Ennodu Nee Unnodu Naan – 7
என்னோடு நீ உன்னோடு நான் – 7:
“ஹலோ…” அவள் முன்னே கையாட்டியவன்… “என்ன ஆச்சு? என்ன யோசனை? இந்தா… எடுத்துக்கோ. எப்படியும் நீ எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட” என்று குக்கீஸ்’ஸை நீட்ட… “இல்ல எனக்கு வேண்டாம்” என மறுத்துவிட்டாள்.
மறுபடியும் யோசனை ரேகைகள் அவள் முகத்தில்.
‘நாம பாட்டுக்கு போறோமே… என்கிட்ட வெறும் மொபைல் அப்புறம் வாலட் தான் இருக்கு. போற வழில அவசர தேவைகளுக்கு என்ன செய்வது? சாப்பிட என்ன செய்றது? மாற்று உடை? அவன் மல உச்சி வரை வருவான்… அதுக்கப்புறம்? என்னோடு இருப்பானா… ச்ச எப்படி கேட்க முடியும்? இவ்ளோ உதவி பண்றதே பெருசு.
அவசரத்துல தப்பா முடிவெடுத்துட்டோமோ… அவன் கேட்டப்பவே கோவில் கிட்ட விட சொல்லிருக்கலாமோ? என்ன செய்வது? இப்போ விட சொன்னா கோபப்படுவானா? கேட்கலாமா?’ பல பல கேள்விகள் மனதில் எழுந்தது.
‘ஒன்னுமே இல்லாம எப்படி அந்த கிராமத்துக்கு போவா? அங்க ஏதாவது பிரச்சனைன்னா என்ன பண்ணுவா?’ அவன் மனதில் இப்போது அவள் குறித்த கேள்விகள்.
“ஆதி” அவள் அழைக்க, திரும்பி அவளை பார்த்தான்.
“நான் ஏதோ அவசரத்துல அந்த ஊருக்கு போறேன்னு சொல்லிட்டேன். பட், நான் இந்த ட்ரிப்’க்கு ப்ரிப்பர் ஆகல. என்கிட்டே எதுவுமே இல்ல” என்றாள் தயக்கத்துடனும் யோசனையுடனும்.
“இப்போதான் அதப்பத்தி யோசிச்சேன்… எப்படி நீ சமாளிப்பன்னு. என்ன பண்ணலாம்னு சொல்லு?”
“எனக்கு தெரியல. திரும்ப போய்டலாம்னா அவங்க அங்க தான இருப்பாங்க” என்றாள் யோசனையுடன்.
“மே பி இருக்கலாம். சரி நீ எங்க விடணும்னு சொல்லு… நான் உன்ன அங்க விட்டுட்டு போறேன்” அவன் இதை சொன்னபோது… மனதில் ஒரு குட்டி படபடப்பு ‘எங்கே அவள் தன்னை விட்டு சென்றுவிடுவாளோ’ என்று.
சந்தித்து சில மணி நேரமே ஆகியிருக்க, அவன் மனநிலை அவனுக்கே வியப்பாக இருந்தது. இதுவரை யாரிடமும் தோன்றாத ஏதோ ஒன்று, அவளிடம்… அவள் உடன் இருக்கும்போது தோன்றுகிறது. அது பிடித்தமானதாகவும் இருக்கிறது.
நிலா, “இப்போ நான் திரும்பி போனா… என்னை என்ன வேணும்னாலும் செய்வாங்க. அது ஒரு பக்கம்னா… என்னை இந்த வேலையை கண்டிப்பா செய்ய விட மாட்டாங்க. எப்படியாவது தடுத்து நிறுத்த பார்ப்பாங்க. அதுதான் ” என்றாள் கொஞ்சம் இறங்கிய குரலில்.
அவளின் வாட்டம் மறுபடியும் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. உடனே இரண்டடி அவளருகில் வந்தவன், “ஹே என்னதிது? நான் இருக்கேன். உன் கூடவே வரேன். உன்னை அவங்க எதுவும் செய்ய நான் விடமாட்டேன்” வார்த்தைகள் அவனை மீறி வெளிவந்தது.
நிலா அவனையே பார்த்தாள் கண்ணிமைக்காமல்.
தான் பேசியதன் தீவிரத்தை உணர்ந்தவன், சட்டென சுதாரித்துக்கொண்டு… “இல்…ல…, நீ எதுக்காக வந்துருக்கன்னு … தெரியல. பட் கண்டிப்பா நல்ல விஷயத்துக்காகத்தான் இருக்கும். அதுக்கு என்னால முடிஞ்ச சின்ன ஹெல்ப். அதான் உன்கூட…. வரேன்னு…. சொன்னேன். அவ்ளோதான். வேற எதுவும் இல்ல” திக்கி திணறி சமாளித்தான் இரண்டடி பின்னே சென்றபடி.
என்ன சொல்வதென்று தெரியாமல் “தேங்க் யு” என்றாள் அவன் கண்களைப்பார்த்து. அவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
‘இதுவரை தன் செயல்களுக்கு துணை நின்றவர்கள் யாருமில்லை. முன்னாள் காதலனுக்கு கூட இதெல்லாம் பிடித்திராத ஒன்று. எதையும் செய்ய விட்டதில்லை. ஆனால் யாரிவன்?’
அவனை பார்த்தபடி இருந்தவள், கண்களை வேறுபக்கம் மாற்றினாள். கண்களில் லேசான கண்ணீர் திரை.
அவளின் சம்மதத்திற்கு காத்திருக்காமல், “அந்த இடத்தை ரீச் பண்ண நாளைக்கி சாயங்காலம் ஆயிடும். நாளை மறுநாள் அந்த ஊருக்குப் போனாலும் உனக்கு ரெண்டு நாளைக்கு டிரஸ் வேணும்.
மத்தபடி எனக்கிட்ட எல்லா தேவையான போருட்களும் இருக்கு. நான் இந்த ட்ரெக்கிங் முடிச்சப்புறம், கொல்லி மலைக்கு போலாம்னு இருந்தேன். சோ என்கிட்ட food போதுமான அளவு ஸ்டாக் இருக்கு”
அவன் திட்டத்தை சொல்ல, அவள் சற்று யோசனையுடன்… “நைட்லாம் எப்படி இந்த காட்டுல…?” என்றாள் தயக்கத்தோடு.
“ஹ்ம்ம் நல்ல கொஸ்டின். என்கிட்ட டென்ட் இருக்கு” என்றவுடன், அவள் கண்கள் காட்டிய அதிர்ச்சியை பார்த்தவன்… “இது எல்லாத்துக்கும் மேல, உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கணும். இல்லாட்டி இந்த பிளான்-அ ட்ராப் பண்ணிடலாம்.
எப்படியும் டிரைவர் நைட் வருவான். அது வரைக்கும் இங்க உன்கூட இருக்கேன். அப்புறம் நீ அவனோட கிளம்பிடலாம். உன் இஷ்டம்” என்றான் அவளை பார்த்தவாறே பதில் எதிர்பார்த்து.
அவன் ‘நம்பிக்கை’ என்று சொன்னவுடன்… உடனே “இவ்ளோ தூரம் ஹெல்ப் பண்ணிருக்கீங்க. உங்க மேல டிரஸ்ட் இல்லாமெல்லாம் இல்ல. பட் ஒரு சின்ன தயக்கம். அவ்ளோ தான். சரி… நம்ம ப்ரோஸீட் பண்ணலாம். மோர் ஓவர், எவ்ளோ சீக்கிரம் அந்த ஊருக்காரங்க கிட்ட பேசமுடியுமா அவ்ளோ நல்லது” என்றாள் புதிய தைரியத்துடன்.
“குட். நம்ம சீக்கிரம் போய் உனக்கு டிரஸ் மட்டும் வாங்கிட்டு வந்துடலாமா?”
“ஒருவேள அவங்க அங்க இருந்தாங்கன்னா?” யோசனையுடன் பதில் கேள்வி கேட்டாள்.
“மே பி இருக்கலாம். பட் ஒரு ட்ரை கொடுத்துப்பார்க்கலாம். கோவில் தாண்டி வர்றப்ப ஒரு கடைய பார்த்தேன். அங்க சீக்கிரமா போய் டிரஸ் எடுத்துட்டு, அங்கேயே வேணும்னா கார் நிறுத்திடலாம்” என்றான். அவளும் சரி என தலையசைத்தாள்.
இருவரும் புறப்பட்டனர். சில நிமிட பயணத்தில் ஒரு சிறிய துணிக்கடை வந்தடைந்தனர். பெரிய அளவில் இல்லாத போதிலும் முக்கிய ஆடைகளை எடுத்தாள். ஆதி அந்த கடை உரிமையாளரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
“அண்ணா குர்த்தி மாதிரி இருக்கா?” அங்கு வேலை செய்பவரிடம் நிலா கேட்க… “அப்படினா என்ன” என்று கேட்டவர்… “பொண்ணுங்களுக்கு புடவை இல்லாட்டி சுடிதார்த்துணி இருக்கு” என்றார்.
என்ன செய்வதென்று யோசித்தவளை கவனித்தான் ஆதி.
“நிலா, இப்போ செலக்ட் பண்ணல்லாம் டைம் இல்ல. நீ ஸாரீ காட்டுவன்னா அது எடுத்துக்கோ. பட் ஸாரீ’ல ட்ரெக் பண்றது கஷ்டம். வேணும்னா நீ ஜென்ட்ஸ் டாப் அன்ட் பேண்ட் எடுத்துக்கோ. அது கொஞ்சம் ஈஸியா இருக்கும்” என்றான்.
அவளும் தேவையானதை எடுத்துக்கொண்டு இருவரும் புறப்பட்டனர்.
வெளியே வந்த ஆதி, காரில் இருந்த இன்னொரு சின்ன பேக்பேக்கில் (backpack) அவளுடைய துணிகளையும், பண்டங்களையும் எடுத்து பேக் செய்தான்.
“இதை நீ எடுத்துக்கோ” என்று அவளிடம் கொடுத்து… “தூக்க முடியும்ல உன்னால?” என்று வினவ “ஸுயூர்” என்று வாங்கிகொண்டாள்.
“ஆமா கடைக்காரர் கிட்ட என்ன பேசுனீங்க?”
“கார் பார்க் பண்றேன்னு சொன்னேன். நிறைய கேள்வி கேட்டார். கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சப்புறம் சரின்னு சொல்லிட்டார்” என்று சிரித்த ஆதி… “கார் லொகேஷனை என் ஃபிரெண்ட் கௌஷிக்குக்கு ஷேர் பண்ணிட்டேன். இனி காரை அவன் பார்த்துப்பான்… நாம இங்க இருந்தே மலை ஏற ஆரம்பிக்கலாம்” என்றவுடன் அவளும் தலையசைத்தாள்.
“நான் வீட்டுக்கு மட்டும் போன் பண்ணி சொல்லிடறேன்” என்ற நிலா, வீட்டிற்கு டயல் செய்தாள்.
“அம்மா. எப்படி இருக்க? அப்பா நக்ஷத்திரா’லாம் எப்படி இருக்காங்க…… ஆமாம் மா. சிக்னல் ப்ராப்லம்’மா இருக்கு…… மா இரு மா. இப்போ எதுக்கு அவகிட்ட குடுக்கற…… ஹ்ம்ம். சொல்லு நக்ஷத்திரா…. ஆமா, குர்க்’ல இருந்து ஊட்டி வந்துட்டோம். குர்க்’ல வெள்ள எச்சரிக்கை வந்ததால கிளம்பிட்டோம்…… ஆமா க்ளைமேட் சூப்பரா இருக்கு…… சரி டி…… அம்மா அப்பாட்ட சொல்லிடு… நான் சிக்னல் கிடைக்கறப்ப கூப்பிடறேன்…… பை” என்று வைத்தாள்.
ஆதி வாயில் கைவைக்காத குறையாக… ஆச்சர்யத்துடன்… ‘அடப்பாவி என்னமா பொய் சொல்றா? வெயில் பின்னி எடுக்குது இதுல கிளைமேட் சூப்பராம். ஊட்டியாம், குர்க்’காம் வெள்ளமாம். யப்பா’என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
இருவரும் மலை மேல் மெதுவாக ஏற துவங்க. அவன் “உனக்கு சுத்தமா பசிக்கலயா குக்கீஸ் கூட வேண்டாம்னு சொல்லிட்ட”
“அதுவா… மொதல்ல வேண்டாம்னு சொன்னேன். எப்போ திரும்ப கேட்பீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். செம்ம பசி” என்றாள் பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு.
அதை கேட்டு சிரித்தபடி… “ஏதாவதுன்னா கேளு. டோன்ட் ஹெசிட்டேட்” குக்கீஸ் பாக்கெட்டை நீட்டினான். “தேங்க்ஸ்” புன்னகையுடன் வாங்கிகொண்டாள்.
மலை ஆங்காங்கே மேடும் பள்ளமுமாக இருந்ததால், முன்னே சென்றவன், அவள் தடுமாறாமல் இருக்க கையை பற்றி கொண்டு, அவள் தடுமாறாமல் ஏற உதவினான்.
அவனின் சின்ன சின்ன அக்கறையில் அவள் மனம் மெல்ல மெல்ல அவன் புறம் சாய்வதை உணர்ந்தாள். அதை தடுக்க முடியாமலும், எண்ணி மகிழ முடியாமலும் அவள் மனம் தடுமாறியது.
‘இந்தமாதிரி உணர்வுகளெல்லாம் வேண்டாம்னு தானே நாலு வருஷமா இருக்கேன். பிரதீப் என்ன ஏமாத்தினதையே மறக்க முடியாம தவிச்சேன்.
இவளோ நாள் கழிச்சு இதென்ன மாற்றம் எனக்குள்ள? ஆனா இவன் பிரதீப் மாதிரி இல்ல. யாருன்னே தெரியாத எனக்கு, நான் இந்த வேலைய முடிக்கணும்னு சொன்னவுடனே உதவி பண்ணனும்னு நினைக்கறான். ஆனா அவனுக்கு நான் சிறுதுளி(NGO) போறதே பிடிக்காது. நான் எந்த ஒரு சர்வீஸ்க்கு போணும்னாலும் முட்டுக்கட்டையா இருந்தான்.
அவனுக்காக எல்லாத்தையும் வீட்டுக்கொடுத்தேன். ஆனா, கடைசியா அவன் என்னை ஏமாத்தினது தான் மிச்சம். ஆண்களோட சகஜமா பழகறது எனக்கு புதுசில்ல. பட், இப்போ இவன் கூட இருக்கிறப்ப ஏதோ ஒரு மாற்றம் எனக்குள்ள’ என்று நினைக்கும்போது…
‘நிலா… போதும் உன் கற்பனையை நிறுத்து. எதுக்கு இப்போ இந்த கம்பேரிஸன். இதெல்லாம் உனக்கு செட் ஆகாது. இவனுக்கும் உனக்கும் நடுவுல ஒன்னுமே இல்ல. அதுல உறுதியா இரு. அதுவும் இல்லாம இவனை பார்த்தா பெரிய இடம் மாதிரி இருக்கு. உன்னால இன்னொரு நிராகரிப்பை தாங்கிக்க முடியாது.
உனக்கு உதவி பண்றான். அவளோ தான். அதுக்கு மேல ஒன்னும் இல்ல’ என்பதை பலமுறை தனக்குதானே சொல்லிக்கொண்டு… அந்த நினைவோட்டத்தில் இருந்தவள், பாதையில் கவனம் இல்லாமல் கல் தடுக்கி தடுமாற, “ஹே பார்த்து” என்ற ஆதி, அவளுடைய இரு கைகளையும் பற்றி விழாமல் பிடித்துக்கொண்டான்.
very nicely written da.. Keep going!!
Thanks a lot da <3 🙂