தனிப்பெரும் துணையே – 6

தனிப்பெரும் துணையே – 6

செழியனிடம் இருந்து அழைப்பு வந்ததும் அதை எடுத்த ப்ரியாவிடம் அவன்,

“இசை, சாரி ஒர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ணதுக்கு. எனக்கு யார்கிட்ட இதை சொல்றதுன்னு யோசிச்சப்ப, உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. நான்… எனக்கு PhD பண்ணச்சொல்லி ஆஃபர் வந்துருக்கு. ரிசெர்ச் அஸிஸ்டன்ஷிப்!” கொஞ்சம் படபடப்புடன் சொன்னான்.

சின்ன வயதிலிருந்து அவளை அனைவரும் ப்ரியா என்றே அழைப்பார்கள். அவளும் அனைவரிடம் தன்னை ப்ரியா என்றே அறிமுகப்படுத்திக்கொள்வாள். ஆனால் இன்று!

அவன் இசை என்று அழைத்தது அழகாக இருந்தது. கூடவே அவனுக்கு நடந்த முக்கியமான நிகழ்வை தன்னிடம் பகிர்ந்துகொள்ள தோன்றியுள்ளது. இதுபோதுமே! நான் அவன் மனதில் இருக்கிறேன் என்பதற்கு என நினைத்து சந்தோஷத்தின் மிகுதியில், “வாவ் இளா, கங்ராட்ஸ். சோ ஹாப்பி ஃபோர் யு” எதேச்சையாக ரிஷியை பார்க்க, அவன் ஒருமாதிரி பார்த்தான் ப்ரியாவை.

இங்கே செழியன் தொடர்ந்தான். “தேங்க்ஸ். நீ ஃபிரீயா? கொஞ்சம் பேசலாமா?” என்றவுடன் ப்ரியா இன்னமும் இன்பமாக அதிர்ந்தாள்.

ஒருவேளை, ஐ லவ் யு என்று சொல்லிவிடுவானோ, என நினைத்து இதயம் படபடக்க, ‘ஹுக்கும் சொல்லிட்டாலும்…’ படபடக்கும் இதயத்தை மூளை நிந்திக்க, தன் எண்ணவோட்டத்தை நினைத்து சிரித்துக்கொண்டே, “சொல்லு இளா” என்று அங்கிருந்து நகர்ந்தாள் ப்ரியா.

“நான் டாக்டரேட் பண்ணட்டுமா?” பட்டென அவன் கேட்க, சட்டென ஒரு நொடி அதிர்ந்தாள் ப்ரியா. ‘தன்னிடம் கேட்டு செய்கிறானா?’ என நினைத்து.

“என்கிட்ட போய் கேட்கறயே” என அவள் சொல்லி முடிக்கும் முன்,

“என்னால டிசைட் பண்ணமுடியல. ஒரு செகண்ட் ஒப்பீனியன்க்குதான் உன்கிட்ட கேட்கறேன். இப்போ நான் நல்லா எர்ன் பண்றேன். மாஸ்டர்ஸ்க்கு அப்புறம், இன்னமும் அதிகமாகும். டாக்டரேட் பண்ணணும்னா என் ஜாப் சாக்ரிஃபைஸ் பண்ணனும். ஆஃபீஸ்ல பாண்ட் (bond) பிரேக் பண்ணணும் இல்ல செர்வ் பண்ணிட்டு வெளிய வரணும். இங்க ஸ்டைபெண்ட் தருவாங்க, பட் நான் வாங்க போற சாலரில ஒரு 1/3தான் ஸ்டைஃபண்ட் வரும். ஸம் 40 to 45K.

என்னால சமாளிக்க முடியும். ஆனா வீட்ல சொன்னா அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாரு. மதியத்துல இருந்து காலேஜ்ல இதை பத்திதான் என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. அதான் உனக்கு ரிப்ளை பண்ணக்கூட முடியல. படிக்கணும்ன்னு ஆசை இருக்கு. ஆனா… மண்டையே வெடிக்குது இசை” மூச்சுவிடாமல் பேசி முடித்தான் செழியன்.

ப்ரியாவின் மனதிலோ, அவன் கடைசியாக சொன்ன, ‘மண்டையே வெடிக்குது இசை’ என்ற வாக்கியம் அவளை தாக்கியது.

அவன் குரலில் யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற தவிப்பு தெரிந்தது. அவன் இடைவெளி விடாமல் பேசியதை பார்க்கும்போது… தன் சந்தோஷத்தை, தன் ஆசையை, தன் நிலையை பகிரவேண்டும் என்ற தவிப்புதான் தெரிந்தது.

“இளா ரிலாக்ஸ், ஒன்னொன்னா யோசி. யு வில் கெட் அன் அன்செர்” அவனை முதலில் சாந்தப்படுத்த நினைத்தாள்.

“ஹ்ம்ம்” அவன் பதில் தர, “சரி ஆஃபீஸ் பாண்ட்ல என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கு?” அவனிடம் கேட்டாள்.

“ஒன் இயர் ஒர்க் பண்ணணும் இல்லைனா, மாஸ்டர்ஸ்க்கு அவங்க ஸ்பென்ட் பண்ணத டபுளா ரிட்டர்ன் பண்ணணும்” என்றான்.

“ஹ்ம்ம், நீ பாண்ட் சர்வ் பண்ணிட்டு வர்றவரை இங்க வெயிட் பண்ணுவாங்களா?” ப்ரியா கேட்க,

“இல்ல. எக்ஸாம்ஸ் முடிஞ்சு நாலு மாசத்துல ஜாயின் பண்ணணும். இல்ல நெஸ்ட் பேட்ச்னா ஒரு வருஷம் கழிச்சு” என்றான்.

“சரி. உன் ஆஃபீஸ்ல சிட்டுவேஷன் சொல்லி ரிலாக்சேஷன் கேட்டு பாரேன். மே பி அவங்க ஒத்துக்கலாம் இல்லையா?”

“கேட்டுட்டேன். முடியாதுன்னு சொல்லிட்டாங்க.”

“ஹ்ம்ம். பாண்ட் பிரேக் பண்ணிடலாமா? பணம் வேணும்னா நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா?”

சில நொடி மௌனத்திற்குப்பின்,

“அவ்ளோ அவங்களுக்கு குடுக்குற அளவுக்கு ஒர்த் இல்ல. அதுக்குதான் full term சர்வ் பண்ணிடலாம். என்ன ஒரு வருஷம்தானே. எக்ஸாம் எழுதி உள்ள வந்துடலாம்” ஒரு சின்ன தெளிவு கிடைத்ததுபோல் உணர்ந்தான் போல. அவன் பேச்சு ப்ரியாவுக்கு அப்படி தோன்றியது.

“Are you sure?” ப்ரியா கேட்க, “ஹ்ம்ம், தேங்க்ஸ்” என்ற பதில் வந்தது. இப்போது அவன் குரல் சீராக இருந்தது போல உணர்ந்தாள் ப்ரியா.

“எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்” ப்ரியா சொன்னவுடன், “தேங்க்ஸ் வேணாம்னா கிஃப்ட் வேணுமா?” அவன் இதை சொன்னவுடன், ‘ஆஹ் நீயாடா பேசறது’ என முழித்தாள் ப்ரியா.

பின், “குடுத்தா வேணாம்னு சொல்லவா போறேன்” என்றாள் புன்னகையுடன்.

செழியனிடம் பேசிவிட்டு ப்ரியா உள்ளே வர, ரிஷி அவளைப் பார்த்தான்.

அவள் இருந்த மனநிலையில், ரிஷியை பார்த்து புன்னகைக்க, அவன், “பரவால்ல. பிளான்லாம் பலமாதான் இருக்கு. என்ன பாய் ஃபிரண்ட் கூட பேசப்போனேன்னு பொய் சொல்லபோறயா?” என்றான் நக்கலாக.

அவள் கொஞ்சம் நல்ல மனநிலையில் இருந்ததால், “கம்மான் ரிஷி. நான் எதுக்கு பொய் சொல்லணும்? ஹி இஸ் இளஞ்செழியன். அதானி பவர்ல ஒர்க் பண்ணிட்டு இப்போ மும்பைல டாடா பவர்ல ஒர்க் பண்ணிட்டு இருக்காரு. ஹி இஸ் ஆல்சோ டூயிங் ஹிஸ் மாஸ்டர்ஸ். சீக்கிரம் முடிஞ்சிடும்” என சொன்னவள் தற்போது அவனுக்குக் கிடைத்த PhD ஆஃபர் வரை சொல்லிமுடித்தாள்.

ரிஷியின் முகத்தில் ஏமாற்றம் வந்து சென்றது. ப்ரியா அதைப் பார்த்து கொஞ்சம் வருந்தினாலும், இத்தோடு இதற்கு முடிவு கிடைத்துவிட்டது என நினைத்து வேலையில் மூழ்கினாள்.

சில நாட்களில், செழியனும் அவனுடைய முதுகலை படிப்பை முடித்தான். முடித்தது மட்டும் இல்லாமல், பல்கலைக்கழகத்தில் இரண்டாம் இடம். இளங்கலையில் விட்ட இடத்தை இங்கு பிடித்தான். அதையும் ப்ரியாவிடம்தான் சொன்னான்.

இப்படி நாட்கள் செல்ல, திடீரென ஒரு நாள் மாலை நேரம் நெருங்கும்போது அவளை அழைத்தான் செழியன்.

“நீ ஃபிரீயா?” அவன் கேட்க, “சொல்லு இளா” என்றாள்.

“நான் உன் ஆஃபீஸ் கிட்டதான் இருக்கேன். மீட் பண்ண முடியுமா?” என கேட்க, மறுபடியும் இன்ப அதிர்ச்சி.

அவள் கேட்ட அதே, “லைன்ல இருக்கியா?” இப்போது அவன் கேட்க, “இதோ, அஞ்சு நிமிஷம்” என்றவள் கால்களும் கைகளும் பரபரத்தது. ஒரு முறை எழுந்தாள். மறுபடியும் உட்கார்ந்தாள். ரிஷி இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பின், அவசரமாக கிளம்பினாள். தரை தளத்தை அடைந்த போதுதான், ‘அட, ஒரு டைம் ரெஸ்ட் ரூம்ல எப்படி இருக்கேன்னு பார்த்துட்டு கிளம்பியிருக்கலாமோ’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு அவன் முன்னே சென்று நின்றாள். கொஞ்சம் படபடப்பாக இருந்தது.

அவளைப் பார்த்தவுடன், அவன் புன்னகைத்தான். “சென்னை வந்ததை சொல்லவே இல்ல. என்னை திடீர்னு?” கொஞ்சம் தடுமாறித்தான் வார்த்தைகள் வந்தது அவளிடமிருந்து.

“ஒரு சின்ன வேலையா இங்க வந்தேன். எங்கயாச்சும் உட்கார்ந்து பேசலாமா?” அவன் கேட்டவுடன், தலையை ஆட்டிவிட்டு அவனை அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றாள்.

“இங்க க்ரவ்ட் (crowd) கொஞ்சம் அதிகமாதான் இருக்கும். பட் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். எல்லாரும் நம்ம ஃபிரண்ட்ஸ்தான்” உள்ளே வந்தவுடன், அங்கு வேலை பார்ப்பவரைப் பார்த்து கையசைத்தாள் ப்ரியா.

இருவரும் ஒரு டேபிளில் உட்கார்ந்தனர் எதிரெதிரில். “ஏதாச்சும் சாப்பிட? இங்கே எல்லாமே கிடைக்கும். பஜ்ஜி போண்டா டு பெர்கர்” அவனைப் பார்த்துக்கேட்க,

“இல்ல எதுவும் வேணாம்” அவன் சொன்னதும், “ஒருவேள கமரக்கட்டு, தேன்மிட்டாய், கடலைமிட்டாய், இஞ்சிமரப்பா இதுமாதிரி ஏதாச்சும்?” குறும்புடன் அவள் கேட்க, அவன் புன்னகையுடன் முறைத்தான்.

அவளும் புன்னகைத்துக்கொண்டே, “அண்ணா, ஒரு காஃபி, ஒரு ப்ளாக் டீ, அப்புறம் ஒரு பிளேட் பஜ்ஜி, பிரெஷ் வெஜ் வீட் சான்விச்”

சில நொடிகள் மௌனத்திற்குப்பின், “வந்த வேல முடிஞ்சதா?” ப்ரியா கேட்க, “ஹ்ம்ம், முடிஞ்சது. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” அவளைப் பார்த்து புன்னகையுடன் அவன் சொன்னதும்,

‘ஐயோ மறுபடியுமா? லவ் சொல்ல போறானோ, இல்ல வேறு ஏதாச்சும்? ஏன் இப்படி பார்க்கறான்?’ நெஞ்சம் தடதடவென அடிக்க, ஒரு குரல் அவளை தன்னிலைக்கு கொண்டுவந்தது.

“சர். இடம் இல்ல. கொஞ்சம் அந்தப்பக்கம் உட்கார்ந்துக்கறீங்களா?” ஒருவன் ப்ரியா பக்கத்தில் இருந்த இருக்கையை காட்டி செழியனிடம் கேட்டான்.

செழியன் விழித்து ப்ரியாவை பார்க்க, அவள் கொஞ்சம் அதிர்ந்தாலும், கண்களாலேயே அவனை வரச்சொன்னாள்.

செழியனும் தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டான். இப்போது இருவரும் பக்கத்து பக்கத்தில். கிட்டத்தட்ட இவரின் கைகளும் உரசிக்கொள்ளும் நெருக்கம். ப்ரியாவுக்கு வெளியே சொல்ல முடியாத பல உணர்வுகள் உள்ளத்தில்.

மனதிற்கு நெருக்கமானவனின் அருகாமை, அந்த ஸ்பரிசம், அவனிடம் இருந்து வரும் வூடி சென்ட் (Woody scent) நறுமணம் என அவள் மனம் கொஞ்சம் தடுமாற, மூச்சை மெல்ல உள்ளிழுத்து, தன்னை சமநிலை படுத்திக்கொண்டு, அவனைப் பாராமல், “என்ன சொல்லணும் இளா” சாதாரணமாக இருக்க முற்பட்டாள்.

அப்போது சரியாக ஆர்டர் வந்தடைய, சர்வர் அவளிடம், “என்ன ப்ரியா, பாய் ஃபிரண்ட்டா?” என சிரித்துக்கொண்டே கேட்க, ‘ஐயோ’ என்றாகிவிட்டது ப்ரியாவிற்கு.

செழியனை பார்த்தாள். அவன் வெறுமனே டேபிளை பார்த்து புன்னகைத்தான். ‘இதற்கு என்ன அர்த்தம்?!’ என நினைத்தாலும், அதை புறம் தள்ளிவிட்டு, “ரிலேட்டிவ்ண்ணா” என்றாள் சர்வரிடம்.

“ஒ சரி சரி” என்று சொல்லிவிட்டு அவர் செல்ல, செழியன் வந்த உணவை அவள் பக்கம் நகர்த்திக்கொண்டே,

“ஆஃபீஸ்ல பெனாலிட்டி வேய்வ் அஃப் பண்ணி ரிலீவ் பண்ண ஒத்துட்டாங்க. பட் பார்ட் டைம் ஆஹ் அவங்க கேட்கறப்ப சின்ன சின்ன ஒர்க் செஞ்சு குடுக்கணும்ன்னு கேட்டுட்டாங்க” என்றான் திரும்பி அவளைப்பார்த்து.

“வாவ் இளா. தட்ஸ் கிரேட். இதைதானே முதல்ல சொல்லணும்? இவ்ளோ லேட்டா சொல்வயா?” புருவம் உயர்த்தி கேட்க, அவன் புன்னகைத்தான்.

“அப்புறம் என்ன, இனி Dr. இளஞ்செழியன் ஆயிடுவீங்க. ஐஐடில டாக்டரேட். கலக்குங்க” அவளுக்கும் பெருமையாக இருந்தது இதை சொல்லும்போது. அவன் மறுபடியும் புன்னகைத்தான்.

“எதுல ரிசெர்ச் பண்ணலாம்ன்னு ப்ளான்?” அவள் கேட்க, “தெர்மல் அன்ட் ஃப்ளுய்ட் சயின்ஸ்” என்றான்.

இருவரும் அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, திடீரென ஒரு யோசனை அவள் மூளையில் பளிச்சிட்டது. அடுத்த திட்டத்திற்குத் தயாராகிவிட்டதுபோல அவள் கண்கள் மின்னியது.

‘தன்னால் முடியுமா?’ என மனம் ஒருபுறம் யோசித்தாலும், ‘முடிச்சு காட்டறேன்’ தன்னம்பிக்கையுடன் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்!

அவள் நினைத்து நடக்குமா? பார்ப்போம்!

***

 

 

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்தான் ரிஷி அவன் நண்பர்களுடன். இவர்களை பார்த்ததும் அருகில் வர, கொஞ்சம் அதிர்ந்தாள் ப்ரியா.

பின் சுதாரித்துக்கொண்டு, “ஹாய் ரிஷி…” என்று புன்னகைக்க, செழியனும் திரும்பி ரிஷியை பார்த்தான்.

“இளா, ஹி இஸ் ரிஷி என்னோட லீட். ரிஷி ஹி இஸ் இளஞ்செழியன்” என்றாள் கொஞ்சம் தயக்கத்துடன் எங்கே ஏதாவது உளறிவிடுவானோ என்று.

செழியனை பார்த்து புன்னகைத்த ரிஷி, “ஹலோ, இசைப்ரியா உங்கள பத்தி சொன்னா. காங்ராட்ஸ்” என்றவுடன், செழியன் புரியாமல், “தேங்க்ஸ்” என்றான். பின் ரிஷி ப்ரியாவிடம், “என்ஜாய்” என்று சொல்லிவிட்டு இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு சென்றான்.

“எதுக்கு அவர் எனக்கு காங்ராட்ஸ் சொன்னாரு?” கேள்வியுடன் அவளைப் பார்க்க, ‘ஐயோ. எனக்குன்னு இன்னைக்கு வரிசையா ஆப்பு வைக்கறாங்களே. முதல்ல சர்வர் இப்போ ரிஷி’ என நினைத்தாலும், “நீ யூனிவர்சிட்டி செகண்ட்ன்னு சொல்லியிருந்தேன். அதுக்கு சொல்லியிருப்பான்” என்றாள் திக்கி தடுமாறி.

“உனக்கிட்ட எதுக்கு என்ஜாய்ன்னு சொல்லணும்?” அடுத்த கேள்வி கேட்க, ‘அடேய் கேள்வி கேட்கறது ரொம்ப ஈசி. என்னை கொஞ்சம் யோசிக்கவாவது விடேன்டா’ மனம் வசை பாடினாலும்,

“அவன் எதுக்கு சொன்னான்னு எனக்கு எப்படி தெரியும்? மே பி வேலை செய்யாம கடலை போட்டுட்டு இருக்கேன்ல அதை நினைச்சு கூட சொல்லியிருக்கலாம்” என்றாள். இப்போது செழியன் சிரித்தான்.

ஏனோ அவன் சிரிப்பது அவ்வளவு அழகாக தெரிந்தது அவளுக்கு. அவனையே பார்த்தாள்.

‘இதுபோல உன்னிடம் சிரித்துக்கொண்டு… பேசிக்கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ ஆசைகொண்ட மனம் அவனுடனான இந்த நெருக்கத்தை ரசித்தது.

அவன் சாப்பிட எதுவும் வேண்டாம் என்று மறுத்த போதும் அவனை வலுக்கட்டாயமாக சாப்பிட சொன்னாள்.

படிப்பு பற்றி இருவரும் பேசும்போது, ‘ஸ்டைபெண்ட் மட்டும் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியுமா’ என அவள் கேட்டதற்கு,

அவன், “மேனேஜ் பண்ணலாம். வீட்டு ரெண்ட் 16K. அது என்னோட ப்ரோஃபஸரோட ஓல்ட் அபார்ட்மெண்ட். அதனால என்கிட்ட அவர் அதிகமா ரெண்ட் கேட்கல. கொஞ்சம் தள்ளி போனா ரெண்ட் கம்மியா இருக்கும். பட் காலேஜ் போக வர செலவு இருக்கும். பக்கத்துலன்னா எப்போ வேணும்னாலும் போய்ட்டு வரலாம்” என்றான்.

“ஆல்ரெடி காலேஜ்ல ஒர்க் இருக்கும். அது பத்தாதுன்னு படிக்கணும். இவ்ளோ இருக்கப்ப உன்னால எக்ஸ்ட்ரா ஆபீஸ் ஒர்க்கும் பண்ணமுடியுமா இளா? ரொம்ப ஒர்க்லோட் ஜாஸ்தி இருக்காது?” கனிவுடன் கேட்டாள்.

ரிசெர்ச் அஸிஸ்டன்ஷிப் என்பது, பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்துக்கொண்டே படிப்பது. கிட்டத்தட்ட வாரத்தில் இருபது முதல் முப்பது மணிநேரம் வேலை பார்க்கவேண்டும். அதில்லாமல் படிப்பு.

ப்ரியா கேட்டவுடன், அவளைப்பார்த்து புன்னகைத்தான் செழியன். பின், “நம்ம நினைச்சது, நம்ம விருப்பப்படறது நடக்கணும்னா, அதுக்கு எவ்ளோ வேணாலும் கஷ்டப்படலாம்” என்றான் அவள் கண்களைப் பார்த்து.

‘படிக்கவேண்டும் என்று எவ்வளவு விருப்புகிறான்’ என நினைத்து அவளும் புன்னகைத்தாள்.

“இப்போவாவது வீட்டுக்கு சொல்ற ப்ளான் இருக்கா” அவள் கேட்க, மறுப்பாக தலையசைத்தான்.

அவள் கொஞ்சம் திடுக்கிட்டாள். சொல்லாமல் எப்படி முடியும் என.

அதை அவன் உணர்ந்துகொண்டதுபோல, “மாஸ்டர்ஸ் எப்படி பண்ணேனோ அதுபோலதான். நான் பணம் தரணும்னு இதுவரை அப்பா எதிர்பார்த்ததில்ல. ஒருவேள இனி தேவைப்பட்டுச்சுன்னா, என்னோட சேவிங்ஸ்ல இருந்து குடுத்துடுவேன்.”

“என்ன பார்க்க யாரும் வந்ததில்லை, வரவும் போறதில்ல. எல்லாரும் அவங்க அவங்க வேலை, வாழ்க்கைன்னு பிஸியா இருக்காங்க. இன்னமும் நான் அதானிலதான் வேலை பார்க்கறேன்னு நெனச்சுட்டு இருக்காங்க. மும்பை வந்ததுகூட தெரியாது. டாடாக்கு மாறினது தெரியாது. உன்னத் தவிர.

நான் என்ன பண்றேன்னு யாரும் தெரிஞ்சுக்க ஆசைப்படல. பையன் வேல பார்க்கிறான், கை நிறைய சம்பாதிக்கிறான் அவ்ளோதான். அவங்கள பொறுத்த வரைக்கும் பையன்னா நல்லா சம்பாதிக்கணும். அதுதான் அவனுக்கு அழகு.”

இதை சொன்னபோது அவன் கண்கள் நிச்சயமாக விரக்தியை காட்டியது. கைகள் இரண்டையும் நன்றாக சேர்த்துக்கொண்டான். ஒருவேளை மனதின் நடுக்கம் கைகளில் தெரியக்கூடாது என்பதாலோ?

அதைப் புரிந்துகொண்டாள் ப்ரியா. அவனின் அந்த முகம் பார்க்க முடியவில்லை அவளால். அவன் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ளவேண்டும் என மனம் துடித்தது. ஆனால் மௌனம் மட்டுமே அங்கு நிலவியது.

அதைத் தடுத்தார் முன்பு வந்த சர்வர். இருவருக்கும் குடிக்க டீ மற்றும் காபி எடுத்துவந்தவர் ப்ரியாவிடம், “ப்ரியா, ரிஷி சொன்னாரு காங்ராட்ஸ்” இருவரையும் ஒரு மாதிரி பார்த்து புன்னகையுடன் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இதற்கு முன் ப்ரியா, ரிஷி மற்றும் அவர்கள் சகாக்களுடன் இங்கு வருவார்கள். ப்ரியா அனைவரிடமும் சகஜமாக பழகுவாள். வேலை பார்ப்பவரில் ஆரம்பித்து, ஹோட்டல் நடத்துபவர் வரை இவளை நன்றாகத் தெரியும்.

‘இந்த ரிஷியை என்ன செய்ய, என்ன சொல்லி வெச்சானோ’ ரிஷியை உள்ளுக்குள் திட்டிக்கொண்டே செழியனை பார்க்க, அவனும் அவளைப் பார்த்தான்.

‘ஐயோ இதற்கு என்ன கேள்வி கேட்கப் போகிறானோ கடவுளே’ என நினைத்து திரு திருவென விழித்தாள்.

அதைப் பார்த்த செழியன், “நான் யூனிவர்சிட்டி செகண்ட் வந்ததை சொல்லியிருப்பார் போல” என்றான் சிரித்துக்கொண்டே காபியை அவள் பக்கம் நகர்த்தி.

‘இது நக்கல் சிரிப்பு மாதிரில இருக்கு’ மனது நினைத்தாலும், வெளியில் அசடு வழிய சிரித்தாள்.

பின் இருவரும் அதிகம் பேசவில்லை என்றாலும், அவனுடன் இருக்கும் நேரம் ரம்மியமாக இருந்தது அவளுக்கு.

சில நிமிடங்கள் கழித்து, அவன் கிளம்புகிறேன் என்று சொன்னபோது, சொல்லமுடியாத அதே வலி அவள் மனதில். விருப்பமே இல்லாமல் அவனை அனுப்பிவைத்தாள்.

அன்றே முடிவெடுத்துவிட்டாள். கேட் தேர்வுக்குத் தயாராகவேண்டுமென. அது அவ்வளவு சுலபமில்லை என நன்றாக தெரியும்.

இந்தியாவிலேயே மிகப் பிரபலமான ஐஐடியில் ஒன்று ஐஐடி பாம்பே. அதில் சேர்வது என்பது எளிதல்ல. தீவிர பயிற்சி வேண்டும்.

வீட்டில் மேல்படிப்பு என்று சொன்னால் ஒத்துக்கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்தது. உடனே செழியன் சொல்லாமல் படித்துமுடித்தது நினைவிற்கு வர, இப்போதைக்கு யாரிடமும் சொல்லாமல் தேர்வுக்குத் தயாராவோம் என முடிவெடுத்தாள்.

தேர்வுக்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தாள். தேதிகளை குறித்துக்கொண்டாள்.

எப்பொழுதும் விளையாட்டு மற்றும் துறுதுறுவென இருந்த ப்ரியா, முற்றிலுமாக தன்னை படிப்பில் ஈடுபடுத்திக்கொண்டாள். தேவையில்லாமல் மனம் அலைபாயும் என நினைத்து, செழியனிடம் பேசுவதைக் கூட குறைத்துக்கொண்டாள்.

இதில் அவளுக்கு ஆச்சர்யம் என்னவென்றால், அரிதாக சில சமயம் அவனிடம் இருந்து மெசேஜ் வரும். அதைப் பார்க்கும்போது, அவனிடம் சகஜமாக பேசவேண்டும் என்று தோன்றும். பின், அது தன் இலக்கை எட்ட முட்டுக்கட்டையாக இருக்கும் என தவிர்த்துவிட்டாள்.

பலவிதமாக யோசித்து, ஒருவேளை தான் விருப்பப்படும் பிரிவு (course) கிடைக்கவில்லை என்றால், எளிதில் கிடைக்கக்கூடிய மாற்றுப்பிரிவுக்கும் (backup course) தன்னை தயார் செய்துகொண்டாள்.

 ஐஐடிBயில் எந்த ஒரு பிரிவும் கிடைக்கவில்லை என்றால், I ஐஐடி புனே அடுத்த ஆப்ஷன் என முடிவெடுத்திருந்தாள்.

நாட்கள் விரைவாக நகர, இரவு, பகல், வீடு, அலுவலகம் என பாராமல் தன்னை தேர்வுக்குத் தயார் செய்துகொண்டாள்.

முதல் தேர்வுக்கான நாளும் வந்தது. அன்று காலையில் வேண்டாத தெய்வமில்லை. அதை முடித்து, சில நாட்கள் கழித்து அடுத்த பிரிவுக்கான தேர்வுகளும் எழுதினாள். ஓரளவு நன்றாகவே எழுதியதை போல உணர்ந்தாள். இருப்பினும் முடிவு வெளிவரும் நாளுக்காக காத்திருந்தாள்.

இப்போதுதான் நிம்மதியாக மூச்சு விடுவதற்கான நேரம் கிடைத்தது போல இருந்தது அவளுக்கு. பழையபடி இல்லையென்றாலும், அவ்வப்போது செழியனுக்கு மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தாள்.

அடுத்த ஒரு மாதத்தில், தேர்வுக்கான முடிவு வந்தது. அவள் நினைத்தது போல அவ்வளவு சுலபமாக கிடைக்கும் என தோன்றவில்லை.

விருப்பட்டப்பிரிவு கிடைக்க, அடுத்த சுற்றுக்கான தேர்வு இருந்தது. அதற்கு மும்பை சென்றாகவேண்டும். அதற்கு முதலில் வீட்டில் சொல்லவேண்டும்.

எப்படி என்று யோசித்தபோது, அகிலனிடம் சொல்லிவிட்டு, அவனை அம்மா, அப்பாவிடம் பேசச்சொல்வோம் என முடிவெடுத்தாள்.

அதேபோல அகிலனிடம் சொல்ல, அவன் ஆச்சரியத்துடனும் பெருமையுடனும், “வாவ் குட்டி. சூப்பர் டா, எங்ககிட்டயெல்லாம் சொல்லவே இல்லையே” என குறைபட்டுக்கொள்ள, “சஸ்பென்ஸ்ஸா இருக்கட்டும்னுதான் ண்ணா” என்றாள் புன்னகைத்துக்கொண்டே.

ஆனால் அவன் கேட்ட அடுத்த கேள்வி, அது அவள் எதிர்பார்த்ததுதான், இருந்தாலும் அவன், “ஏன்டா இங்க ஐஐடில கிடைக்கலையா?” என கேட்டவுடன் கொஞ்சம் தடுமாறினாள்.

***

10
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved