தனிப்பெரும் துணையே – 28
தனிப்பெரும் துணையே – Prefinal
மன வருத்தத்துடன் இருந்த ஸ்வாமிநாதன், “முன்னாடிலாம் தெரியல. பசங்களுக்கு எல்லாம் செய்யணும் அப்படிங்கறது மட்டும்தான் மனசுல இருந்துச்சு. ஆனா வயசாக ஆகதான் தெரியுது வாழ்க்கைல நான் எவ்ளோ இழந்துருக்கேன்னு. இதோ வெண்பா குட்டிகூட விளையாடறப்ப தோணுது உங்ககூட நான் இப்படிலாம் இருந்தது இல்லையேன்னு. காலம் கடந்த புரிதல்” மனம் நொந்து பேசினார்.
அவரை செழியன் தேற்றினான். அவன் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியது போல ஒரு உணர்வு இப்போது. அவன் கண்கள் ப்ரியாவை பார்த்தது. அதுவரை அவனையே பார்த்த ப்ரியா, அவன் பார்த்தவுடன் பார்வையை வேறுபக்கம் மாற்றினாள்.
வெண்பா இவர்கள் பேச ஆரம்பித்தபோதே தூங்கிவிட்டாள்.
அங்கு ஒரு கனமான சூழ்நிலை நிலவ, ப்ரியா அதை மாற்ற எண்ணி, “மதிய சாப்பாடு சாப்பிட யாருக்கும் ஐடியா இல்லையா. சமைக்கணுமே” என்றதும், கவிதா கண்களை துடைத்துக்கொண்டு “ஆமா நீ ரெஸ்ட் எடு ப்ரியா. நான் சமைக்கறேன்” என்று எழுந்தாள்.
“அண்ணி அண்ணி… இருங்க. இன்னைக்கு உங்களுக்கும் எனக்கும் லீவ்” என்றதும் அனைவரும் ப்ரியாவை பார்க்க, செழியன், “வெளி சாப்பாடு வேணாம் இசை, இந்த டைம்ல” என்றான் கண்டிப்புடன்.
‘பார்ரா அதை யாரு சொல்றதுன்னு’ என மனதில் நினைத்து அவனை முறைத்தவாறு, “எதுக்கு வெளிய? அதுதான் நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே. போய் சூப்பர் சாப்பாடு செய்வீங்களாம்” அகிலனையும் செழியனையும் பார்த்து சொன்னவள், “என்ன அண்ணி ஒகேதானே?” என்றாள் கண்ணடித்து.
“சூப்பர்… டபுள் ஒகே” என்றாள் கவிதா சிரிப்பை அடக்கிக்கொண்டு. ஸ்வாமிநாதன் முகத்தில் இப்போது சின்ன புன்னகை.
அகிலன், செழியன் ஒருசேர ப்ரியாவை பார்த்து முறைத்ததும், “சாதம், சாம்பார், பொரியல் போதும். அப்புறம் சாம்பார் நைட்கும் சேர்த்து வச்சுடுங்க, தோசைக்குத் தனியா சைட் டிஷ் செய்யவேண்டாம் பாருங்க” எது எவ்வளவு செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிட்டாள் ப்ரியா.
செழியனுக்கு இப்போது சிரிப்பு வந்துவிட்டது. “நீங்க இருங்க நான் பண்ணிடறேன்” என்று அகிலனிடம் சொல்லிக்கொண்டே அவன் எழ, “இல்ல இல்ல இருக்கட்டும். இன்னைக்கு நம்ம திறமையை காட்டவேண்டியதுதான்” என்று அகிலனும் எழுந்தான்.
செழியனுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது, அகிலனுடன் சேர்ந்து செய்யவேண்டும் என நினைத்து. ஆனால் அகிலன் சகஜமாக பேசிக்கொண்டே இருந்தான். செழியன் அதிகம் பேசவில்லை, இருப்பினும் முன்பு போல அமைதியாகவும் இல்லை. ஓரளவிற்கு பேசினான்.
இங்கு கவிதாவும் ப்ரியாவும் வெளியில் இருந்தவாறே, சமையலறை உள்ளே இருந்தவர்களை கிண்டல் செய்துகொண்டும், சாப்பாட்டின் மணம் நுகர்ந்துகொண்டும் இருந்தனர்.
ஒருவழியாக சமையல் முடித்து, பாத்திரம் வரை அனைத்தையும் கழுவிவைத்துவிட்டுதான் வெளியே வந்தனர் செழியனும் அகிலனும்.
அனைவரும் சாப்பிட ஆரம்பிக்க, “பரவால்லயே நல்லா இருக்கே. அண்ணி நமக்கு கைவசம் ஒரு சிறப்பான தொழில் இருக்கு. தரமான ரெண்டு குக் நம்ம கிட்ட இருக்காங்க” என்றாள் ப்ரியா கள்ளப்புன்னகையுடன். “அடிங்க” என்று மண்டையில் குட்டினான் அகிலன்.
செழியன் ப்ரியாவை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். அவளும் அவன் பார்ப்பதை அவ்வப்போது பார்த்தாள். அவளின் பழைய கலகலப்பு, துடுக்குத்தனம் மீண்டிருந்தது போல இருந்தது அவனுக்கு.
‘என்கிட்ட இப்படி பேசாத. இன்னைக்கு நைட் உன்ன விடமாட்டேன்’ என புன்னகைத்துக்கொண்டே சாப்பிட்டான்.
அன்றைய மாலை வீடே களேபரமானது லட்சுமி வந்ததுவுடன். வந்ததும் ப்ரியாவின் கன்னத்தில் ஒரு அடி. அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, அகிலன் லட்சுமியை தடுக்க வர, செழியன், “என்ன அத்த, எதுக்கு அவளை அடிச்சீங்க?” கோபத்துடன் கேட்டான்.
ப்ரியா தன் அம்மாவிடம் அடி வாங்கியதற்கெல்லாம் கவலை படவில்லை. அது அவள் எதிர்பார்த்ததுதான். ஆனால் செழியன் பேசியதுதான் ஆச்சரியம்.
ஜெயராமனுக்கும் இதில் வருத்தம்தான். அமைதியாக இருந்தார்.
“என்னப்பா பேசறீங்க? இதெல்லாம் மறைக்கக்கூடிய விஷயமா? ஒன்னில்லை ரெண்டு உயிர் உள்ள இருக்கு. அதை சுமக்கற இவ உடம்பு அதைவிட முக்கியம். கடவுள் புண்ணியத்துல ஒன்னும் ஆகல. ஒரு அம்மாக்குதான் தெரியும் அதோட வலி என்னனு. என்கிட்ட மறைக்கற அளவுக்கு என்ன? அப்போ அம்மா அவ்ளோதான் இல்லையா?” கோபத்தில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்தார் லட்சுமி.
அவர் கண்களில் கண்ணீரை பார்த்தவுடன், செழியனுக்கு என்னடா இது என்றாகிவிட்டது.
ப்ரியா லட்சுமியை கட்டிக்கொண்டு, “அம்மா ஸாரிம்மா. மறைக்கணும்னு பண்ணல. எனக்கே கொஞ்சம் டவுட். அதுவும் ப்ராஜக்ட் வேலை அது இதுனு” என்று எதையோ சொல்லி சமாளிக்க பார்த்தாள்.
அம்மா அப்பாவிற்குச் செழியன் குறித்து தெரியவேண்டாம் என நினைத்தாள், எங்கே தெரிந்து அது ஒரு பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்று.
‘அவள் சமாளிக்கப் பார்க்கிறாள்’ என்று புரிந்தது செழியனுக்கு. அவன் முன்னமே முடிவெடுத்ததுதான். தன்னை குறித்து ப்ரியாவின் பெற்றோரிடம் சொல்லவேண்டும் என்பது. அதற்கான தருணம் இதுதான் என நினைத்தான்.
“அவளை எதுவும் சொல்லவேண்டாம். தப்பு என் மேலதான்” என்றான் செழியன்.
“இளா…” அழுத்தமாக அழைத்து, கண்களால் வேண்டாம் என்றாள் ப்ரியா. செழியன் புன்னகையுடன் அவள் பார்வையை புறம் தள்ளிவிட்டு, “உங்ககிட்ட பேசணும்” என்றான் லட்சுமியையும் ஜெயராமனையும் பார்த்து.
“ப்ரியா. நீ போய் எல்லாருக்கும் குடிக்க ஏதாச்சும் போடு” என்று அவளை அங்கிருந்து அனுப்புவதில் குறியாக இருந்தான்.
அவளும் முறைத்துக்கொண்டே நிற்க, “போன்னு சொன்னேன்” அவளைப்போலவே அழுத்தமாக சொன்னவன், “நான் போன மாசம் முழுசும் ட்ரீட்மெண்ட்ல இருந்தேன். உங்ககிட்ட மறைக்கிறது தப்பு. உங்கப்பொண்ணோட வாழ்க்கை இது… அதுனாலதான்” என்றான் ப்ரியாவின் பெற்றோரைப்பார்த்து.
இதை சொன்னபோது அவனிடத்தில் சுய கழிவிரக்கம் இல்லை. தெளிவாக பேசினான்.
அவர்கள் அதிர்ந்து என்ன ஆயிற்று என கேட்க, தனக்கு நடந்த பிரச்சனை பற்றி சொன்னான்.
சமையலறையில் இருந்த ப்ரியாவின் கண்கள் கலங்கியது. ‘ஏன் இவன் இவ்வளவு நல்லவனாக இருக்க வேண்டும்?’ மனம் அடித்துக்கொண்டது.
அகிலன், ‘ப்ரியாவிற்கோ செழியனுக்கோ ஏதாவது பிரச்சனை என்றால் பேசுவோம்’ என்று அமைதியாக இருக்க, செழியன் சொல்ல சொல்ல கவிதாவிற்கும் ஸ்வாமிநாதனுக்கும் மனம் அழுத்தியது அவன் வாழ்க்கையை நினைத்து. ரத்த பந்தம் ஆயிற்றே!
செழியன் உணர்வுகள் துடைத்த முகத்துடன், “நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து குடும்பத்தை நடத்த முடியும்னு நம்பறேன். பட், நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம். இந்த வாழ்க்கை உங்க பொண்ணுக்கு வேண்டாம்னு நினைச்சாலும்…” என்று அவன் முடிக்கும்முன், சமையலறையில் ‘தொம்’ என்ற ஒரு பெரிய பாத்திரம் விழுந்தது.
அவனுக்கு புரிந்தது, அது அவனுக்கானது என்று.
கோபத்துடன் வெளியே வந்த ப்ரியா, “இன்னொரு வார்த்தை பேசின, உள்ள விழுந்தது உன் மண்டைல விழும். உண்மையா கொன்னுடுவேன் இளா” அவள் கோபமாகத்தான் பேசினாள், ஆனால் செழியன் முகத்தில் சிறு புன்னகை.
அவன் தொடர்ந்தான்.
“மொதல்ல ரொம்ப பயந்தேன். இசை என்னை விட்டுட்டு போய் நல்லா வாழணும்னு நினச்சேன். நான் அவளுக்கு சரியான ஆள் இல்லனு தோணுச்சு. ஆனா டாக்டர் இது பெரிய விஷயம் இல்லனு சொன்னார். சமாளிக்கக்கூடியதுதான்னு சொன்னார். ஆனா இது திரும்ப வரவே வராதுன்னு உறுதியா சொல்லமுடியாதுன்னும் சொன்னார். பட் எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் கவனமா இதை இனி ஹாண்டில் பண்ணுவேன்னு” தெளிவாக பேசி முடித்தான் செழியன்.
லட்சுமி, ஜெயராமன் முதலில் அதிர்ந்தனர்.
பின் அகிலனும் அவன் தோழி பானு இறந்தபோது, கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் மன அழுத்தத்துடன் இருந்தவன்தான். அதன் வலி அவர்களுக்குத் தெரியும்.
ஆனால் செழியன் பேசிய விதம், அதுவும் மறைக்காமல் பேசியது, தங்கள் மகள் வாழ்க்கை என நினைத்துப் பேசியது, அவர்களை நெகிழச்செய்தது.
‘மனைவியின் நலனுக்காக தன் வாழ்க்கையைக் கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாத இவனை விட, வேறு யார் தங்கள் மகளை நன்றாக பார்த்துக்கொள்ளமுடியும்?!’ என்றே தோன்றியது. அதையே அவனிடத்தில் சொன்னார்கள்.
ஆனால் ப்ரியா கோபத்துடனே இருந்தாள். பேசவும் இல்லை, அவனைப் பார்க்கவும் இல்லை.
வீட்டில் வசதி குறைவு என்று சொல்லி, வற்புறுத்தி வந்தவர்களை ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்தான் செழியன்.
அவர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பவும், உள்ளறையிலேயே படுக்கை தயார் செய்து இருவரும் படுக்க, அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்த ப்ரியா அவனுக்கு பின்புறம் காட்டி படுத்தாள்.
“என் மேல இன்னும் கோபமா?” அவன் கேட்க, அவளிடம் பதிலில்லை.
“அக்கா என்கிட்ட பேசினா. அவ கல்யாணத்துல நடந்ததெல்லாம் சொன்னா. உன் அண்ணன் போல ஒருத்தர் கிடைக்க புண்ணியம் பண்ணிருக்கணும்னு சொன்னா. அதை கேட்க நிறைவா இருந்துச்சு இசை. நான்தான் அவரை தப்பா நினச்சுட்டேன். மன்னிப்பு கேட்கணும் அவர்கிட்ட. இன்னைக்கு நான் எவ்ளோ நிம்மதியா இருக்கேன் தெரியுமா?” அவன் மனதில் இருப்பதை பேசினான்.
அவளுக்கும் மனதில் நிம்மதி. ஆனாலும் அவன் மேல் கோபம், இன்று அவன் தன் பெற்றோரிடம் பேசியதை குறித்து. ‘அதெப்படி முடிவை அவர்களிடம் தரலாம்?’ என்ற கோபம்.
“சைக்கோதெரபிஸ்ட் செஷன்ஸ் ரொம்ப நல்லா இருந்தது இசை. நிறைய என்னை பேசவச்சாங்க. நிறைய புது தகவல் சொன்னாங்க” என்று தனக்குத் தந்த சிகிச்சை குறித்து முழுதும் சொன்னான்.
ப்ரியா அமைதியாக இருந்தாள்.
“நீ இன்னைக்கு எனக்காக பேசின பாரேன், இந்த உலகத்துலயே நான்தான் லக்கியஸ்ட் பர்ஸன்னு தோணுச்சு. என்னை ஏன் உனக்கு இவ்ளோ பிடிக்கும்?” அவன் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான்.
“இசை திரும்பமாட்டயா” அவன் மறுபடியும் கேட்க, அவளிடம் அசைவு மட்டும் இருந்தது, ஆனால் பேசவில்லை.
“ஓ! எங்க என்னை பார்த்தா கோபம் போயிடும்னு பயத்துல திரும்ப மாட்டேங்கறயா?” வேண்டுமென்றே அவளை சீண்டினான்.
“எனக்கென்ன பயம்? நான் இன்னும் கோபமாதான் இருக்கேன்” என்று கோபத்துடனே அவள் திரும்ப, அவன் கண்கள் கூட இப்போது சிரித்தது, அவளின் அந்த முகத்தைப் பார்த்து.
“கோபமா இருக்கியா? சமாதானம் செய்யவா இசை?” என்றவன் குரல் இப்போது வேறு மொழி பேசியது. அந்த சமாதானம் என்னவென்று அவளுக்குத் தெரியாதா? விழி விரித்து பார்த்தாள். கோபம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது.
அவள் முகத்தில் புரண்ட முடியை அவன் ஒதுக்க, ப்ரியாவிற்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது.
தன்னை சமநிலை படுத்திக்கொண்டு, “எனக்கு டயர்ட்டா இருக்கு. தூக்கம் வருது” என்றாள் திக்கித் திணறி.
இதற்கு முன் அவள் இதுபோல திணறியதெல்லாம் அவனுக்கு ஞாபகம் வர, அவளின் முகமாற்றதை ரசித்துக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இப்போ வேணா தூங்கு. எப்பவும் இப்படி எஸ்கேப் ஆகமுடியாது” என்றான் குறும்புடன்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் ஆசையாக தந்த முத்தம். அவள் உடல் சிலிர்த்தது.
‘எங்கே தன் முகம் வெட்டவெளிச்சமாக தன் மனதை காட்டிவிடுமோ’ என நினைத்து உடனே திரும்பி படுத்துக்கொண்டாள். தனக்குத்தானே புன்னகைத்துக்கொண்டாள். இப்போது வெட்கம் கொஞ்சம் எட்டிப்பார்த்ததோ!?
செழியனோ, அவள் அவசரமாக திரும்பிப்படுத்ததைப் பார்த்து சிரித்துக்கொண்டே மனநிறைவுடன், உறங்க ஆயத்தமானான்.
அடுத்தநாள் காலை… குடும்பமே மறுபடியும் வீட்டிற்கு வந்தது. மதியம் கிளம்புவதாக இருந்தார்கள்.
லட்சுமி ப்ரியாவிடம், “நான் வந்து இங்க இருக்கேன் ப்ரியா உன்ன பார்த்துக்க” என்றார். ப்ரியா இதை எதிர்பார்த்திருந்தாள். ஆகையால் முன்னமே ஒரு முடிவும் எடுத்திருந்தாள்.
“இருக்கட்டும்மா. வெண்பாவை யாரு பார்த்துப்பா? உங்கிட்ட அவ ரொம்ப பழகிட்டா” என்றாள்.
அவர் அதுவும் உண்மைதான் என நினைத்தாலும், “இப்போ உனக்கு ஒரு ஹெல்ப் வேணும் ப்ரியா” என்று அவர் யோசிக்க, அகிலன், கவிதா ‘வெண்பாவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று பேசவரும்முன்,
“அப்போ மாமா நீங்க வந்துடுங்க” என்றாள் ப்ரியா ஸ்வாமிநாதனை பார்த்து.
அனைவரும், ஸ்வாமிநாதன் உட்பட அதிர்ச்சி அடைய, “என்ன மாமா இங்க இருக்க மாட்டீங்களா? உங்க மருமகன் சொன்னா கேட்பீங்க, ஆனா மருமக சொன்னா கேட்க மாட்டீங்களா?” போலியாக நொடித்துகொள்ள, செழியனுக்கு அவள் பேசும் பொருள் புரிந்து புன்னகையுடன் கண்கள் கலங்கியது.
***
“நீ சொன்னாலும் நான் கேட்பேன்மா. ஆனா, கவனமா பார்த்துக்கணுமே உன்ன” என்று ஸ்வாமிநாதன் தயங்க,
“அத்தைக்கு ரெண்டு பிரசவத்துக்கு நீங்க மட்டும்தானே இருந்தீங்க?” அடுத்த கேள்வியை தொடுத்து ப்ரியா அவரை மடக்க, அவர் மட்டுமில்லை அங்கிருந்த அனைவருக்குமே புன்னகை பூத்தது.
லட்சுமி, ஜெயராமன் முகத்தில் பெருமிதம். அவளின் இந்த தெளிவான பேச்சை கேட்டு, அகிலனுக்கும் கவிதாவிற்கும் இவள் பழைய சுட்டி பெண் இல்லை என்ற எண்ணம். ஸ்வாமிநாதனுக்கு மனைவியைப் பற்றி சொன்னவுடன் நெகிழ்ச்சி. பின் தன் மகனுடன் இருக்கப்போகும் நாட்கள் குறித்து ஆவல்.
செழியன் மனதில் சொல்லமுடியாத பல உணர்வுகள்! இந்த சில நாட்களாக ப்ரியாவின் புதிய பரிமாணத்தைக் கண்டு வியந்துள்ளான்; ரசித்துள்ளான்; அதிர்ந்துள்ளான்; மகிழ்ந்துள்ளான்; இன்னும் என்னவெல்லாமோ!
இப்போது தந்தையை உடன் இருக்க சொன்னது, ‘ஒன்று தனக்காக மற்றொன்று நேற்று தந்தை மனமுருகி பேசினார். அதை மனதில் வைத்துக்கொண்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறாள்’ என நினைத்து அவளை புன்னகையுடன் பார்த்தான்.
“சரிம்மா ப்ரியா, நான் போய் எல்லாம் எடுத்துட்டு வந்துடறேன்” என்ற ஸ்வாமிநாதன் லட்சுமியிடம், “நீங்க கவலை படாதீங்க சம்மந்தி. நான் பார்த்துக்கறேன் இவங்கள” என்றார் புதிதாக பெற்ற புத்துணர்ச்சியுடன்.
“மாப்பிள்ளை, கவி, உங்களுக்கு ஒன்னும்?” தயங்கி அகிலனையும் கவிதாவையும் கேட்க, “மாமா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நாங்க அடிக்கடி வர்றோம், வந்து பார்த்துக்கறோம்” என்றான் அகிலன்.
ஒரு முடிவு எட்டப்பட்டது. அனைவரும் அன்று சென்னை புறப்பட்டனர்.
அவர்களை அனுப்பியபின் செழியன் ப்ரியா முன் வந்து நின்றான் புன்னகையுடன். ‘எதற்கு இப்படி வழி மறைத்து நிற்கிறான்?’ என்ற யோசனையுடன், அவனைக் கடந்து செல்ல பார்க்க, அவள் கைப்பற்றி தடுத்து, “தேங்க்ஸ்” என்றான்.
அவள் எதற்கு என்பதுபோல பார்க்க, அது அவனுக்கு புரிந்ததுபோல், “அப்பாவை வர சொன்னதுக்கு” என்றவுடன், ப்ரியாவின் பழைய துடுக்குத்தனம் கொஞ்சம் எட்டிப்பார்த்தது.
“ஓ அதுவா…! அது வேற ஒன்னும் இல்ல. என் அம்மா வந்தா நொய் நொய்ன்னு அதை செய்யாத, இப்படி பண்ணுனு அட்வைஸ் பண்ணிட்டே இருப்பாங்க. எப்படி கரெக்ட்டா டீல் பண்ணேன் பார்த்தல்ல. மாமாலாம் அசால்ட். ஈசியா சமாளிச்சுடலாம்” என்று பெருமை பட்டுக்கொள்ள, அவள் கண்களையே பார்த்தான்.
பின் புன்னகையுடன், “என்கிட்ட நீ பேசிட்ட இசை, இதோ இது ரெண்டுமே என்கிட்ட பேசுச்சே இப்போ” என்று அவள் கண்களையும் இதழ்களையும் பார்த்து சொன்னவுடன், ‘அச்சச்சோ மறந்து நல்லா பேசிட்டோமே’ மானசீகமாக தலையில் குட்டிக்கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் இல்லை” என அவனிடம் இருந்து விலகப்பார்த்தாள்.
அவளை இடையோடு மென்மையாக கட்டிக்கொண்டு, அவளையே பார்த்தான்.
அவள் மூளை விலகு என்று அறிவுறுத்தினாலும், மனம் அவன் அருகாமையை பிடித்துக்கொள்ளப் பார்த்தது. மனதை திட்டிக்கொண்டே, அவன் பிடியில் இருந்து விலகாமல் நின்றாள்.
“போதும், உன் மௌன விரதத்தைக் கலைச்சிடு இசை. நிறைய உன்கிட்ட பேசணும் போல இருக்கு. நீ பேசி கேட்கணும் போல இருக்கு. இப்படி பேசாம படுத்தாத இசை. நான் வேணும்னா உன்னை சமாதானம் பண்ணிட்டே இருக்கேன்” அவள் மூக்கோடு உரசி, அவன் சரசமாக சமாதானம் பேச, அவள் முகத்தில் மெல்லிய புன்னகை.
கொஞ்ச நேரம் அவன் ஸ்பரிசத்தை ரசித்த பின், அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல், “காலேஜ் போய் நாலு நாள் ஆச்சு” என்றாள்.
அவனுக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்தது போல, “ஐயோ ஆமா. நிறைய வேல இருக்கு. ரிப்போர்ட்ஸ் ரெடி பண்ணணும். தீசிஸ் டாக்குமெண்ட் வேல இருக்கு. ஹெச்ஓடி தீசிஸ் ரெஜிஸ்டர் பண்ணணும்னு சொன்னாரு. கிளம்பலாம்” என்று சீரியஸாக பேசி அவன் விலகியவுடன், ப்ரியா புன்னகைத்தாள்.
அவள் மூக்கை நன்றாக பிடித்து, “சமாதானம்… டு பி கன்டினியூட்” என்று அவனும் புன்னகைத்தவாறே கிளம்பினான்.
மூக்கைத் தேய்த்துக்கொண்டே, ‘இவனுக்கு இதே வேலையா போச்சு’ என்று முறைத்தவண்ணம் அவளும் கிளம்பினாள்.
அந்த வாரத்திலேயே ப்ரியா தன் துறையில் வேலைக்கு சேர்ந்தாள். ஸ்வாமிநாதனும் அந்த வாரமே கிளம்பி வர, செழியனிடம் இருந்த பணத்தையும், மற்றும் ஸ்வாமிநாதன் பணத்தையும் வைத்து, இரண்டு படுக்கை கொண்ட வீட்டிற்கு மாறினார்கள்.
ப்ரியாவால் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவ்வப்போது அவளையும் மீறி அவனிடம் நன்றாக பேசுவாள். சிலசமயம் கோபமாக இருப்பதுபோல காட்டிக்கொள்வாள், இருந்தும் முடியாமல் போய்விடும். அது அவளின் இயல்பு.
ப்ரியா, செழியன் இருவர் மறுத்தும் கேட்காமல், ஸ்வாமிநாதனே சமையல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, ப்ரியாவும் முழுதாக படிப்பில் கவனம் செலுத்தினாள். தேர்வுகளும் முடிந்தது.
செழியன் கூடுதல் ப்ராஜக்ட் எல்லாம் எடுக்காமல், முழு நேரமும் தீசிஸ் தயார் செய்யும் வேலையிலேயே இருந்தான். மருத்துவர் கொடுத்த மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொண்டான். பின் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கவுன்சில்லிங் சென்றான்.
ஸ்வாமிநாதனுடன் நேரம் செலவிட்டான். அவரும் அவனிடம் நிறைய பேசினார்.
‘அவன் மனம் விட்டு இப்போதெல்லாம் பேசுகிறானா?’ என்றால், அது தெரியவில்லை ப்ரியாவிற்கு. ஆனால் கண்டிப்பாக அவனிடம் மாற்றம் தெரிந்தது.
‘எதுவும் உடனே நடக்காதே. காலப்போக்கில் கண்டிப்பாக மாறுவான். இவ்வளவு முன்னேற்றம் தெரிகிறது. இன்னமும் கொஞ்சம்தான்’ என்ற நம்பிக்கையோடு இருந்தாள் ப்ரியா.
ப்ரியாவிற்கும் ஐந்தாம் மாதம் வந்தது. வீட்டில் ஒரு வேலையும் கிடையாது.
‘பெண்கள்தான் பார்க்கவேண்டும்’ என்று இதுவரை சொன்ன வேலைகள் அனைத்தையும் இரு ஆண்கள் அங்கு பார்த்துக்கொண்டனர். ப்ரியாவை ஒன்றும் செய்யவிடவில்லை.
லட்சுமி அவ்வப்போது ப்ரியாவை அழைத்து அது செய் இது செய் என்று சொன்னாலும், இவர்கள் இருவரும் விடமாட்டார்கள்.
நாட்கள் அழகாக நகர, அன்று அவளை மருத்துவரிடம் அழைத்துச்சென்றான் செழியன். அவளுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துள்ளதாக சொல்லி கை நரம்பின் வழியாக ஐயன் சப்ளிமென்ட் (iron supplement) ஏற்றச்சொன்னார்கள்.
அதற்கு ஊசியை குத்தும்முன் ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே செய்துவிட்டாள் ப்ரியா. இவள் செய்த ஆர்ப்பாட்டத்தில், செழியன் கண்கள் கலங்கியது இதெல்லாம் தேவையா என.
ப்ரியாவிற்கு ஊசியை குத்திய நர்ஸ், “இதுக்கே இப்படின்னா டெலிவரிக்கு என்ன பாடு பட போறோமோ உங்களோட. அதுவும் ட்வின்ஸ்” என பெருமூச்சு விட்டு சலித்துக்கொள்ள, ப்ரியாவை விட செழியனுக்குதான் வயிற்றில் பூகம்பம்.
ப்ரியா எங்கு சென்றாலும் அவனும் உடனிருக்கவேண்டும் என்று அழைத்து சென்றுவிடுவாள். ஸ்கேன் எடுப்பதானாலும் சரி, இதுபோல ஊசி குத்தும்போதும் சரி. மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும்போதும் அவளுடன் அவன் இருந்தான்.
மருத்துவர், ப்ரியாவின் கர்ப்பப்பை கொஞ்சம் பலவீனமாக இருப்பதாகவும், குழந்தைகள் பிறந்தவுடன், குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்வதும் சிறந்தது என்றார். காரணம் இந்த கர்ப்பமே எதிர்பாராமல் நடந்தது என்பதால்.
அதுகுறித்து செழியன் மருத்துவரிடம் தனியாக பேசினான்.
அன்று ஐயன் ஏற்றியபின், வீட்டிற்கு வந்ததும் தந்தையிடம் நடந்ததை சொன்னான்.
அடுத்த நாள் காலை அவள் எழுந்ததும், அவளுக்கு பிடிக்காத பேரீச்சம்பழம் அவன் சாப்பிடச்சொல்ல, அவசரமாக மறுத்துவிட்டு வெளியே வந்தாள்.
செழியன் அதட்டினான். அதற்கு ஸ்வாமிநாதன், “செழியா, சும்மா அவளை திட்டாத” என்றதும் ப்ரியா செழியனை பார்த்து அழகு காட்டினாள்.
“அப்பா நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. நேத்து எப்படி வலில கத்தினா தெரியுமா பா” என்று அவன் பேச, அவன் பேசுவதை அவர் கண்டுகொள்ளாமல்,
“அவன் கிடக்கறான்… ப்ரியா இந்தாம்மா” என்று முருங்கைக்கீரை சூப்பை அவர் நீட்ட, ப்ரியா அழுகாத குறையாக கெஞ்சினாள் வேண்டாம் என்று.
“அதுக்கு இது பரவால்லயா” கிண்டல் செய்தவாறு செழியன் நன்றாக சிரித்தான்.
“உங்க ரெண்டு பேரு தொல்லை படு பயங்கரமா இருக்கே, தாங்க முடியல. என் அம்மாவே பரவால்ல போலயே” என்று நொந்துகொண்டு சாப்பிட்டாள்.
லட்சுமியிடம் தினமும் ஸ்வாமிநாதன் பேசி எது தரவேண்டும் எது தரக்கூடாது என்று கேட்டு கேட்டு செய்தார். அதன் பலன், அடுத்த செக்கப்பின் போது ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தது.
குழந்தைகள் உள்ளுக்குள் நகர்வதை உணர ஆரம்பித்தாள் ப்ரியா. செழியனுக்கு எல்லையில்லா சந்தோஷம்.
பக்கத்து வீட்டில் இருக்கும் குட்டி பெண் ப்ரியாவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள். ப்ரியா வீடு வந்ததும், அவளும் வந்துவிடுவாள்.
செழியன், வேலை அனைத்தும் முடிந்து வருவதற்கு இரவு ஆகிவிடும். அவ்வப்போது கொஞ்சம் வேலை பளு அதிகமாகும்போதெல்லாம் கடினமாக உணர்ந்தான். அதை ப்ரியாவிடமும் பகிர்ந்துகொண்டான்.
அவன் மனதை ஒருநிலை படுத்த, இருவரும் சேர்த்து தியானம், யோகா என்று பயின்றனர். அது அவனுக்கு ஒரு சின்ன தெளிவை தந்தது.
ஒரு நாள் மாலை அவன் வீட்டிற்கு வந்தபோது, ப்ரியா பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் குழந்தைகளின் அசைவுகளை காட்டிக்கொண்டிருந்தாள்.
செழியன் வரவும், அவனும் கை வைத்துப்பார்த்தான், ஆனால் அசைவு நின்றுவிட்டது. அவன் முகம் தொய்ந்துவிட்டது.
“நல்லா வேணும் நல்லா வேணும்” என்று ப்ரியா கேலி செய்தவுடன், அமைதியாக சென்றுவிட்டான். அவன் சென்றவுடன் மறுபடியும் அசைவு தெரிய, உடனே அழைத்தாள் செழியனை. அவன் வந்தபோது நின்றுவிட்டது.
அவன் முகவாட்டத்தைப் பார்த்தவள், ‘ஐயோ என்ன யோசிக்கிறான் என்று தெரியவில்லையே’ என நினைக்க, அவனே மனதில் இருப்பதை பேசினான்.
“என் மேல கோபமா இருப்பாங்களோ இசை?” கண்கள் பணிக்க அவன் கேட்க, அதன் பொருள் புரிந்து அதிர்ந்தாள் ப்ரியா.
“லூசு மாதிரி பேசாத இளா. இப்போதான் மூவ்மெண்ட் தெரிய ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ள மனசுல ஏதாச்சும் போட்டு குழப்பிக்காத” என்று அவனை சமாதானப்படுத்தினாள்.
இருந்தும் அவன் மனம் அதையே நினைத்துக்கொண்டிருந்தது. காமாலை காரனுக்குப் பார்ப்பது எல்லாம் மஞ்சள் என்பதுபோல இதுவே தொடர்வது போல இருந்தது அவனுக்கு.
அந்த வாரயிறுதி சென்னையில் இருந்து அனைவரும் வந்திருந்தனர். அவளை ஸ்வாமிநாதனும் செழியனும் பார்த்துக்கொள்ளும் விதம் கண்டு லட்சுமிக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
ப்ரியா எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தாள். ஆனால் அதெல்லாம் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
“உனக்கெல்லாம் செய்றாங்க பாரேன்” என்று லட்சுமி திட்டியது அவள் காதில் விழவில்லை.
அன்றும் வெண்பா, கவிதா, லட்சுமி என்று அனைவரும் குழந்தைகளின் அசைவுகளை உணர, செழியனுக்கு மட்டும் வருத்தம். பக்கத்தில் போகவே இல்லை. அங்கு சென்று உணரமுடியவில்லை என்றால் இன்னமும் வருத்தமாகிவிடும் என்று தள்ளியே இருந்தான்.
ப்ரியாவிற்கு அந்த ஏழாம் மாதத்தில் ஒரு நல்ல நாளில் வளைகாப்பு குறிக்கப்பட்டது. வளைகாப்பு முடிந்து லட்சுமி, ஜெயராமன் அவர்களுடன் தங்குவதாக முடிவு செய்தனர்.
அன்றைய இரவு முன்புபோலவே, அகிலனும் செழியனும் சமைத்தனர். இப்போது செழியன் இன்னமும் கொஞ்சம் மாறியிருந்தான். அகிலன் எப்பொழுதும் போல பேசிக்கொண்டிருந்தான்.
“ரொம்ப தேங்க்ஸ், அப்புறம் சாரி மாமா” என்று செழியன் ஆரம்பித்ததும் புரியாமல் பார்த்தான் அகிலன்.
“உங்கள தப்பா நினச்சுட்டேன். அக்கா எல்லாம் சொன்னா. நீங்களா இருக்கப்போய் அதை பெருசு பண்ணாம, அவளுக்கு துணையா இருந்தீங்க. இல்லாட்டி ரொம்ப கஷ்டமாகியிருக்கும். அதுமட்டுமா, ப்ரியா என்னை பத்தி உங்க வீட்ல சொன்னப்ப, நீங்க ரொம்ப அவளுக்கு சப்போர்ட் பண்ணினதா சொன்னா. தேங்க்ஸ் மாமா” என்றான் செழியன்.
அவன் இவ்வளவு பேசியதை கேட்டு அகிலன் கண்கள் கலங்கி, மனம் நெகிழ்ந்து, அவனை அணைத்துக்கொண்டான்.
“சாரி செழியா. உன்ன பத்தி நிறைய நானும் கவியும் பேசுவோம். நானும் உன்கிட்ட பேச்சு கொடுத்துருக்கேன். நீ ஏன் சரியா பேச மாட்டேங்கறனு ரீசன் யோசிச்சப்ப, நீ ரிசெர்வ்ட் டைப் அதுனாலன்னு நினச்சுட்டோம். பட் அதுக்கு பின்னாடி இவ்ளோ இருந்திருக்கும்னு நாங்க நினைக்கல. ரொம்ப சாரி” என்றதும்,
“பாவம் உங்களுக்கு எப்படி மாமா தெரியும் என்னை பத்தி? நீங்க அப்போ ஆல்ரெடி அக்கா ப்ராப்ளம்ல இருந்திருப்பீங்க. இதெல்லாம் நடக்கணும்னு இருக்கு. யாரையும் தப்பு சொல்றது சரியில்ல மாமா” என்றான் மனநிறைவுடன்.
அந்த இரண்டு நாட்கள் வீடே கலகலப்பாக இருந்தது.
செழியன் முதல்கட்ட தீசிஸ் ஓரளவிற்குத் தயார் செய்திருந்தான். மிகவும் நல்ல படியாக வந்திருந்தது. இன்னும் சில நாட்களில் அதை வெளியிட அவனுடைய டிபார்ட்மென்ட்டில் பேசி முடிவு செய்திருந்தான்.
ப்ரியா ஒரு நாள் எப்பொழுதும்போல கல்லூரிக்குச் சென்றாள். அப்போது அனுப்பட்ட சர்குலர் பார்த்து கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது. உடனே அழைத்தாள் செழியனை.