக்கொண்டாள்.

ரிஷி மன்னிப்பு கேட்டவுடன், கோபம் மறந்து, பறந்து போனது மினுவுக்கு.

“அப்போ நீ அம்மா சொன்னமாதிரி மு… மு…” என திக்கித் திக்கி அந்த வார்த்தை ஞாபகம் வராமல் நிவேதாவை மினு பார்க்க, அதுவரை குழந்தையுடன் குனிந்து பேசிக்கொண்டிருந்த ரிஷி… சட்டென நிவேதாவிடம், “என்ன… முட்டாள்னு சொன்னியா?” ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி கேட்டான்.

அவள் ‘இல்லை’ என தயங்கி தலையசைக்கையில்… “முட்டாள் இல்ல தேவ்” என்ற மினு, “அம்மா அது என்ன… பார்க்’ல சொன்னயே…” விடாமல் கேட்க…. “முசுடுனு சொன்னேன். அதுல ஒன்னும் தப்பில்லையே ” என்றாள் ‘இதிலென்ன தவறு இருக்கிறது. உண்மைதானே’ என்பது போல்.

அவளைப்பார்த்து முறைத்த ரிஷி மனதில், ‘எவ்ளோ திமிர். நான் முசுடுன்னா… நீ என்ன?’ என நினைத்துக்கொண்டிருக்க, “இன்னும் நீ சாப்பிடல மினு. சாப்பிட்டு தூங்கணும். எனக்கு வேலையிருக்கு” என்றாள் நிவேதா ‘எதற்கு இந்த வெட்டிப்பேச்சு இப்போது’ என்ற தொனியில் ரிஷியைப்பார்த்து.

“அம்மா… இரு மா” என்ற மகள் ரிஷி பக்கம் திரும்பி “உன் வீட்ல டாக் வச்சிருக்கியா தேவ்? நான் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிக்கும்… ஆனா அம்மாக்கு தான் பிடிக்காது” என்றாள் கொஞ்சம் வருத்தத்துடன்.

நிவேதா பிடிக்காது என்று சொன்னதற்கான காரணமே, ரோமியை மனதில் எண்ணி தான். அதன் ஞாபகம் வந்தால், தேவ்வின் ஞாபகம் வரும் என மறுத்திருந்தாள்.

“ஆமா மினு. அது பேரு ரோமி. ஈவினிங் என் வீட்டுக்கு வர்றியா? அதுகூட விளையாடலாம்” என்ற ரிஷி… “சரி, நீ இப்போ சாப்பிட்டு தூங்குவியாம். அப்போ தான் ஈவினிங் ரோமி கூட ஜாலியா விளையாடலாம்” என சொல்லி அவளை இறக்கி விட, குழந்தையும் மகிழ்ச்சியாக அம்மாவிடம் சென்றது.

‘என்னது மாலை உன் வீட்டுக்கா?’ நிவேதா யோசித்துக்கொண்டிருக்கும்போது… “பை மினு” என்று சொல்லிவிட்டு வெளியே செல்ல நினைத்தவன், திடீரென நிவேதா அருகில் வந்து நின்றான்.

பெரிதாக நெருக்கம் இல்லையென்றாலும் அவனுடைய அந்த அருகாமை… அவனின் முகம், ஈர்க்கும் கண்கள்… இதை பார்ப்பதற்கு காத்திருந்து ஏங்கிய காலமெல்லாம் கண் முன்னே வந்தாலும், இப்போது…. இரண்டடி பின்னால் தள்ளி அவள் நிற்க… அவன் மெதுவாக, மினுவிற்கு கேட்காதவாறு…

“நான் எதுக்கு வந்தேன்னா, இனிமே ஸ்மோக்கிங் ஏரியா வழியா மினுவை கூட்டிட்டு வராத. எல்லாரும் என்னை மாதிரி குழந்தையை பார்த்தவுடனே, சிகரெட்ட தூக்கி போட மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவனின் இந்த அக்கறை அவளுக்கு ஒருபுறம் சந்தோஷத்தை தந்தாலும்… அதன் பிரதிபலிப்பாக புன்னகை வந்தாலும்… இன்னொருபுறம் மன பாரத்தையும் தந்தது. அதன் விளைவு… கண்களில் கண்ணீர் கசிந்தது.

மாலை நெருங்க நெருங்க நிவேதாவினுள் ஒரே எண்ணம் தான்… அது அவன் வீட்டுக்கு மினுவை அனுப்பவேண்டுமா என்று.

நிவேதா கிளம்பாததைப் பார்த்த ரிஷி ‘ஏதோ வேலை இருக்கும் போல… ஆனால் குழந்தை தான் பாவம். எவ்வளவு நேரம் இந்த இடத்திலேயே இருக்கும்?’ என எண்ணிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

ஏதோ யோசனையுடன் கிளம்பாமல் இருப்பவளைப் பார்த்த ஸ்ரீ ‘ஏன் கிளம்பவில்லை’ என கேட்டுக்கொண்டே வர… ஸ்ரீயிடம் உதவி கேட்கலாமா என்ற ஒரு சிறு தயக்கம் நிவேதாவுக்கு.

பின், சொன்னால் ஏதாவது வழி கிடைக்கும் என்று எண்ணி மினு கேட்காதவண்ணம் அவனிடம் நடந்ததைக் கூறினாள்.

“அவன் வீட்டுக்கு போறதுனால என்ன இருக்கு நிவி? மினு ஆசைப்படறால்ல… அவளுக்கும் ஒரு ச்சேஞ் கிடைக்கும்ல” ஸ்ரீ சொல்லவும், “எனக்கு பிடிக்கல ஸ்ரீ” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு.

அதைப் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“அப்படி என்னதான் உங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனையோ!” என்று சிரித்தவன், “ஹ்ம்ம் சரி அப்போ இன்னைக்கு வீட்டுக்கு லேட்டா போகலாம்.

என்ன மினு நம்ம இன்னைக்கு fun city போகலாமா? நீ முன்னாடியே போகணும்னு கேட்டியே…” மினுவின் மனதை மாற்ற எண்ணி கேட்டான் ஸ்ரீ.

“ஆமால்ல… ஆனா இன்னைக்கு தேவ் கிட்ட வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கேனே. அங்க டாக் இருக்கு ஸ்ரீ அங்கிள்” என்றாள் முகத்தில் உற்சாகத்துடன்.

“மினு நீ தானே கேட்ட… போகணும்னு? அதான் அங்கிள் கூப்பிடறாரு. சரி விடு ஸ்ரீ. அவளே வேண்டாம்னு சொல்றா” நிவேதா மினு மனதில் ஆசையை விளைவிக்க… மினு ஒற்றை விரலைக் கன்னத்தில் வைத்துக்கொண்டு யோசிப்பதுபோல் யோசிக்க, அதைப்பார்த்த இருவரும் சிரித்தனர்.

“சரி ஸ்ரீ அங்கிள். நாம fun city போகலாம். நான் நாளைக்கு தேவ் வீட்டுக்கு போய்க்கிறேன்” என்றாள் யோசனையின் முடிவாக. மூவரும் அப்படியே ஆஃபீஸில் இருந்து புறப்பட்டனர்.

இரண்டு நாட்களாக நிவேதாவிடம் தெரியும் மாற்றத்தை நன்றாக உணர்ந்த ஸ்ரீ… எதனால் இந்த மாற்றம் என்ற யோசனையுடன் இருவரையும் அழைத்துச்சென்றான்.

அன்றைய பொழுதை வெளியில் கழித்துவிட்டு இரவு அவரவர் வீடு திரும்பினர்.

அடுத்த நாள் எப்போதும் போல் ஆரம்பித்தது. மதியம் மகளைக் கூப்பிட சென்றாள் நிவேதா.

ரிஷியும் புகைபிடிக்கும் போது கவனத்துடனே இருந்தான். எங்கே இன்றும் மினு தன்னை புகை பிடிக்கும்போது பார்த்துவிடுவாளோ என்று. ஆனால் அவன் முடித்துச் செல்லும்வரை இருவரும் வரவில்லை.

வெகு நேரம் கழித்துத் திரும்பி வந்தாள் நிவேதா… ஆனால் தனியாக. மினு வரவில்லை.

இரண்டு தினங்களாக மினுவிடம் பேசியவன்… அதுவும் முந்தைய தினம், ‘வீட்டிற்கு வருகிறேன் ரோமியை பார்க்க’ என்று சொல்லிவிட்டு வராமல் இருந்ததால்… அவளிடம் பேச எண்ணியவனுக்கு, அவள் இல்லாதது யோசனையும்… லேசான வருத்தத்தையும் தந்தது.

அவ்வப்போது நிவேதாவைப் பார்த்தான். இவனைத் துளியளவும் கண்டுகொள்ளாமல் வேலையில் இருந்தாள் அவள்.

‘இவ கிட்ட எங்க மினு’னு கேட்டா… ரொம்ப சீன் போடுவாளே. என்ன செய்ய? மினு எங்க போனா? ஒருவேளை அவ ஹஸ்பண்ட்  வீட்ல பார்த்துக்கறானோ? எப்படி தெரிஞ்சுக்கறது?’ கொஞ்சம் அதிகமாவே யோசனை கிளைகள் முளைத்தன.

சுற்றி சுற்றி மினுவை பற்றியே அவன் மனம் எண்ண, ‘எதற்காக இவ்வளவு யோசிக்கிறேன்? இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என கடினப்பட்டு கவனத்தை வேலையில் திருப்பினான்.

சில மணி நேரத்திற்குப் பின், நிவேதாவுக்கு ஓர் அழைப்பு வந்தது.

அதை எடுத்து பேசியவள், மறுமுனையில் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்து எழுந்தாள். அவள் எழுந்த வேகம் பக்கத்து அறையிலிருந்தவனைத் திரும்பிப்பார்க்க வைக்க, அப்போது அவள் முகம் பதட்டத்தைக் காட்டியது. அதை அவனும் பார்த்தான்.

அழைப்பு வந்த சில நொடிகளில், அனைவருக்கும் மெயில் அனுப்பினாள்.

அதில் ‘அவசர வேலை வந்ததாகவும், அன்றைக்கான அலுவலக வேலையே அத்துடன் முடித்துக்கொண்டு கிளம்புவதாகவும்’ அனுப்பிவிட்டு விரைவாக புறப்பட்டாள்.

நிவேதாவின் மெயிலைப் பார்த்தவன் மறுபடியும் திரும்பி அவள் அறையைப் பார்க்க, அப்போது சற்று பதட்டத்துடன் அறையை விட்டு வெளியேறினாள் நிவேதா.

***************

வேலையை முடித்துவிட்டு ரிஷி அவனுடைய அபார்ட்மெண்டை அடைந்தான் .

லிஃப்ட்’டில் ஏறிய பின், அவன் போகவேண்டிய தளத்தின் பட்டனை அழுத்த, மூடிக்கொண்டிருந்த கதவு, வெளியிலிருந்து யாரோ அழுத்தியதால் திடீரென திறந்தது.

மொபைல் பார்த்துக்கொண்டிருந்த ரிஷி, ‘யார்’ என்று பார்க்க, மினுவை தூக்கிக்கொண்டு உள்ளே வந்தாள் நிவேதா.

ரிஷியை உள்ளே பார்த்த நொடி சற்று தயங்கி பின், எதையும் வெளிக்காட்டாமல்… சிரிக்கிறாளா என்று கூட தெரியாதவண்ணம், சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு, திரும்பி நின்றாள்.

மினு அவள் அம்மாவின் தோளில் சாய்ந்திருக்க, கண்முன் நிற்கும் ரிஷியை பார்த்தாள்.

அவனைப் பார்த்தவுடன்,  அவனுக்கு முகத்தை காட்டாமல் தன் அம்மாவின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக்கொள்ள, அதை பார்த்தவன்… புன்னகையுடன் “என்ன ஆச்சு மினுக்கு?” என கேட்டான்.

அவள் பதிலேதும் சொல்லாமல், அவ்வப்போது ஓரக்கண்ணில் அவனைப் பார்த்தாள்.

நிவேதாவுக்கு, ‘ஐயோ… ஓடி வந்து லிஃப்ட்’டினுள் ஏறாமல் இருந்திருக்கலாமோ?!’ என தோன்றியது.

“நேத்து நீ வருவனு ரோமி’கிட்ட சொல்லியிருந்தேன். ஆனா நீ தான் வரல. இன்னைக்கு ஆஃபீஸ்’க்கும் வரல. என்ன ஆச்சு மினு குட்டிக்கு?” என்று புன்னகையுடன் குனிந்து மினுவை பார்க்க… “மினுக்கு ஃபீவர் (fever). அழுதுட்டே இருந்தேன். அதான்” என்றாள் குழந்தை.

“அச்சச்சோ. காய்ச்சலா? ஏன் அழுதீங்க மினு?” சிறிய பதட்டம் அவனிடம்.

“அம்மா என்னை இன்னைக்கு டேகேர்’ல விட்டுட்டா. எனக்கு அம்மாவை பார்க்கணும்னு இருந்துச்சு. ஒரே அழுகையா வந்திடுச்சு” என மறுபடியும் அழ துவங்க, அந்நேரம் லிஃப்ட் திறந்தது. மினு சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான் ரிஷி.

‘இதற்காகத்தான் இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் புறப்பட்டாளா? நான் சொன்னதால் மினுவை காப்பகத்தில் விட்டாளா? அதனால் முடியாமல் போய்விட்டதா மினுவுக்கு? தன்னால் தானோ? தவறு செய்துவிட்டோமோ?’ என்று பல கேள்விகள் எழ, தன்னை மறந்து லிஃப்ட் உள்ளேயே நின்றான்.

தாயின் தோளில் சாய்ந்திருந்த மினு, அவன் உள்ளேயே இருப்பதைப் பார்த்து… “அம்மா இரு மா” என்றவள்… “தேவ்… லிஃப்ட் மூடிடும். சீக்கிரம் வெளிய வா…” என்று சொல்ல, நிவேதா திரும்பி அவனைப் பார்த்தாள்.

மினுவின் அழைப்பில் தன்னிலைக்கு மீண்ட ரிஷி… அடிகள் அகல வைத்து நிவேதாவை நெருங்கி… அவளுக்கு கேட்கும்படி “ஐம் ஸாரி. நான் சொன்னதுனால தான் விட்டியானு தெரில. பட் கஷ்டமா இருக்கு” நிஜமாக வருந்தி மன்னிப்புக் கேட்டான்.

அது அவன் வழக்கமில்லை. இவ்வளவு சீக்கிரம் யாரிடமும் மன்னிப்பெல்லாம் கேட்பவனில்லை அவன். இருந்தாலும் மினுவுக்காக அவன் இயல்பை மறந்து மன்னிப்புக் கேட்டான்.

குழந்தைகள் என்றால் அவனுக்கு பிடிக்கும் தான். அமெரிக்காவில் இருந்த போது கூட, உடன் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் யாரிடமும் நெருங்கி பழகியதில்லை.

மினுவுடன் பேச ஆரம்பித்த நாளிலிருந்தே, அவள் மேல் சொல்லத்தெரியாத ஓர் இணக்கம் ஏற்பட்டது. மினுவின் இயல்பான மழலைத்தனமான பேச்சு அவனை மிகவும் ஈர்த்தது. அது அவளிடம் நெருங்கச் செய்தது.

தன்னிடம் மன்னிப்பு கேட்டவனைத் திரும்பிப்பார்த்த நிவேதா, கடனே எனப் புன்னகைத்துவிட்டு, எதுவும் பேசாமல் மறுபடியும் நடக்க ஆரம்பிக்க… மினு மெதுவாக…

“அம்மா நான் இன்னைக்கு தேவ் வீட்டுக்கு போய் ரோமி’ய பார்க்கட்டுமா?”

“உனக்கு உடம்பு சரியில்ல மினு. இப்போ எதுவும் வேண்டாம்” என்றாள் வீட்டை நோக்கி நடந்து கொண்டு.

அதற்கு ரிஷி, “கொஞ்ச நேரம் வந்து இருக்கட்டுமே… அவளுக்கும் ஒரு சேன்ஜ்’ஜா இருக்கும்” ஏனோ அவன் மனதில் மினுவின் தற்போதைய நிலைமைக்குத் தான் தான் காரணம் என்று தோன்ற, நிவேதாவிடம் அனுப்பச்சொல்லி கேட்டான். குரலில் லேசான தன்மையும் தெரிந்தது.

“அம்மா ப்ளீஸ் மா. ரஜத்தையும் கூட்டிட்டு போறேன். ப்ளீஸ்” மினு கெஞ்சும்போது, நிவேதா அவள் வீட்டின் கதவைத் திறந்து கொண்டிருந்தாள்.

அவள் பதில் ஏதும் சொல்லாததால் கடுப்பான ரிஷி… ‘ச்ச எவ்ளோ திமிர். நான் சொல்லித்தான் கேட்க மாட்டா. குழந்தை கெஞ்சுதே. அது கூடவா தெரியல’ அவளை மனதில் திட்டிக்கொண்டு… அவன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்க, ரஜத்தும் அங்கே வந்தான்.

அப்போது நிவேதா, “பார்க்கலாம் மினு. இப்போ வேண்டாம்” என்று சொல்லும்போதே, “இதோ ரஜத் வந்துட்டானே” அம்மாவின் மேல் இருந்து இறங்கியவள், “தேவ்” என்று சற்று சத்தமாகக் அழைத்தாள்.

அவன் திரும்பியதும், “இது தான் ரஜத். என்னோட ஃப்ரெண்ட்… நான் சொன்னேனே” ரிஷியிடம் மினு அறிமுகம் செய்ய, ரிஷி அவளிடம் மறுபடியும் வந்தான்.

“ஹாய் ரஜத்” அவன் தோளை தட்டிய ரிஷி மினுவிடம், “அம்மா கிட்ட சீக்கிரம் பெர்மிஷன் கேட்டுட்டு வாங்க” என்று இருவரின் தலைமுடியைச் செல்லமாகக் கலைத்து, புன்னகைத்துவிட்டு சென்றான்.

“அம்மா” என்று சத்தமாகக் கத்திக்கொண்டே உள்ளே சென்றாள் மினு.

“மினு உனக்கு உடம்பு சரியில்ல. சொன்னா கேட்க மாட்டியா?” என்று கொஞ்சம் அழுத்தமாகக் கூற, அதற்கு கோபித்துக்கொண்ட மினு, அதன் வெளிப்பாடாக, சோபாவில் தலை குனிந்து கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தாள்.

அவள் பக்கத்தில் ரஜத்’தும் அவளைப் போலவே உட்கார்ந்துகொள்ள, அவர்களைப் பார்த்த நிவேதாவுக்கு சிரிப்புதான் வந்தது.

“சரி. கோவப் படாத. கஞ்சி குடிச்சிட்டு ரஜத்தையும் கூட்டிட்டு போ… சரியா…” சமாதான கொடியை நிவேதா பறக்க விட, சந்தோஷத்தில் மினு ஓடிப்போய் தன் அம்மாவின் மேல் ஏறி முத்தமழை பொழிந்தாள்.

***************

“வாங்க வாங்க குட்டீஸ்…” வீட்டிற்கு வந்த குழந்தைகளை வரவேற்றான் ரிஷி.

மினு வீட்டைச் சுற்றி பார்த்துவிட்டு… “தேவ். உன் டாக்(dog) எங்க?” என்க, ரோமியை அழைத்தான் ரிஷி.

ரோமி இருவரையும் பார்த்தவுடன் சீறிப்பாய்ந்து ஓடி வர, மினு சற்று பயந்து ரிஷியிடம் ஒடுங்கினாள். ரிஷி மெதுவாக இருவரையும் ரோமியிடம் பழக்கிவிட, சிறுவர்களை விட… ரோமி மிகவும் குஷியாகி விட்டது.

அறிவுக்கூர்மைக்கும் ஆக்ரோஷத்திற்கும் பெயர்போன ஜெர்மன் ஷெப்பர்ட் இனம். அவ்வளவு எளிதாக யாரிடமும் ஒட்டாத வகை, குழந்தைகளைப் பார்த்ததும் துள்ளி குதித்தது. காரணம் ரிஷியின் பயிற்சி. அதிகமாக அதைக் குழந்தைகளிடம் மட்டுமே பழகவிட்டிருந்தான், அமெரிக்காவில் இருந்தபோது.

“தேவ் இது என்ன சாப்பிடும்…? அம்மா எனக்கு தர்ற மாதிரி, நீ இதுக்கு ஊட்டிவிடுவியா…? யாரையாச்சும் கடிச்சிருக்கா…? இதோட ஏஜ் என்ன…? நீ ஆஃபீஸ் போனப்புறம் யாரு பார்த்துப்பா…? இது சாக்லேட் சாப்பிடுமா…?” பல கேள்விகளை அடுக்கினாள் மினு. ரஜத் அவளுக்கு எதிர்மாறாக அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ரஜத்தின் அம்மா வந்து, அவன் தந்தை வந்துவிட்டதாகச் சொல்ல, அவன் புறப்பட எழுந்தான்.

“நீ வரலையா மினு? அம்மா வெய்ட் பண்ணுவாங்கல்ல” அவன் அம்மா கேட்டதற்கு… “கொஞ்சம் நேரம் விளையாடிட்டு போறேன் ஆண்ட்டி” என்றுவிட்டாள்.

‘ரஜத்தின் தந்தை’ என்பதை ரிஷி கேட்டவுடன், மனதில் ‘மினுவின் தந்தை எங்கே? யார்?’ என்று முன்பு துளைத்த அதே கேள்விகள் மறுபடியும் துளைத்தன.

கிளம்பிய ரஜத்தின் கைகளை ஸேனிடைஸ் (sanitize) செய்து அனுப்பினான்.

மினுவிடம் ‘அவள் தந்தையை பற்றி கேட்கலாமா?’ என்று எண்ணி அவளைப் பார்க்க, அவள் அவனிடம், “தேவ். இதுக்கு சாப்பாடு எப்படி குடுக்கணும்னு சொல்றயா?” ஆர்வமாக கேட்டவுடன், அவனும் அதனுடைய தீனியை எடுத்துவந்தான்.

மனது ஏனோ மினுவின் தந்தையைப் பற்றி எண்ணிக்கொண்டே இருந்தது.

தீனியை ரோமிக்கு எப்படிக் கொடுப்பது என்பதை காட்டியவன், மினுவை மடிமேல் உட்காரவைத்து, “மினுவோட அப்பா எப்போ…” என்று அவன் முடிப்பதற்குள், கதவருகில் செருமும் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தான் ரிஷி.

அங்கே கோபத்துடன் நின்றுகொண்டிருந்தாள் நிவேதா.

***தொடரும்***

28
4
10
9
4
4
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved