தனிப்பெரும் துணையே – 15

தனிப்பெரும் துணையே – 15

செழியன் கவிதாவின் வளைகாப்புக்குப் புறப்பட்டான். ப்ரியாவை பார்த்தும் சில மாதங்கள் ஆகியிருந்தது.

அவளைப் பார்க்கப்போகிறோம் என்பதற்காவே, புதிதாக ஹேர்கட் செய்துகொண்டு, கிளம்பும் முன் பலமுறை தன்னை கண்ணாடியில் பார்த்து மனதிற்கு திருப்தி ஆகும்வரை சில பல உடைகளை மாற்றி, நன்றாக தயாராகி கிளம்பினான்.

அவனின் இந்த பரிமாற்றம் அவனுக்குமே பிடித்தது. ஆவலாக அகிலன் கவிதா வீட்டிற்கு வந்தடைய, வாயிலை பார்த்தவாறே இருந்த ப்ரியாவை முதலில் பார்த்தான்.

அவனைப் பார்த்ததும், அவள் கண்கள் காட்டிய ஆச்சரியத்தை ரசித்தவாறு அவளைப்பார்த்தான். அவளும் அழகான ஒரு புடவை கட்டிக்கொண்டு அவனை ஆசையாக பார்க்க, அவளிடம் இப்போ பார்க்க சுமாராவாவது இருக்கேனா என்று கேட்கவேண்டும் போல இருந்தது.

அவளைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டே உள்ளே வர, கவிதாவும் அகிலனும் பூஜையில் இருந்தனர். அகிலன் சின்ன சின்ன விஷயத்திற்குக்கூட கவிதாவை பார்த்துக்கொண்டது மனநிறைவாக இருந்தது. தற்செயலாக பார்ப்பதுபோல ப்ரியா நின்றிருந்த இடத்தைப் பார்த்தான் அவள் அங்கு இல்லை.

எங்கு சென்றாள் என்று யோசிக்கும்போது, சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் செழியனை ஓரிருமுறை பார்த்தவாறு. ஏதோ தரையில் புரளும் பாவாடையை தூக்கிப்பிடித்து நடப்பதுபோல புடவையை தூக்கிப்பிடித்தவாறு வந்தாள்.

அதைப் பார்த்தவனுக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளின் செய்கைகளை ரசித்தபடி அவன் இருக்க, அவள் கவிதாவிற்கு நலுங்கு வைத்து, அவள் பக்கத்திலேயே நின்றுகொண்டாள். இப்போது இருவரின் கண்களும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டது.

செழியனை அழைத்தபோது, அவன் வாங்கிவந்திருந்த வளையலை கவிதாவுக்கு அணிவித்தான். அக்காவிடம் தன் சொந்த பணத்தில் வாங்கியதாக சொல்லி அணிவிக்க, இருவர் கண்களும் கலங்கியது.

பின் கடைசியாக அகிலன் கவிதாவிற்கு அணிவித்து விடும்போது, அவர்களுக்குள் இருந்த அழகான புரிதல் அவனுக்கு நிம்மதியை தந்தது. தந்தையை பார்த்தான் அவர் உடல்மொழியும் நிம்மதியை காட்டியது.

பல நாட்கள், இல்லை வருடங்கள் கழித்து ஒரு இதமான சூழ்நிலை அவர்கள் குடும்பத்தில் அரங்கேறியதாக இருந்தது.

ஒருவழியாக பூஜைகள் முடிந்தவுடன், கவிதாவை அகிலன் மேலே அழைத்துச்சென்றுவிட, செழியனின் சித்தி, கவிதா சாப்பிடுவதற்கு என்று ஒரு டப்பாவை செழியனிடம் கொடுத்தார்.

அதைத் தர மேலே சென்றபோது, அகிலன் கவிதாவிடம் பேசிக்கொண்டிருந்தது காதில்பட, அக்காவின் வாழ்க்கை குறித்து இனி கவலை வேண்டாம் என்றே தோன்றியது.

அவர்களை தொந்தரவு செய்யவேண்டாம் என நினைத்து செழியன் அங்கிருந்து நகரும்போது, ப்ரியா அவன் எதிரில் நின்றாள்.

அவளைப் பார்த்தவுடன், அவன் கண்கள் பிரகாசமானது. ‘எப்படி அவளுக்கு வாங்கிவந்ததை தருவது’ என அவன் யோசிக்க, அவளே கொஞ்ச நேரத்தில் எங்கே கிஃப்ட் என கேட்டாள்.

முகத்தில் புன்னகையுடன் அவன் நீட்டினான். அவள் கண்கள் திகைத்து அவனைப் பார்க்க, அந்த விழிகள் காட்டிய பாவத்தை மனதுக்குள் பதித்துக்கொண்டான்.

‘பிடிக்குமா அவளுக்கு’ என்ற ஆவலுடன் அவன் கொடுக்க, அவனிடமிருந்து வாங்கி அதை பிரித்த ப்ரியாவின் கண்களில் இப்போது அதிர்ச்சி.

“பிடிச்சிருக்கா?” அவன் கேட்க, அவளிடம் பதிலில்லை. மறுபடியும் அவன் கேட்க, அவள் கண்களின் ஓரத்தில் சின்னதாக கண்ணீர் கோர்த்து ஆம் என்று தலையசைத்தாள்.

அவளை கையில் அணிந்துகொள்ள சொல்லி அவன் கேட்க நினைக்கும்போது கவிதாவின் அறைக்குள் அகிலனுக்கும் கவிதாவுக்கும் வாக்குவாதம்.

செழியன் அதைக்கேட்டு பதறிக்கொண்டு, ‘என்ன நடக்கிறது’ என்று பார்க்க, அவர்களுக்குள் இருக்கும் இணக்கம் புரிந்து அவன் மனதை நெகிழச் செய்தது.

கவிதாவின் காலடியில் அகிலன் அமர்ந்து, அவளுக்கு சேவகம் செய்துகொண்டிருந்தான்.

‘கண்டிப்பாக மனைவியை பிடிக்காதவன் செய்யும் காரியமில்லை அது’ அகிலனை முதல்முறை தன் சொந்தம் என்ற வளைவுக்குள் பார்த்தான்.

அதே நிம்மதியுடன் வெளியே வர, அங்கே ப்ரியா கைகளில் அவன் தந்த கடிகாரத்தைக் கட்டி அவன் முகத்திற்கு நேராக காட்டினாள்.

அவ்வளவு அழகாக இருந்தது. அந்த கரத்தை பற்றிக்கொண்டு, ‘என் வாழ்க்கை முழுதும் உன் கை கோர்த்து இருக்கனும்ன்னு ஆசை. அந்த ஆயுள் பரிசு எனக்குக் கிடைக்குமா?’ என்று கேட்கத்தோன்ற, அவள் அவனிடம் கிஃப்ட் தந்ததற்கு நன்றி சொன்னாள்.

உடனே மனதில் நினைத்ததை மறைமுகமாக, “தேங்க்ஸ் சொன்னது போதும். பதிலுக்கு ஏதாச்சும் நீ கிஃப்ட் குடு” என புன்னகைத்து அங்கிருந்து சென்றுவிட்டான். எங்கே இன்னும் இருந்தால் நேராக அவளிடம் கேட்டுவிடுமோ என்ற பயம் அவனுக்கு.

ஆனால் அன்று முடிவெடுத்தான். ப்ரியா தன் வாழ்வில் வந்தால் எந்த ஒரு குறையும் இல்லாமல் அகிலன் அக்காவை பார்த்துக்கொள்வதைப்போல, ப்ரியாவை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ளவேண்டும் என்று.

செல்வ நிலையில் அகிலன் அளவிற்கு உயர்த்த முடியமா என்று தெரியவில்லை, ஆனால் ப்ரியாவை நன்றாக பார்த்துகொள்வதற்கு தேவையான அளவிற்கு உயரவேண்டும் என்று தோன்றியது.

அதற்கு ஏற்றாற்போல, டாடா பவர் நிறுவனத்தில் மேல் படிப்பு படித்துக்கொண்டே வேலை பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்க, அதை விட மனமில்லை.

கண்டிப்பாக முதுகலை பட்டப்படிப்பு முடித்தால், இன்னமும் பெரிய வேலையில் அமரலாம் என்று நினைத்தான்.

‘தந்தையிடம் சொல்லலாமா?’ என்று யோசிக்க, கண்டிப்பாக வேண்டாம் என்றுதான் சொல்வார் எனத் தெரியும். அவருக்கு வேலைதான் முக்கியம் படிப்பு இல்லை இப்போது.

அக்காவிடம் சொல்லலாம் என்றால் அவள் கண்டிப்பாக அப்பாவிடம் சொல்லிவிடுவாள். அதனால் கவிதாவிடமும் சொல்லவில்லை.

ப்ரியாவிடம் என யோசிக்கும்போது, ‘மறைக்கவேண்டுமா?’ என்று தோன்றியது.

ஆனால் படிக்கப்போகிறோம் என்றால் எங்கே அவளும் வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என யோசிக்க, ‘மும்பையில் புது வேலை கிடைத்துள்ளது’ என்று மட்டும் இப்போதைக்கு சொல்வோம் என முடிவெடுத்தான்.

அதே போல அவன் சொல்ல, ப்ரியாவிற்கு மிகுந்த சந்தோஷம். இருவருக்கிடையில் மெசேஜ் பரிமாணம் அதிகமானது. செழியனும் கொஞ்சம் நன்றாக இப்போதெல்லாம் பேசினான்.

நாட்கள் வேகமாக நகர, ஐஐடி பாம்பேயில் மாஸ்டர்ஸ் படிக்க விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்த படலம் ஆரம்பித்தது. வேலை, படிப்பு இரண்டையும் பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும், அதை பழகிக்கொள்ள முயற்சித்தான்.

இப்படியாக நாட்கள் நகர, திடீரென ஒரு நாள் காலை நேரம் கல்லூரியில் இருக்கும்போது ப்ரியா அழைத்தாள்.

எப்போதும் அழைத்தெல்லாம் பேசமாட்டார்கள். ஆனால் இப்போது அவள் அழைத்ததும் ஆச்சர்யத்துடன் அவன் எடுக்க, ‘அவள் மும்பை வந்திருக்கிறாள்’ என்று சொன்னதும் அதிர்ச்சியில் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.

அவனை அதிர்ச்சியில் இருந்து மீட்டது அவள் குரல். அவனை மெரைன் டிரைவ் வரச்சொன்னாள். அவளைப் பார்க்கப்போகிறோம் என்று நினைக்கையில், மனதில் ஆயிரம் வயலின்கள் வாசிப்பதுபோல இருந்தது.

‘எப்படியும் இரண்டு மணிநேரம் ஆகும்’ என்று சொன்னான். அவள் காத்திருப்பதாக சொன்னவுடன், உடனே கிளம்பினான் டாக்ஸியில்.

ட்ரைவரை படாதபாடு படுத்தி எவ்வளவு சீக்கிரம் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றான்.

எதிர் திசையில் அவன் இறங்க, தூரத்தில் அவள் கைகளை கட்டிக்கொண்டு, ரைலிங்கில் சாய்ந்தவாறு அவனுக்காக காத்திருந்தாள்.

‘என்ன பெண்ணடா? யாருக்கு அமையும் இதுபோல’ என்ற பெருமை அவனுள்!

காதலைச் சொல்லவில்லை இருவரும், ஆனால் இருவருக்குள்ளும் அது இருப்பதைப்போல உணர்ந்தனர்.

கிட்டத்தட்ட ஓடிச்சென்று ப்ரியா முன் நிற்க, அவள் கண்களில் அவ்வளவு கள்ளத்தனம். அவனுக்கு அவளின் கள்ளத்தனம் கூட அழகே.

கைகளில் அவன் தந்த கடிகாரத்தைப் பார்த்தவுடன், “எனக்குக் கிஃப்ட் எங்க?” என கேட்க, “நான் வந்ததே கிஃப்ட்தான்” என்றாள் புன்சிரிப்புடன்.

அவன் பொய்யாக முறைக்க, மனதிலோ, ‘இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?’ என்றே தோன்றியது.

பின் அவள், அவனை வீட்டிற்கு அழைத்துச்செல்ல சொன்னவுடன் அதிர்ந்தான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சநேரம் அவனுடன் இருப்பாள் என நினைத்தான்.

‘இதனைத்தும் தனக்காகவா?’ என நினைக்கையில், இதயம் சந்தோஷத்தில் தடதடக்க, பேரின்பம் மனதில்.

இருப்பினும், ‘அவள் வீட்டில் தெரிந்துவிட்டால்’ என அவன் நினைக்க, இதெல்லாம் ஒரு விஷயமா… என்பதுபோல இருந்தது அவளின் செயல்கள். அனைத்தையும் சரியாக திட்டமிட்டே வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

அவளை அழைத்துக்கொண்டு டாக்ஸியில் ஏறினான். அவன் மனதில் வெளியில் சொல்லமுடியாத, பதில் தெரியாத பல கேள்விகள்.

‘இதெல்லாம் கனவில்லயே? இந்த அன்பிற்குத் தான் தகுதியானவனா? இந்த அளவு அன்பை தன்னால் பதிலுக்கு அவளிடம் காட்டமுடியுமா?’ என கேள்விகள் ஓட, அமைதியாக இருந்தான்.

ப்ரியா கொஞ்ச நேரத்தில் ஜன்னலில் சாய்ந்து உறங்கிவிட, அவளைப்பார்த்தான்.

தூங்கும்போது ரசிக்கக்கூடாது என்பார்கள். ஆனால் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை அவனால். அப்போது ஒரு வேகத்தடையில் வண்டி செல்ல, அவள் ஜன்னலில் முட்டிக்கொண்டாள்.

அதைப்பார்த்தவுடன் அவன் கைகள் பரபரத்தது. அவளை தன் மீது சாய்த்துக்கொள்ளவேண்டுமென.

மறுபடியும் அவள் இடித்துக்கொள்ள… ஓட்டுனரிடம், நேரம் ஆனாலும் பரவாயில்லை. மெதுவாக செல்லும்படி சொன்னான். அவளும் தொந்தரவின்றி நன்றாக உறங்கினாள்.

வீடு வந்ததும் அவளை உள்ளே அழைத்துச்செல்ல, அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். பின் அவன் படிப்பதாக தயங்கித்தயங்கி சொன்னவுடன், அவள் முகத்தில் தெரிந்த ஒப்புதலுக்கான புன்னகை, அவனை இன்னமும் மகிழ்வித்தது.

அவளுக்கு குடிப்பதற்கு டீ போட்டுக்கொண்டிருக்கும்போது, அவள் எடுத்துவந்த கிஃப்ட்டை அவனிடம் கொடுக்க… அவன் திகைப்புடன், ‘இந்தநாளில் இன்னமும் என்னென்ன இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ!’ என எண்ணிக்கொண்டு வாங்கினான். உள்ளே அழகான இரண்டு காபி கப்ஸ்.

‘அழகாக இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு, “எதற்கு இரண்டு?” என கேட்டான். அவனுக்குத் தெரியும் எதற்காக இரண்டு என்று.

‘கண்டிப்பாக நேராக பதில் சொல்லமாட்டாள்’ என்று அவன் நினைக்க, அதேபோல அவளும் ‘ஒன்று உனக்கு மற்றொன்று உன் மனைவிக்கு’ என்றாள். அவள் கண்களில் அப்பட்டமாக காதல் தெரிந்தது அவனுக்கு.

அவளைப் பார்த்தவாறு, ‘அதானே. நேராக சொல்லவேண்டும் என்றால் எப்போதோ சொல்லியிருக்கலாம். இப்போது மட்டும் சொல்வாளா என்ன?’ என எண்ணிக்கொண்டு டீயை வேறு குவளையில் ஊற்றினான்.

அதைப் பார்த்ததும் அவள் அவனிடம் புதியதை உபயோகிக்க சொல்ல, ‘நீ மட்டும்தான் மறைமுகமாக சொல்வாயா!’ என நினைத்து,

“நீ சொன்ன இதுக்கு சொந்தமானவங்க அந்த உரிமையோட வர்றப்ப, நான் இதை யூஸ் பண்றேன்” என்றான்.

அவள் முகத்தில் குழப்பத்தைப் பார்த்தவன் மனதில், ‘வாயாடிக்கு வாய் மட்டும்தான் பேசவரும்போல, நீ என்னோட மனைவி, நான் உன்னோட கணவன் என்கிற உரிமையோட நம்ம வாழ்க்கை ஆரம்பிக்கும்போது சேர்ந்து குடிப்போம்’ என எண்ணி புன்னகைத்துக்கொண்டே டீயை அவளுக்கு கொடுத்தான்.

இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க, மற்றொரு பெட்டியை நீட்டினாள் ப்ரியா. அவன் மறுபடியும் ஆச்சர்யத்துடன் பிரிக்க, அதில் ஒரு விளக்கு (lamp) இருந்தது.

அதைப் பற்றி அவள் விளக்கம் தர, அவனுக்குள் ஏதோ ஒன்று இடித்தது.

‘கண்டிப்பாக இதில் வேறு ஏதோ இருக்கிறது, இதை பரிசோதிக்க வேறு வழியா இல்லை? என்ன என்று கண்டுபிடிப்போம்’ என நினைத்துக்கொண்டு அவள் சொல்வதற்கெல்லாம் தலையை மட்டும் ஆட்டினான்.

அவளும் அதை முழுவதுமாக செட் செய்ய, அதை நன்றாக பார்த்துக்கொண்டான்.

பின் கொஞ்ச நேரம் இருவரும் பேசிவிட்டு, அவள் கிளம்பத்தயாராக, அவன் முகம் வாடியது. அவளுடன் தானும் வருவதாக சொல்லி கிளம்பினான்.

இருவரும் பேசவில்லை. அவனுக்குள் ஒரு அழுத்தம் அவள் கிளம்புவதை நினைத்து. இருவரும் டாக்ஸி இருக்கும் இடத்திற்குச் செல்லும்போது… எதிரே அவளை நோக்கி வந்த பந்தைப் பார்த்து, அவளை தன் பக்கம் இழுக்க, அவன் மேலே மோதி நின்றாள் ப்ரியா.

அவன் கரம் அவள் கரத்தைப் பற்றியிருந்தது.

அதில், அவள் உணராவண்ணம் அழுத்தம் தந்து, ‘என்னோடவே இரேன் இசை, நீ வர்றவரை தனியா இருக்க விருப்பப்பட்டுதான் தனியா இருந்தேன். ஆனா இப்போ எனக்கு அந்த தனிமை பிடிக்கல. என்னோடவே சீக்கிரம் வந்துடேன்’ என மனம் வலிக்க அவளைப் பார்த்தான்.

அவள் கண்களில் ஆசையை தேக்கி வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

***

அவளை பிரியமனமில்லாமல் ஸ்டேஷன் வரை சென்று விட்டுவிட்டு வந்தான் செழியன்.

அவள் சென்னை சென்றவுடன், அந்த விளக்கைப் பரிசோதித்துவிட்டு அது வேலை செய்யவில்லை என்று சொல்லிவிட, அவனுக்கு அதில் நம்பிக்கை இல்லை.

அடுத்தநாள் கல்லூரிக்கு எடுத்துச்சென்று, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மென்ட் மாணவர்களிடம் அதைப்பற்றி கேட்டான்.

அவர்களும் இன்டர்நெட்டின் உதவியுடன் அந்த விளக்கைப் பற்றி அவனிடம் சொன்னார்கள். அதுவும் நன்றாக வேலை பார்க்கும், பழுதெல்லாம் இல்லை என்று சொன்னார்கள். அவன் முகத்தில் புன்னகை… அவளின் செய்கையை நினைத்து.

அதில் வைஃபை கருவி பொருத்தாவிட்டால், சிக்னல் செல்லாது என்று சொன்னதும், அவன் அவள் பற்றி நினைப்பு வரும்போதெல்லாம் சிலசமயம் வைஃபை ஆன் செய்தும் சிலசமயம் செய்யாமலும் அதை உபயோகித்தான்.

பின் அவள் தந்த கப்ஸ்… அதில் இருந்த வரைபடம். கண்டிப்பாக அதிலும் ஏதாவது இருக்கும் என நினைத்தான்.

அதை படம் எடுத்து இன்டர்நெட்டில் உள்ள ஆர்டிஸ்ட்ஸ் (artists) குழுமத்தில் பதிவு செய்து, அதைப்பற்றி கேட்டபோதுதான் தெரிந்தது, அதில் இருந்தது ஆதாம், ஏவாள் என்றும், ஆண் குடிக்கும் கோப்பையில் ஏவாள் படமும், பெண் குடிப்பதில் ஆதாம் படமும் இருப்பதாக.

அந்த பதிலை படித்தவுடன், ‘ஐயோ இப்போது அவள் பக்கத்தில் இல்லையே’ என்று மனதில் தோன்ற, ‘இருந்தால் மட்டும் என்ன செய்துவிடுவாய்’ நங்கென்று மண்டைக்குள் குட்டியது அவன் மூளை.

‘அவளின் காதலை ஒவ்வொரு செயலிலும் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறாள்’ என நினைத்து மொபைலை எடுத்தான். அதில் அவள் படம். அவள் பார்க்காதபோது வளைகாப்பு நிகழ்ச்சியில் அவன் எடுத்தது.

அதை பட்டும் படாமல் தொட்டுப்பார்த்து, ‘சீக்கிரம் வந்துடேன் ப்ளீஸ். எங்க திரும்பினாலும் நீ என்கிட்ட பேசினது, நீ என்னை பார்த்தது, இதுமட்டும்தான் ஞாபகம் வருது’ என்று ஆசையாக சொன்னான்.

அவனுக்கு அவள் கண்கள் மீதும், அவள் குரலின் மீதும் எப்போதுமே ஒரு ஈர்ப்பு. அதுவும் அவனை நேருக்கு நேராக பார்க்கும்போது, கண்களில் ஏற்படும் மாறுதல், குரலில் காட்டும் ஆசை, அக்கறை என ஒவ்வொன்றையும் ரசித்தான்.

அவளுடன் கழித்த வெகுசில நிகழ்வுகளை நினைத்து காலத்தை ஓட்டினான்.

இப்போதெல்லாம் அவளிடம் கொஞ்சம் அதிகமாகவே பேச ஆரம்பித்தான், அதுவும் மெஸேஜில். அவளும் அவனுக்கு அழைத்தெல்லாம் பேசமாட்டாள். ஆனால் இருவரும் பேசும்விதமே மற்றவருக்கு நன்றாக புரிந்தது அது சாதாரணமான பேச்சில்லை என்பது.

நாட்கள் சீக்கிரம் நகர்ந்தது. ப்ரியா படித்து முடித்து வேலையில் சேர்ந்திருந்தாள். செழியனும் முதுகலை பட்டப்படிப்பு முடிக்க சில மாதங்கள் மட்டுமே இருந்தது. அப்போது ஒரு நாள், அவனை அவன் டிபார்மென்ட் ஹெச்ஓடி அழைத்திருந்தார்.

இதுவரை நடந்த தேர்வுகளின் மதிப்பெண் மற்றும் ப்ராஜெக்ட் முடிவுகள் பார்க்கும்போது, செழியன் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும், முதல் இடம் வந்த மாணவன் வெளிநாடு செல்லும் காரணத்தால், செழியனுக்கு ஒரு அரியவாய்ப்பு வந்துள்ளதாக சொன்னார்.

அவர் சொன்ன அந்த விஷயத்தை கேட்ட செழியனுக்கு அதிர்ச்சி… ஆச்சர்யம்.

இந்தியாவில் மிகவும் பெயர் பெற்ற அரசாங்க நிறுவனத்தின் உதவியுடன், அவர்களுடன் சேர்ந்து… முனைவர் பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான அழைப்பு அவனுக்கு விடுக்கப்பட்டிருந்தது.

‘அதுவும் முனைவர் பட்டம் பெற்றபின், அதே நிறுவனத்தில், பெரிய பதவியில் வேலை. சேர்வதும் சேராததும் அவன் முடிவே. ஆனால் கட்டாய முழு நேர முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் இறங்கவேண்டும். தற்போதுள்ள வேலையை விடவேண்டும்’ என்பது விதிமுறை.

செழியனுக்கு ஒருபுறம் மிகுந்த ஆசையாக இருந்தாலும், வேலையை விட்டுவிட்டு எப்படி என புரியவில்லை.

அவனுக்கு ஒரே குழப்பாக இருக்க, அவன் துறையில் அனைவரும் அவனிடம், “இதுபோல வாய்ப்பு கிடைப்பதெல்லாம் மிகவும் அரிது. எல்லோருக்கும் கிடைக்காது இது அவனின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம்” என்றனர்.

ஆஃபிஸில் அவனுடைய அதிகாரியை அழைத்து இதுகுறித்துப் பேசினான். ‘தன்னை சீக்கிரம் பணியில் இருந்து விடுவிக்கமுடியுமா?’ என்று செழியன் கேட்க, அதற்கு அவர், அவனைக் கான்ட்ராக்ட்டில் இருந்து விடுவிப்பது கடினம் என்றார்.

அவனுக்கு என்ன செய்வதென்று புரியாமல், உடனே அழைத்தான் ப்ரியாவை.

அவன் இருந்த மனநிலையில் என்ன பேசினோம் என்றெல்லாம் தெரியவில்லை. படபடப்புடன் அனைத்தும் கொட்டித்தீர்த்தான் அவளிடம்.

அவளும் அவனை சாந்தப்படுத்தி தெளிவாக பேச, அவனுக்கு கொஞ்சம் புரிந்தது என்ன செய்யலாம் என்று. மனம் கொஞ்சம் லேசாக, அவளிடம் சாதாரணமாக பேசிவிட்டு வைத்தான்.

பின் படிப்பு வேலை என நாட்கள் நகர, இறுதித் தேர்வுகள் முடிந்து, பல்கலைக்கழகத்தில் இரண்டாம் இடம் பெற்றான்.

மனம் அடுத்தநொடி ப்ரியாவை நினைத்தது.

‘அவளுக்காக என ஆரம்பித்த இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. என்ன, முனைவர் பட்டமும் படித்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்’ என நினைக்க, இப்போது அவனுக்கு வசந்தகாலம் போல, நினைத்ததெல்லாம் நடந்தது.

அவனுடைய ஆஃபீஸ் அதிகாரி அவனை அழைத்துப் பேசினார்.

ஐஐடி பாம்பேயில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவர், தங்களுடன் பேசியதாகவும், செழியனுக்குக் கிடைத்துள்ளது பெரிய வாய்ப்பு. அதை கருத்தில் கொண்டு அவனை விடுவிக்க மறுபரிசீலனை செய்யச்சொல்லி கேட்டார் என்று சொன்னார்.

பின், ‘செழியனை ஆஃபீஸ் பொறுப்பில் இருந்து விடுவிக்க நிர்வாகம் சம்மதம் தந்துவிட்டதாகவும், அவன் செய்துவந்த சிற்சில வேலைகள் அவன் செய்து தந்தால் உதவியாக இருக்கும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.

செழியனுக்கு சொல்லமுடியாத சந்தோஷம். அவருக்கு நன்றி கூறிவிட்டு, அன்றைய மாலையே புறப்பட்டான் சென்னைக்கு.

இந்த நல்ல விஷயத்தை ப்ரியாவிற்கு ஃபோனில் சொல்ல விருப்பமில்லாமல் நேரே சென்று சொல்லவேண்டும் என்ற ஆசை.

அடுத்தநாள் காலை காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை புறப்படலாம் என்றிருக்க, அவனை இன்னமும் இன்பத்தில் ஆழ்த்தியது அப்போது வந்த அழைப்பு. இந்துமதியிடம் இருந்து வந்திருந்தது.

அவள் கர்பமாக இருப்பதாக சொன்னவள், ‘இப்போது கொஞ்சம் வீட்டில் நிலைமை பரவாயில்லை, முன்புபோல இல்லை’ என்று சொன்னாள். தன் கணவன் தன்னை நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் சொன்னாள்.

அதைக்கேட்ட செழியனுக்கு மிகுந்த சந்தோஷம். அதே சந்தோஷத்துடன் சென்னை புறப்பட்டான் ப்ரியாவை பார்ப்பதற்கு.

அவள் அலுவலகத்திற்குச் சென்று அவளை அழைத்து கீழே வரச்சொன்னான். அவளின் திகைப்பு அவள் குரலிலேயே தெரிந்தது.

கடைசியாக வெண்பாவின் காதுகுத்து நிகழ்ச்சியில் பார்த்தது. தனியாக பேசும் தருணம் அப்போது அமையவில்லை. இப்போது பல மாதங்கள் கழித்து இருவரும் பார்க்கிறார்கள்.

அவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவனுக்கு எதிராக வந்துகொண்டிருந்தாள். முன்புபோல இல்லாமல் கொஞ்சம் பெரிய பெண்ணைப்போல தோற்றம்.

அழகான ஒரு குர்த்தி லெக்கின். காற்றுக்குப் பறக்கும் அவளின் முடி, அதை சிறைபிடிக்கப் போராடும் கரம், ஒப்பனையற்ற முகம், கொஞ்சம் அங்கங்கே எட்டிப்பார்த்த ஓரிரு பருக்கள், கண்கள் காட்டிய ஆச்சர்யம், எப்போதும்போல மேலுதட்டை சன்னமாக கடித்தபடி அவன் முன்னே வந்து நின்ற ப்ரியாவை… கேமராவை விட அதி வேகத்தில் மனதில் புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

அவள் கொஞ்சம் தட்டுத்தடுமாறி பேச, அதை ரசித்துக்கொண்டே பதிலளித்தான் அவள் கேட்ட கேள்விகளுக்கு.

பின் இருவரும் ஒரு உணவகத்திற்குச் செல்ல, அங்கே அவளுக்குத் தெரியாதவர் யாருமேயில்லை என்பதுபோல, அனைவரிடமும் கையசைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் அவனை அழைத்துச்சென்றாள்.

அவன் மனதில், ‘எனக்கு அப்படியே ஆப்போசிட்’ என்று நினைத்துக்கொண்டு அவளுடன் சென்றான்.

முன்பு இருந்த தடுமாற்றம் எல்லாம் போய், இப்போது பழைய துடுக்குத்தனம் மீண்டிருந்தது அவளிடம். அவனை கிண்டல் செய்துகொண்டு உணவு ஆர்டர் செய்தாள்.

பின் அவளிடம், சொல்லவேண்டும் என நினைத்ததை சொல்லவரும்போது, சாப்பிட வந்த ஒருவர் அவனை, ‘ப்ரியா அருகில் உட்கார்ந்துகொண்டு, இடம் தரமுடியுமா’ என கேட்க, ‘இதென்னடா சோதனை’ என்பதுபோல ப்ரியாவை பார்த்தான்.

அவள் அவனை அழைக்கவும், அவள் பக்கத்தில் உட்கார்ந்தவன், எவ்வளவு தள்ளி உட்கார நினைத்தாலும், அந்த இடத்தில் முடியாது போல.

அவள் இடது கை டேபிள் மேல் இருக்க, அதில் அவன் தந்த வாட்ச், அவனைப் பார்த்து அழகாக சிரிப்பதுபோல இருந்தது.

அவளின் கையை பற்றி தன் கைகளில் இருத்திக்கொள்ள அவன் மனம் படாதபாடு பட, “என்ன சொல்லணும் இளா…” என்ற அவள் குரல் அவனை தன்னிலைக்கு கொண்டு வந்தது.

அவன் தன்னை சமன் செய்துகொண்டு சொல்ல நினைக்கும்போது… சர்வர் அவளிடம், “என்ன ப்ரியா, பாய் ஃபிரண்டா?” என்று கேட்டவுடன், அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

மனது சில்லென்று இருக்க, ‘இப்போ பேசு’ என்பதுபோல அவன் டேபிளை பார்த்து புன்னகைத்தான். அவள் தடுமாறி சொந்தம் என்றாள்.

அவளின் தடுமாற்றம் அவனுக்கு குதூகலமாக இருந்தது. சர்வர் சென்றவுடன், அவன் ஆஃபிஸில் நடந்ததை சொல்லி, ‘படிக்கப்போகிறேன்’ என்று சொன்னவுடன் அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. பெருமை. அதை உள்வாங்கிக்கொண்டான்.

அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொருவன் வந்து அவளிடம் பேச, செழியன் அவனைப் பார்த்தான்.

ப்ரியா அவனை ரிஷி என்று அறிமுகம் செய்ய, பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஜெயம் ரவியை போல தெரிந்தான். வந்தவன் கண்கள் அவ்வப்போது ப்ரியாவை பார்த்து, பின் தன்னையும் பார்த்து, ஏதோ செய்தி சொல்வது புரிந்தது.

இத்தனைக்காலம் யாருடனும் அதிகம் பேசாமல், அவர்கள் கண்களை பார்த்து ஓரளவிற்கு மனதை படிக்கும் செழியனால், ரிஷியின் மனது கொஞ்சம் புரிந்தது. ரிஷி அவனிடம் காங்கிராட்ஸ் சொன்னதும், ‘நன்றி’ கூறினான்.

‘அவனுக்கு நமக்குள் இருக்கும் உறவு என்ன என்று தெரிகிறது, ஆனால் நாம் இன்னும் சொல்லிக்கொள்ளவில்லை’ என நினைத்து அவளைப் பார்க்க, அவள் கண்கள் படபடத்தது.

அவளின் அந்த படபடப்பை ரசித்தவாறு, வேண்டுமென்றே அவளை கேள்விகள் கேட்க, அவளும் தடுமாறி பதில் தந்தாள். அதைக்கேட்டு நன்றாக சிரித்தான்.

அவனைக் கண்கொட்டாமல் அவள் பார்த்திருக்க, ‘ரிஷி போல ஒருவனை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு என்னை ஏன் இவ்வளவு பிடித்துள்ளது இவளுக்கு? பார்ப்பதற்கு நான் ஒன்றும் பெரிய அழகனெல்லாம் இல்லை. சுமாரான குடும்பம். படிப்பு மட்டுமே என்னிடம் உள்ளதே தவிர வேறெதுவும் இல்லை. என்னவிதமான காதல் இவளுடையது?!’ என நினைக்க நினைக்க, அவன் மனம், மூளை அறிவுறுத்தியது ஒன்றே ஒன்று.

‘இவளை ஆயுள் முழுவதும் நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும். எதற்கும் வருத்தப்பட வைக்கக்கூடாது. அமைதியான அழகான அன்பான வாழ்க்கையை இவளுக்குத் தரவேண்டும். ஒருபோதும் தன்னை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று நினைக்க வைத்துவிடக்கூடாது’ என உறுதியெடுத்துக்கொண்டான்.

மனதில் நினைப்பதுபோலவே நடந்துவிட்டால் விதி என்ற ஒன்று எதற்கு! விதியின் ஆட்டம் அவன் வாழ்வில் மறுபடியும் ஆரம்பிக்கும்போது, நடக்கப்போவது என்ன? அவன் நினைத்ததா? இல்லை… பார்ப்போம்!

***

6
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved