Ennodu Nee Unnodu Naan – 4

என்னோடு நீ உன்னோடு நான் – 4

காலை விடிந்தது கூட தெரியாமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள் நிலா. திடீரென தூக்கம் தெளிய…

‘இதுக்குத்தான் பக்கத்தில அம்மா வேணும்னு சொல்றது. லேட் ஆயிடுச்சு. சீக்கிரம் கிளம்பணுமே! கோவில் நடை வேற பன்னிரெண்டு, ஒரு மணிக்குள்ள சாத்திடுவாங்க. அதுக்குள்ள போகணும்’ என்று அரக்கப் பறக்க கிளம்பினாள்.

“மேடம் எப்போ செக்அவுட் பண்றீங்க?” ரிசெப்ஷனுக்கு வந்த நிலாவிடம் ரிசெப்ஷனிஸ்ட் கேட்க… “எனக்கு இப்போ தெரில.  இன்னைக்கு சாயங்காலம் சொல்லிடறேன்” ரூம் சாவியைக் கொடுத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டாள் நிலா.

ஹோட்டல் வெளியே அவளுக்காக புக் செய்திருந்த காரில் ஏறினாள்.

“பூங்கொடி கோவிலுக்குத்தானே மா போகணும்?” டிரைவர் கேட்க, “ஆமாண்ணா” என்று பதில் தந்தவளிடம்…

டிரைவர், “வைட்டிங் போட்டுட்டு ரிட்டனுமா… இல்லாட்டி விட்டா மட்டும் போதுமா?”  என கேட்டார்.

“கோவிலுக்கு போயிட்டு திரும்பி ஹோட்டலுக்கே வந்திடலாம். போக எவ்ளோ நேரம் ஆகும்ண்ணா?”

“ஒரு ஒன்னரை மணிநேரம் ஆகும்மா” 

சிறிது நேரம் மௌனமாகச் சென்று கொண்டிருக்க… “அண்ணா அந்த கோவில் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” பேச்சை ஆரம்பித்தாள் நிலா.

“கொஞ்சம் கொஞ்சம் தெரியும் மா. அந்த கோவில் தான் அந்த ஊரோட எல்லை கோவில். இதில்லாம அந்த ஊருக்கு வேற ஒரு எல்லை கோவில் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். அது ஒரு சின்ன கிராமம்.

அந்த ஊரிலிருந்து அதிகமா டவுனுக்கு வரமாட்டாங்கன்னும்; அதில்லாம அங்க யாரையும் அவளோ சீக்கிரம் ஊருக்குள்ள சேர்த்துக்க மாட்டாங்கன்னும் கேள்விப்பட்டிருக்கேன்.

இப்போ போகிற எல்லை கோவிலுக்கு மட்டும் தான் நிறைய பேர் வருவாங்க. அது கூட வியாழன், வெள்ளி, சனிக்கிழமை தான் நடை திறப்பாங்க. அந்த கோவிலுக்கு மேல அந்த ஊருக்குள்ள போகிறதுக்கு கூட பெரிய வசதியெல்லாம் இல்ல. எல்லாமே அந்த கோவிலோட தான்” அவருக்கு தெரிந்த விவரங்களைச் சொன்னார் அந்த டிரைவர்.

“வசதி இல்லைனா, அப்போ ஊர்க்காரங்க வெளிய வந்தா எப்படி உள்ள போவாங்க?” நிலா கேட்க, “அது எனக்கு தெரியல. பெரிசா பஸ்’ல்லாம் இருக்கற மாதிரி தெரியல. அவங்களுக்குன்னு தனியா நடைபாதை போட்டு வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

அந்த கோவில்ல இருந்து பார்த்தா, ஒரு சின்ன மலை தெரியும். அதுக்கு அந்தப்பக்கம் தான் ஊருன்னு சொல்லி கேட்டிருக்கிறேன். ஆமா… இதெல்லாம் நீ தெரிஞ்சு என்ன பண்ணப்போற?”

“ஒன்னுமில்லண்ணா. சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்” என்றாள்.

 சிறிது நேரத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் காரை நிறுத்திய ட்ரைவர், “டீசல் அடிச்சுட்டு போய்டலாம்” என்றார்.

சரி என்றவள் மனதில், அந்த கோவில் மற்றும் அந்த ஊர் பற்றி அவர் கூறியதே ஓடிக்கொண்டிருந்தது.

——

அதே காலைப் பொழுதில் ஆதியும் சற்று நேரம் கழித்து எழுந்து, ஹோட்டலின் இரண்டாவது மாடியில், கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டிருந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். 

முந்தைய தினம் நடந்த நிலா குறித்த நினைவுகள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்க, அவளைப் போலவே யாரோ பார்க்கிங்’கில் ஒரு காரில் ஏறுவதைப் பார்த்தவன், நன்றாக உற்றுப்பார்க்க… அது அவளே தான்.

அவளைப் பார்த்த அந்த நொடி ‘அவளும் இந்த ஹோட்டல்’ல தான் இருக்கிறாளா? எப்படியாவது பார்த்து விடவேண்டும்’ பறந்து, படி இறங்கி கீழே வர, அவளின் கார் நின்ற சுவடு தெரியாமல் அங்கிருந்து சென்றிருந்தது.

அவள் அங்கு இல்லாததைப் பார்த்தவன் “ச்ச… மிஸ் பண்ணிட்டேன்” என்று திரும்பி ரிசெப்ஷனை நோக்கிச் சென்றான்.

அவனைப் பார்த்ததும், ரிசெப்ஷனிஸ்ட் எழுந்து சிறிதாக புன்னகைத்து, “ஹௌ மே ஐ ஹெல்ப் யூ சர்?” என்றாள் நுனி நாக்கு ஆங்கிலத்தில்.

“ஐ நீட்… ஐ மீன்… எனக்கு ஒரு சின்ன இன்ஃபோர்மேஷன் வேணும். இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு லேடி வெளிய போனாங்கல்ல, அவங்க என்னோட ஃப்ரெண்ட்.

அவங்க போறத பார்த்தேன், பட் நான் வர்றதுக்குள்ள போய்ட்டாங்க. அவங்க காண்டாக்ட் மிஸ் பண்ணிட்டேன். நீங்க தப்பா எடுத்துக்கலைனா, அவங்க நம்பர் கொடுக்க முடியுமா ப்ளீஸ்” என்று கேட்டான்.

‘யாரென்றே தெரியாத பெண்ணின் எண் எதற்கு?’ மூளை அவனைக் கேள்வி கேட்டாலும், மனமோ அதை எதையும் சட்டைசெய்யாமல் அந்த பெண்ணின் பதிலுக்காக எதிர்பார்த்திருந்தது.

“சார் அது வந்து… வி காண்ட் ஷேர் கெஸ்ட் டீடெயில்ஸ். இட்ஸ் அகைன்ஸ்ட் அவர் பாலிசி (we can’t share guest details Its against our policy – கெஸ்ட் விவரங்கள் தர இயலாது. அது எங்கள் நிறுவன பாலிசி மீறுவதுபோல)” என்றாள் தயக்கத்துடன்.

“ஓ…” கொஞ்சம் ஏமாற்றத்துடன்… “எனக்கு புரியுது. அவங்க திரும்ப வருவாங்களா? ஏன்னா நான் இன்னைக்கு செக்அவுட் பண்றேன்” சின்ன நப்பாசையில் ஏதாவது விபரம் தெரியுமா என்பதுபோல ஆதி கேட்க, “சாயங்காலம் வரேன்னு சொல்லிருக்காங்க சார்” என்றாள் பதிலுக்கு.

“அதுக்குள்ள நான் கிளம்பிடுவேன். தட்ஸ் ஒகே! தேங்க் யூ!” புன்னகையுடன், அவன் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற சின்ன வருத்தத்துடன், அந்த இடத்தை விட்டுச் செல்ல, அதைப் புரிந்து கொண்டவள் “சார்!” என்று அவனைத் தடுத்தாள்.

நடையை எடுத்து வைக்காமல் திரும்பியவன் கேள்வியுடன் அவளைப் பார்க்க, அவள் ‘அக்கம் பக்கம் யாருமில்லை’ என்பதை உறுதிசெய்துகொண்ட பின்…

“உங்களுக்காக நான் ஒரு சின்ன தகவல் தர்றேன். அவங்க என்கிட்டே டாக்ஸி புக் பண்ணித்தர சொன்னாங்க. பூங்கொடி கோவிலுக்கு போகனும்ன்னு சொன்னாங்க அண்ட் நான் தான் புக் பண்ணிக்கொடுத்தேன்” சொல்லிவிட்டு சற்று நிறுத்திய அந்த பெண், “நான் இதெல்லாம் பகிர்ந்துக்கக்கூடாது. பட் நீங்க காண்டாக்ட் மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னதால சொன்னேன்” என்றாள்.

“ஓ தேங்க் யூ சோ மச் மிஸ்” கேள்வியுடன் அவன் நிறுத்த, “நிர்மலா” என்றாள் அவள். “தேங்க் யூ மிஸ் நிர்மலா! இது போதும்” புன்னகையுடன் கூறிவிட்டு அறைக்குப் பறந்தான்.

‘நானும் பூங்கொடி கோவில் பக்கத்தில இருக்கிற மலைல தான் ட்ரெக்கிங் போலாம்னு இருந்தேன். ஹ்ம்ம்… எல்லாம் பேக் பண்ணிட்டு கிளம்ப வேண்டிதுதான். அவளைப் பார்த்து அவ துணிச்சலை பாராட்டிட்டு, ஒரு மன்னிப்பு கேட்டுட்டு, ட்ரெக் ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்’ என்று நினைத்தபடியே சீக்கிரமாகப் புறப்பட்டான்.

————-

“அண்ணா இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் போக?” நிலா ஓட்டுநரிடம் கேட்க, “ஒரு… ஒரு மணிநேரம் ஆகலாம்” என்றார் அவர்.

“அந்த கோவில்ல திருவிழாலாம் நடக்குமா ணா?”

“திருவிழாலாம் நடந்தமாதிரி எனக்கு தெரியலமா”

அவர் பதிலை கேட்டவுடன் அவள் மனதில் ‘திருவிழா நடந்தமாதிரி தெரியலையா?! ஆனா க்ரோஸ் டாக்’ல திருவிழா பத்தி சொன்னாங்களே… இதில்லாம வேற எல்லை கோவில் இருக்குனு சொல்லறாரே இவர். அங்க ஏதாச்சும் பிரச்சனை நடக்குமோ? அந்த கோவிலுக்கு எப்படி போகமுடியும்? இந்த கோவிலுக்கு மேல போக முடியாதுன்னு சொல்லறாரே…’ என்று அவள்  நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அவர் பேச்சை தொடர்ந்தார்.

“அங்க கோவில்ல இருக்க எல்லாரும் அந்த ஊர்காரங்களே தான். கோவில்ல வரும் பணம் தான், அந்த ஊருக்கு முக்கியமான வருமானம். அவங்க கோவில் பக்கத்தில சனிக்கிழமை மீன் விப்பாங்க. தேன்… பழங்கள் கூட.

அங்க அம்மனுக்கு தேன், எண்ணெய், பழம் படைப்பாங்க. அதுவும் அந்த ஊருல இருந்து தான் வரும். அங்க வந்து வேண்டிட்டா, குழந்தை பாக்கியம் கிடைக்கும்னு ஐதிகம். அதுனால நல்ல கூட்டம் இருக்கும் இந்த மூணு நாளும்.

இப்போ அந்த மலை மேல ஏற மட்டும்… லைசென்ஸ் இருக்க சில பேரை அனுப்பறாங்கனு சொல்றாங்க. நல்ல மழை சீசன்’னா அங்க இருக்கிற ஒரு சின்ன அருவில தண்ணி போகும்… அதை பார்க்க போறாங்கன்னு சொல்றாங்க. ஆனா அந்த  ஊருக்குள்ள போக முடியாது” என்றார் அவருக்கு தெரிந்த விஷயங்களை.

அப்படியே பேசிக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.

“அண்ணா இங்கேயே வெயிட் பண்றீங்களா? நான் ஒரு முப்பது நிமிஷத்தில வந்துடறேன்” நிலா கேட்டுக்கொள்ள, “பார்கிங்’ல வெயிட் பண்றேன். எனக்கு போன் பண்ணுமா வெளிய வந்தவுடனே” என்றார்.

கோவில் உள்ளே சென்ற நிலா, ‘யாரிடம் முதலில் இதுபற்றி பேசுவது?’ என்று யோசித்தாள். அங்கே கோவில் அலுவலகம் தெரிந்தது.

அருகே சென்று பார்த்த போது, உள்ளே யாரோ இருவர் அங்கிருந்த நிர்வாகியுடன் பேசிக்கொண்டிருக்க, நிலா வேறு யாரிடம் பேசலாம் என்று யோசித்தாள்.

அலுவலகத்திற்கு எதிரே அம்மன் சன்னிதி இருந்தது, சாமி கும்பிட வரிசையில் நின்றாள். பூசாரி பூஜை செய்து குங்குமம் கொடுக்க, ‘அவரிடம் இதுகுறித்து பேசலாமா?’ என்ற யோசனை வந்தது.

கூட்டம் அலை மோதியதால்… அவரிடம் சற்று நேரம் கழித்துப் பேச முடிவெடுத்தவள் அங்குள்ள படியில் அமர்ந்தாள்.

சிறிது நேரம் அப்படியே கழிய, கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய தொடங்கியது.

அவள் பூசாரியை நோக்கிச் சென்றாள்… அவளுக்கு தெரிந்த விபரம் செல்லி, மேலும் விபரம் அறிய.

—————-

அனைத்தையும் பேக் செய்துகொண்டு அந்த கோவிலுக்கு காரை கிளப்பினான் ஆதி. அடுத்த ஐம்பதாவது  நிமிடத்தில் அவன் கோவிலை வந்தடைந்தான், அவள் வரும் முன்னரே!

அவன் ட்ராவல் பார்ட்னர் மற்றும் ஃப்ரெண்ட் ஜீவன் கூறியது போல… கோவில் வெளியே இருந்த ஒரு டீக்கடையில் கல்லாவில் இருந்தவரைச் சந்தித்தான்.

“ஹலோ என் பேர் ஆதி. ஜீவன் சொல்லிருப்பான்…” என்று ஆரம்பிக்க… அவர் சுற்றியும் முற்றியும் பார்த்துவிட்டு… “ஷ்ஷ்ஷ் இருங்க தம்பி, இங்க பேசவேண்டாம். கொஞ்சம் அந்தப்பக்கமா போய் பேசுவோம்” ஆதியை சற்றுத் தள்ளி அழைத்துச்சென்றார்.

“இன்னைக்கு ட்ரெக்கிங் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்” ஆதி சொல்ல… “சரி தம்பி பணம் வச்சிருக்கீங்களா?” கேட்டார் ஆதியிடம்.

ஆதி பணத்தை எடுத்து நீட்ட… அவர் வாங்கிக்கொண்டு… “இங்க மலையேற அவ்ளோ சீக்கிரம் யாரையும் அனுமதிக்க மாட்டாங்க. நீங்க போகப்போறது அந்த மலை தான்” என்றார் கோவில் பின் இருக்கும் மலையைக் காட்டி.

பின், “ஜீவன் தம்பி சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன். மலைக்கு அந்தப்பக்கம் போகாதீங்க. அந்த ஊர்க்காரங்க யாரையும் சீக்கிரம் உள்ள சேர்க்க மாட்டாங்க. அப்புறம் பிரச்சனை ஆயிடும்”

அதுவரை அவர் பேசியதைக் கேட்ட ஆதி, “சரி நான் ஒருத்தர கோவில்ல பார்க்க வேண்டியது இருக்கு. அத முடிச்சுட்டு கிளம்பறேன்” என்றான்.

“நீங்க எப்படியும் அந்த கோவில் ஆஃபீஸரை பார்த்து பேசிட்டு, NOC வாங்கணும்” என்றவர் அவனைக் கோவிலுக்குள் அழைத்துச்சென்றார்.

இருவரும் ஆஃபிஸில் இருந்தவரைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது… யாரோ உள்ளே பார்ப்பதை உணர்ந்த ஆதி வெளியில் பார்க்க, அங்கே நிலா உள்ளே எட்டிப்பார்த்தாள்.

‘அவளிடம் பேச வேண்டும்’ என்றெண்ணி, அவன் உடனே, “எக்ஸ்க்யூஸ் மீ…” கேட்டபடி எழ முயல, ஆஃபீஸர் சில ஆவணங்களைக் கொடுத்து கையெழுத்துப் போடச்சொன்னார்.

வெளியேறுவதற்கான தருணத்தை ஆதி எதிர்பார்த்துக்கொண்டிருக்க, மற்ற இருவரும் அவனுக்குச் செல்லவேண்டிய பாதை, மற்றும் செய்யக்கூடாதவற்றைப் பற்றி விளக்கம் அளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது உள்ளே, இன்னொரு அறையிலிருந்து வாட்ட சாட்டமான ஒருவர் வெளியே வர, பேசிக்கொண்டிருந்த அந்த ஆஃபீஸர் எழுந்து பவ்யமாகக் கும்பிடு வைத்தவுடன், உட்காரும்படி கையசைத்துவிட்டு வெளியே சென்றார் அந்த வாட்ட சாட்டமான நபர்.

ஒரு வழியாக இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஆதி வெளியே வர, கூட்டம் கொஞ்சம் குறைந்திருந்தது.

நிலாவை தேடியவன், அம்மன் சன்னதிக்கு அந்தப்பக்கம் ஒரு கூட்டம் இருந்ததையும்… அதன் நடுவில் அவள் இருந்ததையும்… சிலர் அவளை ஏசுவதையும் பார்த்து, குழப்பத்துடன் அருகே செல்லும்போது… ஒருவன் போனில் பேசுவதைக் கேட்டு சற்று அதிர்ந்து நின்றான்.

“பொண்ணுதான்யா…… திருவிழா நடந்தா பிரச்சனைனு சொல்லுது….. ஆமாங்கய்யா…… என்னது குத்திட..ணு..மா!?…… உயிரு…… சரிங்கய்யா…… சுத்தி நிறைய பேர் இருக்காங்க, கூட்டத்துக்கு நடுவுலதான் இருக்கு அந்த பொண்ணு…… வேலு பக்கத்துல தான் இருக்கான்…… சரிங்கய்யா…”

பேசியபின் அவனும், இன்னொருவனும் அந்த கூட்டத்துக்கு அருகில் செல்ல, போன் பேசியவன் கையில் கத்தியைப் பார்த்து ஆதி அதிர்ந்தான்.

அவன் செல்லும் முன், அவனை முந்திக்கொண்ட ஆதி… கூட்டத்தை விளக்கி, நிலா அருகே சென்று… அவள் கையைப்பற்றி இழுத்தபடி, கூட்டத்தை விட்டு வெளியே வந்தான்.

ஆஃபீஸ் உள்ளே வாட்டசாட்டமாக இருந்தவரும் அங்கே இருக்க, அங்கிருந்த சிலர், “ஏய் நில்லுங்க… எங்க போறீங்க நில்லுங்க” கத்திக்கொண்டு இருவரையும் பின்தொடர்ந்தனர்.

ஆதியை அங்கு பார்த்த நிலா சற்று அதிர்ச்சியடைந்து… பின், “நீங்க… முதல்ல கைய விடுங்க” கையை அவனிடம் இருந்து விடுவிக்கத் திமிறினாள்.

ஆதி இன்னமும் கையை இறுகப் பற்றிக்கொண்டு… திரும்பி அவளைப் பார்த்து முறைத்தபடி, “எதுவும் இப்போ பேசவேண்டாம்” என்று இழுத்துச்சென்றான் அவளை!

2

10 thoughts on “Ennodu Nee Unnodu Naan – 4

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved