Preethi S Karthikதனிப்பெரும் துணையே #ENV2

தனிப்பெரும் துணையே – 2

தனிப்பெரும் துணையே – 2

இளஞ்செழியனை மேலும் கீழும் பார்த்தாள் ப்ரியா. அக்காவின் திருமணத்திற்கான சடங்குகள் நடக்கிறது. மிகவும் சாதாரணமான பழைய உடை. அது போதாதென்று ஒரு துளி புன்னகைக் கூட முகத்தில் இல்லை. உர்ரென்ற முகம்.

அதற்குப் பின் அவனை அவள் கண்டுகொள்ளவில்லை. அவனும் அவளைப் பார்க்கவில்லை.

அன்றைய இரவு அகிலன் வீட்டினர் அவர்கள் ஊரான செங்கல்பட்டுக்கு புறப்பட தயாராக, மறுபடியும் சகாக்களுடன் மாடியில் இருந்து ப்ரியா இறங்கும் போது, செழியன் கீழிருந்து மேலே சென்றான்.

அவன் கவிதாவின் தம்பி என்று தெரிந்ததால், ப்ரியாவுடன் இருந்தவர்கள் முன்னதாக ஓட, அவர்களுக்கு வழிவிட்டான் செழியன்.

ப்ரியா செல்வதற்காக அவன் நகர்ந்து நிற்க, தான் பேசியதற்கு அவன் எதிர்வினை காட்டாமல் இருப்பதை பார்த்த ப்ரியா, அவன் அருகில் வந்தவுடன் திடீரென நின்றாள்.

அவன் என்ன என்பது போல பார்க்க, “நீ… நீங்க” என யோசித்து பின், “எனக்கு அத்தானா மாமாவா? அதெல்லாம் செட் ஆகல. எப்படி கூப்பிடறது?” என நிறுத்தி,

“ஹ்ம்ம் இங்க பாருங்க செழியன். ப்ச் இல்ல ரொம்ப பெருசா இருக்கு. இங்க பாருங்க இளா, நான் நீங்க வேலை செய்றவருன்னு நினச்சுட்டேன். அது என்னோட தப்பு மட்டும் இல்ல.

நீங்க அக்கா கல்யாணத்துக்கு நல்லா டிரஸ் பண்ணி, சிரிச்சிட்டே இருந்திருந்தா… அந்த கன்ஃப்யூஷன் வந்துருக்காது. ஆள் பாதி ஆடை பாதின்னு எதுக்கு சொல்றாங்க ஹ்ம்ம்?

சோ, அட்லீஸ்ட் கல்யாணத்துக்காவது நல்லா டிரஸ் பண்ணுங்க. பார்க்க கொஞ்சம் சுமாராவாவது இருப்பீங்க. இப்போ போனாங்கல்ல அவங்க உங்கள ரொம்ப கிண்டல் பண்றாங்க. சொந்தக்காரரா வேற போய்ட்டீங்களா. அதான் இதெல்லாம் சொல்றேன்.

நான் சொன்னதை மைண்ட்ல வச்சுக்கோங்க. கல்யாணத்துல பார்ப்போம் வரேன்” நீளமாக பேசி, சின்னதாக புன்னகைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

கல்யாண வேலைகள் இன்னமும் சீக்கிரம் நடக்க, திருமண நாளும் வந்தது.

அகிலன் குடும்பம் வருவதற்கு முன்பே கவிதாவின் குடும்பம் மற்றும் சொந்தங்கள் திருமணம் நடக்கும் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.

மாப்பிள்ளை குடும்பம் வந்ததறிந்து கவிதாவின் அப்பா ஸ்வாமிநாதன், தம்பி செழியன், மற்றும் சித்தி சித்தப்பாவுடன் சில பெண்களும் வரவேற்க வாயிலுக்கு வந்தனர்.

அகிலனுக்கு ஆரத்தி எடுத்துக்கொண்டிருக்க, மற்றொரு காரில் வந்திறங்கினாள் ப்ரியா.

வந்ததும் அவள் கண்ணில் பட்டது செழியன். வெள்ளை நிற லினன் சட்டை மற்றும் வேஷ்டி. புன்னகை இல்லையென்றாலும், பார்க்க நன்றாகவே இருந்தான். அவன் பார்வையும் ஒரு முறை அவளைப் பட்டு மீண்டது.

அகிலன் ப்ரியாவிடம் சடங்குகள் நடக்கும்போது கவிதாவின் அருகிலேயே இருக்கச்சொல்லி சொல்லிருந்தான். அதேபோல திருமணம் நடக்கும்போதும் உடன் இருக்கச்சொன்னான்.

அதற்காகவே, ஆரத்தி எடுத்து முடித்து அனைவரும் உள்ளே செல்லும்போது, ப்ரியா அவள் அம்மாவிடம், “மா… நான் அண்ணிய பார்க்கப்போறேன்” என்று சொல்லிவிட்டு, கவிதா எங்கிருக்கிறாள் என தேடினாள்.

அங்கே செழியனைப் பார்த்தவுடன், “அண்ணி எங்க இருக்காங்க? என்னை கூட்டிட்டு போங்க” என்றவுடன், அவனும் மண்டையை ஆட்டிவிட்டு முன்னே நடந்தான்.

அவனுடன் நடையில் சேர்ந்துகொண்டு, “உண்மைய சொல்லுங்க இளா. பொய் சொல்லக்கூடாது. ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குதானே குளிச்சீங்க?” எனக் கேட்க, சட்டென அவளைத் திரும்பிப்பார்த்தான்.

பின் அவன் முறைக்க, “இல்ல, இன்னைக்கு நிஜமாவே பார்க்கற மாதிரி இருக்கீங்க. ஆனா உர்ருனு இருக்காதீங்க. கொஞ்சம் சிரிக்கலாமே?” என அவள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாள். அவன் பேசவே இல்லை.

இரண்டு அடி எடுத்துவைத்து அவன் முன்னே குறுக்காய் நின்ற ப்ரியா, “பேச வருமா? இல்ல இந்த செலெக்ட்டிவ்…” என அவள் முடிக்கும் முன், கைகாட்டி அவளை நிறுத்தச்சொன்னவன் எதிர் திசையில் கையை காட்டினான். அங்கே கவிதா உட்கார்ந்திருந்தாள்.

அவன் எதற்குமே வாய் திறக்காமல் இருக்க, அதில் கோபம் கொண்டு, “உன்கிட்ட போய் இவ்ளோ நேரம் பேசினேன் பாரு. ச்சி பே” என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து, கவிதாவை மேடைக்கு அழைத்து வரச்சொன்னவுடன், ப்ரியா கவிதாவை அழைத்துவந்தாள்.

அவ்வப்போது கவிதாவுடனும் அகிலனுடனும் பேசிக்கொண்டு, மணமேடையில் இருவரின் பின்னாலேயே இருந்தாள் ப்ரியா.

அப்போது தற்செயலாக நிமிர்ந்து ப்ரியா பார்க்க, மணமேடையிலிருந்து ஐந்து அடி தூரத்தில் இருந்த தூணின் மேல் சாய்ந்து கவிதாவையும் அங்கு நடப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்.

இப்போதுகூட அவன் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை. ‘இவன் என்ன ஜடமா?’ என்றே தோன்றியது ப்ரியாவிற்கு.

அவனை அவள் பார்த்தபோது, அவனும் அவளைப் பார்த்தான். உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள் ப்ரியா.

அதன்பின் திருமணம் இனிதே முடிவடைய, மதிய உணவு முடிந்தபின், ப்ரியா அந்த பழம்பெரும் கோவிலை தன் தோழிகளுடன் சுற்றிப் பார்க்கச் சென்றாள்.

அப்போது அங்கே ஒரு பெரிய கல்லின் மேல் உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்.

அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருந்தது ப்ரியாவிற்கு. ‘சாப்பிட்டானா இல்லையா’ என யோசிக்கும்போது, மற்றொரு விஷயம் ஞாபகம் வந்தது.

இன்று திருமணத்தில் கூட அவனுடைய நண்பர்கள் என்று எந்த கூட்டத்தையும் பார்த்ததாக தெரியவில்லை. ஓரிருவரிடம் மட்டுமே பேசினான்.

அவனை சில நொடிகளுக்கு ஒரு முறை பார்த்துக்கொண்டே சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவன் சிறிது நேரத்திற்குப்பின் அமைதியாக சென்றுவிட்டான்.

அன்று மாலையே அகிலனின் குலதெய்வம் கோவிலுக்குப் புறப்பட்டனர் இரு குடும்பங்களும்.

அடுத்தநாள் காலை, அகிலனிற்கும் கவிதாவிற்கும் மறுபடியும் சில சடங்குகள் ஆரம்பித்தது.

காலை ஆறு மணிக்கு ஆரம்பித்த வேலை, பதினோரு மணிக்கு மேலும் நடந்துகொண்டிருக்க, செழியனுக்கு கொஞ்சம் அதிகமாகவே வேலை இருந்தது.

மணமக்களுக்கும் மற்றும் அங்கிருந்தவர்களுக்கும் அடிக்கடி குடிக்க ஏதேனும் ஒன்று தந்துகொண்டே இருந்தனர். ஆனால் இவன் எதையும் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தான்.

கவிதா, அவள் தந்தை இருவரும் பூஜையில் இருக்க, இவனைக் கண்டுகொள்ள யாருமில்லை.

முகத்தில் சோர்வு தெரியவில்லை என்றாலும், அவ்வப்போது அவனைக் கவனித்துக்கொண்டிருந்த ப்ரியா அவன் எதையும் சாப்பிடாமல் இருப்பதை பார்த்தாள்.

அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவள் சொந்தக்கார குட்டிப் பையனை அழைத்து, ஒரு தட்டில் உணவை வைத்து, அவனிடம் கொடுக்கச்சொன்னாள்.

‘யார் கொடுத்தார்கள்?’ என்று கேட்டால், ‘கவிதாவை கை காட்டிவிடு’ என்று சொல்லி அனுப்பிவைத்தாள்.

அதற்குள் அவள் அம்மா அழைக்கவும் வேறொரு வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

கோவில் சடங்குகள் அனைத்தும் முடிந்து அகிலனின் செங்கல்பட்டு வீட்டிற்கு கவிதாவின் குடும்பமும் வர, செழியன் தனக்கு கேம்பஸ் இன்டர்வியூ இருப்பதால் தயாராக வேண்டும் என காஞ்சிபுரம் புறப்பட்டுவிட்டான்.

அதற்குப் பின் ப்ரியா அவன் குறித்து பெரிதாக யோசிக்கவில்லை.

அடுத்தநாள் அவன் நேராக சென்னையில் ரிஷப்ஷன் நடக்கும் ஹோட்டலுக்கே வந்துவிட்டான்.

இன்று எந்த வேலையும் அவனுக்கு இல்லை. அவன் வந்தது, அக்காவிடம் பேசிவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டது என அனைத்தையும் பார்த்தாள் ப்ரியா.

அவன் ஒருமுறை சுற்றியும் பார்த்தபோது, ப்ரியா அவன் கண்ணில் பட்டவுடன், அவள் புன்னகைக்க, அவன் என்ன செய்யவேண்டும் என்று புரியாததுபோல பார்த்துவிட்டு, லேசாக மில்லிமீட்டர் அளவுக்கு இதழ்கள் விரிந்து புன்னகைத்தான்.

‘இந்த சிரிப்புக்கு இவ்வளவு யோசனையா’ என நினைத்துக்கொண்டு அவள் வேலையில் மூழ்கினாள் ப்ரியா.

இரவு உணவு சாப்பிட்டபின், ப்ரியா யாருடனோ போனில் பேசிவிட்டு வரும்போது, அவளை வழி மறைத்தான் செழியன்.

அவள் கேள்வியாக அவனைப் பார்க்க, “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்லிவிட்டு சுற்றியும் பார்வையை ஒருமுறை சுழலவிட்டான்.

ப்ரியாவின் கண்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியையும் காட்டியது, ‘அவன் என்ன சொல்லப் போகிறான்’ என நினைத்து.

***

ப்ரியாவின் கண்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியையும் காட்ட, செழியன் தொடர்ந்தான்.

“இதை உங்ககிட்ட சொல்லலாமானு தெரியல” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் அவன் சுற்றியும் பார்க்க, ப்ரியாவின் மனம் படபடத்தது.

‘ஏதாவது விவகாரமாக சொல்லப் போகிறானோ…? இந்த அமைதியான பசங்கள நம்பவே கூடாது’ என அவள் யோசிக்க,

“அக்கா முகத்துல சந்தோஷமே இல்ல. ஏதாச்சும்ன்னா நீங்க அவங்க கூட இருப்பீங்களா?” என்றவுடன், நிம்மதி பெருமூச்சு விட்டாள் ப்ரியா. கூடவே புன்னகையும் எட்டிப்பார்த்தது.

மனதிலோ, ‘இவனை பத்தி தெரிஞ்சே நீ கண்டதையும் யோசிச்சியே ப்ரியா’ என நினைத்து,

“என்னை வா போன்னே சொல்லுங்க. நான் சின்ன பொண்ணுதான்” என்றாள் அவன் மரியாதை நிமித்தமாக பேசுவதை பார்த்து.

“ம்ம், உங்கண்ணன் ஏதாச்சும் பிரச்சனை பண்ணா சொல்வியா? அக்கா பாவம், எனக்கு அவர் மேல நம்பிக்கையே இல்ல, ஏதாச்சும் பண்ணுவாருன்னே தோணுது. பிடிக்காம ஒரு விஷயத்தை…” என சொல்லிமுடிக்கும் முன்,

“ஹலோ ஹலோ, என்ன பேசிட்டே போறீங்க? என் அண்ணன் உங்களுக்கு வில்லனா? என்னமோ கிழக்கு சீமையிலே படத்துல வர நெப்போலியன் ரேஞ்சுக்கு அவரை சொல்ற? அவர் எப்பவுமே ஹீரோதான். எதை வச்சு என் அண்ணன் பிரச்சனை பண்ணுவான்னு சொல்ற?” என சீறினாள் ப்ரியா. மரியாதை எல்லாம் காற்றில் பறந்தது.

அவன் முகம் மாறியது.

“உனக்கு நடந்ததெல்லாம் தெரியுமான்னு தெரியல. சரி ஒன்னும் வேணாம் விடு. நானே வேற வழி பாத்துக்கறேன்” என்று அவன் நகர்ந்து செல்ல,

அவன் கண்களில் என்ன கண்டாளோ, “இரு… இருங்க. நீ… நீங்க சொல்லலைனாலும் நான் எங்க அண்ணிய பார்த்துப்பேன்” என்றாள் தோள்களை குலுக்கி.

“தேங்க்ஸ். நீயும் வா போன்னே சொல்லு பரவால்ல. அப்புறம், எனக்கு இங்க வேற யாரோட நம்பர்ரும் தெரியாது. அக்கா எடுக்கலைன்னா உன்ன கூப்பிடலாமா?” அவன் தயங்கி கேட்டவுடன்,

“நம்பர் வேணும்னு நேராவே கேட்டிருக்கலாம்” என்று புன்னகையுடன் அவள் எண்ணை கொடுத்தாள்.

அவன் மறுபடியும் நன்றி சொன்னவுடன், “இங்க பாருங்க, நம்பர் இருக்குனு சும்மா குட் மார்னிங், குட் நைட், ஃபார்வேர்ட்லாம் அனுப்பக்கூடாது. ஒகே?” என கொஞ்சம் சீரியஸாக சொல்வது போல புன்னகையுடன் அவள் சொல்ல, சரி என்பது போல சின்னதாக தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான்.

‘ஆஹ்’ என அவனைப் பார்த்தாள் ப்ரியா.

இப்படி வேறு ஒருவனிடம் சொல்லியிருந்தால் ஒன்று கோபப்பட்டிருப்பான் இல்லை பதிலுக்கு கவுண்ட்டர் கொடுத்திருப்பான். இவன் மண்டையை ஆட்டிவிட்டு செல்கிறானே என நினைக்கும்போது ஏனோ அவள் முகத்தில் இன்னமும் புன்னகை அதிகமானது.

அன்றைய இரவு செழியனும் அவன் குடும்பமும் காஞ்சிபுரம் புறப்பட்டனர் அவனுக்கு இன்டர்வியூ இருப்பதால்.

அதை தெரிந்துகொண்ட ப்ரியா, அடுத்தநாள் காலையில் பெற்றோருடன் கோவிலுக்கு புறப்பட்டு செல்லும்போது அவனுக்கு, “குட் லக். ஐ நோ யு டூ வெல்” என்ற ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அவளேதான் அவனிடம் சொன்னாள், ‘தேவையில்லாமல் மெசேஜ் அனுப்பக்கூடாது’ என்று. அதை எண்ணிப்பார்க்க, ‘இது தேவையில்லாததல்லவே. நட்புடன் அனுப்பியது’ என தனக்கே பதில் சொல்லிக்கொண்டாள்.

அவனுக்கு மெசேஜ் டெலிவரி ஆனது, ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. அவனைப் பற்றி அவளுக்குத் தெரியாதா? இந்த ஓரிரு நாட்களில் கொஞ்சம் அவனை புரிந்துகொண்டாள்.

அவனிடமிருந்து பதில் வந்தால் ஆச்சர்யம்தான் என நினைத்துக்கொண்டு சுவாமி சன்னதியை அடைந்தபோது மொபைல் வைப்ரேட் ஆனது. அவனிடமிருந்து, ‘தேங்க் யு’ என்ற பதில்.

அதைப் பார்த்து ஆச்சர்யத்துடன் புன்னகைத்துக்கொண்டே சுவாமியிடம், ‘அவன் தேர்வாக வேண்டும்’ என அவனுக்காகவும் வேண்டிக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து, விபூதியை கையில் வைத்தவாறு, ‘விர்ச்சுவல் ப்ளெஸ்ஸிங்ஸ்’ என்று அந்தப் புகைப்படத்தை அனுப்ப, உடனே பதில் வந்தது. புன்னகைப்பது போன்ற ஒரு ஸ்மைலி. அவளுக்கும் புன்னகை ஒட்டிக்கொண்டது.

‘எதற்காக அவனுக்கும் வேண்டினோம்’ என்று யோசித்தபோது, ‘அது தன்னுடைய இயல்பு. தெரிந்தவனுக்கு இன்று முக்கியமான நாள். அதற்காக வேண்டிக்கொண்டேன்’ என சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

அன்றைய தினம் அப்படியே கழிய, அவனின் நினைவு அவ்வப்போது வந்து வந்து சென்றது. இன்டர்வியூ என்ன ஆயிற்று நன்றாக செய்தானா என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

இரவு ஆனபோது அவனை கேட்கலாம் என நினைத்து ஒரு குறுஞ்செய்தி, ‘ஹவ் வாஸ் யுவர் டே?!’ என்று அனுப்பிய தருணம், அவளுக்கு ஒரு செய்தி வந்தது. ‘ஐ ஹவ் காட் செலக்டட்’ என்று அவனிடமிருந்து. சந்தோஷம் அவள் மனதில்.

முன்பு அவனிடம், ‘கிழக்கு சீமையிலே நெப்போலியன் மாதிரி எங்க அண்ணன் என்ன வில்லனா?’ என அவனிடம் கேட்டது நினைவுக்கு வர, குறும்பு புன்னகையுடன், ‘கங்ராட்ஸ்… நெப்போலியன் வைஃப்க்கு சொல்லியாச்சா’ என கேட்டாள்.

அவனிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் இவள் முகத்தில் புன்னகை குறையவில்லை. ‘இதுவரை பல பேரிடம் கடலை போட்டுள்ளேன். இது ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே!’ என நினைத்து புன்னகைத்துக்கொண்டாள்.

அவனிடம் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொன்னவள், எல்லோருக்கும் அனுப்புவதுபோல அவனுக்கும் ஃபார்வேர்ட் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தாள்.

சில சமயம் அவனிடம் இருந்து ஸ்மைலி பதில் வரும். பெரும்பாலும் அவன் கேட்பது கவிதாவை குறித்தே இருக்கும்.

சில நாட்கள் கழித்து ஒருமுறை கவிதா ப்ரியாவிடம் பேசும்போது செழியனை பற்றி சொன்னாள்.

“தம்பி தனியாவே வளர்ந்ததுனாலவோ என்னவோ கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். அதிகமா யார்ட்டயும் பேசமாட்டான். என்னோட கூட அளவாதான் பேசுவான்” என்றபோது,

‘எனக்குத் தெரியாதா? நான் மட்டும்தானே மெசேஜ் அனுப்பறேன். அந்தப்பக்கம் காத்துதான் வருது’ என நினைத்து சலித்துக்கொண்டாள்.

இவர்கள் மெஸேஜில் பேசிக்கொள்வது, இல்லையில்லை ப்ரியா அனுப்புவது யாருக்கும் இங்கே தெரியாது.

“ஆமா அண்ணி. உங்க தம்பி இந்த இயர் டிகிரி ஃபினிஷ் பண்றாருல்ல” என ஒன்றும் தெரியாததுபோல் கேட்டாள்.

“ஹ்ம்ம் முடிச்சிட்டான். யுனிவர்சிட்டி ரேங்க் செவன்த். ஒரு சப்ஜெக்ட்ல டாப்பர்… கான்வகேஷன்ல மெடல் தரப்போறாங்களாம்” என்றவுடன், ப்ரியாவிற்கு ஒருவகையான ஏமாற்றம் கோபம். தனக்குத் தெரியவில்லையே இந்தத் தகவல். அவன் சொல்லவில்லையே என்ற வருத்தம்.

பின் அதிகமாக பேசாமல் அறைக்கு வந்தவுடன் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

‘ஐ வோண்ட் மெசேஜ் யு எனிமோர்’ என்று கோபத்துடன் அனுப்பினாள்.

அவன், ‘ஏன் என்று கேட்பான்’ என காத்திருந்து பதில் வராமல் போக, கடுப்புடன் இருந்தபோது, சில நிமிடங்கள் கழித்து, ‘என்ன ஆச்சு. அக்காக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?’ என்ற பதில் வர, அதைப் பார்த்ததும் கோபத்தில்,

‘எவ்ளோ செல்ஃபிஷ் நீ? இனி நானும் உன் அக்கா விஷயம்னா மட்டும் மெசேஜ் பண்றேன். ஐம் சச் அ ஃபூல். நான் உனக்கு எக்ஸாம்க்கு விஷ்லாம் பண்ணேன். பட் நீ உன் ரிசல்ட்ஸ் பத்தி சொல்லவே இல்ல எங்கிட்ட. உன்னைப்போல நானும் இனி விஷயத்தை மட்டும் பேசணும்’ என பெரிய மெசேஜ் அனுப்பிவிட்டு மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாள்.

‘ஏன் இவ்வளவு கோபம்? அவன் எதற்காக அனைத்தையும் இவளிடம் சொல்லவேண்டும்?’ என்றெல்லாம் நினைக்கவே இல்லை.

எப்படியும் அவனிடம் இருந்து பதில் வராது என நினைத்து கோபமாக இருந்தவள் கோபத்திலேயே தூங்கிவிட, நடு இரவில் முழிப்பு வந்து எப்பொழுதும் போல மொபைலை பார்த்தாள்.

அது உயிர்ப்பின்றி இருப்பதைப் பார்த்தபோது, அவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி நினைவிற்கு வர, அவன் செய்கையை நினைத்து சலிப்புடன் கண்களை கூட சரியாக திறக்காமல் சுவிட்ச் ஆன் செய்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் ஓரிரு பீப் சத்தம். ஆர்வமில்லாமல் என்ன வந்திருக்கிறது என்று பார்க்க, அவனிடம் இருந்து செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்ததும் ஆச்சர்யம். தூக்கமெல்லாம் தூரம் பறந்தது. கோபமும் கூட.

10
1
2
3

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved