என்னுள் நீ வந்தாய் – 10

என்னுள் நீ வந்தாய் – 10

அவன் வந்தது சின்ன சந்தோஷம் தந்தாலும், அவனை ஏற்க முடியாத மனது அவளைப் பேசவைத்தது. “என்ன கொஞ்ச நேரம் கூடத் தனியா விட மாட்டயா?” அவனைப் பாராமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு கேட்டாள்.

“பழசெல்லாம் ஞாபகம் வந்துச்சுன்னு சொன்னியே… அஜய் ஞாபகமா வந்துடுச்சா?” மனதில் தோன்றியதைப் பட்டெனக் கேட்டுவிட்டான்.

திரும்பி அவனை நன்றாக முறைத்தவள் “என்னோட கடந்த காலத்துல அஜய் மட்டும் என்ன ஏமாத்துல… இதுக்குப் பிள்ளையார் சுழி போட்டதே என் அம்மா” மறுபடியும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் எரிச்சலுடன்.

‘அஐய்யை நினைத்து அவள் வருந்தவில்லை’ என்பது கொஞ்சமே கொஞ்சம் அவனுக்கு நிம்மதி தந்தாலும்… ‘அம்மா ஞாபகமா…’ மனதில் நினைத்தவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

காலை நடந்ததை யோசித்துப் பார்க்க, அவள் கண் கலங்கி இருந்த போது ப்ரியாவுக்கு அம்மா உதவிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. புரிந்தது அவனுக்கு.

கொஞ்சம் வலித்தது அவனுக்கும். அம்மாவை நினைக்கும் அவளை நினைக்கையில்… அவளை அப்படியே தன் தோள் சாய்த்து ‘நான் இருக்கேன் உனக்கு’ என ஆறுதல் கூற ஆசைதான். ஆனால் முடியாதே. என்ன செய்யலாம் என யோசித்தான்…

‘எதற்காக வருத்தப்பட்டேன் எனப் புரிந்து கொண்டிருப்பானோ’ என்று மனதில் நினைத்து அவன் புறம் திரும்பியவள், அவன் யோசனையுடன் இருப்பதைப் பார்த்து “நீ எதுக்கு வந்த?” என அவன் எண்ணவோட்டத்தைத் தடுத்தாள்.

ஒரு கணம் யோசித்தவன் “ஓ அதுவா. புது இடம் நீ தனியா எப்படிப் போவன்னு” என கொஞ்சம் இழுக்க, அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

அவன் புன்னகைக்க “பாஷ தெரியாத இடத்துலயே இருந்துட்டு வந்தாச்சு. நான் பாத்துப்பேன். நீ கிளம்பு” என்றாள்.

“நீ ட்ரெயின் ஏறுற வர இருக்கேனே. தனியா எப்படி விட்டுட்டு போறது? ப்ரியாவா இருந்தா என்ன பண்ணுவேனோ அதான் பண்றேன்” அவன் விடாமல் தன்னிலை விளக்கம் கொடுக்க…

“அப்பா சாமி. சின்ன வயசுல இருந்து என் வேலைய நான் தான் பாத்துக்கறேன். தனியா தான் இருந்தேன். நீ கிளம்பு” என்றாள் கொஞ்சம் எரிச்சலுடன்.

“அப்போ வேற பேபி. இப்போ நான் இருக்கேன்” புன்னகைத்துக்கொண்டே சொல்ல “உஃப்ப். நான் கேட்டேனா எனக்காக இருன்னு? இப்போ என்ன… நான் கிளம்பனும். அவ்ளோதானே? அடுத்த ட்ரெயின்ல ஏறிடறேன் போதுமா?” என்றாள் சலிப்புடன்.

இவளைத் தனியாக விட்டால் இதோ இப்போது வருந்துவதுபோல் ஏதேதோ யோசித்து வருத்தப்படுவாள் என நினைத்து “நாளைலருந்து ட்ரெயின்லாம் வேணாம். நான் ட்ரோப் பண்றேன்” மறுபடியும் அக்கறையுடன் சொன்னான்…

அவள் மனதில் ‘நெஜமாவே இவன் இப்படித்தானா? எனக்காக எதுக்கு இவ்வளவு யோசிக்கிறான்? இவ்வளவு பண்ண நான் பெருசா ஒன்னுமே பண்ணலயே. எடுத்தெறிந்து பேச மட்டுமே செய்றேன்’

அவள் வாயாடாமல் இருப்பதைப் பார்த்து ‘மனசுல ஏதாச்சும் ஒன்னு ஓடிட்டே இருக்கும் போல…’ என அவன் நினைத்துப் புன்னகைத்துக்கொண்டே…

“ஆமா நீ மதியம் எங்க சாப்பிடுவ? வெளியதானே… இனிமே வேணாம். எப்படியும் ப்ரியாக்கு லஞ்ச் ரெடி பண்றீங்கல்ல. நீயும் அதையே எடுத்துக்கோ. நான் அம்மாட்ட சொல்லிடறேன். அவங்க கிளம்பிட்டாங்கன்னா, நம்ம ஏதாச்சும் ரெடி பண்ணிக்கலாம்”

அடுத்து அக்கறை அம்பைத் தொடுக்க, அவளுக்கு என்ன எதிர்த்துப் பேச என்பது கூடத் தெரியாமல் அவனையே பார்த்து யோசித்துக்கொண்டிருந்தாள்.

ட்ரெயின் சத்தம் கேட்டதும் “ஸ்வீட்டி. என்ன சைட் அடுச்சது போதும். ட்ரெயின் வந்துடுச்சு” என்றான் குறும்பாக.

அவனைப் பார்த்து முறைத்து… தலையில் அடித்துக்கொண்டு ட்ரெயினில் ஏறினாள்.

உள்ளே எட்டியெட்டிப் பார்த்தவன், அவள் ஏறி, அமர்ந்துகொண்டாள் என்பதை உறுதி செய்துகொண்டு, அவளைப் பார்த்துச் சின்னதாகத் தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவளையும் அறியாமல், அவனின் செய்கைகளை நினைத்து இதழோரம் புன்னகை மலர்ந்தது.

முதல் நாள் அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு வந்தாள் கவிதா. டிவி முன் உட்கார்ந்திருந்த லட்சுமி அவளைப் பார்த்துவிட்டு மறுபடியும் டிவியில் மூழ்க, மொபைல் பார்த்துக்கொண்டிருந்த ஜெயராமன்…

அவள் சோர்வாக இருப்பதைப் பார்த்து… “நீ எப்படிம்மா வந்த?” என கேட்க, “ஆஃபீஸ்ல இருந்து ட்ரெயின்ல வந்துட்டு, ஸ்டேஷன்ல இருந்து நடந்து வந்துட்டேன் மாமா” என்றவுடன்…

“ஏன் நடந்ததெல்லாம் வந்துட்டு… ஆட்டோல இல்ல ஆஃபீஸ்ல இருந்து டாக்ஸில வந்துருக்கலாம்ல” கனிவாக அவர் கேட்க…

“இல்ல மாமா… ஆஃபீஸ்ல உட்கார்ந்தே வேல பாக்கறேன். அதான் நடக்கலாம்னு” கொஞ்சம் தயக்கத்துடன் வந்தது அவளின் பதில்.

“சரிம்மா. போ போய் ரெஃப்பிரேஷ் ஆகிட்டு வா” என்றவுடன் அவளும் சென்றாள்.

அகிலன் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கவில்லை போல… சிறிது நேரம் கழித்துக் கீழே செல்வதா வேண்டாமா எனக் கவிதா யோசிக்க… அங்கே வந்த ப்ரியா “அண்ணி… என்ன இங்கயே உட்கார்ந்திருக்கீங்க. வாங்க அம்மா கூப்பிடறாங்க” என கையேடு அழைத்துச்சென்றாள்.

கீழே அவளுக்காகக் காத்திருந்த லட்சுமி “ இந்தா பிடி” என்று டீயை கொடுத்துவிட்டு… “மாடிலேயே இருக்கக்கூடாது. இப்போ நான் இருக்கேன் சரி… இல்லலைனா நீ தானே பாத்துக்கணும்” என்றார் கொஞ்சம் கண்டிப்பான குரலில்.

அவர் சொல்வதற்கு மட்டும் ஏனோ பதில் பேசாமல் மண்டையை மட்டுமே ஆட்டினாள் கவிதா.

அவள் குடித்து முடித்தபின்… “என்னம்மா. எப்படிப் போச்சு இன்னைக்கு ஆஃபீஸ்ல வேலையெல்லாம்” என பேச்சுக்கொடுத்தார் ஜெயராமன்.

அவர் அக்கறையாகக் கேட்டதும், “பரவால்ல மாமா. எப்பவும் இருக்க வேலை தான்” என புன்னகையுடன் பதில் தந்தாள்.

அகிலனின் குணம் இவரிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என நினைத்தபோது லட்சுமியைப் பார்த்தாள். அவர் காதுகொடுத்து எதுவும் கேட்டது போல் தெரியவில்லை அவளுக்கு.

கவிதாவுடன் ப்ரியாவும் ஜெயராமனும் ஏதோ பேசிக்கொண்டிருக்க… சரியாக அந்த நேரம் உள்ளே வந்தான் அகிலன்.

அவள் குடும்பத்துடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, புன்னகைத்துக்கொண்டே வந்தான்.

பதிலுக்குப் புன்னகைக்க வேண்டுமா… என கவிதா யோசித்துக் கொண்டிருக்கும்போதே… “ஏன் இன்னைக்கு லேட் அகில்…” என்று கேட்ட லட்சுமி “கவிதா அகில்’க்கு ப்ளாக் காபி போட்டு எடுத்துட்டு வா” என்றார்.

“நல்லா சூடா” கவிதாவைப் பார்த்து ஒரு பிட்’டை கூடுதலாகப் போட்டான் அகிலன்.

அதைக் கேட்டவுடன்… புன்னகைக்க வேண்டுமா என்ற யோசனையெல்லாம் போய் அவனைப் பார்த்து முறைத்துவிட்டு சென்றாள்.

“பெரிய இவரு… ஏன் அவங்க பையனுக்கு அவங்க போடமாட்டாங்களா…” என முணுமுணுத்துக்கொண்டே போட்டு முடித்தாள்.

அப்போது அங்கே வந்த லட்சுமி “அவன் மேல போயிருக்கான். வந்துடுவான். நைட்’க்கு சப்பாத்தி ரெடி பண்ணிடலாம். நீ அந்த காய்கறிலாம் நறுக்கு சைட் டிஷ்க்கு” என்று மற்றொரு வேலயைக் கொடுத்தார்.

சில நிமிடங்களில் அகிலன் சமையலறைக்குள் வந்து குளிர்ந்த தண்ணீர் எடுக்க… “உன்னோட காபி டைனிங் டேபிள்’ல வெச்சுருக்கேன் “ என்றாள் கவிதா.

அதைக்கேட்ட லட்சுமி “கவிதா. அதென்ன உன்னோட… நீங்க ரெண்டு பேரும் இருக்கும் போது எப்படிவேணும்னாலும் கூப்பிட்டுக்கங்க. ஆனா எல்லாரும் இருக்கப்ப… இப்படி பேசக்கூடாது” என்றுவிட்டு சென்றார்.

அவள் “ப்பே” என விழிக்க… அகிலனுக்கு அவள் முகத்தைப் பார்த்துச் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

அவளருகே சென்று வேண்டுமென்றே “எங்க இருக்கு காபி” என அவன் சீண்ட… “கடுப்பேத்தாம ஓடிடு” என்றாள் கத்தியைக் காட்டி.

மிகவும் சகஜமாக இல்லையென்றாலும், கேள்வி கேட்பதற்குப் பதில், இல்லை தலையாட்டுவது என நகர்ந்தது அந்த நாள்.

**************

அடுத்தநாள் காலை… கவிதா எழும்போதே அகிலனும் கீழே வந்துவிட்டான். நேற்று போல எதையும் நினைத்து அவள் வருந்தக்கூடாது என்று.

முந்தைய இரவே அகிலன் கவிதாவுக்கும் சேர்ந்து மதிய உணவு சமைக்கச் சொல்லியிருந்தான். ஆகையால் லட்சுமி கொஞ்சம் கூடுதலாகவே செய்திருந்தார்.

“உனக்கும் சேர்த்து தான் செய்ஞ்சுருக்கேன். இதுல வெச்சுக்கோ” என சொல்லி ஒரு டப்பாவை கொடுத்துவிட்டு சென்றார்.

ப்ரியாவை அனுப்பிவைத்துவிட்டு, அகிலனின் அப்பா “அகில். உன் ஆஃபீஸுக்கும் கவிதா ஆஃபீஸுக்கும் ஒரு பத்து பதினஞ்சு கிலோமீட்டர் இருக்குமா? அவளை ட்ரோப் பண்ணி பிக் அப் பண்ணிக்கோ”

“நம்ம வீட்டுப் பொண்ணு எதுக்கு ஆட்டோ, ட்ரெயின்லலாம் போகணும்?” என்றார்.

“அவனுக்கு வேல இருக்காதா? இவளை விட்டு கூடிவர்றதுதான் வேலையா? என்னங்க நீங்க… அவள வேலைக்கே போவேணாம்னு நான் சொல்றேன்” என புராணத்தை ஆரம்பித்தார் லட்சுமி.

“லச்சு. நான் நேத்தே உன்கிட்ட சொன்னேன். கவிதா நல்ல வேலைல இருக்கா. திறமை வீணாப் போகக்கூடாது. இது அவளோட தனிப்பட்ட விஷயம். நம்ம தலையிடறது சரியில்ல” என்றவர் அகிலனிடம் திரும்பி…

“உன்னால என்னைக்காவது விட முடியலனாவோ, இல்ல கூட்டிட்டு வர முடியலனாவோ, நீயே டாக்ஸி அரேன்ஞ் பண்ணிடு. ஆட்டோ ட்ரெயின்லாம் இனி வேணாம்” என்று கட்டளையாகச் சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

கவிதாவிற்கோ ‘என்ன ட்ராப்… பிக் அப் பண்ண, என்கிட்டே ஏதாச்சும் கேக்கறாங்களா? இவங்களே முடிவு பண்றங்க’ சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு அகிலனைப் பார்க்க, அவன் புருவங்களை ஏற்றி இறக்கி ‘எப்படி’ என்பது போல் சைகை செய்தான்.

கடுப்பாக வந்தது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.

அவன் மனதில் ‘அவளுடனான முதல் தனிப்பயணம்’ என சந்தோஷப்பட…

இன்று தன் மாமனார் பேசியது கண்டிப்பாக அகிலனின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என அவள் நினைத்தாள்.

‘எதற்காக இப்படி செய்கிறான்?’ என்ற கோபம். அதன் வெளிப்பாடு இதோ இருவரும் காரில் ஏறியவுடன்…

மொபைலில் ஓலா ஆப்பார்த்து “இங்க இருந்து என் ஆஃபீஸ் போக, ஷேரிங்’ல நூத்தி என்பது ரூபா வருது. எனக்கு ஃபிரீயா போகப் பிடிக்காது. நான் உனக்குப் பே (pay) பண்ணிடுவேன். சோ யு ஆர் ஜஸ்ட் எ டிரைவர் அண்ட் நான் பேசெஞ்சர் அவ்ளோதான்” என்றாள் தோள்களைக் குலுக்கிக்கொண்டு அவனை வெறுப்பேற்ற.

நியாயப்படி அவனுக்கு கோபம் அல்லது எரிச்சல் வந்திருக்க வேண்டும்… இப்படி எப்பொழுதும் விதண்டாவாதமாகப் பேசுபவளைப் பார்க்கும்போது. ஆனால் அவனுக்குப் புன்னகை மட்டுமே வந்ததது. அதுவும் ரசனையான புன்னகை.

அது இன்னமும் வெறுப்பேற்றியது கவிதாவை.

“பேபி… சேன்ஞ்’லாம் கரெக்ட்டா குடுத்துடு. தெரிஞ்சவன் தானே டீல்ல விட்டுடாத. அப்புறம் ஷேரிங்ல போறப்ப, டிரைவர்ட்ட தான் கண்ட்ரோல். பேசெஞ்சர்ட்ட இல்ல. மறந்துடாத” என்றான் கண்ணடித்து.

‘இவனுக்கு தன் மேல் கோவமே வராதா’ என்று மட்டுமே தோன்றியது கவிதாவிற்கு… அவனைப் பற்றி அவள் நல்லவிதமாக நினைக்கும் போதெல்லாம் ஏதொ ஒன்று அதை ஏற்றுக்கொள்ளவிடாமல் தடுத்தது.

———இன்று———

‘என்னதான் நீ வேணாம்ன்னு நினைச்சாலும் அப்போவே எனக்குத் தெரியாம என் மனசுல வந்துட்ட போல அகில். அத புரிஞ்சுக்க எனக்கு இவ்வளோ நாள் தேவ பட்டுருக்கு. அப்போ என் பக்கத்துலயே இருந்த, நான் விலகி இருந்தேன். ஆனா இப்போ…’ மனதில் வலியுடன், உடல் தொய்வுடன், படுத்திருந்தாள் கவிதா.

‘அப்போ என்னால புதுசா ஒரு ரிலேஷன்ஷிப்ல அவளோ சீக்கரம் என்ன இனச்சுக்க முடியல. அதுவும் ஒரு மனைவியா… மனசு ஒத்து வாழவேணாமா? நான் முழுசா அஜய்ன்னு ஒரு கேரக்டர் மறந்து, நீ தான் என் மனசுல இருக்கனு புரிஞ்சுக்க நேரம் எடுத்துட்டேன். அது தப்பா…’ ஏதோதோ மனதில் நினைத்து அவளையே வருத்திக்கொண்டாள்.

பலமுறை மத்திய உணவுக்காகத் தாமஸ் சாப்பிட அழைத்தும் செல்லாமல் அறையிலேயே இருந்தாள் கவிதா. மாத்திரைப் போட்டுக்கொண்டாலும், காய்ச்சல் விட்டு விட்டு வந்தது. உடல் மிகவும் சோர்வடைந்தது.

இரவு நேரம் ஆகியிருக்க, தாமஸ் வற்புறுத்தி அவளை உணவு உண்ண அழைத்துச்சென்று, அவளுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்.

“என்னம்மா பொண்ணு நீ. ஒழுங்கா வேளா வேளைக்குச் சாப்பிடவேணாமா? யாராச்சும் சமைச்சு போடறப்ப நல்லா சாப்பிடணும். உடம்ப நல்லா பாத்துக்கணும்.”

“கல்யாணம் கில்யாணம் ஆயுடுச்சுன்னா, அடுப்பங்கரையிலே இருந்துட்டு நமக்குப் பிடிச்சது கூட சாப்பிட தோணாது” என்று அவர் பேசிக்கொண்டிருக்க, அவள் மனதில்

‘இல்லண்ணா. என் அகில் எனக்காக எல்லாமே பாத்து பாத்து பண்ணான். எனக்குத் தான் அப்போ அதோட அருமை புரியல போல’ என வெற்றுப்புன்னகையுடன் நினைத்தவள் மனதில் திடீரென ஏதோ தோன்ற, “அண்ணா. லயா இன்னும் வரலையா?” கேட்டாள் அவரிடம்.

“இல்லமா. அந்தப் பொண்ணு நைட் லேட்டா வருமாம். போன் பண்ணி சொல்லுச்சு. முன்னெல்லாம் வந்துடும். இப்போ கொஞ்சம் நாளா தான் இதெல்லாம்” என போகிற போக்கில் ஒரு சிறிய குண்டைப் போட்டுவிட்டுச் சென்றார் தாமஸ்.

‘கண்டிப்பாக அவள் அகிலனைப் பார்க்கத்தான் சென்றிருப்பாள்’ என உறுதியாக நம்பினாள் கவிதா.

அவள் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் அகிலனுடன் இருந்தாள் லயா!!!

உன் இல்லாமையில் உணர்கிறேன் உன் அருகாமையின் அருமையை!’

9
3
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved