தனிப்பெரும் துணையே – 1

தனிப்பெரும் துணையே – 1

விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த மொபைலின் சத்தத்தில் கண் விழித்தாள் இசைப்ரியா.

தூக்கத்துடன் அதை எடுத்து பார்த்தவள் அதில் தெரிந்த எண்ணைப் பார்த்து, முழு ரிங் முடியும் வரை அதையே கண்கொட்டாமல் பார்த்தாள். பதிலளிக்கப்படாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அப்போது திரையில் அழைத்த நபரின் மிஸ்ட் கால் எண்ணிக்கை தெரிந்தது. அதை ஒரு நொடி பார்த்தவள், மொபைலை படுக்கையில் வைத்துவிட்டு காலைக் கடன்களை முடிக்கச் சென்றாள்.

முடித்து வந்து மறுபடியும் மொபைலை பார்க்க, இப்போது அந்த எண்ணிலிருந்து இன்னொரு மிஸ்டு கால். மணி பார்த்தாள், அது ஐந்தரையெனக் காட்டியது.

கீழே கூடத்தில் இருந்த பால்கனியில் நின்று உதிக்கும் கதிரவனை உணர்ச்சிகள் துடைத்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மார்னிங் ப்ரியா” என்ற கவிதாவின் குரலில் அவளைப் பார்த்துப் புன்னகைத்து, “குட் மார்னிங் அண்ணி” என்றாள். ஆனால் அந்த புன்னகை அவள் கண்களை எட்டவில்லை.

“இன்னைக்காவது பூஸ்ட்…” ‘அவளுக்கு பிடித்த பூஸ்ட் இன்றாவது குடிப்பாளா’ என நினைத்து கவிதா கேட்க, “பிளாக் டீ குடிச்சி பழகிடுச்சு அண்ணி. நான் வரவா ஹெல்ப்க்கு” கேட்டாள் ப்ரியா.

“இருக்கட்டும், நான் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சிந்தனையுடனே சமையலறைக்குச் சென்றாள் கவிதா.

மறுபடியும் வானத்தைப் பார்த்தபடி நின்ற இசைப்ரியாவின் மனது அதிகாலையில் அழைத்தவனையே நினைத்துக் கொண்டிருந்தது.

வந்ததிலிருந்து ப்ரியாவின் நடவடிக்கைகள் கவிதாவினுள் ஒரு வித குழப்பத்தையே வரவழைத்தது.

எப்போதும் துறுதுறுவெனச் சுற்றித்திரிபவள். இப்போது அது மருந்துக்கும் இல்லை என்பது ஒருபுறம் குழப்பமாக இருந்தாலும் மறுபுறம் கவலையாகவும் பயமாகவும் இருந்தது.

அமைதியாகக் காலை வேலைகள் நடந்து கொண்டிருக்க, காலை உணவிற்காக ஒரு அலப்பறையை கூட்டினாள் குட்டி வாண்டு வெண்பா.

சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்த வெண்பா, ப்ரியாவை பார்த்ததும், “அத்த ஊட்டி விடுங்க” எனக் கத்தினாள்.

புன்னகைத்துக் கொண்டே வந்த இசைப்ரியா, “குடுங்க அண்ணி” என்று கவிதாவிடம் உணவை வாங்கினாள்.

கவிதாவிற்கு, முன்பு இதேபோல காலைக் கல்லூரிக்குக் கிளம்பும்போது ப்ரியா செய்த செயல்கள், செய்த அட்டகாசங்கள் என மனதில் வந்துபோக, இப்போதிருக்கும் அமைதியான ப்ரியாவை பார்க்கப் பார்க்க ஏதோ நெருடலாக இருந்தது.

அதே நினைப்பில் சமையலில் ஈடுபட்டிருக்க, “ஓய் பேபி” என்ற குரல் காதின் மிக அருகில் கேட்டுத் திடுக்கிட்டுத் திருப்பினாள் கவிதா.

தன்னை யார் இப்படி கூப்பிடுவார்கள் என்று தெரியும். இருந்தாலும் தற்போதைய மனநிலை அவளைத் திடுக்கிடச் செய்தது. திரும்பிய வேகத்தில் நிம்மதி பெருமூச்சும் வந்தது.

“எதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன்? உனக்கே டூ மச்சா இல்லை” என்று கேட்டுக்கொண்டே அகிலன் அவள் கையிலிருந்த கரண்டியை வாங்கினான், அவளுக்கு உதவ.

கவிதா எதுவும் பேசாமல் அமைதியாக ப்ரியாவை பற்றி யோசனையில் இருக்க, அவள் முகம் சரியில்லை என்பது புரிந்து, “என்னாச்சு பேபி? எதப்பத்தி யோசிச்சிட்டு இருக்க?” எனக் கேட்டான்.

“அகி, ப்ரியா பழைய மாதிரி இல்லல. நீ கவனிச்சியா? நான் வந்ததுல இருந்து பார்க்கறேன். ஏதோ சரியில்ல அகி. பயமா, ஏதோ பாரமாகுது” மனதை அரித்தெடுத்த விஷயத்தை அவனிடம் சொன்னாள் கவிதா.

“ஹ்ம்ம், ப்ரியா இன்னும் சின்ன பொண்ணில்ல. எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிடுவா. நீ இதை நினச்சு கவலைப்படாத” அகிலன் அவளைத் தேற்றினாலும் கவிதா அதே யோசனையில் இருக்க,

“அவ என் தங்கச்சி பேபி, இந்த அண்ணனுக்கு இருக்கற திறமைல பாதி கூடவா இருக்காது அவளுக்கு” என்று புன்னகையுடன் சொன்னவனைப் பார்த்து முறைத்தாள் கவிதா.

அதேநேரம், டைனிங் டேபிளில் வெண்பாவிற்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த ப்ரியாவின் மொபைல் மறுபடியும் அடித்தது.

அதில் தெரிந்த பெயரைப் பார்த்த வெண்பா, ப்ரியா உணரும் முன், “ஹைய்யா மாமா” என வந்த அழைப்பை ஏற்றாள்.

ப்ரியா திடுக்கிட்டு மொபைலை வாங்குவதற்குள், ஸ்பீக்கருக்கு மாற்றிய வெண்பா, “மாமா, எப்படி இருக்கீங்க? உங்க பேச்சு கா. அத்த மட்டும் வந்துருக்காங்க. நீங்க ஏன் வரல?” என ஆரம்பித்தாள்.

“வெண்பா குட்டி” அவன் குரல் கேட்டது.

அந்த நொடி, அதைக் கேட்ட ப்ரியா கண்கள் சட்டெனக் கலங்கியது. மனது படபடத்தது. உணவுத் தட்டை இறுக பற்றிக்கொண்டாள், கை நடுக்கம் அதிகமானதால்.

“சாரி குட்டிப் பொண்ணு. மாமா வேலைல மாட்டிகிட்டேன்” என அவன் பேசினான். ஆனால் எதுவும் ப்ரியாவின் காதுகளை அடையவில்லை.

இதுவரை அவன் அழைப்பை எடுக்கவில்லை. இப்போது அது எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக வெண்பாவின் மூலம் அவன் பேச முற்படுவான். அதுவும் அழைப்பு ஸ்பீக்கரில் உள்ளது. அனைவருக்கும் தெரிந்துவிடும். ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கையில், அவள் நினைத்தது போலவே அவன், “அத்த இல்லையா வெண்பா?” எனக் கேட்டான்.

அதற்குள் அவசரமாக அடிவயிற்றிலிருந்து இரும ஆரம்பித்தாள் ப்ரியா.

சத்தம் கேட்டு கவிதாவும் அகிலனும் வர, ப்ரியாவிற்கு தண்ணீர் கொடுத்தாள் கவிதா. தலையைத் தட்டிக் கொடுத்தான் அகிலன்.

வெண்பா ப்ரியாவை பார்க்க, இது அனைத்தையும் அழைப்பிலிருந்தவன் கேட்டுக்கொண்டிருந்தான்.

“என்னாச்சு ப்ரியா?” கவிதா கேட்டவுடன், “தெரியல அண்ணி, தண்ணி குடிச்சேன். திடீர்னு இருமல் வந்துடுச்சு” கண்களில் நீர் கோர்க்க மூக்கை உறிஞ்சியபடி சொன்னாள் ப்ரியா.

அதற்குள் அடுப்பில் வைத்திருந்த ஏதோ கருகும் வாடையில் கவிதா சமையலறைக்குள் சென்றுவிட, அகிலனிடம் வெண்பாவிற்கு உணவு கொடுக்கச் சொல்லிவிட்டு ப்ரியா அங்கிருந்து நகரும்போது, மொபைல் லைனில் அவன் இன்னமும் இருப்பது தெரிந்து அதைத் துண்டித்தாள்.

“ப்பா, பொய் சொன்னா தப்புதானே?” வெண்பா கேள்வியாக அகிலனை பார்த்துக் கேட்க, “ஆமாடா பேபி. என்னாச்சு?” என விசாரித்தான்.

“அத்த தண்ணியே குடிக்கல ப்பா. திடீர்னு இருமினாங்க” என்றாள் யோசனையுடன் அந்தக் குட்டிப்பெண். அதைக் கேட்ட அகிலனின் புருவங்கள் ஒரு நொடி சுருங்கி விரிந்தது.

“ஹ்ம்ம், ஏதோ ஞாபகத்துல சொல்லிருப்பாங்க பேபி விடு” என்றவனுக்கு திடீரென ஏதோ தோன்ற, “அம்மாக்கு பொய் சொன்னா பிடிக்காதில்லை. அம்மாட்ட சொல்லாத” என்றான்.

‘ஏற்கனவே ப்ரியா குறித்து கவலையில் இருக்கும் மனைவிக்கு இந்த விஷயம் தேவை இல்லாமல் இன்னமும் வருத்தம் கொடுக்கும்’ என நினைத்துச் சொன்னான்.

அவனுக்கும் ப்ரியாவின் நடவடிக்கையில் மாற்றம் நன்றாகவே தெரிந்தது. சமாளிக்க முடியும் என்பதால்தான் ப்ரியா தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவளாகச் சொல்லும் வரை எதுவும் கேட்கக் கூடாது என நினைத்துக்கொண்டான்.

சில மணி நேரத்தில் அகிலன் அலுவலகத்திற்கு புறப்பட, ப்ரியா கவிதாவிடம், “அண்ணி, அம்மா எப்போ வருவாங்க? நீங்க போகலையா?” என கேட்க,

“இன்னைக்கு சனிக்கிழமை இல்லையா ப்ரியா… அவங்க வர கொஞ்சம் நேரம் ஆகும். நான் தீட்டு… ஆனா, நீ போவன்னு நினைச்சேன்” என்றாள் கவிதா.

“அம்மா கூப்பிட்டாங்க அண்ணி. கொஞ்சம் தலைவலின்னு ரெண்டு நாளா மாத்திர போட்டுட்டு தூங்கறேன். எந்திரிக்க முடியுமோ முடியாதோன்னு போகல” என்று சொல்லும்போது திடீரென ஒரு குறிப்பு மூளையில் பளிச்சிட்டது.

சட்டென அவள் முகம் மாறியது. பதட்டம் அடைத்தாள் ப்ரியா. கவிதாவிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல், சகஜமாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டு, மெதுவாக கடைக்குச் செல்ல வேண்டுமென வெளியே புறப்பட்டாள்.

கிட்டத்தட்ட அதே பதட்டத்துடன் வீடு திரும்பியவள் அவசரமாக ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு வித உணர்வுடன் கழிக்க, அந்த ப்ரெக்னன்சி கிட்டில் மெதுவாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது.

அதைப் பார்த்து சந்தோஷப்படுவதா, இல்லை வருத்தப்படுவதா, என்று புரியாமல் அதையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் ப்ரியா.

***

இரண்டு கோடுகளைப் பார்த்தவள் அதைப் பார்த்தபடி நின்றாள். இதற்குக் காரணமானவன் முகம் வந்து வந்து சென்றது.

அதை பத்திரப்படுத்தி வைத்தாள். மொபைலில் அவன் எண்ணை அழைப்பதற்கு கைகள் பரபரத்தது. இருந்தும் அழைக்க முடியவில்லை.

அழுகை தொண்டையை அடைத்தது. இன்பமான அவஸ்தையாக உணர்ந்தாள். சந்தோஷத்தை அவனிடம் முதலில் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அதை மறுத்தது அவள் மனம்.

அவனிடம் சொல்லாமல் யாரிடமும் சொல்லத் தோன்றவில்லை. மனது மிகவும் பாரமானது. அழுகை நிற்காமல் கொட்டியது. இப்படியாக அவள் இருக்கையில், கீழிருந்து சத்தம். அவளை அழைத்தார் லட்சுமி. அவள் அம்மா.

அழுதது தெரியக்கூடாது என்று அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டு கீழிறங்கினாள்.

மதியம் ஆனதால், அகிலன் வேலை முடித்து வந்திருந்தான். அவன், வெண்பா டைனிங் டேபிளில் இருக்க, ப்ரியாவை பார்த்தவுடன் லட்சுமி,

“என்னடி ஆச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என விசாரித்தார். என்னதான் அழுததை மறைத்தாலும், அம்மாவிற்குத் தெரியாதா மகளைப் பற்றி.

“என்ன ஒரு மாதிரி? அதெல்லாம் ஒன்னும் இல்லமா” அவர் முகம் பாராமல் பதில் தந்தாள்.

ப்ரியா வந்தபோது அவள் அம்மா லட்சுமி, அப்பா ஜெயராமன் இருவரும் சில கோயில்களுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பி இருந்தனர்.

சென்னை வந்தவுடன், வேலை விஷயமாக, அவர்கள் ஊருக்குச் சென்றுவிட்டார் ஜெயராமன்.

மகள் கணவருடன் வராமல் தனியாக வந்தது, அதுவும் அவ்வப்போது தெரியும் கவலையான முகத்தைப் பார்த்த லட்சுமி, “சரி எவ்ளோ நாள் மாப்பிள்ளை தனியா இருப்பார். எப்போ கிளம்புற ப்ரியா?” என கேட்க,

“ஏன் நான் இங்க இருக்கறது அவ்ளோ கஷ்டமா இருக்காம்மா?” கோபத்துடன் வார்த்தைகள் வந்தது.

“கல்யாணம் ஆன பொண்ணு, வந்து இவ்ளோ நாள் ஆச்சு, கேட்கறதுல என்ன தப்பு ப்ரியா?” அவரும் விடாப்பிடியாகக் கேட்டார்.

அவரை அதே கோபத்துடன் பார்த்து, “அண்ணா உன் வீட்ல” என்று அகிலன் பக்கம் திரும்ப, அவன் அவளைத் தடுத்து, “நீ சாப்பிடு ப்ரியா, அம்மா என்னதிது? சாப்பிடறப்ப இதப்பத்தி பேசிக்கிட்டு, மொதல்ல சாப்பிடட்டும். எல்லாம் சரியாகிடும். இப்போ எதுவும் பேச வேண்டாம் ப்ளீஸ்” என முடித்தான்.

எங்கே ப்ரியா, ‘உன் வீட்டில் நான் இருக்க கூடாதாண்ணா?’ எனக் கேட்டு அது அடுத்த பிரச்சனையாக உருவாவதை விரும்பாமல், அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டான்.

“என் வாய அடைக்கறதுலயே இருங்க. நான் பேசக் கூடாதுன்னா நான் எதுக்கு இங்க இருக்கணும்?” என அவர் பங்கிற்கு கோபப்பட்டு ஹாலிற்குச் சென்றார்.

கவிதாவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

அவள் அகிலனை பார்க்க, அவன் பாதி உணவில் எழுந்து அம்மாவிடம் சென்றான். அவரைச் சமாதானப்படுத்திக் கூட்டி வரும்போது, ப்ரியா சாப்பிட்டும் சாப்பிடாமலும், போதும் என்று சொல்லிவிட்டு மேலே சென்றுவிட்டாள்.

ப்ரியாவின் நடவடிக்கைகள் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இருந்தும் எதுவும் தெரியாமல் என்ன செய்வது என்று புரியவில்லை.

இதை இப்படியே விடவும் மனமில்லை. ஓரிரு நாட்களில் ப்ரியாவிடம் இதுகுறித்து மெதுவாகப் பேசுவோமா என்று அகிலன் நினைத்திருக்க, கவிதாவும் அதே யோசனையில் இருந்தாள்.

புது உயிர் உருவாகியுள்ளது. ஆனால் அதுகுறித்து சந்தோஷப்படுவதா, இல்லை தலைவிதியை நினைத்து வருந்துவதா என புரியாமல் தவித்தாள் ப்ரியா.

இரவு நேரம் எட்டும்போது கீழே வந்த ப்ரியா, கவிதா யாருடனோ போனில் பேசிக்கொண்டிருக்க, அமைதியாகச் சமையலறைக்குள் நுழையும்போது,

“ப்ரியா இந்தா, ரொம்ப நேரமா உன் நம்பர் ரீச் ஆகலையாம். பேசு” என்று போனை கொடுக்க, ஒரு நொடி தடுமாறினாள் ப்ரியா. இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

கவிதாவை பார்த்து சின்னதாக புன்னகைத்து, போனை வாங்கி காதில் வைத்தவாறே, “என்னனு தெரியல அண்ணி. நான் பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பால்கனிக்கு.

“இசை…” அந்த ஒரு வார்த்தைக் காதின் வழியாகச் சென்று இதயத்தை வலிக்கச்செய்யுமா? அவனின் இந்த பரிதவிப்பான அழைப்பு அதை உணரச் செய்தது.

பதிலுக்கு அவன் பெயர் சொல்ல வாய்வரை வந்துவிட்டது. ஆனால் வற்றியிருந்த கண்களில் கண்ணீர் மட்டுமே வந்தது.

“உன் குரல் கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு, என் கூட பேசமாட்டயா? காலைல வேணும்னேதானே இருமின. அவ்ளோ பிடிக்காம போய்ட்டேன்ல நான்” வலியுடன் அவன் வார்த்தைகள் வர, அவளிடம் பதிலில்லை.

“எனக்கு யார்கிட்ட சொல்றதுன்னு தெரியல… யாரும் கேட்கவும் இல்ல. உன்கிட்ட சொல்லணும்னு தோனிச்சு. எனக்கு அந்த ப்ரெசென்ட்டேஷன் பண்ண சொல்லி, திரும்ப இன்வைட் பண்ணிருக்காங்க”

அவள் மௌனமாக இருக்க, “எனக்கு வேற எதுவும் வேணாம், விஷ் மீ லக் இசை. ப்ளீஸ்… நான் இனிமே உன்ன தொல்லையே பண்ணமாட்டேன். ஐ நீட் டு ஹியர் யுவர் வாய்ஸ், ஐ நீட் யுவர் விஷஸ், ஐ டெஸ்ப்ரட்லி நீட் இட் நவ் இசை.”

அவனின் வலி பொருந்திய குரலைக் கேட்டபின், அவளுக்கு அவனிடம் பேச வேண்டும் என்ற ஒரு தவிப்பு. அதை அடக்கி, பேசாமல் தன்னை கட்டுப்படுத்த, தொண்டை அடைத்தது.

‘இதற்கு மேல் முடியாது. விட்டால் வெடித்து அழுதுவிடுவோம்’ என நினைத்து, தன்னை சமநிலைப் படுத்த, ஒரு முறை ஆழ மூச்சை உள்ளிழுத்த ப்ரியா, வீட்டினுள் நுழைந்தாள்.

“பேசிட்டேன் அண்ணி” என்று போனை கவிதாவிடம் தந்துவிட்டு சமையலறையில் கைவேலையில் மூழ்கினாள்.

இரவு உணவுக்குப் பின், அவளறைக்கு வந்தவளுக்கு, அவனைப் பற்றிய எண்ணங்களே மனதை சூழ்ந்தது. கண்களில் கண்ணீர் கூட வறண்டு விட்டது போல ஒரு உணர்வு. இரவு துளியும் தூங்க முடியவில்லை.

அவனை முதலில் சந்தித்தது, பேசியது, என்ற எண்ணங்கள் கண்முன்னே ஓடியது ப்ரியாவிற்கு.

***

ப்ரியா பிரபலமான, கொஞ்சம் நவ நாகரீகத்திற்கு பெயர்போன, சென்னை புறநகரில், செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தாள். அதே கல்லூரியில்தான் அவள் அண்ணன் அகிலனும் படித்திருந்தான்.

அகிலனின் திருமண வேலைகள் ஒருபுறம் வேகமாக நடந்து கொண்டிருக்க, திருமணத்திற்கு முன் ஒரு சடங்கிற்காக, அகிலன் வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், காஞ்சிபுரத்தில் உள்ள கவிதா வீட்டிற்குச் சென்றிருந்தார்கள்.

பெரியவர்கள் அனைவரும் சடங்கில் மும்மரமாக இருக்க, ப்ரியா மற்றும் அவளுடைய சகாக்கள் (சொந்தத்தில் அவள் வயதை ஒத்திருக்கும் இளவட்டங்கள்) கவிதா வீட்டின் மொட்டை மாடியிலிருந்த ஒற்றை அறையின் வெளி சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தனர்.

கதவு மூடியது போல் இருக்க, எங்கே கீழே இருந்தால் ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என எண்ணி இந்தக் கூட்டம் இங்கு கூடியிருந்தது.

அதில் ஒரு பெண், “ஏய் ப்ரியா, மரண மொக்கையா இருக்கு. எங்க திரும்பினாலும் ஒரே ஓல்டீஸ். என்னடி இங்க சைட் அடிக்க ஒரு ஃபிகர் கூட இல்லையே” என நொடித்துக்கொள்ள,

“நான் என்ன பண்ணுவேன், அண்ணி தம்பி காலேஜ்ல படிக்கிறான். சரி அவன் ஃபிரண்ட்ஸ் அப்படி இப்படின்னு கொஞ்சம் ஜாலியா உங்களுக்கு டைம் பாஸ் ஆகும்னு நினச்சேன். ஆனா அவன் என்னமோ நேத்துதான் வயசுக்கு வந்த மாதிரி, வெளியவே வர மாட்டேங்கறான்” சலித்துக்கொண்டாள் ப்ரியா.

அதற்கு மற்றொரு பெண், “ஏன் நீயும் பார்த்ததில்லையா அவனை?” என கேட்க, “நானே இப்போதான் ஃபர்ஸ்ட் டைம் இங்க வரேன். இதுல அவனை எங்க பார்க்க” என்று சொல்லும்போது, அந்த ஒற்றை அறையிலிருந்து ஒருவன் வெளியே வந்தான்.

அனைவரின் கண்களும் அவனை நோக்க, கையில் ஒரு பையுடன் அந்த அறையைப் பூட்டி, இவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு அவன் அங்கிருந்து நகர, “இவன் யாருடி? ஹ்ம்ம், பார்க்க சுமாரா இருக்கான்” என்றாள் முதலில் பேசிய பெண்.

காலையில் கவிதாவுடன் பேசும்போது இவனைக் கையில் காபி ட்ரேயுடன், பின் கவிதாவின் சித்தப்பா கடையில் வேலை செய்பவனும் இவனும் சேர்ந்து வந்தவர்களுக்கு காபி, ஜூஸ் என தரும்போது, அவனைப் பார்த்திருந்தாள் ப்ரியா.

அதுவும் இப்போது அவன் கையில் ஒரு மூட்டை இருந்ததைப் பார்த்து, “வேல செய்ற பையனா இருப்பான். இவன் உனக்கு சுமாரா இருக்கானா? உன் டேஸ்ட் ஏன் இவ்ளோ மட்டமாயிடுச்சு” என்றாள் ப்ரியா நக்கலாக.

அப்போதுதான் அங்கிருந்து சென்றவன், படி இறங்குவதற்குள் இவர்கள் பேசும் பேச்சைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ப்ரியா.

“நம்ம பேசினதை கேட்டிருப்பானோ?” என்று கொஞ்சம் கலக்கத்துடன் ஒரு பெண் கேட்க, “அவன் யாருனே தெரியாது. நீ ஏன் ஃபீல் பண்ற?” என்று அந்தப் பேச்சை முடித்தாள் ப்ரியா.

பின் அந்தக் கூட்டம் கொஞ்ச நேரம் அங்கேயே இருக்க, சில சடங்கைச் செய்ய ப்ரியா அழைக்கப்பட்டாள்.

“பொண்ணோட தம்பிய அழைச்சு இதை மாப்பிள்ளைக்குப் போட்டுவிடச் சொல்லுங்க. மாப்பிள்ளையோட தங்கையை பொண்ணுக்கு நலுங்கு வைக்க சொல்லுங்க” எனும்போது, ப்ரியாவும் அங்கே வர, மேலே பார்த்தவன் இப்போது அகிலன் அருகில் சென்றான்.

ப்ரியா கொஞ்சம் திடுக்கிட்டு, ‘ஆஹ்! இவனா அண்ணியோட தம்பி இளஞ்செழியன்?’ என்ற யோசனையுடன் கவிதா அருகில் செல்ல, இளஞ்செழியனும் இசைப்ரியாவை பார்த்தான்.

***

23
4
4
5
1
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved