தனிப்பெரும் துணையே – 7

தனிப்பெரும் துணையே – 7

ப்ரியா விண்ணப்பித்தால்தானே, ஐஐடி மெட்ராஸிற்கு விண்ணப்பிக்கவே இல்லை. அவள் தேர்வுசெய்தது பாம்பே மற்றும் புனே மட்டுமே. கண்டிப்பாக இந்த கேள்வி எழும் என்று தெரியும் அவளுக்கு.

பெரும்பாலும் மும்பையில் கிடைத்தால் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும், மெட்ராஸில் கிடைத்தால் மும்பையிலும் கிடைக்கும். ஆனால் ப்ரியா தேர்வு செய்த பிரிவு, ஐஐடி மெட்ராஸில் பிரபலமான மற்றும் மிகச்சிறந்த பிரிவு. நிறைய விண்ணப்பங்கள் குவியும் அந்த பிரிவுக்கு. அது அவளுக்கு சாதகமாக அமைந்தது.

“என்னோட கட் ஆஃப் இந்த கோர்ஸ்க்குப் பத்தலண்ணா, அடுத்து நல்ல காலேஜ் பாம்பேதான். அது கூட கிடைக்குமான்னு தெரியல. செகண்ட் ரவுண்ட், அப்புறம் டைரக்ட் இன்டெர்வியூ கூட இருக்கும்” என்றாள்.

அகிலன் அவள் பேசுவதையே பார்த்தான். பின் புன்னகைத்துக்கொண்டே தலையசைத்தான்.

ப்ரியா திடமாக நம்பினாள் அகிலனுக்கு சந்தேகம் வர வாய்ப்பில்லை என்று. செழியன் இன்னமும் அதானி குரூப்ஸில் வேலைப்பார்க்கிறான். அதுவும் மும்பையில் இருந்து பல மையில் தூரம் தள்ளி வேலைப்பார்க்கிறான். அதனால் அந்த கோணத்தில் அகிலன் யோசிக்க வாய்ப்பில்லை என நம்பினாள்.

ஆனால் அப்போது அவள் அறியாதது, அகிலனுக்கு ப்ரியாவின் மேல் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது என்று.

கவிதாவின் வளைகாப்பு அன்று, அவர்கள் அறையில் கவிதாவிற்கு அவன் வளையல் அணிவித்த பின், கீழ் அறையில் மறந்து வைத்துவிட்டு வந்த மொபைலை எடுப்பதற்கு அறையில் இருந்து வெளிவந்தபோது, ப்ரியாவும் செழியனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து அகிலனை பார்க்க முடியாது, ஆனால் அகிலனால் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்த பின், சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிட்டான்.

அடுத்து, புனே இண்டஸ்ட்ரியல் விசிட் என்றபோது கூட சந்தேகம் வரவில்லை. ஆனால் அவுரங்காபாத் மற்றும் மும்பையில் சுற்றுலா என்றபோது ஏதோ பொறி தட்டியது. அதனால்தான் கல்லூரியில் ஏற்பாடு செய்ததா என கேட்டான்.

இருந்தும் மனதில் தோன்றிய இன்னொரு விஷயம்…

‘தானாக தங்கையிடம் வெளிப்படையாக கேட்டு, அப்படி ஒன்றும் இல்லாதபட்சத்தில், அவளை சந்தேகப்பட்டதாக நினைத்துக்கொள்வாள். எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும்’ என நினைத்தான்.

ஒருவேளை அப்படியே ப்ரியாவிற்கு செழியனை பிடித்திருந்தாலும் அதில் தவறில்லை. கவிதாவின் தம்பி, ஒழுக்கமுடையவன், நல்லவன். நல்ல வேலையில் உள்ளான் என நினைத்தான். இதுகுறித்து தன் மனைவி கவிதாவிடம் கூட பேசியுள்ளான்.

மேலும் ப்ரியாவின் மீதும் செழியனின் மீதும் நம்பிக்கை இன்னமும் அதிகம். தவறாக எதுவும் செய்யமாட்டார்கள் என நிச்சயமாக நம்பினான்.

ப்ரியாவிற்கு மேல் படிப்பு படிக்க ஆசை என்று அவனுக்கும் தெரியும். ஆனால் அதற்கு இவ்வளவு சிரத்தை எடுப்பாள் என அவன் நினைக்கவில்லை.

அவளை இப்போது பார்க்க, மிகவும் மெலிந்து, கண்களை சுற்றி கருவளையம் என இருந்தாள். காரணத்தை கேட்டபோது வேலைப்பளு என்றாள்.

இவ்வளவு கஷ்டப்பட்டது செழியனுக்காக என்றால் கண்டிப்பாக தடையாக இருக்கக்கூடாது எனவும் நினைத்துக்கொண்டான்.

ஆனால் அகிலன் அறியாதது, செழியன் மும்பையில்தான் இருக்கிறான். அங்குதான் படிக்கிறான். வேலையில் இல்லை என்பது.

“அம்மா அப்பா கிட்ட பேசறயாண்ணா ப்ளீஸ், உனக்கே தெரியும் ஹையர் ஸ்டடீஸ் படிக்கணும்ங்கறது என் ஆசைன்னு” கெஞ்சும் தொனியில் அவள் கேட்டவுடன், தன்னிலைக்கு வந்த அகிலன், “பேசறேன்டா. எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ போய் தூங்கு காலைல பேசுவோம்” என்றான்.

ப்ரியாவும் புன்னகைத்துவிட்டு சென்றுவிட்டாள். ஆவலுடனும், கொஞ்சம் பயத்துடனும் காத்திருந்தாள்.

அடுத்தநாள் காலை, அகிலன் பேச்சை ஆரம்பித்தான்.

“என்னது படிக்கணுமா? அதுவும் எதுக்கு மும்பைலாம்” லட்சுமி மறுக்க, ஜெயராமன், “லச்சு, படிக்கறதுல என்ன தப்பு? எவ்ளோ பேர் இதுபோல காலேஜ்லாம் கிடைக்கலன்னு இருக்காங்க தெரியுமா? நம்ம பொண்ணுகிட்ட திறமை இருக்கு அது வெளிவரணும்” என்றார்.

ஜெயராமன் எப்போதும் பெண்கள் தனியாக நின்று, யாரையும் சாராது, வாழ கற்றுக்கொள்ளவேண்டும் என நினைப்பவர். கவிதாவுக்காக நிறைய மனைவியிடம் பேசியுள்ளார். இப்போது பெண்ணிற்காக.

லட்சுமி, “அதெல்லாம் சரி. மும்பை ஏன் போகணும். இன்னும் ரெண்டு வருஷம்? அப்போ கல்யாணம் ரெண்டு வருஷம் கழிச்சு…” என்றதும், “அத்த அவ சின்ன பொண்ணு? இப்போவே கல்யாணமா?” என்றாள் கவிதா.

“இப்போவே இல்ல கவிதா. ஆனா இன்னும் ஒரு வருஷம் கழிச்சு பேசறதாதானே முடிவு பண்ணோம். இப்போ ரெண்டு வருஷம் ஆகுமே. நான் மொதல்ல இவ ஜாகதகத்தை ஜோசியர் கிட்ட காட்டறேன்” என்றார்.

ஜாதகம் ஜோசியம் கல்யாணம் என்றதும் ப்ரியா முகம் வாட, அதைப் பார்த்த அகிலன், “அம்மா, அவளைப்பாருங்க. இதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கான்னு. படிக்கட்டும் மா. இப்போ தேவையில்லாம ஜோசியம் எல்லாம் வேணாமே ப்ளீஸ்” என்றான்.

“ஜாதகம் மட்டும்தானே பார்க்கப் போறேன் அகில். உடனே கல்யாணம் பண்ணணும்னா சொல்றேன்?” லட்சுமி சொன்னதும்,

“அகில் சொல்றது கரெக்ட் லச்சு. எல்லாம் கொஞ்ச நாள் போகட்டும். இப்போ ஏதாவது பார்த்து, அதுல ஏதாவது அவங்க சொல்லி, தேவை இல்லாத பிரச்சனை. அவ தலைல என்ன எழுதிருக்கோ அதுதான் நடக்கும். படிக்கணும்ன்னு இருந்தா படிக்கட்டும். ரெண்டு வருஷம் கழிச்சுனாலும், பெருசா வயசாயிடாதே. விடுமா படிக்கட்டும்” ஜெயராமன் சொன்னதும், லட்சுமி அரை மனதாக தலையசைத்தார்.

“தேங்க்ஸ் ண்ணா” தன் அண்ணனை கட்டிக்கொண்டு நன்றி சொன்னாள் ப்ரியா.

“நான் பேசினதை விட, அப்பாதான் செம்ம சப்போர்ட்” என்றான் அகிலன்.

தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் உட்கார்ந்த ப்ரியா, “தேங்க்ஸ் ப்பா. கண்டிப்பா நல்லா படிப்பேன் நானு” என்றதும், “அது எனக்குத் தெரியாதா ப்ரியா, கொஞ்ச நாள்ல இவ்ளோ எஃபோர்ட் போட்ருக்கயே. நல்லா படிடா” என்றார்.

பின் தன் மனைவி உர்ரென்று உட்கார்ந்திருப்பதை பார்த்து, ப்ரியாவிடம் கண்ஜாடை காட்ட, அவள் அம்மா மேல் சாய்ந்துகொண்டு, “அம்மா ரெண்டு வருஷம்தான் மா. ப்ளீஸ் ப்ளீஸ் மா” என கெஞ்ச, அவரும் புன்னகையுடன் சரி என்றார்.

“அண்ணி” என சொல்லிக்கொண்டே கவிதாவிடம் வந்த ப்ரியா, “தேங்க்ஸ் அண்ணி அம்மாகிட்ட பேசினதுக்கு. எப்படியோ எல்லாரும் ஒகே சொல்லியாச்சு. இப்போ குடுங்க அந்த பூஸ்ட்ட” என மேடையில் உட்கார்ந்தபடி கேட்டாள் ப்ரியா.

அவளுக்கு குடிக்க கொடுத்த கவிதா, “எப்போ நெஸ்ட் ரவுண்ட் ப்ரியா” என கேட்டாள்.

“கமிங் மண்டே அண்ணி” என்றதும் அங்கே வந்த அகிலன், “சரி டா அப்போ ஃபிளைட் டிக்கெட் போட்டுடறேன். நானும் கூட போய்ட்டு வந்துடறேன் பேபி” என்று கவிதாவை பார்த்து அகிலன் சொன்னதும், ப்ரியா திருதிருவென முழித்தாள்.

கவிதா, அகிலன் இருவரும் அவளுக்குத் தெரியாமல் புன்னகைத்துக்கொண்டனர்.

“அண்ணா. இப்போ வெறும் ரிட்டன் டெஸ்ட், இன்டெர்வியூதான், மேக்ஸிமம் ஃபோர் டு சிக்ஸ் அவர்ஸ். நான் காலைல போய்ட்டு நைட்குள்ள வந்துடறேன். ஃபிளைட்தானே. சீட் கிடைச்சா, சேர போகும்போது நீங்க வந்து விடுங்க” என்றாள் கெஞ்சலாக.

அகிலன் புன்னகைத்துக்கொண்டே, “சரி டா. பார்த்து போய்ட்டு வா. எல்லாம் நல்லபடியா பாசிட்டிவா நடக்கும்” என்றான். ப்ரியாவும் புன்னகைத்துக்கொண்டே சரி என்றாள்.

கிளம்பும் நாளும் வந்தது. செழியனுக்குத் தெரியாமல் மும்பை வந்திறங்கினாள் ப்ரியா. பின், ஏர்போர்ட்டில் இருந்து ஐஐடி இருக்கும் பவய் வந்தடைந்தபின், செழியனுக்கு அழைத்தாள்.

“எங்க இருக்க” அவள் கேட்க, “காலேஜ்குள்ள என்டர் ஆகறேன். என்ன ரொம்ப நாள் கழிச்சு திடீர்னு கால் பண்ணிருக்க?” செழியன் கேட்டான்.

“ஹ்ம்ம். நான் லேக் சைட் கேட் கிட்ட இருக்கேன்” என்றதும், அந்தப்பக்கம் சத்தம் இல்லை. அவன் கண்டிப்பாக ஷாக் ஆகியிருப்பான் என புரிந்தது அவளுக்கு.

அவள் அடுத்துப் பேசும்முன், காதில் இருந்து போனை இறக்கியபடி, என்ன என்று முகத்தில் கண்டுகொள்ள முடியாத உணர்வுடன் அவள் பக்கவாட்டில் வந்துகொண்டிருந்தான் செழியன்.

அவனைப் பார்த்ததும், மறுபடியும் இதயம் தடதடக்க ஆரம்பித்தது அவளுக்கு.

***

அவளைப் பார்த்த செழியன், கேள்வியுடன், “இன்டெர்வியூவா?” என கேட்க, புன்னகையுடன் ஆம் என தலையசைத்தாள். ஒரு நொடி ஆழ்ந்து அவளையே பார்த்தான்.

பின் கண்களை இறுக மூடி, முகத்தை இடதுபுறம் திருப்பி மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டபடி, மறுபடியும் அவளைப் பார்த்து, “போலாமா” என கேட்க, அவன் முக மாற்றத்தை புரிந்துகொள்ள அவனையே பார்த்துக்கொண்டிருந்த ப்ரியா, அவன் கேட்டவுடன் சரி என்பதுபோல தலையசைத்தாள்.

மெயின் கேட்டிற்கு அவளை அழைத்துச்செல்லும்போது அவன் மௌனமாகவே இருக்க, அவள், “நான் கால் பண்ணப்ப இங்கதான் இருந்தயா?” என பேச்சை ஆரம்பித்தாள்.

“ஹ்ம்ம். லேக்சைட் கேட் வழியாதான் உள்ள போவேன். நீ கால் பண்ணப்பதான் உள்ள என்டர் ஆக இருந்தேன்” அவளைப் பார்த்து சொன்னபோது, சட்டென நடையை நிறுத்திவிட்டு அவள் முகத்தையும், அவளையும் மேலும் கீழும் பார்த்தான்.

அவள் புரியாமல், ‘என்ன’ என்பதுபோல பார்க்க, மறுப்பாக தலையசைத்து, “சாப்பிட்டயா?” என அவன் கேட்க,

முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு, “ப்ளேன்ல மொக்கையா ஒரு சாண்ட்விச். உவாக். நல்லாவே இல்ல, லைட்டா பசிக்குது” என்றவுடன் அவளைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே, “பேக் குடு” என வற்புறுத்தி அவளிடம் வாங்கிக்கொண்டு நடந்தான்.

“நீ டெய்லியும் வீட்ல இருந்து நடந்தே வந்துடுவயா?” அவள் கேட்க, “ஹ்ம்ம் ஒரு ஹாஃப் அன் அவர் வாக். அவ்ளோதான்” என்றான்.

இருவரும் மெயின் கேட் வந்தவுடன், அவளுடைய டாக்குமென்டன்ஸ் சரிபார்க்கப்பட்டு, ஐடி கொடுத்து உள்ளே அனுப்பப்பட்டாள்.

முதலில் அவளை சாப்பிட அழைத்துச்சென்றான். அவளுக்கு மட்டும் அவன் வாங்கிவர, “உனக்கு” அவள் கேட்க, “மெஸ்ல சாப்டுட்டேன்” என்றான் அவளையே பார்த்துக்கொண்டு.

‘மொதல்ல இந்த மெஸ் ஹாபிட் ஸ்டாப் பண்ணணும்’ மனதில் நினைத்துக்கொண்டே சாப்பிட, அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவன் “என்ன திடீர்னு? மாஸ்டர்ஸ்கு ப்ளான்? கேட் ஸ்கோர் என்ன?” அவளை கேட்டான்.

‘ஆரம்பிச்சுட்டானா கேள்வி கேட்க’ மனதில் சலித்துக்கொண்டாலும், அவளுடைய ஸ்கோரை சொல்லிவிட்டு, “திடீர் ப்ளான்லாம் இல்ல. ஒரு வருஷம் வேலைக்கு போய்ட்டு படிக்கணும்ன்னு ஆல்ரெடி முடிவு பண்ணதுதான்” என்றாள் சாப்பாட்டில் இருந்து தலையை தூக்காமல்.

“மெட்ராஸ் அட்டென்ட் பண்ணியாச்சா?” அடுத்த கேள்வி வந்தது. ‘அடேய் என் வீட்ல கூட சமாளிச்சுட்டேன்டா. உன்ன சமாளிக்கிறது பெரிய கஷ்டம் போலயே’ அதே மைண்ட் வாய்ஸ். “ஸ்கோர் பத்தல” என்று அவன் முகம் பாராமல் பதில் தந்துவிட்டு, “ஹாண்ட் வாஷ் எங்க?” என கேட்டாள்.

அவன் காட்டியபின் விட்டால் போதும் என ஓடிவிட்டாள்.

அவள் வந்தபின்பு, “நல்ல ஸ்கோர். கண்டிப்பா விகரஸ்ஸா பிரிப்பேர் பண்ணிருக்கணும். காங்ராட்ஸ்” என்றான் புன்னகைத்துக்கொண்டே.

‘பின்ன சும்மாவா. மூனு ட்ரைனிங் சென்டர்ல கோச்சிங். ஒரு நாளைக்கு அஞ்சு மணிநேரம்தான் தூக்கம் மகனே’ என நினைத்துக்கொண்டு, “தேங்க்ஸ்” என்றாள்.

இருவரும் வெளிய வந்தவுடன் செழியன் அவளிடம், “எத்தனை மணிக்கு ரிட்டன் டெஸ்ட்?” என கேட்க, “டென்க்கு” என்றாள். “ஒரு நிமிஷம்” என்றவன், யாரையோ அழைத்துப்பேசினான் ஹிந்தியில். அவளுக்குப் புரியவில்லை.

“சரி, இன்னும் 40 மினிட்ஸ்தான் இருக்கு. போலாம்… டைம் சரியா இருக்கும்” அவளை அழைத்துச் சென்றான் தேர்வு நடக்கும் இடத்திற்கு. அவளுடன் அவனும் காத்திருக்க, “உனக்கு வேல இல்லையா இன்னைக்கு? நீ போ நான் பார்த்துக்கறேன்” என்றாள்.

“பரவால்ல நான் இருக்கேன். இப்போதான் பேசினேன் ப்ரொஃபஸர்ட்ட. ஈவினிங் டு நைட் வேல பார்த்துப்பேன். இல்ல நாளைக்கு ஓவர் டைம் பார்த்துப்பேன்” என்றான்.

“எதுக்கு சிரமம்” அவள் முடிக்கும்முன், “ஓரளவுக்கு ப்ரஷ் அப் (brush up) பண்ணிட்டல்ல? ரொம்ப கஷ்டமா இருக்காது. பட் பேஸிக்ஸ் ஸ்ட்ராங் ஆஹ் இருக்கணும். இன்டெர்வியூதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்” என்றான்.

“ஹ்ம்ம்” என்றாள். அடுத்த சில நிமிடங்களில், உள்ளே அழைத்தார்கள்.

ப்ரியா ஒருமுறை செழியனை பார்க்க, “ஆல் தி பெஸ்ட்” என்றான் புன்னகையுடன். அவளும் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றாள். அடுத்த மூன்று மணிநேரம். இரண்டு தேர்வுகள். ஒருவழியாக முடித்துவிட்டு வெளியே வந்தாள் ப்ரியா.

வாசலையே பார்த்துக்கொண்டிருந்த செழியன் இவள் வந்ததும், இவள் அருகில் வர, “நல்லா பண்ணிருக்கேன்” என்றாள்.

அவனும் புன்னகைத்து, “குட்… வா, எப்படியும் ஒன் அவர் மேல ஆகும் ரிசல்ட் வர, போய் சாப்பிடுவோம்” என அவளை அழைத்துச்சென்றான்.

இருவரும் சாப்பிட உட்காரும்போது, “ஹே இளா, என்ன எப்பவும் தனியா சாப்பிடுவ. யாரிது?” என கிண்டலுடன் கேட்டபடி ஒருவர் வந்தார்.

அவரை அங்கு எதிர்பார்க்காத செழியன், ஒரு நொடி அதிர்ந்து ப்ரியாவை பார்த்துவிட்டு, “அண்ணா… ரிலேட்டிவ்ணா. இன்டெர்வியூக்கு வந்துருக்காங்க” என்றான். “ஓ சூப்பர் மா! எந்த கோர்ஸ்?” என கேட்க, ப்ரியா பதில் சொன்னாள்.

“நம்ம தமிழ் சார்தான் இன்டெர்வியூ பேனல்ல இருக்காருன்னு நினைக்கறேன். எனிவேஸ் ஆல் தி பெஸ்ட்” சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ப்ரியா செழியனை பார்க்க, “இவர் இங்க டாக்டரேட் முடிச்சிட்டு இங்கயே ரிசெர்ச் ஒர்க் பண்றாரு. சேலம் அவர் ஊரு. அவர் சொன்ன தமிழ் சார், இங்க பத்து வருஷமா வேல பார்க்கறாரு. அவர் உன் பேனல்ல இருப்பார் போல” என்றான்.

ப்ரியா தலையசைத்துக்கொண்டாள். ஆனால் மனதில், ‘எப்போடா கேர்ள் ஃபிரண்ட்ன்னு சொல்லுவ. ஹ்ம்ம், நான் சொல்ல மாட்டேன் உன்ன சொல்ல வெக்கறேன்’ என நினைக்கும்போது,

“இங்க நம்ம சாப்பாடு சுமாராதான் இருக்கும். உனக்கு எப்படி இதெல்லாம் செட் ஆகும்? நேத்தே வந்திருக்கலாமே? ஹாஸ்டல்ல கூட ஸ்டே பண்ணிருக்கலாம்…” செழியன் கேள்வி படலத்தை ஆரம்பித்தான். ப்ரியாவும் சளைக்காமல் பதிலளித்தாள்.

இப்படியே நேரம் செல்ல, முதல் சுற்றுக்கான ரிசல்ட் வந்தது. ப்ரியா இன்டெர்வியூவுக்கு தேர்வாகி இருந்தாள்.

இப்போது கொஞ்சம் படபடப்பும் அவளிடம் ஒட்டிக்கொண்டது. எப்படியும் மாற்றுப்பிரிவு இருக்கிறது. ஆனாலும் இது அவள் விருப்பப்படும் பாடப்பிரிவு.

ஒவ்வொருவராக உள்ளே சென்று முப்பது நிமிடம் குறையாமல் வெளியே வரவில்லை. முடித்துவிட்டு வந்த சிலர் முகம் சோகத்தைக் காட்டியது.

ப்ரியா இன்டெர்வியூ லிஸ்ட் சென்று பார்த்தாள். அதில் பெயர்கள் பக்கத்தில் இருந்த கேட் ஸ்கோரை பார்த்தாள். இவளை விடவும் அதிகம் ஸ்கோர் செய்த நிறைய பெயர்கள் இருந்தது. அதைப் பார்த்து முகம் வாடிப்போய், அவன் அருகில் அமர்ந்தாள்.

கைகள் இரண்டும் பிசைந்தபடி இருக்க, அவளையே பார்த்தான் செழியன். சில நொடிகளுக்குப் பின், ஆதரவாக அவளின் ஒரு கையை பற்றிக்கொள்ள, திடுக்கிட்டு செழியனை பார்த்தாள்.

“டென்ஷன் வேணாம். ஈசியா ஃபேஸ் பண்ணு. இந்த ரவுண்ட்ல உன்னோட ப்ரெசன்ஸ் ஆஃப் மைண்ட் ரொம்ப முக்கியம். டென்ஷனா இருந்தா, சிம்பிள் கொஸ்டின்க்கு கூட ஆன்சர் பண்ணமுடியாம போய்டும்” என அவளை தேற்றினான். அவளும் புன்னகைத்துக்கொண்டே தலையை ஆட்டினாள்.

இது அவளுக்குத் தெரிந்த விஷயம்தான். இந்த சுற்று அறிவுத்திறன் – mental ability பற்றியது என்று. இருந்தும் கொஞ்சம் படபடப்பு இருந்தது. இப்போது செழியன் பேசியதும், அதுவும் அந்த ஆறுதல், அவளைக் கொஞ்சம் லேசாக உணரச்செய்தது.

அவன் அவள் கையை விடவில்லை. அவளும் விலக்கிக்கொள்ளவில்லை. அந்த தொடுகை வேறு எந்த ஒரு எண்ணத்தையும் அவர்களுக்கு விளைவிக்கவில்லை.

சில நிமிடங்கள் கழித்து ப்ரியா அழைக்கப்பட்டாள். அவள் செழியனை பார்க்க, பற்றியிருந்த அவள் கையில் அழுத்தம் தந்து, “குட் லக்” என்றான்.

அவனின் அந்த முகம், அதை மனதில் நிறுத்திக் கொண்டாள். முழு நம்பிக்கையுடன் உள்ளே செல்ல, அங்கே நான்கு பேர் இருந்தனர் அதில் ஒரு பெண்மணி.

இவளுடைய resume பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இவளை உட்காரச்சொன்னார்கள்.

பின், அடுத்த முப்பது நிமிடம், டெக்னிகல் கேள்விகள் கேட்கப்பட்டது. தைரியமாக பதில் தந்தாள். ஒரே ஒரு கேள்விக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் மற்ற பதில்களில் ஓரளவிற்கு அவர்கள் திருப்தி அடைந்தனர்.

அது முடிந்தபின், அங்கிருந்த ஒருவர் ஆங்கிலத்தில், “ஏன் பாம்பே? மெட்ராஸ் கூட கிடச்சிருக்குமே” கேட்டார் அதே கேள்வி.

ப்ரியா, ‘மறுபடியுமா? இன்னும் எத்தனை பேர்’ என நினைத்து புன்னகையுடன், “நான் உண்மைய சொல்றதா? இல்ல இன்டெர்வியூகாக அன்சர் பண்றதா?” என கேட்க, அங்கிருந்தவர்கள் முகத்தில் குழப்பத்துடன் புன்னகை.

“உண்மைய சொன்னா சான்செஸ் அதிகம்” என்றார் கேள்விகேட்டவர்.

முதல் முறை உண்மையை சொல்ல அவள் மனம் மற்றும் மூளை இரண்டுமே வலியுறுத்தியது. “மெட்ராஸ் கண்டிப்பா கிடைச்சுருக்கும், பட் என்னோட பாய் ஃபிரண்ட் இங்கதான் ரிசெர்ச் பண்றாரு. முன்னாடி இதுபோல சான்ஸ் கிடைக்கல, சேர்ந்து படிக்க. இப்போ… இதை மிஸ் பண்ண விரும்பல” என்றாள் நேராக.

சில நொடிகளுக்குப்பின்…

“அன்எக்ஸ்பெக்டட் அன்சர்” என புன்னகைத்தார் ஒருவர். “ஓகே. முடிந்தது. நீங்க கிளம்பலாம்” என்றதும் ப்ரியா நன்றி கூறிவிட்டு திரும்பி நடக்க,

“Get prepared to study for the next two years with your boyfriend” என்றார் அங்கிருந்த பெண்மணி. ப்ரியா கண்கள் மின்ன திரும்பி அவர்களை பார்த்து புன்னகைத்துவிட்டு வெளியேறினாள்.

அங்கே செழியன் இவள் வருகைக்காக காத்திருந்தான். அவன் கண்களில் இப்போது படபடப்பு அப்பட்டமாக தெரிந்ததோ!

***

8
2
2
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved