தனிப்பெரும் துணையே – 3

தனிப்பெரும் துணையே – 3

 

செழியனிடம் இருந்து செய்தி வந்ததும், ப்ரியா நன்றாக கண்களை திறந்து பார்க்க, 

‘என்னோட ரிசல்ட் பத்தி நானே எப்படி சொல்லமுடியும்? நீ கேட்டனா சொல்லலாம்னு இருந்தேன்’ என்றிருந்தது முதல் மெசேஜ்.

‘பை தி வே ஐ டின்ட் டெல் திஸ் டு எனிவொன். பெருமையா சொல்ற அளவுக்கு பெரிய விஷயம் இல்ல. ஐ காட் அ வெரி பேட் ஸ்கோர் ஃபோர் மை ப்ராஜெக்ட். அந்த நினைப்புலயே இருந்துட்டேன்’ என்றது அடுத்த குறுஞ்செய்தி.

இதுபோதாதென்று இரண்டு மிஸ்ட் கால் வேறு. அதைப் பார்த்ததும் இனம் புரியாத ஒரு சந்தோஷம். தன்னுடைய கோபம் அவனுக்குத் தெரிந்துள்ளது, பேச முயன்றுள்ளான் என்பதை நினைத்து.

‘ஒரு பேப்பர்தானே. போகுது போ, அண்ணிதான் சொன்னாங்க நீ டாப்பர்னு. போனதை நினச்சு ஃபீல் பண்ணாம, செலிப்ரேட் வாட் யு ஹவ் அச்சிவ்ட். கம் ஆன்’ என்று பதில் அனுப்பினாள்.

அனுப்பிய அடுத்த நொடி, ‘தேங்க்ஸ்’ என பதில் வந்தது. இன்னமும் முழித்திருக்கிறானா? ஒருவேளை தன் பதிலுக்காக காத்திருப்பானோ என்று மனம் யோசிக்க, 

‘ஹுக்கும், எங்க அவன் அக்காவை பத்தி சொல்லாம போய்டுவியோன்னு ரிப்ளை பண்ணிருக்கான். நீ வேற’ மானசீகமாக மண்டையில் குட்டியது மூளை.

இருப்பினும் அவன் பதில் அனுப்பியது மிகவும் நிறைவாக இருந்தது.

நாட்கள் மெதுவாக நகர்ந்தது. அவளும் பெற்றோருடன் சென்னையில் இருந்து செங்கல்பட்டு சென்றுவிட்டாள்.

கவிதாவுடன் பேசும் வாய்ப்பு அதிகம் கிடைக்காததால் அவனைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வப்போது அவனுக்கு மெசேஜ் மட்டும் அனுப்புவாள். பெரும்பாலும் ஒரு வார்த்தை பதிலே வந்தது.

‘அவன் என்ன செய்கிறான்’ என்று எதுவும் பெரிதாக தெரியவில்லை.

அப்படி இருக்க, ஒரு நாள் அகிலன் தன் அம்மாவிடம் கவிதாவிற்கு வயிற்றுவலி அதிகமாக இருப்பதாக சொல்லி வெந்தயக்களி செய்து கொடுக்க சொல்ல, அவர் அதை ப்ரியாவிடம் கொடுத்தனுப்பினார்.

ப்ரியாவும் கல்லூரி முடிந்து நேராக சென்னையில் அகிலன் வீட்டிற்கு வர நினைத்திருந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கவிதாவின் அப்பா ஸ்வாமிநாதனுக்கு உடல்நிலை சரியில்லாம போக, அகிலனும் கவிதாவும் ஆஃபிஸில் இருந்து நேராக காஞ்சிபுரத்தில் உள்ள அவள் அப்பாவை பார்க்க சென்ற போது, அகிலன் ஒரு ரிப்போர்ட்டை அங்கேயே மறந்து வந்துவிட்டான்.

அதை எடுத்துக்கொண்டு வார இறுதியில் வந்திருந்தான் செழியன். அன்றே ப்ரியாவும் வருவதாக இருந்தது. இருவருக்கும் தெரியாது மற்றவரின் வருகை குறித்து.

மாலை நேரம் நெருங்கும்போது அகிலன் ப்ரியாவை அழைத்துவந்தான்.

அவள் அறை மேல் தளத்தில் இருக்க, “என்ன கொரியர் சர்வீஸ் பண்ண வச்சிட்டியேடா அண்ணா. ஒழுங்கா லீவைஸ் ஜீன் (levis jean) எடுத்துக்குடுக்கற. நீ ஒன்னு, அண்ணி ஒன்னு. இல்லை இல்ல நான் அண்ணிக்கிட்ட வேற கேட்டுக்கறேன், அண்ணி மேல இருக்காங்களா?” என்று அண்ணனிடம் வாயாடிக்கொண்டு மேலே செல்ல, அங்கே கவிதாவுடன் செழியனை பார்த்த ப்ரியா ஒரு நொடி அதிர்ந்தாள். 

கடைசியாக கல்யாணத்தில் பார்த்தது. சொல்லத் தெரியாத பல உணர்வுகள் மனதில். படபடப்பும் ஒட்டிக்கொண்டது.

அவன் முகத்தைப் பார்க்க ஏதோ ஒரு தயக்கம். ஆனால் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் வேறு. பின் கவிதாவும் அங்கே இருப்பதைப் பார்த்து சட்டென சுதாரித்துக்கொண்டு, 

“ஓ உங்க பாசமலர் வந்துருக்காங்களா? ஹ்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும், இந்தாங்க பிடிங்க வெந்தயக்களி” என்று கவிதாவிடம் கொடுத்தவள், 

“அண்ணி கொஞ்சம் டீ கிடைக்குமா, ஒன்றரை மணி நேர ட்ராவல். ரொம்ப தலைவலி” என கெஞ்சலாகக் கேட்க, கவிதா புன்னகையுடன், “சீக்கிரம் ரெஃப்ரெஷ் ஆகிட்டுவா. போட்டு வெக்கறேன்” என்றாள்.

ப்ரியா ரெஃப்ரெஷ் செய்துகொள்ள அவளறைக்குள் சென்றவுடன், இதயம் கொஞ்சம் வேகமாகவே துடித்தது.

‘ஏன் அவனைப் பார்த்தும் தனக்குள் இப்படி ஒரு மாற்றம்? ஒருவேளை அவனை மனம் விரும்புகிறதோ!’ என நினைக்கையில் அதை ஏற்கவும் முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை.

எப்படி ஒருவனிடம் பழகாமல் அவன் மேல் விருப்பம் வரும்? என அவள் யோசிக்க… ஒருவர் மேல் விருப்பம் வருவதற்கு கண நொடி போதும் என பதில் தந்தது அவள் மனசாட்சி.

அதே யோசனையில் ரெஃப்ரெஷ் ஆகி வெளியே வர, அவள் வருவதைப் பார்த்து புன்னகைத்தான். முதல் முறை அவன் மனமார, ஆழ்ந்து, உணர்ந்து புன்னகைத்ததாக தெரிந்தது.

மறுபடியும் அவளுக்குள் ஒரு தடுமாற்றம், படபடப்பு. அதை இன்னமும் கூட்டுவதுபோல அவன் பேசும் சத்தம் இப்போது கேட்டது.

“ஹலோ, என்ன சவுண்டே காணோம்? நான் பேசிட்டே இருக்கேன். கேட்குதா உனக்கு? மெசேஜ்ல மட்டும்தான் பேசுவியா?” என்று குறும்பாக புருவத்தை உயர்த்திப் புன்னகையுடன் கேட்க, தலையே சுற்றியது அவளுக்கு.

‘எது, இவன் என்னை கிண்டல் பண்றானா? மொதல்ல இவன் இவ்ளோ பேசுவானா? சிரிப்பானா? அதுவும் ஆள கவிழ்க்குற புன்னகை? பின் அந்த வசீகரமான முகம்…’ இப்படி அவள் யோசிக்க, அவள் முகம் பிரதிபலித்ததோ அதிர்ச்சியை.

ஏதோ பேயைப் பார்ப்பதுபோல அவளையும் அறியாமல் அவள் பார்க்க, கவிதாவின், “ப்ரியா” என்ற அழைப்பு அவளை தன்னிலைக்கு கொண்டுவந்தது.

“வரேன் அண்ணி” என்றவள் அவனைப் பாராமல் அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

டீ குடித்துக்கொண்டே மறுபடியும் யோசனையில் மூழ்கினாள். 

‘நோ நோ… இது சும்மா infatuation. அவ்ளோதான். கொஞ்ச நாள்ல போய்டும். இதுக்கு தேவையில்லாம விருப்பம் அப்படி இப்படினு பேரு வைக்க வேணாம். ஒரு ரெண்டு மூனு வாரம் இல்ல ஒரு ரெண்டு மூனு மாசம் பேசாம இருந்தோம்ன்னா இந்த ஃபீலிங்ஸ்லாம் வராது’ என நினைத்துக்கொண்டாள்.

கொஞ்சம் தெளிவு பிறந்ததுபோல இருந்தது.

சாதாரணமாக இருக்க முற்பட்டாள். உணவு சாப்பிட செழியன் வந்தபோது, எதையும் காட்டிக்கொள்ளக் கூடாது என நினைத்து சகஜமாக சிரித்துப்பேசி, கேலி செய்துகொண்டிருந்தாள்.

அவன் முகம் கொஞ்சம் மாறி இருந்தது. அதை பொருட்படுத்தாமல் இருந்தாள்.

அப்போது கவிதா தம்பியிடம், ‘இன்னமும் வைத்துக்கொள்’ என்று சொன்னபோது, பழைய துடுக்குத்தனம் வந்தது ப்ரியாவிற்கு.

‘எங்கண்ணன் நெப்போலியனா?’ என கேட்டது நினைவிற்கு வர, ஹாலில் இருந்த அகிலனிடம், “அண்ணா இங்க பாரேன் கிழக்கு சீமையிலே படம் ஓடுது” என்று ப்ரியா சொன்னவுடன், முகம் இறுக சட்டென எழுந்தான் செழியன். 

அதைப்பார்த்து ஒரு சில நொடிகள் அதிர்ந்தாள் ப்ரியா. கவிதா என்னவாயிற்று என யோசிக்கும்முன், அகிலன் ப்ரியாவை அங்கிருந்து வரச்சொன்னான்.

செழியனை பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அங்கிருந்து சென்றாளே தவிர, அவனின் நடவடிக்கை குறித்துதான் யோசித்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை மேலே அவன் நன்றாக பேசியது தன் கற்பனையோ, தன் பிரம்மையோ என்று கூட நினைக்கத் தோன்றியது.

‘எதுவாகினும் இப்போது இதுபோல உணர்வுகளுக்கு இடம் தரக்கூடாது. படிக்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும் பின், முதுகலை படிப்பு நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும்’ என தனக்குத்தானே அறிவுரைகள் கூறிக்கொண்டாள்.

அதற்கேற்ப அடுத்த சில வாரங்கள் எந்த ஒரு குறுஞ்செய்தியும் அவள் அனுப்பவில்லை. அவனும் அனுப்பவில்லை.

ஆனால் அவன் ஞாபகம் வராமல் இருக்கவில்லை. தினமும் ஏதேனும் ஒன்று செய்கையில் அவன் ஞாபகம் வந்துவிடும். கைகள் அவனுக்கு மெசேஜ் செய்ய பரபரத்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டாள்.

வாரங்கள் மாதங்களாக, அகிலனும் வேலை விஷயமாக துபாய் சென்று திரும்பியிருக்க, கவிதாவும் அகிலனும் சேர்ந்து முதன்முதலாக விடுமுறைக்குச் சென்றிருந்தனர். அதில் சில புகைப்படங்களை அவளுக்கு அனுப்பியிருந்தனர்.

‘கவிதா சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தால் நிச்சயம் சந்தோஷப்படுவான்’ என நினைத்து அவனுக்கு அனுப்ப, அது அவனை அடையவில்லை. திரும்பவும் அனுப்ப, அதே நிலை.

தயக்கத்துடன், யோசனையோடு அவன் எண்ணை அழைக்க, அது உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதைக் கேட்டவள் கண்களிலோ அவளையும் மீறி கண்ணீர் வந்தது.

சொல்லாமல் எண்ணை மாற்றிவிட்டான் என்ற கோபம், இவனை எண்ணியா இத்தனை நாட்கள் இருந்தோம் என்ற ஏமாற்றம், அவனிடம் இனி பேசமுடியாதே என்ற வருத்தம் என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அழுகையாக வெளிவந்தது.

‘யாரிடம் கேட்டு எப்படி அவன் எண்ணை வாங்குவது’ என யோசித்தாலும் அவளின் சுய மரியாதை அதை ஏற்க மறுத்தது. இனி அவனை நினைக்கக்கூடாது என தனக்கே அறிவுரை கூறிக்கொண்டாலும் மனம் கேட்கவில்லை.

இப்படியாக நாட்கள் வேகமாக கழிய, கவிதா கர்ப்பமாகிவிட்டாள் என்ற நல்ல செய்தி வந்தது. செங்கல்பட்டில் இருந்து சென்னை வந்தனர் ப்ரியாவும் அவள் அம்மா அப்பாவும்.

கவிதாவின் முகமே காட்டியது அவளின் சந்தோஷமான வாழ்க்கையை. அதை காட்டிலும் அகிலன் பார்த்து பார்த்து அவளுக்காக செய்யும் ஒவ்வொன்றையும் ரசித்தாள் ப்ரியா.

தனக்கு இதெல்லாம் என யோசிக்கும் போது செழியனின் முகமே வந்தது. மறுபடியும் அவள் மனம் வாடியது.

கஷ்டப்பட்டு தன்னை சமன் செய்து கொண்டு இருக்கையில், ஒரு நாள், அவள் முன்னே வந்து நின்றான் செழியன்!

அவனைப் பார்த்த தருணம், கண்கள் பரபரத்து, இதயம் படபடத்து, கை கால்கள் மரத்து, அப்படியே நின்றாள்.

***

கவிதா கர்ப்பமாகி இருப்பதை கேள்விப்பட்டு செழியன் வந்திருந்தான். லட்சுமி அவனை வரவேற்றார்.

அவனைப் பார்த்ததும் மயங்கும் தன் மனதை மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டு, அவனைப் பார்த்தும் முறைத்துவிட்டு மேலே சென்றுவிட்டாள் ப்ரியா.

கோபம் கோபமாக வந்தது அவன் மேல். ‘எண்ணை மாற்றிவிட்டு, அதைக்கூட தராமல், பார்த்ததும் புன்னகை வேறு. சரியான காரியவாதி. காரியம் முடிந்ததும் கழற்றிவிட்டுவிட்டான். இவனைப் போய்’ என உள்ளம் கனன்று கொண்டிருக்க, 

“இப்போ என்ன கோபம்? நான்தான் கோபப்படணும் நீ என் நம்பர பிளாக் பண்ணினதுக்கு” என்ற அவன் குரல் கேட்டு திடுக்கிட்டு பார்த்தாள்.

லட்சுமி அவனிடம் கவிதா ஓய்வெடுத்துக்கொள்ள மேலே இருப்பதாக சொன்னவுடன், கவிதாவை பார்க்க மேலே வர, ப்ரியா பால்கனியில் நின்றிருப்பதை பார்த்து அங்கே வந்தான்.

“வாட்? நீ ஏன் கோபப்படணும்? Selfish. உன் வேலை முடிஞ்சதும், நம்பர் மாத்திட்டு, அதைக்கூட சொல்லாம, நான் பிளாக் பண்ணிட்டேன்னு பொய் சொல்றயா?” கிட்டத்தட்ட சிவந்த முகத்துடன், மெதுவாக ஆனால் அழுத்தமாக கேட்டாள்.

ஒரு நொடி அவளையே பார்த்த செழியன், “நான் ஏன் பொய் சொல்லணும்?” என்று சொல்லிவிட்டு, அவள் எண்ணை அழைத்து ஸ்பீக்கரில் போட்டு அவள் பக்கம் காட்டினான்.

அது அவளுடைய எண். ஆனால் அழைப்பு செல்லவில்லை.

அவள் யோசனையுடன் பார்க்க, “நீ இதுக்கு என்ன பொய் சொல்லலாம்னு யோசி. இதான் என் நம்பர். அக்காவை பார்த்துட்டு நான் கிளம்பறேன்” என சொல்லி, அவன் எண்ணை கொடுத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

ப்ரியாவிற்கு ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்தாள்.

‘நான் எப்போ பிளாக் செஞ்சேன்?’ என்று எந்த எண்ணையெல்லாம் பிளாக் செய்தாள் என யோசிக்க, கொஞ்சம் புரிந்தது.

அவசரமாக பிளாக் செய்த எண்களை பார்க்க, அதில் இவன் எண்ணும் இருந்தது.

அந்த எண்ணில் இருந்து வந்த ஒரே ஒரு மெசேஜ், ‘ஹலோ’ என்பதுதான். 

“ஐயோ” என தலையில் அடித்துக்கொண்டு, அவன் எண்ணை சேவ் செய்து, அன்ப்ளாக் செய்தாள்.

உடனே, ‘ஒரு நிமிஷம் பேசணும். முடியுமா?’ என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

சிறிதுநேரத்தில் கவிதாவும் செழியனும் கவிதாவின் அறையில் இருந்து வெளிவர, “அக்கா, நீ போ. நான் ஒரு போன் பேசிட்டு வரேன்” என்றான்.

கவிதா கீழே செல்லும்வரை பொறுத்திருந்து திரும்ப, அவன் எதிரில் நின்றாள் ப்ரியா.

“என்ன பேசணும்?” ஆர்வமில்லாமல் அவன் கேட்க, “சாரி” என்றவள் கண்கள் கூட கெஞ்சியது.

அதைப் பார்த்தவுடன், அவன் முகம் சட்டென இலகுவாக மாறியது. அவன் சின்னதாக தலையசைத்துவிட்டு கிளம்பத் திரும்பும்போது, 

“காலேஜ்ல ஒருத்தன் ரொம்ப டார்ச்சர் பண்ணான். சும்மா புது நம்பர்ல இருந்து ஹாய் ஹலோனு அனுப்பிட்டே இருந்தான். உன்கிட்ட இருந்து, ‘ஹலோ’ மெசேஜ் வந்ததும் அவன்தான்னு நெனச்சு பிளாக் பண்ணிட்டேன். நீயாச்சும் உன் நேமோட அனுப்பியிருக்கலாம்ல…” என்றாள்.

அவன் அவளையே பார்க்க, “ப்ராமிஸ். நீயே பாரு. எவ்ளோ நம்பர் பிளாக் பண்ணிருக்கேன்னு” என மொபைலை நீட்ட, அவன் அதைப் பார்க்காமல் புன்னகைத்துக்கொண்டே, “பரவால்ல” என்றான்.

அவன் அவளை நம்பியது அவள் மனதில் ஒரு சின்ன சந்தோஷம்.

பின் அவன், “ரொம்ப தேங்க்ஸ்” என்றவுடன், அவள் புன்னகைத்துக்கொண்டே எதற்கு என்பதைப்போல பார்க்க, “நீ அப்புறம் இங்க எல்லாரும் அக்காவை ரொம்ப நல்லா பார்த்துக்கறதா அக்கா சொன்னா. தேங்க் யூ” என்றான்.

அவள் இதழ்கள் விரிந்து சிரித்து, “எனக்கு மட்டும் சொன்னா பத்தாது. எங்க அண்ணன் நெப்போலியனுக்கும் சொல்லணும்” என குறும்புடன் அவள் சொல்ல, இப்போது முறைத்துக்கொண்டு புன்னகைத்தான் அவன். அதில் முற்றிலுமாக விழுந்தாள் அவள்!

“அவர் இல்ல போல. நீ தேங்க்ஸ் சொல்லிடு. நான் கிளம்பறேன்.”

“பார்க்கலாம்… சரி வாயிலயே தேங்க்ஸ் சொன்னது போதும். எனக்கு ஏதாச்சும் பெருசா கிஃப்ட் வேணும்” என்றாள் புன்னகைத்துக்கொண்டு.

மறுபடியும் அவளை ஒரு நொடி கண்கொட்டாமல் பார்த்த செழியன், “ஹ்ம்ம் நான் கிளம்பணும். வரேன்” என்றதும், இதுவரை சிரித்த அவள் முகம் சட்டென மாறியது. சரி என்பதுபோல தலையசைக்க, அவனும் தலையசைத்துவிட்டு சென்றான்.

அவன் செல்லும் திசையையே பார்த்து நின்றாள். ஏனோ அவன் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெஞ்சம் வலித்தது.

அவனைப் பாராமல், அவனை தொடர்பு கொள்ளாமல் இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு போடப்பட்ட ஒரு தடுப்பு, இந்த ஒரு சந்திப்பில் முற்றிலுமாக உடைந்தது போல உணர்ந்தாள்.

மறுபடியும் அவனிடம் பேசவேண்டும், பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

‘ஒருவரை மனதிற்கு பிடிப்பது அவ்வளவு தவறான காரியமா என்ன?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

‘இது சரியா’ என நினைக்கும்போது, ‘இதில் தவறென்ன இருக்கிறது’ என்று நினைத்தாள். பின் ஒரு முடிவாக, ‘அவனுக்கும் தன்னை பிடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதில் தவறில்லை’ என்றது அவள் மனம். 

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில், ‘அவன் என்ன செய்கிறான்… எங்கு வேலை பார்க்கிறான்’ என்பதை எல்லாம் அவனிடம் கேட்டு தெரிந்துகொண்டாள்.

அவனிடம் மனதில் உள்ளதை குறித்துப் பேசாவிட்டாலும் சகஜமாக பேசினாள்.

நாட்கள் இப்படியாக நகர, கவிதாவிற்கு வளைகாப்பு தேதி குறித்தனர்.

காஞ்சிபுரத்தில் செய்யலாம் என நினைத்து, பின் அவள் உடல்நிலையை கருத்தில்கொண்டு சென்னையிலேயே அவர்கள் வீட்டிலேயே நடத்த முடிவு செய்தனர்.

அந்த வளைகாப்பில் அனைவரும் கவிதாவின் மேல் கண்ணாக இருக்க, ப்ரியா மட்டும் வாயில் மேலே கண்ணாக இருந்தாள். செழியன் வருவதாக சொல்லியிருந்தான். அதற்காகவே புடவையெல்லாம் கட்டிக்கொண்டு காத்திருந்தாள்.

அவளை நீண்ட நேரம் காத்திருக்க விடாமல் சரியான நேரத்திற்கு வந்தான் செழியன்.

அவனைப் பார்த்ததும் விழிகள் அகல கிட்டத்தட்ட சிலையென நின்றாள் ப்ரியா.

அவள் மனதில் முதன் முதலில் பார்த்த அவனையும் தற்போது தன்முன் நின்றுகொண்டிருப்பவனையும் ஒப்பிடாமல் இருக்கமுடியவில்லை. கடந்த முறை பார்த்தபோது கூட வித்தியாசம் கண்டுகொள்ளவில்லை அவள் இருந்த மனநிலையில்.

ஆனால் இன்று அவனைப் பார்த்தபடி நின்றாள்.

சரியான வயதிற்கேற்ற உடற்கட்டு, அதற்கு ஒத்துப்போகும் பொருத்தமான உடை. நேர்த்தியான ஹேர்கட் என அவனைப் பார்க்க, அவன் அவளைப்பார்த்ததும் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்துவிட்டு கவிதாவிடம் சென்றான்.

ஏனோ அதற்குமேல் அவளால் அங்கு நிற்கமுடியவில்லை.

வேகமாக சமையலறைக்குள் நுழைந்துகொண்டாள். அங்கிருந்து வெளியே நடப்பவைகளை பார்த்துக்கொண்டிருந்தாள் கூடவே அவனையும்.

அனைவரும் கவிதாவிற்கு நலுங்கு வைத்து வளையல் அணிவித்தனர். அகிலன் தன் மனைவியின் அழகை ரசித்தான். வயிற்றில் உண்டான கரு அவள் பொலிவை இன்னமும் கூட்டியது.

ப்ரியாவை அழைத்து அணிவித்துவிட சொல்ல, அவளும் சொன்னதை செய்தாள். கவிதா அருகிலேயே ப்ரியா நின்றுகொண்டாள். கடைசியாக அகிலனும் செழியனும் இருக்க, செழியனை அனுப்பினான் அகிலன்.

புன்னகைத்துக்கொண்டே நலுங்கு வைத்து, தட்டில் இருந்த கண்ணாடி வளையல்களை எடுத்தவன், தனது பாக்கெட்டில் இருந்து அவன் வாங்கிவந்த ரத்தினங்கள் பதித்த தங்க வளையலுடன் அதை சேர்த்து, “நீ சந்தோஷமா இருக்கறத பார்க்கறதுக்கு ரொம்ப நிம்மதியா இருக்குக்கா. உனக்காக என்னோட காசுல ஃபர்ஸ்ட் டைம் வாங்கினது” என்று சொல்லிக்கொண்டே அதை அணிவித்தான்.

கவிதாவின் கண்கள் கலங்கியது, செழியனின் கண்களும். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ப்ரியாவின் மனம் நெகிழ, சற்று தள்ளி இதைப் பார்த்துக்கொண்டிருந்த அகிலன் புன்னகைத்தான்.

பின் கடைசியாக அகிலன் கவிதாவிடம் வந்தான். அவன் வரவும், செழியன் சற்று தள்ளி நின்றுகொண்டான்.

அகிலன் கவிதாவிற்கு சந்தனம் குங்குமம் வைத்தபின், அவள் முன் மண்டியிட்டு, அவளுக்கு வளையலை அணிவித்தான்.

பின் பற்றியிருந்த அவள் முன்னங்கையில் சின்னதாக முத்தம் பதித்து, “தேங்க்ஸ் பேபி. லவ் யு டா” கண்களில் கண்ணீர் கோர்க்க, ஆசையாக சொன்னான்.

பற்றியிருந்த அவன் கைகளை இறுக பிடித்துக்கொண்ட கவிதா, அவனின் கனிவில் கண்கள் கலங்கிட, அவன் செயலில் முகம் வெட்கத்தில் சிவந்திட, அந்த சந்தனம் பூசிய முகம் இன்னமும் பிரகாசமானது.

இதை பார்த்தவுடன் ப்ரியா செழியனை பார்த்து புருவங்கள் உயர்த்தி அகிலனை காட்ட, அவன் முகத்தில் புன்னகை, கண்களில் நிறைவு.

திருமணத்தில் தன் தமக்கை தொலைத்த சந்தோஷத்தை இப்போது கண்கூடாகப்பார்க்க, அந்த சந்தோஷத்திற்கு காரணம் அகிலன் என புரிந்தது.

அங்கே நின்றுகொண்டிருந்த தந்தையை பார்த்தான். அவர் கண்களில் கட்டுக்கடங்காமல் கண்ணீர் கொட்டியது மகளின் சந்தோஷமான வாழ்க்கையை நினைத்து.

***

12
1
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved