மீண்டும் ஒரு காதல் – 19
மீண்டும் ஒரு காதல் – 19:
திக்பிரமை பிடித்ததுபோல இருந்தாள் நிவேதா.
அவளை அடுத்து, குதறக் காத்திருந்தது மித்ரனின் குடும்பம்… வினோதினியின் திட்டப்படி.
மூலையில்… மடியில் குழந்தையுடன் உட்கார்ந்திருந்த நிவேதாவை பொருட்படுத்தாமல், குழந்தையைத் தூக்கினார் மித்ரனின் அம்மா.
திடுக்கிட்டு நிவேதா பார்த்தாள்.
“சரி மா. நாங்க கிளம்புறோம்” அவர் சொன்னதும்… பதறி எழுந்தவள், “குழந்தையை எங்க எடுத்துட்டு போறீங்க?” அவள் தடுக்க முற்பட, “என் மகனோட குழந்தை தானே. அத தான் தூக்கிட்டு போறேன். அது தானே சரி”
நடந்தவைகள், நடப்பவைகள், நிவேதாவின் மனதை முற்றிலுமாக உருக்குலைத்தது.
‘அன்பை காட்டிய அம்மா… ஆதரவாக இருந்த அக்கா… தமையன் போல துணையிருந்த அக்காவின் கணவன்… இவர்கள் அனைவரையும் சில நாட்களில் மறக்க வைத்த, அந்த காலதேவன் ததாஸ்து நல்கிய… கட்டுக்கடங்காத காதலைப் பொழிந்த அவளின் தேவா’ என அனைவரும் சொல்லி வைத்தாற்போல அவளை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டார்கள்.
தேவ் அம்மா சொன்ன ‘அந்த மிச்சம்’… அதுதான் தன் மிச்ச வாழ்க்கையைச் சுபிட்சமாக்கக் கடவுள் தந்த பிட்சம் என அவள் நினைத்திருக்க… அதைத் துச்சமாக்கக் காத்திருந்தார்கள் சுற்றி உள்ளவர்கள்.
“உங்க மகன் குழந்தைன்னா, என் அக்காவோட குழந்தையும் கூட… ப்ளீஸ் கொடுத்துடுங்க. நான் பார்த்துக்கறேன்” கைகூப்பி கண்ணர் மல்க அவள் கெஞ்ச… மித்ரனின் அப்பா, “தனியா தானே மா இருக்க… நீ எங்களோட வந்து கொஞ்ச நாள் இரும்மா. பொறுமையா பேசி முடிவுக்கு வருவோம்” என்றார் அவர்களின் திட்டப்படி.
நிவேதா தடுமாறினாள் என்ன செய்வதென்று தெரியாமல்.
அவர்களிடம் கேட்டுக்கொண்டு கடைசியாக தேவ்வை அழைத்துப் பார்த்தாள்… அவனிடம் தகவல் சொல்லவா… இல்லை கருத்துக் கேட்கவா… எதையோ வேண்டி அழைத்தாள். பயனில்லை. அவனின் எண்ணைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
விரக்தியுடன் வெறிக்க வெறிக்க போனை பார்த்தாள். கண்களில் கண்ணீர் தேங்கியது. ஒரேயொரு குறுஞ்செய்தி ‘கால் மீ’ மட்டுமே அவனுக்கு அனுப்பினாள்.
மித்ரனின் தம்பி விஜய், எதிலும் நாட்டமில்லாமல் அவன் மொபைலில் கவனமாக இருந்தான்.
“உனக்கு விருப்பம் இல்லைனா.. .சங்கடமா இருந்தா வேணாம்மா. நீ இங்கேயே இரு. ஆனா குழந்தையை… அதுவும் பால் குடி மறக்காத குழந்தையை விட்டுட்டுப்போக மனசு கேட்கல” என்றார் மித்ரனின் அம்மா… சொற்களில் கனிவைப் பூசி.
இதே அம்மையார் நேற்றிலிருந்து ஒருமுறை கூட குழந்தை பக்கம் வரவில்லை. வந்தும் வராததுமாக, சடலமாகக் கிடந்த அனுராதவை சாடியவர், இப்போது முற்றிலும் வேறாக மாறியிருந்தார். காரணம் வினோதினி!
நிவேதா கொஞ்சம் யோசித்திருந்தால் அவருடைய மாற்றத்தைக் கண்டு கொண்டிருந்திருக்கலாம். அவள் இருந்த மனநிலையோ இல்லை அவளை ஆட்டி வைக்கும் விதியோ… எதுவோ ஒன்று அவளை, எதையும் யோசிக்க விடவில்லை.
“சும்மா இரு. ஒரு பொண்ணு… தனியா எப்படி இருப்பா!” என்று மனைவியை அடக்கிய மித்ரனின் தந்தை, வன்மம் மனதில் நிரம்பி இருந்தாலும்… நிவேதாவிடம் வாஞ்சையாக, “தனியா எப்படிம்மா இருப்ப? நீ மொதல்ல கிளம்பி வா. பொறுமையா பேசி முடிவு பண்ணலாம். உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும்” என அவளை அன்பினால் அடித்தார்.
குழந்தையை விடவும் மனமில்லை. இதுவரை பழக்கமில்லாதவர்களுடன் செல்லவும் விருப்பமில்லை.
‘வினோதினி அவ்வளவு பேசியபின், தேவ்வுடன் வாழ்வு என யோசிக்க முடியமா? பெற்றோரை அவனிடம் இருந்து பிரித்து… அவனுடனான வாழ்க்கை நன்றாகவா இருக்கும்?’ என்ற கேள்விகள் தோன்றினாலும், இது அனைத்தையும் மீறி… ‘தன் ராசி அவனையும் பாதிக்குமா?’ என்ற கேள்வி எழுந்தவுடன்… அவர்களுடன் செல்ல முடிவெடுத்தாள்.
தற்போதைக்கு வேறு வழியும் தெரியவில்லை. கொஞ்ச நாட்கள் அவர்களுடன் இருந்த பின், அவர்கள் மனதை மாற்றி, குழந்தையுடன் வெளியேறிவிடலாம் என நினைத்தாள்.
அங்கே முடிந்தது… முடங்கியது அவளுடைய சுதந்திரம்!
ஒரு சில துணிகள் மட்டும் எடுத்துக்கொண்டு, வடகோடி சென்னைக்கு அழைத்துச் புறப்பட்டாள்.
முதலில் அவளுக்கென ஒரு அறையை ஒதுக்கி… அதில் அவளைத் தங்கச்சொன்னார்கள். அவளுக்கு சந்தேகமோ… இல்லை உறுத்தலோ இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.
குழந்தை அவளிடமே இருந்தது. அதைப் பார்க்கும்போதெல்லாம் மனது அழுத்தியது. அதுவும் அந்த பிஞ்சு பாலுக்காக, தன் அம்மா என நினைத்து, நிவேதாவின் மார்பை முட்டும்போதெல்லாம்… இதயத்தில் ஏற்பட்ட வலி, உயிரையே வதைக்கும் வலியாக வாட்டியது. வாயைப் பொத்திக்கொண்டு கதறி அழுதாள்.
மனதின் பாரம் அதிகமானது. அந்த அறைக்குள் முடங்கியவளுக்கு, வேளாவேளைக்கு உணவு வந்து சேர்ந்தது. குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையை மட்டும் செய்தாள். எப்பொழுதும் போனவர்களை நினைத்து அழுது கரைந்தாள்.
‘தான் அழைக்காவிட்டாலும், கண்டிப்பாக தேவ் அழைப்பான்’ என நம்பியிருந்தாள். ஆனால், ஒருமுறை கூட அவன் அழைக்கவில்லை.
இன்னமும் நன்றாகக் கவனித்திருந்தால் கூட… அவள் கண்டுகொண்டிருக்கலாம், அவளுக்கு எந்த அழைப்புமே… யாரிடமிருந்துமே வரவில்லை என்று.
ஓரிரு நாட்கள் நகர்ந்தது. தேவ் இதுவரை அழைக்காதது, மனதை இன்னமும் அழுத்தியது.
‘அவ்வளவுதானா இந்த காதல் கருமமெல்லாம்… அவ்வளவு பேசினானே. ஒருவேளை அவன் அம்மா போல அவனும் இனிக்கப் பேசுவதில் வல்லவனாக இருப்பானோ’ என நினைத்து மருகும் போதெல்லாம்…
‘அவனக்கு அப்படி செய்ய என்ன அவசியம் இருக்கிறது? அவன் உண்மையாகவே நேசித்தான்’ என்ற எண்ணம் வராமல் இருந்ததில்லை.
‘ஒருவேளை காட்டுத்தீயில் அவனுக்குப் பாதிப்பு ஏதாவது?!’ என்று நினைத்த நேரம்… வினோதினியின் பேச்செல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தேவ்வை அழைத்தாள். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை.
அழுகை அதிகரிக்க, தனக்குள்ளேயே தவித்தாள். மித்ரன் அம்மாவின் அலைபேசியை வாங்கி அழைத்துமே அழைப்பு செல்லவில்லை. அழுது துவண்டாள்.
அப்போது தான் அடைபட்டே இருக்கிறோமே… என்ற எண்ணம் வர, மித்ரன் வீட்டில் பேச நினைத்தாள்.
அவன் அம்மா அவளறைக்கு வந்தபோது, “இத்தனை நாள் என்னை உங்க மகள் மாதிரி பார்த்துட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி. இப்போ கொஞ்சம் நான் ஓகே ஆயிட்டேன். பாப்பாவை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு கிளம்பவா? நான் வேலைக்கு போய் குழந்தையை நல்லா பார்த்துப்பேன்” கிட்டத்தட்ட கெஞ்சினாள். அவர் எதுவும் பேசவில்லை.
அவர் சென்று தன் கணவன் மற்றும் மகன் விஜய்யை அழைத்து வந்தார். நிவேதாவின் முகம் குழப்பத்தை அப்பிக்கொண்டது.
மித்ரனின் அப்பா, “இங்க பாரும்மா. நீ வேலைக்கு போகணும்னு சொல்ற. அப்போ குழந்தையை யார் பார்த்துப்பா?” என கேட்க, அந்த கேள்வி கொஞ்சம் நியாயமாகப் பட்டது நிவேதாவிற்கு.
ஆனால், இது அனைத்தும் அவள் முன்பு யோசித்ததே. ஆகையால் தெளிவாகப் பதில் தந்தாள்.
“நான் மித்ரன் மாமா கம்பனிக்கு தான் போகப்போறேன். பாப்பாவை என் கூடவே கூட்டிட்டு போய்டுவேன் அங்கிள்” என்றாள்.
“அது சரி. உனக்குன்னு ஒரு வாழ்க்கை வந்தப்புறம் குழந்தையை யார் மா பார்த்துப்பா?”
வெற்றுப்புன்னகையுடன், “என் வாழ்க்கை முடிஞ்சது அங்கிள். இனி என் உலகமே பாப்பா தான். அவளுக்கு ஒரு அம்மாவா இருந்து நான் பார்த்துப்பேன்” என்றாள் குழந்தையை மென்மையாக வருடியபடி.
அவள் கேட்பதற்கெல்லாம் ஏதோ ஒரு பதில் தருவதால், விஜய் மற்றும் அவன் அம்மாவிற்கு…கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது. மித்ரன் தந்தை பேசினார்.
“உன் வாழ்க்கை முடிஞ்சதுனு சொல்லிட்டு, குழந்தையோட வாழ்க்கையையும் முடக்க பார்க்கறயே மா” அவர் பொறுமையாகப் பேசினார், இந்நேரத்தில் அது தான் தேவை என நினைத்து.
அதிர்ந்து புரியாமல் பார்த்தாள் நிவேதா. அவரே தொடர்ந்தார்.
“நீ குழந்தைக்கு அம்மாவா இருக்கலாம்… ஆனா அதுக்கு ஒரு அப்பா வேண்டாமா?” அவர் கேட்டவுடன், சுரீரென்று இருந்தது அவளுக்கு.
‘உண்மை தானே. தந்தையில்லாமல் தான் எவ்வளவு ஏங்கியுள்ளோம். இவளுக்கும் அதே நிலைமையா?’ மனது அழுத்தியது. தேவ் சொன்னதெல்லாம் ஞாபகம் வந்து, கண்கள் கண்ணீரால் கரித்தது.
‘தேவ் வரவே மாட்டானா?’ உள்ளம் வெதும்பித் தவித்தது.
“வேணும்னா ஒன்னு பண்ணலாம்மா. எப்படியும் என் மகனுக்கு பொண்ணு பார்க்கிறோம். உன்னையே அவனுக்கு முடிச்சிட்டா, நீயும் குழந்தையோட இருப்ப. எங்களுக்கும் குழந்தை எங்க கூட இருந்தா, நிம்மதியா இருக்கும்” என்று சாவகாசமாக ஒரு பெரிய இடியை இறக்கினார் அந்த வீட்டின் பெரியவர்.
நிவேதா அதிர்ந்து எழுந்துவிட்டாள். இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. தேவ்வை நினைத்த மனம் எப்படி வேறொருவனை ஏற்றுக்கொள்ளும்?! அந்த எண்ணமே ஈட்டியால் குத்துவது போல, நெருப்பை வாரி இறைப்பது போல உணர்ந்தாள்.
பேச்சற்று நின்றவளைப் பார்த்த மித்ரனின் அம்மா… இதுவரை இழுத்துப் பிடித்த பொறுமை இழந்ததுபோல…
“இவகிட்ட என்னங்க சமரசம் பேசிட்டு இருக்கீங்க? இங்க பார்! ஒழுங்கா இவனை கல்யாணம் பண்ணிட்டு, வீட்ல இருக்க முடியம்னா இரு. இல்லை குழந்தையை விட்டுட்டு போயிட்டே இரு” பற்களைக் கடித்துக்கொண்டு எரிந்து விழ, நிவேதாவிற்கு தன்னை சுற்றி அனைத்துமே சுழல்வது போல… ஏன் தானே சுழல்வது போல உணர்ந்தாள்.
அவர்களுக்கு நன்றாகவே தெரியும் நிவேதா குழந்தையை விட்டுவிட்டு செல்லமாட்டாள் என்று. அதுவல்லவோ வினோதினியின் திட்டம்! நிவேதாவை சரியாக லாக் செய்துவிட்டார்.
அவர்கள் சென்றுவிட்டார்கள்… நிவேதாவின் நிலை தான் பரிதாபமானது. மனதின் அழுத்தம் கூடிக்கொண்டே இருந்தது.
‘குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கேயாவது போய்விடலாமா?’ என்று யோசிக்கையில்… அடுத்த கட்ட மிரட்டல் ஆரம்பித்தது.
“இங்க பார்! ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதிச்சா, உன் அக்கா குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். இல்லாட்டி சட்டப்படி குழந்தையை நாங்க வாங்கிப்போம். அதோட உரிமை மித்ரனை பெத்தவங்க… எங்களுக்கு தான் கிடைக்கும். ஒத்தை மனுஷியா இருக்க உனக்கு, கண்டிப்பா கிடைக்காது” என்று மிரட்டினர்.
இப்போது கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது நிவேதாவிற்கு… திட்டமிட்டு தன்னை அடைத்து வைத்துள்ளார்கள் என்று! ஆனால் காரணம் தெரியவில்லை. தேவ்வை அழைத்து அழைத்துத் தோற்றுப்போனாள்.
அழுது அழுது கண்கள் கண்ணீரை மறந்தது. ஜடமாக மாறினாள்.
‘இத்தனை நாட்களில் ஒருமுறை கூட குழந்தையைப் பாசமாக இவர்கள் பார்த்துக்கொள்ளவில்லை. இவர்களிடம் குழந்தையின் உரிமை கிடைத்துவிட்டால்?’ அதை நினைக்கையில் நெஞ்சம் பதறியது.
குழந்தையை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டாள். யாருக்காகவும் குழந்தையை இழக்க மனமில்லை அவளுக்கு.
‘அந்த விஜய்யிடமே பேசி இது வேண்டாம் என்று சொன்னால்…’ என நினைத்து அவனிடம் பேச… அவனோ, முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை.
ஆனால் அவனிடம் பேசியதன் விளைவு, அடுத்த மிரட்டல் விடப்பட்டது. கொஞ்சம் பலமான மிரட்டல்!
“உன்னோட அக்கா பொண்ணு நல்லா இருக்கணும்னா… மரியாதையா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு. இல்ல, குழந்தையோட உரிமையை வாங்கிட்டு ஒரு மூலைல… அதுவும் வளரட்டும்னு விட்டுடுவோம்” என்றவர்…
“என்னங்க அவகிட்ட இருந்து போனை பிடுங்குங்க. டேய் விஜய்! அந்த ஜாமர்’ரை (jammer) தூக்கி எறி. இவளை யாரும் கூப்பிடக்கூடாது, இவளும் யாரையும் கூப்பிட கூடாதுனு சொல்லிட்டு, நம்ம எல்லாரும் கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்” கோபத்துடன் கத்திவிட்டு…
நிவேதாவிடம், “நீ என்ன தலை கீழா நின்னாலும் ஒன்னும் நடக்காது. பக்கா பிளான் போட்டு கொடுத்துட்டு தான் போயிருக்கு அந்த விநோதினிமா. அந்த பையனையெல்லாம் இங்க வர விடமாட்டாங்க அந்தம்மா. உன் அக்கா பொண்ணு நல்லா இருக்கணும்னா… உயிரோட இருக்கணும்னா, ஒழுங்கா நாளைக்கு கல்யாணத்துக்கு கழுத்தை நீட்டற” குரூரமாகப் பேசிவிட்டு சென்றுவிட்டார்.
இது அனைத்தையும் கேட்ட நிவேதாவுக்கு உட்சபட்ச அதிர்ச்சி! இதயம் தாறுமாறாகத் துடித்தது. எதுவுமே செய்ய முடியாத நிலை. தலையில் கை வைத்தபடி உட்கார்ந்துவிட்டாள்.
‘இது அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறோமா? தேவ் என்ன ஆனான்?’ பல பல கேள்விகள்.
அழுகையெல்லாம் சுத்தமாக வரவில்லை. வாழ்க்கை மீது பிடிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே, அது பறிபோகும் போது அழுகை வரும்! வாழ்க்கையே முடிந்துவிட்டது என இருக்கும்போது, அழுகை எல்லாம் அண்டக்கூட அண்டாது!
‘உடல், உயிர்… வாழ்வது, துடிப்பது… குழந்தைக்காக மட்டும் தான். அவள் நல் வாழ்விற்காக, தான் எதை வேண்டுமானாலும் இழக்கலாம்… ஜீரணிக்கலாம்’ என முடிவெடுத்து, உயிருள்ள ஒரு ஜடமாக… திருமண மேடையில் உட்கார்ந்தாள்.
கடைசி நப்பாசையாக அவள் கண்கள்… அந்த உயிரிழந்த கண்கள்… உயிர் பெற… அதை உயிர்ப்பிப்பவன் வருவானா??? என்றே பார்த்திருந்தது.
கல்லான இதயத்திற்குள், ஈரத்தைப் பாய்ச்ச… அந்த தேவன் வருவானா??? என ஏங்கியது.
இல்லை… அவள் கண்கள் உயிர்ப்பற்றவையாகவே இருக்கட்டும்… அவள் இதயம் இனி கல்லாகவே இருக்கட்டும் என முடிவெடுத்தது போல… அவள் கழுத்தில் மஞ்சள் நிறம் பூசப்பட்ட கயிறு கட்டப்பட்டது!
அது தெய்வீகத் தாலியா? கண்டிப்பாக இல்லை! ‘உனக்கு நான் எனக்கு நீ’ என அக்னி சாட்சியாகக் கட்டப்பட்டால் மட்டுமே அது தெய்வீக தாலிக் கயிறு! இல்லையேல் அது வெறும் மஞ்சள் நிறம் பூசிய கயிறே!
***********************************
பழைய நினைவுகளின் பிடியிலிருந்த நிவேதா, தன்னிலைக்கு வந்து நேரம் பார்க்க… மதிய நேரம் ஆகியிருந்தது.
‘ச்ச… பழசை யோசித்தாலே நிகழ் காலம் பாழாகிடுது’ சலித்துக்கொண்டே… வீட்டிலிருந்து வேலை பார்க்க, மடிக்கணினியை எடுத்துவைத்தாள்.
அடுத்து அலைப்பேசியைப் பார்க்க, ஒன்பது மிஸ்ட் கால்ஸ். அனைத்தும் ரிஷியிடம் இருந்து.
‘எதற்கு’ என யோசிக்கும்முன், வாசல் அழைப்பு மணி அலறியது.
யோசனையுடனே சென்று கதவைத் திறக்க, முகத்தில் என்னவென்றே தெரியாத பல உணர்ச்சிகளின் பிடியில் நின்றுகொண்டிருந்தான் ரிஷி.
அவன் இவளைப் பார்த்ததும், மூச்சை வெளி விட்டபடி, கண்களை மூடித்திறந்து… அப்படியே கதவில் சாய்ந்து நின்றுவிட்டான். இருந்தும் மூச்சு சீராகவில்லை.
அவனுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது… தன்னை அமைதிப் படுத்திக்கொள்ள. ஒரு வித தவிப்புடன் நிவேதாவை பார்க்க, அவனின் படபடப்பைப் பார்த்துப் பதறிய நிவேதா, “என்னாச்சு தேவா!” என்றாள் பதட்டத்துடன்.
பழைய கொடிய நினைவுகளின் பிடியில் இருந்ததால், ரிஷி தேவாவாக அவளின் விளிப்பில் மாறியிருந்தான். அது அவள் தெரிந்து சொல்லவில்லை, சொல்லிவிட்டோம் என அறியவுமில்லை. அந்தோ பரிதாபம்! அவன் இருந்த பதட்டத்தில், அவள் அழைத்தது அவன் செவிகளையும் அடையவில்லை!
சில நொடிகளுக்குப்பின், “பயந்துட்டேன்டி. ச்ச” என்றான் கிட்டத்தட்டக் கண்கள் கலங்கி… தவிப்புடன்!
இமைக்க மறந்து அவனை அவள் பார்க்க, “போன் பண்ணா எடுக்க மாட்டியா?” இப்போது கோபத்துடன் அவளை நெருங்கினான். அவள் கண்கள் அதிர்ச்சியைக் காட்ட, கால்கள் பின்னே நகர்ந்தது அனிச்சையாக.
“நீ போன் எடுக்கலன்ன உடனே… உனக்கு என்ன ஆச்சோ… மயக்கம் ஏதாச்சும் வந்திடுச்சோ… இல்ல அந்த டாக்டர் சொன்ன மாதிரி… நெஞ்சு வலி ஏதாவது” பதட்டத்துடன், தட்டுத் தடுமாறிச் சொன்னவனால் அதற்கு மேல் பேச முடியாமல்… அவளை அணைத்துக்கொண்டான், தவிப்பின் வெளிப்பாடாக!
“பயந்தே செத்துட்டேன் நிவி!” என்றவனுக்கு மூச்சு இறைத்து, உடல் லேசாகக் குலுங்கியது இப்போது. நிவேதா அதிர்ந்தாள்.
அவன் அணைத்தவுடன், அந்த நெருக்கத்தில் அதிர்ந்தவள், அவனின் உடல்மொழியை உணர்ந்து இன்னமும் அதிர்ந்தாள். அவள் கண்கள் குளமானது!
“என்ன ஆ…” அவள் சொல்வதற்குள், அவளை விடுவித்தவன்… “இன்னொரு டைம் நீ என்னை தள்ளி நிறுத்தினாலோ… இல்ல கால் எடுக்காம இப்படி படுத்தினாலோ… என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது நிவி. மைண்ட் இட்” கண்ணீர் திரை கொண்ட சிவந்த கண்களுடன், ஒற்றை விரல் நீட்டி அவன் எச்சரித்தான்.
நிவேதாவின் இதழ்கள்… கூடவே கண்ணீரில் மிதந்த கண்கள்… இரண்டும் சேர்ந்து புன்னகைத்தது.
இங்கு அழகான உணர்ச்சிகளால் இருவர் கண்களும் சிவந்திருக்க, இதை இன்னும் இரண்டு கண்கள்… கோபம் கொப்பளிக்க, சிவந்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தது!
—–
ரிஷியின் அத்தையால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
‘ச்ச இவ்வளவு வயசாகியும்… குழந்தை ஒன்று வந்த பின்னும்… இப்படி கூத்தடிக்கிறாளே! நடு கூடத்தில், கதவு திறந்தபடி இருவரும்… ச்சை’ அருவருத்தார்.
இவ்வளவு தான் இவர்களின் புத்தி! அங்கு அரங்கேறியது ஒரு உணர்ச்சி போராட்டத்தின் வெளிப்பாடு. காமமில்லா உணர்ச்சிகளின் சங்கமம்!
இதெல்லாம் எங்கே புரியப்போகிறது?! மனம் முழுவதும் வன்மம். குரோதம். ஆத்திரம்… அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தேவ்வுடனான நிவேதாவின் நெருக்கம்.
அதையே நினைத்துப் புழுங்கினார். அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, விளைவு… நிவேதாவிடம் பேச முடிவெடுத்தார்.
அதற்காகக் காத்திருந்து அதையும் அரங்கேற்றினார்! ஆனால் நடந்தது?! பார்ப்போம்!
Kadavul irukkanda kumaruuuu…. correctaaaa. From now everything will start changing to colorful one for Deva n veda
True sister 🙂 thanks a lot….
Very sad flashback for Nivetha.
Very sad n pathetic too
🤗🤗