Preethi S Karthikஉயிர்க்கூட்டின் சரிபாதி உனதே

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 17

உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே – 17:

திவ்யா ராஜீவ் அளிக்கவிருந்த பிறந்த நாள் பரிசை பார்த்தவுடனேயே அவன் மனம் அவளுக்கு புரிந்துவிட்டது. ஆனால் எதுவும் செய்யமுடியாத நிலையில் தவித்தாள். 

அந்த வரன் பேசிச்சென்ற பின், ராஜீவ்வுக்கு அதிக மனவருத்தம் தரக்கூடாது… பெற்றோருக்கு இந்த வரன் தான் பிடித்துள்ளது என எண்ணி, இந்நிறுவனத்திலிருந்து விலகிவிடலாம் என எண்ணினாள். 

ஆனால் தன் சுயத்தை விட்டு… அந்த வரனுடன் ஆயுள் முழுக்க என எண்ணியபோதே… மனதில் பெரும் நெருடல் ஏற்பட்டது. மனதால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

அச்சமயம் திவ்யா பெற்றோர் திவ்யாவிடம் பேச, அத்தருணத்தை உபயோகித்துக்கொண்ட திவ்யா, தனக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளை சரிவரவில்லை என்று சொல்லிவிட்டாள். கொஞ்சம் நிம்மதி மீண்டிருந்தது. 

அதற்கு பின், அவள் அப்பா சங்கர் மறைமுகமாக ராஜீவ் பற்றி கேட்டு… அவளின் மனநிலையை அறிய முயன்று அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டார். அதற்கு பின் அவள் பெற்றோர் காலம் தாழ்த்தவில்லை. 

அடுத்தநாள் காலையில் ராஜீவ் தந்த திலீப் எண்ணிற்கு அழைத்திருந்தார்கள். 

ராஜீவ் திலீப்பிடம் இதுகுறித்து பேசியபோது, அம்மா ஜானகியிடமும், அப்பா ஸ்ரீதரனிடம் சொல்லலாம் என்று சொன்னதற்கு, திலீப்… தற்போது வேண்டாம், சரியான நேரத்தில் தானே ஜானகியிடம் பேசுவதாகச் சொல்லி இருந்தான். 

கூடவே ராஜீவ் அவனிடம், திவ்யாவின் பெற்றோர் அவனை எப்போது வேண்டுமானாலும் அழைப்பார்கள் என்றும் சொல்லி இருந்தான். ஆகையால், சங்கர் அழைக்கையில் திலீப்பால் இயல்பாகப் பேச முடிந்தது.

பரஸ்பர பேச்சுகளுக்குப் பின், தங்கள் வீட்டை பற்றி பேசினார்கள் திலீப்பும், சங்கரும். 

ராஜீவ் அந்த வீடு குறித்து அவன் திவ்யா பெற்றோரிடம் சொன்னதை திலீப்பிடம் சொல்லி இருந்தான். 

எந்த ஒரு பெண் வீட்டினருக்குமே, வரப்போகும் மாப்பிள்ளையின் பின்புலம் குறித்து நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்று நினைத்த திலீப்… சங்கரிடம், “ஜீவா பெருந்தன்மையா தனக்கு எதுவும் வேணாம்னு சொல்லிட்டான். ஆனா அவன் அண்ணனா நானும், அவனோட அப்பா அம்மாவா எங்க பேரண்டஸும் அவனை அப்படியே விடமாட்டோம் சர். எங்க எல்லாருக்கும் சம பங்கு…” 

அவன் முடிக்கும்முன் சங்கர், அவன் பேச்சில் ராஜீவ் மேல் உள்ள அக்கறையை உணர்ந்தவர், “சொத்தென்னப்பா சொத்து! உங்கள போல மனுஷங்க கிடைச்சது ராஜீவ்வுக்கும், ராஜீவ் போல ஒரு தம்பி உங்களுக்கு கிடைச்சதும் தான் பெரிய சொத்தே! பணம் பொருள் எல்லாம் நம்ம சம்பாதிக்கறதுதான்!

எங்களுக்கு ராஜீவ்வை பிடிச்சிருக்கு பா. ஓப்பனா பேசினார். அப்புறம், என் பொண்ணு சந்தோஷம் தான் எங்களுக்கும் முக்கியம். கண்டிப்பா எல்லாம் நல்லபடியா முடியும். இருந்தாலும் ஒரு ரெண்டு நாள் குடுங்க. என் மகன் தீரன் கிட்டயும் ஒரு வார்த்தை கலந்து பேசிக்கறோம். உங்க அண்ணன் தம்பியை போல தான் அவனும். தங்கச்சினா உயிர். என்கிட்ட கேட்காம முடிவு பண்ணிட்டீங்கனு குதிப்பான்” என்று சொல்லிவிட்டு சிரித்தார். 

அவர் சொன்னதுபோலவே தான் விஷயம் கேட்டு குதியாய் குதித்தான் தீரன். திவ்யா தன் தோழியைப் பார்க்க சென்றிருக்க, இந்த விஷயத்தைப் பற்றி பேசினார்கள் பெற்றோர்கள். 

“என்கிட்ட முடிவு கேட்கறீங்களா… இல்ல இதுதான் முடிவுனு சொல்றீங்களா? யார் என்னன்னே தெரியல. காதலாம் பெரிய காதல். சின்ன பொண்ணு அவ… அவளுக்கு பிடிச்சிருக்குனாலும், நம்ம இன்னமும் விசாரிக்க வேண்டாமா?” 

தங்கைக்கு அண்ணன் என்றாலே இப்படித்தான் போல! தான் ஒரு பெண்ணை காதலிக்கலாம். அதுவும் அப்போது சமீராவின் வயது,  தற்போது திவ்யாவின் வயதை விட குறைவாக இருக்கும்போது தான் இவன் காதலித்தான். ஆனால் தங்கை என்று வரும்போது, தங்கை சின்னப்பெண் ஆகிவிடுகிறார்கள். 

“எதுக்கு டா இப்போ கத்தற?” என்ற மீனாட்சி, “நீயும் அந்த பையன்கிட்ட பேசிப்பாரு. உனக்கும் பிடிச்சு போய்டும். பாரதிக்கு பொருத்தமான ஆள்னு நீயே சொல்வ” என்றார். 

அதையே தான் செய்ய முடிவெடுத்தான் தீரன். இருந்தாலும் தங்கை தன்னிடம் இதுபற்றி சொல்லவில்லையே என்ற உரிமை கோபம் மனதில் இருக்க, திவ்யாவிடம் சிடுசிடுவெனவே இருந்தான். பெற்றோர் வேறு அவளிடம் எதுவும் கேட்கக்கூடாது என்று சொல்லி வைத்திருந்தார்கள்.

திவ்யாவுக்கு அண்ணனிடமாவது மனம் திறந்து பேசலாமா என்ற எண்ணம் இருந்தாலும், பெற்றோருக்கு இதுபற்றி தெரிய வரும்போது ‘எங்கே தன் வாழ்வும் அண்ணனைப் போல ஆகிவிடுமோ’ என்று நினைத்து நிச்சயம் மனம் வருந்துவார்கள் என எண்ணினாள்.

தீரன் அவளை ஸ்டேஷன் சென்று விடுவதற்கு காரை எடுக்க… மனதிடத்துடன் திவ்யா அவனிடம் பேச எண்ணி… “தீராண்ணா” என்றாள் மிகவும் மரியாதையாக. 

அதை புரிந்துகொள்ளாமல் அவனோ, “என்ன?” என்று கடுகடுக்க… அதை சற்றும் எதிர்பார்க்காத திவ்யா, ஒரு முறைப்புடன் அப்படியே வாயை மூடிக்கொண்டாள். தன் செயலை எண்ணி தன்னையே திட்டிக்கொண்ட தீரன், அதற்கு பின் அவளிடம் எவ்வளவு பேசியும், அவள் வாயைத் திறக்கவில்லை. 

இதே மனநிலையில் ரயில் நிலையம் வந்தவளுக்குத் தெரியவில்லை, தன் ரயிலில் தான் ராஜீவ் வருகிறான் என்று. 

ராஜீவ் திவ்யா பெற்றோருடன் பேசியபின், தஞ்சாவூரில் கல்லூரியில் வேலைபார்க்கும் தன் கல்லூரிகால நண்பனைச் சந்திக்க சென்றுவிட்டான்.  

ஞாயிறு அன்று திலீப் அவனை அழைத்து… திவ்யாவின் பெற்றோர் பேசியதைச் சொன்னான். அதுவும் அவர்களுக்கு ராஜீவ்வை மிகவும் பிடித்துள்ளதாகவும், எல்லாம் சுமுகமாக நடக்கும் என்பதையும் சொன்னவுடன்… மனம் தித்திப்பானது. 

ஏற்கனவே திவ்யா திரும்பிச்செல்லும் ரயிலில் தான் அவனும் அவரச டிக்கெட் எடுத்திருந்தான். அவள் பெற்றோரிடம் சொன்னது போல… எதையும் அவளிடம் காட்டிக்கொள்ளாமல், அவளிடம் பேசுவதைத் தவிர்த்து… அவளுடன் பயணிக்க மட்டும் செய்யலாம் என்று நினைத்திருந்தான். 

ஆனால் திவ்யாவின் பெற்றோர் கொடுத்த க்ரீன் சிக்னல், அவனை அவளிடம் பேச உந்தியது. 

ரயிலுக்கான சார்ட் ஸ்டேஷனில் ஒட்டப்பட்டவுடன், ஒவ்வொரு பெட்டியின் பட்டியலில் அவள் பெயர் இருக்கிறதா என்று பார்த்து, அவள் இருக்கும் பெட்டியைக் கண்டுகொண்டான். பிறகென்ன… அதே பெட்டியில் அவள் கம்பார்ட்மெண்ட் பக்கத்திலிருந்த ஒன்றில் இருந்தவனிடம்… காலில் விழாத குறையாக சீட்டை மாற்றிக்கொண்டான். 

இதோ இப்போது மேல் இருந்த படுக்கையில் அவன் இருக்க, ரயிலில் அவள் ஏறிவிட்டாள். பின்னால் அவள் அண்ணன் ஏதோ பேசிக்கொண்டே வர, முகத்தை உர்ரென்றே வைத்திருந்தாள். அந்த சின்ன கோபத்தில் கூட அழகாகத்தெரிந்தாள் அவனுக்கு. 

தீரன் விட்டு சென்ற பின், சில நிமிடங்கள் கடந்திருக்கும் அவள் இருக்கையில் அனைத்தையும் சரி செய்துவிட்டு, படுக்கத் தயாராக… மொபைல் வைப்ரேட் ஆனது. 

எடுத்தவள் முகத்தின் தெரிந்த பிரகாசம் அந்த மென்மையான இருட்டிலும் அவனுக்கு வெளிச்சமாகத் தெரிந்தது. ரசித்து உள்வாங்கிக்கொண்டான். அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததும் அவன் தான். 

பெரிதாக எதுவும் இல்லை. இரவு வணக்கம் அனுப்பியிருந்தான். அதற்கே அவள் முகம் சுவிட்ச் தட்டியதுபோல கோபத்திலிருந்து புன்னகைக்கு மாறியிருந்தது.

அன்று இறவு இருவருமே உறங்கவில்லை. ராஜீவ் ஒருவகையில் நிம்மதியாக உணர்ந்தான் என்றால், திவ்யா சஞ்சலமாக உணர்ந்தாள். கடந்த சில நாட்களாகவே இவ்வுணர்வு படாதபாடு படுத்துகிறது. சஞ்சலம் பெருகி பெருகி… இறுதியில் ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. ஒரு தெளிவு பிறந்தது. 

ராஜீவ்! அவனின் ஒரு சிறிய செய்தி கூட தன் மனநிலையை இந்த அளவிற்கு மாற்றுகிறது… அவனை மறந்து வாழ்வது என்பது சாத்தியமா என யோசித்தாள். 

முதலில் ராஜீவ்விடம் பேசவேண்டும், பின் எப்படியாவது வீட்டில் பேசவேண்டும் என்ற முடிவையும் எடுத்தாள். அந்த முடிவு மனதில் தோன்றிய நொடி, ராஜீவ் அலுவலகத்திலிருந்து விலகிவிட வேண்டும் என்ற எண்ணமும் மனதிலிருந்து விலகியது. 

புன்னகையுடன், அவனுக்கு நடு இரவு பதில் அனுப்பினாள். காதில்…

யாரோ இவன் யாரோ இவன்… என் பூக்களின் வேரோ இவன்… என் பெண்மையை வென்றான் இவன்… அன்பானவன்’ கீற்றாக வெட்கப்புன்னகை அவள் முகத்தில். 

அவனும் அங்கே உறங்கினால் தானே! செய்தியையும் பார்த்தான் அவளையும் பார்த்துவிட்டான். 

அவள் செய்தி அனுப்பியபின், கேட்ட பாடலால்… லேசாக எழுந்த நாணத்தில் தன் போனை தலையில் தட்டிக்கொண்டதைப் பார்த்தவனுக்கு, அப்படியே அவள் முன் சென்று நிற்க ஆசைதான். இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான். 

காலை மணி நான்கைக் கடந்த பின் சென்னை வந்து சேர்ந்தது அந்த ரயில். இரவு உறங்காமல் பாடல் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே பாடல் கேட்டபடி, ரயிலிலிருந்து இறங்க… அவளிடம் இருந்து சற்று தள்ளி அவனின் இறங்கினான். 

சில நொடிகளில்… அவளின் அருகில் சென்றவன், அவள் பையை வாங்கியபடி… “மார்னிங் பாரதி… நீங்களும் இந்த ட்ரெயின் தானா!” என அவளுக்கு சந்தேகம் வராதவண்ணம் கேட்டுவைத்தான். 

அந்த இருள் சூழ்ந்த காலை பொழுதில்… அவனை பார்த்ததும், உறங்காத அவள் கண்கள் காட்டிய இன்ப அதிர்வு… அவன் பார்வையை ஓரிரு நொடிகள் அவள் முகத்தில் நிலைத்திருக்க செய்தது. 

அவளும் அவனை பார்த்தாள். கலைந்த கேசம், எப்போதும் மிளிரும் அவன் கண்கள், அது தன்னையே ஆழ்ந்து பார்ப்பது அவளுள் புதுவித உணர்வுகளைத் தட்டி எழுப்ப … சட்டென தன்னை மீட்டுக்கொண்ட திவ்யா… 

“நீங்க எப்படி இங்க ராஜீவ்?”

“தஞ்சாவூர்ல என் ஃபிரெண்ட பார்க்கப் போனேன் பாரதி. அவன் கல்யாணத்துக்கு போக முடியல. இப்போ குழந்தை பிறந்திருக்கு அதான் போய்ட்டு வந்தேன். சாஸ்திரால தான் ஒர்க் பண்றான்” அவளிடம் பொய் சொல்லாமல், உண்மையை மறைத்தான்.

‘தன்னிடம் இதுபற்றி சொல்லவே இல்லையே’ என்ற எண்ணம் தோன்றினாலும், சின்ன தலையசைப்புடன் அவனுடன் நடந்தாள். அவளின் களைப்புற்ற நடையைப் பார்த்த ராஜீவ்… “ஒரு டீ பாரதி?” என்று கேட்டிட… 

“எனக்கு ஸ்டேஷன் டீ காஃபி பிடிக்காது ராஜீவ்” அவளின் பதிலை கேட்டு புன்னகைத்த ராஜீவ், “என்ன நம்பி வாங்க!” என்றவன் வெளியே இருந்த ஒரு சின்ன டீ கடைக்கு அழைத்துச்சென்றான். 

அந்த டீக்கடை நபர் கூட இவனுக்கு பரிச்சயம் போல… அவரிடம் இவன் சாதாரணமாகப் பேசுவதை பார்த்த திவ்யா, “யாரையும் விட்டு வைக்கிறதில்ல” அவளின் கிண்டல் புரிந்து சிரித்தான்.

“அண்ணனோட கட்டஞ்சாய் ரொம்ப ஃபேமஸ் பாரதி. பிளாக் டீ குடிப்பீங்களா?” அவள் அவசரமாக இடவலமாக தலையை ஆட்ட…  அவன் புன்னகையுடன், சாதாரண டீயை அவளுக்கு வாங்கினான். 

அவள் ரசித்து ருசித்துப் பருக… லேசாக வானம் தன் நிறத்தை மாற்றி… வெளிச்சத்தைத் தூவ, அந்த ஏகாந்த வேளையில் அவளுடன் இத்தருணம் இப்படியே நீடிக்காதா என்ற ஆசை எழாமல் இல்லை. கூடிய சீக்கிரம் அனைத்தும் கூடிவரவேண்டும் என்ற லேசான தவிப்பும் ஏற்படாமல் இல்லை. இருவரும் மற்றவரின் அருகாமையில் மிகவும் இதமாக உணர்ந்தனர். 

பேச்சுக்கு நடுவில் திவ்யா, “ராஜீவ்…” என்று ஆரம்பித்து பின் தயங்கி… “அது அது… வந்து… எனக்கு அந்த வரன் பிடிக்கலைனு வீட்ல சொல்லிட்டேன்” என்று சொல்லிவிட்டு அவன் கண்களின் வழி அவன் மனதைப் படிக்க முயன்றாள்.

அவள் முயற்சிக்குப் பலனாக அவனின் மந்தகாச புன்னகை… அவள் உயிர்நாடிவரை சென்று சிலிர்க்கச்செய்தது. இருவர் பார்வையும் கலந்த அந்த மௌனமான நேரங்கள் மனதை இனிமையாக்கியது. விடைபெற மனமே இல்லாமல், மீண்டும் அலுவலகத்தில் சந்திப்போம் என்ற நிறைவுடன், இருவரும் தத்தம் இடத்திற்கு புறப்பட்டனர்.  

அன்று மதியம் கடந்திருக்கும்… ராஜீவ்வுக்கு ஓர் அழைப்பு. அவன் எடுத்த நொடி… “தீரன் ஹியர்! பாரதியோட அண்ணன். உங்ககிட்ட பேசணும். ஃபிரீயா?” கேட்டான் எடுத்த எடுப்பிலே.

முதலில் ராஜீவ் திகைத்தாலும், சரி என்று தீரன் சொன்ன இடத்திற்கு சென்றான். இருவருக்கும் ஓரிரு வயது தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதை அவர்களின் உடல்மொழியே காட்டியது. 

தீரன் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என யோசித்த நேரம், ராஜீவ்… “நீங்க வீகென்ட் வேலையா பெங்களூர் போறதா பாரதி சொல்லி இருந்தாங்க. நீங்க இருந்திருந்தா, ஆண்ட்டி அங்கிள்கிட்ட பேசறப்பவே உங்களையும் வச்சு பேசியிருப்பேன்” என்றவன், நலம் விசாரிப்புடன் ஆரம்பித்து, அடுத்து அவன் கேட்ட கேள்வியில் தீரனே வியந்தான். 

“பாரதியோட அண்ணி எப்படி இருக்காங்க? பார்த்துட்டீங்களா இல்ல இனிமே தானா?” நலம் விசாரிப்பில் சமீராவையும் அவன் சேர்த்துக்கொண்டதில், தீரன் விழுந்ததென்னவோ உண்மைதான். 

“இனிமே தான்” என்ற தீரன்… “பாரதி சொல்லிருக்காளா?” என்றதற்கு ஆம் என தலையசைத்தான் ராஜீவ். தங்கை ராஜீவ் மேல் வைத்துள்ள நம்பிக்கையின் அளவு புரிந்தது தீரனுக்கு. 

“பாரதி ரொம்ப பெருமையா சொன்னாங்க. உங்க ரெண்டு பேரோட டிடெர்மினேஷன்… இப்படிகூட இருக்க முடியுமான்னு யோசிச்சிருக்கேன். சூப்பர்ங்க” நிஜமாகவே மனமார பாராட்டினான் ராஜீவ். தீரன் புன்னகைத்தான். 

சில நொடிகள் சென்றிருக்கும், “இங்க எத்தனை வருஷம் வேலை பார்க்கறீங்க?” தீரன் கேள்விக்குப் பதிலை சொன்ன ராஜீவ்… பெண்ணின் அண்ணன் எதை எதிர்பார்ப்பான் என தெரிந்து, கூடுதலாக இன்னமும் சில தகவல்களைச் சொன்னான். 

ஏற்கனவே தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ராஜீவ் பற்றி விசாரிக்க தீரன் சொல்லியிருந்தாலும், ராஜீவ்வின் நேரான, நேர்மையான பேச்சு… தீரனுக்கு பிடித்துவிட்டது. 

“பாரதிக்கு தெரியுமா நீங்க வந்திருக்கிறது?” ராஜீவ் கேட்க, அவசரமாக மறுத்த தீரன்… “சொல்லிடாதீங்க… பேயாட்டம் ஆடுவா! ஏற்கனவே என்மேல கோபமா இருக்கா” தீரன் புன்னகைக்க, முந்தைய தினம் திவ்யாவின் கோபமான முகத்திற்கான காரணம் ராஜீவ்வுக்கு இப்போது புரிந்தது. 

இருவரும் சில நிமிடங்கள் பேசினார்கள். தீரனின் வேலை குறித்துத் தெரிந்துகொண்டான் ராஜீவ். சமீராவைப் பற்றியும் பகிர்ந்துகொண்டான் தீரன்.  

தீரனுக்கு ஓரளவு நம்பிக்கை வந்தபின் தான் கிளம்பினான். ராஜீவ்வுக்கும் அது புரிந்தது. 

தீரன் ராஜீவ்வுடன் பேசியபின்,  நேராக சமீராவின் அலுவலகத்துக்குச் சென்றான். முன்னமே சொல்லியிருந்தான் தன் வருகையை. அவனை பார்த்ததும் அவள் கண்களில் பிரேமை… ஆயிரம் மத்தாப்புகளின் பிரகாசம்! அவனுக்கும் அதே நிலை தான். அவள் கண்களில் தெரிந்த அந்த மகிழ்ச்சி அவனையும் ஆட்கொண்டது.

அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவன், நடந்த அனைத்தையும் சொன்னான்.  

“நம்ம பாரதியா தீரா? ரொம்ப சந்தோஷமா இருக்கு. ராஜீவ் கூட நல்லவரா தெரியறார்ல?” என்ற அவளின் கூற்றுக்கு ஆமோதித்தான் தீரன். தன்னிலை மறந்து பாரதிக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். 

“என்னப்பத்தி கேட்டார்னு சொன்னதே அவ்ளோ நிறைவா இருக்கு தீரா” அவ்வப்போது தீரனின் அம்மா மீனாட்சி அவளை அழைத்து பேசினாலும், அனைத்தையும் விட்டுவிட்டு தனியாக இருப்பவளுக்கு யாரேனும் தன்னை விசாரிப்பதே பெரிதாகத் தெரிந்தது. 

ஆனால் அது புரிந்த தீரனுக்கு தான் ஏதோ ஒன்று அடைத்தது. தங்கையின் நல்வாழ்வு மனமகிழ்ச்சியைத் தந்தாலும், சமீராவை இப்படிப் பார்க்க முடியவில்லை. தன் வாழ்க்கை என்பதைத் தாண்டி சமீராவுக்காக மனது அடித்துக்கொண்டது. 

“சமி சாரிடி… என்னாலதானே உனக்கு இவ்வளவு கஷ்டம். நான் இல்லைனா உனக்கும் கல்யாணம் குடும்பம்னு” குரல் இடறச் சொன்னவனை முறைத்தாள் சமீரா.  

“என்னடா இன்னமும் சொல்லலையே பார்த்தேன். அந்த கல்யாணம் குடும்பம் எல்லாமே இந்த இடியட் கூட தான் எனக்கு தீரா. அது என்னைக்கும் மாறாது” அவன் கைகோர்த்து அவன்மேல் சாய்ந்து சொன்னவளை, தோளோடு அணைத்துக்கொண்டான் தீரன். 

தீரனுக்கும் சம்மதம் என்று தெரிந்த பின்னர், ராஜீவ் கேட்டுக்கொண்டதால்… கல்யாண பேச்சு திவ்யாவுக்கு தெரியாமல் கொஞ்சம் துரிதமாக நடந்தது. முதல் படியாக வரப்போகும் ஞாயிற்றுக்கிழமை பூ வைத்து, உறுதி செய்யும் படலம் என முடிவாகியிருந்தது. 

அந்த வெள்ளிக்கிழமை அலுவலகத்துக்கு திவ்யா சென்றிருக்க, ராஜீவ் எம்ப்லாயி வெல்ஃபேர் கமிட்டி வேலை நிமித்தமாக பிரதானகிளைக்கு சென்றிருந்தான்.  

அச்சமயம், திவ்யா முன் வேலைபார்த்த ப்ராஜக்ட்டில் இருந்த மேலாளர், திவ்யா ராஜீவ் பணிபுரியும் கிளைக்கு வந்திருக்க, அவர் திவ்யாவை கண்டுகொண்டார். எப்படி மறக்க முடியும் அவரால்? திவ்யாவின் பழைய லீட் ராகேஷ் செய்த செயல் அப்படி!

திவ்யாவும் அவரை பார்த்துவிட, அவரிடம் சென்று பேசினாள். “எப்படி வேலையெல்லாம் இருக்கு திவ்யா?” அவர் கேட்க, நன்றாக போகிறது என்றாள். 

அதற்கு அவர், “உங்கள போல திறமையான பெர்சனை விட எங்களுக்கும் மனசில்லதான். ஆனா, தேவையில்லாத பேச்சை தவிர்க்க தான் இங்க அனுப்ப வேண்டியதா போச்சு”  அத்துடன் அவர் நிறுத்தாமல்… 

“உங்களை இன்டெர்வியூ பண்ண ராஜீவ்வுக்கு நடந்ததெல்லாம் தெரிஞ்சதுனால, உங்கள இங்க எடுத்துக்க உடனே சரினு சொல்லிட்டார்” அவர் சொன்ன அந்த நொடி… இதுவரை ராஜீவ்வை எண்ணிக் கட்டியிருந்த கோட்டையெல்லாம் ஏனோ சுக்குநூறாக உடைந்த உணர்வு!

——————-

அந்த வார ஞாயிற்றுக்கிழமை… காலையில் உறங்கிக்கொண்டிருந்தவளைத் துரிதமாக எழுப்பினார் மீனாட்சி.  

ஏன் என அவள் கேட்டதற்கு… “பொண்ணு பார்க்க வராங்க… சீக்கிரம்” அவர் சொன்னதை கேட்ட திவ்யாவோ அதிர்ந்து… மறுக்க, அவள் பேச்சைக் காது கொடுத்துக்கேட்டால் தானே!

புடவை கட்டமாட்டேன்… நகை போடமாட்டேன்… என அவள் ஒவ்வொன்றாகச் சொல்ல… ஹும்ஹும்! அவள் பேச்சு பலிக்கவேயில்லை.  

அன்று அந்த மேலாளர் பேசிச்சென்ற பின், ‘எப்படி ராஜீவ் தன்னிடம் இதை மறைக்கலாம்’ என்ற கோபம் அவன்மேல். அவனுடன் வேறு பேசுவதை தவிர்த்திருந்தாள். ஆனால் இப்போது பேசவேண்டும் போல இருந்தது. ஆனால் நேரம் தான் இல்லை. 

மாப்பிள்ளை விட்டார் வந்துவிட்டார்கள் என சொல்லி, சிறிது நேரத்தில் திவ்யாவை அழைத்துச்செல்ல… அங்கே அவள் கண்ட காட்சி… ராஜீவ் அவன் குடும்பத்துடன் வந்திருக்கும் காட்சி!   

அதுவும் அவன் கண்ணாடி வழி பார்த்த அந்த பார்வை! அதுபோதுமே… இன்பமாக அதிர்ந்தாள்!

 

12
4
5
4
3
1
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved