அகம் புறம் – 21-A

அகம் புறம் – 21A:

அன்றைய காலை பொழுதில், புது வாழ்விற்கான தொடக்கத்தை… அந்த புதிய வீட்டில் பாலை காய்ச்சி ஆரம்பித்தனர் பாலா, சத்யா, அருண், ரூபிணி மற்றும் மஞ்சுளா. 

அந்த அசைவ ஹோட்டலின் உரிமையாளர் வந்து பேசிச்சென்று ஒரு வாரம் கடந்திருந்தது.

அனைவருக்கும் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து கொடுத்த சத்யாவின் முகம்… காட்டிய மலர்ச்சியை, அவளின் சுறுசுறுப்பை, பார்த்துக்கொண்டிருந்த பாலா, ரூபிணி மற்றும் மஞ்சுளாவிற்கு… அது சர்க்கரையை போல இனித்தது. 

செந்தில் செய்த குளறுபடியால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சத்யா, இப்போது தெளிவாக இருப்பது நிம்மதி கலந்த புன்னகையை தந்தது பாலாவுக்கு. 

இதையெல்லாம் கனவில் கூட கண்டிராத ரூபிணிக்கும், மஞ்சுளாவிற்கும்… சத்யாவின் இந்த நிலை, கண்ணீர் கலந்த புன்னகையை தந்தது. பாலாவை நன்றியுடன் பார்த்தனர் இருவரும். 

அருணும் பாலாவை தான் பார்த்திருந்தான். ஆனால் மனதில் வேறு விஷயம் ஓடிக்கொண்டிருந்தது. 

அன்று பாலாவிடம் கௌதம் அனுப்பிய சான்றிதழ்களை தந்த அருண், “சீக்கிரம் NEET’க்கு ப்ரிபரேஷன் ஸ்டார்ட் பண்ணனும்” என்று சொன்னவுடன், அதை கேட்டு அதிர்ந்த பாலாவைப் பார்த்து அருணும், சத்யாவும் புன்னகைத்தனர். 

பின், அன்று கௌதம் பேசியது அனைத்தையும் சொன்னான் அருண். 

அன்று கௌதம் அருணிடம் பேசவேண்டும் என்று பாலாவிடம் சொல்லிவிட்டு அவனிடம் சென்று மன்னிப்பு கேட்ட பின்…

“பாலாக்கு மெடிசின் படிக்கணும்னு நிறைய ஆசை… உனக்கே தெரியுமே அருண். கல்யாணத்துக்கு அப்புறம், ஒரு வருஷம் கழிச்சி சேலத்திலேயே நல்ல காலேஜ்ல சேர்க்க பேசி வச்சிருந்தேன். அதுக்குள்ள…” என்று சில நொடிகள் நிறுத்திய கௌதம், தொண்டையை சரி செய்துகொண்டு மீண்டும் தொடர்ந்தான்.

“பாலா மார்க்ஸ்’க்கு கண்டிப்பா மெரிட்’ல கிடைக்கும் அருண். நான் செர்டிஃபிகேட்ஸ் அனுப்பறேன். பாலா படிக்கறதுக்கான ஸ்டெப்ஸ் எடுக்க முடியுமா ப்ளீஸ்? 

நானே செய்வேன். ஆனா அதை பாலா தப்பா எடுத்துட்டா… அதான். எந்த உதவி வேணும்னாலும் தயங்காம கேளு. பட், பாலா கண்டிப்பா படிக்கணும்” என்று கௌதம் சொன்ன விதம் அருணுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

சில நொடிகளுக்குப்பின் சத்யா புறம் திரும்பிய கௌதம், “உங்களுக்கு பிரச்சனை கொடுத்துட்டு இருந்த அந்த தரகர்னால… இனி எந்த தொல்லையும் இருக்காது. அவனுக்கும் உயிர் பயம் இருக்குமே! அவங்க கூட்டமே இனி நீங்க இருக்க பக்கம் வர மாட்டாங்க” 

எந்த சலனமும் இல்லாமல் சொன்ன கௌதமை பார்த்து இப்போது சத்யாவும் அருணும் திகைத்தனர். 

அந்த புரோக்கர் அன்று அடாவடி செய்த பின், இவர்களை எந்த விதத்திலும் சீண்டவில்லை. இருந்த பிரச்சனையில் அவனை மறந்தே போயிருந்தனர். ஆனால் அவன் தங்களை நெருங்காததற்கு காரணம் கௌதமா?! என்ற எண்ணமே இருவர் மனதிலும்.

“அப்புறம் பாலா வந்த புதுசுல, நீங்க யார்கிட்டயோ கடன் வாங்கினதாகவும், அதனால தகராறு நடந்ததாகவும் கேள்வி பட்டேன். இனி உங்களுக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என்னை கேளுங்க” 

தன்னுடைய எண்ணை அருணிடம் தந்த கௌதம், சின்ன தலையசைப்புடன் நகர்ந்தான். 

‘கண்டிப்பாக பாலா இனி எந்த தொந்தரவும் இன்றி இருக்கவேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என எண்ணியே இதையெல்லாம் செய்கிறான்’ என்று புரிந்தது இருவருக்கும். 

இதை அனைத்தையும் பாலாவிடம் சொன்னபோது, பாலா முகத்தில் கீற்றாகப் புன்னகை. 

“என்கிட்டயும் மாமா செக் குடுத்தாரு அருண். என் பணம்னு சொன்னாரு. எனக்கு தான் வாங்க மனசு ஒத்துக்கல. அது எங்க அப்பா… அவர் அப்பா, அவங்க குடும்ப பணம்.

நான் இப்படியே போய் அவங்க முன்னாடி நின்னா… என்னை ஏத்துப்பாங்களா? மாட்டாங்க தானே? என்னை ஏத்துக்க மறுக்கறவங்க பணத்தை நான் எப்படி வாங்க முடியும்? அதை யோசிச்சு தான் வேண்டாம்னு சொன்னேன்” என்ற பாலா, 

“அதே தான் இப்பவும் சொல்றேன் அருண். அவங்க தந்த படிப்பும் எனக்கு வேண்டாம். இந்த டாக்டர் மெடிசின் எதுவுமே!” என்று சொன்னவுடன், இதுவரை அருண் மற்றும் சத்யாவிடம் இருந்த புன்னகை, இப்போது மறைந்தது. 

எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். மறுத்துக்கொண்டே இருந்த பாலா… கடைசியாக அருண் ஒன்று சொன்னதும் தான் சம்மதித்தான். 

“ஏன் பாலா, நம்ம ரெண்டு பேரும் சேலத்துல ஒரு டாக்டரை பார்த்தோம் இல்லையா. உன்ன பத்தி அவங்ககிட்ட சொன்னப்ப… என்ன சொன்னாங்க? உன்னோட உணர்வுகள் தான் தப்புனு சொன்னாங்க.  

உன்னை எவ்ளோ குழப்பினாங்க அப்போ? அதுனால தானே நீ உன் வீட்ல சொல்லக்கூட பயந்த? உன்னைபோலவே… தனக்கு என்ன நடக்குதுன்னு புரியாம குழப்பத்துல எத்தனை பேர் இருப்பாங்க? 

நீ படிச்சா, உன் படிப்பு இதுபோல குழப்பத்துல இருக்கிறவங்களுக்கு உபயோகமா இருக்குமே பாலா!” 

அருண் இதை சொன்னதும்தான் பாலா இந்த கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தான். 

‘அவர்கள் பணம் வேண்டாம், ஆனால் படிப்பு? அதில் தன் முயற்சியும் அல்லவா இருந்தது’ என்ற எண்ணம் வந்தவுடன், அருணிடம் சம்மதம் சொன்னான். 

எப்படியும் இந்த ஆண்டு விண்ணப்பிக்க முடியாது என்று தெரியும். ஆகவே அடுத்த ஆண்டு நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார்கள். அவ்வளவு எளிதல்ல அந்த தேர்வுக்கு தயார் ஆவது என்று தெரியும். 

ஆனால் விடா முயற்சி செய்வது புதிதல்லவே அவர்களுக்கு!

இதோ இன்று புது வீட்டில் புதிய முயற்சிக்கான முதல் படியும் எடுத்துவைத்தாயிற்று. மஞ்சுளாவின் தோழியும் வந்துவிட்டார்.

வீட்டிற்கான முன்பணம் தருவதற்கு இரண்டு மாதங்கள் நேரம் கேட்டிருந்தனர். 

அன்றைய தினம் சிறிய அளவில் பிரியாணி செய்து அந்த ஹோட்டலுக்கு அனுப்பத் திட்டமிட்டு, அந்த வேலையில் சத்யாவும் மஞ்சுளாவின் தோழியும் இறங்க, ரூபிணி படித்துக்கொண்டிருந்தாள்.

அருண் எதேச்சையாக அவள் புறம் திரும்ப, வீட்டின் ஒரு மூலையில் ஏதோ யோசித்து எழுதிக்கொண்டிருந்தாள் அவன் தந்த பேனாவில். அவன் முகத்தில் புன்னகை.

முதல் தினம் பார்த்தது போலவே தாவணியில் தான் இருந்தாள் இன்றும். அன்று சொன்னது போலவே ஒட்டடைக்குச்சிக்கு தாவணி மாட்டியதுபோலத் தான் இருந்தாள். அன்று திட்டத் தோன்றிய மனதுக்கு இன்று பிடித்திருந்தது. 

இதுநாள் வரை, அவளைப் பார்க்க நேரும்போதெல்லாம் சில சமயம், அவனையும் மீறி சில உணர்வுகள் தலைதூக்கின. இருந்தும் அந்த எண்ணங்கள் ஒரு துளியளவு கூட அவளுக்குத் தெரியப்படுத்தாமல் இருப்பதில் மிக கவனமாக இருந்தான். 

ஆகையால் ரூபிணியும் எப்போதும் போல கலகலவென பேசினாள். 

ஏன் இந்த பிடித்தம் என்று அவன் யோசிக்கும் போதெல்லாம், அவன் மனம் பலதை யோசிக்கும். 

நிச்சயமாக தோற்றத்தால் ஏற்படும் ஈர்ப்பு இல்லை. பணம் பகட்டு கண்டிப்பாக காரணம் இல்லை. அவன் கல்லூரியில் பார்க்காத பதுமைகளா? இல்லை அவன் படித்த மேல்தட்டு பள்ளியில், படிக்கும் கல்லூரியில் இல்லாத பெண்களா?

இது அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று ரூபிணியிடம் பிடித்து இருந்தது. அவளிடம் பேசுவது பிடித்திருந்தது. அவளுடனான நேரங்கள் பிடித்திருந்தது. அதற்காக காத்திருப்பது பிடித்திருந்தது.

அவளுடைய வெளிப்படையான குணம் பிடித்திருந்தது. முதல் முறை பேசியபோது, தன்னுடைய நிலையை எண்ணி தலை கவிழ்ந்து கண்ணீர் சிந்தாமல்… இதுதான் நான், இப்படித்தான் என்று சொன்ன அந்த குணம் பிடித்திருந்தது. ஆனால் இந்த பிடித்தம் எதையும் அவளிடம் வெளிப்படுத்தும் எண்ணம் துளியும் இல்லை. காரணம் படிப்பு.

இதே எண்ணங்களில் மூழ்கியிருந்தவனை, அந்த எண்ணங்களின் சொந்தமானவளே அவனை நிகழ்வுக்கு மீட்டிருந்தாள் கையில் தின்பண்டங்களுடன். புன்னகையுடன் வாங்கிக்கொண்டான். 

இவனைப்போல எந்த ஒரு எண்ணமுமே ரூபிணிக்கு இதுவரை வந்ததில்லை என்பதே உண்மை. 

அவன் தன்னிடம் பேசவேண்டும். மற்றவர்கள் தன்னை ஒதுக்குவது போல அருணும் தன்னை ஒதுக்கிவிட்டானோ என்ற எண்ணம் மட்டுமே அவனைக் குறித்து வந்ததே தவிர அவள் மனதில் இதுவரை வேறெதுவும் தோன்றியதில்லை.

அவ்வளவு ஏன்… ரூபிணிக்கு எந்த ஆணிடமுமே… அந்த வயதிற்குரிய ஈர்ப்போ, ஆசையோ, நாட்டமே ஏற்பட்டதில்லை. எதனால்? போக போக பார்ப்போம்!

சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட்டு முடிக்க, பேசிக்கொண்டிருந்த பாலா, அருணிடம் ரூபிணி வந்தாள்.

இருவரும் அவளைப் பார்க்க… இரண்டு கைகளையும் மூடியவண்ணம் இருவரிடமும் நீட்டினாள்.

இருவரும் ஆவலுடன் இப்போது பார்க்க, அருண் கண்களில் அதீத ஆர்வம். கொஞ்சம் புரிந்தது என்ன என்று. இருந்தும் அவள் சொல்லிக் கேட்க அவளையே பார்த்திருந்தான்.

பாலாவைப் பார்த்து ஆரம்பித்தாள் ரூபிணி. “சத்யாவுக்கு புடவை எடுத்தேன்… அம்மாக்கு நைடி… அவங்களுக்கு மட்டும் குடுத்துட்டு உங்களுக்கு குடுக்காம எப்படி இருக்க முடியும்?  உங்களுக்கு என்ன வாங்கறதுனு தெரியல. 

இருந்த காசுக்கு இதுதான் வாங்க முடியும்னு ஃபிரெண்ட்ஸ் தான் இந்த ஐடியா கொடுத்தாங்க. உங்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய மேட்டர் இல்லைதான். பிடிச்சதுனா வச்சுக்கோங்க. பிடிக்கலைன்னாலும் வச்சுக்கணும்” குறும்புடன் சொன்னவளைப் பார்த்து இருவரும் புன்னகையுடன் புருவங்கள் உயர்த்தினர்.

கைகளை திறந்த அவள் இருவரையும் பார்க்க, அவர்கள் அவள் கையிலிருந்த வெள்ளி முலாம் பூசிய ஆண்கள் அணியும் மோதிரத்தைப் பார்த்தனர். சத்யா இவர்கள் மூவரையும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“வாவ்” என்ற பாலா அலட்டிக்கொள்ளாமல் உடனே அதை எடுத்துப் போட்டுக்கொள்ள, அருண் மனமோ அவளை எண்ணிப் படபடப்பாக அடித்துக்கொண்டது.  

கண்ணிமைக்காமல் அவளை ஓரிரு நொடி பார்த்தவன் அந்த மோதிரத்தை வாங்கிக்கொண்டான். 

அந்த ஓரிரு நொடிகளில் ‘தான் கேட்டதற்காக வாங்கிக்கொடுத்தாளா? இல்லை விருப்பப்பட்டு வாங்கிக்கொடுத்தாளா?’ அடுத்த கேள்விகள் அவன் மனதில். 

அவள் சொன்னதுபோல நிச்சயமாக இது அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை தான். இதுபோன்ற மூலம் பூசிய அணிகலன்களை அவன் அணிந்ததும் இல்லை, பிரியப்பட்டதும் இல்லை. 

ஆனால் ‘இது அவள் தந்தது. விலை மதிப்பற்றது’ எனப் பிதற்றியது அவன் மனம். அவளிடம் ஏதோ ஒன்றிற்காக அவன் மனம் விழுந்துகொண்டே இருந்தது. அதுவும் விரும்பியே விழுந்தது. 

தன் பார்வை யாரையும் உறுத்தக்கூடாது என எண்ணி மோதிரத்தை அணிய முற்பட்டான். ஆனால் அது அவன் விரலின் உள்ளே செல்லவில்லை. 

பாலா போட்டுக்கொண்டதைப் பார்த்தபின் அருணை பார்த்தாள் ரூபிணி. 

“அச்சோ பத்தலையா? என் பெரிய விரல் அளவுக்கு வாங்கினா கரெக்ட்’டா இருக்கும்னு சொன்னாலே என் ஃபிரெண்ட்… ஐயோ அந்த கடைக்கார அண்ணா வேற மாத்திக்க மாட்டேன்னு சொன்னாரே” என்று புலம்ப ஆரம்பித்த ரூபிணியை பார்த்த அருண், அவளின் அந்த தவிப்பை பார்த்து மறுபடியும் அவளிடம் விழுந்து எழுந்தான்.

அவளை சந்தோஷப்படுத்த எண்ணி, “ஹே வெயிட்” என்றவன் தன்னுடைய சுண்டு விரலில் கஷ்டப்பட்டு நுழைத்துவிட்டான். அவன் எதிர்பார்த்ததுபோலவே அவள் முகம் மலர்ச்சியுடன் புன்னகையைப் பூத்தது. 

எவ்வளவு சீக்கிரம் அந்த கணங்களை மனப்படங்களாக பதித்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவாக மனதில் பதித்துக்கொண்டான். 

அன்றைய தினம் அனைவருக்குமே இனிமையாக நகர்ந்தது. 

யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோக்களில் பார்வையாளர்கள் (views) எண்ணிக்கை சற்று கூடியிருந்தது. அதில் சந்தாதாரர்கள் (Subscribers) கொஞ்சம் கூடி இருந்தனர். ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. 

ஆகையால் அருணின் தோழன் உதவியுடன், சேனலுக்கான வீடியோ ஸ்கிரிப்ட்ங் (video scripting) மற்றும் SEO (Search Engine Optimization) செய்யப்பட்டது. இது ஒருவகையான மார்க்கெட்டிங். 

இதன் மூலம், இவர்கள் வீடியோ சரியான பார்வையாளர்களைச் சென்றடையும். இதுபோன்ற வேலைகளை பகுதிநேர வேலையாகவே பலர் செய்வர். அருணின் நண்பன் காசுக்காக மற்றவர்களுக்கு செய்துகொடுத்தாலும், இவர்களுக்காக இலவசமாக செய்துகொடுத்தான்.

அதன் வழி வீடியோ பார்வையாளர்கள் இலக்கம் இன்னமும் கூடியது. 

பொதுவாக யூடுயூப் மூலம் சம்பாதிப்பது என்பது, வீடியோவின் தொடக்கத்தில் மற்றும் நடுவில் வரும் விளம்பரங்களால் தான். அதற்காக யூடுயூப் நிறுவனம், சேனல் உரிமையார்களுடன் பார்ட்னெர்ஷிப் ப்ரோக்ராம் (YouTube Partner Program) மூலம் ஒப்பந்தம் செய்துகொள்ளும். 

இந்த ஒப்பந்தத்திற்கு தேவையான முக்கிய நிபந்தனைகள்… 

அந்த சேனல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஓராயிரம் என்ற இலக்கை தாண்டியிருக்க வேண்டும். பின், பார்வையாளர்கள் (views) எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டிருக்க வேண்டும். இதுதவிர, ஒரு வருடத்தில் மொத்தம் நாற்பதாயிரம் மணிநேரம் சேனலில் வீடியோக்கள் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். 

நாற்பதாயிரம் மணி நேரம் என்பது அவ்வளவு எளிதல்ல. நிறைய நிறைய பார்வையாளர்கள், தரமான வீடியோக்கள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். 

பெரும்பாலும் பிரபலங்களுக்கு, பார்வையாளர்கள் என்பது பெரிய விஷயமல்ல. அவர்களுக்கு எளிதில் நடக்கும் விஷயம். ஆனால் சாமானியருக்கு நிறைய உழைப்பு தேவை. அதற்காகவே அருணின் நண்பனை உதவிக்கு அழைத்தான் அருண். 

இது ஒரு புறம் நடக்க, அடுத்த வந்த நாட்களில்… உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தில்  (FSSAI – Food Safety and Standards Authority of India) தங்கள் தொழிலை ரெஜிஸ்டர் செய்வதற்கான வேலைகளை ஆரம்பித்தனர். 

சிறு தொழில்களுக்கு FSSAI ரெஜிஸ்ட்ரேஷன் மட்டும் போதுமானது. ஏற்றுமதி, இறக்குமதி என பெருந்தொழில்களுக்கு FSSAI உரிமம் (License) தேவைப்படும். 

இந்த ரெஜிஸ்ட்ரேஷனுக்கான பணம் அடுத்து தேவைப்பட்டது. கௌதமை அழைக்கலாமா என்ற எண்ணம் அருணுக்கு தான் தோன்றியதே தவிர, பாலாவுக்கு சுத்தமாக இல்லை.

அந்த எண்ணம் அருணுக்கு வந்திருக்கும் என உணர்ந்த பாலா, அருணை தடுத்தான்.  

“மாமா என்னை மறந்து அடுத்தகட்டத்துக்கு போகணும் அருண்” என்று முடித்துக்கொண்ட பாலாவிடம், தன் பெற்றோரிடம் உதவி கேட்கலாமா என கேட்டான் அருண். 

‘பண உதவி வேண்டாம்’ எனப் பாலா மறுத்தாலும் அருணின் பெற்றோரை சந்திக்க முடிவெடுத்தான். 

“பணம் நம்ம பிரியாணி ஹோட்டல்காரர் கிட்ட கடனா வாங்கிக்கலாம் அருண். அவருக்கும்… நாம அவர்கூட தான் பிஸ்னஸ் பண்ணுவோம்னு நம்பிக்கை வரும். நமக்கும் பணம் கிடைக்கும். 

பத்திரம் கையெழுத்து போட்டு, நேர்வழில வாங்கலாம். வாங்கி அதுல வீட்டுக்கு முன்பணம் கொடுத்திடலாம். அவரும் கண்டிப்பா உதவி செய்வார், ஏன்னா அவருக்கும் தேவை இருக்கே நம்மகிட்ட” மென்னகையுடன் சொன்னான் பாலா. 

பாலாவின் இந்த முடிவு அருணுக்கு புன்னகையை தந்தது. லேசான மெச்சுதலும்! இதையனைத்தையும் மனதில் ஏற்றுக்கொண்டாள் சத்யா. இந்த தொழில், சாமர்த்தியம் எல்லாம் அவளுக்கு புதிது!

அடுத்து வந்த நாட்களில் பிரியாணி செய்வதும், அருணின் கல்லூரிக்கு அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு பலகாரங்களை சப்ளை செய்வது… அதை ரூபிணி எடுத்துச்செல்வது, அங்கு அருண் மட்டும் தன் மனக்கோட்டையை வளர்ப்பது என நகர்ந்தது.

அப்படி ஒருநாள் ரூபிணி சென்றபோது, அருண் கை விரலை எதேச்சையாக பார்க்க, அதில் மோதிரமெல்லாம் இல்லை. அதைப் பற்றி அப்போது அவள் அதிகம் யோசிக்கவும் இல்லை. 

ஆனால் அதை அவள் ஆராயும் நாட்களும் பின்னாளில் வரும் என்பது ரூபிணி அப்போது அறிந்திருக்கவில்லை!

அடுத்த ஓரிரு தினங்களில் அருணின் பெற்றோரை சந்திக்க பாலா சென்றான். 

அவர்களுக்கு, பாலா மேல் மிகவும் மனவருத்தம் இருந்தது தான். ஆனால் பாலா தனக்கு நேர்ந்ததைச் சொல்லி… மனமார மன்னிப்பு வேண்டினான்.  

“என்மேல நிறையவே வருத்தம் இருக்கும் உங்களுக்கு. ரொம்ப ஸாரி அங்கிள். எங்க வீட்ல நடந்துகிட்ட எதுவும் எனக்கு தெரியாது. தெரிஞ்சவுடனே, அதுக்கு மேல என்னால அருணுக்கு எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாதுனு, எல்லாத்தையும் பொறுத்துட்டேன்.  

ஆனா ஒன்னு… அருண்னு ஒருத்தன் என் வாழ்க்கைல இல்லைனா நிஜமா நான் இப்போ உங்க முன்னாடி உயிரோட இருந்திருப்பேனானு தெரியல. என்னோட ஒவ்வொரு முயற்சிக்கும் அருண்னோட பங்களிப்பு ரொம்பவே அதிகம்.

இப்போ கூட பணம் தேவைன்னு எனக்காக உங்ககிட்ட பேசறேன்னு சொன்னான். பணத்தை விட உங்க மன்னிப்பும், உங்க மாரல் சப்போர்ட் இருந்தா போதும் அங்கிள். எங்களை போலவங்களுக்கு அதுதான் முக்கியம்” என்ற பேசிய பாலாவை பார்க்கையில் அவர்கள் மனம் இளகியது.

கண்டிப்பாக அவர்களால் ஆன உதவியை செய்வதாக சொன்னார்கள். பாலா கேட்டுக்கொண்டதற்காக பாலா மற்றும் சத்யா வீட்டிற்கு வந்தார்கள் அருணின் பெற்றோர்.

நிச்சயமாக மேல்தட்டு குடும்பம் என்பது அவர்களின் நடை, உடையே காட்டியது சத்யாவுக்கும், ரூபிணிக்கும். அவன் அப்பா சகஜமாகப் பேசினாலும், அவன் அம்மாவிடம் ஒரு சின்ன தயக்கம் இருந்துகொண்டே தான் இருந்தது. 

பாலா பல வருடங்கள் அவர்களுடன் பழகியிருந்ததால், அவனிடம் மட்டும் பேசினார் அவன் அம்மா. சத்யாவைப் பார்த்து லேசாக புன்னகைக்க மட்டுமே செய்தார். அதுவும் சத்யா, ரூபிணி கண்களுக்கு தப்பவில்லை.

அருண் மட்டும் ஆர்வமாக இருந்தான்… ரூபிணியை தன் பெற்றோர் பார்க்கவேண்டும் என்பதில். தன் பெற்றோரை வீட்டிற்கு அழைத்து வந்ததற்கு இதுகூட ஒரு சின்ன காரணம்!

ஆனால் இந்த சந்திப்பு தான் தன் வாழ்வில் ஒரு கட்டத்தில் வேகத்தடையாக அமையப்போகிறது என்பது தெரிந்திருந்தால், பெற்றோர் ரூபிணியை தற்போது பார்க்கவேண்டும் என்பதை எண்ணியிருக்க மாட்டானோ?! பார்ப்போம்!

அன்றைய நிகழ்வு நல்லதாகவே முடிந்தது.

சில நாட்களில், பாலா முடிவெடுத்ததுபோல அந்த பிரியாணி ஹோட்டல் உரிமையாளரை சந்தித்து, பணம் கடனாக வாங்கப்பட்டது. அதில் ஒரு பகுதி வீட்டின் முன்பணமாக கொடுக்கப்பட்டது.

அடுத்து… Brand, Trademark, FSSAI ரெஜிஸ்டரேஷன் மற்றும் இதர முக்கிய தேவையான படிவங்கள் வாங்கப்பட்டது. அதில் றஒரு படிவத்தைப் பார்த்ததும் சத்யா மற்றும் பாலா முகத்தில் புன்னகை. அந்த படிவத்தில், ஆண், பெண் என்பதைத் தவிர இன்னொரு தேர்வும் இருந்தது.

நம்மை போன்றோருக்கு இது பெரிய விஷமில்லை. ஆனால் இந்த மூன்றாம் பிரிவு கொண்டுவருவதற்கு எவ்வளவு போராட்டம்… எவ்வளவு கோரிக்கைகள். அதை பார்க்கும் அவர்களுக்கு தான் அதன் அருமை புரியும்!

இன்னமும் நிறைய இடங்களில் ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு ஆப்ஷனே உள்ளது என்பது வருந்தத்தக்கதே!

ஓரிரு நாட்கள் சென்றிருக்கும். பாலா, சத்யா இருவருமே செய்தித்தாளில் இரண்டு செய்திகளை பிரசுரம் செய்திருந்தார்கள். 

ஒன்று பாலசரஸ்வதி என்ற பெயரை பாலன் என்று மாற்றிக்கொண்டதாக செய்தி… மற்றொன்று சத்யமூர்த்தி என்ற பெயரை சத்யஸ்ரீ என்று மாற்றிக்கொண்டதாகப் பிரசுரமான செய்தி!

  •  
  •  
Subscribe
Notify of
2 Comments
Inline Feedbacks
View all comments
Nandhini Suresh
1 month ago

nalla pokuthu with lot of curiosity on the tags you keep

error: Content is protected !! ©All Rights Reserved
2
0
Would love your thoughts, please comment.x
()
x