மீண்டும் ஒரு காதல் – 5
மீண்டும் ஒரு காதல் – 5:
கதவருகே கோபமாக நின்றுகொண்டிருந்தாள் நிவேதா.
ரிஷி, ‘தான் மீனுவிடம் பேசியதை கேட்டுவிட்டாளோ’ என்று நினைக்க… நிவேதா, “மினு. ரஜத் அம்மா கூப்பிட்டப ஏன் வரல? எவ்ளோ நேரம்?” என்று சொல்லி முடிக்கவில்லை…
அவள் பேசியதை மினு கேட்டாளோ… இல்லையோ… அவள் குரல் கேட்டதும் ரோமி பாய்ந்து தாவியது நிவேதாவிடம்.
நிவேதா சற்று திடுக்கிட… உடனே ரிஷி “ரோமீஈஈஈ. என்னதிது?! இந்தப்பக்கம் வா” கிட்டத்தட்ட குரலை உயர்த்தி கத்தினான்.
அவன் சத்தம் கேட்டதும் ரோமி கொஞ்சம் அமைதியானது… இருந்தும் நிவேதாவின் கால்களை எட்டி எட்டி பற்றிக் கொள்ளப்பார்த்தது.
அது பாய்ந்து வந்ததைப் பார்த்த பயத்தினாலோ… இல்லை தன்னை இன்னமும் ஞாபகம் வைத்துக்கொண்டுள்ளதே என நினைத்ததினாலோ, சட்டெனக் கண்கள் கலங்கிவிட்டது நிவேதாவுக்கு.
அதற்குள் மினுவை அழைத்துக்கொண்டு நிவேதா அருகில் வந்த ரிஷி, அவள் கலங்கிய கண்களைப் பார்த்தவுடன், ‘பயந்துவிட்டாள்’ என எண்ணி… “ரோமி… விடு அவங்கள. Behave yourself. உள்ள போ” என ஆணையிட்டான்.
பின் நிவேதாவிடம் “ஐம் ஸாரி” என்று முடிப்பதற்குள், அவன் கைகளிலிருந்த மினுவை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
“இதென்ன புது பழக்கம் ரோமி? இப்படியா புதுசா பார்க்கறவங்கள பயப்படுத்தறது?” ‘பொதுவாக ரோமி இதுபோல நடந்து கொள்ளாதே… இருந்தாலும் இது தவறு’ என எண்ணி… அதனிடம் கத்தினான், எகிறினான்.
அதுவோ அவன் பேச்சை எதுவும் கேட்காமல்… அவனுடைய மூடியிருந்த மேக்புக்கை (MacBook) சுட்டிக் காட்டி கத்தியது அவனைப்போலவே.
“நான் என்ன சொல்றேன் நீ என்ன பண்ற ரோமி? இது ரொம்ப தப்பு”
அது விடுவேனா என்று மேக்புக்கை சுற்றி வந்து… அதைக் காட்டி குறைத்தது.
அவனுக்கு கோபம் தலைக்கேற, “அதுல என்ன இருக்கு? நீ நடந்துக்கறது கொஞ்சம் கூட சரியில்ல ரோமி. அந்த குட்டி பொண்ணு உன்கூட விளையாடணும்னு ஆசையா வந்துச்சு” என்று சொல்லும்போது…
‘அட மினு கைய சுத்தம் செய்யச் சொல்லி சொல்லலையே’ என நினைத்துக்கொண்டு… “உன்ன வந்து கவனிச்சுக்கறேன்” என்றுவிட்டு நிவேதாவின் வீட்டிற்கு சென்றான்.
கதவு கொஞ்சமாகத் திறந்திருந்தது. உள்ளே பேசுவது தெளிவாக வெளியே கேட்டது.
“அம்மா ஸாரிம்மா. ப்ளீஸ் மா. அழறியா… நான் இனி எங்கயும் போகலமா” மினுவின் பிஞ்சு குரல் கேட்டதில் ‘அழுகிறாளா…’ என்று எண்ணியவாறே, கதவைத் தட்டிக்கொண்டே, கதவைத் திறந்தான்.
அங்கே தலையை இரு கையால் தாங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த நிவேதா… கதவு தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.
அவனை அங்கே பார்த்ததும், ஏனோ இதுவரை கட்டுப்படுத்திய கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
‘அந்த வாயில்லா ஜீவனுக்கு என்னை தெரியுது. ஆனா உனக்கு தேவ்?’ மனம் வலித்தது.
‘அவனுக்கு நீ தான் என்று எப்படி தெரியும்? அது தெரியாமல் இருப்பதற்கு காரணமும் நீ தான். அதுவும் இப்போது அவனாக தெரிந்து கொள்ள வேண்டுமா? உனக்கு யோசிக்கும் திறன் இல்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது’ வலித்த மனதை ஏளனம் செய்தது அவள் மூளை.
சட்டென தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள், அவனை ‘என்ன’ என்பது போல் பார்க்க… அவள் சரியில்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.
“மினு… ரோமி…” அவனுக்கு வார்த்தைகள் வர மறுக்க, “மினுக்கென்ன?” என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்டாள்.
“இல்ல. மினு ரோமி கூட விளையாடினா. கை கழுவல. அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என கூறிவிட்டு புறப்பட திரும்பியவன்… சட்டென நின்று அவளை பாராமல்…
“ஸாரி. ரோமி இதுவரை இப்படி நடந்துட்டது இல்ல. என்னனு தெரில. இனி இப்படி நடக்காம பார்த்துக்கறேன்” மினுவை மட்டும் ஒரு முறை பார்த்துவிட்டு வெளியேறினான்.
நிவேதாவின் மனம் அமைதியாகவில்லை. இதுவரை அனுபவித்ததை விட, இனி நிறைய அனுபவிக்க நேரிடுமோ? தன் வாழ்வில் நிம்மதி என்ற ஒன்று எப்போது வரும்.
இதையே நினைத்துக்கொண்டு மினுவின் கைகளை கழுவிவிட்டு… அவளுக்கு செய்த உணவை சாப்பிட வைத்தாள். மினு சாப்பிட்டு முடிக்க, ரஜத் அங்கே வந்தான்.
இரவு இருவரும் ‘குட்நைட்’ சொல்லிவிட்டு உறங்கச் செல்வது வழக்கம். அதையே இன்றும் செய்தனர்.
அப்போது திடீரென மினு, “அம்மா… நான் தேவ்க்கு பை, குட்நைட் சொல்லவே இல்ல. அவனும் என் ஃப்ரெண்ட்” அடுத்த வம்பை ஆரம்பிக்க, கோபத்தின் விளிம்பிலிருந்த நிவேதா, “ஒன்னும் தேவையில்லை மினு. மருந்து சாப்பிட்டு படுக்கலாம்” என்றாள் கொஞ்சம் எரிச்சலுடன்.
மறுபடியும் மினு முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள, “வர வர இந்த மாதிரியே செய்து காரியத்தை சாதிச்சுக்கற மினு. சரியில்ல” கோபம் சற்றும் குறையாமல் மினுவை அவன் வீட்டிற்கு செல்ல சம்மதித்தாள்.
நிவேதாவிடம், மினுவின் கைகளை கழுவச்சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்த ரிஷி, ரோமியைப் பார்க்க… அது மேக்புக்’கையே சுற்றிக் கொண்டிருந்தது. ரிஷிக்கு சுத்தமாக விளங்கவில்லை, அதன் செயல்கள்.
அமைதியாகக் குளிக்கச்சென்றுவிட்டான்.
சிறிது நேரத்திற்குப் பின், “ரோமி” என அவன் அழைத்ததும்… அவனைப் பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு, அதனுடைய இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டது. மனிதர்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா என்ன?
அதன் கோபத்தைப் பார்த்து புன்னகைத்த ரிஷி… தட்டில் அதற்கு உணவை எடுத்துக்கொண்டு, அதன் அருகில் உட்கார்ந்து, உண்ணச்சொன்னான்.
அது மறுபடியும் முகத்தைத் திருப்பிக்கொள்ள “சரி, ஸாரி… உன்ன திட்டிட்டேன். இன்னைக்கு எத்தனை ஸாரி கேட்டுட்டேன், எல்லார் கிட்டயும். ப்ச்…எல்லாம் என் நேரம்” அவன் சலித்துக்கொள்ள…
அவன் முகவாட்டத்தைப் பார்த்தவுடன் ரோமி அவன் மேல் ஏறி, அதன் இரண்டு கால்களால் அவனை கட்டிக்கொண்டது.
பல வருடங்களாக அவனுடன் இருக்கும் ஒரே உயிரினம் என்று கூட சொல்லலாம். அதனால் பேச மட்டும் தான் முடியாதே தவிர, அவனின் ஒவ்வொரு உணர்வுகளையும் முகத்தைப் பார்த்து புரிந்துகொள்ளும்.
அது அவன் மேல் ஏறியவுடன், “டேய் விடுடா தம்பி…” என ரிஷியும் அதைக் கட்டிக்கொள்ள, இருவரும் தரையில் விழுந்தனர்.
“உன்னவிட்டா எனக்கு யாரு இருக்கானு சொல்லு… நீயும் மூஞ்சியை தூக்கி வச்சுட்டா எங்க நான் போவேன்?” சோகத்தை தாங்கிய குரலில் அதனுடன் பேசும்போது, திறந்திருந்த கதவு தட்டப்படும் சத்தம். கூடவே “தேவ்” என்ற மினுவின் அழைப்பு.
அவன் திரும்பி பார்க்க, மினு, நிவேதா இருவரும் அங்கே! மினு புன்னகைக்க, அவன் திரும்பியதும் நிவேதா முகத்தை வேறெங்கோ பார்ப்பதுபோல் திருப்பிக்கொண்டாள்.
ஆனால் அவன் சொன்ன, ‘உன்னவிட்டா எனக்கு யாரு இருக்கானு சொல்லு’ என்ற வாக்கியம் அவளை அதிரச் செய்தது.
‘ஏன் இவனுக்கு இந்த நிலைமை?’ என நினைக்க தோன்றியது.
‘இவன் மனைவி எங்கே?’ என்ற கேள்வி அவள் மனதை அறுத்தது.
இருவரையும் பார்த்த ரிஷி, மினுவை பார்த்து புன்னகைத்துக்கொண்டே எழ, ‘பொண்ணு எவ்ளோ அழகா சிரிக்கறா… ஆனா அம்மா மூஞ்சி எப்பவும் சிடுசிடுன்னு தான் இருக்குமோ’ என்று தோன்றினாலும், ‘அவ எப்படி வச்சுக்கிட்டா எனக்கென்ன’ என்பதையும் தனக்கே கூறிக்கொண்டான்.
“மினுக்குட்டி. வாங்க வாங்க” அவன் அழைக்க, நிவேதாவை பார்த்ததும் மறுபடியும் ரோமி அவளிடம் செல்ல எத்தனித்தது.
“ரோமி. டோன்ட் மூவ். சிட் ஹியர்” என்றான் கொஞ்சம் அழுத்தமாக.
அவன் சொன்னதும் அவனைப் பார்த்து குறைத்துவிட்டு, அதுவும் அமைதியாக அமர்ந்து கொண்டது ஆனால் பார்வை மட்டும் நிவேதாவை விட்டு அகலவில்லை.
“தேவ்… ரோமி கூட விளையாடிட்டு இருக்கியா… அது சாப்பிட போகுதா? நீ சாப்பிட்டயா?” மினு கேட்ட அந்த கேள்வியால் சட்டென அவன் மனம் நெகிழ்ந்தது. கடைக்கண்ணில் லேசாகக் கண்ணீர் திரண்டது.
சில வருடங்களாக அவனை யாரும் கேட்டிராத ஒன்று.
தன்னலமில்லாமல், முழுக்க முழுக்க அக்கறையில் இதுபோலவே முன்பு கேட்கும் தன் மிக நெருங்கிய வட்டத்தை எண்ணியவனுக்கு, தற்போது ‘நீ சாப்பிட்டியா?’ என்று மினு கேட்டது, அவனுக்கு சொல்லத்தெரியாத சந்தோஷத்தை தந்தாலும், யாருமில்லை என்ற எண்ணம் ஒரு பக்கம் வலிக்கவும் செய்தது.
அந்த கேள்வியை மினு கேட்டவுடன், அவனைப் பார்த்தாள் நிவேதா. அவன் முகத்தில் தெரிந்த மாற்றம், அவன் வலியை அவளுக்கு காட்டியது. அவன் முகத்தின் பல பரிமாணங்களைப் பார்த்திருக்கிறாளே!
‘உனக்கு என்ன ஆயிற்று தேவ்?’ என்று பரிதவித்தது அவள் மனம்.
‘தேவையில்லாமல் மினு நிறைய பேசி அவனுக்கு வருத்தத்தை தருகிறாளோ’ என்றெண்ணி, “மினு. எதுக்கு வந்தோம்? குட்நைட் சொல்லத்தானே. சொல்லிட்டு வா. நீ தூங்கணும்” என்றாள். கடுமையாக கூட சொல்லவில்லை. சொல்லவும் முடியவில்லை.
மினு கேட்டது அவனுக்கு நிறைவை தர, அடுத்து நிவேதா வெடுக்கென சொன்னதுபோல தோன்றியது ரிஷிக்கு. அது அவள் மேல் கோபத்தை ஏற்படுத்தியது.
மினு அருகில் மண்டியிட்டவன், அவள் தலைமுடியை வருடி “இனி தான் சாப்பிடணும் மினு… உனக்கு உடம்பு சரியில்லைல, நீ போய் தூங்கு. நம்ம நாளைக்கு பேசலாம்” என்றான் உணர்ச்சியின் மிகுதியில்.
“ஓ அப்படியா! அம்மாவும் இன்னும் சாப்பிடல… பெரியவங்க எல்லாம் லேட்டா தான் சாப்பிடுவாங்கனு அம்மா சொல்லுவாங்க. நீ சீக்கிரம் சாப்பிட்டு தூங்கு. பை தேவ்” என்றாள் அழகாக புன்னகைத்து.
ஏனோ மினு காட்டிய அன்பில், அவளிடம் கொஞ்ச நேரம் பேசமாட்டோமா என்று தோன்றியது. இருந்தும், சரி என்பது போல தலையசைத்தான்.
துன்பம் ஏற்படும் போது மட்டும் தான் மனது நோகுமா என்ன? எதிர்பாராமல் கிடைக்கும் இன்பமான பொழுதுகளிலும் மனது இன்பமாக நோகும். மினுவின் பேச்சில் அப்படி தான் உணர்ந்தான் ரிஷி.
அதே நேரம், “ரிஷி ஸார்” என்று கேட்டபடி ஒருவன் வந்திருந்தான். அவன் கையில் ஒரு கவர். அதை ரிஷியிடம் கொடுத்தவன், ஏதோ ஹிந்தியில் சொல்ல, அது ரிஷிக்கு புரியவில்லை.
வந்தவன் மறுபடியும் ஏதோ சொல்ல, “எனக்கு ஹிந்தி தெரியாது” என்றான் ரிஷி அவனுக்குத் தெரிந்த ஹிந்தியில்.
பதிலுக்கு மறுபடியும் அவன் ஹிந்தியில் சொல்ல, ரிஷியின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.
ரிஷியின் முக மாற்றத்தைப் பார்த்த நிவேதாவுக்கு இதுவரை இருந்த அழுத்தமான மனநிலை மாறி, லேசாக சிரிப்பு வந்தது.
பல வருடங்கள் கழித்து அவனின் பலவித முக மாறுதல்களை பார்ப்பதாலோ என்னவோ, எவ்வளவு தான் மனதை கடிவாளமிட்டாலும், அதையும் தாண்டி அவனை மெல்லிதாக ரசித்தது அவள் மனம்.
அவள் சிரிப்பதை பார்த்த ரிஷி, அவளை முறைக்க… “இன்னைக்கு phulka செய்ய முடியலையாம். அதுனால ரொட்டி தந்திருக்காங்களாம். இன்னும் ரெண்டு நாளைக்கு ரொட்டி தானாம்” ரிஷியிடம் சொன்னாள் நிவேதா வந்த மென்னகையை கட்டுப்படுத்திக்கொண்டு.
அவளை பார்த்து முறைத்தபடி…வந்தவனிடம் சரி என்று தலையாட்டினான் ரிஷி.
“சரி மினு. அதான் பை சொல்லியாச்சுல்ல. வா போய் தூங்கலாம்” நிவேதா சொன்னதும், ரிஷிக்கு கையசைத்துவிட்டு தன் அம்மாவுடன் சென்றாள் மினு.
போகும் அவர்களையே சில நொடிகள் பார்த்திருந்தான் ரிஷி. பின் வீட்டிற்குள் சென்றான்.
நிவேதா மினுவிற்கு மருந்தைத் தந்து உறங்க வைத்தாள்.
அங்கே ரிஷி, சில நிமிடங்கள் கழித்து… “ரோமி வா… சாப்பிடலாம். இன்னைக்கு எனக்கு ரொட்டியாம்” என வந்த சாப்பாட்டைப் பிரிக்க, ரொட்டி கொஞ்சம் கடினமாக இருந்தது.
“உன் சாப்பாடே பரவால்ல போலயே ரோமி” வாய்பேச முடியாத ஐந்தறிவு ஜீவனிடம் பேசிக்கொண்டே ஆறறிவு ஜீவன் சாப்பிட ஆரம்பித்தான். அதுவும் அவனுடன் சேர்ந்து உண்டது.
நிவேதா… மகள் உறங்கியபின், ஸ்ரீயுடன் போனில் பேசிக்கொண்டே பால்கனி வந்தாள்.
“நான் எவ்ளோ தூரம் சொன்னேன் நிவி டேகேர் வேணாம்ன்னு. நீ கேட்கவே இல்ல. அவன் சொன்னான்னு போய் விட்ட. இப்போ பாரு என்ன ஆச்சுன்னு. மினு எப்படி இருக்கா?”
“இப்போ பரவால்ல ஸ்ரீ. தூங்க வச்சுட்டேன். நான் சிஸ்டம் லாகின் பண்ணவா? ரொம்ப ஸாரி ஸ்ரீ. என் வேலையை முடிக்கத்தான் நீ இன்னும் ஆஃபீஸ்ல இருக்கல்ல”
“அது பரவால்ல. வேலை முடிஞ்சது. நான் சாப்பிட்டுட்டு கிளம்பறேன். நாளைக்கெல்லாம் மினுவை டேகேர்’ல விடாத நிவி. ரிஷி சகஜமா கூட கேட்டிருக்கலாம். நீ ரொம்ப யோசிக்காத. ஓகே… சரி நீ சாப்பிட்டயா?”
அவன் அதை கேட்டவுடன், நிஜமாக சாப்பிடவில்லை என்றாலும், புன்னகையுடன் முடிந்தது என்றாள்.
சில நிமிடங்கள் வேலை குறித்து இருவரும் பேசினர்.
நிவேதா இன்று ஒரு முக்கிய கிளைன்ட் மீட்டிங்’கில் இருந்திருக்க வேண்டும். ஆனால் மினுவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, ஸ்ரீ… ‘வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன்… நீ மினுவை பார்த்துக்கொள்’ என்றுவிட்டான்.
அவனுடன் பேசி முடித்தபின், காற்று சில்லென்று வீச, அங்கேயே கொஞ்ச நேரம் நின்றாள் நிவேதா. பின் கண்கள் அனிச்சையாக பக்கத்து பால்கனிக்கு சென்றது. அங்கே யாருமில்லை.
அந்த குளிர்ந்த காற்று அவள் உடலை வருடி செல்ல, கொஞ்சம் இதமாக உணர்ந்தாள். அப்போது சரியாக ரிஷி கையில் ரொட்டியுடன் யாருடனோ போனில் பேசிக்கொண்டே வெளியே வந்தான்.
அவன் நிவேதாவை கவனிக்கவில்லை.
ஆனால் அவள் பார்த்தபோது, அவன் அந்த ரொட்டியை சாப்பிட முடியாமல் ஓரமாகப் போட்டுவிட, அதை பார்த்த நிவேதா மனம் சுணங்கியது.
‘ஏன் வெளியே வாங்கி சாப்பிடவேண்டும்? இன்னமும் சமைக்க கற்றுக் கொள்ளவில்லையா? இவன் மனைவி எங்கே? அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்திருப்பானோ? யாருமில்லை என்று சொன்னானே… என்ன ஆயிற்று? தினமும் வெளியே வாங்கி சாப்பிட்டால் உடம்பு என்ன ஆவது?’ அவனுக்காக மனதில் எழுந்த பல கேள்விகளினால், அவள் இதயம் கொஞ்சம் வேகமாகவே துடித்தது.
சில வருடங்கள் முன்பு இருவரும் பேசியபோது, அவன் அடிக்கடி ‘தனக்கு சமைக்கவே தெரியாது. வெளியில் தான் சாப்பிடுவேன்’ என்று சொல்வதும்…
அதற்கு நிவேதா, ‘தினமும் வெளியில் சாப்பிடாதே. சுலபமாக செய்யக்கூடிய உணவுகளை நான் சொல்கிறேன். தினமும் அதை செய்’ என்று சொல்லிக் கொடுத்ததும்… தற்போது நினைக்கும்போது, மனது மறுபடியும் பாரமானது.
குளிர்ந்த காற்று அவள் மனதை சாந்தப்படுத்த முடியாமல் போக, அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.
அவனின் தற்போதைய நிலையை பார்த்தவளுக்கு ஏனோ உணவு உண்ணப் பிடிக்கவில்லை. செய்ததை ஃபிரிட்ஜ்’ஜில் வைத்துவிட்டு தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு படுக்கச்சென்றாள்.
அடுத்த நாள் காலை மினுவின் காய்ச்சல் முற்றிலுமாக குறைந்திருந்தது. நிவேதாவிற்கும் அலுவலக வேலை இருந்ததால் மினுவை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்தாள்.
பின் அவளை அவசரமாக ஸ்கூல் வேன்’னில் ஏற்றிவிட்டு, வீடு திரும்பும்போது, ரிஷி ஜாக்கிங் முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தான்.
‘மினுவை பள்ளிக்கு அனுப்பிவிட்டாளா? ஒரு நாள் கூடவே இருந்து பார்த்துக்கொண்டால் என்ன?!’ என்று அவன் நினைக்க… அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் நிவேதா சென்றாள்.
ஏற்கனவே இரவு தூக்கம் அவனால் தடைப்பட்டிருந்தது. அவனை பார்த்து, புன்னகைக்கும் நிலையில் எல்லாம் அவள் இல்லை.
சில நொடிகளில் “நிவேதா” என்ற அவன் குரலில், அவள் திரும்ப, “நான் சொன்னதுனால தான் மினுவை டேகேர்’ல சேர்த்த, இல்ல… இனி விட வேண்டாம். எப்பவும் போல ஆஃபீஸ்’லயே இருக்கட்டும்” இல்லாத உரிமையுடன் அவன் பேச, அவனை பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் சென்றுவிட்டாள்.
அவன் மினுவிற்காக சொன்னது மனதை குளிரச்செய்தாலும், மூளை முரண்டு பிடித்தது.
‘காப்பகத்தில் விடலாம் அல்லவா என்பானாம்… பின் வேண்டாம் என்பானாம். இவன் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும்? இது அலுவல் வேலை ஒன்றும் இல்லையே’ அவனை திட்டியவண்ணம் கிளம்பினாள்.
பின் தயாராகி, ஸ்ரீயுடன் பேசிக்கொண்டே லிஃப்ட்’டினுள் புகுந்தாள். அதற்கு சற்று நேரம் முன்பு தான், லிஃப்ட் உபயோகிக்காமல் ரிஷி படிகளில் இறங்கினான்.
ஸ்ரீயும் நிவேதாவும் தரைதளம் வந்தபின், லிஃப்ட்’டில் இருந்து வெளியே வரும்போது… “சொன்னா கேளு நிவி… இனி டேகேர் எல்லாம் வேண்டாம் புரியுதா? மினுக்கு அதெல்லாம் இன்னும் செட் ஆகல. திரும்ப உடம்பு முடியாம போய்டப்போகுது. ஒழுங்கா மதியம் ஆஃபீஸ்’க்கு கூட்டிட்டு வந்திடு” ஸ்ரீ அழுத்தமாக சொன்னதும், அவனை முறைத்துக்கொண்டு சரி என்பது போல் தலையசைத்தாள் நிவேதா.
அவர்கள் பின்னே, யாரோ மொபைல் அழைப்பு மணி அடிக்க, இருவரும் திரும்பி பார்த்தனர். அங்கே ரிஷி வந்துகொண்டிருந்தான்.
நிவேதாவை பார்த்துவிட்டு, ஸ்ரீயை பார்த்து சின்னதாக புன்னகைத்தவண்ணம் அவர்களை கடந்து சென்றான் ரிஷி.
‘ச்ச. நான் இதை சொன்னப்ப, பதில் கூட சொல்லல. ஆனா இவன் சொன்னவுடனே சரின்னு சொல்றா. இதுல ஸார் நிவி நிவி’னு தான் கூப்பிடுவாரு. கூட வேலை பார்க்கறவங்கள இப்படியா கூப்பிடுவாங்க?’ என கேள்வி மேல் கேள்வி தோன்ற…
பின், ‘போதும்… நீ யாரையும் இப்படி கூப்பிட்டதே இல்லையா? அவளை அவன் எப்படி கூப்பிட்டா உனக்கென்ன? நிவேதா… வேதா… நிவி’ங்கற பேரு உனக்கு மட்டும் சொந்தம் இல்லை தேவ். இது சரியில்லை’ கேள்விகளுக்கான பதில்களும் அவன் மனதில் உதித்தது.
அந்த பெயர் தான் ஆரம்பம் முதல் அவன் பிரச்சனையே. இத்தனை வருடங்கள் அமெரிக்காவிலேயே இருந்து, இந்தியா பக்கமே வராததால், அவனின் நிவேதாவிற்கு பிறகு அந்த பெயரில் யாரையும் அவன் சந்திக்கவில்லை.
ஆனால் இப்போது… இந்த நிவேதா எது செய்தாலும் கோபம் வருகிறது. எதிர்த்து பேசினால் கோபம். அவன் பேச்சை கேட்கவில்லை என்றால் கோபம். அத்தோடு அவளுடன் சகஜமாக பேசும் ஸ்ரீயை பார்த்தாலும் கோபம்! இந்த நினைப்பு, உரிமை தவறு என உரைத்தாலும், மனம் அதை ஏற்க மறுத்தது!
***தொடரும்***