தனிப்பெரும் துணையே – 25 

தனிப்பெரும் துணையே – 25 

ப்ரியாவின் கலக்கத்தைப் பார்த்த மருத்துவர், “லைஃப்ஸ்டைல் சேஞ்சஸ் பண்ணணும் இசை. அது சரியா இருந்தாலே பாதி சரி ஆகிடும். கூடவே மெடிகேஷன்ஸ். பட் முடிவு உங்க கைலதான்” என்றார்.

ப்ரியா, “என்ன முடிவு டாக்டர்?” புரியாமல் கேட்க, “இளன் பத்தி முழுசா தெரிஞ்சப்புறமும் அவர் கூட வாழணுமா வேணாமான்னு” என்று நிறுத்த, ப்ரியா முகத்தில் வெற்றுப்புன்னகை.

“உங்க பையனுக்கு இப்படி ஒரு ப்ராப்ளம் இருந்தா, இப்படிதான் நீங்க யோசிப்பீங்களா டாக்டர்? எல்லாம் சரி ஆகி அவன் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்னு நினைக்க மாட்டீங்க?” கூர்மையாக வந்தது அவள் வார்த்தைகள்.

ஆனால் அவரோ புன்னகைத்தார். “யு கைஸ் ஆர் ரியலி மேட் ஃபோர் ஈச்அதர் (You guys are really made for each other)” அவர் முகத்தில் ஆச்சரியம் கலந்த புன்னகை.

‘இப்போது இது எதற்கு?’ என்பது போல ப்ரியா பார்த்தாள். அவர் மறுபடியும் ஒரு ரெகார்டிங் அவள் பார்ப்பதற்கு போட்டுவிட்டார். அதில் செழியன் அவருடன் பேசிக்கொண்டிருந்தான்.

“இளன் நீங்க நினைக்கிறது போல இது ரொம்ப பயங்கரமான வியாதி கிடையாது. இந்த ப்ராப்ளம்ல இருந்து வெளிய வந்து, சந்தோஷமா வாழறவங்க எவ்ளோ பேர் இருக்காங்க தெரியுமா? கண்டிப்பா நீங்களும் உங்க இசையும் சந்தோஷமா இருப்பீங்க” என்று அவர் முடிக்கவில்லை.

“ஏன் டாக்டர் இசை இடத்துல உங்க பொண்ணு இருந்தா, அவங்க என்னைப்போல ஒருத்தனோட ஆயுசு முழுசும் வாழ ஒத்துப்பீங்களா? யாரோ ஒரு பொண்ணுதானே? அதுனால என்ன வேணா சொல்லலாம்” அவன் கோபத்துடன் ஏளனமாக பேச,

“ஒரு சாதாரணமான அப்பாவா இருந்தா எப்படி யோசிச்சிருப்பேன்னு தெரியல இளன். பட் ஒரு மனநல மருத்துவர் அப்பாவா, கண்டிப்பா, எல்லா பாசிடிவ்ஸ் நெகடிவ்ஸ் சொல்லி அவங்களையே முடிவு எடுக்க சொல்வேன். தேவைப்பட்டா உதவி செய்வேன்” அவர் வயது, அவர் தொழில், அவர் அனுபவம் அங்கு பேசியது.

“டாக்டர் நான் ஒரு அப்யூசர் (Abuser). அவளை அடிக்க கை ஓங்கிருக்கேன். வார்த்தையால நோகடிச்சிருக்கேன். எதுக்கு டாக்டர் என் கூட அவ வாழணும்? நான் வேணாம் டாக்டர். என்னால எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பா. ஐம் அன் அப்யூசர்” கண்களில் கண்ணீர் நிற்கவில்லை அவனுக்கு.

“இளன். யு நோ சம்திங்? அப்யூசரோட முக்கியமான குணமே அவங்க தப்ப அவங்க ஒத்துக்கமாட்டாங்க. பார்ட்னர அவங்க கண்ட்ரோல்ல வச்சுப்பாங்க. பார்ட்னர ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாங்க. மட்டம் தட்டுவாங்க. அவங்க கேரக்டர சந்தேக படுவாங்க. த்ரெட்டன்(Threaten) பண்ணுவாங்க. யார் கூடவும் பேச விட மாட்டாங்க. இன்னும் சில பேர் செக்ஸ் டார்ச்சர், ஃபோர்ஸ் செக்ஸ் பண்ணுவாங்க. இன்னும் இதுபோல நிறைய இருக்கு. உங்கள கவுன்சல் பண்ண எனக்குத் தெரியாதா உங்க குணாதிசயம்?” மருத்துவர் கேள்வியோடு நிறுத்தினார்.

செழியன் இருந்த மனநிலை, அவனை யோசிக்கவெல்லாம் விடவில்லை. “வேணாம் டாக்டர். நான் இசைக்கு வேண்டாம். ஷி டிசெர்வ்ஸ் எ பெட்டர் லைஃப்(She deserves a better life)” என்று முகத்தை திருப்பிக்கொண்டான்.

“என் தப்பு. நான் அமைதியா இருந்திருந்தா அவ அந்த சிவாவை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திருப்பா. என்னாலயே அவ சந்தோஷம் போச்சு. எல்லாத்துக்கும் நான்தான் காரணம்” கண்ணீருடன் அவன் பேசியதை திரையில் பார்த்த ப்ரியாவிற்கு ஒருபுறம் கோபம் ஒருபுறம் கண்ணீர்.

‘இவனை விட்டுவிட்டு எப்படி வேறொருவனை திருமணம் செய்துகொள்வேன் என நினைத்தான்?’ என்று கோபம் வந்தாலும், ‘தனக்காக அவன் சிந்தும் கண்ணீர், அவனின் வருத்தம்’ அவளைக் கண்கலங்கச் செய்தது.

“இசை, நீங்க கேட்ட கொஸ்டின்க்கு என்னோட அன்ஸர்” என்ற மருத்துவர்,

“இளன் போலதான் என் மகனும். ஒரே மகன். ரொம்ப ஸ்டூடியஸ். நான் இந்தியன் ஆர்மில டாக்டரா இருந்தேன். சோ லைஃப் மோஸ்ட்லி அங்கதான் எனக்கு. என்னோட பையன் நல்லா படிச்சு, நல்ல மார்க் ஸ்கோர் பண்ணி, ஐஐடில யுஜி ஜாயின் பண்ணான்.

பட் என்ன ஆச்சுன்னு தெரியல, எதுனால ஸ்ட்ரெஸ்னு தெரியல. தப்பான முடிவெடுத்து எங்களை விட்டுட்டு போய்ட்டான். பார்டர்ல எவ்வளவோ பேர காப்பாத்தின என்னால, என் பையன காப்பாத்த முடியாம போயிடுச்சு.

அப்போதான், இதுபோல நிறைய ஸ்டூடென்ட்ஸ் ஐஐடில தப்பான முடிவை எடுக்கறாங்கனு கேள்விப்பட்டேன். ஸ்டடீஸ்னால ஸ்ட்ரெஸ் வரலாம். இன்டெர்னல் பாலிடிக்ஸ்னால ஸ்ட்ரெஸ் இருக்கலாம். என்ன வேணா இருக்கலாம், பட் அதுக்கு தீர்வு தற்கொலை இல்ல.

ஆர்ம்ட் ஃபோர்ஸ் (armed force – ஆயுதப்படை) ஒரு நாட்டுக்கு எவ்ளோ முக்கியமோ, அதுபோலதான் ஸ்டூடென்ட்ஸ், வரும் தலைமுறையும் நாட்டுக்கு முக்கியம்னு தோனுச்சு. நாப்பது வயசுக்கு மேல சைக்கியாட்ரி (Psychiatry) படிச்சு, இப்போ இந்த ஐஐடில சர்வீஸ்ல இருக்கேன்” அவர் சாதாரணமாக சொன்னார். ஆனால் ப்ரியாவிற்கு ஒரு தந்தையாக அவரின் வலி புரிந்தது.

அவர் தொடர்ந்தார். “இதுபோல பிரச்சனைல வர்ற ஸ்டூடென்ட்ஸ் பத்தி அவங்க டிபார்ட்மென்ட்ல விசாரிப்போம். அதுபோல இளன் பத்தி விசாரிச்சப்ப, யு நோ வாட், ஒருத்தர் கூட எந்த ஒரு சின்ன நெகடிவ் விஷயம் சொல்லல.

இதுவரை ஐஐடி பாம்பே மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்ல இதுபோல ஒரு ஸ்டூடென்ட் பார்த்ததில்லனுதான் சொன்னாங்க. மாஸ்டர்ஸ் ஃபுல் டைம் பண்ணியிருந்தா, கண்டிப்பா யூனிவர்சிட்டி டாப்பர் இளன்தான்னு சொன்னாங்க.

அவர் ஹெச்ஓடி இந்த விஷயம் கண்டிப்பா லீக் ஆகாது, இளன் பழையபடி மாறணும். அவரோட டாக்டரேட் முடிக்கணும். அதுக்காக அவங்க வெயிட் பண்றதா சொன்னார். இதுவரை நான் பண்ணின கவுன்சில்லிங்ல இதுபோல ஒரு ஸ்டூடென்ட் ஃபீட்பேக் நான் கேட்டதில்லை. அதுனாலதான் இந்த ஸ்பெஷல் கேர். அண்ட் இங்க வர்ற எல்லாரையுமே என் பசங்க மாதிரிதான் ட்ரீட் பண்ணுவேன்” என்றார் புன்னகையுடன்.

“தேங்க்ஸ் அண்ட் ஸாரி டாக்டர்” என்றாள் அவரை கடுமையாக பேசியதற்கு.

“நோ நோ டோன்ட் பி ஸாரி. இளன்க்கு ட்ரீட்மெண்ட் ஒரு மூனு நாலு வாரம் குடுக்குறதா யோசிச்சிருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?” ப்ரியாவிடம் அவர் கேட்க,

“எனக்கு அவன் நல்லபடியா திரும்பி வந்தா போதும் டாக்டர்” என்றாள். இப்போது கொஞ்சம் தெளிவு வந்தது போல இருந்தது அவளுக்கு.

“ரெண்டு நாள் இங்கதான் எமர்ஜென்சி கேர்ல இருந்தார். நீங்க சென்னை போனதுக்கப்புறம் என்னென்ன ஃபீல் பண்ணனாருனு தெரியணும்னு… அவரோட டைரி பேஜஸ் கேட்டிருந்தேன். அதை எடுக்கதான் இன்னைக்கு மார்னிங் குமார் கூட வீட்டுக்கு போயிருந்தார்.

குமார் சாப்பாடு வாங்க வெளிய போன டைம்ல, நீங்க சென்னைல இருந்து திரும்ப வந்திருப்பீங்க போல. அதுனால குமார திரும்ப வரவேண்டாம்னு சொல்லிட்டார். பட், இளன் வீட்ல இருந்து கிளம்பினப்ப, என்கிட்ட பேசணும்னு சொல்லி என்னையும் வரச்சொன்னார்” என்று டாக்டர் நிறுத்த,

அவளுக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. அதை மருத்துவரிடம் கேட்டாள்.

“நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேன்னு தெரிஞ்சப்ப… அவன் முகத்துல சந்தோஷத்த பார்த்தேன் டாக்டர். பட், எதுக்காக அபார்ட் பண்ண சொன்னான்? நான் நல்லா இருக்கணும்னுதான் அந்த முடிவுமா?” அவளுக்கு கண்கள் கொஞ்சம் கலங்கியது அவன் பேசிய பேச்சை நினைத்தபோது.

“அதுவும் ஒரு காரணம். கொஞ்சம் பதட்டத்தோடதான் இளன் பேச ஸ்டார்ட் பண்ணார்…” என்றவர் காலை செழியன் அவரிடம் சொன்னதை, பின் அங்கு நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.

***

காலை ப்ரியா கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், முதலில் செழியனுக்கு மனதில் சொல்ல முடியாத சந்தோஷம். தனக்கென்று ஒரு சிறிய குடும்பம் என நினைத்து.

ஆனால் மறுபடியும் திடீரென சில எண்ணங்கள் வந்தது,

ஒன்று, கூகுளில் பைபோலார் டிசார்டர் குறித்து செழியன் பார்த்தபோது, அது மரபுவழி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று படித்திருந்தான். அப்போது, ‘தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு வந்துவிடுமோ?’ என்ற பயம் அவனுள் பரவியது.

மற்றொன்று, ‘ப்ரியாவிற்கு குழந்தை என்று வந்துவிட்டால் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள யோசிப்பாள். அதுபோல ஒரு நிலையில் அவளை நிறுத்தக்கூடாது’ என்று நினைத்தான்.

மனதை கல்லாக்கிக் கொண்டு, “அபார்ட் பண்ணிடு” என்றான். அதை சொல்லும் போது அவனுள் ஏற்பட்ட வலியின் அளவு அவனால் டாக்டரிடம் சொல்ல முடியவில்லை.

அதை அவன் சொன்ன நொடி, கன்னத்தில் பலமாக ப்ரியாவின் கை பதிய, ‘உன்னை கஷ்டப்படுத்தியதற்கு, காயப்படுத்தியதற்கு எத்தனை முறை நீ அடித்தாலும் நான் தாங்குவேன்’ என்று அவன் மனதில் நினைக்க,

ப்ரியா, “இப்ப சொல்ற, அப்போ எங்க போச்சு புத்தி?” என்று சொன்னபோது, அன்று இருவருக்குள் நடந்த கூடல் நினைவுக்கு வந்தது.

அவனுடைய பிறந்தநாளில் அழகான தாம்பத்தியம் அரங்கேறிய தருணம், ஆனால் அதெல்லாம் இப்போது வெறும் கானல் நீர். ஏதாவது சொல்லி அவளைக் காயப்படுத்தி, கலைக்க வைத்துவிட வேண்டும் என நினைத்து, அவள் மனம் புண்படும்படி பேசினான்.

அதை கேட்டவுடன் ப்ரியாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம், ஆற்றாமை அவனை வதைத்தது.

உடனே மருத்துவரை அழைத்தவன், கல்லூரிக்கு அவரை வரச்சொன்னான் பேசுவதற்கு.

செழியன் மருத்துவரிடம், “அவளுக்கு இந்த குழந்தை வேண்டாம் டாக்டர். என்னால அவ பட்ட கஷ்டம் போதும். அடுத்த தலைவலி வேண்டாம் டாக்டர்” என்று புலம்பினான்.

“இங்க பாருங்க இளன். கூகுள்ல நிறைய தகவல் இருக்கும். அதெல்லாம் மைண்ட்ல போட்டுட்டு ரொம்ப யோசிக்காதீங்க” என்று அவர் பேச,

“புரியாம பேசாதீங்க டாக்டர். இசைக்கு இந்த குழந்தை வேண்டாம். என் கூட வாழ்ந்தது எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா அவ மறக்கணும் டாக்டர்” என்றவன் தலையை பிடித்துக்கொண்டு, “இதெல்லாம் யோசிச்சா மண்டையே வலிக்குது” என்றான்.

“ஏன் டாக்டர் என் பிறந்தநாளை என் மனசுல இருந்து அழிக்க முடியுமா டாக்டர்? அந்த நாளை விட மோசமான நாள் எனக்கு எதுவுமே இல்ல டாக்டர். என் அம்மா என்ன விட்டு பிரிந்த நாள். அம்மாக்கு அப்புறம் நான் உயிரையே வச்சிருக்கற இசையை நானே என்கிட்ட இருந்து பிரிச்சுவிட்ட நாள், முடியல டாக்டர். ரொம்ப நோகுது. அந்த நாள் என் வாழ்க்கைல வேணாம் ப்ளீஸ்” வலி பொருந்திய முகத்துடன் கேட்டான்.

அவனுக்குத் தேவை இப்போது மன அமைதி. அதற்கு தேவையான மருந்தை தந்தார். அவனும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான்.

***

காலை நடந்ததை ப்ரியாவிடம் மருத்துவர் சொல்ல, ப்ரியா மனதில், ‘எந்த ஒரு இடத்திலும் அவனுக்காக என்று அவன் யோசிக்கவில்லை. தனக்காக மட்டுமே யோசித்துள்ளான்’ என்று நினைக்கும்போது, அவள் கண்கள் மறுபடியும் கலங்கியது.

“ரொம்ப high IQ இருக்கவங்க சிலபேருக்கு, இதுபோல சில மனநல பிரச்சனைகள் வரும். அவங்க எல்லாத்தையும் ரொம்ப யோசிச்சு, ரொம்ப ஆராய்ச்சி பண்ணுவாங்க. இளன் அவரோட மாற்றங்கள் பத்தி, கூகுள்ல பார்த்தப்பவே அவருக்கு பைபோலார் இருக்குமோனு நினச்சிருக்கார். எதுனால பைபோலார்னு பார்த்தப்பதான்… இந்த பிரச்சனை மரபுவழி வர வாய்ப்பு இருக்குனு பார்த்திருக்கார்”

“அது நிஜமா டாக்டர்?” ப்ரியா பயத்துடன் கேட்டது போல தெரியவில்லை அவருக்கு. தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் கேட்டது போல இருந்தது.

“எல்லாமே நம்ம வாழ்க்கை முறை பொறுத்ததுதான் இசை. பைபோலார் இருக்கும் பேரன்ட் பசங்களுக்கு கண்டிப்பா வரும்னு எந்த ஒரு ரிசெர்ச்சும் சொல்லல. நல்லதே நினைங்க. நல்லதே நடக்கும்” என்றார் புன்னகையுடன்.

ப்ரியாவும் மெலிதாக புன்னகைத்து, “நான் இளா மாதிரியெல்லாம் ரொம்ப யோசிக்க மாட்டேன் டாக்டர். வர்றத ஃபேஸ் பண்ணணும். அவ்ளோதான்” என்றாள். அவளின் இந்த தெளிவு அவருக்கு பிடித்தது.

“ஓகே தென். அப்போ நாளைல இருந்து இளாக்கு ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணலாம். ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைப்பாருனு நினைக்கறேன், பார்ப்போம்… அண்ட் உங்ககிட்ட நான்… அவர் சொன்ன எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்னு இப்போதைக்கு சொல்ல வேண்டாம். எல்லாம் சரி ஆகட்டும். அப்புறம் சொல்லிக்கலாம்” என்றார்.

ப்ரியாவும் புன்னகையுடன் தலையசைத்தாள். மனதில் சின்ன நம்பிக்கை முளைவிட்டது அவளுக்கு.

***

ப்ரியா மருத்துவரிடம் பேசிவிட்டு நேரம் ஆனதால் மருத்துவமனையிலேயே இருந்துவிட்டு, விடியற்காலையில் வீட்டிற்கு கிளம்பினாள், அவனுக்கு உணவு செய்துகொண்டு வர.

செழியன் மருந்தின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்தான்.

என்ன ஆயிற்று என்று சிரமப்பட்டு யோசிக்க, முந்தைய தினம் காலை ப்ரியா தன்னிடம் பேசியது, பின் மருத்துவரை சந்தித்தது, பேசியது என்று ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது.

ப்ரியா… அவளை பற்றி நினைக்கும்போது, ஒரு இனம் புரியாத வசந்தம் மனதில் வீசினாலும், ‘வேண்டாம் அவள் பாவம்’ என்ற எண்ணம் அதைவிட வலுப்பெற்றது.

பின், அவள் கருவுற்றது ஞாபகம் வர, இதழ்கள் அவனையும் அறியாமல் மெலிதாக புன்னகையில் விரிந்தது.

அடுத்து, ‘என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாளே. எப்படி இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்வது?’ என யோசிக்க ஆரம்பிக்க, இந்த நிலையில் அவள் மனம் நோகும்படி பேசியது நினைவுக்கு வந்தது.

‘அவள் அண்ணன், என் அக்கா வெண்பாவை சுமந்தபோது எப்படி பார்த்துக்கொண்டான். ஆனால் நான் அவளைக் கஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறேனே?!’ அவனையும் மீறி கண்கள் கலங்கியது.

இவ்வாறாக மீண்டும் மீண்டும் பல எண்ணங்கள் மாறி மாறி வந்துகொண்டே இருந்தது.

அப்போது சரியாக அங்கே ப்ரியா வந்தாள். அவனைப் பார்க்க, அவன் யோசனையில் இருந்தான். இந்த சில நாட்களில் அவன் முற்றிலுமாக தோற்றத்தில் மாறியது போல இருந்தது அவளுக்கு.

சில நொடிகள் கழித்து, ஒற்றை விரல் கொண்டு கலங்கிய கண்களை அவன் துடைப்பதைப் பார்த்த ப்ரியா, ‘ஐயோ மறுபடியும் என்ன யோசிக்கிறானோ? மனம் விட்டு பேசினால் போதுமே’ என நினைத்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

அவளை அங்கு எதிர்பார்க்காத செழியன், அதிர்ந்து அவளைப் பார்க்க, அவன் நிலையைப் பார்த்து முதலில் அவள் வருத்தப்பட்டாலும், அதை காட்டிக் கொள்ளக்கூடாது என்று சாதாரணமாக இருந்தாள்.

‘அவளுக்குத் தெரிந்து விட்டதோ?’ என்ற பதட்டம் அவனுள்.

அவனிடம் பல் துலக்குவதற்கு பொருட்களை கொடுக்க, அவன் மனதில் அதே கேள்வி. ஆனால் அவளிடம் எப்படி கேட்பது என்று தெரியவில்லை.

“ஹ்ம்ம்” அழுத்தமாக சொன்னபடி அவள் நீட்ட, தன்னிலைக்கு வந்தவன் எதுவும் பேசாமல் வாங்கிச்சென்றான்.

‘இசை முகத்தில் பழைய பிரகாசம், சிரிப்பு எதுவுமே இல்லையே. தன்னுடன் வாழ்ந்தால் எப்படி வரும், தன் வாழ்வில் ஒரு குழந்தை, எவ்வளவு அழகான விஷயம். அதை நினைத்து மனநிறைவு அடைய முடியவில்லையே’ இதுபோன்ற எண்ணங்களுடன் அவன் முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.

அவனுக்கு குடிக்க டீ கொடுக்க அருகில் வந்து அவள் நின்றவுடன், அவள் வயிற்றுப் பகுதி அவன் முகத்தின் முன் தெரிய, ‘டாக்டர்ட்ட செக் அப் போனாளானு தெரியலையே’ என அடுத்த கேள்விகள் மனதில் முளைத்தது.

அந்த வயிற்றையே சில நொடிகள் பார்த்து, பின் கண்ணை அங்கிருந்து பிரித்து, அவள் கொடுத்த டீயை வாங்கியவன், “உனக்கு” என்று கேட்க, அவள் சின்ன புன்னகையுடன், ‘முடிந்தது’ என்பதுபோல தலையசைத்தாள்.

அந்த வெகு சிறிய புன்னகையைக் கூட பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்ற எண்ணம் எழாமல் இல்லை அவனுக்கு. அமைதியாக இருந்தான்.

மருத்துவர் வந்தார்.

அவரை பார்த்ததும், ப்ரியாவை பார்த்தவண்ணம், “டாக்டர் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான். ப்ரியா கண்களில் கோபம் கொப்பளித்தது. அவனைப் பார்த்து முறைத்தவாறே வெளியே சென்றாள்.

“எல்லாத்தையும் அவகிட்ட சொல்லிடீங்களா? நான் அவ என்ன விட்டுட்டு போகணும்னு சொன்னேன்ல டாக்டர்” ஆற்றாமையுடன் மருத்துவரை பார்த்தான்.

“லுக் இளன். அவங்க என் புருஷனுக்கு என்ன ஆச்சுன்னு கேட்கறப்ப என்னால சொல்லாம எப்படி இருக்க முடியும்? அவங்கள தவிர உங்க ப்ளட் ரிலேட்டிவ்னு வேற யாரு வந்திருந்தாலும் சொல்லியிருப்பேன்”

“ப்ச். இனி அவ போகவே மாட்டா டாக்டர். நீங்க அவகிட்ட எப்படியாச்சும் பேசி, இந்த வியாதி ஹெரிடிட்ரி, குழந்தைகளுக்கும் கண்டிப்பா வரும். அதுனால இது வேணாம்… இளா அவளுக்கு வேணாம்னு சொல்றீங்களா ப்ளீஸ்” கிட்டத்தட்ட கெஞ்சி கேட்டான்.

“இங்க பாருங்க இளன். அது உங்க பர்சனல் விஷயம். நீங்கதான் பேசி முடிவு பண்ணணும். மோர் ஓவர் இது கண்டிப்பா குழந்தைக்கு வரும்னு என்னால பொய் சொல்ல முடியாது” என்றார் பொறுமையாக.

அவனுக்கு எல்லாப்பக்கமும் அடைக்கப்பட்டது போல் உணர, அவர், “உங்கள அட்மிட் பண்ணி ட்ரீட் பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன்” என்றார்.

“என்னது அட்மிட்டா? அதெல்லாம் வேணாம் டாக்டர். நான் வீட்டுக்கு போறேன். ஐ ஃபீல் பெட்டெர் நொவ். அதுவுமில்லாம இசை தனியா இருப்பா” என்றான்.

அவர் முகத்தில் புன்னகை. “அவங்களதான் எப்படியும் அனுப்ப போறீங்களே, அவங்க ஹாஸ்டல்லயே இருக்கட்டும். யு நீட் ட்ரீட்மெண்ட்” அவர் முடிக்கவில்லை.

“என்ன டாக்டர் பேசுறீங்க? அவ ப்ரெக்னன்ட். ஹாஸ்டல் சாப்பாடு எப்படி ஒத்துப்போகும்? அவ இங்க வந்ததுல இருந்து, காலைல மதியம் நான்தான் செய்து எடுத்துட்டு போனேன். அதுவும் இப்போ உள்ள இன்னொரு உயிர் இருக்கு. நல்ல சாப்பாடு முக்கியம்” ஏதோ இனி அவளை அவன்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல வாதாடினான்.

அவன் பேசியதை பார்த்து, ‘அவனை எப்படியும் சீக்கிரம் மாற்றிவிடலாம்’ என்ற நம்பிக்கையுடன் மருத்துவர்,

“இங்க பாருங்க, உங்க இசை வாழ்க்கை நல்லா இருக்கணும்னா, நீங்க எந்த தப்பான முடிவையும் திரும்ப எடுக்கக்கூடாதுன்னா, நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துட்டுதான் ஆகணும். ஆல்ரெடி உங்ககிட்ட ஐ சி ஸம் இம்ப்ரூவ்மென்ட்ஸ். கொஞ்ச நாள்தான்” எதை சொன்னால் அவன் மறுக்க மாட்டான் என்பது தெரிந்து அதையே சொன்னார்.

அவன் மனமில்லாமல் தலையசைக்க, அதை புரிந்து கொண்டது போல, “உங்க இசைக்கு வீட்டு சாப்பாடுதான் பிரச்சனைன்னா, அதை நான் அரேன்ஞ் பண்றேன் ஒகே வா?” அவர் கேட்டதும், செழியன் கண்கள் பல நாட்களுக்கு பிறகு நன்றி உணர்வுடன் கலங்கியது கூடவே சின்ன புன்னகையும்.

அதற்குப்பின், ப்ரியா அவனிடம் பேசவில்லை. அவனும் பேசவில்லை.

‘நான் இருந்தால் பேசமாட்டானாம், நான் மட்டும் அவனிடம் பேசவேண்டுமா? உன்னை பேச வைக்கிறேன் பார்’ என்ற எண்ணம் அவளுள். அவள் பேசவில்லையே என்ற வருத்தம் அவனுள்.

அவனை மருத்துவர் மனநல மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சையை தொடங்கினார்.

முதலில் mood stabilizer அன்ட் antidepressants மருந்தில் தொடங்கி, தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டது.

Mood stabilizers என்பது மூளையில் ஏற்படும் அசாதாரண செயல்பாடுகளை குறைக்க உதவும். அது மனநிலை மாற்றங்களை (mood swings) குறைக்கும்.

Antidepressants என்பது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை சீரமைக்கும். இது நல்ல, தடையில்லா உறக்கத்தைத் தருவதற்கும் பயன்படும்.

இந்த முக்கிய மருந்துகளுடன், antipsychotics என்ற சில மருந்துகள் சேர்த்து தரப்பட்டது.

Antipsychotics என்பது முக்கியமாக ஹலூஸினேஷன், டெலூஷன்னிற்குத் தரப்படும் மருந்து.

ஒரு வாரம் இதே நிலை நீடிக்க, செழியனிடம் கொஞ்சம் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது.

அவன் மனதில் எப்போதும் இருப்பது இசை மட்டுமே. மருத்துவரை அங்கு பார்க்கும்போதெல்லாம், அவளைப் பற்றி கேட்டு தெரிந்துகொண்டான்.

அங்கு ப்ரியா, மருத்துவரை தினமும் கல்லூரியில் சந்தித்து, செழியனின் சிகிச்சை, அவனின் முன்னேற்றம் குறித்து கேட்டுக்கொண்டாள்.

அவன் அவளுக்கு வீட்டு உணவு கொடுக்கும்படி சொன்னதையும், தனியாக இருக்கவேண்டாம் என்று சொன்னதையும் அவர் சொன்னார்.

அவள் புன்னகையுடன், தனியாக இருப்பது பெரிய விஷயம் இல்லை. அவன் நல்ல படியாக திரும்ப வேண்டும் என்பதே அவளின் எண்ணம் முழுவதும் உள்ளதாக சொன்னாள்.

அவனை எப்படி தன்னிடம் மனம்விட்டு பேச வைப்பது என்று யோசிக்க, காயத்ரியிடம் அன்று பேசியபோது, அவள் சொன்ன ஒன்று நினைவுக்கு வந்தது.

அதைப் பற்றி மருத்துவரிடம் கேட்டாள். அவள் கேட்டதை முதலில் மறுத்தவர், பின் அதன் குறை நிறைகளை பற்றி சொன்னார்.

அளவாக கடைபிடித்தால், அவள் நினைத்தது நடக்கலாம். அளவுக்கு மீறி போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அளவுக்கு மீறினால் செழியன் இருக்கும் நிலையில் ஆபத்தாக கூட அமையலாம் என்றார். அவர் சொன்னதை நன்றாக மனதில் குறித்துக்கொண்டாள்.

அவன் எப்போது திரும்பி வருவான் என்று காத்திருந்தாள்.

செழியனுக்கு மருந்துகள் குறைக்கப்பட்டது. இரவு தூக்கம் கிட்டத்தட்ட மருந்தின் உதவியுடன் சீராக்கப்பட்டது.

வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்ற எண்ணம் ஒரு சின்ன துளி அளவு அவனுள் எழுந்தது. அவனிடம் பழைய எண்ணங்கள் குறைந்தது போலத் தெரிந்தது.

அடுத்து வந்த தினங்களில் சைக்கோதெரபிஸ்ட்டிடம் தெரபி (talk therapy) மற்றும் கீழுள்ள செஷன்ஸ் ஆரம்பித்தது. மனதை ஒருநிலைப்படுத்த பல முறைகளை அவனுக்கு கற்றுத்தந்தார்கள்.

Cognitive Behavioral Therapy – மனதை எப்படி எதிர்மறை எண்ணங்களில் இருந்து மாற்றுவது, மற்றும் mood shifts குறைப்பதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.

Interpersonal and Social Rhythm Therapy – ஸ்ட்ரெஸ் மற்றும் ஒழுங்கான, சீரான வாழ்க்கை முறைக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதனால் முக்கியமாக தூக்கம் சீராகும். தூக்கமின்மையை குறைக்கும்.

இதை தவிர இன்னும் சில சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இரண்டு வாரம் என்று ஆரம்பித்த சிகிச்சை, அதிகமானது.

ப்ரியாவை பற்றி மருத்துவரிடம் தினமும் கேட்டு தெரிந்து கொண்டான் செழியன்.

‘அவள் ஒழுங்காக சாப்பிடுகிறாளா? தன்னை பற்றி கேட்டாளா? எங்கே இருக்கிறாள்? ஏன் அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள்? செக் அப் சென்றாளா? அவளை செக் அப் தானே அழைத்துச் செல்ல வேண்டும், அவளிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது’ என்று மனதில் தோன்றியதை பேசினான்.

இதுவே பெரிய முன்னேற்றமாக தெரிந்தது. ப்ரியா தன்னை விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்தவன் இப்போது அவளுடன் பேச வேண்டும், அவளுடன் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புகிறான்.

பலகட்ட சிகிச்சைகளுக்குப் பின், பல சோதனைகளுக்கு பின், இறுதியாக முதல் கட்ட சிகிச்சை (inpatient treatment) முடிந்து, அவனை மருத்துவரே அவர்கள் வீட்டிற்கு அழைத்துவந்தார்.

ப்ரியா அவனின் வருகைக்காக காத்திருந்தாள். முன்பொருமுறை கவிதா வளைகாப்பின் போது அவன் வருகைக்காக காத்திருந்தது போல, அவனைப் பார்க்க காத்திருந்தாள். அப்போது போலவே இப்போதும் மனது கொஞ்சம் படபடப்புடன் இருந்தது.

அவனும் பல நாள் கழித்து, அவளின் முகத்தை, அவளின் கண்களை, அவளின் உணர்வுகளை பார்க்க ஆவலுடன், ஆசையுடன், ஆர்வத்துடன் சென்றான்.

***

(குறிப்பு: இதில் உள்ள மருத்துவ குறிப்பேடுகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத்துறை சார்ந்த இணையதளங்களின் உதவியுடன் எடுக்கப்பட்டது. இது நோயாளிக்கு நோயாளி அவர்களின் பாதிப்பின் பொறுத்து மாறுபடும்.)

2
1
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !! ©All Rights Reserved
0
Would love your thoughts, please comment.x
()
x