தனிப்பெரும் துணையே – 11

தனிப்பெரும் துணையே – 11

அதிகாலை காஞ்சிபுரம் பிரதான பகுதியில் இருந்த அந்த சின்ன நெரிசலான குடியிருப்பில், ஒரு வீடு, பரபரப்பாக இருந்தது.

“மதி, எவ்ளோ நேரம். சீக்கிரம் கிளம்புங்க. பாரு விச்சு வீட்ல எல்லாரும் வந்துட்டாங்க” என மனைவி மதுமதிக்கு குரல் கொடுத்தார் ஸ்வாமிநாதன். தம்பி விஷ்வநாதன் அவர் மனைவி மங்களம் மற்றும் மகன் விவேக் வந்திருந்தனர்.

மதுமதி அழகான காட்டன் புடவையில் கிளம்பி பத்து வயது மகள் கவிதாயினியையும் ஆறு வயது நெருங்கும் மகன் இளஞ்செழியனையும் கிளப்பி அழைத்துவந்தார்.

ஸ்வாமிநாதன் மற்றும் மதுமதி இருவரும் வேலை பார்ப்பவர்கள். மதுமதியின் பள்ளியில் கவிதாவும் செழியனும் படித்தனர்.

மிகவும் நடுத்தரக் குடும்பம். மாத வருமானம் அடிப்படை தேவைகளுக்குச் செலவழித்த பின், மாத இறுதி நெருங்கும்போது திண்டாட்டம்தான் எப்போதும்.

ஆனால் பிள்ளைகளுக்கு தேவையானது எப்போதும் கிடைக்கும் வகையில் தங்கள் தேவைகளை குறைத்துக்கொள்வார்கள்.

மதுமதியும் மங்களமும் வேற்று தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், ஸ்வாமிநாதன், மற்றும் விஸ்வநாதனுடன் ஆன திருமணத்திற்குப்பின், சகோதரிகள் போல ஒற்றுமையாக இருந்தனர்.

இப்போது இரு குடும்பமும் தயாராகி கோவிலுக்கு புறப்பட,

“அக்கா இப்போ வயிறு வலி பரவால்லயா” மங்களம் கேட்க, “பரவால்ல. வெந்தயத்தண்ணி குடிக்கறேன். அப்பப்போ வருது போகுது. சிலசமயம் அதுனாலயே வெறுப்பா இருக்கு” என்றார் மதி.

“உடம்பு குறைஞ்ச மாதிரி இருக்கு. ஹாஸ்பிடல் போலாம்ல” கனிவுடன் மங்களம் கேட்டார்.

“எங்க நமக்கு வர்றது தேவைக்கே சரியா இருக்கு. இந்த மாசம் இளா பர்த்டே வருதே. கேக், ஸ்னாக்ஸ்லாம் வாங்கணும். ரொம்ப ஆசையா இருக்கான் அவனோட ஃபிரண்ட்ஸ் கூப்பிடணும்னு சொல்லி. பார்ப்போம் அடுத்த மாசம் போக முடியுதான்னு” என்றார் மதி.

மங்களம் மகன் விவேக், கவிதாவுடனும் செழியனுடனும் ஒட்டாமல் தனியாக இருந்தான். ஒருவழியாக தரிசனம் முடிந்து, அவரவர் வீடு திரும்பினர்.

அன்றைய இரவு, “அம்மா, இந்தா கரெக்ட்டா எழுதிருக்கேனான்னு பாரு” என ஒரு டைரியை நீட்டினான் செழியன்.

செழியனுக்கு மொழியில், எழுதவும், படிக்கவும் நன்றாக வரவேண்டும் என, மதி அவனை தினமும் இதுபோல தெரிந்தவற்றை எழுதச்சொல்வார். அவனும் அன்று நடந்ததை தமிழ் மற்றும் ஆங்கிலத்தின் கலவையுடன் எழுதுவான்.

இந்த வயதில் அவனின் எழுதும் திறன், எதையும் சீக்கிரம் புரிந்துகொள்ளும் திறன் (grasping power), மொழியை சுலபமாக கற்றுக் கொள்ளுதல், மற்றும் அவனின் கையெழுத்து அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும்.

“சூப்பர் டா கண்ணா. சின்ன சின்ன மிஸ்டேக்ஸ். அவ்ளோதான்” என்றவர் தவறு எங்குள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். “நெக்ஸ்ட் டைம் இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ” என மகனை தட்டிக்கொடுத்து பாராட்டினார்.

நால்வரும் படுக்கையில் படுத்த பின், “கவி, இனி மங்களம் சித்தி வீட்டுக்கு போனா இளாவையும் கூட்டிட்டுப்போணும் தனியா போகக்கூடாது சரியா. இளா நீ அக்காவை விட்டுட்டு எங்கேயும் போகக்கூடாது. அக்காவை தனியா விடாத” என்றார் மதி.

ஸ்வாமிநாதன் புரியாமல் எதற்கு என்பது போல பார்க்க, குழந்தைகள் உறங்கும் வரை பொறுத்திருந்த மதி, “மாமா வீட்டுக்கு போறதுக்கு இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க” என்றவுடன், “நீ சொன்னா அதுல கண்டிப்பா ஏதாச்சும் இருக்கும். என்னன்னு சொல்லுமா” என்றார் ஸ்வாமி.

“நம்ம மங்களம் அக்கா சொந்தக்கார பையன் வேலு என் ஸ்கூல்ல படிக்கறான்ல. அவன் நடவடிக்கை சரியில்லைங்க. ஸ்கூல்ல ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டான். நான் பார்த்து ப்ரின்சிபல்ட்ட சொன்னேன் அவங்களும் அவனோட அம்மா, அப்பாகிட்ட பேசி வார்ன் பண்ணி அனுப்பினாங்க.

விஷயத்தை இன்னும் விசாரிச்சப்பதான் தெரிஞ்சது, அவன் இதுபோல இன்னும் சில பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துருக்கான்னு. நேத்து ஸ்கூல்ல டிசி கொடுத்துட்டாங்க. இன்னைக்கு அக்கா கேட்பாங்கன்னு நினைச்சேன். ஆனா கேட்கல. அவங்களுக்கே தெரியாது போல. நானா சொல்ல வேணாம்னு விட்டுட்டேன். அந்த வேலு அவங்க வீட்டுலதான் பாதி நேரம் இருக்கான். நம்ம பொண்ண பத்திரமா பாத்துக்கணும் இல்லையா” என்றார் மதி.

சுவாமிநாதனும் ஆமோதித்தார்.

அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பும் போது, மதி கையில் கைக்கடிகாரம் அணிய, அதன் ஸ்ட்ராப் இரண்டாக கிழிந்தது. “ஏங்க இன்னைக்கு ஈவினிங் வர்றப்ப, இதை சரி பண்ணிட்டு வாங்க” என அவரிடம் தந்தார்.

அதற்கு ஸ்வாமிநாதன், “சீக்கிரம் உனக்கு புதுசு வாங்கணும்மா. இது ரொம்ப நைஞ்சு போச்சு” என்றார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த செழியன் அவன் அம்மாவிடம் பள்ளிக்குச் செல்லும்போது, “நான் பெரிய பையன் ஆகி, உனக்கு சூப்பர் வாட்ச் வாங்கி தரேன் மா” என்றான் ஆசையாக. அவனை அப்படியே கட்டி தழுவிக்கொண்டார் மதி.

இப்படியாக நாட்கள் செல்ல, திடீரென ஒரு நாள் காலை, மதிக்கு வயிற்று வலி கொஞ்சம் அதிகமாக, பள்ளிக்கு அனைவரும் கிளம்பும்போது…

ஸ்வாமிநாதன், “நான் லீவ் போட்டுட்டு வரேன்மா. ஹாஸ்பிடல் போலாம்” என்றிட, அதற்கு மதி, “பரவால்லைங்க. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன். இதுக்கெதுக்கு லீவ் போட்டுட்டு… லாஸ் ஆஃப் பே ஆயிடும்” என்றார்.

அதேபோல அன்று மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீடு திரும்பினார் மதி.

வரும் வழியில் பேக்கரியில் மகனின் பிறந்தநாளை சொல்லி முந்தைய தினம் இரவு தரும்படி சொல்லிவிட்டு வந்தார்.

அன்றைய இரவு, “மதி. நீ ஒன்னும் இல்லன்னு சொல்ற. எனக்குப் பயமா இருக்குமா. அடிக்கடி வலின்னு சொல்லிட்டு இருக்க” ஸ்வாமிநாதன் மதியிடம் பேசினார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. பயப்பட வேண்டாம்னுதான் டாக்டர் சொன்னாரு. நீங்க கவலைப்படாதீங்க” என்றவர், பிள்ளைகளை மடியில் படுக்க வைத்து, தலை கோதியவாறே,

“பசங்கள நல்லா படிக்க வைக்கணும்ங்க. அவங்க நல்ல வேலைக்கு போகணும். நம்மள போல அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டப்படக்கூடாது. நம்ம எப்பவும் பாப்போமே, கோவில் பக்கத்துல அந்த பழைய தனி வீடு. அதை வாங்கணும். பசங்க சந்தோஷமா அங்க இருக்கணும்” என்றார் ஸ்வாமிநாதனிடம்.

இதுபோல பலமுறை கூறியுள்ளார். இது அவரின் கனவு. இன்றும் அதையே சொன்னார் மதி.

அடுத்த சில நாட்கள் மெதுவாக செல்ல, அன்று பள்ளி விடுமுறை. கவிதாவையும், செழியனையும் கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்துச் சென்றவர், அங்கிருந்த மண்டபத்தில் இருவருடனும் உட்கார்ந்தார்.

கவிதா மதியின் மேல் சாய்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

அப்போது மதி, “கவி… நீ நல்லா படிக்கணும். படிச்சு நல்ல வேலைக்கு போய் அம்மா, அப்பா பேர காப்பாத்தணும். தைரியமா இருக்கணும். எதுக்கும் சோர்ந்துபோய்ட கூடாது. அப்பா சொல்றத கேக்கணும். எதிர்த்துப் பேசக்கூடாது. தம்பிய நல்லா பாத்துக்கோ. அவன் சின்ன பையன்” என்றதும், அதை பெரிதாக கண்டுகொள்ளாமல், “சரிம்மா” என்று சொல்லிவிட்டு, விளையாட்டிலேயே குறியாக இருந்தாள்.

“இளா. இங்க பாரு நீ எப்பவும் அக்கா கூடவே இருக்கணும். அவளை பத்திரமா பாத்துக்கோ. அப்பா இல்லாதப்ப நீதான் அவளோட துணையா இருக்கணும்” என்றதும், “ஏம்மா என்ன ஆச்சு?” என்றான் பொறுப்பாக.

இந்த வயதில் அவனின் அறிவை நினைத்து, அவன் உச்சி நுகர்ந்து, “சும்மாதான்டா கண்ணா. நீயும் நிறைய படிச்சு, பெரிய வேலைக்கு போகணும். அதுதான்டா அம்மாவோட ஆசை” அவர் சொன்னதும் தலையை ஆட்டினான் செழியன்.

இன்னும் இரண்டு நாளில் செழியனின் பிறந்தநாள். கோவிலுக்கு போய்விட்டு, வீடு திரும்பினர் மூவரும்.

அன்றைய இரவு நேரம், மதிக்கு திடீரென வயிற்று வலியுடன் நெஞ்சு வலி அதிகமாக, உறங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை தம்பியின் மனைவி மங்களத்திடம் விட்டுவிட்டு அவசரமாக மதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ஸ்வாமி.

அடுத்த நாள் கவிதாவும் செழியனும், ‘அம்மாவை காணவில்லை’ என்று கேட்டதும், ‘அவருக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்’ என சொல்லி பள்ளிக்கு அனுப்பி வைத்தார் மங்களம்.

அன்றைய மாலை பொழுது, இருவரும் பள்ளி முடிந்து வீடு வந்து சேர, அடுத்த நாள் செழியன் பிறந்த நாளிற்கு மதி ஆர்டர் செய்திருந்த கேக் இரவு எட்டும்போது வந்தது.

அதைப் பார்த்து சந்தோஷத்தின் மிகுதியில் செழியன்… அடிக்கடி அதை சென்று பார்த்துவிட்டு வந்தான்.

மங்களம் அழுதுகொண்டே வீடு வந்து சேர்ந்தார் அவர்களின் துணைக்கு. ஏன் அழுகிறார் என தெரியாமல், செழியனும், கவிதாவும் இருக்க, அவர்களை கட்டிக்கொண்டு, “இப்படியா நடக்கணும்…?!” என அழுதார்.

கொஞ்ச நேரம் கழித்து, வாசலில் வந்து நின்றது ஆம்புலன்ஸ். அதில் மதி உயிர் பிரிந்த உடலாக.

ஸ்வாமிநாதன் சொல்லமுடியாத இறுக்கத்துடன் மனைவியின் உயிரற்ற தேகத்தைப் பார்த்திருக்க, வீட்டின் நடுவில் சடலமாக வைக்கப்பட்டார் மதி.

தாயை அந்த நிலையில் பார்த்த கவிதா பயத்துடன் மங்களம் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள்.

செழியன் என்ன என்று புரியாமல், தாயின் அருகில் சென்று, “அம்மா இப்போ போய் தூங்கறயே. எழுந்திரிமா. நம்ம இன்னும் சாப்பிடல. அங்க பாரு என்ன வந்துருக்குனு. எந்திரிமா” என கேக்கை காட்டி சொல்லி, தன் அம்மாவை உலுக்கினான்.

இதுவரை இறுக்கத்துடன் இருந்த ஸ்வாமி, வெடித்து அழுதார். கவிதா பேயடித்தாற்போல மூலையில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.

அப்பாவிடம் சென்ற செழியன், “ஏன்பா அழறீங்க? அம்மாவை எழுந்திரிக்க சொல்லுங்க” என்றான். அவர் அவனைக் கட்டிக்கொண்டு, “நம்மையெல்லாம் விட்டுட்டு போய்ட்டா. மதி போயிட்டாடா” என சத்தமாக அழுதார்.

“பா அம்மா இங்கதானே இருக்காங்க. நீங்க போய்ட்டாங்கன்னு சொல்றீங்க. போங்கப்பா” அவன் கோபித்துக் கொண்டு மறுபடியும் மதியை எழுப்பினான்.

விடாமல் அழுது கொண்டிருந்த மங்களம் செழியனை மதியிடம் இருந்து பிரிக்க நினைக்க, அவன் வரவே இல்லை.

கொஞ்ச நேரத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக வர,

“என் பர்த்டேக்கு யார் யாரோ வராங்கமா. என் ஃபிரண்ட்ஸ் மட்டும் வரவே இல்ல. நீ இந்த நேரம் தூங்கிட்டு இருக்க. வா கேக் அரேன்ஞ் பண்ணலாம். அக்கா இங்க பாருக்கா. அம்மாவை எழுந்திரிக்க சொல்லுக்கா. சித்தி நீங்க சொல்லுங்க சித்தி” என ஒவ்வொருவரையும் செழியன் உதவி கேட்க, வந்திருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.

செழியன் தாயை எழுப்பி எழுப்பி சோர்ந்துபோய், டைரியை எடுத்துக்கொண்டு வந்து மதியின் பக்கத்தில் உட்கார்ந்து மதியை பார்த்து முறைத்தவாறே எழுத ஆரம்பித்தான்!

***

இரவு முழுவதும் மதியை எழுப்பி சோர்ந்துபோய், அவரின் பக்கத்திலேயே உறங்கிவிட்டான் செழியன்.

கவிதா துளியும் உறங்கமால், யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மூலையிலே உட்கார்ந்திருந்தாள் அம்மாவை பார்த்தவண்ணம் இரவு முழுவதும். கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

அடுத்த நாள் செழியனின் பிறந்தநாள். அதிகாலை வேளையில், மதியின் உடல் தகனம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டது.

செழியன் ஒரே மகன் என்பதால், ஸ்வாமிநாதனுடன் அவனையும் அழைத்துச் சென்றனர். செழியனுக்கு ஒன்றும் புரியவில்லை.

உடல் மேல் தகனம் செய்வதற்கான பொருட்களை வைக்க, பதறி ஓடிச்சென்று முதலில் தட்டிவிட்டான். அவனை வலுக்கட்டாயமாக அவன் சித்தப்பா விஷ்வநாதன் பற்றிக்கொண்டார்.

அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை தாயின் உடலில் தீ மூட்டப்பட்டபோது. கத்தி அழுதான் வேண்டாம் என. திமிறி சென்றான் எரியும் உடல் பக்கத்தில்.

அனைத்து சடங்குகளும் முடிந்து வீடு திரும்ப, இப்போது செழியனும் கவிதாவைப்போல செயலற்றிருந்தான். யாருடனும் பேசவில்லை.

இருவருக்கும் உணவு கொடுக்க மிகவும் சிரமப்பட்டார் மங்களம்.

ஓரிரு நாட்கள் சென்றபின், ‘இப்படித்தான் இனி வாழ வேண்டும், எதுவும் மாறப்போவதில்லை. அம்மா வரப்போவதே இல்லை’ என்று செழியன் புரிந்துகொண்டான்.

காரியம் அனைத்தும் முடிந்த பின், செழியனும் கவிதாவும் பள்ளிக்குப் போக ஆரம்பித்தனர்.

ஒரு நாள் மாலை பள்ளியில் இருந்து திரும்பிய இருவரும், சித்தியின் வீட்டிற்குச் சென்று மாலை உணவை சாப்பிட்டுவிட்டு, படிக்க உட்கார்ந்தனர்.

கவிதா ஏதோ யோசனையுடனே இருக்க, “என்னக்கா ஆச்சு?” என கேட்டான் செழியன்.

“செழியா, நமக்கு புது சித்தி வந்துடுவாங்களாடா? என் ஃபிரண்ட்ஸ் சொல்றாங்க, அப்பா புது சித்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்களாம். அவங்க அம்மா போட்டோ’வ தூக்கி மேல போட்டுடுவாங்கலாம். நம்மள திட்டுவாங்களாம், அடிப்பாங்களாம். ஹாஸ்டல் கூட அனுப்பிடுவாங்களாம்” என்றாள் கவலையுடன்.

“அப்படியெல்லாம் இருக்காதுக்கா. நம்ம நைட் அப்பாட்ட பேசலாம்” என்றான் செழியன்.

அன்றைய இரவு, செழியன் அவன் எழுதிய டைரியை அப்பாவிடம் காட்டிவிட்டு, அவரின் ஒருபக்கம் கவிதாவும், இன்னொரு பக்கம் அவனும் படுத்திருக்க, கவிதா, ‘கேள்’ என்பதுபோல தம்பியிடம் சைகையில் சொன்னாள். அவனும் ஆரம்பித்தான்.

“அப்பா, நம்ம வீட்டுக்கு புது சித்தி வந்துடுவாங்களா பா?” என்றதும் அதிர்ந்து ஸ்வாமிநாதன் அவனைப்பார்த்தார்.

“அக்கா ஃபிரண்ட்ஸ்லாம் சொன்னாங்களாம், புது சித்தி அம்மா போட்டோவை எடுத்துடுவாங்கன்னு. அவங்ககிட்ட அத மட்டும் எடுக்க வேணாம்னு சொல்றீங்களா? அக்கா பாவம் பா. ரொம்ப பயப்படறா. என்னை அடிச்சா கூட பரவால்ல. நான் வாங்கிக்கிறேன்” என்றான் தந்தையை பார்த்து.

ஸ்வாமிநாதனுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

விட்டத்தைப் பார்த்தவாறு, “நம்ம வீட்டுக்கு யாரும் வரமாட்டாங்கடா செழியா. கவி… நீ பயப்படாதடா. அப்பா யாரையும் கூட்டிட்டு வர மாட்டேன். எனக்கு நீங்க போதும். உங்களை நல்லா படிக்க வைக்கணும் அதுதான் அப்பாவுக்கு இப்போ முக்கியம். இதெல்லாம் யோசிச்சு நீங்க படிப்பை விட்டுடாதீங்க. அம்மா என்ன சொல்லிருக்கா, படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னு இல்லையா. அத மறந்துடாதீங்க” என்றார் இருவரின் தலையை கோதியவண்ணம்.

இப்போதுதான் இருவருக்கும் நிம்மதி வந்தது. ‘புது சித்தி வரமாட்டார் என்று அப்பாவே சொல்லிவிட்டார்’ என.

இப்படியாக ஒரு சில நாட்கள் நகர்ந்தது. மாலை நேரம் சித்தப்பா வீட்டிற்கு இருவரும் சென்றுவிடுவார்கள். ஸ்வாமிநாதன் வேலை முடித்து இரவு வந்து அழைத்துச் செல்வார்.

அப்படி ஒரு நாள் அழைக்க வந்தபோது அங்கே, ‘மதி முன்னமே சொன்ன வேலு’ அவர்கள் வீட்டில் இருந்தான். கவிதாவுடன் அவன் பேசிக்கொண்டிருக்க, செழியன் படித்துக்கொண்டிருந்தான்.

அதைப் பார்த்ததும் மதி சொன்ன அறிவுரை நினைவுக்கு வர, தம்பியிடம் இதுகுறித்துப் பேசலாமா என யோசித்தார். பின் இது அவர்கள் வீட்டில் பிரச்சனையை உருவாக்கிவிடும் என நினைத்து அதைத் தவிர்த்தார்.

பெண்ணை வீட்டில் வைத்திருப்பது, அதுவும் தாயில்லாமல், துணைக்கு யாருமில்லால் வைத்திருப்பது மிகவும் ஆபத்துக்குரியது என நினைத்து அவளை விடுதியில் சேர்க்க முடிவு செய்தார்.

அதற்கு பணம் தேவைப்பட்டது. இரவு பகல், வார இறுதி என பாராமல் வேலை பார்த்து, தேவையான பணத்தை சேர்த்து கவிதாவை விடுதியில் சேர்க்க ஆயத்தமானார்.

கவிதாவிடம் அதுகுறித்து சொன்னபோது, “என்னை ஹாஸ்டல் அனுப்பிட்டு புது சித்தியை கூட்டிட்டு வர போறீங்களாப்பா?” என்றாள் வெடுக்கென.

அந்த பேச்சில் கோபமுற்ற ஸ்வாமிநாதன், “என்ன பேச்சு இதெல்லாம் கவி?” என கத்த, அவள் சித்தப்பா, “அண்ணா நாங்கதான் இருக்கோமே பார்த்துக்க மாட்டோமா? எதுக்கு இப்போ ஹாஸ்டலெல்லாம்” என்று உதவிக்கரம் நீட்டினார்.

“இல்ல விச்சு. விருந்தும் மருந்தும் நாலு நாளைக்கு நல்லது. நாள் ஆக ஆக அது தொல்லையா மாறிடும். அந்த சங்கடத்தை நான் தர விரும்பல. மதி ஒருநாளைக்கும் இதை ஒத்துக்கமாட்டா. அவளுக்கு உதவின்னு யார்கிட்டயும் கேட்கறது பிடிக்காதுடா. இப்படி பேசுறேன்னு தப்பா எடுத்துக்காத. என்ன மன்னிச்சிடு” என அப்படியே முடித்தார் அந்தப் பேச்சை.

கவிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கத்தி அழுதாள். அடம் பிடித்தாள். ஸ்வாமிநாதன் அவளை சமாதானம் செய்தாரே தவிர, அவர் முடிவில் திடமாக இருந்தார்.

செழியனுக்கோ அதற்கு மேல் வருத்தம்… கோபம். அம்மா சென்றபின் அக்காதான் என்று இருந்தான். இப்போது அவளை, அதுவும் வெகு தூரம் தள்ளி இருக்கும் ஹாஸ்டலுக்கு அப்பா அனுப்ப முடிவு செய்தது அழுகையாக வந்தது.

அவனும் கெஞ்சினான். ஆனால் பயனில்லை.

இறுதி தேர்வுகள் முடிந்த பின், கவிதாவை தயார் செய்தார் விடுதிக்கு அனுப்ப.

செழியன் யாரிடமும் பேசவில்லை. அழுகவில்லை. கவிதா கெஞ்சியும் அவளுடன் பேசவில்லை. கவிதாவை விட்டுவிட்டு வர அவனையும் அழைத்தார் ஸ்வாமிநாதன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்.

கவிதாவும் சென்றுவிட்டாள். தனி மரமாக நின்றான் செழியன். அவன் துணை அவன் எழுதும் டைரி மட்டுமே. வருத்தம், அழுகை, கோபம், ஆதங்கம் என அனைத்தையும் அதில் கொட்டித் தீர்த்தான்.

முன்பெல்லாம் எழுதியது சரியாக உள்ளதா என தந்தையிடம் கேட்பான். கவிதாவை அவர் அனுப்ப முடிவு செய்தபின், நிறுத்திக் கொண்டான். அவருக்கு இருந்த வேலை பளு, அவரையும் மறக்கச் செய்தது.

இரண்டு வேலை எடுத்துப் பார்த்தார் ஸ்வாமிநாதன். கூடவே கல்லூரியில் வேலை கிடைப்பதற்கு தேவையான தேர்வுகளையும் எழுத ஆயத்தமானார்.

காலை அவனைப் பள்ளிக்கு அனுப்பிய பின், இரவு படுக்கும் போதுதான் மறுபடியும் பார்ப்பது.

செழியனுக்கு காலை, மதியம், மாலை உணவு என மங்களம் செய்து கொடுத்தார். அதுவும் மிகவும் வற்புறுத்தி ஸ்வாமிநாதனிடம் சம்மதம் பெற்றார். அவரும் சில நாட்கள் மட்டுமே என சொல்லியிருந்தார்.

செழியன் இருந்த மனநிலையில் யாரிடமும் அதிகம் பேசவேயில்லை. அமைதியாக இருந்தான்.

மங்களம் மகன் விவேக்கும் அதிகம் செழியனுடன் பேசவில்லை. விவேக் செழியனை விட இரண்டு வயது பெரியவன். கவிதாவை விட இரண்டு வயது இளையவன்.

ஒரு நாள் வேலு விவேக் வீட்டிற்கு வந்தபோது, செழியனுக்கு அவன் சித்தி வற்புறுத்தி உணவு கொடுத்துக் கொண்டிருக்க, விவேக் அவனே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வேலு, மதியின் மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, தேவையில்லாமல் விவேக்கை ஏவிவிட்டான்.

அதன் விளைவு, சில நாட்களுக்குப் பின்,

செழியன் படித்துக்கொண்டிருக்கும் போது, விவேக் அவனிடம்… “நீ உன் வீட்ல இருக்கவே மாட்டயா? இங்கயேதான் இருப்பியா?” என கேட்க, செழியன் சட்டென அவனைப் பார்த்தான். கண்கள் கலங்கிவிட்டது. இருந்தும் எதுவும் பேசாமல் தலை குனிந்து கொள்ள, அதில் இன்னமும் கோபமுற்ற விவேக்,

“என் அம்மா எனக்கு மட்டும்தான். உனக்கு இல்ல. என் அம்மாவுக்கு என் மேலதான் பாசம், உன் மேல இல்ல. சும்மா பாவம்னு உன்ன பார்த்துக்கறாங்க” என்றான். செழியன் நிமிரவே இல்லை. கண்களை மட்டும் துடைத்துக்கொண்டான்.

ஏனோ அவன் கைகளில் நடுக்கம். கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருந்தான்.

விவேக் விடாமல், “பாக்கறயா… என் அம்மாக்கு என் மேலதான் பாசம்னு?” என்றவன் சில நிமிடங்கள் கழித்து திடீரென சத்தமாக அலறினான்.

செழியன் பதறிக்கொண்டு, ‘என்ன ஆயிற்று’ என்று அவன் அருகே சென்றவுடன், விவேக் கீழே விழுந்து, “வேணாம் செழியா” என கத்தினான்.

அதற்குள் மங்களம் அங்கு வந்துவிட்டார்.

தன் மகன் கீழே விழுந்து, வலியால் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, பதட்டத்துடன் என்ன ஆயிற்று என அவனை தூக்கிக்கொண்டே கேட்க, விவேக் நிற்கவே முடியாதது போல நடித்து,

“இவன்கிட்ட கலர் பென்சில் கேட்டேன் மா. தரமாட்டேன்னு ஃபோர்ஸ்ஸா தள்ளி விட்டுட்டுட்டான். ஐயோ கால் ரொம்ப வலிக்குதே” என்று கத்தி அழுதான்.

இதைக் கேட்டவுடன் செழியனுக்கு அதிர்ச்சி. முன்னமே கலங்கியிருந்த கண்களில் இப்போது அழுகை. விவேக்கையும் மங்களத்தையும் மாறி மாறிப் பார்த்தான். ‘நான் ஒன்றும் செய்யவில்லை’ என்று சொல்ல கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

‘சித்தி நம்புவார்களா?’ என அந்த சின்ன மனம் படபடப்புடன் அவர் முகம் பார்த்திருந்தது.

மங்களமும் விவேக்கை சமாதனப்படுத்தி, ‘எங்கு வலி’ என கேட்டுக்கொண்டே, செழியனை பார்த்து, “என்ன செழியா, உன் அண்ணாதானே. அவன் கேட்டா கொடுக்க மாட்டயா? இனிமே இப்படி தள்ளி விடக் கூடாது. பாரு வலில அழறான்” என்றவர் மகனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுவிட்டார்.

ஆனால் செழியன்?! அதே இடத்தில் சலனமின்றி நின்றான். அழுகை மட்டும் நிற்கவில்லை. ‘தன் அம்மாவோ அக்காவோ இருந்திருந்தால் இந்த நிலைமை தனக்கு வந்திருக்குமா?’ என நினைத்து அந்த பிஞ்சு நெஞ்சம் வலியால் துடித்தது.

***

5
2
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved