மீண்டும் ஒரு காதல் – 17

மீண்டும் ஒரு காதல் – 17:

மினு ரிஷியின் வீட்டில் ரோமியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். நிவேதா அவள் வீட்டில், ரிஷி பேசியதை பற்றி யோசித்தாள்.

‘ஒருவேளை தனக்கு இதுபோல உடல்நிலை சரியில்லாமல் போய், ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், மினுவின் நிலைமை?’ இதுநாள் வரை மனதில் உதிக்காத கேள்வி இப்போது உதித்தது.

‘தனக்கு என்று யாருமில்லை. தனக்குப் பின் மினுவின் நிலை…..’ ஏனோ இப்போது உடலில் சின்ன நடுக்கம் தோன்றியது.

மருத்துவமனையில் தேவ் பேசியதை யோசித்துக்கொண்டே இருந்தாள். அவளுக்குத் தெரிந்துகொள்ள நிறைய இருந்தது. அதில் மிக முக்கியமான ஒன்று!

அவன் அம்மா… வினோதினி! தற்போது மட்டும் எப்படி சம்மதித்தார்? இல்லை சம்மதிப்பார்?!

இதை எண்ணியபோதே ஒரு ஏளனப்புன்னகை இதழோரத்தில்.

‘எவ்வளவு பேச்சு?! வார்த்தையால் விஷத்தைக் கக்க முடியும் என்பதை விளக்கியவர் ஆயிற்றே! அவர் விட்ட வார்த்தைகள்… கொட்டிய நாகம் தரும் வலியை விட அதிகம் தந்ததே!

அவருக்கு ‘என் தேவா’ போல ஒரு மகன்! அன்பிற்காக ஏங்காமல் அவன் எப்படி இருக்க முடியும்!? அந்த அம்மையார், அன்பை… சாதியுடன், பணத்துடன், அந்தஸ்துடன் தராசில் வைப்பவராயிற்றே!

‘கர்மா என்ற ஒன்று இருக்குமேயாயின், அவர் விதைத்ததற்கான வினையை உறுதியாக அனுபவிப்பார்’ மனதில் பழைய எண்ணங்கள் தந்த காயங்களுடன் கண்களை மூடி படுத்திருந்தாள் நிவேதா.

வினோதினி சொன்ன பல விஷயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க… அதில் ஒன்றை நினைத்தபோது சுருக்கென்றது.

அவர் அப்போது சொன்னதை நம்பும் அளவிற்கு அவள் முட்டாள் இல்லை. இருந்தும் இதற்கு முன் நடந்தவற்றை நினைக்கையில் ‘ஒருவேளை அவர் சொன்னது உண்மையோ’ என்ற எண்ணமும் எழுந்தது.

உடனே… ‘அப்படி ஏதாவது நடந்துவிட்டால்? வேண்டாம்! தேவாவிற்கு நான் வேண்டாம்’ இதை நினைத்த போது, மூடிய கண்களுக்குள் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அந்த கண்ணீரையும் மீறி, மினுவும் ரிஷியும் விளையாடிக்கொண்டிருப்பது போல கண்ணின் திரையில் தெரிய, வேதனை அதிகமானது.

‘நானா கேட்டேன் இதெல்லாம் வேண்டும் என்று?! இனிமையான வாழ்வை, கண் முன்னே காட்டி… அதை ஆசையாகப் பார்க்கும்போதெல்லாம், அது வெறும் மாயை என்று விதி சிரிக்கிறதே!’

மனதின் பாரம் அதிகமாக, சுவாமி படங்கள்… கூடவே தன் அம்மா, அப்பா, அக்கா, மாமா என மொத்தக் குடும்பமும் புகைப்படமாக மாட்டப்பட்டிருந்த இடத்தில்…  மௌனமாக வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்தாள்.

‘ஏன் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை?’ மனதின் வேதனை பொறுக்காமல் பெற்றோரைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள்.

‘நானா கேட்டேன் தேவா என் வாழ்வில் வரவேண்டும் என்று? ஏன் அவனை என் வாழ்வில் நுழைத்தீர்கள்?’ அக்காவையும்  மாமாவையும் பார்த்து ஆற்றாமையுடன் கேட்டாள். மனம் ‘தேவா தேவா’ என அரற்றியது.

‘மீதமுள்ள வாழ்வில் மினு மட்டும் போதும் என்றுதானே இங்கே வந்தேன். மறுபடியும் ஏன் அவனை என் கண்முன்னே காண்பித்தீர்கள்?’ இப்போது கண்ணீருடன் கடவுளை ஏறிட்டாள்.

அவனை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. வேண்டாம் என்று விலகவும் முடியவில்லை. இருபுறமும் மாறி மாறி மனம் அலைக்கழிக்க… அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், பல வருடங்கள் கழித்துக் கதறி அழுதாள்.

கழிவிரக்கம் ஆட்கொள்ளாமல் இதுவரை கடந்து வந்துவிட்டாள். ஆனால் இப்போது அது அவளைச் சூழ்ந்து மூழ்கடிப்பது போல இருந்தது.

வாயை மூடி… சத்தமாக, ஆனால் சத்தம் கேட்காதது போல, அழுதாள். அவளின் தேவாவை நினைத்து அழுதாள். அவன் தனக்கு வேண்டும் என்று அழுதாள். அவன் தனக்கு வேண்டாம் என்றும் அழுதாள்.

முடிவெடுக்க முடியவில்லை அவளால். மனதின் பாரம் கண்ணீரால் கரையும் என எண்ணி கட்டுப்பாடின்றி கண்ணீரில் கரைந்தாள்.

சில நிமிடங்களில்… மினுவின் “அம்மா” என்ற அழைப்பில் அவசரமாகக்  கண்களைத் துடைத்துக்கொண்டு, வெளியே வந்தாள் நிவேதா.

மினு உள்ளே வந்திருக்க, ரிஷி வெளியில் நின்றிருந்தான். அவளை… அவள் வீங்கிய கண்ணைப் பார்த்தவனுக்கு ‘தன்னால்.. தன் பேச்சால் தானோ?’ என்ற எண்ணம் நெருடியது.

அவன் வெளியில் நிற்பதைப் பார்த்த நிவேதா, “வாங்க” என்று சம்பிரதாயத்திற்காக அழைக்க, “இல்ல பரவால்ல. நான் வரேன்” சொல்லிவிட்டுத் திரும்பியவன், மறுபடியும் அவளைப்பார்த்து, “சாப்பிட்டியா?” என கேட்க…

அந்த அக்கறையில் அனிச்சையாக இதுவரை அழுத கண்கள் மறுபடியும் கலங்கி…  ‘இல்லை’ என்பதுபோல உண்மையைச் சொல்ல வந்து, பின் ‘முடிந்தது’ என தலையசைத்தாள்.

இரண்டு தலையசைப்புகளையும் கண்டவன், அவளைப் பார்த்து முறைத்தவண்ணம் உள்ளே வந்தான்.

கலங்கியிருந்த அவள் விழிகள் விரிந்தது.

மினுவிடம் சென்ற ரிஷி, “மினுக்குட்டி, மினு அம்மா சரியில்ல. டாக்டர் என்ன சொல்லியிருக்காங்க? ஒழுங்கா சாப்பிடணும்னு, இல்லையா? மினு அம்மா சாப்பிடலைனா, இனி தேவ்வப்பாக்கு கோபம் வந்துடும்னு சொல்லுங்க. அப்புறம் அம்மாவை ரோமிகிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன். ஜாக்கிரதை” மிரட்டியபடி நிவேதாவை பார்த்தவண்ணம்… மினுவிடம் சொன்னான். கண்களில் குறும்பு!

‘அம்மாவை திட்ட, மிரட்ட ஆள் ஒருவர் கிடைத்துவிட்டார்’ என்ற சந்தோஷத்தில், வாயை மூடி சிரித்தாள் மினு. நிவேதா முறைக்க நினைத்து, முறைத்துப்பார்த்து… பின் சின்னதாக அவள் இதழ்கள் புன்னகைத்தது.

கலங்கிய கண்கள் கூட இப்போது சின்னதாகச் சிரிக்க… நிவேதாவிடம் வந்தவன், “சாப்பிட்டு… மாத்திரை மருந்து மறக்காம சாப்பிடணும். ஹ்ம்ம்?” ‘புரிகிறதா’ என்பதுபோல கண்களால் கேட்டான்.

பதில் சொல்லாமல், அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து, பார்வையை திசை திருப்பினாள்.

‘அத்தனையும் திமிர்’ மனதில் நினைத்துப் புன்னகைத்தவன், “கண்ணு வீங்கற அளவுக்கு, அழுகறதுக்கு… இது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல நிவி. பயப்படாம, ரொம்ப யோசிக்காம ரெண்டு பேரும் வாங்க. இந்த கண் இவ்ளோ வீங்கற அளவுக்கு கண்ணீர் வராம நான் பார்த்துக்கறேன்” என்றான் அவள் கண்களை ஊடுருவி… அவள் மனதிற்குப் புரிய வைக்கும் எண்ணத்துடன்.

ஒரு நொடி புருவங்கள் உயர்ந்தது அவளுக்கு. பின் அவன் ஊடுருவும் பார்வை, அதில் பொதிந்திருக்கும் ஏதோ ஒன்றை எதிர்கொள்ள முடியாமல், முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கூடவே கண்களையும்.

அதுதானே! சாதாரண பெண்கள் என்றால், வெட்கத்தை மறைக்க அல்லது வெளிப்படுத்த… விழிகளைத் தாழ்த்திக்கொள்வார்கள்! ஆனால் இவள்?! வித்தியாசமாகத் தெரிந்தாள் அவனுக்கு.

புன்னகையுடன், பக்கவாட்டில் அவள் முகத்தைப் பார்த்து, “ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கணும். ஓகே? டேக் கேர்” என்றவன், மினுவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

நிவேதா முகத்தில் புன்னகை.

ரிஷி வீட்டை அடைந்தவுடன், நிவேதாவை பற்றி யோசித்தான்.

அழுது கண்கள் வீங்கி இருந்தவளைக் கண்டபோது, ‘மனதில் ஏதோ ஒன்றைப் பூட்டிக்கொண்டு வருந்துகிறாளோ?!’ என்று எண்ணித்தான் அவளிடம் சகஜமாகப் பேசினான். அதுவும் மிக சகஜமாக.

அது அவளின் மனநிலையைக் கொஞ்சம் மாற்றியது என்று அவளின் முக மாற்றத்தை வைத்து தெரிந்துகொண்டான்.

‘மனம் விட்டு எதுவாயினும் என்னிடம் பேசு’ என்று அவளிடம் சொல்லும் அளவிற்கு… தான் இந்த உறவை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோமா என்ற எண்ணம் அவனுக்குள் எழாமல் இல்லை.

வேதாவின் இடத்தில் நிவேதா என்று எண்ணும்போதே கொஞ்சம் தடுமாறியது அவனுள்ளம். இருந்தும் நிவேதாவை அப்படியே விடவும் மனமில்லை.

தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாறவேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டான். தன்னால் நிவேதாவுக்கும் மினுவிற்கும் நல்லது செய்ய முடியுமேயாயின் அதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என முடிவெடுத்தான்.

இரவு உணவு மற்றும் மாத்திரை எடுத்துக்கொண்ட பின், மறுபடியும் யோசித்தாள் நிவேதா.

‘”நான் தான் உன் நிவேதா” என்று அவனிடம் சொன்னால்’ என அவள் உள்ளம் ஆசையாக அதை எண்ணிப்பார்க்க, ரம்மியமாக இருந்தது அந்த எண்ணம்.

‘அவனின் எதிர்வினை என்னவாக இருக்கும்?’ என்று எண்ணுகையில், ஆனந்தக்கண்ணீர் லேசாக அவள் கண்ணில் துளிர்த்தது.

அப்படி அவள் சொன்னால், அது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை நிச்சயமாகத் தரும் என்று அவளுக்கு தெரியாதா என்ன?! அந்த காட்சிகள் கண்முன்னே ஓட, மனம் அந்நிகழ்வுக்காக ஏங்கியது.

திடீரென, அவள் மனதில் அவன் அம்மா வினோதினி வந்து செல்ல, அவர் பேசிய பேச்சுக்கள் காதில் ஒலித்தது.

‘அவர் சொன்னதுபோல ஒருவேளை நடந்துவிட்டால்?’ எண்ணுகையிலேயே அவளுள்ளம் துடித்தது. முன்பு ஏங்கிய அவள் மனம், இப்போது ‘எதையும் சொல்ல வேண்டாம்’ என மன்றாடியது.

எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் தவித்தாள். துடித்தாள். மனம் மருண்டாள்.

அடுத்த ஓரிரு நாட்கள் ரிஷிக்கு சாதாரணமாக நகர்ந்தது. மினு பாதி நேரம் ரிஷியுடனேயே இருந்தாள்.

நிவேதாவுக்கு நல்ல ஓய்வு கிடைத்தாலும், ஏனோ மனம் மட்டும் ஒரு நிலையில் இல்லை .

ரஜத் வீட்டில் அனைவரும் விடுமுறை முடிந்து திரும்பியிருந்தார்கள்.

ஸ்ரீயும் சென்னையிலிருந்து திரும்பி இருந்தான். இம்முறை கூடவே பெற்றோர்களை அழைத்து வந்திருந்தான். அவன் அழைத்து வந்திருந்தான் என்று சொல்வதை விட, அவன் மறுத்தும் கேட்காமல் வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு நிவேதாவை நன்றாகவே தெரியும். அவளுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதை பற்றித் தெரிந்தவுடன், பதறிக்கொண்டு வந்தான் ஸ்ரீ அவள் வீட்டிற்கு.

நிவேதா அவனிடம் ரிஷி உதவியதைச் சொன்னாள். ரிஷி பேசியதை பற்றி அப்போது எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. ஸ்ரீக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது… நிவேதாவை அந்நிலையில் தனியாக விட்டுவிட்டோமே என்றெண்ணி.

நிவேதா நிறைய முறை ரிஷி பேசியதை பற்றி யோசித்தாள். ஒவ்வொரு முறையும் யோசனையின் முடிவில், மறுப்பதற்கான காரணம் தான் அதிகம் வந்து சென்றது.

ரிஷியும் அவளை அவள் போக்கில் விட்டிருந்தான். தொல்லை செய்யவில்லை. நிவேதாவும், ‘அவன் கேட்காதது நல்லது’ என எண்ணி அந்த பேச்சையே எடுக்கவில்லை.

அனைவரும் வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்றனர். நாட்காட்டியில் நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது.

நிவேதா நிர்வகித்த அந்த குறுகிய கால ப்ராஜக்ட்டை…. நல்லபடியாக முடித்திருந்தாள்.

ரிஷி சொல்லிய முறையை அவர்கள் செய்யாத போதும், அவளும் ஸ்ரீயும் சேர்ந்து… அந்த வேலை மற்றும் எம்ப்ளாயி ஸ்கில் டெவலப்மென்ட் (employee skill development) இரண்டையும் சேர்த்துச் செய்ததை… பாராட்டினான் ரிஷி.

அடுத்து ஒரு ப்ராஜக்ட் ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட வேலைகள் ஆரம்பிக்க, ரிஷி நிவேதாவை பார்க்கச் சொன்னான்.

அவளும் அதற்குத் தேவையான அறிக்கைகளைத் தயார் செய்து அவனுக்கு அனுப்பி வைத்தாள். அதைப் பார்த்தவுடன், உடனே அழைத்தான் அவளை.

“இது போல கோட் (quote) கொடுத்தா, நாம ஒரு எம்ப்ளாயி பில்லிங் ஃபிரீ’யா தர்ற மாதிரி வரும். இன்னொரு டைம் செக் பண்ணி மாத்தி அனுப்பு” என்றான் அதைப் பார்த்த மாத்திரத்தில்.

‘மறுபடியும் தான் செய்ததை ஏற்றுக்கொள்ள மறுக்கிறானே’ என்றெண்ணிய நிவேதா… விடாப்பிடியாக அவள் செய்ததைச் சரி என்று வாதிட… ரிஷி பொறுமையாக அவளைப் பார்த்தான்.

முன்பு இவ்வாறு நடந்திருந்தால், அவன் பேசும் விதமே வேறாக இருந்திருக்கும். ஆனால் இப்போது… தெளிவாக அவளுக்குப் புரியும்படி சொன்னான்.

நிவேதாவுக்கு இன்னமும் புரியாமல் இருக்க, அவன் சேரில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து… மடிக்கணினியை உற்றுப் பார்க்கும் அவளின் யோசனை முகத்தைப் பார்த்தான். ‘குழப்பவாதி’ என்று மனதில் நினைத்தவனுக்கு சிரிப்பாக வந்தது.

“எல்லாத்தையும் ரொம்ப யோசிக்காத நிவி. சிலசமயம் அப்படி யோசிக்கிறது குழப்பம் தான் தரும். என்னை நம்பலாம். ஒரு டைம் தவறிட்டேன். பட், எல்லா தடவையும் தவறவிடமாட்டேன். கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா தான் வரும்” என்றான்… கூடவே வசீகரிக்கும் புன்னகையுடன்!

‘இவன் எதை சொல்கிறான்?’ என்பதுபோல பார்த்தாள் நிவேதா.

அவன் சொன்னதன் பொருள், ‘அன்று நிவேதா செய்த வேலையை மறுத்து, அதற்கு ஒப்புதல் அளிக்காமலிருந்தது தன் தவறு. ஆனால் மறுபடியும் அதே போல தவறை செய்யமாட்டேன். இப்போது இந்த வேலையில், தன் கணக்கு தப்பாது’ என்ற பொருளில்.

ஆனால் நிவேதாவின் மனமோ, அவன் சொன்னதை… கடந்தகால நிகழ்வுகளோடும், நிகழ்கால நிகழ்வுகளோடும் ஒப்பிட்டுப் பார்த்தது. அந்த யோசனையில் அவள் இருக்க…

“என்ன ஓகே வா? காட் இட்???” புருவங்களை ஏற்றி இறக்கி, லேசாகத் தலை சாய்த்து புன்னகையுடன் அவன் கேட்க… தன் யோசனையெல்லாம் மறந்து, ஒரு சில நொடிகள் அவனையே பார்த்தவள், தலையசைத்துவிட்டு உடனே அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

‘என்ன பார்வை அது?!’ மனதில் அவனைத் திட்டினாலும், அந்த பார்வையை மறுபடியும் எண்ணிப்பார்க்கத் தவறவில்லை. அதை எண்ணியபோதெல்லாம், புன்னகை பூக்கவும் தவறவில்லை.

கொஞ்ச நேரத்திற்குப் பின், ஸ்ரீயுடன் தேநீர் குடிக்கச் சென்ற நிவேதாவை, பாதியில் நிறுத்தினாள் அட்மினில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தி.

“மேடம். நம்ம ஆஃபீஸ் ரெஸ்டிங் ஏரியா பக்கத்துல இருந்த இடத்தை… குழந்தைகள் காப்பகமா மாத்தியிருக்காங்க. நம்ம எம்பலாயீஸ் குழந்தைகளை இங்கேயே விடுறதுக்கு ஈசி’யா இருக்கும்ன்னு” என்றாள்.

நிவேதா புருவங்கள் முடிச்சிட்டு பார்க்க, “டூ மந்த்ஸ் முன்னாடியே இது பத்தின டிஸ்கஷன் நடந்துச்சு… AVP சார் தான் அப்போ ஸ்டார்ட் பண்ணது. இப்போ தான் அதுக்கான வடிவம் சரியா வந்திருக்கு. இன்னமும் ஒரு வாரம்… அப்புறம் ரெடி ஆகிடும்” என்றாள் அப்பெண்.

“இனி என் பையனையும் இங்கேயே கூட்டிட்டு வந்துடுவேன்” புன்னகையுடன் சொன்னவளைப் பார்த்துப் புன்னகைத்தாள் நிவேதா.

ஸ்ரீ எதிலும் அதிகம் மனம் ஈடுபடாமல் இருந்தான். அவனுள் நிறைய எண்ணங்கள்… பெற்றோர் குறித்து, தன் வாழ்க்கை குறித்து.

நிவேதா குடித்து முடித்து, அவளிடத்திற்கு வந்தவுடன் அவள் கண்கள் ரிஷியை பார்த்தது. ‘கண்டிப்பாக இந்த காப்பகத்திற்கான வேலையை… தன்னிடம் திருமணத்தைப் பற்றி பேசியதற்கு முன்பே ஆரம்பித்திருப்பான்’ என்பது புரிந்தது.

முழுக்க முழுக்க மினுவை மனதில் வைத்தே செய்திருப்பான் என்பதில் துளியும் மாற்றுக் கருத்து இல்லை நிவேதாவிற்கு.

மினுவின் மீதான அவனுடைய அன்பை நினைக்கையில், எதையும் யோசிக்காமல் சம்மதித்துவிடுவோமா என்ற எண்ணமும் வந்தது. அப்போதும் அவன் அம்மா வினோதினியே கண்முன் வந்தார்.

அடுத்து ஓரிரு நாட்களில், ரிஷியின் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருப்பதாக மினு சொன்னாள்.

‘யாராக இருக்கக்கூடும்?’ என்ற எண்ணமும் இப்போது சேர்ந்துகொண்டது அவளுக்கு.

அங்கே ரிஷியின் வீட்டில், அவன் அத்தை… அதாவது அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாக இருந்த கௌரியின் அம்மா… உடன் அவரின் இரண்டாவது மகள் பூர்ணா.

அவர்களைப்  பார்த்ததும் முதலில் அதிர்ந்தான் ரிஷி. இவ்வளவு சீக்கிரம் அவர்களை அவன் எதிர்பார்க்கவில்லை.

“எப்படி இருக்க தேவ்? எங்களையெல்லாம் மறந்துட்ட, இல்லையா?” அவன் அத்தை ஆரம்பிக்க… அது சுத்தமாக அவனுக்குப் பிடிக்கவில்லை. இருந்தும் வெறுமனே புன்னகைத்தான்.

அத்தையின் கண்கள் இப்போது அவன் பக்கத்திலிருந்த மினுவை பார்த்தது.

“யார் தேவ் இந்த பொண்ணு?” அவர் சந்தேகத்துடன் கேட்க, ‘நிம்மதியாக இருந்தேனே!’ என எண்ணி, சலித்துக்கொண்டு பதில் தரும்முன்… “யார் இது தேவப்பா?” என்றாள் மினு புதியவர்களைப் பார்த்தவண்ணம்.

இப்போது அத்தையின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. இதை அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் பூர்ணா.

அத்தையின் கேள்விக்குப் பதில் சொல்லாத ரிஷி, மினுவிடம்… “என்னோட ஆண்ட்டி மினு” என்றவன், சிறு குழந்தை முன் எதையும் பேச விரும்பாமல், “மினுக்குட்டி… நீ வீட்டுக்கு போய் சாப்பிட்டு தூங்குவியாம்… நம்ம மீதியை நாளைக்கு பேசுவோம்” பொறுமையாக அவன் சொன்னவுடன், தலையசைத்துவிட்டுச் சென்றுவிட்டாள் மினு.

அவள் சென்றவுடன், அத்தையை கண்டுகொள்ளாமல், “எந்த ஹாஸ்பிடல்’ல அசைன் பண்ணியிருக்காங்க பூர்ணா?” அத்தை பெண்ணிடம் கேட்டான்.

பூர்ணா மருத்துவ படிப்பு முடித்து, பயிற்சிக்காக டெல்லியில் உள்ள ஒரு பல்பொருள் மருத்துவமனையில் சேர வந்திருந்தாள்.

பூர்ணா மருத்துவமனை பெயரை சொன்னவுடன், “இங்கிருந்து மெட்ரோ’ல அஞ்சு ஸ்டேஷன் தான். இந்த ஊர்ல தனியா பொண்ணை விட பயமா இருக்கே தேவ்” என்றார் அத்தை.

ரிஷி எதுவுமே பேசவில்லை. அவனுக்குத் தெரியும், இவர்கள் நினைத்தால் பூர்ணாவிற்கு தனியாக வீடே எடுத்து, கூடவே வேலைக்கு ஆளும் வைக்க முடியும் என.

அவன் அமைதி காக்க, அத்தைக்கோ அவனின் அமைதி கடுப்பை கிளப்பியது.

‘மூத்தவளை எப்படியாச்சும் இவனுக்கு கட்டி வைக்கணும்னு நினைச்சோம், முடியல. இப்போ பூர்ணாவையாவது சேர்த்து வைப்போம்ன்னு பார்த்தா… பிடி கொடுக்க மாட்டேங்குறானே. இதுல அந்த சின்ன பொண்ணு தேவப்பானு வேற கூப்பிட்டுச்சே… யாரது?’ என்ற யோசனை எண்ணங்களுடன் இருந்தவரை… ரிஷியின் குரல் மீட்டது.

இரவு உணவை ஆர்டர் செய்திருந்தான் ரிஷி.

மறுபடியும் மினுவை பற்றிக் கேட்டார் அத்தை.’நிவேதாவை பற்றி இப்போது  சொன்னால் சரிவராது’ என்றெண்ணிய ரிஷி… வெறுமனே பக்கத்துக்கு  வீட்டுப்பெண் என்றான்.

அவருக்கு மினுவை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்ற, விடியட்டும் என காத்திருந்தார்.

அடுத்த நாள், மினுவை பள்ளிக்கு அனுப்ப, மினுவுடன் சென்ற நிவேதாவை பார்த்த ரிஷியின் அத்தைக்கு அதிர்ச்சி.

நிவேதாவின் முகம்… என்றுமே அவரால் மறக்க முடியாத ஒரு முகம். அதற்கு காரணங்கள் பல. அதில் ஒன்று, நிவேதாவுக்காக… அவர் முதல் மகளை வேண்டாம் என்று ரிஷி சொல்லியிருந்தான்.

அன்று நிவேதாவின் அம்மா கமலா, அக்கா அனுராதா மற்றும் அக்காவின் கணவன் மித்ரன் வந்தபோது, நிவேதாவின் புகைப்படத்தைத் தந்துவிட்டுச் சென்றிருந்தார்கள்.

அப்போது நிவேதாவை பார்த்தவுடன்… ரிஷியின் அத்தை முகம் சுளித்தார். காரணம்… ‘எந்த விதத்திலும் தன் மகளுக்கு நிகரான அம்சங்கள் இல்லாத நிவேதாவை தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று ரிஷி சொல்லியிருந்தான்.

அவர் முதல் மகள் கௌரி, பார்ப்பதற்கு… காலண்டரில் இருக்கும் அம்மன் நேரில் இறங்கியது போல இருப்பாள். படிப்பு, மருத்துவம்.

‘எப்படியாவது மகளை தேவ்வுக்கு திருமணம் செய்து வைத்தால், ஒற்றை மகனான தேவ், மற்றும் அவன் சொத்து முழுவதும் மகளுக்கே’ என்று அத்தை நினைத்திருக்க… தேவ், ‘நிவேதாவை தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று பிடிவாதமாக இருந்தான். அதுவும் பார்க்காத காதலாம்!

அப்போதிருந்தே நிவேதா மேல் ஒரு காழ்ப்புணர்ச்சி அவருக்கு.

பின், தன் மகளுக்கும் தேவ்வுக்கும் திருமணம் நடக்காமல் போக, தற்போது தேவ் இந்தியாவில் இருப்பதைத் தெரிந்துகொண்டவர்…  எப்படியாவது பத்து வருடங்கள் வித்தியாசம் இருக்கும் தன் இரண்டாம் மகளை அவனுக்கு முடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இங்கே வந்திருக்கிறார்.

விதி யாரை விட்டது. அவர் எண்ணத்திற்கு அன்றும் சரி… இன்றும் சரி தடையாய் நிவேதா வந்தாள்!

21
3
4
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved