Ennodu Nee Unnodu Naan – 5

என்னோடு நீ உன்னோடு நான் – 5:

“என் கைய முதல்ல விடுங்க” அவள் திமிறிக்கொண்டே இருக்க… அவன் கார்வரை அவளை இழுத்துச்சென்றான். கூட்டத்தில் சிலர் மட்டும் அவர்களை பின் தொடர்ந்து வந்து கோவில் வாசலில் நின்றனர்.

“கெட் இன்” அவன் கதவைத் திறந்து விட “எதுக்காக என்ன இழுத்துட்டு வந்தீங்க?” ஏறாமல் முறைத்துக்கொண்டே கேட்டபடி, கையை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றாள்.

“எல்லாத்தையும் நான் சொல்றேன். இப்போ உள்ள ஏறு… அவங்க பின்னாடியே வராங்க” அதட்டி அவன் சொன்னவுடன், அவள் கோவில் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

அவன் சொன்னதுபோல அங்கே இருவர் வேக வேகமாக கார் அருகே வந்துகொண்டிருந்தார்கள்.

“கெட் இன் நொவ்” முறைத்துக்கொண்டே ‘நொவ்’ என்பதை அழுத்தமாகச் சொல்லி அவளை கார்க்குள் தள்ள, அவளும் ஏறிக்கொண்டாள். அவன் வேகமாக ஓட்டுநர் இருக்கைக்குச் சென்று காரை கிளப்பினான்.

அவன் இயக்க அது அவ்விடத்திலிருந்து வேகமாகப் பறந்தது. சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல், தலையில் கைவைத்து குழம்பிய நிலையில் இருந்தாள் நிலா.

‘எதுக்காக அவங்க இவளை குத்த வந்தாங்க? என்ன நடந்திருக்கும்? ஒருவேளை இங்கயும் அவ ஏதாவது உதவி செய்யப்போக பிரச்சனை ஆயிடுச்சா? ஆனா, அதுக்கு எதுக்கு அவங்க கத்தி எடுக்கணும்?’ யோசனையிலிருந்தவன் திரும்பி அவளைப் பார்க்க, அவள் இன்னமும் குழப்பத்துடன் இருந்தாள்.

சற்று தூரம் சென்றபின், அடர்ந்த காடுகளை நெருங்கியவுடன்… காரை புதருக்குள் இருந்த சின்ன பாதையில் நிறுத்தினான்.

நிறுத்திய மறு நொடி, கோபத்துடன் கதவைத்திறந்து அவள் இறங்க முயன்றாள்.

வெறும் பாதத்தைக் கீழே வைக்க, அங்க இருந்த பெரிய முட்கள் அவள் காலில் ஏறியது. கோவிலிலிருந்து அவன் அப்படியே இழுத்து வந்ததால், அவள் வந்த காரில் விட்டுவந்திருந்த காலணியை அணியவில்லை.

“ஆஹ்” கால்களை நொண்டிக்கொண்டே சில அடி எடுத்துவைக்க, அதைப் பார்த்த ஆதி “ஓ காட்!” என அதிர்ச்சியுடன் அவனும் இறங்கினான். 

“ஹே நில்லு. நடக்காத! முள் உள்ள போய்டப்போகுது” அவசரமாக அவள் அருகில் சென்றான்.

அவள் மிகுந்த கோபத்துடன் அவனைத் திரும்பி பார்த்து, “இதெல்லாம் உங்களாலதான். யார் நீங்க?” முறைத்தபடி கேட்க… “வாட்? நானா? உண்மையை சொல்லணும்னா, நான் தான் உன்ன காப்பாத்தியிருக்கேன்” என்றான் அவனும் கோபத்துடன்.

பின் அவள் கண்களில் சின்னதாக வலியைப் பார்த்ததும், உடனே கோபம் மறைந்து, “சி யூ ஆர் ஹெர்ட். முதல்ல நீ உக்காரு” அவளைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்த ஒரு கல்லின்மேல் உட்கார வைத்துவிட்டு; காரில் இருந்த முதலுதவி கிட்’டை எடுத்து வந்தான்.

“நீங்க யாருனு சொல்லக்கூடாதுன்னு முடிவோடவே இருக்கீங்களா?” என்றாள் மறுபடியும், ஆனால் இப்போது கோபம் கொஞ்சம் மறைந்திருந்தது.

“உஃப்” சலித்துக்கொண்ட ஆதி, “ஐம் ஆதித்யா. டாக்டர்! சென்னைல இருந்து வரேன். இது போதுமா… இன்னும் என் பயோடேட்டா வேணுமா?” கேட்டபடி அவள் கால் அருகில் மண்டியிட்டு முட்களை எடுக்க முயல… “டாக்டரா? நீங்களா?” சந்தேகப் பார்வையோடு கேட்டாள்.

“விட்டா செர்டிபிகேட்’லாம் காட்ட சொல்லுவ போல” என்றான் முறைப்புடன். ஆனால் கண்களில் கோபம் தெரியவில்லையோ?!

“எனக்கு எதுக்கு? விடுங்க… முள்ள நானே எடுத்துக்கறேன்” என்றவள் வலியைப் பொறுத்துக்கொண்டு ஒரு பெரிய முள்ளை எடுத்தவுடன், ரத்தம் வெளியேறியது.

‘ஸ்ஸ்’ என்று அவள் முகம் மாறி ‘ரத்தத்தை நிறுத்த என்ன செய்வது’ என்று அவள் யோசிக்கும்போது, ‘இப்போது புரிகிறதா என் தேவை’ என்பதுபோல அவளைப் பார்த்த ஆதி, காட்டன் எடுத்து, மருந்தைத்தடவி, அந்த இடத்தில் வைத்து, அவளை இறுகப் பிடிக்கச்சொன்னான்.

பின், “கொஞ்ச நேரத்துல ஸ்டாப் ஆயிடும்” என்றவன், மற்ற முட்களை எடுத்துவிட்டு,  மருந்து கலந்த காட்டனை வைத்து சின்ன கட்டு போட்டான்.

அவன் செய்வதையே பார்த்த நிலா… ‘யாரு இவன்? இவன் கூட நான் இங்க என்ன செய்றேன்? இவனை பார்த்தா டாக்டர் போல நமக்கு தெரியல… இல்ல ஒருவேளை காப்பாற்றத் தான் நினைக்கிறானோ? நான் தான் தப்பா புரிஞ்சிக்கறேனா?!’ அவள் மனவோட்டம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.

கட்டிவிட்டபோது, கொஞ்சம் வலியில் அவள் முகம் சுருங்கியதைப் பார்த்தவன் மனதில் சின்ன தடுமாற்றம்.

உடனே எழுந்தான்… ‘நான் என்ன செஞ்சுட்டு இருக்கேன்? அவளை பாராட்டிட்டு மன்னிப்பு கேட்கணும்னு கோவிலுக்கு போனேன்… இப்போ இங்க ஒரு சின்ன அரவம் கூட இல்லாத இடத்துல, இவளோட தனியா…’

எழ முயல்பவளைப் பார்த்து நினைவு திரும்பி, அவன் கை கொடுத்து அவளுக்கு உதவி செய்ய, அவள் எழுந்து நன்றி சொல்லிவிட்டு, மெதுவாக நொண்டி சுற்றி முற்றி பார்த்தாள்.

சுற்றியும் அடர்ந்த காடு. “இப்போ எங்க இருக்கோம்?” அவனிடம் கேட்க, “தெரியல. கோவில்ல இருந்து ஒரு 5 டு 8 கிலோமீட்டர்ஸ் இருக்கும்” என்றவன், “சரி சொல்லு… உன்ன எங்க விடணும்? எங்க இருந்து வர நீ?” கேட்டுவிட்டு பதிலுக்காக அவளைப் பார்க்க, அவள் ஏதும் சொல்லாமல் அருகிலிருந்த மலையைப் பார்த்தாள்.

“வேர் ஆர் யூ ஃப்ரம்?” திரும்ப அவன் அழுத்தமாகக் கேட்க, அவனைப் பார்த்து “ஹ்ம்ம்! நான் பார்த்துக்கறேன். தேங்க்ஸ். யூ கேரி ஆன்” என்றாள் கொஞ்சம் அசட்டையாக, அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல்.

“என்ன விளையாடறயா? இந்த இடம் எப்படி இருக்குனு பார்த்தெல்ல. இங்க இருந்து எப்படிப் போவ” என்றான் கொஞ்சம் கோபமாக, அவளின் பாதுகாப்பை எண்ணி.

“எல்லாம் உங்களால தான்… இப்போ மட்டும் தெரியுதா நான் இங்க என்ன பண்ணுவேன்னு? இத இழுத்துட்டு வர முன்னமே யோசிச்சிருக்கணும்” என்று அவனையே அவள் சாடினாள்.

அவள் பேச்சில் கோபம் அதிகரிக்க, “நிறுத்து. இடியட்…” அவன் கத்த, அவள் கோபம் இப்போது அதிகரித்தது.

“எவனோ உன்ன குத்த வந்தான்ல… குத்தட்டும்னு விட்டிருக்கணும். நான் தடுத்திருக்கக்கூடாது. காப்பாத்தினேன் பாரு… என்னை சொல்லணும்…” கோபத்தில் காரை உதைத்தான்.

“ஓ!!! இதென்ன புது கதை” என்று கேட்டாள் அலட்சியமாக.

அவளின் அலட்சியப்பேச்சு, அவனின் கோபத்தை, பெருங்கோபமாக மாற்றியிருக்க… அவன் பேசும்முன், “சரி நீங்க சொன்ன மாதிரியே இப்போ தடுக்காதீங்க. அவங்களையும் நான் நம்பல… உங்களையும் நம்ப முடியல. சோ, நான் கிளம்பறேன்” என்று முன்னே நொண்டி நொண்டி நடந்தாள்.

அவன் தடுக்கவில்லை. ‘கெட் லாஸ்ட். உன்ன காப்பாத்தினேன் பார்… என்னை சொல்லணும்’ மனதில் அவனையே திட்டிக்கொண்டான். அவள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடந்து கொண்டிருந்தாள்.

அவள் மேல் இருந்த கோபத்தில், அவள் பக்கமிருந்த தன் பார்வையை, வேறு பக்கம் திருப்பினான்… இனி அவளை பார்க்கக் கூடாது என நினைத்துக்கொண்டு.

கொஞ்ச தூரம்… தோராயமாக ஓர் இருபது அடி நடந்து, புதரிலிருந்து வெளியே சென்றவள், மேடும் பள்ளமுமாக இருந்த அந்த குறுகிய சாலையை அடைத்தாள்.

சற்று தூரத்தில்… அங்கே இருவர் இவள் வருவதைப் பார்த்து அருகில் வர, ஒருவன் கையில் கத்தி. அதைப் பார்த்து சற்றே பதறினாள் நிலா!

1

10 thoughts on “Ennodu Nee Unnodu Naan – 5

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved