தனிப்பெரும் துணையே – 8

தனிப்பெரும் துணையே – 8

ப்ரியா வெளிவந்தவுடன், அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து செழியன் புன்னகைத்துக்கொண்டே வர, “நல்லா பண்ணிருக்கேன். தெரியல பாப்போம். டூ டேஸ் ஆகும்ல. கிடைக்கலனா அடுத்த ஆப்ஷன், என்னன்னு பார்க்கணும்” என்றாள் அவனைப் பார்த்து அவன் முகமாற்றங்களை உணர.

இதுவரை இருந்த புன்னகை கொஞ்சம் மறைந்தாலும், “பி பாசிட்டிவ். கண்டிப்பா கிடைக்கும். வேற ஆப்ஷன் என்ன யோசிச்சிருக்க” ஒரு சின்ன தடுமாற்றம் தெரிந்ததோ அவனிடத்தில்?

“புனே. இல்லைனா, கான்பூர் இல்ல…” என அவள் அடுக்கிக்கொண்டே போக, “ரொம்ப யோசிக்க வேணாம். மொதல்ல இந்த ரிசல்ட் பாப்போம்” என்று சொல்லிவிட்டு அவன் முன்னே நடக்க, ப்ரியா மனதில் மிகுந்த சந்தோஷத்துடன் அவனுடன் நடந்தாள்.

அவனே யோசிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, “நான் உன்ன இங்க வேற ஏதாச்சும் ஆப்ஷன் வச்சிருக்கையானு கேட்டேன். வேறெதாச்சும் அப்ளை பண்ணிருக்கியா?” கேள்வியுடன் அவளைப் பார்க்க, இல்லை என்பது போல உதடுகளை பிதுக்கினாள். ஆனால் உள்ளுக்குள் அவன் பேசுவதை ரசித்துக்கொண்டிருந்தாள்.

அவள்தான் இது இல்லையேல் வேறொன்று, அதுவும் இல்லையேல் மற்றொன்று என பல மாற்று பிரிவுகளை யோசித்து வைத்திருந்தாளே.

“வேற அப்ளை பண்ணா என்னவாம்? ஒன்னே ஒன்னுதான் பண்ணுவயா” கொஞ்சம் ஏமாற்றத்துடன் கேட்டுக்கொண்டே நடக்க, “எனக்கு இதுதான் பிடிச்ச கோர்ஸ்” என்றாள்.

உடனே, “ஓ! அப்போ ஒகே. COAPல அப்ளை பண்ணியாச்சில்ல? சான்செஸ் இருக்கு. வர்ற எல்லாரும் இங்கயே சேர மாட்டாங்க. அதுபோல ஏதாச்சும் ஃபிரீ ஆக வாய்ப்பிருக்கு” என்றான் அவள் முகம் பாராமல்.

அவன் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்த ப்ரியா, அப்படியே அவன் கையை பிடித்துக்கொண்டு, ‘டேய் உன்கூடதான் இங்க படிக்க போறேன் மடையா’ என சொல்லவேண்டும் போல இருந்தது.

“சரி, எத்தனை மணிக்கு ரிட்டர்ன் ஃபிளைட்?” என்றதும், “எட்டு மணிக்கு” என்றாள். இப்போது அவள் முகம் வாடியது. ‘ஐயோ மறுபடியும் பிரிவா’ என்று.

“இப்போ கிளம்பினா கரெக்ட்டா இருக்கும். அங்க போய் டீ, காபி குடிச்சிக்கலாம்” என்றவன் டாக்ஸி புக் செய்தான். அடுத்த ஒருமணிநேரம், ஏர்போர்ட் வந்தடைந்தனர். இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

அவன் எந்த நினைப்பில் இருந்தானோ, ப்ரியாவின் மனதில் சந்தோஷமே நிரம்பி வழிந்தது. வீட்டில் அனைவருக்கும் சொல்லிவிட்டாள் தேர்வு முடிந்தது என.

அனைத்தும் முடித்துவிட்டு அவள் உள்ளே செல்ல நினைக்கும்போது, “இளா” என்றழைத்தவுடன், அவன் என்ன என்பதுபோல பார்த்தான்.

ப்ரியா முகத்தில் புன்னகையுடன், “நீ சொன்னமாதிரி இங்க சாப்பாடு எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல. ஹாஸ்டல் சாப்பாடு எப்படி இருக்கும்னு தெரியல. சோ சீக்கிரம் கொஞ்சமாவது சமைக்க கத்துக்கோ. நான் வரேன். சென்னை போயிட்டு மெசேஜ் பண்றேன்” என்றதும், அவன் எப்போதும் போல மண்டையை ஆட்டினான்.

“மரமண்டை, ஒன்னும் புரியாது” என முணுமுணுத்துக்கொண்டே அவள் நடக்க, திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவன் இப்போதுதான் யோசித்துக்கொண்டிருந்தான். அவளுக்கு சிரிப்பு சற்றும் குறையாமல் இருக்க, மொபைல் அடித்தது. அவன்தான் அழைத்தான். புரிந்துகொண்டான் என புரிந்தது. ப்ரியா எடுக்கவில்லை.

பதிலுக்கு, ‘நான் சென்னை போயிட்டு பேசறேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

என்னதான் அவர்கள் மறைமுகமாக தேர்வாகிவிட்டதாக சொன்னாலும் ரிசல்ட்டை கண்களால் பார்ப்பதற்கு காத்திருந்தாள்.

முடிவும் வந்துவிட்டது. தேர்வாகிவிட்டாள். வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. லட்சுமிக்கு மட்டும் கொஞ்சம் வருத்தம். இருப்பினும் மற்ற அனைவரும் அவரை சமாதானப்படுத்தினர்.

ப்ரியா அலுவலகத்தில் முன்னமே இராஜினாமா கொடுத்துவிட்டிருந்தாள். ரிஷிக்கு மட்டும் தெரியும் செழியனும் அங்கே படிக்கிறான் என. ப்ரியாவை அவனுக்கு பிடிக்கும் இப்போது இன்னமும் பிடித்தது.

காதலுக்காக அவள் எடுத்த முயற்சிகள். இப்படி ஒரு பெண்ணா என்ற ஒரு பிரமிப்பு. இப்படி ஒரு பெண்ணை மிஸ் செய்துவிட்டோம் என்ற சின்ன வருத்தம். இருப்பினும் அவளுக்காக சந்தோஷப்பட்டான்.

அடுத்த ஒரு மாதத்தில், சேர்வதற்கான ஒப்புதல், அட்மிஷன் என நாட்கள் விரைவாக நகர்ந்தது.

செழியனும் அவளும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், ப்ரியா, தினமும் அவனுடன் கழிக்கப்போகும் நாட்களை நினைத்து ஆவலாக காத்திருந்தாள்.

கல்லூரியில் சேர்வதற்கான நாளும் வந்தது. அகிலன் ப்ரியாவுடன் வந்திருந்தான் அவளை விடுவதற்கு. ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டாள்.

செழியனுக்குத் தெரியும் அவள் வந்துவிட்டாள் என்று. ஆனால் அகிலன் உடனிருப்பதால், பார்ப்பதை தவிர்த்துவிட்டார்கள்.

அகிலன் செழியனை அழைத்துப் பேசினான் மும்பை வந்தவுடன். சாதாரணமான பரஸ்பர உரையாடல், அவ்வளவே. ப்ரியா மறுத்தும் செலவிற்கு என பணம் தந்துவிட்டு, தேவையான அனைத்தையும் செய்துவிட்டு கிளம்பினான் அகிலன்.

அடுத்தநாளும் விடிந்தது, முதல் நாள் புதுக்கல்லூரியில். அதையும் தாண்டி செழியனை பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பு. இனி பிரிவு என்பதே இல்லை என்கிற சந்தோஷம். அதனுடன் சேர்ந்து கொஞ்சம் வெட்கம் என பல வித உணர்வுகளுடன் தயாரானாள்.

‘கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்’ என்ற ஒரு குறுஞ்செய்தியை அவனுக்கு அனுப்பிவிட்டு தயாராகி வெளியே வந்தாள். அவளுடன் அவளுடைய புது தோழிகள். ஆம், அதற்குள் ஒரு சிறிய பட்டாளம் தயார் செய்துவிட்டாள்.

வெளியே அவள் வந்தவுடன், கொஞ்சம் தொலைவில், ஒரு தூண் போல இருந்த சுவற்றில் சாய்ந்தவாறு மொபைல் பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்.

மறுபடியும் இதயம் தடதடக்க ஆரம்பித்தது அவளுக்கு. அவள் உடன் இருப்பவர்கள் பேசிக்கொண்டே வந்தாலும், ப்ரியா தலையை மட்டும் ஆட்டியபடி செழியனையே பார்த்துக்கொண்டு நடந்தாள்.

‘முன்னமே வந்துட்டானோ? நம்மள பார்க்கத்தானோ? என்ன பேசறது? ஐயோ… இதென்ன டீன் ஏஜ்ல வர்ற ஃபீலிங்ஸ்லாம் வருதே. ஆண்டவா’ என நினைக்கும்போதே செழியன் எதேச்சையாக திரும்ப, ப்ரியாவை பார்த்துவிட்டான்.

அவளைப் பார்த்து அவன் புன்னகைத்ததும், ப்ரியாவிற்கு ஏதேதோ உணர்வுகள் மனதில். உடன் இருப்பவர்களை போக சொல்லிவிட்டு, செழியன் அருகில் வந்தாள்.

அவன் இன்னமும் புன்னகைத்தான். ஆனால் ப்ரியா, ‘பே’ என என்னபேசுவது என்று தெரியாமல் பார்த்தாள்.

“ஹாஸ்டல் எல்லாம் செட் ஆயிடுச்சா? சாப்பிட்டயா?” என்று முதலில் இப்போது அவன் பேசினான்.

“ஹ்ம்ம்” என்றாள். ‘ஐயோ பேசு ப்ரியா. இதெல்லாம் உனக்கு ஒத்துவராது’ மைண்ட் வாய்ஸ் ஒரு பக்கம் ஓட, “என்னாச்சு? எல்லாம் ஒகேதானே? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவள் பேசாமல் இருப்பதை பார்த்து யோசனையுடன் கேட்டான்.

“அங், அதெல்லாம் ஒன்னுமில்ல. ஃப்ரஸ்ட் டே அதான் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருக்கு” என்றாள். அவன் ஒருமாதிரி அவளைப் பார்த்தான். ‘உனக்கு நெர்வஸ்ஸா?’ என்பதுபோல.

“சரி போலாம். இண்டக்ஷன் (Induction programme)தானே இன்னைக்கு?” என்றவன் நடக்க ஆரம்பிக்க, “ஹ்ம்ம்” மட்டுமே பதில் அவளிடம்.

“ஏதாச்சும்ன்னா கால் பண்ணு. என் டிபார்ட்மென்ட் பக்கத்துலதான் இருக்கு. ஒகே?” என அவளைப் பார்க்க, “ஒகே லன்ச்ல மீட் பண்ணலாம்” என்றாள். அவனும் புன்னகைத்து, அவள் உள்ளே செல்லும்வரை பொறுத்திருந்துவிட்டு சென்றான்.

‘நம்மதான் அவன்கூட படிக்கணும்னு வந்தோம். இதென்ன அவனைப் பார்த்ததும் மொக்கையா நடந்துக்கற ப்ரியா. மதியம் ஒழுங்கா பேசணும்’ தனக்கே புத்திமதி கூறிக்கொண்டு ட்ரைனிங்கில் கவனம் செலுத்தினாள்.

மதியம் ஆனவுடன், அவளுடைய தோழிகள் ஹாஸ்டலுக்கு அழைக்க, அதை மறுத்துவிட்டு, செழியனை அழைத்தாள். ‘ஒழுங்கா பேசு ஒழுங்கா பேசு’ என மறுபடியும் மூளை அறிவுறுத்தியது.

அடுத்த பத்து நிமிடம் அவன் வந்தான். “சாப்பிட போலாமா?” சகஜமாக பேச முற்பட்டாள் ப்ரியா.

“நீ ஹாஸ்டல் போய் சாப்பிடல?” அவன் பதில் கேள்வி கேட்க, அதை கண்டுகொள்ளாமல், “எந்த கேன்டீன்ல சாப்பிடுவ? சரி போலாம். பேச நேரம் இல்ல, நூன் செஷன்க்கு சீக்கிரம் திரும்ப வரணும்” என்றவுடன், அவன் முறைத்துக்கொண்டே புன்னகையுடன், “வா” என அழைத்துச்சென்றான்.

அவளுக்கும் சேர்த்து அவன் உணவு வாங்கச் சென்றவுடன், அவனையே கன்னத்தில் கைவைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘தன்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது. அடுத்து செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயத்தை ஆரம்பிப்போம்’ என்று மனதில் நினைக்க, அவள் எதிரில் வந்து உட்கார்ந்தான் ஒரு தட்டை அவள் பக்கம் வைத்தபடி.

“எவ்ளோ வருஷமா வெளி சாப்பாடு சாப்டுட்டு இருக்க இளா?” கேட்டுக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஏன் கேட்கற? நான் அங்க காலேஜ் படிக்கும்போதே வெளியதான் சாப்பிடுவேன். இங்க வந்தப்பறம் கம்ப்ளீட் ஆஹ்” அவன் சொல்லிமுடிப்பதற்குள்,

“எவ்ளோ வருஷம், உடம்பு என்ன ஆகறது ஹ்ம்ம்? ரெண்டு நாள்தான் உனக்கு டைம். இனி மதியம் உனக்கும் எனக்கும் சேர்த்து ஏதாச்சும் செய்து எடுத்துட்டுவர. ஆரம்பத்துல தயிர் சாதமா இருந்தா கூட பரவால்ல. பட் இனி மதியம் கேன்டீன் கிடையாது. ஒகே?” என்றவுடன், அதிர்ந்து விழித்தான் செழியன்.

***

‘என்ன’ என்பது போல ப்ரியா பார்க்க, “அதெல்லாம் வராது. கஷ்டம். என்னால முடியாது” என்று அவன் உணவு தட்டை பார்த்து சாப்பிட, “ஏன் முடியாது? என்ன கஷ்டம்? Thermal and fluid dynamics படிக்கமுடியுது. யூனிவர்சிட்டி செகண்ட் வரமுடியுது, சமைக்க முடியாதா?” என்றவுடன், அவன் முறைத்தான்.

“இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். நான் என்ன ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கா சமைக்க சொல்றேன்? வயிறு ரொம்ப சாப்பாடு அவ்ளோதானே? ஒழுங்கா செய்து எடுத்துட்டு வரலைன்னா, நான் மதியம் எங்கயும் சாப்பிட மாட்டேன்” என்று கூறிவிட்டு அவன் முகம் பாராமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

அவனும் முறைத்துக்கொண்டே சாப்பிட்டான். இருவரும் சாப்பிட்டு முடித்து, முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு அவள் ட்ரைனிங் நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

சில நொடிகளில், இருவரும் ஒருசேர மற்றவரை பார்க்க, அடுத்தவரது முகத்தைப் பார்த்தவுடன், கோபம் போய் புன்னகை வந்தது. “ஈவினிங் ட்ரைனிங் முடிஞ்சப்புறம் கால் பண்றேன்” என்றாள் அவள். புன்னகைத்துக்கொண்டே சரி என்றான் அவன்.

மாலை ட்ரைனிங் முடிந்து அவள் அழைத்ததும் வந்துவிட்டான். அமைதியாக ஹாஸ்டலை நோக்கி போகும் வழியில் அவனுக்கு ப்ளாக் டீ, அவளுக்கு காபி வாங்கிக்கொண்டு நடந்தனர்.

“ட்ரைனிங் நல்லா போச்சா?” செழியன் ஆரம்பித்தான்.

“ஹ்ம்ம். நீ ஏன் ப்ளாக் டீயே குடிக்கற? இந்த காபி, நார்மல் டீ லாம் பிடிக்காதா” என்று அவள் கேட்டதும், சட்டென அவளைப் பார்த்து, “அடுத்து இதெல்லாம் போட நான் கத்துக்கணுமா” என கேள்வியாக பார்த்தான்.

“ஹாஹாஹா இல்ல. ஏதாச்சும் லாஜிக் இருக்கான்னு தெரிஞ்சிக்கதான்” என்றாள் சிரித்துக்கொண்டே.

“உஃப் பயந்துட்டேன். பெருசா ஒன்னும் இல்ல. ப்ளாக் டீ குடிச்சா ரெஃப்ரெஷிங்கா இருக்கும். தூக்கம் அதிகமா வராது. செரிமானத்துக்கு ஹெல்ப் பண்ணும். அவ்ளோதான். நீயும் ட்ரை பண்ணி பாரு. யு வில் ஃபீல் தி டிஃபரென்ஸ்” என்றான்.

“அப்படிங்கற? ஹ்ம்ம். நீ மட்டும் டெய்லி சாப்பாடு எடுத்துட்டுவா. நான் ப்ளாக் டீ குடிக்கிறேன்” என்றவுடன், அவன் எதற்கு என்பதுபோல புன்னகைத்தான். “நீ செய்யப்போறது டைஜஸ்ட் ஆகணும்ல… அதுக்குதான்” என்று கண்ணடிக்க, அவன் நன்றாக சிரித்தான்.

‘ஐயோ சிரிக்கறானே’ மறுபடியும் ஏதேதோ சொல்லத்தெரியாத உணர்வுகள் அவளுள்.

“அந்த கஷ்டம் உனக்கு கண்டிப்பா வேணுமா? அழகா ஹாஸ்டல்ல சாப்பிடலாம்ல” அவன் கேட்க, “ஹ்ம்ம் சாப்பிடலாம். ஆனா உன்னோட ப்ளாக் டீ இன்டேக் குறையணும். வெளியவே சாப்பிடறதுனால அதிகம் குடிப்ப போல. எக்ஸெஸ் ஆஃப் எனிதிங் இஸ் நாட் குட்” சொல்லிவிட்டு புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான்.

அப்போது அவளுக்குத் தெரியவில்லை. வரும்காலத்தில், இதே வரிகளை அவள் அறிவுரையாக கேட்பாள் என. அதுவே அவர்கள் பிரிவுக்கு அஸ்திவாரமிடும் என.

அவள் ஹாஸ்டல் வந்தவுடன், “நீயும் கிளம்பறியா இளா வீட்டுக்கு?” ப்ரியா கேட்க, “இல்ல வேலை இருக்கு. முடிச்சிட்டு கிளம்ப டைம் ஆகும்” என்றான்.

“ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத” புன்னகையுடன் அவள் சொன்னதும், அவனும் தலையசைத்துப் புன்னகைத்துவிட்டு கிளம்பினான்.

அடுத்தநாள், முந்தைய தினம் போலவே ஆரம்பித்தது. காலை அவன் அவளைப் பார்க்க வந்தான். மதியம் உணவிற்கு அவள் அவனை அழைத்தாள்.

அவனும் அவளை அழைத்துச் சென்றான் வேறு ஒரு இடத்திற்கு.

“இதுவும் கேன்டீனா?” சுற்றிப் பார்த்துக்கொண்டே அவள் கேட்க, ஒரு டப்பாவை டேபிள் மேல் வைத்தான். அவள் ஆச்சர்யத்தில் விழிவிரித்து பார்த்தாள்.

‘இரண்டு நாட்கள் இருக்கிறது என இப்போதைக்கு இவன் செய்யமாட்டான்’ என்று நினைத்தாள்.

“நீ சமைச்சயா? வாவ்” கேட்டபடி ஆவலுடன் டப்பாவை திறந்தாள்.

“இல்ல வேணாம்… உனக்கு இங்க வேற ஏதாச்சும் வாங்கிக்கலாம். இங்க நம்ம சாப்பாடு டேஸ்ட்ல இருக்கும்” தயங்கி அவன் சொல்ல, அதை அவள் கேட்காமல் திறந்தாள்.

உள்ளே எலுமிச்சை சாதம். அதில் சில உளுத்தம்பருப்பு கொஞ்சம் கருகிப்போயிருந்தது.

“எப்படி சமைச்ச?” என கேட்டபடி ருசிபார்த்தாள். சுமார் என்று கூட சொல்லமுடியாத அளவுக்கு இருந்தது. ஆனால் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.

அவள் கேட்ட கேள்விக்கு, “நல்லா இல்லல. கைல மொபைல்ல படிச்சிட்டு இந்த பக்கம் சமைச்சேன். அதான் பருப்பு கருகிடுச்சு. மிளகா, உப்பு, லெமன் போட்டு ரைஸ் கலந்தப்புறம்தான் மஞ்சள் பொடி போடலன்னு ஞாபகம் வந்துச்சு. அதுனால அப்படியே தூவினேன். அது கொஞ்சம் raw ஸ்மெல் வருது” என்றான் பாவமாக.

“வேற செய்லாம்னா லெமன் இல்ல. வேஸ்ட் பண்ணவும் மனசில்லை. அதான் எடுத்துட்டு வந்துட்டேன்” என்றவுடன், “அப்போ என் ஷேர் எங்க?” கேட்டபடி அவள் முறைத்தாள்.

“அது வேணாம், நான் ஈவினிங் பசிக்கும்போது சாப்பிட்டுக்கறேன்” என்றான் தயக்கமாக.

“ஹலோ அது என் சாப்பாடு. குடுக்கப்போறியா இல்லையா?” அவள் கறாராக கேட்க, அடுத்த டப்பாவை டேபிள் மேல் வைத்தான்.

“நீ போய் ஊறுகா மட்டும் தருவாங்கன்னா வாங்கிட்டு வா. கூடவே பொடேட்டோ சிப்ஸ்” அவள் சொன்னவுடன், அதை வாங்க சென்றான்.

அவள் மனதில் சொல்லமுடியாத மகிழ்ச்சி. ‘அவன் தனக்கும் உணவு செய்யவேண்டும் என எந்த அவசியமும் இல்லை. தன்னுடைய பேச்சைக் கேட்டு செய்துள்ளான்’ என்று நினைக்கும்போதே மனம் நிறைவாக இருந்தது.

அவன் வாங்கிக்கொண்டு வந்து அவளுக்குத் தந்தபோது, அவன் கையில் ஒரு காயம் தெரிந்தது. “இளா சுட்டுட்டயா?” கொஞ்சம் பதறியதுபோல கேட்க, “அது பரவால்ல சரி ஆகிடும்” என்றான் புன்னகைத்துக்கொண்டே.

“ஹ்ம்ம், முதல் தடவ ட்ரை பண்றப்ப சுட்டுக்கலைன்னாதான் தப்பு. குட் குட், சமையலோட ஃபர்ஸ்ட் டெஸ்ட்ல பாஸ் ஆயிட்ட” என்றதும் அவன் முறைத்தான் பின் சிரித்தான்.

இருவரும் சாப்பிடும்போது, “ரைஸ் நல்லா வந்துருக்கே இளா. சூப்பர்” என்றதும் அவனுக்கு புரை ஏறியது. உடனே தண்ணீரை அவனுக்குத் தந்துவிட்டு சந்தேகமாக பார்த்தாள்.

“அது, ரைஸ் மட்டும் மெஸ்ல வாங்கினேன். ரைஸ் பண்றது பெரிய ப்ரொசீஜர் போல” மறுபடியும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான். ப்ரியா முறைத்தாள். பின் அவன் முகம் பார்த்ததும் சிரித்துவிட்டாள்.

“அந்த கருகின பருப்பெல்லாம் தனியா எடுத்து வச்சுட்டு சாப்பிடு. நெஸ்ட் டைம் செய்யறப்ப, என்னனென்ன சாமான் வேணுமோ முதல்லயே பக்கத்துல வச்சுக்கோ. பர்னர் ரொம்ப high flameல இருக்கக்கூடாது” என சில அறிவுரைகள் கூறிக்கொண்டே சாப்பிட்டாள்.

அன்றைய மாலை மெடிக்கல் ஷாப்புக்கு முதலில் சென்றார்கள். அவள் பர்னால் வாங்கி அவனிடம் தந்து, “அந்த காயத்துல அப்ளை பண்ணு. இனி சுட்டுட்டன்னா உடனே இதை போட்டுக்கோ” அவள் சொல்லவும் அவனும் புன்னகைத்துக்கொண்டே சரி என்றான்.

பின் இருவரும் அவளுடைய ஹாஸ்டல் வரை சேர்ந்தே சென்றனர். இன்று அவளும் ப்ளாக் டீ குடிக்க வாங்கிக்கொண்டாள். அவன் அதைப்பார்த்து புன்னகைத்தான்.

உடனே அவள், “டைஜெஷன்க்கு வாங்கிக்கல. ட்ரைனிங் ஒரே போர் இன்னைக்கு. செம்ம டையர்ட்டா இருக்கு. இப்போ தூங்கிட்டா நைட் தூங்க முடியாது, அதுக்குதான்” என்றாள் அவளும் புன்னகைத்துக்கொண்டே.

அந்த வாரம் இதே போலவே நகர்ந்தது.

அந்த ஞாற்றுக்கிழமை… காலை வேளையில் ப்ரியா வெளியில் புறப்பட்டாள். சிறிதுநேரத்தில், ஒரு வீட்டின் வாசலில் நிற்க, கதவு தட்டியபின் கதவு திறந்தது.

உள்ளே திகைப்புடன் செழியன் அவளைப் பார்த்தான். கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

‘பேச்சுலர் வீடு. சொல்லாம போற பார்த்துனு ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க. நல்லவேள ஒழுங்காதான் இருக்கான்’ என நினைத்து, “பார்த்துட்டே இருக்கயே. பிடி இளா. தூக்க முடியல” என கையை நீட்ட, அவன் அதே அதிர்ச்சியுடன் அவளிடம் இருந்த பையை வாங்கினான்.

“உள்ள கூப்பிட மாட்டயா?” அவள் முறைக்க, “ஓ! சாரி வா. நான் எதிர்பார்க்கல” என்றதும் உள்ளே சென்றாள்.

அந்த பையை ஓரமாக வைத்துவிட்டு, “என்ன திடீர்னு?” என விழித்தான் செழியன்.

“அந்த பேக் ஓபன் பண்ணு” அவள் சொன்னவுடன், அவன் பிரித்தான். உள்ளே ரைஸ் குக்கர்.

“இனி மெஸ் ரைஸ் வேணாம். இந்த வாரம் நீ சமைச்சியா, சரி இன்னைக்கு நம்ம கைவண்ணத்தைக் காட்டுவோம்னு வந்தேன்” அவள் சொன்னதும் மறுபடியும் அதிர்ந்தான்.

அவன் முகத்தில் அதிர்ச்சியை பார்த்தவுடன், “என்ன…? இன்னைக்கு வெளிய சாப்பிடலாம்னு நினைச்சயா? சாரி நான் விட மாட்டேன்” என்றாள் புருவம் உயர்த்தி.

“கண்டிப்பா சமைச்சுதான் ஆகணுமா?” அவன் கேட்க, ஆம் என தலையசைத்தாள்.

“இல்ல… உனக்கு சமைக்க வருமா? தெரியாதுன்னு சொன்ன?” என்றதும், ப்ரியா முறைத்துக்கொண்டே, “உன்னைவிட நல்லா செய்வேன். சரி சமையல் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு சூப்பர் ஸ்ட்ராங் ப்ளாக் டீ” என்றவுடன், இப்போது அவன் முறைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றான்.

அவள் வீட்டைச் சுற்றிப் பார்க்க, அவள் வாங்கித்தந்த லேம்ப் அங்கே இருந்தது.

அதைப் பார்த்து புன்னகையுடன், “இந்த லேம்ப் இன்னும் யூஸ் பண்றயா இளா?” அவளுக்கும் தெரியும், அவளிடம் இருந்த விளக்கு அவ்வப்போது நிறம் மாறிக்கொண்டிருந்தது என.

அவன் என்ன சொல்லப்போகிறான் என்று ஆர்வமாக இருக்க, சில நொடிகள் மௌனத்திற்குப் பின், “ஹ்ம்ம் யூஸ் பண்ணுவேன். ஹால்ல படிக்கறப்ப, யூஸ் ஆகும்” என்ற பதில் வந்தது. இங்கு இவள் முகம் சின்னதானது.

‘அட, நான் கூட என்னை நினைச்சுதான் யூஸ் பண்றதா நினைச்சேனே. ச்ச, இவன்கிட்ட அதெல்லாம் எதிர்பார்க்கறயே ப்ரியா’ என தலையில் அடித்துக்கொள்ளும்போது, அவள் முன் டீயை நீட்டினான். அவள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே வாங்கிக்கொண்டாள். ஆனால் அவன் புன்னகைத்தான்.

சில நிமிடங்கள் கழித்து, சமைப்பதற்கு உள்ளே சென்ற ப்ரியா, “இளா, எதெது எங்கெங்க இருக்குன்னு சொல்லு” என்று அவனை அழைத்தாள்.

“எல்லாமே அங்க…” அவன் பேச்சு கேட்டு திரும்பிய ப்ரியா, அந்த சின்ன சமையலறையில், அவள் பின்னால் அவன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தவுடன், கண்கள் படபடக்க அவனைப் பார்த்தாள்.

10
3
1
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved