Ennodu Nee Unnodu Naan 6

என்னோடு நீ உன்னோடு நான் – 6

‘அவனை கூப்பிடுவதா?! ஐயோ அவன் பெயர் ஏதோ சொன்னானே… இல்லை, இவர்களிடம் இருந்து எப்படி தப்பிச்செல்வது என்று யோசிப்பதா’ என்று அவள் முடிவெடுப்பதற்குள், ‘அவள் என்ன செய்கிறாள்?’ என திரும்பிப் பார்த்தான் ஆதி.

கோவிலில் அவளைக் குத்த வந்த அதே ஆட்கள் வருவதைப் பார்த்து அதிர்ந்தவன், முதலுதவி கிட்டில் இருந்த சின்ன பாக்கெட் கத்தியை எடுத்துக்கொண்டு அவள் அருகே சென்றான்.

ஆதி வருவதைப் பார்த்த இருவரில் ஒருவன், அவனிடம் மறைத்து வைத்திருந்திருந்த ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு நிலாவை நோக்கி சென்றான். மற்றொருவன் ஆதியை பார்த்துக்கொண்டே நெருங்கினான்.

இருவரும் பிரிந்து தாக்கப்போவதை அறிந்த ஆதி, அவள் முன்னே அவளை மறைத்துப் பாதுகாப்பதுபோல் நிற்க, இருவரும் ஓடி வந்து ஆதியை தாக்கினர்.

அவனிடம் இருந்த சிறு கத்தியால் ஒருவனை அங்கொன்றுமாக இங்கொன்றுமாக கீறிவிட்டான்.

அதற்குள் இன்னொருவன், நிலாவை நெருங்கி கட்டையால் அடிக்க முற்படும் போது, ஆதி தடுக்க முயல… மற்றொருவன் கத்தியால் ஆதியைத் தாக்க வந்தான்.

ஆதி குனிய, அந்த அடியாளின் கத்தி… ஆதி கையை கிழித்துச் சென்றது. அவன் தடுமாறி கீழே விழ, அந்த நொடி இன்னொருவன்… அவளைக் கட்டையால் அடிப்பதற்கு, ஆதியை கடந்து அவளிடம் சென்றான்.

ஆதி விழுவதைப் பார்த்தவள் ” ஐயோ” என்று விழப்போனவனைக் குனிந்து தாங்க… அடிக்க வந்தவன் குறி தப்பி, தலையில் அடிப்பதற்குப் பதில் அவளின் தோள்பட்டையில் அடித்தான்.

அவள் “ஆஹ்” என்று அலற, அதைப் பார்த்த ஆதி சுதாரித்துக்கொண்டு அந்த இருவரையும் பலமாகத் தாக்க முயற்சித்தான். இருவரும் அவனிடம் மல்லுக்கட்டினர். அவன் கையில் ரத்தம் பீறிட்டது.

அவனிடமிருந்த கத்தியை வைத்து, அவர்களைப் பலமாக கீற… ஒருவன் கட்டையை கீழே போட்டான்.

“அத எடுத்து அவனை அடி” ஆதி சொன்னதைக் கேட்ட நிலா, உடனே கட்டையை எடுத்து, ‘என்ன செய்வது… எப்படி அடிப்பது?!’ என்று யோசிக்க, “மண்டைல அடி” என்று கத்தினான்.

அவள் கட்டையால் தாக்க, ஆதி அந்த சின்ன கத்தியை உபயோகப்படுத்தி இருவரையும் தாக்க, இருவரும் அங்கிருந்து ஓடினர்.

அவர்கள் ஓடியபின் திரும்பியவன், பதட்டமாக அவளிடம்… “உனக்கு ஒன்னும் இல்லையே?” ஆராய்ச்சி பார்வையுடன் கேட்க, “உங்க கைல ரத்தம்” பதறினாள் நிலா.

அவன் மற்றொரு கையால் அதை அழுத்திப் பிடித்து… “இங்க பாரு. இந்த இடம் உனக்கு அவ்ளோ பாதுகாப்பானதா இல்ல. நீ எங்க போகணும்னு சொல்லு… நான் உன்ன அங்க விட்டுடறேன். நீ தனியா இங்க இருக்கிறதெல்லாம் கஷ்டம்” சொல்லிக்கொண்டே கார் அருகே போக முயற்சிதான்.

அந்த சண்டையில் அவர்கள் அவன் காலில் அடித்திருப்பார்கள் போல. அவனால் சரியாக நடக்க முடியவில்லை.

அவனருகே வந்த நிலா , ஒருகையால் அவன்  கரத்தையும் , மற்றொரு கைக்கொண்டு அவனை பின்புறமாக பிடித்து, அவன்  நடக்க உதவி செய்தாள்… அவள் வலியையும் பொருட்படுத்தாமல்.

வெகு சில நொடிகள் மௌனத்திற்கு பின்… நிலா, “நான் இங்க முக்கியமான வேலையா வந்திருக்கேன். அந்த கிராமத்துக்கு போயே ஆகணும். பாதியில விட்டுட்டுப் போக மனசு வரல. அப்புறம்… உங்களால அந்த கிராமத்திலெல்லாம் என்னை விட முடியாது. நான் பார்த்துக்கறேன்” என்றாள்.

உடனே அவன் மனதில், ‘முந்தய தினம் காப்பகத்தின் உரிமையாளரிடம் அந்த சிறுமியரைப் பற்றி நிலா சொன்ன ‘இதை அப்படியே பாதியில விட்டிருந்தா தான், எனக்கு உறுத்திட்டே இருந்திருக்கும்’’ என்றது நினைவிற்கு வந்தது.

‘ஓ! அப்போ திரும்பவும் ஏதோ உதவி பண்ண தான் வந்திருக்காளா… நேத்து அங்க இன்னைக்கு இங்க. இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் சினிமால தான் பார்த்திருக்கேன்… ஹ்ம்ம் ப்ரேவ் அண்ட் பியூட்டிஃபுல்! (Brave and Beautiful)’ மனதில் அவளை மெச்சிய ஆதி திரும்பி அவளைப் பார்த்தான்.

அவன் தோள்வரை தான் இருந்தாள். கலைந்த அவளுடைய கூந்தல்… தீர்க்கமான அந்த காந்தக் கண்கள்… துடைத்துவைத்தது போல அந்த முகம்… அதில் சிறிய பதட்டமோ?! இல்லை, அது யோசனையால் விளைந்த முகமாற்றம்…  நெற்றியில் அங்கங்கே வியர்வை துளிகள். ஏதோ சின்ன தடுமாற்றம் மறுபடியும் அவனுள்.

‘ஒருவேளை கல்யாணம் ஆயிடுச்சோ?!’ அவன் மனதில் திடீர் கேள்வி!

காலில் கட்டு போடும் போது அதைப் பார்க்க அவனுக்கு தோன்றவில்லை … ஆனால்  இப்போது தோன்றியது.  உடனே அவள் கால்களைப் பார்த்தான். மெட்டி இல்லை. ‘ஒருவேளை வேறு மதமோ?!’ மனதில் அடுத்த கேள்வி!

‘ச்ச! நான் என்ன யோசிச்சிட்டு இருக்கேன். இதுக்கா இங்க வந்தேன்?!’ கேள்விகளுக்குப் பதில் கிடைக்காவிட்டாலும், மனதை அந்த எண்ணங்களிலிருந்து திருப்பினான்.

இருவரும் கார் அருகே வந்தவுடன்…  ஆதி, “தேங்க்ஸ். நீ அவங்களோட தனியா சண்டை போடறதெல்லாம் கஷ்டம்” என்றான் காட்டன் வைத்து காயத்தைச் சுத்தம் செய்தவாறே.

‘பட், நீ விருப்பப்பட்டா, நான் உன்கூட துணையா வரேன்’ அவன் விருப்பத்தையும் மீறி அவன் மனம் பிதற்றியது!

“என்னால தான் இப்போ உங்களுக்கு இந்த கஷ்டம். ஸாரி” அவள் சொல்லும்போது, அவன் அவளிடம் கேட்க வேண்டிய மன்னிப்பும் ஞாபகம் வந்தது அவனுக்கு.

அவன் ஒற்றைக்கை கொண்டு கட்டுப்போடக் கஷ்டப்படுவதைப் பார்த்து, “கொடுங்க, நான் கட்டறேன்” அவள் அவனுக்கு உதவினாள்.

‘எனக்காக இவ்ளோ தூரம் உதவி பண்றானே… யார் இவன்? எதுக்காக இவ்ளோ கஷ்டப்படணும்?! யாரோ என்ன குத்த வராங்கன்னு அவங்ககிட்டருந்து காப்பாத்தினான். இவன்கிட்ட உதவி கேட்கலாமா? அட்வான்டேஜ் எடுத்துக்கறேன்னு நினைச்சிடுவானோ?’ அவள் மனம் பலவாறாக யோசிக்க… “தேங்க் யூ அன்ட் ஸாரி” என்ற அவன் குரலில் தன்னிலைக்கு வந்தவள் எதற்கு என்பதுபோல் பார்த்தாள்.  

‘ஆஹ்! உளறிவிட்டோமோ! என்னடா ஆதி… இப்போ தான் உன்மேல அவளுக்கு நம்பிக்கை வந்திருக்கு. இப்ப போய் பிளாஷ்பேக் சொன்னா… நீ அவளை பின்தொடர்ந்து வந்திருக்கியோன்னு நினைக்க மாட்டா? இடியட்! ஏதாவது சொல்லி சமாளி’ மனதில் நினைத்தாலும், மூளையும் அவசரமாக யோசித்து…

“இல்ல அது வந்து… நான் கொஞ்சம் ஹார்ஷ்’ஷா பேசிட்டேன். அதுக்கு தான்” என்று சமாளித்தான்.

அவள் புருவங்கள் முடிச்சிட்டது.

தன் காலில் அடிபட்ட இடத்தில், வலிநிவாரணி ஸ்ப்ரே அடிக்கும்போது…  அவள் தோள்பட்டையில் அந்த அடியாட்கள் அடித்தது நினைவிற்கு வர,  “உனக்கு ஷோல்டர் வலிக்கல? இந்தா இதை அடிச்சுக்கோ” என்று நீட்டினான்.

“இல்ல வேண்டாம் பெரிசா வலி இல்ல” என்று மறுத்தாள்.

“இப்போ வலிக்காது. போக போக அதிகமாகும்” என்று அவளிடம் மறுபடியும் நீட்ட… அவள் வாங்கிக்கொண்டாள்.

‘அவன் முன் எப்படி தோள் மேல் உள்ள மேலாடையை ஒதுக்கி அடிக்க…’ என்று அவள் தயங்க … அதை உணர்ந்தவனாய் காரின் பின்புறம் ஏதோ எடுத்துவைப்பது போல் அங்கிருந்து நகர்ந்தான். அவனின் செய்கையில் அவள் இதழ்கள் அனிச்சையாகப் புன்னகைத்தது.

அவள் ஸ்ப்ரே அடித்துமுடித்து அவனிடம் தரும்போது… ஆதி, “சோ, நீ இங்க தான் இருக்கப்போற…  வேண்டாம்னு சொன்னாலும் கேட்கப்போறதில்ல!?”

“ஹ்ம்ம்… நீங்க இப்போ இங்க இருந்து கிளம்பறீங்கல்ல?”

“வாட் நானா? நான் இங்க வந்ததே அதோ அந்த மலைல ட்ரெக்கிங் போக தான்” பக்கத்திலிருந்த மலையைக் காட்டினான்.

“ஓ அப்படியா! அப்போ கார்?” புருவத்தைச் சுருக்கி சந்தேகத்துடன் அவள் கேட்க, “இப்படி நடக்கும்னு நான் நினைக்கல. கோவில் கிட்ட விட்டுட்டு போலாம்னு தான் இனிஷியல் ப்ளான். பட்…” என்று யோசித்த ஆதி,

“என் ஃப்ரெண்ட் ரெஃபர் பண்ண ஆள் அந்த கோவில் பக்கத்தில தான் இருக்கான். அவனுக்கு கால் பண்ணி வர சொல்லவேண்டியது தான். ஒன் ஸெக் (one sec)” உடனே அவருக்கு அழைத்தான்.

முழு ரிங் சென்றது யாரும் எடுக்க வில்லை. மறுபடியும் டயல் செய்தான் பலனில்லை. “எடுக்க மாட்டேங்கறாரு” அவளைப் பார்த்தபடி சொல்ல, அவள் கேலியாக சிரித்தாள்.

அந்த சிரிப்புக்கான பொருள் அவனுக்குப் புரிய,  “ஹே நான் உண்மையைத்தான் சொல்றேன்” என்றான் முறைத்தபடி.

பின் திடீரென கௌஷிக் ஞாபகம் வர, அவனுக்கு அழைத்தான்.

“கௌஷிக்… இங்க ஒரு சின்ன ப்ராப்ளம்” என்று முழுவதும் சொன்னான். மறுபக்கம் ஏதோ அவன் பதில் தர…

“ஹே முடியாது டா. எனக்கு இப்போ சென்னை வர பிடிக்கல. உனக்கே தெரியும்…. ஐ நீட் எ பிரேக். நான் இங்க ஏதாச்சும் நல்ல இடம் பார்க் பண்ண இருக்கான்னு பார்க்கறேன். பண்ணிட்டு உனக்கு லொகேஷன் ஷேர் பண்றேன். மேல போனா சிக்னல் கிடைக்குமானு தெரில” ……

“எஸ், நான் ஃபுல் லாக் (full lock) பண்ணிட்டு போறேன். டிரைவரை இன்னைக்கு நைட்டே வந்து எடுத்துட்டு போக சொல்லிடு… பிளஸ் ப்ரித்வி கிட்ட நடந்ததை சொல்லி, கூட ரெண்டு கான்ஸ்டபிளயும் அனுப்ப சொல்றயா? போனவங்க திரும்ப கார் கிட்ட வந்தாலும் வருவாங்க”……

“ஒகே தேங்க்ஸ்டா. பை” பேசி முடித்து கட் செய்தான் ஆதி.

“கார் மேட்டர் சால்வ்ட்” என்று அவன் முடிக்கவில்லை… அவள், “தேங்க்ஸ், மிஸ்டர் ஆதி. நான் கிளம்பறேன். நீங்க உங்க ட்ரெக்கிங் ஸ்டார்ட் பண்ணுங்க” என்றாள்.

“எப்படியும் இந்த மலையை தாண்டி தான் நீ போகணும் ரைட்… அது வரைக்கும் ஐ வில் அக்காம்பனி யூ” என்றான்.

அவள் தயங்க… “பயப்படாத. அவங்கள விட நான் மோசமானவன் இல்ல” என்றான் மென்னகையுடன்.

“அது தெரியுமே! அவ்ளோ மோசம் இல்லனு” இதழோரத்தில் புன்னகையுடன் சொன்னாள் நிலா. அவன் முறைக்க முயன்று, முடியாமல் மென்னகை கொஞ்சமே கொஞ்சம் விரிந்தது.

பின், “பை த வே, உன்ன எப்படி கூப்படணும்?” அவன் கேட்டவுடன், தன் பெயரைச் சொன்னாள் நிலா.

“நைஸ் நேம். நிலா இந்தா” ஒரு ஒரு ஜோடி ஸ்லிப்பர்ஸ் அவளிடம் கொடுத்தான்.

அவள் மறுபடியும் தயங்கினாள்.

“மேல போறப்ப வெறும் காலோட போறது ரிஸ்க். நான் எப்பவுமே ஒரு செட் ஸ்லிப்பர்ஸ் எக்ஸ்ட்ரா வச்சிருப்பேன். இன்னைக்கு அது யூஸ் ஆகுது” தயக்கத்தைப் போக்க விளக்கம் தந்தான்.

அவள் இன்னும் தயங்க “அப்புறம் உன் இஷ்டம்” என்று அவள் பக்கம் வைத்துவிட்டு… மெடிக்கல் கிட்டை உள்ளே வைத்து பேக் செய்தான்.

அவள் தயங்கியவாறே அதைப் போட்டுக்கொண்டு, “தேங்க்ஸ்” என்றவுடன்… “கொஞ்சம் பெரிசா இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றான்.

“இங்க எங்கேயாவது கார் வச்சுட்டு போனா பத்திரமா இருக்குமா? இம்போர்ட்டட் தானே?” அவள் கார் விண்ட்ஷீல்ட், சைட் விண்டோ பார்த்துவிட்டு… ஃபியூயல் டேங்க் (fuel tank), மற்றும் சிலவற்றைப் பார்த்தவாறே கேட்க…

“கொஞ்சம் ரிஸ்க் தான். பட் யாராலும் அவளோ சீக்கிரம் பிரேக் பண்ண முடியாது அண்ட் கார் எடுக்க வர்றப்ப ரெண்டு போலீஸ் கூட வர சொல்லியிருக்கேன்” என்றான்.

“ஹ்ம்ம்… வின்ஷீல்டு உற்பட பிரேக் ரெஸிஸ்டண்ட். ஃபியூயல் டேங்க் கூட சீல்ட்(sealed). சோ, அவங்க ரொம்ப ட்ரை பண்ணனும்… டு கெட் ஹோல்டட் ஆஃப் இட் ” என்றாள் அவள் பார்வையைச் சுழற்றியபடி.

அவள் சொன்னவற்றைக் கேட்டு… “உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?!” கேட்டான் ஆச்சரியத்துடன்.

“நான் R&D என்ஜினீயர். சோ, கொஞ்சம் தெரியும்” என்றாள் அலட்டிக்கொள்ளாமல்.

“வாவ்! அமேசிங்! எங்க வேல பார்க்கிற?” 

‘சொல்லலாமா வேண்டாமா’ என அவள் சற்று தயங்க, அவன், “ உன்னோட விருப்பம். சொல்லணும்னு கட்டாயம் இல்…” சலிப்புடன் சொல்லி முடிக்கும் முன் “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நான் BMWல ஒர்க் பண்றேன்” என்றாள் தயக்கம் களைந்து .

“வாவ் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரில லேடீஸ் வேல பார்க்கிறது ரொம்ப ரேர். சூப்பர்!” என்று ஆச்சர்யத்துடன் பார்த்து, மனமார புன்னகைத்தான். பதிலுக்கு அவளும் புன்னகைத்தாள்.

‘இப்போத்தான் இவன் நல்லா சிரிச்சு பார்க்கிறேன். இவ்ளோ நேரமா முசுடு மாதிரி இருந்தான். இப்போ அவனோட கண்ணே சிரிக்குது!’ மனதில் அவனை ரசிக்க…. அவன் கைகட்டைப் பார்த்தவுடன்…

‘எனக்காகவா இவ்ளோ பண்றான்? கண்டிப்பா இவன் கூட போனா பத்திரமா பார்த்துப்பான்’ மனதில் கொஞ்சம் நிம்மதி…. கூடவே ‘எப்படியும் அந்த கிராமத்தை அடைந்துவிடலாம்’ என்ற நம்பிக்கையும் அதிகமானது.

1
1

4 thoughts on “Ennodu Nee Unnodu Naan 6

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved