Ennodu Nee Unnodu Naan – 1

என்னோடு நீ உன்னோடு நான் – 1:

அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை அவள் கேட்ட வார்த்தைகளை.

“பேரழிவு” “பூங்கொடி கிராம விழா”

அவள் அம்மாவிடம் பேச போன் செய்தபோது கேட்ட க்ராஸ் டாக்.

‘என்னவா  இருக்கும்’ என்று யோசித்தவள், “அச்சோ! அம்மாகிட்ட நேரமாகும்னு சொல்லணும்ல” என்று மறுபடியும் டயல் செய்தாள் அவள் அம்மாவிற்கு.

“நம்ம ஆள்  ஒருத்தன் அங்க நொழஞ்சுட்டான். அவன் பார்த்துப்பான்” என்ற அதே குரல்.

சற்று குழப்பத்துடன் மறுபடியும் அவள் அம்மாவிற்கு அழைத்து தாமதமாக வருவதைத் தெரிவித்தாள்.

வேலை முடிந்து வீடு சென்றவளுக்கு அந்த குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

‘பேரழிவுக்கு என்ன காரணமா இருக்கும்? அந்த கிராமம் எங்க இருக்கு?’ என்று பல சிந்தனைகளுடன் இருக்கும் போது… தடதடவென சத்தம். சற்று திடுக்கிட்டு நினைவுக்கு வந்தவள், அறையின் கதவைத் திறந்தாள்.

“என்ன செய்து வச்சிருக்க நிலா? எப்படி உன்னால இத செய்ய முடிஞ்சுது?” என்று ஒரு குரல். ஒன்றும் புரியாமல், “அப்பா?” என கேள்வியோடு பார்த்தாள்.

“நீ ரொம்ப அறிவாளியா இருக்கலாம். உனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லாம கூட இருக்கலாம். ஆனா உனக்கப்புறம் ஒருத்தி இருக்கா… அவளுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சுனு ஞாபகம் வச்சிக்கோ!

உனக்கே தெரியும் உன் ஜாதகத்துக்கு வரன் கிடைக்கிறது கஷ்டம். உன்ன ஒருத்தன் லவ் பண்றேன்னு சொன்னான். சரி… அப்படியாவது உனக்கு நல்லது நடக்கட்டும்னு பேசினோம். கடைசில அவன் வீட்ல ஜாதகம் சேரல… வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

நீ என்னன்னா எதையோ யோசிச்சிட்டு, வர்ற இடத்தையெல்லாம் தட்டிக்கழிச்சிட்டு இருக்க. நான் சொல்றது உன் காதுல கேட்குதா?” அவள் அப்பா கத்திக்கொண்டிருக்க, அவள் பதில் பேசாமல் அந்த இடத்தை விட்டு சென்றாள்.

அவருக்கு இன்னமும் கோபம் தலைக்கேற, அவருடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்.

‘ஏதோ நான் தான் காரணம் போல இப்படி திட்டறாரு. இந்த தடவ நான் நிறுத்தல. அவன் இந்த கல்யாணம் பிடிக்கலைனு சொல்றப்ப, இல்ல… நீ என்னை கல்யாணம் பண்ணியே ஆகணும்னு சொல்லவா முடியும். இதை சொன்னா என்னை நம்பவா போறாங்க?

எப்போ பார்த்தாலும் இதே பேச்சு. என் ஜாதகத்துல தோஷம் இருந்தா நான் என்ன பண்றது? எல்லாம் என் தலையெழுத்து’ என்று தன்னைத்தானே நொந்துகொள்ளும் போது “நிலா” என்று அழைத்தபடி அவள் அம்மாவும் பால்கனிக்கு வந்தார்.

“அம்மா ப்ளீஸ்! நீயும் ஸ்டார்ட் பண்ணாத. அவன் வேண்டாம்ன்னு சொல்லிட்டான். அதுக்கு மேல நான் ஒன்னும் பண்ண முடியாது” என்றாள் வெறுப்புடன்.

“அத விடு நிலா. நீ ஏற்கனவே நேரம் கழிச்சு வந்துருக்க. சாப்பிடு. அப்புறம் பேசலாம்”

“எனக்கு இப்போ எதுவும் வேண்டாம் மா. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன். நீ போய் தூங்கு”

“கோபத்த சாப்பாட்ல காட்டாத நிலா. ஒழுங்கா சாப்பிடு” என்று அவள் அம்மா சொல்லிவிட்டு செல்ல… நிலா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் வானத்தில் நிலவைப் பார்த்தபடி.

அவளுடைய குடும்பம் சிறிய நடுத்தர குடும்பம். அப்பா, அம்மா மற்றும் தங்கை நக்ஷத்ரா. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்.

அவள் அப்பா படிக்கச்சொன்னது தகவல் தொழில்நுட்பம் (IT)… ஆனால் அவள் தேர்ந்தெடுத்தது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங். ‘ஒரு பொண்ணு எப்படி இதுக்கேத்த வேலைக்கு போக முடியும்? இத படிச்சுட்டு IT’ல வேலைக்கு போகறதுக்கு IT படிச்சுடலாமே’ என்று அவர் நினைத்தார்.

ஆனால் அவள் பிடிவாதமாக ஆட்டோமொபைல் எடுத்தாள். படிக்கும்போதே வேலை கிடைக்க… இப்போது ஒரு பெரிய பன்னாட்டு ஆட்டோமொபைல் கம்பெனியில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவு R&D Division lead) லீடாக இருக்கிறாள்.

அவள் அப்பா கூறியது போல தங்கைக்கும் கல்யாண வயது வந்தது என்னவோ உண்மை தான்.

‘இதுக்கு முன்னாடி ஜாதகம் பொருந்தின பையன வேண்டாம்னு சொன்னேன். ஏன்னா… அவன் பேச்சு முழுசா என்னோட சம்பளம், நான் எவ்ளோ நாள் வேலைக்கு போவேன்னு… அதுல தான் இருந்துச்சு.

அதுக்கு முன்னாடி ஒருத்தன் கல்யாணத்துக்கப்புறம் வேலைக்கு போக கூடாதுங்கறான். இப்போவே இவ்ளோ கண்டிஷன் போடறான், இவங்களயெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?

ப்ச்… சரி. கொஞ்ச நாள் வீட்ல பார்ப்பாங்க. ஒன்னும் செட் ஆகலன்னா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடட்டும். எனக்கு கவலையில்ல’

இப்படி முனகிக்கொண்டிருந்தவளுக்கு சற்று நேரத்தில் பூங்கொடி கிராமம் ஞாபகம் வந்தது.

‘எங்கே இருக்கிறது’ என கூகுளில் தேடிப் பார்த்தபோது, பெரிய தகவல் எதுவும் வரவில்லை.

‘கடலூர் பக்கத்துல இருக்கும் போல. என்ன ஆபத்து இருக்கும் அங்க? என்ன செய்யலாம்?’ என்ற யோசனையிலேயே இருந்தாள்.

————-

“டாக்டர் எமெர்ஜண்சி கேஸ். ஹார்ட் அட்டாக். இப்போ தான் வந்தாங்க. நீங்க வரமுடியுமா?” போன் செய்த நர்ஸ் நீரஜாவிடம், “ECG எடுத்துடுங்க. பத்து நிமிஷம். வந்துறேன்”

அழைப்பைத் துண்டித்துவிட்டு மணியைப் பார்த்தான். நடு இரவு 2.40.

ரெஃப்ரஷ் ஆகிவிட்டு, அவனுடைய ஹார்லி டேவிட்ஸனை கிளப்ப… அடுத்த பத்து நிமிடத்தில்  மருத்துவமனையை சென்றடைந்தான்.

“டாக்டர்.. ECG எடுத்துட்டோம். இந்தாங்க” நீரஜா ரிப்போர்ட்டை நீட்டினாள்.

“கான்செண்ட் ஃபார்ம்ல (consent form) சைன் வாங்கிட்டீங்களா?” என்று நர்ஸை அவன் கேட்க, பதிலுக்கு “எஸ் டாக்டர்!” என்றாள் நீரஜா.

ECG ரிப்போர்ட் பார்த்தபடியே… நோயாளியைப் பார்க்க ICU’விற்கு சென்றவன், தேவையான மருத்துவ உதவிகளைச் செய்தான்.

சிறிது நேரம் கழித்து ICU’வில் இருந்து வெளியே வந்தவனிடம், “ரொம்ப நன்றி டாக்டர். இப்போ அவரு எப்படி இருக்காரு?” என்று நோயாளியின் மனைவி அழுதுகொண்டே கேட்டபோது…

“இப்போ பரவால்ல. ரெண்டாவது அட்டாக். மெடிகேஷன்ஸ்’ல இருக்காரு. பயப்பட வேண்டாம். நான் காலைல வரேன்” என்றவன், நர்ஸிடம்… “ஏதாச்சும் அவசரம்னா கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு, வண்டியை முறுக்கினான் வீட்டிற்கு.

இது புதிதல்ல அவனுக்கு. எப்போது அழைத்தாலும் மறுபேச்சின்றி கிளம்பிவிடுவான். இன்றும் அதே போல கிளம்பி இருந்தாலும். அவன் மனம் எதையோ யோசித்துக்கொண்டிருந்தது.

டாக்டர் ஆதித்யா அபிமன்யு. UG ஸ்டான்லி கல்லூரியில் முடித்தவுடன் MD – கார்டியாலஜி அமெரிக்காவில் படித்தான். அவனுடைய பெற்றோரும் மருத்துவர்கள். ஒரே மகன்.

மூன்று வருடம் ஒரு பெரிய புகழ் பெற்ற மருத்துவமனையில் பயிற்சி செய்தவுடன், தனியாக அவனுக்கென்றே ஒரு சின்ன மருத்துவமனை ஆரம்பித்தான். மேலும் ஒரு பிரபல மருத்துவக் கல்லூரியில் விசிட்டிங் அசிஸ்டன்ட் ப்ரொஃபஸர் (visiting assistant professor) ஆகவும் பணியாற்றுகிறான்.

அவன் பெற்றோர் சென்னையிலே இருந்தாலும்… அவன் வசிப்பது, தனியாக பெசன்ட் நகரில்.

டாக்டர் கௌஷிக் அவனுடைய நெருங்கிய நண்பன். இருவரும் UG, PG ஒன்றாகவே படித்தனர். அவன் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (Orthopaedic surgeon). இருவரும் சேர்ந்து தான் மருத்துவமனையை பார்த்து வருகின்றனர். ஏதேனும் அர்ஜென்ட் கேஸ் இருந்தால், அவ்வப்போது ஆதியுடன் தங்குவான் கௌஷிக்.

ஆதி… பார்க்க மிடுக்கான தோற்றம். எப்போது பார்த்தாலும் பல வாரம் வெட்டாததுபோல முகத்தில் தாடி, அடர்ந்த கேசம் என சுற்றுபவன். டாக்டர் என்று  சொன்னால் யாரும் நம்பமுடியாத தோற்றம்.

‘உன்ன ரௌடின்னு சொன்னா வேணா நம்புவாங்க’ என்று கௌஷிக் எப்பொழுதும் கிண்டல் செய்வான். கடுகடுவென இருப்பவனிடம் எப்போதாவது புன்னகை எட்டிப்பார்க்கும்.

வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆதிக்கு, அன்று இரவு உறங்கும் முன் கௌஷிக் சொன்ன விஷயம் ஞாபகம் வந்தவண்ணம் இருக்க, அதை நினைத்து இறுக்கமாகவே உணர்ந்தான்.

பொழுது புலர்ந்தது. அடுத்த நாள்!

“சார், என்னை பத்தி உங்களுக்கு தெரியும். நீங்க எனக்கு நிறைய உதவி பண்ணிருக்கீங்க” என்று S11 போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டரிடம் நிலா சொல்ல… “தெரியும் நிலா. பட் நீயே சொல்லு, ஒரு க்ராஸ் டாக் வச்சுட்டு நான் என்ன ஆக்ஷன் எடுக்க முடியும்னு  நீ நினைக்கிற?” என்றார் அவர்.

‘அவர் சொல்றதும் சரி தான். அவரால என்ன செய்ய முடியும்?’ என்று நினைத்தாலும்… “ஐ ஃபீல் டெரிபில் சர் (I feel terrible sir). ஏதாவது பயங்கரமா நடந்திடுச்சுன்னா…” அவள் சொல்லும்போதே…

“அந்த ஊரே ஏதோ ஒரு சின்ன கிராமம்னு சொல்ற. அங்க என்ன பயங்கரமா நடக்கப்போகுதுனு நினைக்கிற? எவனாவது மப்புல கூட பேசியிருப்பான். இதையே நினைச்சுட்டு இருக்காத” என்று அவளைத் தேற்றி அனுப்பி வைத்தார்.

அவளுக்கு அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்று ஒர்க் ஃப்ரம் ஹோம் (work from home) எடுத்துக்கொண்டதால் வீட்டிற்கு சென்றாள். ஒரே குழப்பமாக இருந்தது இதை நினைக்கும்போது.

மறுபடியும் பூங்கொடி கிராமம் பற்றி கூகுளில் தேடிப் பார்த்தாள், பெரிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சிக்க…

கோவில்களில் தற்சமயம் நடந்த பேரழிவுகள் பற்றி சர்ச் (search) செய்தாள்.

“கேரளா கொல்லத்தில் உள்ள கோவிலில் நடந்த பெரிய தீ விபத்து மற்றும் பெருத்த உயிர் இழப்பு”

“மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து”

“கர்நாடகா தமிழ்நாடு எல்லையில் உள்ள கோவிலில் நச்சு கலந்த உணவு உண்டு பலர் மரணம்”

“உத்தரகண்ட் கேதார்நாத்தில் பெருத்த வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கில் உயிர்ச் சேதம்”

“பஞ்சாப் அம்ரிஸ்டருக்கு அருகே தசரா அன்று ரயில் மோதி பக்தர்கள் மரணம்”

இதை அனைத்தையும் பார்த்தவள், ‘இதெல்லாம் பார்த்தா இயற்கை பேரழிவுகள் மாதிரி தான் இருக்கு… பஞ்சாப், கர்நாடகா சம்பவங்கள் தவிர. பட், பூங்கொடி கிராமத்துக்கு இவங்க ப்ளான் பண்ணில்ல  இத செய்ய பார்க்கறாங்க. என்னவா இருக்கும்? மண்டையே வெடிக்குதே’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது மொபைல் அடித்தது.

‘யாருடைய அழைப்பு?’ என்று பார்த்தவள், எரிச்சலுடன் துண்டித்தாள் அந்த அழைப்பை. திரும்பவும் அடித்தது. மறுபடியும் துண்டித்தாள். மறு முறை அழைப்பு வருவதற்கு முன் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தாள்.

‘இப்போ எதுக்கு இவன் கால் பண்றான்? இவனை மறக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். இவனை போல ஒருத்தன ஏன் லவ் பண்ணேன்னு நினைக்க வச்சவன் தானே இவன். பிரிஞ்சு ரெண்டு வருஷமாச்சு’ என்று நினைத்தவளின் எண்ணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சென்றது.

——

கௌஷிக் சொன்னதே ஆதி மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ‘பைரவி’ அந்த பெயரை நினைத்தபடி கண்ணுறங்கியிருந்தான் ஆதி.

எப்பொழுதும் போல காலையில் சீக்கிரம் எழுந்து, அவனும் கௌஷிக்கும் ஜாகிங் சென்றனர்.

“ஏன் டையர்டா(tired) இருக்க ஆதி?”

“நேத்து ஒரு அர்ஜன்ட் கேஸ். நைட் போய்ட்டு வந்தேன். அதான் கொஞ்சம் டையர்ட்” பதில் தந்தான் ஆதி.

மேலும், “இன்னிக்கி என்னால காலேஜ்க்கு வர முடியும்னு தோணல. ரெஸ்ட் வேணும். மெயில் அனுப்பிட்டேன். நீயும் ஒரு வார்த்தை சொல்லிடு” என்று ஆதி சொல்ல…

“ஹ்ம்ம்… அப்புறம்…. இன்னிக்கி பைரவி கிளம்பறா. என்ன செய்யப்போற ஆதி?” கேள்வியுடன் கௌஷிக் கேட்டான்.

‘தெரியவில்லை’ என்பதுபோல் தலையசைத்த ஆதி… “சீரியஸா எனக்கு தெரியல… அவ எதுக்கு வர்றா… வந்து என்ன செய்ய போறானு ஒன்னும் புரியல” என்றான் குழப்பத்துடன்.

சிறிது நேரம் சென்றிருக்கும். “எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு… கூட இந்த விஷயம் வேற. நான் கிளம்பறேன்” என்று கௌஷிக்கிடம் சொல்லிவிட்டு… மனதில் குழப்பத்துடனே வீட்டிற்குத் திரும்பினான் ஆதி.

தலைவலிக்காக கிரீன் டீ போட்டுக்கொண்டு… சோபாவில் அமர்ந்தவனுக்கு பைரவியின் முகம் மனதில் வந்தவண்ணம் இருந்தது. அவனுக்கு அவள் வருகை பெரும் நெருடலாகத் தோன்றியது.

‘எல்லாம் அங்கயே முடிஞ்சதுனு நினச்சேன். அவளோட பேசியே ரொம்ப வருஷம் ஆச்சு. நான் இந்தியா வந்ததுக்கப்புறம்  அவளோட தொடர்பிலேயே இல்ல. சோ வாஸ் ஷி!

ஆனா இப்போ வர்றான்னா எதுக்காக இருக்கும்? ஒருவேளை அவ அம்மா அப்பாவை பார்க்க வர்றாளா? யூஷுவலா அவங்க தானே போவாங்க…’ என்று அவன் மனம் கேள்வி கேட்டு அதற்கான பதிலையும் யோசித்தது.

அவனுடைய நினைவலைகள் நான்கு ஆண்டுகளுக்கு முன் அவனை எடுத்துச்சென்றது.

*******

நிலா, ஆதியின் கடந்த காலம் என்னவாக இருக்கும்?!? இவர்கள் எப்படி சந்தித்துக் கொள்வார்கள்?!?! பூங்கொடி கிராமத்துக்கு அப்படி என்ன ஆபத்து?!?!

 

5
3
2

24 thoughts on “Ennodu Nee Unnodu Naan – 1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved