தனிப்பெரும் துணையே – 9

தனிப்பெரும் துணையே – 9

இருவரின் அந்த அருகாமை அனிச்சையாக ப்ரியாவை பின்னே செல்ல வைக்க, அடுப்பு இருக்கும் பக்கம் மேடையில் மோதி நிற்பதற்குள், அவன் அலறிக்கொண்டு “ஹே… இசை. ஸ்டவ்ல சுடு தண்ணி” அவளை தன்பக்கம் இழுத்தான்.

ஒரு நொடி பயந்து அவன் மேல் மோதியும் மோதாமல் ப்ரியா நிற்க, உடனே அவன் பின் தள்ளி, “குடிக்க ஹாட் வாட்டர் போட்டுருந்தேன். நல்லவேள. நீ இடிச்சு உன்மேல கொட்டிருக்கும்” என்றவன்,

“அங்க மேல ஷெல்ஃப்ல தாளிக்கற ஐடம்ஸ், பவுடர்லாம் இருக்கு. கீழ அரிசி பருப்பு இருக்கு. ஏதாச்சும்ன்னா கூப்பிடு” என்று சொல்லிவிட்டு உடனே வெளியேறிவிட்டான்.

அவள் தலையசைத்ததோடு சரி. அப்படியே நின்றாள். என்ன நடந்தது என நினைத்துப்பார்த்தாள்.

அவன் முகத்தில் தெரிந்த அந்த பதட்டம். பின் இரண்டாவதுமுறை, ‘இசை’ என்று சொல்லி அழைத்தது, பின் சுதாரித்துக்கொண்டு அவன் விலகியது. அவளிடம் சின்னதாக வெட்கம் மலரச்செய்தது. இந்தக்காலத்தில் இப்படிப்பட்டவனா! என நினைத்து புன்னகையும் சேர்ந்துகொண்டது.

என்னென்ன வீட்டில் உள்ளது என்று பார்க்க, சில தேவையான பொருட்கள் இல்லாமல் போக, அவனை அழைத்தாள். அவன் சமையலறை வாசலில் வந்து நின்றான்.

அவனைப் பார்த்ததும், முன் நடந்தது நினைவிற்கு வர, அவன் முகம் பாராமல், “எனக்கு சில திங்க்ஸ் வேணும்” என்றாள். “சொல்லு வாங்கிட்டுவரேன்” என்றதும், “பேப்பர் இல்ல மொபைல்ல நோட் பண்ணிக்கோ” என்றாள்.

மொபைலில் ஒவ்வொன்றாக குறிப்பெடுத்துக்கொண்டு, “இவ்வளவா?” அவளை விழித்துப்பார்த்தான்.

“நீ செஞ்ச லெமன் ரைஸ், தயிர் சாதத்துக்குத் தேவைப்படாது. ஆனா நல்லா சமைக்க கண்டிப்பா இதெல்லாம் வேணும். போ சீக்கிரம் வாங்கிட்டு வா இளா” என்று சொல்லிவிட்டு வேலையில் இறங்கினாள்.

மனம் மட்டும் அவனுடனான இந்த சின்னச் சின்ன பேச்சுக்களை, அவன் உடன் இருப்பதை மிகவும் விரும்பியது. சிறிதுநேரத்தில் அவனும் கேட்டதனைத்தையும் வாங்கிவந்தான்.

சமையலறையில் வைத்துவிட்டு அவன் செல்ல முற்பட, “எங்க போற? வந்து ஹெல்ப் பண்ணு. எனக்கு வெங்காயம் தக்காளி கட் பண்ணி குடுத்துட்டு போ” என்றாள் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு.

அவனும் முறைத்துவிட்டு, அவள் பக்கத்தில் நின்று நறுக்க ஆரம்பிக்க, “ரொம்ப பெருசா கட் பண்ணாத. சின்னதாவும் பண்ணிடாத” என பேச்சுக் கொடுத்துக்கொண்டே வேலை செய்தாள்.

அவளுக்கு அழகாக தெரிந்தது, இப்படி இருவரும் சேர்ந்து வேலை செய்வது. ஏதோ ஒரு அன்னியோன்னிய உணர்வை தந்தது. அடிக்கடி அவனைப்பார்த்துக்கொண்டே வேலை செய்தாள். சிலசமயம் வேலையில் அவர்கள் அறியாமல் இருவருக்கிடையில் இடைவெளி குறையும்போது, பெரும்பாலும் அவன் தள்ளியே நின்றுகொண்டான்.

இதுவரை அவள் வாழ்வில் நிறைய ஆண்களை பார்த்திருக்கிறாள். ஒரு பெண் அதுவும் வலிய வந்து பேசும்போது, பழகும்போது, ஒரு சின்ன இடம் கிடைத்தால், அதை பயன்படுத்திக்கொண்டு என்னவெல்லாமோ செய்யும் ஆட்கள் மத்தியில் செழியன் தனியாகத் தெரிந்தான் அவளுக்கு.

வேறுமாதிரியான பார்வை ஒருமுறை கூட இருந்ததில்லை அவனிடம்.

“முடிஞ்சது. கட் பண்ணிட்டேன். நான் வெளிய இருக்கேன். ஏதாச்சும்னா கூப்பிடு” அவளிடம் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான்.

அவன் சென்றவுடன் அந்த இடம் வெறுமையாக உணர்ந்தாள். வேண்டுமென்றே அவனுடன் இருக்க வேண்டும் என நினைத்து சின்ன சின்ன வேலைகளை தந்தாள்.

சில நிமிடங்களில், “இங்க ரொம்ப கன்ஜெஸ்டட் ஆஹ் இருக்கு. உன்னால ஃபிரியா வேல பார்க்கமுடியலை. நான் வெளிய பூண்டு உரிச்சு எடுத்துட்டுவரேன்” என்றான் அவளைப் பாராமல்.

அவன் முகம் பார்ப்பதற்கு சிரிப்பாக இருந்தது அவளுக்கு. ‘ரொம்ப டார்ச்சர் பண்றோமோ’ என நினைத்து, ‘சரி’ என்றதும் உடனே சென்றுவிட்டான்.

ஒருவழியாக சமையல் முடிந்து, “இளா. நீ சாப்பிட உட்காரு. ஆம்லெட் சூடா போட்டுத்தறேன்” அவள் உள்ளிருந்து குரல் கொடுத்ததும், சில நொடிகள் மௌனத்திற்கு பின் அவன், “அதெல்லாம் இருக்கட்டும். சேர்ந்தே சாப்பிடலாம்” என்றான்.

அவள் என்னசொல்லியும் அவன் கேட்கவில்லை. அனைத்தையும் செய்துமுடித்துவிட்டு, இருவரும் தரையில் உட்கார்ந்தனர் சாப்பிட, அவன் அவளையே பார்த்தான்.

அவள் என்ன என்று புருவம் உயர்த்த, அவன் ஒன்றுமில்லை என்பதுபோல தலையசைத்தான். “கவலைப்படாத. சுமாரா இருக்கும் சாப்பாடு” சொல்லிக்கொண்டே இருவர் தட்டிலும் சாப்பாடு வைத்தாள்.

அவன் ஒரு வாய் சாப்பிடும் வரை அவனையே இவள் பார்க்க, அவன் முகம் மலர்ந்து, “நல்லா இருக்கு” என்றதும்தான் நிம்மதி அவள் முகத்தில் தெரிந்தது.

“தேங்க்ஸ், ஃபர்ஸ்ட் டைம் ஃபுல் மீல்ஸ் பண்ணிருக்கேன்” அவள் சொல்ல, “அடுத்த தடவ இன்னும் கொஞ்சம் அதிகமா பண்ணிடு. நைட்க்கும் சேர்த்து சாப்பிடுவேன்” செழியன் சொன்னவுடன் அவனுக்கு என்ன தோன்றியதோ, சட்டென அவளைப் பார்த்து முழித்தான்.

‘அட அட, இததானே எதிர்பார்த்தேன். பரவால்ல ப்ரியா, சமையல் டெஸ்ட்ல பாஸ்’ என நினைத்து புன்னகைத்தாள்.

பின் ‘ஏன் இந்த முழி முழிக்கறான்’ என யோசித்துக்கொண்டே, “நெஸ்ட் வீக் சிக்கன் வாங்கிடு. அதுவும் ஃப்ரஸ்ட் டைம் செய்யப்போறேன். பார்ப்போம்” சொல்லிக்கொண்டே சாப்பிட்டாள்.

அழகாக அன்றைய தினம் நகர்ந்தது. சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரத்தில் அவள் கிளம்பினாள்.

அவள் மறுத்தும், ‘தனியாக அனுப்ப மனமில்லை உடன் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவளுடன் கிளம்பினான். மாலை பொழுது நெருங்கும் நேரம். இருவரும் கல்லூரிக்கு நடந்தே சென்றனர்.

பவய் ஏரிக்கரையின் நடைபாதையில், அந்த ரம்மியமான மாலை பொழுதில், அவனுடனான இந்த நடைப்பயணம், அதை ரசித்துக்கொண்டே நடந்தாள்.

மௌனமே இருவரிடையில் குடியிருக்க, அவன், “ரொம்ப நாள் கழிச்சு நல்ல சாப்பாடு இன்னைக்கு. கடைசியா அக்காவை பார்க்க சென்னை போனப்ப சாப்பிட்டது. எவ்ளோ மாசம் முன்னாடின்னு கூட தெரியல, நீ இன்னைக்கு வருவன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. தேங்க்ஸ் ஃபார் கமிங்” என்றான் நிறைவாக ஆத்மார்த்தமாக அவளைப்பார்த்து.

அவளும் அவனைப்பார்த்து புன்னகைத்தாள். அவன் மறுபடியும் ஏதோ சொல்ல வர, கொஞ்சம் தயங்கியபின், தனக்குத்தானே ஏதோ முடிவெடுத்ததுபோல, பேசாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.

‘ஏன் இந்த தயக்கம்? எப்போதுதான் மனத்திலுள்ளதை பேசுவான்’ என்று தோன்றியது அவளுக்கு.

ஏதோ சிந்தித்துக்கொண்டே வந்தவன் திடீரென, “ரொம்ப தலைவலிக்குது. ஒரு டீ குடிக்கலமா?” என்று கேட்டவுடன், சரி என்றாள்.

சில நிமிடங்களுக்கு முன் இருந்த சந்தோஷம், நிறைவு இப்போது சுத்தமாக இல்லை அவனிடத்தில். அவன் கைகோர்த்து, ஆதரவாக, ‘மனம்திறந்து பேசு’ என சொல்லவேண்டும் போல இருந்தது அவளுக்கு.

அமைதியாக இருவரும் டீயை குடித்து முடித்தபின், அவளை ஹாஸ்டல் வரை விட்டுவிட்டு சென்றான். எதுவுமே பேசவில்லை அவன். அவள் பேசினால் கூட சின்ன புன்னகை மற்றும் தலையசைப்பு மட்டுமே.

ப்ரியாவுடைய ஹாஸ்டல் அறையில் உடன் தங்கியிருக்கும் பெண் காயத்ரி, ப்ரியாவை பார்த்ததும், “சண்டே… பாய் ஃபிரண்ட் வீட்ல, என்ன நடந்துச்சு சொல்லு சொல்லு” என்று ஆர்வமாக கேட்க, ப்ரியாவிற்கு சிரிப்பு ஒருபக்கம், நடந்தை சொன்னால் ஓட்டித்தள்ளிவிடுவாளே என்ற எண்ணம் மறுப்பக்கம்.

அவள் விடாமல் கேட்க, நடந்ததை பட்டும் படாமல் சொன்னாள் ப்ரியா. அதைக் கேட்ட காயத்ரிக்கு அதிர்ச்சி.

“நீ படிச்ச காலேஜ்க்கும், அவன் படிச்ச காலேஜ்க்கும், இப்போ நீங்க இருக்கற ஊருக்கும், படிச்சிட்டு இருக்கற காலேஜ்க்கும்… நீங்க பண்ற லவ்க்கும், சத்தியமா சம்மந்தமே இல்ல. இதென்ன சொல்லாத காதலா?” என அடுத்த கேலியை ஆரம்பித்தாள் காயத்ரி.

ப்ரியா புன்னகையுடன், “லவ்வ வார்த்தையால சொல்லணும்… இல்ல அதை புரியவைக்கணும்னு அவசியமில்ல காயு. அது ஒரு ஃபீல். நம்ம செய்ற ஒன்னொன்னுலயும் காதலோட பிரதிபலிப்பு இருக்கும். அது நமக்கு காதலை, அன்பை உணர்த்தும்” என ப்ரியா உணர்ந்து பேச, “யப்பா குருஜி, போதும் நமக்கெல்லாம் இது செட் ஆகாது. நீங்க நடத்துங்க” என்றாள் காயத்ரி.

காதல் என்றால் ஊர் சுற்றிக்கொண்டு, செல்லமாக பேசிக்கொண்டு, எப்போதும் மற்றவரை சார்ந்திருப்பது, இணக்கமாக நெருக்கமாக இருப்பது மட்டும்தான் காதலா என்ன?

இது எதுவும் இல்லாமல் ஒருவரை மற்றொருவர் புரிந்துகொண்டு, எதையும் எதிர்பார்க்காத தன்னலமற்ற காதல் அவர்களுடையது என்பது ப்ரியாவின் எண்ணம்.

ஆனால் பின்னாளில் இதுவே பிரிவுக்கான ஒரு காரணமாக அமையும் என்று தெரிந்திருந்தால், காதலை சொல்லாலும் உணர்த்தியிருப்பார்களோ?!

இப்படியாக ப்ரியா, செழியனின் நாட்கள், வாரங்கள், மாதங்களாக நகர்ந்தது. இருவரும் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் சாதாரண காதலர்கள் காதல் செய்வதையும் தாண்டி ஒருவருக்காக மற்றொருவர் ஒவ்வொன்றயும் பார்த்துப் பார்த்து செய்தனர்.

அதுபோல ஒருநாள், ப்ரியாவின் பிறந்தநாள் வந்தது. ஹாஸ்டலில் உடன் இருக்கும் தோழிகளுடன் கலகலப்பாக அன்றைய இரவு ஆரம்பிக்க, மனது ஒரு மூலையில், ‘செழியனுக்குத் தெரியுமா? எப்படி தெரியும், வாய்ப்பில்லை…’ என்றெல்லாம் யோசிக்கும்போது, அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘அவனுக்குத் தெரியுமா?’ என்ற எண்ணம் தந்த இன்ப அதிர்ச்சியில் அவள் எடுக்க, “கீழ கேன்டீனுக்கு வர முடியுமா?” வேறு எதுவும் சொல்லாமல் அவன் திடீரென கேட்டவுடன், இதயம் வேகமாக படபடக்க ஆரம்பித்தது.

தோழிகளிடம் சொல்லிவிட்டு, ப்ரியா அதே படபடப்புடன் கீழே செல்ல, அவளுக்காக கையில் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு காத்திருந்தான் செழியன்.

***

 

“என்ன இளா? இந்த டைம்ல” எதற்கு வந்திருக்கிறான் என்று தெரியும்… இருந்தும் கேட்டாள்.

அவன் கொஞ்சம் யோசித்தபின், “இன்னைக்குதானே உன் பர்த்டே?” தயங்கி கேட்க, புன்னகையுடன் தலையசைத்தாள் ப்ரியா.

“ஹப்பா அஃபிஷியல் பர்பஸ்க்கு குடுத்த டேட்டா இருக்குமோன்னு நினச்சுட்டேன். ஹாப்பி பர்த்டே” என்றான் முகம் மலர.

“தேங்க் யு. பட் உனக்கு எப்படி தெரியும்?” இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி பேச ஆரம்பித்தனர்.

“உன் ஐடி கார்ட் உன்கிட்ட இருந்ததைவிட என்கிட்டதானே அதிகம் இருந்திருக்கு” புன்னகையுடன் அவன் சொன்னதும் அவள் முகத்தில் இன்னமும் புன்னகை அதிகமானது.

அவளுக்கு பிடிக்காத ஒன்று, எந்நேரமும் கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லும் ஐடி கார்ட். சென்னையில் படிக்கும்போது அணிந்ததில்லை. வேலைக்குச் சென்றபோது கேட்கவே வேண்டாம். அணிந்ததே இல்லை.

இதனுடன் இன்னொரு பழக்கமும் உண்டு அவளுக்கு. கழுத்தில் போடாமல் கையிலேயே வைத்துக்கொண்டு மறந்து எங்கேயாவது விட்டுவிடுவாள்.

இங்கு வந்ததும், செழியனுடன் இருக்கும்போதெல்லாம், அதை அவனிடம் கொடுத்துவிடுவாள் பத்திரமாக இருக்க வேண்டுமென.

“இதெல்லாம் போங்கு. உன் ஐடி கார்ட் குடு, உன் பர்த்டே நானும் பார்க்கணும்” என அவள் பிடுங்கி அதைப் பார்க்க, நிறைந்த ஏமாற்றம். முடிந்து இரண்டு மாதம் கடந்திருந்தது.

“ஏன் நீ சொல்லவே இல்ல?” அவனிடம் கோபப்பட, “நான் ஒருவேளை இன்னைக்கு விஷ் பண்ணலைன்னா, நீயா சொல்லிருப்பயா உன் பர்த்டேன்னு?” அவன் பதில் கேள்வி கேட்டவுடன், ‘மாட்டேன்’ என்பதுபோல தலையசைத்தாள்.

“அது போலதான் நானும் சொல்லல. மோர்ரோவர் அது ஒன்னும் அவ்ளோ முக்கியமும் இல்ல” என்றான் கொஞ்சம் வேறு தொனியில்.

‘நாம விஷ் பண்ணலன்னு வருத்தப்படறானோ’ என்று அவள் நினைக்கையில், “இந்தா” என ஒரு டப்பாவை நீட்டினான். புன்னகையுடன், ‘என்ன இது’ என்பதுபோல வாங்கி திறந்தாள். உள்ளே ஸ்வீட்.

“நீ செஞ்சதா?” கிட்டத்தட்ட அதிர்ச்சியுடன் அவள் கேட்க, அவன் ஆம் என தலையசைத்தான். “பெர்ஃபெக்ட் கேரட் ஹல்வா. வாவ் டேஸ்ட். எப்படி?” ஆச்சர்யத்துடன் சுவைத்துக்கொண்டே கேட்டாள்.

“மூனு ஃபெயில்டு அடெம்ப்ட். அப்புறம்தான் வந்துச்சு” என்றவுடன், ப்ரியாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. சரியாக அந்த நேரம் அகிலன் அழைத்தான்.

“ஹலோ சொல்லுண்ணா” முகத்தில் பிரகாசம் இன்னமும் அதிகமானது.

அகிலன் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவுடன், “தேங்க்ஸ் ண்ணா. சும்மா விஷ் மட்டும் பண்ணாத. நான் வர்றப்ப என்னை பலமா கவனிக்கணும்” குறும்பாக பேசினாள். செழியன் முகம் கொஞ்சம் புன்னகைத்தது.

“ஆமா ண்ணா. ஃபிரண்ட்ஸ் கூடதான் செலிப்ரேஷன்” அழகாக பொய் சொல்லிவிட்டு, செழியனை பார்த்து கண்ணடித்தாள்.

“ஆங் குடுண்ணா… ஹாய் அண்ணி” என்றதும் செழியன் சட்டென நிமிர்ந்து பார்த்தான்.

ப்ரியா புன்னகையுடன், “தேங்க்ஸ் அண்ணி. அண்ணன்ட்ட சொன்னதுதான். நான் வர்றப்ப ரெண்டு பெரும் பெரிய பர்த்டே சர்ப்ரைஸ் தரணும். பெருசா…” கண்கள் அகல புன்னகையுடன் கேட்டாள்.

செழியன் முகம் கொஞ்சம் வாடியது. ஏன் என்று புரியவில்லை ப்ரியாவிற்கு. அகிலன் கவிதாவிடம் பேசிவிட்டு போனை வைத்தவுடன், ‘என்ன ஆச்சுன்னு தெரியலயே. இரு உன்ன வழிக்கு கொண்டுவரேன்’ என்று நினைத்தபடி, இனிப்பை சாப்பிடும்போது, திடீரென,

“என்னை என்ன தீனி பண்டாரம்னு நினைச்சுட்டயா? பர்த்டேக்கு இதை குடுத்து எஸ்கேப் ஆகலாம்னு பார்க்கறயா?” கண்களை உருட்டியபடி முறைத்தாள் ப்ரியா.

அதை கேட்டவுடன் நன்றாக சிரித்தான் செழியன்.

“இதை கேட்க வேற வேணுமா? இங்க இருக்க பாணி பூரி கடைல ஆரம்பிச்சு எல்லா கடைக்காரனுக்கும் உன்ன தெரியுமே” என அவன் சிரிக்க, அவள் இன்னமும் முறைத்தாள் ஆனால் விளையாட்டாக.

அவன் சிரித்துக்கொண்டே, “உன்னோட ஹிந்தி அப்படி… இந்தா” என அவன் எடுத்துவந்த பையை நீட்டினான். அவள் முறைத்துக்கொண்டே அதை வாங்கினாள்.

உள்ளே இருப்பதை பார்த்தவுடன், கைகள் தானாக வாயை மூடியது ஆச்சர்யத்தில்… அதிர்ச்சியில்.

அதனுள் Graphic Tablet இருந்தது. 3டி அனிமேஷன் மற்றும் கேமிங்கிற்கு பயன்படும் உயர் ரக, விலை உயர்ந்த சாதனம்.

ப்ரியா நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ப்ராஜெக்ட்… ‘Animation with Artificial Intelligence and Deep Learning’ மையமாக வைத்து ஒரு டூல் (tool) உருவாக்க வேண்டும் என்பது.

‘அதற்கு முதலில் High end graphic display tab வேண்டும். வீட்டில் பேசி சீக்கிரம் வாங்க வேண்டும். இறுதியாண்டு ப்ராஜெக்டுக்கு இப்போதிருந்தே தயார் ஆக வேண்டும்’ என்று நிறைய ‘வேண்டுமை’ பற்றி கொஞ்ச நாட்களாக சொல்லிக்கொண்டிருந்தாள் செழியனிடம்.

ஆனால், ‘அவன் வாங்கித்தரவேண்டும்’ என நினைத்து ஒரு நாளும் பேசியதில்லை. அவனிடம் பகிரவேண்டும் என்று நினைத்தே பேசினாள்.

எப்படியாது பணம் சேர்க்கவேண்டும் என்று நினைத்திருந்தாள். ஒன்று, ஸ்டூடென்ட்ஸ் ப்ராஜெக்ட் டாக்குமெண்டேஷன் வேலை எடுத்து செய்து பணம் கொஞ்சம் பார்க்கலாம், இல்லையேல் வீட்டில் கேட்கலாம் என நினைத்தாள்.

இப்போது அதைப் பார்த்ததும், “என்ன இளா இது?” என கேட்கும்போது கண்கள் கலங்கிவிட்டது.

அவள் எதிரில் உட்கார்ந்திருந்தவன் அவள் கண்கள் கலங்கியவுடன் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து, “ஹே என்ன ஆச்சு இசை. பர்த்டே அன்னைக்கு குடுக்கற கிஃப்ட் யூஸ்ஃபுல்லா இருக்கணும்னு தோணுச்சு”

‘இசை’ என்று அவன் அழைத்ததெல்லாம் அவளுக்குப் பதியவில்லை.

“அதுக்குன்னு? உனக்கு வர்ற ஸ்டைஃபண்ட் ஆல்ரெடி உன் செலவுக்கே சரியா இருக்கும். அதுல இது எப்படி? ஈஎம்ஐ யா?” கிட்டத்தட்ட சிவந்த கண்களுடன் அவள் பார்த்தாள்.

“ஹுஹும்ம் இல்ல. லாஸ்ட் வீக் ப்ரைவேட் காலேஜ் பிடெக் ஸ்டூடென்ட்ஸ்க்கு ஒரு ப்ராஜெக்ட் செய்து குடுத்தேன். நாலு நாள்ல வேணும். கொஞ்சம் அர்ஜென்ட்ன்னு சொன்னாங்க. அதுனால ப்ராஜெக்ட் காஸ்ட்டும் அதிகம். 35K” என்றான்.

அவளிடம் சரியாக போன வாரம் அவன் பேசவில்லை. கேட்டதற்கு டிபார்ட்மென்ட்டில் கொஞ்சம் வேலை என்றான். ஆனால் இதற்குதான் என்று இப்போது புரிந்தது அவளுக்கு.

‘ஆக, இருக்கும் வேலையுடன், படிப்பு… அது இல்லாமல் இது கூடுதல் வேலை. முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு ப்ராஜெக்ட் என்றால், அதற்கான வேலை கண்டிப்பாக அதிகமாக இருக்கும். இரவு பகல் பார்க்காமல் நாள் முழுவதும் வேலை பார்க்க வேண்டும்’ அழுகை இன்னமும் முட்டிக்கொண்டு வந்தது ப்ரியாவிற்கு.

அவள் கண்கள் கலங்குவதை தவிப்போடு அவன் பார்த்தான்.

“இருக்குற டென்ஷன் பத்தாதுன்னு… இது எக்ஸ்ட்ரா வேல உனக்கு இளா. நான் வாங்கணும்னு சொன்னேன், பட் வீட்ல கேட்கலாம்னுதான் இருந்தேன்” என்றவுடன், “ஓ” என நிறுத்தி கண்களை மூடித் திறந்தான் செழியன்.

பின், “சரி. உன் வீட்ல வாங்கித்தர்ற வரை, இதை யூஸ் பண்ணு. இது எப்போ தேவைப்படாதோ, ரீஸேல் பண்ணிடு. உங்க டிபார்ட்மென்ட்லயே வாங்க ரெடியா இருப்பாங்க” என்றான் அவள் முகம் பாராமல் மறுபக்கம் திரும்பிக்கொண்டு.

அவன் பேச்சிலேயே ஏமாற்றம் தெரிந்தது அவளுக்கு. ஆசையாக வாங்கித்தந்ததை இப்படி விவாதப்பொருளாக மாற்றக்கூடாது என நினைத்து, கண்களை துடைத்துக்கொண்டு,

“நான் ஏன் ரிஸேல் பண்ணனும்? இன்னைக்கு நைட்டே ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணிடுவேன். வீட்ல வேற ஏதாச்சும் ஆட்டைய போட்டுக்கலாம்” அவள் சொன்னவுடன், அவன் முகத்தில் புன்னகை வந்தது. திரும்பி அவளைப் பார்த்தான்.

அவனை அப்படியே அணைத்துக்கொண்டு நன்றி கூற வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. இருப்பினும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அவள், “தேங்க்ஸ்” என்றவுடன், “தேங்க்ஸ் சொன்னது போதும். ரிட்டர்ன் கிஃப்ட் குடு” என்றான் அழகாக புன்னகைத்து.

“ஹ்ம்ம். ஒரு டென் மினிட்ஸ். நீ போய் ப்ளாக் டீ வாங்கிட்டு வா” கண்கள் மின்ன அவள் சொன்னவுடன், புருவங்கள் முடிச்சிட்டு அதே புன்னகையுடன் சென்றான்.

அவள் மொபைலில் ஏதோ செய்துகொண்டிருந்தாள். அவன் வாங்கி வந்தவுடன், ‘இன்னும் கொஞ்ச நேரம்’ என கேட்டு, டீ குடித்துக்கொண்டே செய்ய நினைத்ததை செய்து முடித்து, அவன் பக்கம் போனை காட்டினாள்.

அதில் அவன், ஆனால் கார்ட்டூன் வரைபடம் போல. திரையில் தெரிந்த செழியன், பல வித பாவனைகளை காட்டிக்கொண்டிருந்தான். செழியனுக்கு ஆச்சர்யம், ஆனந்தம் என கண்கள் விரிய அதைப்பார்த்தான்.

“இதெல்லாம் நீ நெஜத்துல பண்ணமாட்ட. பட் இந்த இளா பாரு… பின்றான்” ப்ரியா சொன்னவுடன், அவளை ஒரு நொடி பார்த்தபின் புன்னகையுடன், “இவ்ளோ ஷார்ட் டைம்ல. வாவ்… லவ்லி” மனமார பாராட்டினான்.

“தேங்க்ஸ். இப்போ நான் இந்த டேப் மேல எடுத்துட்டு போனா, அவங்களுக்கெல்லாம் புகையுமே” பாவமாக அவள் சொல்ல, “யாரு உன் ரூம்மேட் காயத்ரியா?” செழியன் கேட்டான்.

டீயை குடித்துமுடித்த ப்ரியா, “ப்ச் இல்ல. அவ ஹெச்எஸ்எஸ் (Humanities and Social Sciences). என் டிபார்ட்மென்ட்லாம் வேற வேற ரூம்” என்றாள்.

“ஓ! அவங்கள கண்டுக்காத… விட்டுத்தள்ளு. இப்போ டீ குடிச்சா, தூக்கம் வராதே உனக்கு” ஏதோ நல்ல மனநிலையில் இருப்பான் போலும். கொஞ்சம் அதிகமாகவே பேசினான்.

ப்ரியா புன்னகையுடன், “ஹ்ம்ம் வராது. எப்படி வரும்?” என்றாள் இரட்டை பொருள் கொண்டு.

அவன் புரியாமல் பார்க்க, ‘நீ பண்ணின வேலைக்கு நைட் ஃபுல்லா நான் டூயட் பாடவே கரெக்ட்டா இருக்குமே’ என்று மனம் நினைத்தாலும், “இன்னைக்கு ஃபுல் நைட் இதை எக்ஸ்ப்லோர் பண்ணணுமே” என்றாள் டேபை காட்டி.

“ரொம்ப நேரம் முழிச்சிருக்காத. காலைல தலைவலியா இருக்கும்” கண்களில் கனிவுடன் காதலும் தெரிந்ததோ அவனிடம்? அவளுக்குத் தெரிந்தது!

“அதை நீ சொல்லாத. போன வாரம் தூங்கியிருக்கவே மாட்டியே. அப்போ தலைவலியோடதான் சுத்தின இல்ல?” அவள் கேட்டதும், அவன் டேபிளை பார்த்து புன்னகைத்தான்.

“இனி இதுபோல வேலை எல்லாம் எடுத்து ஸ்ட்ரைன் பண்ணிக்காத இளா ப்ளீஸ்” அவள் கண்கள் கூட கெஞ்ச, சரி என்று தலையசைத்தான்.

ஒரு சில நிமிடங்களில் அவன் புறப்பட்டுவிட்டான். ப்ரியாவிற்குத்தான் இருப்புக்கொள்ளவில்லை. கனவில் கூட அவள் நினைக்காத ஒன்று செழியன் இதுபோல வாங்கித்தருவான் என்று.

அன்றைய இரவே உட்கார்ந்தாள் டூயட் பாட. ஆனால் கனவில் இல்லை. அவன் வாங்கித்தந்த டேபில், அனிமேஷனில்!

2
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved