தனிப்பெரும் துணையே – 18B
தனிப்பெரும் துணையே – 18B
செழியன் எதிர்வினை எதுவும் காட்டாமல், கண்களை மூடித்திறந்து மறுபடியும், “வேண்டாம் கலச்சுடலாம்” என்றான் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன்.
அதே ஆத்திரத்துடன், ப்ரியா அவன் மேலே போர்த்தியிருந்த டவலை கொத்தாக பிடித்தவாறு, “வெட்கமா இல்ல இதைச் சொல்ல? இப்போ சொல்ற… அப்போ எங்க போச்சு புத்தி?” அவள் கேட்க,
சில நொடி மௌனத்திற்கு பின், அவன் கண்களை மூடிக்கொண்டு, கொஞ்சம் தயங்கி, “நான்… நான் அப்போ… வேணும்னு கேட்கல” என்றவுடன், சேற்றை பூசி கொண்டதுபோல அருவருப்பாக உணர்ந்தாள் ப்ரியா.
அவனைப் பற்றியிருந்த கையை விடுவித்து, அடிபட்ட வலியுடன், எதுவும் சாப்பிடாமல் கிளம்பத் தயாரானாள் கல்லூரிக்கு.
மறுபடியும் அவள் முன்னே வந்தவன், “இது கைய மீறி போறதுக்குள்ள ஏதாச்சும் பண்ணணும். இதை சொல்ல எனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்” என்றான். ஆனால் அவனால் நேராக அவளைப் பார்த்துச் சொல்ல முடியவில்லை.
அவனைப் பார்த்து ஏளனமாக புன்னகைத்த ப்ரியா, “நீ சொன்ன மாதிரி இது என்னால உருவானதுதானே. நானே பார்த்துக்கறேன்” என்றாள்.
அவன் பட்ட துன்பம், மனதளவில் பட்ட காயங்கள், அவள் கண் முன்னே வந்து வந்து செல்ல, அவளால் அவனிடம் கடுமையாக பேச முடியவில்லை இதற்குமேல்.
மனது முழுவதும் அவன் பேசியதே ஓடிக்கொண்டிருந்தது. அவளால் துளியும் நம்ப முடியவில்லை பேசியது செழியனா என்று!
ஆனால் அவனுடைய சின்ன சின்ன அசைவுகள், கண்களில் தெரிந்த நொடிப்பொழுது சந்தோஷம், ‘அவன் ஏதோ மறைக்கிறான். கண்டிப்பாக இவ்வளவு கீழ்த்தரமாக பேசக்கூடியவன் இல்லை’ என்று மட்டும் புரிந்தது அவளுக்கு.
‘அவனை குறித்து தெரிந்துகொண்ட விஷயங்களை இப்போது சொல்வது சரியல்ல. முழுவதும் தெரிந்துகொள்ளவேண்டும். அந்த கடைசி டைரியை பார்த்தாக வேண்டும்’ என நினைத்து அவனுக்கு முன் கிளம்பினாள் கல்லூரிக்கு.
‘அவனுடனான வாழ்க்கை என எவ்வளவு கனவு கண்டேன். எல்லாம் தலைகீழாகிவிட்டதே. எப்படி நேர் செய்வது. யாரிடமும் சரியாக பேசாதவன், அவன் வாழ்க்கை குறித்து தன்னிடமே சொல்லாதவன் வேறு ஒருவரிடம் கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டான்’ என நம்பினாள்.
சிறிது நேரத்தில், ‘அவன் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டான்’ என்று தெரிந்ததும், மறுபடியும் வீட்டிற்குச் சென்றாள்.
படிக்கும் அறையில் பார்க்க, அங்கு டைரி இல்லை. பின் அவன் படுக்கையில், தலையணை அடியில் என பார்க்க, அங்கே இருந்தது டைரி. பக்கத்தில் ஒரு டிரஸ். அது ப்ரியாவின் டிரஸ்.
அதன் பொருள் புரிந்து, பழைய நினைவுகள் எல்லாம் அவளை தாக்க, கண்களில் கண்ணீர்.
‘ஏன் இளா, என்ன ஆச்சு உனக்கு? என்கிட்ட என்ன மறைக்க நினைக்கற?’ மனம் முழுவதும் வலியுடன், ‘இன்னும் என்னென்ன தனக்கு காத்திருக்கிறதோ!’ என்ற பயத்துடன், அவன் டைரியை எடுத்தாள்.
அவனுடைய நடந்து முடிந்த நிகழ்வுகளின் குறிப்புக்களுடன், தன் நினைவுகளையும் இப்போது சேர்த்து, படிக்க ஆரம்பித்தாள்.
***
திருமண தேதி குறித்த பின், செழியன் மனது உழன்று கொண்டே இருந்தது.
‘அதெப்படி தந்தை அந்த அமெரிக்கா மாப்பிள்ளையுடன் தன்னை சேர்த்துப் பேசலாம்? அவனும் நானும் ஒன்றா? என் படிப்பென்ன? சொந்த உழைப்பால் இதுவரை வந்துள்ள நானும் அவனும் ஒன்றா? இசை என் வாழ்வில் வருவதற்கு நான் எடுத்த சிரத்தைகள் என்னென்ன? கஷ்டங்கள் என்னென்ன!’
‘என்னால் முடியாது என்று அவர் எப்படி நினைக்க முடியும்? நான் நினைத்தால், புகழ்பெற்ற பல நிறுவனங்களில் வேலைக்குச் சேர முடியும். இந்தியாவிலோ இல்லை வெளிநாட்டிலோ, அவனை விட பல மடங்கு சம்பாதிக்க முடியும். நான் செய்யும் ஆராய்ச்சி குறித்து என்ன தெரியும் இவர்களுக்கு?’
‘இந்திய டிஃபென்ஸ்ஸில் (defence) மிக முக்கிய பதவியில் இருக்கும் விஞ்ஞானியுடன் நேரடியாக வேலை பார்க்கிறேன். ஆராய்ச்சி முடிந்தவுடன், எனக்கு கீழ் சில பேர் வேலை பார்க்கப்போகிறார்கள். அவ்வளவு சாதாரணமானவன் ஆகிவிட்டேனா நான்!’
‘இசை பிறந்தநாள் பரிசுக்காக நான் செய்த ப்ராஜக்ட், அதன் மதிப்பு தெரியுமா இவர்களுக்கு? என்னுடைய பேராசிரியருக்கே, அது குறித்து அதிகம் தெரியாது. ஆனால், அதை நான் வெற்றிகரமாக செய்து முடித்தேன். என்னை அத்தனை பேர் முன் தலை குனிய வைத்துவிட்டாரே!’
அவன் மனதில் பல வாதங்கள். கோபம், ஆற்றாமை. ஆனால் இது அனைத்தையும் தாண்டி மனதின் ஒரு மூலையில் ஒரு நிறைவு. அது, ‘இசைப்ரியா! இனி தன் வாழ்வில், மனைவியாக!’ என நினைத்து.
‘பெரிய பதவியில் உட்கார்ந்து, இப்போது பார்த்தீர்களா என் நிலையை!’ என்று மார்தட்டி சொல்ல வேண்டும் என நினைத்தான்.
அந்த இலக்கை அடைந்த பின் மனமார, ‘உனக்காகதான் இதை செய்தேன். நீ என் வாழ்வில் வரவேண்டும் என்றுதான் இதை செய்தேன்’ என சொல்லி, காதலை ப்ரியாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
‘மனதில் அனைத்தையும் புதைத்துக் கொள்வது புதிதல்ல. கொஞ்ச நாள் ப்ரியா மீதுள்ள தன் ஆசை, காதல் அனைத்தையும் மனதின் உள்ளேயே வைத்துக் கொள்ளவேண்டும்’ எனவும் எண்ணிக்கொண்டான்.
‘ப்ரியா உடனான திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது, பணம் நிறைய தேவைப்படும். யார் உதவியும் வேண்டாம். பெறவும் கூடாது’ என நினைத்து, சிற்சில முதலீடுகளும் செய்தான்.
அதிகம் மனம் விட்டு யாருடனும் பேசாமல், திருமணம் வரை வந்தாயிற்று. இதோ இப்போது, அவன் பக்கத்தில் அவள். இன்னும் சில நிமிடங்களில் அவன் மனைவி.
அதே எண்ணம் ப்ரியாவினுள். ஆசையாக செழியனை பார்த்தாள்.
ஒன்றாக வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து பல ஆயிரம் கனவுகளுடன், இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
சடங்குகள் சம்பிரதாயங்கள் முடிந்து, செழியனின் காஞ்சிபுரம் வீட்டிற்கு வந்தடைந்தனர்.
அன்றைய இரவு லட்சுமி மற்றும் ஜெயராமனை அழைத்துக்கொண்டு ஸ்வாமிநாதன், தன் தம்பி விஸ்வநாதன் வீட்டிற்குச் சென்றுவிட, அகிலனும் கவிதாவும், செழியன் ப்ரியாவுடன் அங்கேயே தங்கினர்.
செழியன் இரவு உணவு முடித்தவுடனே மேலே ஒற்றை அறைக்குச் சென்றுவிட்டான்.
ப்ரியா சிறிதுநேரம் கழித்து மேலே சென்றாள்.
மனதில் ஒரு சின்ன படபடப்பு. அதிலும் அந்த புடவை. ‘இதை ஏன் அண்ணி கட்டிவிட்டார்கள். படியில் ஏறக்கூட முடியவில்லையே’ என தட்டுத் தடுமாறி மேலே சென்றாள்.
அங்கே செழியன் அவன் அறையில் மும்பையிலிருந்து கொண்டுவந்திருந்த பழைய புத்தகங்கள், டைரிகளை அலமாரியில் அடுக்கிக்கொண்டிருந்தான்.
‘இன்று எதற்கு இந்த முதலிரவெல்லாம்? அனைத்தும் படித்து முடித்து பார்த்துக்கொள்ளலாமே. இசை வந்தவுடன் பேசவேண்டும்’ என நினைத்து, வேலையில் கவனம் செலுத்தினான்.
ப்ரியா ஒருகையில் புடவையை தூக்கி பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் தண்ணீர் பாட்டிலுடன், “இதை பிடி இளா” என்று கத்த, என்னமோ ஏதோ என்று பதறி வெளியே வந்த செழியன், அவள் நின்றதைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவளிடம் பாட்டிலை வாங்கிக்கொண்டான்.
படியேறும் போது புடவையை மிதித்திருப்பாள் போல.
‘புடவையெல்லாம் எதற்கு? உனக்குதான் அது சரிவராதே’ புன்னகையுடன் மனதில் கவிதா திருமணத்தின் போது அவளைப் பார்த்தது வந்து சென்றது.
அவன் தன்னையே பார்ப்பது புரிய, இப்போது இரண்டு கைகளாலும் புடவையை பிடித்துக்கொண்டு, “வாஷ் ரூம் போய் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வந்துடறேன். டூ மினிட்ஸ்” என்று விட்டு அவன் கண்ணில் அதற்கு மேல் படாமல் ஓடிவிட்டாள்.
‘இதுதான் வெட்கமோ?! அடக் கடவுளே. இதுவரை எவ்ளோ நாள் அவன் கூட இருந்திருக்கேன். இன்னைக்கு என்னென்னமோ தோணுதே. ப்ரியா, கண்ட்ரோல். எல்லாம் படிச்சு முடிச்சப்புறம்தான்’ தனக்குதானே புன்னகைத்துக் கொண்டு வெளியே வர, அந்த மொட்டை மாடியில் காற்று சில்லென்று வீசியது.
உள்ளே அவனை எதிர்கொள்ள கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அங்கிருந்த தடுப்பில் சாய்ந்தபடி நிற்க, சில நிமிடங்களில் அவளை தேடி அவன் வெளியே வந்தான்.
அந்த சிறிய விளக்கு ஒளியில், அவளுடைய சின்ன சின்ன ஆபரணங்கள் மின்ன, எப்போதும் போல மேலுதட்டை மெலிதாக கடித்தபடி நின்றுகொண்டிருந்தாள். அவன் மனதில் சின்ன தடுமாற்றம்.
அவன் வெளியே வருவதை பார்த்த ப்ரியா, அவனைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள். அவள் மனதில் சின்ன படபடப்பு.
அவள் பக்கத்தில் அவன் நின்றவுடன், இருவரிடத்திலும் கொஞ்ச நேரம் மௌனம். அந்த மௌனத்தைக் கலைத்தாள் ப்ரியா.
“கனவு போல இருக்கு இளா. எல்லாம் எவ்ளோ சீக்கிரம் நடந்து முடிஞ்சிடுச்சில்ல” அவள் சொன்னதும் புன்னகைத்தான் செழியன்.
அவன் மேலே அவள் சாய்ந்துகொள்ள, அவள் கையை அவன் பற்றிக்கொண்டான்.
காற்று கொஞ்சம் பலமாக வீச, “இசை காத்து ஒரு மாதிரி இருக்கு. சளி பிடிச்சுடும். வா உள்ள போலாம்” அவன் அழைத்தவுடன், அவன் கையை அவள் இறுக பற்றிக்கொண்டாள் வேண்டாம் என்பதுபோல.
“நல்லா இருக்கு இளா. காலைல இருந்து அது இதுன்னு ஒரே தொல்லை. இப்போதான் நிம்மதியா மூச்சு கூட விட முடியுது” என்றாள் காற்றை ரசித்தபடி. அவன் அவளை ரசித்தபடி நின்றிருந்தான்.
வானம் சின்ன சின்ன தூறல்களைத் தூவ, ப்ரியா அவன் கையை விட்டுவிட்டு கொஞ்சம் தள்ளிச்சென்று, “வாவ்… மழை பெய்யப்போகுது” என்றாள் வானத்தைப் பார்த்து. அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி அவனையும் தொற்றிக்கொண்டது.
இப்போது பலத்த காற்றுடன், தூறல் அதிகமாக, காற்றுக்கு ஏற்றாற்போல அவள் புடவையும் அங்கும் இங்கும் அசைந்தது.
“உள்ள போலாம் இசை” என்றான் மறுபடியும். காதில் விழாதது போல இருந்தாள் அவள். அவன் கண்கள், அவன் போட்டுக்கொண்ட எல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக மீற, ‘ஐயோ கேட்க மாட்டேங்கறாளே’ என உடனே முகத்தை திருப்பிக் கொண்டான்.
திடீரென பெருத்த மழை ஆரம்பித்தது.
“வா இசை, போதும். மழை ஆரம்பிச்சிடுச்சு” என அவள் கைப்பற்றி கொஞ்சம் பலத்துடன் இழுக்க, அதை எதிர்பார்க்காத ப்ரியா அவன் மேலே மோதி விழப்போக, அவள் விழாமல் இருப்பதற்கு, அவள் இடை சுற்றி பற்றிக்கொண்டான்.
“ஹே பார்த்து” என முடிக்கவில்லை மழை பலமாக கொட்ட ஆரம்பித்தது. இருவரும் முற்றிலுமாக நனைந்தனர். அவன் கை பட்ட இடம் அந்த மழையிலும் சிலிர்த்தது அவளுக்கு.
இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டது.
ப்ரியா கண்கள் அகல, கொஞ்சம் பதட்டத்துடன் மேல் உதட்டை மறுபடியும் சின்னதாக கடித்தபடி பார்க்க, அவன் அவனுக்கே போட்டுக்கொண்ட கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பித்தது.
அவள் கண்களில் இப்போது பல பரிமாணங்களை பார்த்தான் செழியன்.
அவனின் ஒரு கை அவள் இடை சுற்றியிருக்க, மற்றொரு கையால் அவள் கன்னத்தை பற்றி, பெருவிரலால் கன்னத்தில் இருந்த மழைநீரில் கோலமிட்டான். ப்ரியாவின் கண்கள் படபடத்தது.
பின் அவளது மேல் உதட்டை மெல்ல வருடி அதற்கு விடுதலை தர, அந்த தொடுகையில் ப்ரியாவின் உடல் முழுவதும் சிலிர்த்தது.
அவள் கண்களில் அடுத்தென்ன என்ற ஆர்வம் தெரிந்ததோ அவனுக்கு?!
மெதுவாக அவள் இதழருகே அவன் குனிந்தவுடன், அவனின் அந்த மூச்சுக்காற்றில் முற்றிலுமாக தடுமாறினாள் ப்ரியா.
அவளறியாமல் அவள் கண்கள் மூட, அவள் இதழ்களை அவனிதழ் கொண்டு இணைக்கும் நேரம், சிவபூஜையில் கரடியாய் இடி இடித்தது!
அதில் தன்னிலைக்கு வந்த இருவரும் அசடு வழிந்து சட்டென விலகினர்.
***