மீண்டும் ஒரு காதல் – 24 (Final)

மீண்டும் ஒரு காதல்  – 24:

ஒருபக்கம் தேவ் முகம் மற்றொருபக்கம் கௌரியின் முகம் அடுத்த நாள் திருமணம்… கண்களின் கண்ணீர் திரையைத் தாண்டி தெளிவாகத் தெரிந்தது.

தன்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டான்… என்ற எண்ணம் மனதை வதைத்தது. ‘இனி தனக்காக அவன் வரவே மாட்டானல்லவா?!’ அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதயம் ரத்தத்தை கசிந்தது.

‘தேவா’ முனகியவண்ணம் அவன் முகத்தை வருட, கன்னத்தில் விஜய்யின் விரல்கள் பதியும் அளவிற்கு அறைந்திருந்தான்.

அவள் கையிலிருந்த பத்திரிகையைப் பிடுங்கி… “புருஷன் கண்முன்னாடியே இன்னொருத்தன… ச்சை! நீயெல்லாம் என்ன பொண்ணோ” அவன் வார்த்தைகள் அவளுக்கு அழுகை தரவில்லை. மாறாக ஏளனப்புன்னகையை தந்தது.

‘கணவன் என்று நீயும் நடந்துகொள்ளவில்லை… மனைவி என்று நினைத்து நானும் இந்த திருமணத்தில் இணையவில்லை!’ என்றெண்ணும் போது வந்த புன்னகை அது.

மீண்டும் அவளை அடித்து துன்புறுத்திவிட்டு சென்றுவிட்டான். அவள் உடல் மட்டும் இறுகவில்லை. உள்ளமும் சேர்ந்து இறுகியது.

‘தேவாவாவது நன்றாக இருக்கட்டும். இனி அவன் வேண்டாம்! அவனை நினைப்பது தவறு!’ என தன்னை தேற்றிக்கொண்டாள். அது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். இருந்தும் மனதைப் பூட்டிவைக்க முடிவெடுத்தாள்.

அடுத்த நாள் காலை விஜய் அம்மாவும், அப்பாவும், வினோதினி அழைத்ததன் பெயரில், தேவ் திருமணத்திற்கு புறப்பட்டனர். நிவேதாவின் எண்ணங்களிலும் தேவ் திருமணமே! என்னதான் தேவ் தனக்கு இல்லை என சொல்லிக்கொண்டாலும், மனம் அவனையே சுற்றியது.

அன்று, அலுவலகம் சென்றிருந்த விஜய், திடீரென மூர்க்கமாக வீடு திரும்பினான். யாரோ தாறுமாறாக அடித்ததுபோல, முகமெங்கும் ரத்த காயம். வந்தவன் நேராக தன் கோபம் ஆத்திரம் என அனைத்தையும் நிவேதாவிடம் திருப்பினான்.

ஏன் இந்த கோபம் இப்போது என அவளுக்குப் புரியவில்லை.

‘யார் தன்னை அடித்தார்கள் என்ன ஆயிற்று’ என்றெல்லாம் சொல்லாமல்… அவள், முந்தைய தினம் பத்திரிகையில் தேவ் முகத்தை வருடியதை மிகவும் வக்கிர புத்தியுடன் திரித்துப் பேசினான். அவளைக் காது கூசும் வார்த்தைகளால் சாடினான்.

அவன் கைகள் வலிக்க வலிக்க, அவளை உடலளவில் தாக்கினான். அனைத்தையும் தாண்டி… ஆண்மகன் என்று பறைசாற்ற, அவளை முற்றிலுமாக துடிக்கத் துடிக்க, அவள் மறுக்க மறுக்க ஆட்கொண்டான். அனைத்தும் ஒன்றும் அறியா மினுவின் முன்!

அவன் சென்றுவிட்டான். ஆனால், பார்க்கத் துவண்டு, கசங்கித் தெரிந்த நிவேதா, ஒரு மூலையில் தன்னை குறுக்கிக்கொண்டாள். உடலில் அத்தனை காயங்கள், ரணங்கள்… ஆனால் அழுகை சுத்தமாக வரவில்லை.

தேவ் கூட இப்போது அவள் கருத்தினில் இல்லை.

ஒன்றுமறியா மினுவை பார்க்கையில், உடல் வலியைத் தாண்டி மனதின் வலி அதிகரித்தது.

சில நிமிடங்கள் கழித்து, மறுபடியும் உள்ளே வந்த விஜய், மூலையில் ஒடுங்கியிருந்தவளை, குரூரமாக மீண்டும் அடிக்க ஆரம்பிக்க, எந்த எதிர்வினையும் காட்டாமல், கண்கள் மூடி அமைதியாக, இறுகிப் போய் உட்கார்ந்திருந்தாள் நிவேதா.

அப்போதே முடிவெடுத்துவிட்டாள்.

‘இன்று தன்னிடம் நீளும் கைகள், எப்போது வேண்டுமானாலும் மினுவிடம் நீளும். இதையெல்லாம் பார்த்து வளரும்போது, திருமண வாழ்வில் இதையெல்லாம் சகித்தாகவேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்தால்?! அதை விட ஒரு தவறான எண்ணம், ஒரு முன்னுதாரணம் வேறெதுவும் இருக்காது’ என திடமாக, தீர்க்கமாக நம்பினாள்.

பெரும்பாலான, இதுபோல திருமண வாழ்வில் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் சமுதாயத்துக்கு பயந்து, பிள்ளைக்குத் தகப்பன் முக்கியம் என நினைத்து… திருமணப் பந்தத்தைத் தொடர்வார்கள்.  

மன அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க, தாங்கிக்கொள்ள முடியாமல் சில பெண்கள் தவறான முடிவையும் எடுப்பதுண்டு!

இதைப் பார்த்து வளரும் குழந்தைகள் மனதளவு எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை எண்ணத் தவறிவிடுவார்கள்.

இதுபோல சூழ்நிலையில் வளரும் சில குழந்தைகள் நன்னெறிகளுடன் வளர்வதும் உண்டு… ஆனால் பல ஆண் குழந்தைகள், ‘பெண்களை/மனைவிகளை உதாசீனப்படுத்துவது, அடக்கிவைப்பது… தனக்குக் கீழ் தான் பெண்’ என்ற எண்ணத்துடனே வளர்வதும் உண்டு. ‘தந்தையே மதிக்காத தன் தாயை, தான் ஏன் மதிக்க வேண்டும்’ என்ற எண்ணமும் வர வாய்ப்புண்டு.

சுற்றி உள்ள சொந்தங்களோ நட்புகளோ, ‘உன் அன்பால் அவனை மாற்றலாம், பிரிந்து செல்வது தீர்வல்ல… சகித்துக்கொண்டு வாழக் கற்றுக்கொள்’ என்பார்கள். விஜய் போல ஒருவன், இந்த முப்பது வருடங்களில் மாறாதவன், நிவேதாவின்… அதாவது பிடிக்காத மனைவியின் அன்பினால் மாறுவானா? கண்டிப்பாக சாத்தியமற்றது என நிவேதா திடமாக நம்பினாள்.

இன்னமும் சிலர், ‘ஒரு வாய்ப்பு கொடுத்தால், அனைத்தும் மாறும்’ என்பார்கள். வாய்ப்பு கொடுத்தால் திருந்துபவனுக்கு, வாய்ப்பு கொடுக்கலாம். எவ்வளவு வாய்ப்பு கொடுத்தாலும் வீணாகிப் போகும் என்று தெரியும் பொது, அந்த வாய்ப்பெதற்கு? இவனுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் திருந்த மாட்டான் என நிவேதா உறுதியாக நம்பினாள்.

பிடிக்காத திருமணம் என்றாலும், மினுவிற்காக என நிறைய விஷயங்களைப் பொறுத்துக்கொண்டாள். அவளை முதலில் அவன் தவறாக அணுகியபோதும், அவனிடம் சண்டையிட்டாலே தவிர, வேறு எந்த முடிவுக்கும் செல்லவில்லை. ஆனால் உடலளவில் கொடுமைகள் அதிகமாக அதிகமாக, முடிவெடுத்துவிட்டாள் வெளியேற!

இதற்குமேல் காலம் தாழ்த்துவது சரியில்லை என நினைத்து… அவன் அறியாவண்ணம் அவன் போனை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து பெண்களுக்கான ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைத்தாள்.

அடுத்த முப்பது நிமிடம், நிவேதா காப்பாற்றப்பட்டாள். விஜய் சிறைபிடிக்கப்பட்டான்.

ஆனால், இதுபோல உள்ளே செல்பவர்கள் சிலபேர், பண பலம் கொண்டு… சட்டத்தின் ஓட்டைகளை வைத்து இரண்டே நாட்களில் பெயிலில் வந்துவிடுவார்கள் என்பது உலகறிந்தது… அதுவும் நிவேதா போல சாதாரண பெண்களின் நிலையை கேட்கவே வேண்டாம்! விஜய் விடுவிக்கப்பட்டான்.

நிவேதா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துவிட்டாள். இனி அவள் தானே தனியாக அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்! அங்கே அவளுக்குக் கிடைத்தது மாலினியின் நட்பு!

அடுத்து, காவல் நிலையத்தில் சமரசம் பேசப்பட்டது.

நல்லவேளை பெண்ணின் பெற்றோர், உறவினர் என்று யாருமில்லை நிவேதாவிற்கு.எந்த முடிவானாலும் அவள் மட்டுமே எடுக்கவேண்டும். பெற்றோர், உறவினர் என எவரேனும் இருந்தால், சமூகத்தை முன்னிறுத்தி, பயம் காட்டி சேர்த்துவைப்பார்கள். அதற்கான வாய்ப்பு இங்கு கிடைக்கவில்லை.

நிவேதா விவாகரத்து கேட்டாள்.

“ஓ… எதுக்கு விவாகரத்து? மறுபடியும் எவன் பின்னடியாவது போகலாம்னா? இல்ல வேற கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசையா? களங்கம் ஏற்பட்டு… தூக்கியெறியப்பட்ட கசங்கிய துணியை… செகண்ட் ஹாண்ட்’டை யாரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்” குரூரமாகப் பேசினார் விஜய் அம்மா.

பதிலுக்கு சத்தமாகச் சிரித்த நிவேதா, “என்ன சொன்னீங்க? களங்கம்.. என் கற்பை தானே சொன்னீங்க. இந்த உலகத்துல பெண்ணின் கற்பை உடல்ல பார்க்காத நிறைய பேர் இருக்காங்க. எல்லாரும் உங்க மகன் போல, கற்பை பெட்ஷீட்’ல பார்ப்பாங்களா என்ன? மனசோட கற்பை பார்க்கறவங்களும் இருப்பாங்க. அதுபோல ஒருத்தனை என் வாழ்க்கையில பார்த்தேன்னா கல்யாணத்தை பத்தி நிச்சயம் யோசிப்பேன். அப்படி யோசிச்சேன்னா சொல்லி அனுப்பறேன் வந்து…” ‘சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள்’ என்பதுபோல சைகை செய்தாள்.

பின், “ஆனா பாருங்க… இந்த ஒரு கல்யாணத்தில நான் பட்ட அனுபவங்களே போதும் ஆயுசுக்கும் கல்யாணத்தை நான் வெறுக்க” என்றாள் விஜய்யை பார்த்து ஏளனத்துடன்.

அவளின் பேச்சு அவர்களுக்குக் கோபத்தைக் கிளப்ப, மினுவின் உரிமை பிரச்சனை மறுபடியும் தலையெடுத்தது அவர்களால்.

மினுவின் உரிமை மொத்தமாக நிவேதாவிற்கு கிடைக்க வேண்டுமென்றால், மித்ரனின் நிறுவனத்தை அவர்களுக்குத் தந்துவிட வேண்டும் என்றனர்.

யாரும் வேண்டாம் என முடிவெடுத்தவளுக்கு அந்த நிறுவனம் தேவையிருக்கவில்லை. தர ஒப்புக்கொண்டாள். விவகாரத்துக்கான வேலைகள் ஆரம்பித்தது.

அந்த வாரயிறுதியில், அவள் வேலை செய்யும் நிறுவனத்தில்… மாரத்தான் ஒன்று நடத்த அவர்கள் திட்டமிட, மனதைத் திசைதிருப்ப அதில் கலந்துகொள்ள முடிவெடுத்தாள்.

மாலினியும் அவளுடன் கலந்துகொண்டாள். கூடவே மாலினியின் காதலன் ஸ்ரீ!

ஓட ஓட மனது லேசாவதுபோல உணர்ந்தாள் நிவேதா.

தேவாவின் எண்ணங்கள் வரும்போது… மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் ஓடினாள்.

அம்மா, அப்பா, அக்காவை நினைத்தபோது… சோகத்தை மனதில் ஏந்தி ஓடினாள்.

விநோதினியை நினைத்தபோது.., கோபத்தால் ஏற்பட்ட வேகத்தில் ஓடினாள்.

பின் விஜய் மற்றும் அவன் குடும்பத்தை நினைத்தபோது… ஆத்திரம் மேலோங்க வெறித்தனமாக ஓடினாள்.

கடைசியாக இலக்கை அடைந்தபோது… முதலில் வந்தபோது… மினுவின் அழகான முகம்! அதை மனதில் நிறுத்தி மனமகிழும் போது… அடிவயிற்றில் பெருத்த வலி. அவளறியாமல்… வயிற்றில் உருவாகியிருந்த கரு, கலைந்தது!

குருதி வெளியேற, அவள் நிலைகுலையும் போது, அவளை ஆதரவாக விழவிடாமல் பற்றினார்கள் மாலினியும், ஸ்ரீயும்!

அன்று ஆரம்பித்தது ஸ்ரீக்கும் நிவேதாவுக்குமான அழகிய நட்பு! ஏற்கனவே நெருக்கமான தோழியாக மாலினி மாறி இருக்க, ஸ்ரீயின் நட்பும் கிடைத்தது நிவேதாவிற்கு.

உலகில் உள்ள பல காதலர்களைப் போல, மாலினியும் ஸ்ரீயும் காலத்தின் கட்டாயத்தால் பிரிவை சந்தித்தபோதும்… ஸ்ரீ, நிவேதாவின் நட்பு ஆழமாக வளர்ந்தது.

பல பேச்சுக்களிலிருந்து, பல தரங்கெட்டவர்களிடம் இருந்து, பல ஏசல்களைப் பொருட்படுத்தாமல், நிவேதாவின் அரணாகப் பலசமயம் இருந்திருக்கிறான் ஸ்ரீ… அன்றும் இன்றும் என்றும் ஒரு நல்ல, ஆத்மார்த்தமான நண்பனாக!

******************************************

கேட்டுக்கொண்டிருந்த ரிஷி எப்படி உணர்ந்தான் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அவளின் இன்னல்கள் அவனை இம்சித்தது. அவளின் துயரங்கள், தவிப்பை ஏற்படுத்தியது. இது அனைத்தையும் தாண்டிய அவளின் நிமிர்வு, பெருமிதத்தை ஏற்படுத்தியது.

கரகரத்த தொண்டையை சரிசெய்துகொண்ட மாலினி, “முதல் முதலா நிவி எங்க ஆஃபீஸ்’ல இன்டர்வியூ’க்கு வந்தது இன்னைக்கு நினைச்சாலும் பதறும்.

தலைல காயத்துக்கான பிளாஸ்டர், கழுத்துக்கு கீழ கீறல்கள். அதில்லாம கண்ணுக்கு தெரியாம எவ்வளவோ… யாருக்கு தெரியும்?!” என்று சொன்ன மாலினியின் கண்களில் கோடாகக் கண்ணீர் வெளியேறியது. ஸ்ரீ அவளை தட்டிக்கொடுத்தான்.

“ஒரு வருஷம் கூட ஆகாத மினுவை டேகேர்’ல கொஞ்ச நாள் தான் விட்டா. அது அவளுக்கு மனசே கேட்கல. ஜீத்து(ஸ்ரீ) ஆஃபீஸ்’ல டேகேர் ஃபெசிலிட்டி இருக்குனு தெரிஞ்ச உடனே அங்கே சேர்ந்துட்டா.

நிறைய கஷ்டங்கள், அவமானங்கள், தொல்லைகள். இது போக சிங்கிள் மதர் வேற… சொல்லவா வேணும்? ஆனா, எல்லாத்தையும் ஒரு நிமிர்வோட ஹேன்டில் பண்ணுவா. ‘மினு தான் என் மூச்சு. தேவ் தான் என் உயிர்னு அடிக்கடி சொல்வா”

இதைக் கேட்டபோது ரிஷி கிட்டத்தட்ட செத்தேவிட்டான், குற்ற உணர்ச்சியால்! தன்னை எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள் என்ற எண்ணமே அவனைச் சித்திரவதை செய்தது. உடலெங்கும் குத்தி வதைப்பதுபோல வலி.

“ஆனா, நிஜமா நினைச்சுக்கூட பார்க்கல, உங்களை அவ மறுபடியும் இப்படி மீட் பண்ணுவான்னு. ஸ்டுபிட் லேடி… எதையோ யோசிச்சிட்டு இப்போ குர்க்’ல இருக்கா. இனியாவது அவ லைஃப் நல்லா இருக்கணும்” இப்போது மாலினி கண்களில் ஆனந்தத்துடன் கண்ணீர் வெளியேறியது.

ரிஷியால் எதுவும் பேச முடியவில்லை. நெஞ்சம் கனத்தது. அவளை உடனே பார்க்கவேண்டும் என்று மனது கிடந்து தவித்தது. இருந்தும் அதற்குமுன் ஒரு வேலையை முடிக்கவேண்டும் என அவன் அறிவு அறிவுறுத்த… தன் முன்னே உட்கார்ந்திருந்த ஸ்ரீயிடமும் மாலினியிடமும் நன்றி கூறினான்.

“வேதாக்கு எல்லா நேரமும் பக்கபலமா இருந்திருக்கீங்க. நானே பார்த்திருக்கேன் ஸ்ரீ. தேங்க்ஸ்’ங்கிற ஒரு சின்ன வார்த்தை பத்தாது, என்னோட நன்றிகளை சொல்ல” மனமார சொன்னான் இருவரிடமும்.

பின், “வேதாவை பார்க்கிறதுக்கு முன்னாடி, எனக்கு சென்னைல ஒரு முக்கிய வேலை இருக்கு. நான் இப்போவே கிளம்பறேன். வேலை முடிஞ்சப்புறம் குர்க் கிளம்பறேன்” என்றவன்… அவர்களுடன் சொல்லிக்கொண்டு உடனே கிளம்பிவிட்டான்.

மனதில் விஜய்யை வெட்டி துண்டாக்கிவிடும் கோபம்!

நேராக மித்ரன் அலுவலகத்திற்கு சென்றான். ரிஷியைப் பார்த்து விஜய் பீதியடைய, நேராக அவன் கழுத்தைத் தான் முதலில் பிடித்தான்.

“எப்படி டா மனசு வந்தது உனக்கெல்லாம்? மனுஷனா நீ” கையில் விஜய் விளையாடும் கிரிக்கெட் மட்டை தட்டுப்பட, அதை வைத்து ஆத்திரம் தீரும் வரை அடித்து பிரித்து மேய்ந்துவிட்டான்.

எவ்வளவோ பேர் ரிஷியைத் தடுத்தும், அனைவரையும் மிரட்டி.. அவர்களைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கச் செய்தவன், விஜய்யின் உடலெங்கும் ரத்தம் வெளியேறும் வரை தாக்கினான்.

நிவேதா அனுபவித்த ஒவ்வொரு கஷ்டமும் அவன் கண்முன்னே வர, கண்மண் தெரியாமல் அடித்தான். ஒருகட்டத்தில் இவன் கோபம் தணிந்ததோ இல்லையோ, விஜய் உயிர் போகும் நிலையிலிருந்தான்.

நிச்சயம் விஜய் உடலில் பல பாகங்களைப் பதம் பார்த்திருப்பான். செயலிழக்கக்கூட செய்திருப்பான் ரிஷி. இவ்வளவு அடித்தும் மனம் பொறுக்கவில்லை.

மாலினி சொன்ன, ‘நெற்றியில் பிளாஸ்டர், கழுத்தில் கீறல், தெரியாமல் எவ்வளவோ?!’ என்ற அவளது வார்த்தை அவனை நிறையவே வதைத்தது.

இனியாவது நிவேதா வாழ்வில் கஷ்டமில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு குர்க் புறப்பட்டான்.

————-

அந்த மாலைப் பொழுது… கொட்டும் பணியில், மினுவை புல்லட் முன் உட்கார வைத்து, வண்டியை முறுக்கினாள் நிவேதா.

வண்டி சீறிப்பாய்ந்தது. மனம் மட்டுமில்லை மனதில் எழுந்த எண்ணங்களும் தாறுமாறாக இருந்தது. அனைத்தையும் புறம் தள்ள நினைத்தாலும்  முடியவில்லை.

‘தேவப்பா வேணும்’ என்று அடம்பிடிக்கும் மகளைச் சமாதானம் செய்ய வேறுவழி தெரியவில்லை.

மினுக்கு ஒரு விஜய் படப் பாடல், ‘மகளுடன் வண்டியில் செல்லும் பாடல்’ மிகவும் பிடிக்கும். இதற்குமுன் நிவேதாவிடம் நிறைய முறை கேட்டிருக்கிறாள்.

இப்போது இந்த பாடலைப் பார்க்கையில் தேவப்பாவுடன் செல்லவேண்டும் என கேட்டு அடம்பிடிக்க, வேறு வழியில்லாமல் நிவேதாவே வாடகை வண்டி எடுத்துச் செல்ல வேண்டியதாயிற்று.

மினு தற்சமயம் தேவப்பாவை மறந்து வண்டியில் மகிழ்ச்சியாக பயணம் செய்துகொண்டிருந்தாள்.

நிவேதாவின் இந்த பரிமாணத்தைப் பார்த்த ரிஷிக்கு கண்கள் மின்னியது. இரண்டு நாட்களுக்கு முன், நிவேதா வீட்டின் பக்கத்திலிருந்த ஒரு லாட்ஜ்’ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தான்.

வந்த உடனே அவளிடம் சென்று பேசக் கொள்ளை ஆசை எழுந்தாலும், தன் வேதாவாக அவளை அவள் அறியாவண்ணம் பார்க்கவேண்டும் என்ற புதுவிதமான ஆசையும் எழுந்தது.

அவள் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து அவளை ரசித்தான். உச்சி முதல் பாதம் வரை ரசித்தான். மினுவிற்காக அவள் எடுக்கும் சிரத்தைகள் ஒவ்வொன்றையும் ரசித்தான்.

நிவேதாவும் மினுவும் அன்றைய தினத்தை முடித்து வீடு திரும்பியிருக்க, மினுவை உறங்கவைத்த பின்… நிவேதா வானத்தை வெறித்தபடி பால்கனியில், பனியையும் பொருட்படுத்தாமல் உட்கார்ந்திருந்தாள்.

அதை தன் அறையிலிருந்து பார்த்த ரிஷிக்கு மனம் பொறுக்கவில்லை. இனி அவளுக்கு தனிமை வேண்டாம் என எண்ணி, இருவருக்குள் இருக்கும் தூரத்தைக் குறைக்க முடிவெடுத்தான்.

———

அன்று நிவேதா, மினு பள்ளி வாசலை அடைந்தபோது, அவர்கள் முன் ரோமி வந்து நின்றது.

மினு சந்தோஷத்தின் மிகுதியில் ரோமியிடம் ஓடிச்செல்ல, நிவேதா அதிர்ந்து நின்றாள். இதயத்துடிப்பின்றி, கண்கள் கலங்க, பதட்டத்துடன் சுற்றித் திரும்பிப்பார்க்க, எங்கும் பள்ளி மாணவர்கள் மட்டுமே தெரிந்தனர்.

அவள் தேடும் அந்த உருவம் மட்டும் தெரியவில்லை. மனது படபடத்தது!

அதேநேரம் பள்ளி மணியும் அடித்தது. ரோமி ஓடிச்சென்று பள்ளியின் செக்யூரிட்டி அறையில் தஞ்சம் கொள்ள, மினுவை அழைத்துக்கொண்டு நடுக்கத்துடனே உள்ளே சென்றாள்.

ஒரு வித அசௌகரியம் அவளுள். கைகளை மூடி கட்டியவண்ணம், தரையைப் பார்த்து யோசித்தபடி அசெம்பிளி’யில் நிற்க, “லெட்ஸ் வெல்கம் அவர் நியூ மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரைனர் Mr தேவ்” என்ற பெயரில் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் நிவேதா.

இப்போது தரிசனம் கிட்டியது. கைகள் சில்லிட்டது! பார்த்துவிட்டாள் அவனை!

கூட்டத்தைப் பார்த்திருந்தவன் கண்கள் இப்போது அவளைப் பார்த்தது. அவளும் பார்த்தாள். மறுபடியும் கண்கள் குளமானது அவளுக்கு.

அசெம்பிளி கூட்டம் முடிய, வரிசையில் நின்றிருந்த மினு… கிட்டத்தட்ட பறந்து சென்றாள் ரிஷியிடம்.

“தேவப்பா” என்ற மினு, ரிஷியின் கன்னத்தில் மாறி மாறி முத்தத்தைத் தர, ரிஷியின் கண்கள் இப்போது கலங்கியது.

“சாரி தேவப்பா. உன்கிட்ட சொல்லாம கிளம்பி வந்துட்டோம். ஐ மிஸ்ட் யு சோ மச்” மினு அழுகையுடன் சொல்ல,  “அச்சோ மினுக்குட்டி… அழக்கூடாது. அதான் தேவப்பா வந்துட்டேன்ல” என்று ஆரத்தழுவி உச்சியில் முத்தமிட்டான் ரிஷி.

தூரத்தில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த நிவேதாவின் மேல் அவன் கண்கள் நிலைத்தது.

உதடுகள் துடிக்க, மனம் எப்போது வேண்டுமானாலும் உடைய காத்திருக்க, கண்கள் மூடி தன்னை சமன் செய்துகொண்டு, அமைதியாகச் சென்றுவிட்டாள்.

அன்றைய தினம் முழுவதும் படபடப்புடனே இருந்தாள். காலை பார்த்தபின், அவனைப் பார்க்க முடியவில்லை.

மனதில் பல உணர்ச்சிகளுடன் வீடு திரும்பியவளை வாசலில் வரவேற்றான் ரிஷி. கூடவே ரோமியும் அவன் பொருட்களும்!

நிவேதா விழிகள் விரிக்க, அடுத்த நொடி ரிஷி காலை கட்டிக்கொண்டு மினு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்.

நிவேதா எதுவும் பேசவில்லை. கதவைத் திறந்து உள்ளே செல்ல, அவளுடன் உயிர் உள்ள ஜீவன்களும், உயிரற்ற பொருட்களும் பின் தொடர்ந்தது.

அவள் அவனிடம் பேசவே இல்லை. அவனும் பேசவில்லை தான். ஆனால் அவன் கண்கள் அதன் வேலையைத் திருத்தமாகச் செய்தது. அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்களில் நிரப்பிக்கொண்டு ரசித்தான்.

ரோமி, நிவேதா பின்னோடு ஓடிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் அவளால் தாக்குப்பிடிக்க முடியாமல், ரோமியை கட்டிக்கொண்டு, அதை வருடிக்கொடுக்க, அவள் கண்கள் கண்ணீரை சுரந்தது. ரோமி சந்தோஷத்தில்… ஆசைதீர நிவேதாவுடன் இழைந்து விளையாடியது.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரிஷிக்கு, மகிழ்வும் ஏக்கமும் ஒருசேரத் தாக்கியது. அவளிடம் பேசவேண்டும். நிறையப் பேசவேண்டும், அதற்காகக் காத்திருந்தான்.

அவ்வப்போது நிவேதாவின் கண்களும் கொஞ்சம் பதட்டத்துடன், தவிப்புடன் அவனைத் தொட்டு மீண்டது.

இரவு உணவு மினுதான் அவனுக்குக் கொடுத்தாள். இருவரும்  பேசிக்கொண்டே, சேர்ந்து உண்டனர். அவன் மனதில் அத்தனை நிறைவு.

இரவு மினுவை உறங்க வைத்தபின், எப்பொழுதும் போல நிவேதா பால்கனிக்கு செல்ல… அங்கே நின்றுகொண்டிருந்தான் தேவ்.

செல்வோமா வேண்டாமா என்ற எண்ணம் அவள் மனதில் எழுந்த நேரம், அவளைப் பார்த்ததும் அவள் கரம் பற்றினான்.

“விடுங்க ரிஷி” குரல் சரியாக வெளிவராமல், அவள் லேசாகத் திமிர, மெதுவாக அவள் கைகளை இழுத்து, ‘ரிஷி இல்ல… தேவானு சொல்லு வேதா’ என்றான் வலிபொருந்திய குரலில்!

அதிர்ந்து, கண்கள் கலங்க அவனை ஏறிட்டாள் ‘அனைத்தும் தெரிந்துவிட்டதா’ என்பது போல.

அதற்குமேல் முடியாமல், கண்ணீருடன், அவன் மார்புக்குள் புதைந்து அவன் இதயத்தில் கலந்தாள் அவனின் ‘வேதா!’.

எவ்வளவு வருடக் கனவு இது!

தன் மனம் நிறைத்தவளின் தீண்டலில் தன்னை மறந்து, அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டு, அவள் உச்சியில் தலைசாய்த்தான்.

இருவர் உடல் முழுவதும் புது ரத்தம் பாய்ச்சியதுபோல சிலிர்த்தது!

இதுவரை வீசிய காற்றுடன், மனம் விரும்பியவளின் நறுமணமும் சேர்ந்துகொள்ள, ஏகாந்தமாய் அவளின் உச்சி நுகர்ந்தான். கண்களில் ஏனோ கண்ணீர் கரித்தது.

சில நிமிடத்திற்குப் பின், அவள் நெற்றியில் புரண்ட முடிக்கீற்றை ஒதுக்கி, அவளின் நெற்றுத்தழும்பைப் பார்த்தவனுக்கு, நெஞ்சம் பொறுக்கவில்லை. அதை மெல்ல வருட, திகைப்புடன் மீண்டும் அவனைப் பார்த்தாள்.

‘அனைத்தும் தெரிந்துவிட்டதா?’ அதே கேள்வி மறுபடியும் அவளை அதிரச் செய்ய, அவன் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டாள். உடலில் லேசான நடுக்கம். கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.

“என்னை மன்னிப்பியா வேதா?”

அந்த குரலில் தெரிந்த வேதனையில், “தேவா!” என்று சட்டெனக் கண்ணீருடன் நிமிர்ந்து அவன் வாயை மூடினாள். அந்த ‘தேவா’ என்ற அழைப்பு அவன் மறந்து, மீண்டும் இப்போது நினைவுக்கு வர எத்தனை வருடங்கள்!

“ஏன் என்னை விட்டுட்டு வந்த வேதா?” வேதனை இன்னமும் அவன் குரலில் மண்டிக்கிடந்தது. அவள் பதில் பேசவில்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே.

“நீ இல்லைன்னா தான் நான் போய் சேர்ந்திருப்பேன் வேதா” என்றதும் அதன் பொருள் புரிந்து, “என்ன பேச்சு இதெல்லாம்?” கண்ணீருடன் அவனை முறைத்தாள்.

பின், “எங்களை விட, மினுவை விட அன்பு காட்ட வேற யாராவது வந்திருப்பாங்க” அவள் முடிக்கவில்லை, அவன் இப்போது முறைத்தான்.

“இல்ல, நிவேதானு பேர் வச்சு வேற யாரையாச்சும் பார்த்தவுடனே…” அப்படியே பாதியில் நிறுத்தியவள் கண்களில் கண்ணீர் இருந்தாலும், குறும்புடன் புன்னகைக்க… அவனும் சிரித்தான். சத்தமாகச் சிரித்தான். அவனை ஆசையாகப் பார்த்தாள்.

கனமான மனநிலை சற்று இலகுவானது.

அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டவன், “எல்லா நிவேதாவும் என் வேதா ஆக முடியாது. எல்லா குழந்தையும் மினு ஆக முடியாது. மினு, என் உயிர் நண்பன் மித்ரனோட பொண்ணு, என் உயிரை விட மேலான என் வேதா வளர்த்த பொண்ணு.

அவங்களோட அதே தன்னலமற்ற அன்பு தான் மினு கிட்டயும் இருக்கு. அதே அன்பு தான் என்னை அவளோட இணக்கமும் ஆக்குச்சு. புரியுதா?” என்றான் குனிந்து அவள் முகம் பார்த்து.

“ஹ்ம்ம்… ஹ்ம்ம்” என்றாள் அவனுள் தன்னை புதைத்துக்கொண்டு. அவள் பதிலில் மறுபடியும் நன்றாகச் சிரித்தான்.

சில நிமிடங்கள் அதே நிலையில் நகர, “நமக்கு, நம்ம வாழ்க்கைக்கு, எப்பவுமே மினு மட்டும் போதும் வேதா”

விழி விரித்து நிமிர்ந்தாள் இப்போது. இதையே நிறைய முறை அவள் யோசித்திருக்கிறாள்… மினு மட்டும் தான் தன் வாழ்க்கை என. அதையே தேவ் இப்போது சொன்னவுடன், அதிர்ச்சி, ஆனந்தம்!

அவளின் திகைப்பைப் பார்த்தவன், அவள் கன்னத்தைக் கிள்ளி… அவளை தன் கைவளைவிற்குள் கொண்டுவந்து, புன்னகையுடன், “என்ன… நிறைய ஸ்டாக் பண்ணி வச்சுக்கணும்! முக்கியமா மினு கண்ல படாம வச்சுக்கணும்! அவ கேள்வியா கேட்டா, பதில் சொல்றது கஷ்டமில்லையா?!” குறும்பாகப் புருவம் உயர்த்தி நிறுத்தினான்.

முதலில் புரியாமல் அவள் யோசித்தாலும், அவன் பேசிய பொருள் புரிந்தவுடன், போலியாக முறைத்தாள். பின் புன்னகைத்தாள். கூடவே வெட்கமும் பட்டாள்!

நிறையப் பேசினார்கள். மனம் விட்டுப் பேசினார்கள். நேரங்கள் அழகாக நகர்ந்தது. அந்த ஏகாந்த வேளையில், வானம் தூறல்களாய் இவர்களுக்கு அட்சதை தூவியது!

இனி அவன், அவளின் வலிகளுக்கு மருந்தாக இருந்து அவளைப் பார்த்துக்கொள்வான்!

இனி அவள், அவன் என்றும் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பில்லா அன்பைப் பரிசாகத் தந்து அவனைப் பார்த்துக்கொள்வாள்!

அவர்களின் காதலை மீண்டும் புதுப்பிக்க அடித்தளமாக இருந்த மினுவை கண்ணுக்குள் வைத்து இருவரும் பார்த்துக்கொள்வார்கள்!

 

<<<நன்றி! சுபம்!>>>

41
9
1
9
Subscribe
Notify of
6 Comments
Inline Feedbacks
View all comments
Saro Kumaran
5 months ago

Thank you sister. Super story. Puthu anupavamaa erunthuchi. Nice💐💐💐

priyadeepa
5 months ago

Just super I’m going to miss u all guys.. Deva, veda, meenu, sri…….

kavitha28
5 months ago

Very nice story…and emotional too…very well written Preethi

error: Content is protected !! ©All Rights Reserved
6
0
Would love your thoughts, please comment.x
()
x