தனிப்பெரும் துணையே – 10
தனிப்பெரும் துணையே – 10
இருவரும் படிப்பில் ஒரு கட்டத்தில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டனர். ப்ரியாவிற்கு காலை மற்றும் மதியம் அவன் உணவு செய்து கொண்டுவருவான்.
இருவரும் உண்ணும்போது சந்தித்துக்கொள்வார்கள் பின், மாலையில் கல்லூரி நூலகத்தில் அல்லது அவர்கள் எப்போதும் உட்காரும் மரத்தடியில் சில மணி நேரம் கழித்துவிட்டு அன்றைய தினத்தை முடிப்பார்கள்.
இப்படியாக மாதங்கள் வெகு சீக்கிரமாக நகர்ந்தது. ப்ரியாவும் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள்.
அப்படியிருக்க ஒரு நாள், அவன் காலையில் இருந்து மாலை வரை அவளை அழைக்காமல் போக, அவனையும் தொடர்புகொள்ள முடியாமல் போக… அவனுடைய டிபார்ட்மெண்டில் விசாரித்தபோது, அவனுக்கு உடம்பு சரியில்லை என்பது தெரியவந்தது.
அவளுக்கு அவன் மேல் எல்லையற்ற கோபம். தன்னிடம் சொல்வதற்கென்ன என. அடுத்தநாள் காலையிலேயே புறப்பட்டாள் மழையையும் பொருட்படுத்தாமல்.
அவன் வீட்டுக் கதவு திறக்கப்பட்டவுடன், “அறிவில்ல இளா உனக்கு?” என அவனைப் பார்க்க, ஆள் அடையாளம் தெரியாமல் சோர்ந்து போய் தெரிந்தான்.
இருந்தும் அவன் கண்கள் ஆச்சர்யத்தைக் காட்டியது. அவன் கோலம் பார்த்து பதறிய ப்ரியா, “என்ன ஆச்சு? உடம்பு சரியில்லைன்னா சொல்ல மாட்டயா?” அவன் நெற்றியை தொட்டுப்பார்த்தாள். கொதித்தது.
“பெருசா ஒன்னும் இல்ல. அதான் சொல்லல” தயங்கி வந்தது அவன் வார்த்தைகள்.
“வாய மூடு. கோபத்துல ஏதாவது சொல்லிடப்போறேன்” உச்சபட்ச கோபத்தில் இருந்த ப்ரியா, “இந்த கொதி கொதிக்குது ஒன்னுமில்லயா உனக்கு? ஏதாச்சும் சாப்பிட்டயா?” என்று கேட்டபடி சமையலறைக்குள் சென்றாள்.
எல்லாம் காலியாக இருந்தது. வெளியே வந்து அவனைப்பார்த்தாள்.
“மெஸ்லதான் நேத்து சப்பாத்தி சாப்பிட்டேன். எதுவுமே செய்ய முடியல. நீ ஏன் இந்த மழைல வந்த?” அவன் கேட்க,
“அறிவேயில்லையா உனக்கெல்லாம்? இந்த டைம்ல மெஸ்ல சாப்பிடுவயா? அதுவும் சப்பாத்தி” கோபமாக அவள் கேட்டாள்.
“அங்க நைட் வேற எதுவும் கிடைக்காது” என்றவன் நிற்க முடியாமல் ஹாலில் இருந்த பெட்டில் உட்கார்ந்தான்.
அவனைப் பார்க்கப் பார்க்க, நெஞ்சம் வலித்தது. மிகவும் சோர்வாக தெரிந்தான். “என்கிட்ட சொல்லவேண்டியதுதானே. ஏன் இளா, காலைல ஏதாச்சும் சாப்பிட்டயா? டாக்டர்ட்ட போனயா?” ப்ரியா பரிதவிப்புடன் அவன் அருகில் சென்று கேட்டாள்.
அந்த நிலையிலும் அவன் முகத்தில் சின்ன புன்னகை.
“இந்த மழைல எங்க போகறது? நானே டேப்லட் போட்டுட்டேன். காலைல தோசைதான் இருக்குன்னு சொன்னாங்க. கொஞ்சம் சாப்பிட்டேன் வாந்தி வந்துடுச்சு… விட்டுட்டேன்” அவனால் பேசமுடியவில்லை இருந்தும் பேசிமுடித்தான்.
“தோசைய போய் சாப்பிட்டயா?” ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தவள், “நீ மொதல்ல படு” என்று அவள் சொன்னதும், “வேற எதுவும் அங்க சாப்பிட இல்ல. நீ கிளம்பு. மழை அதிகமாயிட்டே இருக்கு” என்றான்.
“கெட்ட வார்த்தை ஏதாச்சும் சொல்றதுக்கு முன்னாடி படுத்துரு” என்றாள் கோபத்தில் பற்களை கடித்துக்கொண்டு. அவனும் கோபப்பட முயன்றான் ஆனால் முடியவில்லை. படுத்துவிட்டான்.
அவன் அறைக்குள் சென்றவள், ‘அலமாரியில் ஏதாவது துணி இருக்கிறதா?’ என்று பார்க்க, அவனின் சில கைகுட்டைகள் இருந்தது.
உடனே அதை எடுத்துக்கொண்டு, பெட்டின் பக்கத்தில் மண்டியிட்ட ப்ரியா, கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து அவன் நெற்றியில் வைத்தாள்.
சோர்வில் கண்கள் சொருகியிருந்தவன் கண்விழிக்க, “கொஞ்ச நேரம் நெத்தில இருக்கட்டும். நான் போய் சாப்பிட ஏதாச்சும் செய்றேன்” என்றதும் அவன் எதுவும் பேசவில்லை. அவளையே பார்த்தான்.
அவள் சமையலறைக்குச் சென்று கஞ்சியை காய்ச்சி அவனிடம் கொடுக்க, “மிக்ஸி இல்லையே எப்படி செஞ்ச?” என்று சாப்பிட்டுகொண்டே அவன் கேட்க, அவள் முறைத்தாள்.
“இல்ல நேத்து செய்யலாம்னு யோசிச்சேன். எல்லா ரெசிபியும் மிக்ஸில அரைக்கணும்னு இருந்துச்சு. ஆல்ரெடி முடியல அதான் மெஸ்ல சாப்பிட்டேன். சாரி” என்றான்.
“என்கிட்ட உனக்கு சொல்ல என்ன இளா? அப்போ அவ்ளோதானா?” கோபத்துடன் பல பொருள் கொண்டு கேட்க, “அப்படியில்ல. மழையா இருந்துச்சு. தொல்லை பண்ண வேண்டாமேன்னுதான் சொல்லல” என்றான் அவள் முகம் பாராமல்.
“சரி சாப்பிடு. டேப்லட் போட்டு ஒரு நாலு மணிநேரம் இருக்குமா?” அவள் கேட்டவுடன், இருக்கும் என தலையசைத்தான். “இப்போ இன்னொன்னு போட்டுக்கோ. குறையலன்னா டாக்டர்ட்டதான் போகணும்” என்றாள்.
அவனும் அவள் சொன்னதை செய்தான். பின் அவனைப் படுக்கச்சொல்லிவிட்டு, மறுபடியும் ஈரத்துணியை நெற்றில் போட்டுவிட்டாள். கொஞ்ச நேரத்தில் காய்ச்சல் குறைந்தது போல தெரிந்தது.
மதியத்திற்கு ரசம் வைத்துக்கொடுக்க, அவனும் சாப்பிட்டுவிட்டு தூங்கினான்.
நேரம் செல்ல செல்ல மழை அதிகமானது. மாலை நேரம் ஆனதும், மீண்டும் காய்ச்சல் திரும்ப வர, “டாக்டர்ட்ட போலாம் இளா. பயமா இருக்கு” என்றாள் கொஞ்சம் பதட்டத்துடன்.
“இன்னும் ரெண்டு டோஸ் மருந்து சாப்டா சரியாகிடும். நீ எப்படி கஞ்சி வைக்கறதுன்னு சொல்லு போதும். நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு. டைம் ஆச்சு” என்றான்.
“உன்ன தனியா இப்படியே விட்டுட்டு…” என அவள் தயங்க தயங்க, “நிறைய தடவ இப்படி ஆகியிருக்கு. அப்போல்லாம் தனியாதான் இருந்தேன். நான் பார்த்துக்கறேன். ஆட்டோ அண்ணாக்கு போன் பண்ணு. மழை இன்னும் அதிகமாகறதுக்கு முன்னாடி கிளம்பு” என்றான்.
என்ன செய்வதென்று அவள் யோசிக்கும்முன், அவர்கள் அடிக்கடி செல்லும் ஆட்டோக்காரரை அவனே அழைத்தான்.
ஹிந்தியில் அவரிடம் வரச்சொல்ல, அவர் என்ன சொன்னாரோ இவன் முகம் பதட்டத்தைக் காட்டியது. ப்ரியா புரியாமல் பார்த்தாள். அவன் போனை வைத்தவுடன், ப்ரியாவை பார்த்து முறைத்தான்.
பின் அவனுடன் வேலைப்பார்க்கும் குமாரை அழைத்தான்.
“அண்ணா. என்ன ஆச்சு? ஹாஸ்டல்குள்ள இப்போ போக முடியாதா?” என கேட்டான். ப்ரியாவிற்கு இப்போதுதான் கொஞ்சம் புரிந்தது. திடுக்கிட்டாள்.
“இல்ல, அது வந்து… இசை எனக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்க வந்தா. இப்போ எப்படி…?” செழியன் யோசனையுடன் பேசினான். அந்த பக்கம் குமார் என்ன சொன்னானோ, தயக்கத்துடன் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
“உனக்கு என்ன தெரியும் மும்பை மழையப் பத்தி? இப்போ எப்படி போவ?” அவன் கொஞ்சம் கோபத்துடன் கேட்டதும் ப்ரியா முழித்தாள். அவளுக்கும் தெரியவில்லை என்ன செய்வது என்று.
“அதிக மழைனால லேக்ல இருந்து கேம்பஸ்குள்ள தண்ணி வந்துடுச்சு, இப்போ உள்ள வர்றது சேஃப் இல்லனு குமார் அண்ணா சொன்னாரு. ஆட்டோக்காரரு, இந்த தெரு தாண்டி போக முடியாதுன்னு சொல்றாரு” என்று பேசிக்கொண்டே தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டான்.
காய்ச்சலால் உடல் சோர்வு ஒருபக்கம் இப்போது இது வேறு.
அவன் அல்லல் படுவதை பார்த்த ப்ரியா “இன்னும் வெளிச்சம் இருக்கு. நான் வேணும்னா குடை எடுத்துட்டு நடந்தே போயிடட்டுமா?” யோசித்தபடி கேட்டாள்.
அவன் நிமிர்ந்து பார்த்து அவளை முறைத்தான். அந்த பார்வையே பல திட்டுகளுக்கு சமம் என்பதுபோல இருந்தது ப்ரியாவிற்கு.
அதில் கோபம்கொண்டு, “நான் என்ன நினச்சேனா மழை என்னை பழிவாங்கும்னு? காலைல வர்றப்ப, விளிம்பை விட கொஞ்சம் கீழதான் ஏரில தண்ணி இருந்துச்சு” என நொடித்துகொண்டாள்.
என்ன யோசித்தாலும் பயனில்லை என்று உணர்ந்தவன் போல, “வேற வழியில்லை. வார்டன்க்கு போன் பண்ணி சொல்லிடு. வெளிய மாட்டிட்டேன்னு. மோஸ்ட்லி ப்ராப்ளம் இருக்காது” என்றான் அவளைப் பாராமல்.
அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை. அவன் சொன்னதற்கு சரி என்றவள் விஷயத்தை சொல்லிவிட்டு, “அவங்களும் எங்க இருக்கேனோ அங்கேயே இருக்க சொன்னாங்க” என்றாள்.
அவனும் தலையை ஆட்டினான். பின் உள்ளறைக்குள் சென்று ஏதோ செய்துவிட்டு வெளியே வந்து, “உள்ள பாத்ரூம் இருக்கு. ரெஃப்ரெஷ் பண்ணிக்கோ. வந்ததுல இருந்து அப்படியே இருக்க” என்றான் மறுபடியும் அவள் முகம் பாராமல்.
இதுவரை இங்கு வந்தபோதெல்லாம் அதை அவள் உபயோகித்ததே இல்லை. ஆனால் இன்று, மறுபடியும் அறையை ஏனோ ஒருமுறை பார்வையிட்டாள். பால்கனி வழியாக பார்க்க, வெளியில் மழை கொட்டிக்கொண்டிருந்தது.
மழை எப்போது விடும் என தெரியவில்லை. இங்க எப்படி இரவு முழுவதும்? படுக்க இடமில்லை. மாற்று துணியில்லை. தனக்கென்று தனியாக எதுவுமே இல்லை. உள்ளுக்குள் ஏதோ ஒரு சொல்லமுடியாத பயம்.
இப்படியாக யோசனையுடன் அவள் குளியலறைக்குள் தயக்கத்துடன் நுழைய, அவ்வளவு சுத்தமாக, அவளுக்கென தனியாக அனைத்தையும் வைத்துவிட்டுதான் வந்திருந்தான்.
இவனுடன் இருக்கையில் எந்த பயமும் தேவையில்லை என நினைத்து சில நிமிடங்கள் கழித்து வெளியே வர, அவனால் முடியாமல் படுத்திருந்தான்.
மறுபடியும் கஞ்சி கொடுத்துவிட்டு, அவன் உறங்கியபின், நேரத்தைக் கடத்த, பால்கனியில் மழையை பார்த்தவண்ணம், ‘இரவு என்ன செய்வது’ என யோசித்துக்கொண்டிருந்தாள்.
ஏனோ அவனுடனும் சகஜமாக இருக்கமுடியவில்லை அவளால். சில்லென்ற காற்றுடன், மழை சாரல் அவள் மீது பட்டு பட்டு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நனைத்தது.
“இசை… உள்ள வா. மழைல நனஞ்சு உனக்கும் காய்ச்சல் வர்றதுக்கா?” என்ற அவன் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.
“இது என்னோட புது நைட் சூட்தான். துவச்சு மட்டும் வச்சுருக்கேன். உனக்கு டிரஸ் சேன்ஜ் பண்ணணும்னா யூஸ் பண்ணிக்கோ, கொஞ்சம் பெருசா இருக்கும்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
என்னதான் தெரிந்தவனாக, மனதிற்கு பிடித்தவனாகவே இருந்தாலும் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. தயக்கமும் கூட.
அதே தயக்கத்துடன் உடை மாற்றிக்கொண்டு வந்தாள். ‘அவன் முன் சென்று இந்த உடையுடன் நிற்க வேண்டுமே’ என்று நினைக்கையில் சங்கடமாகவும் இருந்தது. இவளைப் பார்த்தவுடன், அவன் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை. மாறாக மிகவும் சாதாரணமாக இருந்தான்.
‘தனக்காகத்தான் சகஜமாக இருக்க முற்படுகிறான்’ என்று புரிந்தது அவளுக்கு.
இரவு உணவு சாப்பிட்டபின், படிக்கும் அறையில் அவளுக்குப் படுக்கை விரித்தவன், “இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. எனக்கிட்ட வேற ஸ்பேர் எதுவும் இல்ல. அதான் comforter விரிச்சிருக்கேன். என்னோட ப்ளாங்கெட்தான் இருக்கு. யூஸ் பண்ணிக்கோ. இந்த ரூம் கதகதப்பாதான் இருக்கும்” என்றவுடன் அவள் வேண்டாம் என மறுத்தாள், ‘அவனுக்கு வேண்டுமே’ என நினைத்து. ஆனால் அவன் கேட்கவில்லை.
பின் அந்த அறையில் இருந்து டைரி போல ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். ‘டைரி எழுதுவானோ?’ என ப்ரியா நினைத்துக்கொண்டு ஹாலிற்குச் செல்ல, டைரிதான் எழுதிக்கொண்டிருந்தான்.
சிறிதுநேரம் கழித்து, அவன் நன்றாக உறங்கும் போது, அவனுக்கு போர்வை போர்த்திவிட்டுவிட்டு, அங்கிருந்த பீன் பேக்கிலேயே அவள் உறங்கிவிட்டாள்.
காலை அவள் எழுந்தவுடன், மறுபடியும் அவள் மேல் போர்வை இருந்தது. அவனை புன்னகையுடன் பார்க்க, நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
மழை கொஞ்சம் நின்றிருந்தது. அவனுக்காக உணவை செய்துவிட்டு, கஞ்சி காய்ச்சி தயாராக வைத்தபின், அவனை எழுப்பினாள்.
உறக்கத்தில் கண்விழித்தவன் அவளையே பார்த்தான். பின் சுதாரித்துக்கொண்டு எழ, அவன் நெற்றியை தொட்டுப் பார்த்த ப்ரியா,
“காய்ச்சல் குறைஞ்சிடுச்சுன்னு நினைக்கறேன் இளா. மழை கொஞ்சம் விட்டுருக்கு. காயுட்ட கேட்டேன். தண்ணி கொஞ்சம் வடிஞ்சிட்டதா சொன்னா. மறுபடியும் மழை அதிகமாகறதுக்கு முன்னாடி கிளம்பறேன். உனக்கு மதியத்துக்கு, நைட்க்கு கூட ரெடி பண்ணிட்டேன். மறக்காம மருந்து சாப்பிடு, நானும் ரிமைன்ட பண்றேன்” அவள் சொன்னவுடன், சரி என தலையசைத்தான்.
இன்னும் கொஞ்சம் அவனுக்கு அறிவுரைகள் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.
அடுத்த இரண்டு நாட்களில் அவனுக்கு காய்ச்சல் முற்றிலுமாக போயிருந்தது.
ஆனால் ப்ரியாவிற்கு காய்ச்சல் வந்துவிடும் போல ஆகிவிட்டது அகிலன் அவளை சென்னைக்கு வர சொன்னவுடன். அதுவும் அவன் சொன்ன காரணம் இன்னமும் பீதியை கிளப்பியது.
***
சனிக்கிழமை காலை. ப்ரியாவின் அம்மா அழைத்திருந்தார் ப்ரியாவை.
முக்கியமான விஷயம், வார இறுதிதானே, அவள் சென்னை வருவதற்கு அகிலன் டிக்கெட் போட்டுள்ளதாக சொல்லி அவளை உடனே வரச்சொல்லியிருந்தார். அவளும் சரி என்று சொல்லியிருந்தாள்.
அவர் பேசியபின் அகிலன் அவளை அழைத்து, “டிக்கெட் மெயில் பண்ணிருக்கேன்டா” என்றான்.
“என்ன திடீர்னு ண்ணா? என்ன ஆச்சு?” கொஞ்சம் பதட்டத்துடன் ப்ரியா கேட்டாள்.
“ஹ்ம்ம். அம்மா நேத்துல இருந்து ஒரே பிரச்சனைடா குட்டி. உன் ஜாதகத்தை ஜோசியர்கிட்ட காட்டினாங்களாம். அந்த ஆளு உனக்கு ஏதோ தோஷம் இருக்குன்னு சொல்லியிருப்பார் போல. கல்யாணம் பத்திதான் பேச வரச்சொல்லியிருக்காங்க” என அவன் நிறுத்த, ஒரு நொடி இதயம் நின்றுவிட்டது ப்ரியாவிற்கு.
“நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன். கடைசியா… உன்கிட்ட பேசாம எதுவும் முடிவு பண்ணவேண்டாம்னு மட்டும்தான் என்னால சொல்ல முடிஞ்சது. நீதான், உன் மனசுல… என்ன இருக்குன்னு சொல்லணும் ப்ரியா” ‘உன் மனசுல’ என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னான்.
ப்ரியாவுக்குத் தலையே சுற்றியது. மூச்சு அடைப்பது போல உணர்வு. எப்படி சமாளிக்கப்போகிறோம் என்கிற பீதி. அகிலனிடம் பேசிவிட்டு, கிளம்பத் தயாரானாள்.
‘இதுவரை செழியனிடம் காதலை கூட சொல்லவில்லை. இதில் எப்படி வீட்டில் அவனைக் காதலிக்கிறேன் என்று சொல்வது’ என்று யோசிக்கும்போது அழுகை கட்டுப்படுத்தமுடியாமல் வந்தது.
அதேநேரம் செழியன் அழைத்தான் ப்ரியாவை. என்றைக்கும் இல்லாத திருநாளாக வீடியோ காலில்.
“ஹே இன்னைக்கு நான் என்ன செய்திருக்கேன்னு பார்க்கறயா?” என்றபடி அடுப்பை காட்ட, அசைவ உணவு செய்திருப்பான் போலும்.
“இளா…” அவள் அழைத்ததும் அவளை அப்போதுதான் பார்த்தான்.
“என்னாச்சு இசை? ஏன் அழுகற?” படபடப்புடன் அவன் கேட்க,
அவள் கண்களை துடைத்துக்கொண்டு, “இளா, ஏதோ வீட்ல சரியில்ல. கல்யாணம் அது இதுன்னு சொல்றாங்க. இப்போ சென்னை வர சொல்றாங்க. நான் சொல்லிடப்போறேன், எனக்கு உன்னதான் பிடிச்சுருக்குன்னு. ஒழுங்கா ஈவினிங்குள்ள நீயும் சென்னை வர. வந்து பேசற. எனக்கு வேற வழி தெரியல” என்றவுடன், அதிர்ந்தான் செழியன்.
“வராம மட்டும் இருந்தன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது இளா. ஐம் சீரியஸ். பை” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
அவன் அழைத்தால் எடுக்கக்கூடாது என நினைத்தாள். ஆனால் அவன் அழைக்கவே இல்லை. இருக்கும் பயம் பத்தாதென்று, அடுத்த பயம், ‘அவன் வருவானா… மாட்டானா?’ என்பதும் சேர்ந்துகொண்டது.
வீட்டை அடைந்தவுடன், அனைத்தும் சகஜமாக நகர்ந்தது. அகிலன் வீட்டில் இல்லை. முக்கியமான மீட்டிங் என சென்றிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, ப்ரியாவின் அம்மா, அப்பா இருவரும் அவளை அழைத்தனர். கவிதாவும் அவர்களுடன் இருந்தாள். படிப்பைப் பற்றி கேட்டறியும் போது அகிலனும் சரியாக வந்தான். அவன் ப்ரியாவை நலம் விசாரிக்க, ஜெயராமன் அவனையும் உட்காரச்சொன்னார். ப்ரியா பக்கத்தில் உட்கார்ந்தான்.
“ப்ரியா. ஜோசியர்ட்ட உன் ஜாதகம் காட்டினேன். தோஷம் இருக்கு, கட்டம் சரியில்லன்னு சொன்னாரு” லட்சுமி ஆரம்பித்ததும், ப்ரியா ஏதோ பேசவந்தாள்.
“இரு நான் முடிச்சுடறேன். உனக்கு வர பர்த்டேகுள்ள கல்யாணம் பண்ணலன்னா, அடுத்து முப்பத்தி ரெண்டு வயசுலதான் ஆகும்னு சொல்றார்” இதை கேட்டவுடன் அகிலன், “உஃப்” என மூச்சை வெளியேற்றினான், ‘இதையெல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் நம்புவீர்கள்’ என்பதை போல.
“என்ன அகில்? நம்பமாட்டல்ல. அதே ஜோசியர்தான் உங்க கல்யாணத்த ஆறு மாசம் கழிச்சு நடத்தச்சொன்னார். இல்லைனா பிரச்சனை வரும்னு சொன்னார். நீ கேட்கல. என்னவெல்லாம் நடந்துச்சுன்னு உனக்கே தெரியும்” என்றதும் கவிதாவிற்கு சங்கடமாகிவிட்டது.
அதைப் பார்க்கமுடியவில்லை அகிலனால். நெற்றியை தேய்த்துக்கொண்டு, “இப்போ எதுக்குமா தேவையில்லாத போஸ்ட் மார்ட்டம்” என்றான் அந்த பேச்சு பிடிக்காமல்.
“குத்திக்காட்ட சொல்லல அகில். இதுவரை நான் தேவையில்லாம இதை சொன்னதும் கிடையாது. அவர் சொல்வாக்கு கண்டிப்பா நடக்கும்னு சொல்றேன்” என்றார் நிதானமாக.
அதற்கு மேல் அகிலனாலும் பேசமுடியவில்லை.
‘தன் பாடு திண்டாட்டம்தான். நிலைமையை சரிசெய்யவேண்டும்’ என நினைத்து ப்ரியா தவறான நாணயத்தை நகர்த்திவிட்டாள்.
“அம்மா நான் படிச்சு கூட முடிக்கல இன்னும். படிச்சு முடிச்சு இன்னும் பெரிய வேலைக்கு போகணும்” என்றதும் ஜெயராமன்,
“நீ சொல்றது சரிதான்டா. இதெல்லாம் யோசிக்காம இருப்போமா? என்னோட ஃபிரண்ட் ரகுநாத் பையன் சிவா தெரியும்ல உனக்கு. அவன் கலிபோர்னியால புதுசா ஸ்டார்ட் அப் ஆரம்பிச்சிருக்கான். முன்னாடியே உன்ன கேட்டாங்க…
நீ படிக்கறன்னு சொல்லியிருந்தேன். இதை பத்தி ரகுநாத்கிட்ட பேசினப்பதான் அவர் ஒரு ஐடியா தந்தாரு. கல்யாணம் உங்க ரெண்டு பேருக்கும் இப்போ முடிச்சிடலாம். நீ படிச்சு முடிச்சப்புறம் யுஎஸ் போனா போதும்னு சொன்னாரு. சிவாவும் உன் டெக்னலாஜிலதான் வேலை பார்க்கறான். சோ உனக்கும் ரொம்ப நல்ல ஸ்கோப் இருக்கு.
உன்ன கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்க விரும்பலடா. உன்னோட சம்மதத்தோடதான் நடக்கும். ஜோசியர் எப்படியும் உனக்கு இப்போவே கல்யாணம் ஆகிடும்னு திடமா சொல்றாரு” என்றதும் தூக்கிவாரி போட்டது ப்ரியாவுக்கு. படபடப்பு அதிகமானது. அகிலனைப் பாத்தாள்.
அகிலனுக்கும் அதிர்ச்சி. இது அவனுக்கும் தெரியாது. அவனும் ப்ரியாவைப் பார்த்தான்.
பின் அகிலன் ஜெயராமனிடம், “அதெல்லாம் சரிப்பா. அவ்ளோ தூரம் அனுப்பணுமா? எதுனாலும் உடனே போகக்கூட முடியாதே. இங்கயே பார்க்கலாம். இல்ல மும்பைல… மும்பை பக்கத்துல பார்க்கலாமே” என்றான் ப்ரியாவைப் பார்த்து. அவள் கண்கள் கலங்கியது.
“இதென்ன அவ்ளோ ஈஸியான விஷயமா அகில்? மும்பைல பையன நாங்க எங்க போய் தேட?” கேள்வியாக பார்த்தார் லட்சுமி.
“உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு ப்ரியா” அழுத்தமாக ஆனால் மெதுவாக அவள் கேட்கும்படி சொன்னான் அகிலன்.
இருக்கும் சாமியெல்லாம் துணைக்கு அழைத்து, தைரியத்தை வரவழைத்து, “அம்மா எனக்கு அண்ணி தம்பி இளஞ்செழியனை பிடிச்சுருக்கு” என்றாள் தலைகுனிந்து.
அவள் அம்மாவும் அப்பாவும் திகைத்தனர். அவர்கள் உடனே கவிதாவைப் பார்க்க, கவிதா என்ன சொல்வதென்று யோசிக்கும்முன், அவளை யாரேனும் எதுவும் கேட்கும்முன், அகிலன், அவன் முன்பே யூகித்ததை அவர்களிடம் சொன்னான்.
“எதுவும் சரியா தெரியாம சந்தேகப்படக்கூடாதுன்னு சொல்லலப்பா” என்று முடித்தான் அகிலன். ப்ரியாவிற்கு அதிர்ச்சி. அகிலனுக்குத் தெரியுமா என்று. அழுகை வந்துவிட்டது இப்போது.
“ஏன்டா… அதுக்குதான் நீ அவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சு, பாம்பே செலக்ட் பண்ணயா” ஜெயராமன் ப்ரியாவிடம் கேட்க, அவள் கண்ணீருடன் ஆம் என தலையசைத்தாள்.
லட்சுமி கோபத்தில் ப்ரியாவை, “ஏன்டி என்ன தைரியம் இருந்தா இவ்ளோ பெரிய காரியத்தை பண்ணிட்டு…” என திட்ட ஆரம்பிக்க, ஜெயராமன் தடுத்தார்.
காதலுக்காக படிப்பை சவாலாக ஏற்று… படிப்பிலும் பிரகாசிக்கும் தன் மகளை திட்டத் தோன்றவில்லை அவருக்கு.
சரியாக அப்போது வெண்பாவும், கவிதாவின் தந்தை ஸ்வாமிநாதனும் வந்தனர் டான்ஸ் கிளாஸ் முடிந்து. ஸ்வாமிநாதன், கவிதா வீட்டின் பக்கத்தில்தான் வீடெடுத்து தங்கியிருக்கிறார் பணி ஓய்வுக்குப்பின்.
ப்ரியாவுக்கு திக் என்றது. இந்த நாளில் இன்னும் எதெல்லாம் பார்க்கப்போகிறோமோ என நினைத்து.
அவர் வந்தவுடன், அனைவரும் சகஜமாக இருக்க முற்பட்டனர். ஸ்வாமிநாதன் ப்ரியாவிடம் சாதாரணமாக பேசினார்.
வெண்பாவுடன் சிறிதுநேரம் அவர் விளையாடிக்கொண்டிருக்க, அதற்குள் ஜெயராமனும் லட்சுமியும் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர்.
பின் ஸ்வாமிநாதன் கிளம்ப நினைக்கையில், ஜெயராமன் அவரிடம் தயங்கி நடந்தது அனைத்தையும் சொல்லி பேச ஆரம்பித்தார்.
“இதை தள்ளி போடவேணாம்னுதான் இப்போவே பேசினேன். பொண்ணு சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம் சம்மந்தி. செழியனும் ரொம்ப நல்ல பையன். அவங்களுக்குள்ள பிடிச்சுருக்கு அப்படிங்கறப்ப, எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.
பிடிக்காம வேற கல்யாணத்த பண்ணிவச்சு, அவள இந்த வீட்ல இருந்து மனசு வருத்தத்தோட அனுப்ப நாங்க விரும்பல. அவ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இங்க இருந்து போகணும். நீங்க சொல்லுங்க என்ன பண்ணலாம்னு” என்றவுடன், அகிலன் ப்ரியாவை பார்த்து, ‘இனி என்ன எல்லாம் சுபமே’ என்பதுபோல புன்னகைத்தான்.
ஸ்வாமிநாதன் வேண்டாம் என்பாரா? மனதிற்கு மிகவும் பிடித்த மாப்பிள்ளையான அகிலனின் தங்கை, மனதார சம்மதித்தார்.
ப்ரியாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியாத நிலை. சந்தோஷம் அதிகமாகும்போது கூட அழுகை வரும், அந்த நிலையில் அவள். ஆனால் அதிக சந்தோஷம் ஆபத்தானதே.
அடுத்த பிரச்சனை செழியன் வடிவில் வீட்டு வாசலில் வந்து நின்றது. ப்ரியா அழைத்ததன் பேரில் வந்திருந்தான். அவன் படிப்பது ப்ரியாவை தவிர இங்குள்ள யாருக்கும் தெரியாதே!
செழியனைப் பார்த்ததும்தான் ப்ரியாவிற்கு உறைத்தது அவனை அழைத்தோமே என. அப்போதுதான் மூளையில் சுள்ளென்று தட்டியதுபோல அவன் படிப்பது நினைவிற்கு வந்தது.
அவன் வந்தது யாருக்கும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ப்ரியாவிற்காக, தங்கள் காதலுக்காக பேச வந்திருக்கிறான் என நினைத்தார்கள். அவனை வரவேற்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
நடந்ததை அவனிடம் சொல்லவேண்டுமே எப்படி என ப்ரியா யோசித்துக்கொண்டே இருக்க, செழியன் பார்வை மட்டும் ப்ரியாவை பட்டு பட்டு மீண்டது. கொஞ்சம் கோபமும் தெரிந்ததோ அவளுக்கு?!
அனைவரும் ஹாலில் உட்கார்ந்திருக்க, ஜெயராமன் செழியனிடம் பேச ஆரம்பித்தார்.
“அப்புறம்பா வேலையெல்லாம் எப்படி போகுது” என ஆரம்பிக்க, திடுக்கிட்டு ப்ரியாவை பார்த்தான் செழியன். அந்த பார்வையில் அவள் கண்கள் கலங்கிவிட்டது.
ஒரு முறை ஆழ மூச்சிழுத்து, “அங்கிள் நான் ஒர்க் பண்ணல. ஐஐடி பாம்பேல PhD பண்றேன்” என்றான். ப்ரியாவின் குடும்பத்தில் அனைவரின் பார்வையும் ப்ரியா பக்கம் திரும்ப, கவிதாவும் ஸ்வாமிநாதனும் அதிர்ந்து செழியனைப் பார்த்தனர்.
“என்னடா சொன்ன நீ? இந்த வயசுல படிக்கறயா? வேலைல இல்லையா?” அதிர்ந்து ஸ்வாமிநாதன் எழுந்து கிட்டத்தட்ட அடிப்பதுபோல சென்றுவிட்டார்.
அனைவரும் பதறிக்கொண்டு எழ, செழியன் நகராமல் அப்படியே நின்றான். கண்கள் ப்ரியாவை விட்டு நீங்கவில்லை. அவள் நடப்பவை அனைத்தையும் பார்த்து ஆணி அடித்தாற்போல அப்படியே சிலையென நின்றாள். அழுகை நிற்காமல் கொட்டியது. கண்கள் மன்னிப்பை யாசித்தது அவனிடம்.
ஜெயராமன் மற்றும் அகிலன்தான் ஸ்வாமிநாதனை தடுத்தனர்.
அகிலன் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான் ப்ரியாவை. இதுகுறித்து என்னிடமாவது முன்னமே சொல்லியிருக்கலாமே என்ற மனவருத்தம் அவனுக்கு.
அடுத்த சில மணிநேரங்கள், வீட்டில் அனைவரும் வெண்பாவை தவிர, ஒரு வழியாக பேசி முடிவு செய்து, இருவருக்கும் திருமண செய்துவிட முடிவு செய்தனர்.
என்ன நடந்தது, எப்படி சம்மதித்தனர், அனைவரின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் போகப்போக பார்க்கலாம்!
அனைத்தும் ஒருவழியாக சரிசெய்யப்பட்டு, ப்ரியாவிற்கும் செழியனுக்கும் திருமணம் இனிதே முடிவடைந்தது.
***
ப்ரியாவின் அறைக்கதவு தட்டப்பட, கடந்தகால நினைவோட்டத்தில் இருந்த ப்ரியா நிகழ்வுக்கு வந்து, கதவை திறந்தாள்.
லட்சுமிதான் வந்திருந்தார் அவளை எழுப்ப. அவரை அனுப்பிவிட்டு, கண்ணாடி முன் நின்று வயிற்றை தொட்டுப்பார்த்தாள். கண்கள் கலங்கியது. அவள் காதலால் முளைத்த துளிர் கருவாக வயிற்றில்.
‘ஆனால் அவன் காதல்?’ அதை அவள் யோசிக்க, அவனுடன் கடைசியாக சண்டையிட்ட போது, அவன் சொன்ன, ‘உன்ன பிடிக்கும் அவ்ளோதான், ஆனா லவ் எல்லாம் இல்ல’ என்பது நினைவிற்கு வர, ஏனோ அது கசந்தது.
காலை வேலைகளை முடித்துவிட்டு, ஏதோ முடிவெடுத்தவள் போல அகிலனிடம் பேச உட்கார்ந்தாள் ப்ரியா.
“அண்ணா” என்று இழுக்க, “என்ன வேணும் குட்டி பிசாசு” அவளை நன்றாக புரிந்துகொண்ட அவள் அண்ணன் கேட்டான்.
“எனக்கு மாமாகிட்ட கேட்டு அவங்க வீட்டு சாவி வாங்கித்தாண்ணா. எதுக்குனு கேட்காத ப்ளீஸ். சொல்ற நிலைமைல நான் இல்ல. யார்கிட்டயும் நான் கேட்டேன்னு சொல்லாத. எனக்கு இப்போவே வேணும் ப்ளீஸ்” கிட்டத்தட்ட கெஞ்சினாள் தங்கை.
சில நொடிகள் ப்ரியாவையே பார்த்தான் அகிலன். தன்னிடம் செல்லகூடாத அளவிற்கு ஏதோ உள்ளது என்பதை உணர்ந்து, “என்கிட்டயே ஒரு சாவி இருக்கு டா. எப்போ போணும்?” என கேட்டான்.
“சூப்பர்ண்ணா. எனக்குத் தர்றயா? நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பறேன்” என்றவுடன், “என்னது இப்பொவேவா, அப்போ நானும் வரேன்” அதிர்ச்சியுடன் சொல்ல,
“இல்லண்ணா. நீ வந்தா அண்ணிட்ட சொல்லணும். அவங்களுக்கு கூட தெரியவேணாம். கொஞ்சம் முக்கியமான விஷயம். நான் போயிட்டு வரேனே, ஈவினிங்குள்ள வந்துடறேன். ப்ளீஸ் ப்ளீஸ்” என்று ஒருவழியாக அகிலனை சம்மதிக்க வைத்துவிட்டாள்.
அரைமணி நேரத்தில் புறப்பட்டு கிளம்பியும்விட்டாள். தன் அம்மாவிடமும் கவிதாவிடமும் தோழியை சந்திக்க செல்வதாக சொல்லியிருந்தாள்.
அடுத்த 100 நிமிடங்களில் செழியனின் காஞ்சிபுரம் வீட்டின் முன் அந்த டாக்ஸி நின்றது.
திருமணமான போது இவ்விடத்திற்கு வந்தது, அதற்கு முன் செழியனை முதல் முறை அகிலனின் கல்யாண சடங்கில் சந்தித்தது, என்று பல நினைவுகளுடன், தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததும், படியேறி மேலே சென்றாள் செழியன் அறைக்கு. அந்த படிகள் கூட கதைகள் சொன்னது அவளுக்கு.
அறைக்குள் சென்றவுடன் அவள் கண்கள் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரி பக்கம் சென்றது. அதை அவசரமாகத் திறக்க, அவர்கள் இருவரின் கல்யாண புகைப்படம் உள்ளே இருந்தது. இருவர் முகத்திலும் நிறைந்த புன்னகை.
கண்கள் அவளையும் மீறி இப்போது கலங்கியது. இதில் இருக்கும் சிரித்த அவன் முகமும், சண்டையிட்டு பிரியும்போது மனதில் பதிந்திருந்த அவன் முகமும் மாறி மாறி வந்து செல்ல, புகைப்படத்தை மறைவாக வைத்தாள் கண்ணில் படாமல் இருக்க.
பின் அவசரமாக மேல் அடுக்கில் இருந்த சிலவற்றை மெதுவாக எடுத்தாள். வரிசையாக ஆண்டு வாரியாக டைரிகள் அடுக்கப்பட்டிருந்தது.
அவனுடன் கல்யாணத்துக்குப்பின் சேர்ந்திருந்தபோது, சொல்லியிருக்கிறான் அவளிடம். எழுதக் கற்றுக்கொண்ட காலத்தில் இருந்தே பழகிய பழக்கம் இது என்று.
முதல் டைரியை எடுத்தாள். பல வாக்கியப்பிழைகளுடன், கையெழுத்து முத்துமுத்தாக இருந்தது, அந்த சிறு வயதிலேயே.
ஏதோ ஒரு அழுத்தத்துடன் ப்ரியா படிக்க ஆரம்பித்தாள்.
அதே நேரம், மும்பையில் செழியன்,
“வாழ்க்கைனா எப்படி இருக்கணும்னு உதாரணமா சொல்ற அளவுக்கு, அழகான வாழ்க்கை என்னோடது. இசை… எனக்கு அந்த இனிமையான வாழ்க்கைய தந்தா”
‘இசை’ என்று சொன்னபோது அவன் கண்களில் அவ்வளவு ஆசை, காதல்.
“பட், ஒருத்தங்களோட வாழ்க்கை எப்படி இருக்கக்கூடாதுன்னு சொல்றதுக்கும் என் வாழ்க்கைதான் உதாரணம்” அவன் கண்களில் ஆசை, காதலெல்லாம் மறைந்து வெறுமை சூழ்ந்தது.
மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தான் செழியன்.