Ennodu Nee Unnodu Naan – 3

என்னோடு நீ உன்னோடு நான் – 3:

ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ஆதி, அவன் காரை சீக்கிரம் திருப்பிக்கொண்டு அந்த சுமோ காரை பின் தொடர்ந்தான்.

சுமோ சிக்னலை தாண்டி சென்றது. ஆதி சிக்னலில் மாட்டிக்கொள்ள, தன் கோபத்தை ஸ்டீயரிங்’கில் காட்டினான்.

சிக்னல் திறந்த பின், ‘சுமோ எங்கேயாவது தென்படுகின்றதா?!’ என்ற நப்பாசையுடன் பார்த்துக்கொண்டே வண்டியைச் செலுத்த, கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை எதுவும் காணவில்லை.

சற்று தூரம் தள்ளி வண்டியை நிறுத்திய ஆதி மனதில், ‘எதுவும் செய்யமுடியாமல் போனதே…. அதுவும் சிறுமியர் வேறு’ சின்ன வருத்தம் தோன்றியது.

இருந்தும் இரவு நேரம் ஆனதால், மேப்’பின் உதவியுடன் அவன் போக இருந்த உணவகத்துக்குச் செல்ல காரை மறுபடியும் செலுத்த…

ரோட்டின் ஓரத்தில் அவன் பார்த்த அதே சுமோ மற்றும் அதே சிகப்பு நிற சட்டை அணிந்த டிரைவர் நின்று கொண்டிருந்தான்.

அவசரமாக அந்த சுமோ முன் காரை நிறுத்திவிட்டு அந்த ட்ரைவரை நெருங்கிய ஆதி… அவன் சட்டையை பிடித்து, “ஏய் அந்த சின்ன பொண்ணுங்கள எங்க கூட்டிட்டு போய் விட்ட? சொல்லு… இல்ல போலிஸ்ட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்” என மிரட்டினான்.

“சார் நீங்க யாரு? மொதல்ல சட்டைய விடுங்க. நான் யாரையும் அப்படி கூட்டிட்டு போகல. நீங்க வேற யாரையோ பார்த்துட்டு என்னை சந்தேகப்படுறீங்க” லேசாக திக்கி, பயத்துடன் பம்மினான்.

“இப்படியெல்லாம் கேட்டா நீ உண்மைய சொல்ல மாட்ட… இரு நான் போலீஸ்க்கு கால் பண்றேன்” என்று சொல்லிக்கொண்டே ஆதி போனை எடுக்க…

“சார் சார்! ப்ளீஸ்! எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒருத்தங்க டாக்ஸி புக் பண்ணியிருந்தாங்க. திடீர்னு ஒரு சிக்னல்ல நிக்க சொல்லி அந்த பொண்ணுங்கள ஏத்திகிட்டாங்க” அந்த டிரைவர் திணறினான்.

“ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லிடு” ஆதி மறுபடியும் அவனை அடிக்க கையோங்க…

“சொல்றேன் சார் சொல்லிடறேன். ஏன் அவங்களையெல்லாம் ஏத்தறீங்கனு கேட்டப்ப, ‘அது உங்களுக்கு எதுக்கு? நான் சொல்ற டைரெக்ஷன்ல போங்க’னு சொன்னாங்க.

எனக்கு ஏதோ பொறி தட்ட காரை நிறுத்திட்டு, இறங்குங்கனு சொன்னேன். ‘இங்கலாம் முடியாது. பக்கத்துல ஏதாவது ஹோட்டல்ல நிறுத்துங்க’னு சொன்னாங்க.

அப்புறம் அதோ அங்க தெரியுதே.. அந்த வசந்தா ஹோட்டல்ல தான் இறக்கிவிட்டேன்” என்று அவன் கடந்து வந்த பாதையைக் காட்டினான். அங்கே ஓர் உணவகம் தெரிந்தது.

“எனக்கு அப்போவே ஏதோ தப்பா தெரிஞ்சது. இப்போ பாருங்க… நீங்க என் சட்டையை பிடிக்கறீங்க” குறைபட்டுக்கொண்டான் அந்த ட்ரைவர்.

அந்த உணவகத்தை பார்த்த ஆதி, “நீ பொய் எதுவும் சொல்லலையே?” சந்தேகத்துடன் கேட்க… “சார் சத்தியமா வேற எதுவும் எனக்கு தெரியாது” அவன் தைரியமாக சொன்னான் இப்போது.

“உன்ன நம்ப மாட்டேன். கார் லாக் பண்ணிட்டு வா. அந்த ஹோட்டல்ல அவங்க இருந்தா… ஒகே. உன்ன விட்டுடறேன்”

“என் தலையெழுத்து சார். காலைல எவன் மூஞ்சில முழிச்சேனோ!” கடிந்துகொண்டே கார் லாக் செய்துவிட்டு, ஆதியுடன் அவன் காரில் ஏறினான்.

மறுபடியும் யூ டர்ன் போட்டுக்கொண்டு அந்த உணவகம் அருகே சென்ற ஆதி காரை நிறுத்த, “பாருங்க சார்… அவங்க உள்ள தான் இருக்காங்க” உள்ளே காட்டினான் அந்த டிரைவர்.

அந்த பெண்ணும் அவளுடன் அந்த சிறுமியரும் பயந்துகொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தான் ஆதி.

“சார் இப்போ நான் போகலாமா..? அங்க கார் தனியா நிக்குது சார். போலீஸ் பார்த்தா ஸீஸ் பண்ணிடுவாங்க”

“எப்படி போவ அங்க?” உணவகத்தைப் பார்த்தபடி ஆதி கேட்க, “நான் நடந்தே கூட போய்டறேன். தயவுசெய்து என்னை விட்டுடுங்க. எனக்கு ஒன்னும் தெரியாது சார்” என்றான் ‘விட்டால் ஓடிவிடுவேன்’ என்பதுபோல.

“இந்தா… இத வச்சு ஆட்டோல போய்டு” அவனிடம் ஆதி பணத்தை கொடுக்க, ஆதியை அவன் வித்தியாசமாகப் பார்த்தான்.

பின், “ரொம்ப தேங்க்ஸ் சார்” நன்றியுடன் வாங்கிக்கொண்டு அவன் காரில் இருந்து இறங்கி சென்றபின், ஆதியும்  உணவகம் உள்ளே சென்றான்.

அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்குப் பின் இருந்த இருக்கையில் உட்கார, அந்த பெண்ணின் பின்புறம் மட்டுமே தெரிந்தது.

‘இப்போ போய் பேசினா… ஏதாவது சொல்லி மழுப்ப சான்ஸ் இருக்கு. பிளஸ், அந்த பொண்ணுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது…

“சார்ர்ர்ர்ர்ர்” என்று சர்வர் கத்தினான்.

“என்ன?” என்று கோபத்துடன் ஆதி கேட்க, “என்னவா? ஆர்டர் சொல்லுங்க சார்” என்றான் சிடுசிடுவென.

அந்த டேபிளையே பார்த்தவண்ணம் “ஒரு கிரீன் டீ” என்றான் ஆதி.

“என்னது கிரீன்டீ யா?  அதெல்லாம் இங்க இல்ல சார்” எரிச்சலுடன் சர்வர் கடிய, “ஏதோ ஒரு டீ எடுத்துட்டு வந்து குடு” என்றான் அவனைப் பார்க்காமல்.

“வந்து சேர்றாங்க பாரு” என்று முணுமுணுத்துக்கொண்டே சர்வர் சென்றான் எடுத்துவர.

ஆதி அவர்களையே பார்த்துக்கொண்டிருக்கும்போது, அந்த பெண் இருந்த மேசையில்… தட்டில் பில் வைத்தவுடன், அந்த பெண்ணிற்கு ஏதோ ஓர் அழைப்பு வந்தது. அவள் உடனே திரும்பி வாயிலை நோக்கிக் கையசைத்தாள்.

ஒரு வாட்டசாட்டமான ஆள் உள்ளே வந்துகொண்டிருந்தான். அவளிடம் அவன் ஏதோ சொல்ல, அவள் பில் தட்டில் பணம் வைத்துவிட்டு, சிறுமியரை அழைத்துக்கொண்டு, அவசரமாக அவன் பின்னே சென்றார்கள்.

இதைப்பார்த்த ஆதி, தானும் அவசரமாக எழுந்தான்.

“சார்  சார் எங்க போறீங்க… டீ ஆர்டர் பண்ணிட்டு. இந்தாங்க” சர்வர் கத்த… “இவனோட…” என்ற ஆதி, அவன் கைகளில் ஐம்பது ரூபாயைத் திணித்தான். “சார் டீ” என்று அவன் கேட்க, “நீயே குடி” என்று சொல்லிவிட்டு பரபரப்பாக அங்கிருந்து வெளியேறினான்.

அவர்கள் அனைவரும் மற்றொரு கார்… சைலோவிற்குள் ஏறிக்கொள்ள, கார் புறப்பட்டது.

ஆதியும் அவன் காரில் அவர்களை பின் தொடர்ந்தான். காரை ஓட்டிக்கொண்டே அவனுடைய போலீஸ் நண்பனுக்கு அழைத்தான்.

“ப்ரித்வி….” என்று நடந்ததையெல்லாம் கூற, அவன் நண்பன் மறுபக்கம் ஏதோ சொன்னபின்… “ஒகே…  வில் அப்டேட் யு” என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டு அவர்களை பின்தொடர்ந்தான்.

சற்று தூரம் சென்ற சைலோ, ஓர் இடத்தில் நின்றது. அதிலிருந்து அனைவரும் கேட் திறந்து ஒரு கட்டிடம் உள்ளே சென்றனர்.

அந்த இடத்தை பார்க்க ஒரு அமைதியான பகுதியாகத் தெரிய, காரை சற்று தள்ளி நிறுத்திய ஆதி… அந்த கேட்’டை நெருங்கினான். அந்த லொகேஷனை ப்ரித்விக்கு பகிர்ந்துகொண்டே யோசனையுடன் உள்ளே பார்க்க, அதிர்ந்து விட்டான்.

“அன்னை உதவும் கரங்கள்” என்ற போர்ட் தெரிந்தது!

சற்றே வியந்தவனாய் அதை பார்த்துக்கொண்டிருக்கும் போது… “யார் வேணும் சார் உங்களுக்கு?” செக்யூரிட்டி உடையில் ஒருவன் ஆதியிடம் கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல் “அது வந்து, இங்க இருக்கவங்கட்ட பேசணும்” என்றான் ஆதி.

“மேடம்’ட்டயா?” செக்யூரிட்டி கேட்க, “ஆ.. ஆமாம்” என்றான் ஆதி.

“உள்ள தான் இருக்காங்க. ரெஜிஸ்டர்ல சைன் பண்ணிட்டு, உங்க ID ப்ரூஃப்(proof) காட்டுங்க” என்றான்.

“எதுக்கு ப்ரூஃப்?” ஆதி கேட்க, “நீங்க யாருனு தெரிய வேண்டாமா? அதுக்குத்தான்” என்றான் பதிலுக்கு.

அவனிடமிருந்த IDயை ஆதி எடுத்துக்காட்ட, அதை செக்யூரிட்டி ஒரு போட்டோ எடுத்துக்கொண்டான்.

‘ID’லாம் கேட்கறாங்கன்னா, தே மஸ்ட் பி ஜென்யுவன்’ என்று நினைத்துக்கொண்டான் ஆதி.

ரெஜிஸ்டர்’ரில் கையெழுத்துப் போட்டபின் உள்ளே சென்றவன், அங்கு என்ன நடக்கிறது என்று மறைந்திருந்து பார்த்தான்.

அவன் முன்னே சிக்னல்லில்/ஹோட்டலில் பார்த்த பெண்மணி அவனுக்கு பின்புறத்தைக் காட்டியவண்ணம் மற்றொரு வயது மிகுந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“அவங்க இந்த ஊர் இல்லனு தெரிஞ்சதுக்கப்புறம் அப்படியே விட முடியல. என்னோட NGO நிறுவனர் மிஸ்டர் புருஷோத்தமன் கிட்ட இங்க ஏதாவது எங்களுக்கு காண்டாக்ட்ஸ் இருக்கான்னு கேட்டப்ப, இந்த அட்ரஸ் குடுத்தாரு.

மொதல்ல ஒரு டாக்ஸில வந்தோம். அவர் ஏதோ பயந்துட்டு எங்களை பாதியில இறக்கி விட்டுட்டார். அதான் உங்களுக்கு கால் பண்ணி கார் அனுப்பச்சொன்னேன்”

இதை கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு பெண்மணி… “நல்ல காரியம் செய்தீங்க. அந்த பொண்ணுங்க கிட்ட பேசினீங்களா?”

“பேசினேன். அவங்கள ஆந்திரால இருந்து கூட்டிட்டு வந்ததா சொன்னாங்க. டெய்லியும் இங்க ரோட்ல பிச்சையெடுப்பாங்களாம்.

அப்புறம் அவங்கள கூட்டிட்டு வந்த அந்த கேங், இவங்ககிட்டயிருந்து எல்லா பணமும் வாங்கிட்டு… ஏதோ ஒன்ன சாப்பிட கொடுப்பாங்களாம். மொதல்ல என்கூட வரமாட்டேன்னு சொன்னாங்க. ரொம்ப பயந்தாங்க. அவங்க வீட்ல சேர்த்திடலாம்னு சொன்னேன்… அப்போ தான் நம்பினாங்க” என்று விவரித்தாள்.

“ரொம்ப நல்ல காரியம் பண்ணீங்க நிலா. இது சாதாரணமான விஷயமில்ல. நீங்க பண்ணினது பெரிய காரியம். உங்க தைரியத்த பாராட்டணும். தேங்க் யு சோ மச்” என்றார் அந்த பெண்மணி.

“இதை அப்படியே பாதியில விட்டிருந்தா தான், எனக்கு உறுத்திட்டே இருந்திருக்கும். தேங்க்ஸ்’லாம் எதுக்கு மேம்… இது என்னோட கடமை. போலீஸ்’ட்ட சொல்லிட்டீங்களா?” கேட்டாள் நிலா.

“ஆல்ரெடி இன்பார்ம் பண்ணிட்டேன். வந்துட்டு இருக்காங்க” என்றார் அந்த பெண்.

“ஒகே மேம். நான் கிளம்பறேன். எனக்கு நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு… அந்த சிறுமியரைப் பார்த்து பை சொன்ன நிலா, இன்சார்ஜ்’ஜிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்ப…

‘ச்ச இவங்கள போய் தப்பா நினைச்சுட்டேனே’ என்று ஆதி எண்ணும்போது… நிலா திரும்பினாள்.

‘இவங்க இல்ல. மே பி இன் ஹர் 20’s’ என்று அவன் மனம் சொன்னது. அவன் நினைத்தாற்போல வயதான பெண்மணி இல்லை… ஓர் இளம்பெண் என்று தெரிந்தவுடன், சின்னதாக புன்னகை அரும்பியது.

நிலா அவனை கடந்து செல்ல முற்படும்போது… அவன் கதவின் பின் ஒளிந்துகொண்டான்.

சிறிது நேரத்தில் அந்த இல்லத்தின் இன்சார்ஜ்’ஜும் வெளியே சென்று, நிலாவை காரில் வழியனுப்ப… ஆதியும் வெளியே வந்திருந்தான்.

அவனை பார்த்த செக்யூரிட்டி… “சார், மேடமை பார்த்து பேசிட்டிங்களா?” என்று கேட்க, ஆதி லேசாக தடுமாறி பதில் சொல்லும்முன், நிலா சென்றவுடன், அந்த இன்ச்சர்ஜ் திரும்பி அவனைப் பார்த்தார்.

“சொல்லுங்க? என்ன பேசணும்?” அந்த இன்சார்ஜ் ஆதியிடம் கேட்க…

“ஆக்சுவல்லி, நான் அவங்க பொண்ணுங்கள கூப்பிட்டுட்டு கார்ல கிளம்பினத பார்த்து… அவங்க பசங்கள கடத்தறாங்களோனு தப்பா எடுத்துட்டேன். ஆனா அவங்கள ஃபாலோவ் பண்ணி இங்க வந்தப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க பசங்கள காப்பாத்திருக்காங்கன்னு… பை தி பை, ஐம் ஆதித்யா” என்று அவனை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“ஓ தட்ஸ் கிரேட் ஆதித்யா! அவங்க ‘சிறு துளி’ங்கிற NGO’வோட செகரட்டரி… வோலண்டீர். பசங்க தனியா ரோட்ல இருந்ததை பார்த்துட்டு, இங்க கொண்டுவந்து விட்டிருக்காங்க” என்றார் அந்த இன்சார்ஜ்.

“தேங்க் யு மேம். பசங்க பத்திரமா இருக்காங்கன்னா சந்தோஷம். சரி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு; ஷல் ஐ மேக் அ மூவ்?”

“கண்டிப்பா. நைஸ் மீட்டிங் யு. உங்க அக்கறை பாராட்டுக்குரியது. தேங்க்ஸ்!” என்றார் இன்ச்சார்ஜ் பதிலுக்கு.

ஆதி மெலிதாக தலையசைத்து புன்னகைத்துவிட்டு, காரில் கிளம்பினான். ப்ரித்விக்கு கால் செய்து நடந்தவற்றைக் கூறினான்.

அவன் வந்த பாதை வழியாக இப்போது செல்லும்போது… அவளுடைய துணிச்சலை எண்ணி ஒரு சின்ன ஆச்சரியம் அவனுள்.

‘அவ பேரு என்னமோ சொன்னாங்களே… ரொம்ப மோசமான ஞாபகசக்தி ஆதி. நீயெல்லாம் ஒரு டாக்டர்?! அவளை தப்பா நினைச்சுட்டேனே… மறுபடியும் அவளை பார்த்தோம்னா ஒரு குட்டி பாராட்டு, ஒரு சின்ன சாரி சொல்லணும்’ அவனுக்குள் பல எண்ணங்களுடன் காரை உணவகத்துக்குச் செலுத்தினான்.

அன்றைய இரவிலும் கூட, நடந்ததைப் பற்றியும் அவளைப் பற்றியும் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தது அவனுள்.

——-

‘வீட்டுக்கு தெரியாம இங்க வந்தாச்சு… அந்த சின்ன பொண்ணுங்கள அப்படி பார்த்தவுடனே, மனசே பதறி போச்சு. அவங்கள பத்திரமான இடத்துல விட்டதும் தான் நிம்மதியா இருக்கு!’ என்று நினைக்கும்போது மொபைல் அழைப்பு வந்தது அவள் அம்மாவிடமிருந்து.

“சொல்லு மா……. ஆமாம், எல்லாம் இங்க ஓகேவா தான் இருக்கு. டீமே இங்க தான மா இருக்கு. அப்புறம் என்ன? கவல படாத……  சிக்னல் கிடைக்கறப்ப நானே உன்ன கூப்பிடறேன்…… ஹ்ம்ம் சாப்பிட்டாச்சு…… சரி மா” என்று மொபைலை வைத்தவுடன் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

‘இதுக்கு முன்னாடி பொய் சொல்லியிருக்கேன். ஆனா இவ்ளோ ஏமாத்தினதில்ல. நான் இங்க தான் போறேன்னு சொன்னா… கண்டிப்பா வீட்ல விடமாட்டாங்க. அதான் பொய் சொல்ல வேண்டியதாயிடுச்சு. சாரி மா’ மானசீகமாக அம்மாவிடம் மன்னிப்புக்கேட்டவள்…

‘கொஞ்சம் பயமா தான் இருக்கு. ஆனா, அதை நினைச்சா எப்படி அழிவைப்பத்தி அந்த கிராமத்துல இருக்கறவங்ககிட்ட சொல்றது’ என்றும் எண்ணினாள்!

ஆதி நினைத்ததுபோல மறுபடியும் அவளை சந்திப்பானா?!? அவளால் அந்த கிராமத்தைக் காப்பாற்றமுடியுமா? பார்ப்போம்!

4
5

12 thoughts on “Ennodu Nee Unnodu Naan – 3

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved