Preethi S Karthikதனிப்பெரும் துணையே #ENV2

தனிப்பெரும் துணையே – 5

தனிப்பெரும் துணையே – 5

அந்த சின்ன அறையில், மூன்று மானிடர் (ட்ரிபிள்) கொண்ட ஒரு கம்ப்யூட்டர் செட்டப். கூடவே ஒரு லேப்டாப். கிட்டத்தட்ட நூற்றை தொடும் புத்தகங்கள். ஒரு ஆர்ம் சேர். இதுவே முக்கால்வாசி இடத்தை நிரப்பி இருந்தது.

“இது ஸ்டடி கம் ஒர்க் ரூம்” என்று செழியன் சொன்னவுடன் அதிர்ந்து புரிந்தும் புரியாமலும் அவள் பார்க்க,

“நான் மாஸ்டர்ஸ் பண்றேன். ஐஐடிபி’ல (IIT Bombay)” என்றான்.

“அப்போ வேலை?” அவளுக்கு இன்னமும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்.

“கம்பெனி ஹாஃப் ஸ்பான்சர்ஷிப். வாரத்துல தெர்ட்டி அவர்ஸ் ஆஃபீஸ் ஒர்க். மிச்ச நேரம் காலேஜ்ல இருப்பேன். காலைல சீக்கிரம் காலேஜ் போய்ட்டு அப்பறம் ஆஃபீஸ் போவேன்” என்றான்.

“இன்னைக்கு?” அவள் கேட்க, “காலேஜ்ல இருக்கப்பதான் நீ கால் பண்ண. சோ ஆஃபீஸ் போகல. வீக் எண்ட் ஒர்க் பண்ணிப்பேன்” என்றான் சின்ன புன்னகையுடன்.

ஏனோ இன்னமும் அவன் மேல் ஈர்ப்பு அதிகமானது. அவளும் புன்னகைத்தாள்.

“ஹ்ம்ம் அண்ணிக்கு தெரியுமா?”

மறுப்பாக தலையசைத்தான் செழியன்.

“ஏன்?” புரியாமல் கேட்டாள்.

“என்கிட்ட யாரும் கேட்கல. நானும் சொல்லல” என்றவுடன், புருவங்கள் உயர்ந்தன ப்ரியாவிற்கு.

“அதென்ன எப்போ பார்த்தாலும் யாரும் கேட்கலன்னு சொல்ற? நீ படிப்பன்னு அவங்களுக்கு எப்படி தெரியும்?” கொஞ்சம் கோபத்துடன்தான் கேட்டாள்.

“நான் சொல்றதுனால அவங்களுக்கு என்ன யூஸ்? மேல் படிப்புன்னு சொன்னாலே… அப்பா, பையன் வேலை போறதுதான் லட்சணம்னு லெக்ச்சர் எடுக்க ஆரம்பிச்சிடுவாரு. பிடிச்சதை செய்ய விடமாட்டாங்க. அதான் சொல்லல” என எங்கோ பார்த்து பதிலளித்தான்.

முதல் முறை ஒரு சிறு பிள்ளை அடம்பிடிப்பது போல இருந்தது அவளுக்கு அவனைப் பார்க்கும் போது.

“ஹ்ம்ம் நான் போய் சொல்லிட்டேன்னா?” புன்னகையுடன் புருவம் உயர்த்தி கேட்க, கொஞ்சம் அதிர்ந்து அவளைப்பார்த்தான்.

பின், “சொல்லமாட்ட நீ” என்றான் புன்னகையுடன்.

“இதுக்காகவே சொல்வேன்” கைகளை கட்டிக்கொண்டு அவனை ஏறிட, “அப்போ நீ இங்க வந்ததை சொல்லபோறயா?” என அவன் கேட்டவுடன், இருவர் முகத்திலும் சிரிப்பு.

“பிளாக் டீ குடிப்பயா?” அவன் கேட்டவுடன், அவள் முகத்தை அஷ்ட கோணலாக காட்ட, “அதுதான் நான் குடிப்பேன். அதான் இருக்கு இப்போ” என்றான்.

“ஹ்ம்ம் ஓகே” அவள் சொன்னவுடன் அவன் சமையலறைக்குள் சென்றான்.

சில நிமிடங்கள் கழித்து அவளும் சென்று கதவில் சாய்ந்தபடி நின்றாள் அவனைப் பார்த்தவாறே.

அவளைப் பார்த்து புன்னகைத்த செழியன், “அக்கா எப்படி இருக்கா? வெண்பா குட்டி நல்லா தவழுறாளா? அவங்கள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” சின்ன வருத்தத்துடன் கேட்டான்.

‘ஹ்ம்ம் அதான, அக்கா பத்தி பேசினா மட்டும் ரெண்டு மூனு சென்டன்ஸ் சேர்த்துப் பேசுவான். பாசத்துல உருகுவான்’ என மனதில் நொடித்துக்கொண்டாலும்…

“ஹ்ம்ம் நல்லா இருக்காங்க. வெண்பா தவழ்ந்தே மும்பை வர்ற அளவுக்குத் தேறிட்டா. எங்க அண்ணா பொண்ணாச்சே. எல்லாத்துலயும் ஃபாஸ்ட்” தோள்களை குலுக்கி சொன்னவளைப் பார்த்து முறைத்த செழியன்,

“ஒன்னுமில்ல. அவ எங்க அக்கா போல. செம்ம ஸ்மார்ட்” என்றான் பெருமையாக.

அவன் டீ போட்டு முடிக்க, அவள் இதுவரை தனக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த ஒரு சின்ன பெட்டியை அவன் முன் நீட்டினாள்.

அவன் என்ன என்பதுபோல பார்த்தபடி அதை வாங்கினான். அவன் முகத்தில் புன்னகை அரும்பாக மலர்ந்தது.

அந்த பெட்டிக்குள் இரண்டு ஈக்கோ ஃபிரண்ட்லி காஃபி கப்ஸ் இருந்தது. அழகாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்க, அந்த இரண்டு கோப்பையிலும் ஒரு பெய்ண்டிங் வரையப்பட்டிருந்தது.

முகம் மலர அவன், “பியூட்டிஃபுல்” என்றான். அவள் புன்னகைத்தாள்.

“இது என்ன பெய்ண்டிங்? நீ வரைந்ததா?” அதைப் பார்த்தவாறு அவன் கேட்க, ஆம் என்பதாக தலையாட்டி, “என்னன்னு நீதான் கண்டுபிடிக்கணும்” என்றாள்.

“ஹ்ம்ம், எதுக்கு ரெண்டு? நான் மட்டும்தானே இருக்கேன்” அடுத்த கேள்வியை தொடுக்க,

‘ஒன்னு உனக்கு ஒன்னு எனக்கு’ என நினைத்தாலும், “ஒன்னு உனக்கு ஒன்னு உன் ஃபியூச்சர் வொய்ஃப்க்கு” அதை சொன்னபோது அவள் கண்களில் காதல் அப்பட்டமாக தெரிந்தது. ‘அவன் என்ன இதற்கு சொல்வான்’ என தவித்தது அவள் மனம்.

அவனும் அவளைப் பார்த்தான். சில நொடிகள் கழித்து, கோப்பையை பார்த்தான். புன்னகைத்துக்கொண்டே அதை மேடையில் வைத்துவிட்டு, “டீ சூடு ஆறியிருக்கும்” என சொல்லி மறுபடியும் சூடு செய்தான்.

அவன் எண்ணவோட்டத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. டீயை அவன் வேறு குவளையில் ஊற்ற, அவள் நெஞ்சம் கொஞ்சம் வருந்தியது.

இருந்தும் விடாமல், “இப்போ நீ புதுசுல குடிக்கலாம்ல?” அவன் மனநிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக கேட்டாள்.

“நீ சொன்ன இதுக்கு சொந்தமானவங்க அந்த உரிமையோட இங்க வர்றப்ப, நான் இதை யூஸ் பண்றேன்” என்றான்.

‘ஒன்னும் விளங்கல. ஒருவேளை பேசினா இப்படி புரியாத மாதிரி பேசுவானோ?’ என எண்ணி பெருமூச்சு விட்டாள். எதற்கு கேட்டோம் என்றாகிவிட்டது ப்ரியாவிற்கு.

அவன் அவளையே பார்த்தவாறு டீயை அவளுக்கு கொடுத்தான்.

அதை கொஞ்சம் ருசி பார்க்க, சுத்தமாக அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏதோ தனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதுபோல குடித்தாள்.

“நீ சமைப்பியா?” அடுத்த டாபிக்கை ஆரம்பித்தாள்.

“ப்ச் அதுதான் வராது. டீ மட்டும் போடுவேன்”

“அப்போ சாப்பாடு?” அவள் கேள்வியோடு பார்க்க,

“இங்க கிரவுண்ட் ஃப்ளோர்ல ஒரு சின்ன மெஸ் மாதிரி நடத்தறாங்க. அங்கதான் ரெண்டு வேளையும் வாங்கறது. மதியம் காலேஜ்ல இல்ல ஆஃபீஸ்ல சாப்பிட்டுப்பேன்” என்றான்.

“வெளியவே சாப்பிட்டா உடம்பு என்ன ஆகறது? பழகிக்கலாம்ல சமைக்க, அட்லீஸ்ட் பேசிக் குக்கிங்.”

“ஹ்ம்ம். ஈசியா சாப்பாடு கிடைக்கறதுனால ட்ரை பண்ணதில்ல. பாப்போம், உனக்கு வருமா சமைக்க?” அவன் கண்களில் வித்தியாசம் தெரிந்ததோ இதை கேட்கும்போது?

“தோசை, சப்பாத்தி திருப்பி போடுவேன். அம்மா எப்பவும் சொல்லிகுடுப்பாங்க. பட் மைண்ட்ல படிப்பைத்தவிர எதையும் உள்ள சேர்த்துட்டதில்ல. நான் கொஞ்சம் படிப்ஸ்” முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு பதில் தந்தாள் ஆனால் குறும்பு பார்வையுடன்.

அதைக் கேட்டவுடன் சத்தமாக சிரித்தான். முதல் முறை அதை அவள் பார்க்கிறாள்.

மனம் விட்டு சிரித்தால் எவ்வளவு பிரகாசமாக தெரிகிறது அவன் முகம். அவனையே பார்த்தாள். அவளால் புன்னகைக்கவோ சிரிக்கவோ முடியவில்லை. மாறாக இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. முன்புபோல வயிற்றில் கடகடவென சத்தம்.

“சமைக்க தெரியாதுன்னு நேராவே சொல்லியிருக்கலாம். இதுல எனக்கு அட்வைஸ் வேற” என்றான் அதே சிரிப்புடன்.

“தெரியாதுதான். பட் தேவைன்னு வந்தா தேவைக்கேற்ப என்னை மாத்திக்க முடியும். எதையும் பழகிக்க முடியும். அதுக்காக எந்த எக்ஸ்ட்ரீம்’கும் போவேன்” என்றாள் பல பொருள்கொண்டு.

இப்போது அவளையே பார்த்தான் அவன். சில நிமிடங்கள் மௌனம் நிலவியது.

அவன் எப்படியும் பேச மாட்டான் என நினைத்து, “ஹால்லயே பெட் இருக்கே. யாராச்சும் வந்தா ஆக்வேர்டா இருக்காது?” அவள் கேட்க,

“இதுவரைக்கும் என்னை பார்க்க யாரும் இங்க வந்ததில்லை. நான் போய் பார்த்துட்டு வர்றதோட சரி” என்றான், சிரிப்பெல்லாம் தூரம் சென்றதுபோல.

அவனின் அந்த முகம் பார்த்தபோது ஏனோ அவள் மனம் தவித்தது. அவனுக்கு ஆறுதலாக இருக்க ஆசைப்பட்டது. ஆனால் அமைதியாக பார்த்தாள் அவனை.

நேரம் சென்று கொண்டே இருக்க, அவள் பையில் இருந்து இன்னொரு பெட்டியை எடுத்தாள்.

அதை அவனை பிரிக்கச்சொன்னாள். அவனும் செய்தான். அதில் அழகான ஒரு டேபிள் லாம்ப் இருந்தது.

“இது என்னோட ஜுனியர்ஸ் செய்தது. Faraway lamp. வைஃபை கூட கனெக்ட் பண்ணனும். இதோட இன்னொரு லாம்ப் என்கிட்ட வீட்ல இருக்கு. இங்க இந்த லாம்ப் டச் பண்றப்ப, எனக்கு அங்க சிக்னல் கிடைக்குதான்னு பார்க்கணும். சென்னை டு செங்கல்பட்டு ஒர்க் ஆச்சு. சோ இங்க இருந்து டெஸ்ட் பண்ணலாம்னு” தெளிவாக ‘லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் லாம்ப்’ என சொல்லாமல் ‘faraway lamp’ என்றாள்.

அவன் புரியாமல் பார்க்க, “வெயிட். இங்க வைஃபை டீடெயில்ஸ் சொல்லு” என கேட்டு, ஏதேதோ அதில் செய்தாள். பின், “கனெக்ட் பண்ணிட்டேன். நான் ஊருக்கு போனப்பறம் நீ இதை டச் பண்ணா போதும். ஒவ்வொரு டைம் பண்றப்பவும் வித்தியாசமான கலர்ஸ் அன்ட் மைண்ட்க்கு ரிலாக்சிங் இமேஜ் பேட்டர்ன்ஸ் வரும்” என்றாள்.

அவனுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் தலையை ஆட்டினான்.

கிளம்புவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டே இருக்க, இதுவரை இருந்த மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது அவளுக்கு. அவனுடனே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கிறது என நினைத்தாள்.

ஆனால் அவனோ எதுவும் வெளிப்படையாக பேசவில்லை. நன்றாக பேசவே யோசிக்க, அவ்வப்போது பார்ப்பது மட்டும்தான் என்று எண்ணும்போது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

இருவரும் புறப்பட்டனர். அவள் எதற்கு அலைச்சல், தானே சென்றுகொள்வதாக சொல்ல, அவன் அதை மறுத்து அவனும் கிளம்பினான் அவளுடன்.

இருவரும் கொஞ்சம் இடைவெளிவிட்டு, தரை தளத்தில் நடக்க, அங்கு சிறுவர் சிறுமியர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.

ப்ரியா கிளம்பும் சோகத்தில் எங்கோ பார்த்து நடக்க, திடீரென ப்ரியாவை நோக்கி பந்து வருவதை பார்த்த செழியன், “ஹே பால்” சட்டென அவளை தன் புறம் இழுத்தான், பந்து அவளை தாக்காமல் இருக்க.

அதை எதிர்பார்க்காத ப்ரியா கொஞ்சம் தடுமாறி அவன் கையின் மேலே மோதி நின்றாள். அந்த சின்ன நெருக்கத்தால் அவள் உடல் லேசாக சிலிர்த்தது. அவனைப் பார்த்தாள். அவனும் புன்னகைத்துவிட்டு நடந்தான்.

அவன் அவள் கையை பற்றியிருக்க, இப்போது இருவருக்கும் இடையில் பெரிய இடைவெளியில்லை. இடைவெளி விடவும் மனமில்லை போல.

***

விரல் விட்டு எண்ணக்கூடிய நொடிகள்தான் அந்த நெருக்கம், டாக்ஸி இருக்கும் இடத்தை அடைந்தனர்.

‘ச்ச இந்த டாக்ஸி டிரைவர் கொஞ்சம் தள்ளி வெயிட் பண்ணிட்டு இருக்கக்கூடாதா’ ஓட்டுனரை திட்டத்தான் தோன்றியது அவளுக்கு.

பிரிய மனமே இல்லாமல் விடைபெற்றுக்கொண்டு, சென்னை புறப்பட்டாள் ப்ரியா.

அவன் முகம் கண்முன்னே வந்துகொண்டே இருந்தது. அதுவும் கடைசி சில நொடிகள் இவள் ஸ்டேஷனுள் நுழையும்போது, எப்பொழுதும்போல, சின்னதாக தலையசைத்து புன்னகைத்த அவன் முகம்… அதை நினைக்கையில், பிரிவை நினைக்கையில்… மனதில் ஏதோ அழுத்தம்.

ட்ரெயின் புறப்பட்ட சில நொடிகளில், ‘Had a great time. Thank you for making my day a beautiful one’ என்ற மெசேஜ் அவனிடம் இருந்து வந்தது. அதைப் பார்த்ததும், ஏனோ கண்களில் கண்ணீர் தேங்கியது.

எதிலும் அதிகம் ஈடுபடாமல் அவன் நினைவுடன் சென்னை வந்தடைந்தாள்.

அன்றைய தினமே அந்த ‘லாங் டிஸ்டன்ஸ் லாம்ப்’ டெஸ்டிங் என சொல்லி அவனை அழைத்தாள்.

“இளா. அந்த லாம்ப் மேல ஜஸ்ட் டச் பண்ணு. உனக்கு ஒரு கலர்ல அது எரியும். அப்போ அதோட சிக்னல் இங்க வருதான்னு நான் பார்த்து சொல்றேன். ஒகே?”

மறுபக்கத்தில் அவன், “சரி” என்றான்.

அவள் சொன்னதைப்போல அவன் செய்ய, அவன் கொடுத்த சிக்னலால், இங்கே அவளறையில் வைத்திருந்த விளக்கு மற்றொரு நிறத்திற்கு மாறியது. அவள் முகத்தில் புன்னகை.

ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “எனக்கு வரலையே, இன்னொரு டைம் பண்ணேன்” என கேட்க, மறுபடியும் இங்கே விளக்கு நிறம் மாறியது.

“இப்போ வந்துச்சா?” அவன் கேட்க, “ப்ச் இல்ல, சரி விடு. ஜூனியர்ஸ்ட்ட சொல்லிடறேன். நீ அதை யூஸ் பண்ணிக்கோ” என்றாள் புன்னகைத்துக்கொண்டே.

அவ்வளவுதான் அவர்களின் பேச்சு. போனை வைத்துவிட்டான்.

“வாவ், லாம்ப் ஒர்க் ஆகுது. அவன் வீட்ல ஏற்கனவே ஸ்டடி லாம்ப் இருக்கு. ஒருவேளை அவன் இதை யூஸ் பண்ணுனான்னா கண்டிப்பா என் ஞாபகம் வரும். இல்ல ஒருவேளை என்னை அவனுக்கு பிடிச்சுருக்குன்னா, என் ஞாபகம் வர்றப்ப இதை யூஸ் பண்ணுவான். அப்போ நான் கண்டு பிடிச்சுடுவேன்” தனக்குத்தானே பேசிக்கொண்டாள். காதல் கிறுக்குத் தலைக்கேறிவிட்டது.

அதே நிலையில் ஓரிரு நாட்கள் நகர்ந்தது. விளக்கு எரிந்தபாடில்லை.

“அவனைப் பத்தி தெரிஞ்சே இதெல்லாம் அவனுக்கு குடுத்தியே… உன்ன சொல்லணும்” என திட்டிக்கொண்டாள்.

ஒருநாள் இரவு, அவளிடம் இருந்த விளக்கில் நிறம் மாறியது. அது அவனிடம் இருந்து வந்த சிக்னல். அதைப் பார்த்தவளுக்கு அவ்வளவு சந்தோஷம்.

உடனே அவனுக்கு மெசேஜ் அனுப்ப கை பரபரத்தது. பின் கண்டுபிடித்துவிடுவான் என கட்டுப்படுத்திக்கொண்டாள்.

இப்படியாக அவ்வப்போது அந்த விளக்கு நிறம் மாறிக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் அவள் அவனுடன் டூயட் பாட சென்றுவிடுவாள்.

முன்பைவிட மெசேஜ் கம்யூனிகேஷன் அதிகமானது. அவள் அவனுக்கு குட் மார்னிங்கில் ஆரம்பித்து, காலை உணவு, கல்லூரி, ஆஃபீஸ், பின் இரவு உணவு என குட் நைட்டுடன் முடிப்பாள்.

அவனிடமும் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது அவளுக்கு. ஏதாவது அவள் கேட்டால் பதில் வரும். சிலசமயம் அதே கேள்வியை அவளிடம் கேட்பான் அதுவும் அவள் கேட்டபின். அவ்வளவுதான்.

சில நாட்களில், வெண்பாவிற்கு மொட்டை மற்றும் காது குத்தும் நிகழ்வு நடந்தது. அதற்குச் செழியன் வந்திருந்தான். அவனைப் பார்த்தவுடன், அவ்வளவு சந்தோஷம். ஆனால் இம்முறை இருவருக்குமே எப்போதும் கிடைக்கும் தனிமை கிடைக்கவே இல்லை.

அவ்வப்போது இருவரும் பார்வையால் மட்டுமே சந்தித்துக்கொண்டனர்.

செழியன் மடியில் உட்காரவைத்து வெண்பாவிற்கு காது குத்தும்போது, அவள் அழுத அழுகை செழியனையும் கண்கலங்க வைத்தது. கவிதா, வெண்பாவையும் அவனையும் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ப்ரியாவிற்கு அங்கு நடந்த எதுவமே மனதில் பதியவில்லை. அவன் மட்டுமே தெரிந்தான். ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக பார்க்கையில், சரியாக லட்சுமி அவளை அழைத்ததால் போகவேண்டியதாயிற்று.

அவனுக்கும் தேர்வு நடந்துகொண்டிருந்ததால், அன்றைய மதியமே கிளம்பியும் விட்டான்.

நாட்கள் இப்படியே சென்றது. ப்ரியாவும் இறுதியாண்டு படித்துமுடித்தாள்.

படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட, சென்னையிலேயே வேலைக்கு சேர்ந்தாள்.

சில மாதங்கள் கடந்தது. அவள் எப்போதும் கலகலவென்று இருப்பதால், ஆஃபீஸிலும் அவளை அனைவருக்கும் பிடிக்கும். உடன் பணிபுரிபவர்களை கலாய்ப்பதும், கேலியும் கிண்டலுமாக அவள் இருக்கும் இடம் மகிழ்ச்சியுடன் இருக்கும்.

இதுபோன்ற பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது? அப்படி அவளை அவளுடைய லீட்டுக்கு பிடித்துப்போக, அவளிடம் பேசவேண்டும் என பேன்ட்ரிக்கு அழைத்துச்சென்றான்.

‘அவளுக்கு என்ன பிடிக்கும் எது குடிப்பாள்’ என்று அவனுக்குத் தெரியும். அவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்தான்.

“என்ன ரிஷி, உபசரிப்பெல்லாம் பலமா இருக்கு. என்ன ஏதாச்சும் காரியம் ஆகணுமா?” குறும்புடன் கேட்டாள்.

அவன் புன்னகைத்து, “எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல இசைப்ரியா. நான் சொல்றத கேட்டுட்டு, டோன்ட் கெட் மீ ராங்” என்று தயங்க, ப்ரியாவிற்கு மூளையில் மணி அடித்துவிட்டது. அவன் என்ன சொல்லப்போகிறான் என புரிந்துவிட்டது.

அவன் கண்கள் அதை அப்பட்டமாக காட்டியது.

“யு ஆர் அ குட் ஃபிரண்ட் ஆஃப் மைன். பட் மனசு அதுக்கும் மேல ஏதோ இருக்குன்னு சொல்லுது. ஐ திங்க் ஐ லவ் யு” என விஷயத்தை போட்டு உடைக்க, ப்ரியா புன்னகைத்தாள்.

அவளுக்குப் பலமுறை உதவியுள்ளான். சிரத்தை எடுத்து அவளுக்கு ஆஃபீஸ் வேலைகளை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறான். ஓரிரு முறை அக்கறை எடுத்து அவளுக்கு சில விஷயங்களில் துணையாக நின்றிருக்கிறான். ப்ரியாவும் அவனுடன் நிறைய பேசியிருக்கிறாள். அவனும் நிறைய பகிர்ந்துள்ளான் அவளிடம்.

மிகவும் கண்ணியமானவன். யாரையும் ஈர்க்கும் தோற்றம். இப்போதுகூட சில பெண்களின் கண்கள் அவனை வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

அவன் டீமில் வேலை பார்க்கும் சில பெண்களுக்கு அவனை மிகவும் பிடிக்கும். ப்ரியாவிற்கும் அவனை பிடிக்கும். ஆனால் நட்பின் ரீதியாக மட்டுமே.

“ஐம் சாரி ரிஷி. என்னையும் அறியாம உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் உருவாக நான் காரணமா இருந்துட்டேன். சாரி அகைன்” என நிறுத்தி, “ஐம், கமிடெட்” என்றாள் நேராக.

அதைக் கேட்டு அவன் அதிர்ந்தான். பின், “ஹே என்னை பிடிக்கல, இல்ல டைம் வேணும்ன்னு சொல்லு. ஒகே, ஐ அக்செப்ட். பட் எதுக்கு கமிடெட்னு பொய் சொல்லணும்” அவனிடம் இதுகுறித்து அவள் எதுவும் சொன்னதில்லை. ஆகவே திடமாக நம்பினான் அவள் பொய் சொல்கிறாள் என.

“இங்க பாருங்க ரிஷி. நீங்க சொன்னதுபோல யு ஆர் ஒன் ஆஃப் மை குட் ஃபிரண்ட்ஸ். அதனாலதான் நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன். என்னோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி உங்ககிட்ட பொய் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல” என்றாள் பொறுமையாக மற்றும் தெளிவாக.

அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை. “ஷோ மீ தி ப்ரூஃப் (Show me the proof)” இருவருக்குள் இருக்கும் நட்பின் உரிமையுடன் கேட்டான்.

ப்ரியா கொஞ்சம் பொறுமை இழக்க ஆரம்பித்தாள். ஆதாரத்துக்கு அவள் எங்கே போவாள்?

“வாட் நான்சென்ஸ், நான் எதுக்கு ப்ரூவ் பண்ணணும்? சைல்டிஷ் ஆஹ் பிஹேவ் பண்ணாதீங்க ரிஷி” கொஞ்சம் கோபமாக வார்த்தைகள் வந்தது.

“நான் சொன்ன விஷயத்தை மறந்துடு. ஒரு ஃபிரண்டா கேட்கறேன்” என அவன் பேச, கைகாட்டி அவனை தடுத்தாள் ப்ரியா.

“ஃபிரண்டாவே இருந்தாலும் இட்ஸ் மை பர்சனல். ஷேர் பண்ணணும்னு அவசியம் இல்லை” என சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாள்.

ரிஷியின் மீது வந்த கோபத்தை விட, செழியன் மீதே அதிகம் கோபம் வந்தது.

இதுபோதாதென்று மதியம் அனுப்பிய மெஸேஜுக்கு அவனிடம் இருந்து பதில் வரவில்லை. அவன் மேல் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது.

அவளிடத்திற்கு வந்து உட்கார, சிறிதுநேரத்தில் ரிஷியும் வந்துவிட்டான். அடுத்தடுத்துதான் இருவரின் இருக்கையும்.

செழியன் மீது கோபம், ரிஷியின் மீது கோபம் என அவள் மனம் கனன்றுகொண்டிருக்க, மொபைலில் பீப் சத்தம்.

திரையில் ‘இளா’ என தெரிந்தது. ‘கோபத்தில் ஏதாவது அனுப்பிவிடுவோம்’ என நினைத்து திறந்து கூடப் பார்க்கவில்லை.

சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் பீப். செழியனிடம் இருந்துதான். மொபைலை பார்க்காமல் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கடந்திருக்க, இப்போது செழியனிடம் இருந்து கால் வந்தது.

முதலில் கோபம் வந்தாலும், ஏதாவது அவசரமோ என நினைத்து அட்டண்ட் செய்தவுடன், “ஹ்ம்ம்” என்று மட்டும்தான் சொன்னாள்.

அடுத்த சில நொடிகள் செழியன் சொன்னதைக்கேட்டு முகத்தில் முப்பத்தி ரெண்டு பற்கள் தெரிய புன்னகைத்தாள். மனம் ரெக்கை கட்டிக்கொண்டு காற்றில் பறந்தது. கோபமெல்லாம் அந்த காற்றோடு கண்காணாமல் பறந்து போனது.

***

14
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved