தனிப்பெரும் துணையே – 21

தனிப்பெரும் துணையே – 21

அவள் சிவாவை பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போதே செழியன் முகம் மாற ஆரம்பித்தது.

அவள் சொல்லி முடிக்க, செழியன் கையில் இருந்த விளக்குமாறு நழுவி கீழே விழுந்தது. அவன் முகம் முற்றிலுமாக மாறிப் போக, அதில் அவ்வளவு கோபம். அதே கோபத்துடன் அவளை நெருங்கினான்.

அவன் முகமாற்றம் ப்ரியாவை அதிரச்செய்தது. அவளுக்கு புரியவும் இல்லை எதற்காக இந்த கோபம் என.

“இன்னொரு தடவை அவனைப் பத்தி என்கிட்ட சொன்னன்னா, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது இசை. அவன் அவ்ளோ பெரிய ஆளா இருந்தா, என்னை ஏன்?” என்றவன் ஒரு நொடி நிறுத்தினான், ‘என்ன சொல்ல வந்தோம்’ என நினைத்து.

‘என்னை ஏன் கல்யாணம் பண்ணிட்ட’ கண்டிப்பாக இந்த வார்த்தை அவளுக்கு மனவேதனை தரும் என்று தெரியும். அதனால் நிறுத்தினான்.

ப்ரியா அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவன் சொன்னது எதுவும் அவள் செவி வரை செல்லவில்லை. தன் துறையில் வேலை செய்பவன் என்ற எண்ணத்தில்தான் பகிர்ந்து கொண்டாள்.

அவன் மேல் செழியனுக்கு இவ்வளவு கோபம் இருக்கும் என்று அவள் துளியும் நினைத்திருக்கவில்லை. செழியனும் அதை அவளிடம் இதுவரை நேராகச் சொன்னதில்லை.

அவள் அமைதியாக இருக்க, செழியன், “என்ன சான்ஸே இல்ல? அவ்ளோ பெரிய ஆளா அவன்? இல்ல, என்னை நீ மட்டமா நெனச்சுட்டு இருக்கயா இசை?”

ப்ரியா அவன் மனநிலை புரிந்து பேச வர, அவளை கைகாட்டி நிறுத்திய செழியன், “இல்ல, தெரியாமதான் கேட்கறேன்… என்னை பத்தி நீ என்னை நெனச்சுட்டு இருக்க? என் ரிசர்ச் ப்ராஜக்ட் மதிப்பு தெரியுமா உனக்கு? இதுமட்டும் நான் முடிச்சேன்னா எனக்கு எங்கிருந்தெல்லாம் ஆஃபர் வரும்னு தெரியுமா உனக்கு? என்னோட ரிசர்ச் பப்ளிஷ் பண்ண எவ்ளோ ஜர்னல்ஸ் (journals) வெயிட் பண்றாங்கன்னு தெரியுமா உனக்கு? என்னமோ அவன் சான்ஸே இல்லன்னு சொல்ற? எனக்கு சமமா அவன் வருவானா?” என அடுக்கிக்கொண்டே போக, ப்ரியா மலைத்து நின்றுவிட்டாள்.

“இதுவே லாஸ்ட் டைமா வச்சுக்கோ இசை. இனிமே அவனைப் பத்தி என்கிட்ட பேசின…” விரல் நீட்டி எச்சரித்துவிட்டு உள்ளறைக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டான்.

ப்ரியா சுவரில் சாய்ந்து அப்படியே நின்றிருந்தாள். அவள் மனதில் ஒரே ஒரு கேள்வி, ‘பேசியது இளாவா?’ என்பதுதான்.

நிச்சயமாக அவள் நினைக்கவில்லை சிவா மீது இவ்வளவு கோபம் அவனுக்கு இருக்குமென. தெரிந்திருந்தால் பேசியிருக்கவே மாட்டாள்.

அவளே அவனைக் காயப்படுத்த நினைப்பாளா? இதுவரை தன்னுடன் படிப்பவர்கள், தன் துறையில் ஆராய்ச்சி செய்பவர்கள் குறித்தெல்லாம் அவனிடம் பேசியிருக்கிறாள். அப்போதெல்லாம் இதுபோல அவன் நடந்துகொள்ளவில்லை.

இது அனைத்துக்கும் காரணம், ‘வீட்டில் திருமணத்திற்கு முன் நடந்த பேச்சுவார்த்தை. அது அவனை வெகுவாக பாதித்துள்ளது’ என புரிந்து, உள்ளறை கதவை தட்டிப்பார்த்தாள் திறக்கவில்லை.

“இளா டோர் ஓபன் பண்ணு” மறுபடியும் அவள் தட்ட, அவன் திறக்கவில்லை.

உள்ளே செழியனுக்குத் தலை வெட்டுவதுபோல உணர்வு. உள்ளே சென்ற வேகத்தில் கையை ஓங்கி சுவரில் அடித்தான். அது வலித்தது. மனதில் ஏற்பட்ட வலிக்கு இது மருந்தாக இருப்பது போல ஒரு உணர்வு. மனதின் வலியை மறைக்க இது தேவை என்று தோன்றியது.

அப்போது சரியாக ப்ரியா கதவை தட்ட, கதவருகில் சென்ற செழியன், “என்னை கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாத இசை. ஐ நீட் ஸம் டைம். ப்ளீஸ் லீவ் மீ அலோன். இல்ல நான் வீட்டை விட்டு வெளிய போகவா?” அந்த கடைசி வாக்கியம் சொன்னவுடன் கதவு தட்டப்படும் சத்தம் நின்றது.

தலையை சாய்த்தபடி ஆர்ம் சேரில் உட்கார்ந்தவன் கண்களை மூடிக்கொள்ள, உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருந்தது.

வெளியே ப்ரியா அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டவுடன், கண்களில் கண்ணீர் வர பார்த்தது. ‘தான் பேசியது அவ்வளவு பெரிய தவறா? இவ்வளவு கோபப்படும் அளவிற்கு?’ என்று தோன்றியது.

சமையல் முடிந்திருக்க, அதை அப்படியே வைத்துவிட்டு, படுக்கையில் படுத்தாள். மனம் ஒரு நிலையில் இல்லை. முதல் சண்டை இருவருக்கிடையில்.

‘நேற்று இரவு, அவனுடன் எவ்வளவு சந்தோஷத்துடன் களித்தோம். தான் பேசியது தவறாகவே இருக்கட்டும்… அதற்கு இவ்வளவு கோபப்படவேண்டுமா?’ கண்களில் கண்ணீர் கோர்க்க கண்களை மூடினாள்.

கண்ணீர் ஒருபக்கம், பசி ஒருபக்கம், மனவருத்தம் ஒருபக்கம் என இருந்தவள், அப்படியே உறங்கிவிட்டாள்.

அங்கே செழியன், சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தான். உள்ளே பாத்ரூம் இருப்பதால், ‘அவளுக்கு தேவைப்படும்’ என நினைத்து, கதவை திறந்து வைத்துவிட்டு, கோபத்தை வேலையில் திருப்பினான்.

இந்த சில நாட்களாக கல்லூரி ப்ராஜக்ட் ஒன்று கிடைத்திருக்க, அதைதான் செய்துகொண்டிருந்தான்.

தூக்கம் என்பதே இல்லாமல் தொடர்ந்து வேலை செய்த செழியன், முந்தைய இரவு மட்டுமே நன்றாக உறங்கினான். அதுவும் ப்ரியா பக்கத்தில் இருந்ததால்.

இன்று மறுபடியும் உட்கார்ந்தான் வேலை செய்ய, ஆனால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. எப்பொழுதும் எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட கொஞ்சம் அதிகம் தேவைப்பட்டது சில நாட்களாக.

அவன் வேலையில் இருக்க, தூக்கம் தடைபட்ட ப்ரியா உள்ளே வந்தாள். அவன் திரும்பவில்லை.

‘மறுபடியும் இரவு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டானே’ என நினைத்து, “போதும் இளா வந்து படு” என்றாள்.

பதில் வரவில்லை அவனிடம். “இப்படி இருக்காத. என்மேலதான் தப்பு. ஸாரி… வா, ரொம்ப தலை வலிக்குது இளா” கிட்டத்தட்ட கெஞ்சினாள்.

வேலை செய்துகொண்டே தலைவலி தைலத்தை அவள் பார்க்கும் படி வைத்தான். அவளால் தாங்க முடியவில்லை இந்த புறக்கணிப்பு. மனதில் வலி. அமைதியாக சென்றுவிட்டாள்.

அவன் மனதிலோ, ‘இத்தனை நாள் போட்டுவிட்டேனே. ஒரு நாள் அவளே போட்டுகொண்டால் என்னவாம்’ என்று கோபம் வந்தாலும், எப்போதும் வாய் பேசுபவள் இன்று அமைதியாக சென்றவுடன், ஒரு சின்ன உறுத்தல்.

சிறிது நேரம் கழித்து சென்ற செழியன், அவள் படுத்திருப்பதை பார்த்து, அவளுக்கு தைலம் தேய்த்துவிட, ப்ரியா கண்களில் கண்ணீருடன் பார்த்தாள் அவனை.

அவன் அவளைப் பார்ப்பதை தவிர்த்தான். ‘பார்த்தால், கண்டிப்பாக அவள் கண்களை எதிர்கொள்ள முடியாது. ஏதாவது இன்னமும் பேசிவிட்டால் வருத்தம்தான்’ என நினைத்து தைலம் தேய்த்த பின் எழ, ப்ரியா அவன் கைப்பற்றி தடுத்தாள்.

“இங்கயே இரு இளா” அந்த குரலே அவனை உலுக்கியது. ‘ஐயோ அவளைக் கஷ்டப்படுத்துகிறோமே’ என்று மனம் வருந்தினாலும், ‘சிவாவை பற்றி உயர்வாக பேசியது’ மூளையில் பளிச்சிட, அவளிடமிருந்து கைகளை விடுவித்துக்கொண்டு எதுவும் பேசாமல் மறுபடியும் உள்ளே சென்றுவிட்டான்.

‘இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?’ என்று அவன் மனம் அறிவுறுத்த, ‘இது தன்மானம் சம்பந்தப்பட்டது’ என்று வாதாடியது மூளை.

சிவா என்று நினைக்கும்போது மண்டைக்குள் இடி இடிப்பது போல் உணர்வு. ப்ரியாவின் கலங்கிய குரல் எதிரொலிக்க, மனதில் சொல்ல முடியாத ஒரு அழுத்தம்.

மூளை, இதயம் இரண்டும் ஒரே சமயம் செயல் இழந்தது போல ஒரு வலி அவனுள்.

இங்கே ப்ரியாவிற்கு கண்களில் கண்ணீர் நின்றபாடில்லை.

அன்றைய இரவு தூங்கா இரவாக இருவரும் கழிக்க, அடுத்தநாள் செழியன் சாதாரணமாக சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தான். இரவு தூங்காததால், ப்ரியாவால் சுத்தமாக எழக்கூட முடியவில்லை. இருந்தும் எழுந்தாள்.

‘இவனுக்கு சோர்வே இருக்காதா? துளியும் தூங்கவில்லை. இருந்தும் இவ்வளவு சுறுசுறுப்புடன் இருக்கிறானே’ என்று நினைத்தபடி, காலை வேலைகளை ஆரம்பித்தாள்.

அது முடித்து அவள் வர, மதிய சமையல் மட்டும் செய்திருந்த செழியன், “மார்னிங்க்கும் சாப்பாடே செய்துட்டேன். எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன். தனியா வராத. ஆட்டோ எடுத்துக்கோ” வேறெதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

ப்ரியாவிற்கு அதிர்ச்சி. இன்னமும் அவனுக்கு கோபம் தீரவில்லையா? என.

அவள் கோபமெல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே. அதுவும் சம்மந்தப்பட்டவர் வந்து பேசிவிட்டால், எதுவும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பேசுவாள்.

செழியன் இப்படி இருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு கிளம்பினாள் கல்லூரிக்கு.

அன்று வேலை இருப்பதாக சொல்லி மதிய உணவு சேர்ந்து உண்பதைத் தவிர்த்தான். மாலையும் அதையே சொல்லி அவளை கிளம்பச்சொன்னான்.

ப்ரியாவிற்கு கடுப்பாக வந்தது. இப்படி பேசாமல் இருப்பதெல்லாம் சுத்தமாக சரி வராது அவளுக்கு.

அவள் வீடு வந்து சேர, பக்கத்து வீட்டு பெண் அவளுக்காக காத்திருந்தாள்.

இந்த சில நாட்களாக ப்ரியா பக்கத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தாள்.

ப்ரியாவை பார்த்ததும் அந்த பெண்மணி, ‘தன் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்’ என்று சொல்லி, ப்ரியாவை அழைத்தாள்.

‘தனக்கும் மனதில் ஒரு மாறுதல் வேண்டும்’ என நினைத்து ரெஃப்ரெஷ் ஆன பின் அவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டாள் ப்ரியா.

இரவு நேரம் ஆனபோது செழியன் வீடு வந்து சேர, வீடு வெறுமனே மூடியிருந்தது. உள்ளே சென்று பார்க்க, ப்ரியா இல்லை.

‘எங்கே சென்றாள்?’ யோசித்தபடி உடைமாற்றிக்கொண்டு அவளை மொபைலில் அழைக்க, அழைப்பு எடுக்கப்படவில்லை. செழியனுக்குள் ஒரு சின்ன பதட்டம்.

‘எங்கே சென்றிருப்பாள்? கீழே ஸ்டோர் சென்றிருப்பாளோ? ஒருவேளை இன்னமும் கல்லூரியிலேயே இருக்கிறாளோ? தனக்காக காத்திருக்கிறாளோ? என்ன மடத்தனம் செய்தேன்” அதே பதட்டத்துடன் அவசரமாக உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தான். ப்ரியா எதிர் வீட்டில் இருந்து பேசிக்கொண்டே வெளியே வந்தாள்.

அதைப் பார்த்ததும் அவன் அமைதியாக உள்ளே சென்றுவிட்டான்.

செழியனைப் பார்த்ததும் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டினுள் வர, “உன் மொபைல் எங்க?” என்று கேட்டான்.

அவளுக்கு அப்போதுதான் உறைத்தது அது அவள் பையிலேயே இருக்கிறது என்று.

“ஓ! பேக்ல இருந்து எடுக்கவே இல்லை” என்று சொல்லிக்கொண்டே மொபைலை அவள் எடுக்க, “உனக்கெல்லாம் அறிவே இல்லையா?” கிட்டத்தட்ட கத்தினான் செழியன்.

ப்ரியா அதிர்ந்து அவனைப் பார்க்க, “எங்கயோ போ. யார் வீட்டுக்கும் போ. ஆனா போறப்ப ஃபோன் எடுத்துட்டு போக வேண்டியதுதானே? பயந்துட்டேன்” என்றான் தலையில் கை வைத்து உட்கார்ந்தபடி.

“ஐயோ ஸாரி இளா. அவங்க பர்த்டேன்னு கூப்பிட்டாங்க. எனக்கும் கொஞ்சம் மூட் சேன்ஞ் ஆகுமேன்னு போய்ட்டு வந்தேன்” சொல்லிக்கொண்டே அவன் கையை பற்றி அவன் அருகில் உட்கார்ந்தாள்.

அவள் சொன்னதில் ஏதோ ஒன்று அவனை தாக்க, அவன் கையை உருவிக்கொண்டு, “நீ எனக்காக காலேஜ்ல வெயிட் பண்ணிட்டு இருக்க. உன்ன விட்டுட்டு வந்துட்டோமேன்னு பயந்துட்டேன்” என்றவன் நிறுத்தி…

“ப்ச் சரி, எனக்கு ப்ராஜக்ட் டெலிவரி டெட்லைன் கிட்ட வந்துடுச்சு. என்னை டிஸ்டர்ப் பண்ணாத. நீ ஒழுங்கா சாப்பிட்டு தூங்கு. நீ சாப்பிடலன்னா… நானும் நைட் சாப்பிட மாட்டேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

‘ஏன் எல்லாம் தப்பாகவே நடக்கிறது’ என்று ப்ரியாவின் மனம் உழன்று கொண்டிருக்க, செழியன் போன வேகத்தில் திரும்பி வந்தான்.

அவன் கையில் சில பேப்பர்ஸ். அதை அவளிடம் கொடுக்க, ப்ரியா புரியாமல் வாங்கிப் பார்த்தாள். அது ஏதோ லெட்டர் போல இருந்தது.

“இது யுகேல டாப் மெக்கானிக்கல் ரிலேடட் ஜர்னல்ல இருந்து வந்த லெட்டர். நான் செய்ற ரிசர்ச் பேபர்ஸ் பப்ளிஷ் பண்ண சொல்லி அவங்க அனுப்பினது. அதோட வேல்யூ, அதுல போட்ருக்குப் பாரு. ஏதோ அந்த சிவாதான் பெரிய ஆளுன்னு சொன்ன?” என்று சொல்லி அவன் நிறுத்த, ‘மறுபடியுமா’ என்று இருந்தது ப்ரியாவிற்கு.

அவள் அவனையே பார்க்க, “இதெல்லாம் தெரிஞ்சுக்க உனக்கெங்க ஆர்வம்? அந்த சிவாதானே உனக்கு பெருசு” இதை சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான். ஆனால் ப்ரியா அப்படியே உட்கார்ந்திருந்தாள். மனதில் சொல்ல முடியாத வலி.

‘இதை எப்படி சரிசெய்வது? இதேபோல இன்னும் எத்தனை நாள் சண்டை வாக்குவாதம் செய்ய முடியும்? இதற்கு ஒரே தீர்வு, சமாதானம்’ ஏதோ ஒன்று மனதில் பளிச்சிட, அதை செய்ய முடிவெடுத்தாள்.

2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved